386 views
35. என் தளிர்மலரே
நினைக்க நினைக்கத் தித்தித்தது அத்தருணம்.
கல்யாணக் கோலத்தில் இருவரும் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு இருந்தனர்.
மேடையில் மொத்தக் குடும்பமும் வாழ்த்திக் கொண்டு இருந்தது.
சிவசங்கரிக்கும், சுமதிக்கும் மகிழ்ச்சி தாளவில்லை. ஆனந்தக் கண்ணீரில் உழன்றனர்.
“தாலியை எல்லார்கிட்டயும் காமிச்சு, ஆசீர்வாதம் வாங்கிட்டு வாங்கோ” என்றார் ஐயர்.
பக்கவாட்டில் திரும்பி இளந்தளிரைப் பார்த்தான் கோவர்த்தனன்.
அவளும் முகம் கொள்ளா வெட்கத்துடன் அமர்ந்திருந்தாள் அதனால் தன்னவன் முகம் பார்க்கவில்லை.
தாலியை வாங்கிக் கொண்டு, எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்கும் பொறுப்பை ரோகிணி ஏற்றுக் கொண்டார்.
சுற்றமும், நட்பும் ஆசீர்வதிக்கப்பட்ட மாங்கல்யத்தைக் கொண்டு வந்து கோவர்த்தனனிடம் கொடுக்கவும், மைதிலி அனைவருக்கும் அட்சதை கொடுத்து முடிக்கவும் சரியாக இருந்தது.
மங்கல நாண் தன் கழுத்தில் தன்னவன் கைகளால் இடம் பெறப் போகும் இந்த நிமிடம் இளந்தளிரின் மனதில் ஓராயிரம் உற்சாகச் சாரல்கள்!
தாலியைக் கையில் வாங்கியதும் அதை விழி கொண்டு ரசித்து விட்டுத் தான் மங்கையின் கழுத்தில் அணிவிக்க ஆயத்தமானான் கோவர்த்தனன்.
இரு கைகளிலும் தாங்கியிருக்கும் மாங்கல்யம் தன் சரி பாதியின் கழுத்தை அலங்கரிக்கப் போவதை, கண்கள் மின்னப் பார்த்துக் கொண்டே இளந்தளிருக்குத் தாலியை அணிவித்தான்.
“கெட்டிமேளம் ! கெட்டிமேளம் ! என்ற வார்த்தைக் காதுகளில் கேட்காது தன்னுடைய மணிக் கழுத்தில் ஏறும் மாங்கல்யத்தைக் கண்ணீர் ததும்ப பார்த்துக் கொண்டு இருந்தாள் இளந்தளிர்.
அவளுக்கு நிகராக விழி நீர் வழிய தாலியைக் கட்டினான் கோவர்த்தனன்.
மண்டபத்திற்குள் இருக்கும் அனைவரும் ஆசீர்வாதம் அளிக்கும் வகையில், அரிசியை அவர்களின் மீது தூவினர்.
அனைவரும் எதிர்பார்த்திருந்த அந்நாள் இந்தாளே! என்று ஒவ்வொருவருக்கும் மனதில் உவகை தாண்டவமாடியது.
நீட்டிய குங்குமச் சிமிழில் இருந்து குங்குமத்தை எடுத்து தன் சரி பாதியின் நெற்றியிலும், தாலியிலும் வைத்து விட்டான் கோவர்த்தனன்.
அதற்குப் பிறகான சடங்குகள் முடிக்கப்பட்டு, இருவரும் ஒன்றாக மேடையில் வீற்றிருந்தனர்.
கணவன், மனைவியாகி மேடையில் நின்றிருக்கிறோம் என்ற உணர்வு இவர்களுக்கு மிதப்பைக் கொடுத்தது.
ஹரீஷ், “கங்கிராட்ஸ் நண்பா! கங்கிராட்ஸ் சிஸ்டர்” என்று இருவருக்கும் வாழ்த்துத் தெரிவித்தான்.
சுபாஷினி மட்டும் முகம் தெளிவில்லாமல் அலைந்து கொண்டு இருந்தாள்.
தோழியின் முகத்தைப் பார்த்ததுமே மைதிலி அவளிடம், “சுபா! கன்ட்ரோல் யுவர்செல்ஃப்.அக்காவுக்கு இப்போ தான் கல்யாணம் ஆச்சு. அதுக்குள்ள நீ ஃபீல் பண்ணினா இங்க இருக்கிறவங்களுக்கு அது புரியுமா? வந்திருக்கிறவங்க வேற மாதிரி யோசிப்பாங்கள்ல? ப்ளீஸ்!” என்று அவளை ஆதரவாகப் பற்றிக் கொண்டு, கீழே நின்றாள்.
அவள் கூறுவதும் சரி தானே? தான் அக்காவைப் பிரியம் போகிறோம் என்று அழுவதைப் பார்ப்பவர்கள் வேறு காரணமாக நினைத்து விட்டால், என்ன செய்வது? என்று முகத்தைச் சீராக வைத்துக் கொண்டாள் சுபாஷினி.
“இளா வா! மஞ்சள் சேலையை மாத்திக்கோ” என்று அவளை மணமகள் அறைக்கு அழைத்துச் சென்றனர்.
கோவர்த்தனன் மட்டும் மேடையில் தனித்து விடப்பட்டான்.
அவனுக்குத் துணையாக சற்று தள்ளி ஹரீஷ் நின்று கொண்டான்.
கல்யாணச் சேலையைப் போல் இந்தப் புடவையையும் துரிதமாக இளந்தளிருக்குக் கட்டி விட்டார் பியூட்டிஷியன்.
முகத்தில் ஆங்காங்கே துளிரும் வியர்வையைக் கைக்குட்டையில் மெதுவாக ஒற்றி எடுத்துக் கொள்ளுமாறு அவளுக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்தார் அப்பெண்.
மீண்டும் மேடையில் ஏறியவளை ஏக்கப் பெருமூச்சுடன் பார்த்தான் கோவர்த்தனன்.
ஆனால் அவனை இளந்தளிரின் புன்னகையே நொடியில் மாற்றி விட தானும் புன்னகைத்தவாறே, ஜோடிகள் தங்கள் வாடாத முக மலர்ச்சியால் மேடையை நிறைத்தனர்.
சிவசங்கரியும், சுபாஷினியும் மண மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அதேபோல், சுமதி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
ரோகிணி குடும்பமும் அவ்வாறே புகைப்படம் எடுத்து முடித்ததும்,
“வாங்க எல்லாரும் க்ரூப் ஃபோட்டோ எடுப்போம்” என்று ஹரீஷ் மூன்று குடும்பங்களையும் ஒன்றாக மேடையில் நிற்க வைத்துப் புகைப்படம் எடுக்க வைத்தான்.
குடும்பம் மொத்தமும் ஒரே மேடையில் நின்று கொண்டு இருப்பதைப் பார்த்து வந்த ஜனங்கள் எல்லாரும் “அடடா!” என்று கண் வைத்து விட்டார்கள்.
“வா சுபா” என்று தங்கையுடனும், மைதிலியுடனும் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர் இளந்தளிரும், கோவர்த்தனனும்.
அத்தனைப் பேருடனும் அயராது நின்று புகைப்படம் எடுத்த போது, மிதுனா இவர்களிடம் வந்தாள்.
“வாழ்த்துகள் இளா! வாழ்த்துகள் அண்ணா!” என்று பரிசுப் பொருளை அவர்களது கைகளில் கொடுத்தாள்.
தோழியின் அருகில் நின்று தானும் ஒரு அழகான புகைப்படம் எடுத்துக் கொண்டாள் மிதுனா.
அவள் இந்த நேரம் வரை சாப்பிடாமல் இருப்பதை அறிந்து கொண்ட சிவசங்கரி உணவுண்ண அனுப்பி வைத்தார்.
“மனசு ஃபுல்லா நிறைஞ்சு போச்சுப்பா” என்று மற்ற இருவரிடமும் கூறினார் சுமதி.
மூன்று குடும்பங்கள் மட்டுமே இத்தனை அழகாக கோவர்த்தனனுக்கும், இளந்தளிருக்கும் திருமணம் செய்து வைத்திருந்தனர்.
சிவசங்கரி, “மனதில் நல்லது மட்டுமே நினைச்சா எல்லாமே சாத்தியம் தான் சுமதி” என்றார்.
“கரெக்ட் க்கா.இவ்வளவு அழகா கல்யாணம் நடத்தி வச்சிருக்கோம் பாருங்களேன்!” என்று பூரித்தார் ரோகிணி.
“உங்க எல்லாருக்கும் தான் நன்றி சொல்லிட்டே இருக்கணும்னு தோணுது. ஆனால் உன்னோட இந்தக் கோபப்பார்வை தடுத்து நிறுத்திடுது ரோகிணி” என்றார்கள் சுமதியும், சிவசங்கரியும்.
“அந்த பயம் இருந்துட்டே இருக்கட்டும் க்கா” என்று பொய்யாய்க் கண்டனம் தெரிவித்தார் ரோகிணி.
மாப்பிள்ளைக்கும், பெண்ணுக்கும் பசியெடுக்கும் என்று அவர்களைச் சாப்பிட அழைத்துப் போய் விட்டு, அதற்குள் மணமகளை மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கான ஆயத்தங்களைச் செய்தனர் மீதி இருந்தவர்கள்.
சிவசங்கரி, “சுபா! எல்லாத்தையும் பேக் பண்ணு. இளந்தளிரை வேற மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பி வைக்கனும்” என்றார் இளைய மகளிடம்.
“டைரக்ட் ஆக அங்கே போகனுமா அம்மா?”
எல்லாவற்றையும் பையில் அடுக்கிக் கொண்டே கேட்டாள்.
“இல்லடா.அக்காவும், மாமாவும் நம்ம வீட்டுக்கு வந்துட்டு, அப்பறம் மாப்பிள்ளை வீட்டுக்குப் போவாங்க” என்று விளக்கம் அளித்தார்.
மண்டபத்தில் எதையும் மறந்து விட்டு விடக்கூடாது என்று அனைத்தையும் தேடிப் பிடித்துப் பைகளில் திணித்தனர்.
மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் வந்து விட,
” கிளம்பலாமா சிவா? ரோகிணி எங்க?” என்று அங்கு வந்தார் சுமதி.
“பேக் பண்ணிட்டோம் சுமதி. போகலாம். ரோகிணியை நானும் பாக்கல” என்று கூறி முடிப்பதற்குள் அவர் அங்கே விஜயம் தந்தார்.
“நாங்களும் பேக் பண்ணிட்டு இருந்தோம் க்கா. அதான் லேட். பொண்ணு, மாப்பிள்ளை சாப்பிட்டுட்டாங்களா?” என்று கேட்டார்.
“சாப்பிட்டு இருப்பாங்கன்னு தான் நினைக்கிறேன்” என்று சிவசங்கரி கூற,
உணவருந்தும் இடத்திற்குப் போய்ப் பார்த்து விட்டு வந்தாள் சுபாஷினி.
“சாப்பிட்டு முடிக்கப் போறாங்க ம்மா” எனவும்,
“அக்கா நான் போய் ஆரத்திக் கரைச்சி வைக்கிறேன். நீங்க அவங்களைக் கூப்பிட்டு வாங்க” என்று கணவனுடன் வீட்டிற்கு விரைந்தார் ரோகிணி.
“நாம ரெண்டு பேரும் தனியாக சில ஃபோட்டோஸ் எடுத்துக்கலாம் தளிர்” என்று இருவரும் மேடையேறினர்.
விதவிதமாகப் போஸ் கொடுத்து தங்களுக்குப் பிடித்தமான வகையில் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
அவர்களது ஃபோட்டோ ஷூட் நடத்தி முடித்ததும்,
“வீட்டுக்குப் போகலாம் வாங்க” என்று காரில் எல்லாரும் ஏறிக் கொண்டனர்.
ரோகிணி தயாராக வாசலில் நின்றிருந்தார் மைதிலியுடன்.
கார் வந்ததும்,
“மைத்தி! ஆரத்தித் தட்டை எடுத்துட்டு வா ம்மா” என்று ரோகிணி மகளைப் பணித்தார்.
மணமக்கள் இறங்கியதும், முன் வந்து ஆரத்தி எடுத்து முடித்தார்.
“உள்ளே போங்க” என எல்லாரையும் வீட்டிற்குள் நுழையச் சொன்னார்.
பால், பழம் கொடுத்துச் சடங்குகளைச் செய்தனர்.
“எல்லாரும் உட்காருங்க” என்று அமர வைத்து விட்டு,
“இளா! வந்து உன்னோட திங்க்ஸ்ஸைப் பேக் பண்ணுடா” என்று மூத்த மகளை அழைத்தார் சிவசங்கரி.
அழைக்கும் போதே குரல் கம்மி இருந்தது அவருக்கு. எவ்வளவு தான் விசும்பலை அடக்கி வைப்பது. ஆனாலும் வேறு வழியில்லையே?
சுபாஷினியும் லேசாக அழுது விட, அறைக்குள் இருந்ததால், யாரும் அவள் அழுவதைப் பார்க்கவில்லை.
அறைக்குள் வந்த இளந்தளிர் புன்னகையுடன்,
“ஹப்பாடா! நேரம் வந்துருச்சு.என்னங்க?” என்று கணவனை உரக்க அழைத்தாள்.
தொடரும்.