ஜீவன் 3
திருமணம் இருமனம் இணையாமல் நடந்ததால் எந்த சடங்கையும் ஏற்பாடு செய்யவில்லை ஆதிலட்சுமி. மகளோடு இருந்த சுகன்யா நாகரிகம் கருதி தன் மகனை அழைத்துக் கொண்டு புறப்பட்டார். அகல்யாவின் தம்பி பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான்.
தரணீஸ்வரன் அறையில் அகல்யா அமர்ந்திருக்க, “உள்ள வரலாமா அகல்” என உத்தரவு கேட்டபடி அறை வாசலில் நின்றார் அவளின் மாமியார்.
பதில் எதுவும் சொல்லாமல் அகல்யா மௌனம் காக்க, “உன்னோட கோபம் புரியுது. நீ நினைக்கிற மாதிரி உனக்கு நான் எந்த துரோகமும் செய்யல. உன்னோட குணம் எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்துச்சு. நீ என் மருமகளா வந்தா என் மகனோட வாழ்க்கை மட்டும் இல்ல இந்த குடும்பமே நல்லா இருக்கும்னு நம்பி தான் முயற்சி எடுத்தேன். கண்டிப்பா உனக்கு இது ஒரு நாள் புரியும்.
அதுவரைக்கும் அவசரப்பட்டு எதுவும் செய்யாம கொஞ்சம் பொறுமையா இருக்க பாரு. புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுல நான் என்னைக்கும் வர மாட்டேன். அதே மாதிரி என் மகனா நீயான்னு வந்தா என் ஆதரவு உனக்கு தான் இருக்கும்.” என்றவரை அப்பொழுது தான் பார்த்தாள் அகல்யா.
“கல்யாணம் மட்டும் தான் உன் விருப்பம் இல்லாம நடந்திருக்கு. மத்ததெல்லாம் நீ எப்ப சொல்றியோ அப்போ. அதுவரைக்கும் என் மகன் பக்கத்து ரூம்ல தங்கிப்பான்.”
“கல்யாணமே விருப்பம் இல்லாம நடந்திருச்சு. இனி என்ன இருக்கு என் விருப்பத்தோட நடக்க. மகன் வாழ்க்கைக்காக என் வாழ்க்கைய பலியாக்கிட்டீங்க. எத்தனை நாள் கனவு கண்டிருக்கேன் தெரியுமா ராமர் மாதிரி எனக்கு ஒரு புருஷன் கிடைக்கணும்னு.
அதுக்கு தகுதியா இருக்கணும்னு என் மனச இப்ப வரைக்கும் கண்ட்ரோலா வச்சிருக்கேன். அப்படிப்பட்ட என்னை இந்த மாதிரி ஒருத்தனோட சேர்த்து வச்சுட்டீங்களே. “
“முதல் வாழ்க்கை சரியா இல்லன்னா இன்னொரு வாழ்க்கையை தேடக் கூடாதா?”
“உங்க மகன் மாதிரி வாழ்க்கைய இழந்த ஒருத்திக்கோ இல்ல சரியா வாழ்க்கை அமையாத ஒருத்திக்கோ உங்க தேடலை கொடுத்து இருக்கலாம்.”
“நான் சேவகம் பண்ண ஆள் தேடலை. உன்ன மாதிரி நல்ல பொண்ண மட்டும் தான் தேடினேன். ஒருவேளை உனக்கு அந்த மாதிரி ஆகி இருந்தாலும் நான் இந்த கல்யாணத்தை நடத்தி இருப்பேன்.”
“ஓஹோ! அவ்ளோ நல்ல உள்ளமா நீங்க. அப்போ நான் உங்க குடும்பத்துக்கு ஒத்து வரலைன்னா கூட தூக்கி போட்டுட்டு மூணாவதா ஒரு பொண்ண பாருங்க தப்பில்லை. ஆம்பள திமிரு, காசு இருக்க கொழுப்பு எத்தனை கல்யாணத்த வேணாலும் நடத்தி வைக்கும்.”
“கொஞ்சம் பார்த்து பேசுமா. என் பொண்டாட்டி நீ நினைக்கிற மாதிரி தப்பானவ இல்ல. ஒரு அம்மாவா மகனோட வாழ்க்கை நல்லா இருக்கணும்னு அவ படாத கஷ்டம் இல்ல. உன்ன ரொம்ப பிடிச்சதால தான் கட்டாயப்படுத்த வேண்டியதா போச்சு.
நேத்து ராத்திரி கூட உனக்காக அவ்ளோ நேரம் அழுதா. நான் உன்னை வேணான்னு தடுக்கும் போது கூட இவதான் எனக்கு சரியான மருமகள்னு உறுதியா சொன்னா. இந்த கல்யாணத்தை நடத்தி முடிக்குறதுக்குள்ள அவ மனம் எவ்ளோ பயந்துச்சுன்னு எனக்கு மட்டும்தான் தெரியும். அப்படிப்பட்டவளை புரிஞ்சுக்கலனாலும் பரவால்ல வெறுத்து ஒதுக்காத.” மனைவியை கடுமையாக பேசிக் கொண்டிருக்கும் மருமகளின் பேச்சை கேட்டவர் பொறுக்க முடியாமல் பேசிவிட்டார்.
எழுந்து அவர் அருகில் சென்றவள், “நீங்க சொல்றது உண்மையாவே இருக்கட்டும். அதுக்காக என் வாழ்க்கைய வீணாக்குவீங்களா. எத்தனை தடவை உங்க கிட்ட சொல்லி இருப்பேன் எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு. அதையும் மீறி இதோ…” என்றவள் ஆடைக்குள் ஒளிந்திருக்கும் தாலியை அவர்கள் முன்பு நீட்டி,
“இதுக்கு என்னை கட்டுப்பட வச்சிட்டீங்களே. நீங்க வேணா அந்த மருமக இடத்துல என்னை வைக்கலாம். என்னால அதை ஜீரணிச்சுக்க முடியல. இந்த ரூம் முதல் கொண்டு எல்லாமே இன்னொருத்தி யூஸ் பண்ணி தூக்கி போட்டது.
இதை யூஸ் பண்ணவே அருவருப்பா இருக்கும் போது உங்க மகனை எப்படி ஏத்துப்பேன். என்னோட இத்தனை வருஷ கனவை மொத்தமா ஒரு கல்யாணத்துல ஒடச்சிடீங்க. நான் என்னைக்கும் உங்களை மன்னிக்க மாட்டேன். தயவுசெஞ்சு கொஞ்ச நாளைக்கு என்கிட்ட எதையும் பேசாம விலகி இருங்க.” என்றவள் இதற்கு மேல் பேச ஒன்றுமில்லை என்பது போல் அவள் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
தம்பதிகள் இருவரும் பேச்சுக்களுக்கு இடம் இன்றி மௌனமாக பார்த்துக் கொண்டிருக்க, படியேறிக் கொண்டிருந்த தரணீஸ்வரன் இவை அனைத்தையும் கேட்டான். தன்னை ஒருத்தி அருவருப்பாக நினைப்பதை நினைத்து அவன் உடல் அருவருத்தது. என்ன இருந்தாலும் அவள் சொல்வது உண்மை தானே! இன்னொருத்தி வேண்டாம் என்று தூக்கி எறிந்த தன்னை அவமானச் சின்னமாக நினைத்தவன் வந்த வழியே சென்று விட்டான்.
***
காலையில் இருந்து அந்த வீட்டில் யாரும் உணவு உண்ணவில்லை. இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்றால் தெம்பாக இருக்க வேண்டும் அல்லவா! தன்னைத்தானே தேற்றிக் கொண்டு இரவு உணவை தயார் செய்தார் ஆதிலட்சுமி. அவரின் கணவர் மனைவிக்கு பக்க துணையாக அனைத்து உதவிகளையும் செய்ய, அவர்களின் புதல்வன் வெளியில் கிளம்பி கொண்டிருந்தான்.
அதை கவனித்த தயாளன், “எங்கப்பா கிளம்பிட்ட?” கேட்டிட, பதில் சொல்லாதவன் இலகுவான இரவு நேர உடை அணிந்து கொண்டு சென்று விட்டான்.
சமையலறை வந்தவர் நடந்ததை மனைவியிடம் விவரிக்க, “கவனிச்சுட்டு தாங்க இருந்தேன். அவனை இனி நம்மளால திருத்த முடியாது. மேல இருக்க நம்ம மருமக கிட்ட அந்த பொறுப்பை ஒப்படைக்க வேண்டியது தான்.” என்றவர் தன் வேலைகளை கவனிக்க,
“அந்த பொண்ணுக்கு நம்ம பையனுக்கு மேல வீம்பு. முதல்ல அகல்யாவ மாத்தணும்.” என்றார் தயாளன்.
“அவளை எதுக்குங்க மாத்தணும்? அதுக்கு அவசியம் இல்லை. கொஞ்ச நாள் நிதானமா இங்க நடக்குறதை கவனிச்சா போதும் அவளே… அவளோட சேர்த்து தன்னோட புருஷனையும் மாத்திப்பா.”
“ஆரம்பத்துல இருந்தே அகல்யா மேல அதிக நம்பிக்கை வச்சுட்ட ஆதி. அதான் என்ன நடக்குதுன்னு புரியல உனக்கு. அந்தப் பொண்ணு கல்யாணம் ஆனதை அசிங்கம்னு நினைக்குது. இதுல எப்படி நம்ம மகன் கிட்ட பேசும்னு நினைக்கிற?”
“அவ கல்யாணத்தை அசிங்கம்னு நினைக்கலங்க. கட்டிக்கிட்டவனை அசிங்கம்னு நினைக்கிறா. என்ன கேட்டா ஒரு பொண்ணா அவளோட எண்ணங்கள் சரின்னு தான் சொல்லுவேன். நமக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இருந்து இவ வயசு இருக்கும் போது ரெண்டாந்தாரமா கட்டி கொடுக்க சம்மதிப்போமா.”
“இவ்ளோ சப்போர்ட் பண்ற நீ எதுக்காக இந்த பொண்ண கட்டாயப்படுத்தி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்க.”
“நியாயம், தர்மம் எல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலை வந்தா மாறுங்க. எனக்கு என்னோட மகனைத் தவிர வேற எதுவும் இப்போதைக்கு முக்கியமில்லை. அவன் பழைய மாதிரி ஆகணும். என் மகன் முகத்துல அந்த சந்தோஷத்தை நான் பார்க்கணும். அதெல்லாம் அகல்யாவால முடியும்னு நம்புனதால தான் இந்த முடிவு. எனக்கு நம்பிக்கை இருக்குங்க. நீங்க வேணா பாருங்க இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாம் மாறும்.”
***
அழைத்தால் தன் மருமகள் சாப்பிட வர மாட்டாள் என்பதை அறிந்த ஆதிலட்சுமி அவள் இருக்கும் இடத்திற்கு உணவைக் கொண்டு சென்றார். சிறிது கூட மதிக்கவில்லை அவள். இருந்தும் மனம் தளராதவர்,
“கோபத்தை சாப்பாட்டுல காட்டாத.” என்றார்.
அவ்வார்த்தையில் திரும்பி மாமியாரை முறைத்தவள் அருகில் இருக்கும் தட்டை தள்ளி விட, அதுவோ கீழே விழுந்து அலறியது. விழுந்த தட்டை கவனித்த அகல்யா மாமியாரை இன்னும் அதிகமாக முறைக்க,
“தெரியும் நீ இப்படி ஏதாச்சும் பண்ணுவன்னு. அதனால தான் வெறும் தட்ட மூடி வச்சேன். இந்த மாதிரி கோபப்பட்டு தட்ட தூக்கி அடிக்க கூட தெம்பு வேணும். அதனால தான் சொல்றேன் வீம்பு பிடிக்காம சாப்பிடு.” என்றவர் மீண்டும் ஒரு தட்டை அவள் முன்பு வைத்து விட்டு புன்னகைத்தார்.
எதுவும் செய்ய முடியாத மனநிலையில் அவள் அமைதியாக இருந்து கொள்ள, “எனக்கு தெரியும் நீ ரொம்ப தன்மானம் பார்க்குற ஆள்’ன்னு. உனக்கு உரிமை இல்லாத வீட்டுல சாப்பிட கூச்சமா இருந்தா எப்பவும் போல வேலைக்கு போகலாம். ஆனா, ஒரு கண்டிஷன்… அந்த எப்பவும் போல’ன்றது நம்ம ஆபீஸா தான் இருக்கணும்.” என்றவர் முடிக்கும் முன்னர்,
“திரும்பத் திரும்ப என் கோபத்தை கிளறிட்டு இருக்காதீங்க. வயசுக்கு மரியாதை கொடுத்து ரொம்ப பொறுமையா இருக்கேன். நான் எப்போ சாப்பிடணும் எங்க வேலை பார்க்கணும்ங்கிறது என்னோட விருப்பம். இதை செய் அதை செய்னு கண்டிஷன் போடுற வேலை என்கிட்ட வேணாம்.” என்றாள் அவரின் கோபக்கார மருமகள்.
“உன்ன கோபப்படுத்த இப்படி சொல்லல. மிஸ்ஸஸ் தரணீஸ்வரன் வேற ஒரு ஆபீஸ்க்கு போனா யாரும் வேலை தர மாட்டாங்க. உன் புருஷன் சம்பாதிச்ச பேரு அப்படி.”
நக்கல் பார்வையுடன் மாமியாரை ஏறிட்டவள், “கூடவே குடிகார பட்டத்தையும் சேர்த்து வாங்கி வச்சிருக்கான்.” என்றாள் கேலியோடு.
“ஆமா! என் மகன் குடிகாரன் தான்.” என்றவர் மருமகள் போல் நக்கல் பார்வையுடன், “எங்க, நீ சொல்லு பார்ப்போம்… நான் ஒரு குடிகாரனுக்கு பொண்டாட்டின்னு.” என்றவரின் வார்த்தையில் அவளின் நிதானம் குறைய ஆரம்பித்தது.
மருமகளின் கோபப் பார்வையில் அதை உணர்ந்து கொண்டவர், “இனிமே என் மகன்னு சொல்றதை விட உன் புருஷன்னு சொல்றது தான் சரியா இருக்கும். அதனால எதை பேசுறதா இருந்தாலும் யோசிச்சு பேசு. என்னை மாதிரி நாலு பேரு உன்னை பார்த்து சிரிச்சிடக் கூடாது.” என்றார்.
அவர் வார்த்தையும் தன்னிடம் கொடுக்கும் பார்வையும் எரிச்சலை கொடுத்தது அகல்யாவிற்கு. என்ன பேசி இவரை அசிங்கப்படுத்துவது என்ற ஆழ்ந்த சிந்தனையில் அவள் இருக்க, “நீயா நானான்னு போட்டி போட எனக்கு விருப்பம் இல்லை அகல். ஏன்னா உன்கிட்ட விரும்பியே தோற்றுப் போக நான் தயார். என் வீட்டுக்கு வந்த மகாலட்சுமி நீ.” என்றதும் அவள் மறுத்து பேச வர,
“ஏற்கனவே ஒரு மகாலட்சுமி இருக்கா… அதான.” என்று அவள் வாயை அடைத்தார் ஆதிலட்சுமி.
“திரும்பவும் சொல்றேன் தரணீஸ்வரன் உனக்கு மட்டுமே சொந்தமானவன். சும்மா ஒரு வார்த்தைக்காக கூட அவனை இன்னொருத்திக்கு விட்டுக் கொடுக்காத. நீ ஆயிரம் காரணம் சொல்லி மறுத்தாலும் என் மனசுல நின்ன முதல் மருமகள் நீதான். கடைசி வரைக்கும் நீ மட்டும் தான் இந்த வீட்டோட மகாலட்சுமி.
உன்னோட கோபத்தை எவ்ளோ முடியுமோ அவ்ளோத்தையும் என்கிட்ட கொட்டு. அதோட வீரியம் எந்த அளவா இருந்தாலும் தாங்க நான் தயார். அதே மாதிரி ஒரு மாமியாரா நான் தர அத்தனை அன்பையும் ஒதுக்காம ஏத்துக்கோ.” என்று தன் நீண்ட உரையை முடித்தார்.
சில்லென்ற காற்று காத்தாடியின் உதவியால் ஆடையை நனைத்தாலும் இருக்கும் சூழ்நிலை அவளை குளிர்விக்க மறந்தது. இதற்கு மேல் பேசி தொந்தரவு செய்ய விரும்பாதவர் சாப்பிடுமாறு கூறிவிட்டு அங்கிருந்து நகர, வாழ்க்கையின் விசித்திரத்தை திறவுகோல் கொண்டு திறந்த நாளை எண்ணி துயரத்தில் ஆழ்ந்தாள் அகல்யா.
ஜீவன் 4
மாமியார் கொடுத்த உணவை உண்ண விருப்பமில்லாதவள் யோசனையில் அப்படியே உறங்கியும் போயிருந்தாள். இரவு விளக்கு எரிந்து கொண்டிருக்க, தரணீஸ்வரன் உள்ளே வந்தான். தூங்கிக் கொண்டிருக்கும் அகல்யாவை எழுப்பினான்.
அவள் தூக்க கலக்கத்தில் முதலில் எழ மறுக்க, “ஏய் எந்திரிடி!” என்ற கணவனின் சத்தத்தில் பதறி எழுந்தாள்.
தூக்கம் முழுவதுமாக அவளை விட்டு அகன்று இருக்க, “முதல் ராத்திரி அதுவுமா புருஷன்காரனை சந்தோஷப்படுத்தாம என்னடி தூக்கம் வேண்டி இருக்கு உனக்கு.” என்றவன் மீது இருந்து மது வாடை பயங்கரமாக வீசியது.
குமட்டிக் கொண்டு நகர பார்க்க, “என்னடி சீன் போடுற. நான் இப்படின்னு தெரிஞ்சு தான கல்யாணம் பண்ணிக்கிட்ட.” என்றவன் அவளை நெருங்கினான்.
“ஏய், கிட்ட வந்தின்னா அவ்ளோ தான் தள்ளிப்போ!”
“என்னது தள்ளி போகணுமா? தாலி கட்டி இருக்கேன். நீ என்னோட பொண்டாட்டி. எனக்கு என்ன தோணுதோ அதை செய்யத்தான் நீ இங்க இருக்க. ஓவரா பேசாம நான் சொல்றதை கேட்டு நடக்க பாரு.” என பேசிக்கொண்டே அவளை நெருங்கி விட்டான்.
பயத்தில் பின் நகர்ந்தவள் சுவற்றில் முட்டிக் கொண்டு நிற்க, “நல்லவ மாதிரி நடிச்சு என் குடும்பத்தை ஏமாத்தி என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டல. நான் அப்பவே எங்க அம்மா கிட்ட சொன்னேன் இவள வேலைக்கு வைக்காதீங்கன்னு. அப்பாவி எங்க அம்மா உன்ன நல்லவன்னு நம்பி திரும்பவும் என் வாழ்க்கைய நாசமாக்கிட்டாங்க.” என்ற தரணீஸ்வரனின் பார்வை அவளை நடுங்க வைத்தது.
அவள் கன்னத்தைப் பற்றியவன், “என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணதுக்கு தண்டனையா இன்னைக்கு உனக்கு இருக்கு.” என்றவன் அவளை கட்டி அணைத்தான்.
அவனிடமிருந்து விடுபட அகல்யா போராடிக் கொண்டிருக்க, விடுவதாக இல்லை தரணி. அத்துமீறி நடந்து கொண்டான் அவளிடம். உடல் அறுவறுக்க தன்னைத்தானே அந்த நொடி வெறுத்து கத்த ஆரம்பித்தாள். அதைக் கேட்ட பின்பு கூட அவன் நடவடிக்கையில் மாற்றமில்லை. ஆக்ரோஷமாக அவளை சிறைப்பிடித்தவன் தன் தேவையை தீர்த்துக் கொள்ள ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான்.
அவன் தொடுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தொடர்ந்து தன் எதிர்ப்பை காட்டிக் கொண்டே இருக்க, அவனிடமிருந்து வீசும் மது வாடை பலவீனப்படுத்தியது அவள் மூச்சை. வாந்தி வருவது போல் இருக்க, வேகமாக தன் முயற்சிகளை உத்வேகப்படுத்தினாள். அவளை விட அதிக பலம் கொண்டவன் முழுவதும் சிறை பிடித்துக் கொண்டான்.
அத்து மீறிய நடவடிக்கைகள் எல்லை இல்லாமல் சென்று கொண்டிருக்க, இனியும் தாமதித்தால் இவனின் ஆசைக்கு இறையாகி விடுவோம் என்ற பயத்தில், “போடா” என பெரும் சத்தத்தோடு தள்ளி விட, அடித்து பிடித்து எழுந்த அமர்ந்தாள் அகல்யா.
பெரிய பெரிய மூச்சுகளை இழுத்து வெளியிட்டவள் முகம் முழுவதும் வேர்த்து இருந்தது. பதட்டத்தில் கை கால்கள் உதறி குளிரெடுக்க, உதடுகள் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது. சுற்று முற்றும் தன் விழிகளை உருட்டி ஓரளவிற்கு சுய நினைவு பெற்றாள் கண்டது கனவு என்று உணர்ந்து. நிம்மதி பெருமூச்சிக்கு பதில் பயம் தான் அதிகமாக இருந்தது அவளுக்கு.
நொடி முள் அங்குமிங்கும் நகர்ந்து நிமிடங்களை கடத்தி அவளை ஆசுவாசப்படுத்தியது. இப்பொழுதுதான் பயம் அகன்று நிம்மதி பிறந்தது அகல் மனதில். தண்ணீர் வேண்டுமென்று மூளை கட்டளையிட, நிறைவேற்ற கால்கள் எழுந்து நின்றது. எதார்த்தமாக தண்ணீரைத் தேடி திரும்பியவள் அதிர்ந்து….
“ஆங்ங்ங்க்க்!” என்ற சத்தத்தோடு எழுந்த இடத்தில் பட்டென்று அமர்ந்தாள். மீண்டும் முகம் வேர்க்க துவங்கியது. நடுங்கும் கைகளைக் கொண்டு அதை துடைத்தவள் மெத்தையில் இருக்கும் தரணீஸ்வரனை பார்த்தாள்.
எப்பொழுது உள்ளே வந்தான் என்று தெரியவில்லை மெத்தையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். ஒருவேளை கண்ட கனவு நிஜமாக நடந்திருக்குமோ என்ற குழப்பத்தில் அப்படியே அமர்ந்து விட்டாள். இந்த நொடி உலகம் மொத்தமும் அழிந்து தன்னை மாய்த்துக்கொள்ள மாட்டோமா என்று இருந்தது அவளுக்கு.
இமைகள் படபடக்க கண்மூடி தன் மனதை நிதானப்படுத்த தொடங்கினாள். உள்ளம் அடங்க மறுத்து அவளிடம் போர் புரிந்து கொண்டிருக்க, அடக்கும் வழியை மனதிடமே கேட்டுக் கொண்டிருந்தாள். படபடக்கும் ஓசை விலகுவதாக இல்லை அவளை விட்டு. அந்த ஓசையில் திளைத்து நடுங்கிக் கொண்டிருந்தவள் செவியில் முணுமுணுக்கும் சத்தம் கேட்டது.
திடுக்கிட்டு அவன் எங்கிருக்கிறான் என்று பார்வையை சுழல விட்டாள். முன்பு இருந்தது போல் அதே மெத்தையில் தான் படுத்து இருந்தான். ஆனால், முணங்கல் சத்தம் மட்டும் செவியை நிறைத்தது. என்ன பேசுகிறான் என்பதை கேட்க அவள் மனம் முயன்றது.
தண்ணீருக்காக எழுந்த கால்கள் இப்பொழுது அதை ஒட்டு கேட்க நகர்ந்தது அவனிடம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திருக்கிறாள் இவனை. நிதானம் இல்லாத தள்ளாட்டத்தோடு தயாளன் கம்பெனிக்கு வந்திருந்தான். முகம் முழுவதும் தாடி அடர்ந்திருக்க கலைந்த தலையோடு மது வாடை தூக்க மிகவும் கெட்டவன் போல் காட்சி அளித்தான்.
அந்த முகம் தான் இவளுக்கு நன்று பதிவாகி இருந்தது. கண்கள் முழுமையாக மூடிக் கொள்ளாமல் பாதி நிலையில் இருந்தது. கட்டிலில் முழுதாக படுத்திருக்காமல் பாதி தரையை குத்தகைக்கு எடுத்திருந்தான். அவன் இருக்கும் நிலையை அறிந்து கடுப்போடு அருகில் சென்றாள்.
“சிவா!” முணுங்கும் ஓசை அவனிடமிருந்து.
புருவம் இரண்டும் முடிச்சிட, இன்னும் அந்த ஓசையை கேட்க ஆரம்பித்தாள். தெளிவாக கேட்கவில்லை அவளுக்கு. சலிப்போடு நகர ஆரம்பித்தவள் செவியில், “சிவா எங்க இருக்க? எங்கிட்ட வந்துடு. இன்னும் நான் உன்னை காதலிச்சிட்டு தான் இருக்கேன். என்னை விட்டு போற அளவுக்கு அப்படி என்ன நான் தப்பு செஞ்சிட்டேன்? என்னை எவ்ளோ காதலிச்ச… நீ வேணா மறக்கலாம் என்னால மறக்க முடியாது.” என்ற பேச்சுக்கள் விழுந்தது.
கோபத்தில் அவனைக் கொன்று விடலாம் போல் இருந்தது அகல்யாவிற்கு. அவன் வார்த்தையை கேட்ட பின் இருந்த கொஞ்ச நிம்மதியும் கூட பறந்து போனது. இன்னும் கடந்த கால மனைவியை காதலித்துக் கொண்டிருப்பவன் எதற்காக தன்னை திருமணம் செய்தான் என்ற கோபம் அவளிடம். ஆத்திரம் அவள் கண்ணை மறைக்க,
“பொறுக்கி நாயே! அவளை காதலிச்சிட்டு எதுக்காகடா என்னை கல்யாணம் பண்ண. என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது. என் கழுத்துல தாலி கட்டிட்டு இன்னொருத்திய காதலிக்கிறன்னு சொல்றியே அசிங்கமா இல்ல.” கேட்டாள் அவனின் சட்டையை பிடித்துக் கொண்டு.
நிதானம் இல்லாதவன் எப்படி பதில் சொல்வான்! அவள் பிடித்து இருக்கும் கையை உதறிவிட்டு, “சிவா!” என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
ஆத்திரம் அடங்கும் வரை அவனை அடித்துக் கொண்டே இருந்தாள் நெஞ்சில். போதையில் அதை தடுத்து விட்டுக் கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் அவளின் கையைப் பிடித்துக் கொண்டு, “சிவா இந்த மாதிரி எவ்ளோ வேணா என்னை அடி… விட்டுட்டு மட்டும் போகாதடி.” என்று அவளை தன்மீது இழுத்துக் கொண்டான்.
இப்படி நடக்கும் என்பதை யூகிக்காதவள் அவன் மீது விழுந்தாள். பற்களைக் கடித்துக் கொண்டு அவனிடம் இருந்து போராட, விடுவதாக இல்லை தரணீஸ்வரன். அவள் காதுக்குள் என்னவோ பேசிக் கொண்டிருந்தான். கேட்டவளுக்கு கூசியது உடம்பு மொத்தமும். அவர்கள் காதலித்த தருணத்தையும், இனிமையாக இருந்த தருணத்தையும் உளறிக் கொண்டிருந்தான்.
அதற்கு மேல் பொறுமை இல்லாமல் வேகமாக எழுந்து நின்றவள் அங்கிருக்க பிடிக்காமல் வெளியேறிவிட்டாள். சுவற்றில் சாய்ந்து கொண்டு சத்தம் இல்லாமல் கதறி அழுதாள்.
எதற்காக கடவுள் இப்படி ஒரு வாழ்க்கையை தனக்கு கொடுத்தான் என்ற கேள்வியோடு அழுகையை தொடர்ந்து கொண்டிருந்தாள். மூச்சு வாங்கியது பலமாக. அழுகையை ஓரம் வைத்தவள் சோர்ந்து அந்த இடத்திலேயே படுத்துக்கொண்டாள். நினைவு கடந்த நான்கு ஆண்டுகளை வட்டமிட்டது.
முதுகலை பட்டம் முடித்தவள் தன் இருபத்தி இரண்டாவது வயதில் வேலைக்கு செல்ல முடிவெடுத்தாள். அகல்யாவிற்கு தந்தை இல்லை. கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் பொழுது தவறிவிட்டார். ஓரளவிற்கு பிள்ளைகளுக்காக சேர்த்து வைத்து விட்டு சென்றிருந்தவர் புண்ணியத்தால் கஷ்டம் ஏதும் இல்லாமல் அவர்கள் குடும்பம் ஓடியது.
இனிமேல் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பை அவள் எடுத்துக் கொண்டாள். அகல்யாவின் தம்பி அருண் அப்போதும் பள்ளி படிப்பை தான் தொடர்ந்து கொண்டிருந்தான். அன்னைக்கு ஓய்வு கொடுத்தவள் தரணீஸ்வரன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தாள்.
அவள் வேலைக்கு சேரும் பொழுது தரணீஸ்வரன் அங்குதான் நிர்வாகம் செய்து கொண்டிருந்தான். வேலைக்கு வந்த இரண்டு மாதத்தில் அரசல் புரசலாக காதில் விழுந்தது அவனின் விவாகரத்து செய்தி. தனக்கு எதற்கென்று அவள் அதை கண்டு கொள்ளாமல் வேலையில் நல்ல பெயரை வாங்கினாள்.
அடுத்த ஒரு வருடத்தில் ஆதிலட்சுமியின் பார்வையில் விழுந்தாள். தினமும் அவளிடம் பேச்சுக் கொடுத்து நட்பை தொடர்ந்தார். அப்படியே மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டது. அந்த கம்பெனியில் முக்கிய பொறுப்பு வகித்தாள் ஆதிலட்சுமியின் சிபாரிசில். அங்கேயும் அவளின் திறமையை கண்டு உள்ளம் மகிழ்ந்த ஆதிலட்சுமி ஜி.எம் பதவியை தூக்கிக் கொடுத்தார்.
தயாளனுக்கும் அவள் திறமை புரிந்ததால் உடனே சம்மதித்தார். அவர்கள் கம்பெனியை விட்டு தரணீஸ்வரன் விலகியும் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு முக்கியமான மீட்டிங்க்கு ஏற்பாடு செய்திருந்தாள் அகல்யா. பங்குதாரராக அங்கு தரணீஸ்வரன் இருக்க வேண்டிய கட்டாயம்.
யார் என்ன சொல்லியதோ வர சம்மதித்து இருக்கிறான் என்ற செய்தி அவள் காதிற்கு வந்தது. ஆரம்பத்தில் பார்த்த எம் டி ஐ உற்சாகமாக வரவேற்க காத்திருந்தாள். மீட்டிங் தொடங்கி அரை மணி நேரம் சென்றிருந்த பொழுதும் அவன் வரவில்லை. எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் அவனின் பெற்றோர்கள் மீட்டிங்கை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்க, கதவு தட்டும் ஓசை கேட்டது.
“எக்ஸ்க்யூஸ் மீ!” என்ற அகல்யா இன்முகத்தோடு கதவை திறக்க, தள்ளாடி அவள் மீது விழுந்தான் தரணீஸ்வரன்.
மகனைப் பார்த்த பெற்றோர்கள் பதறி அடுத்து அவனிடம் வர, “சாரி…சாரி.. கையெழுத்து போ…போட வர்ர்ர சொல்லி இருந்தாங்க. நான் எங்க கையெழுத்து போடணும்.” யாரிடம் பேசுகிறோம் என்பது கூட புரியாத அளவிற்கு குடித்து இருந்தான்.
அங்கிருந்தவர்களிடம் மன்னிப்பு கோரி விட்டு மகனை அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள் பெற்றோர்கள். அதுதான் அவள் இரண்டாவது முறையாகவும் கடைசி முறையாகவும் அவனைப் பார்த்தது. அதன்பின் தாலி கட்டும்போது தான் பார்த்தாள்.
மெல்ல நினைவில் இருந்து வெளிவந்தவள் விழிகளை திறக்க, அழுது வீங்கிய கண்கள் அடம்பிடித்தது திறக்க. அதை இதற்கு மேலும் சோதிக்க விரும்பாதவள் அப்படியே கண் மூடி தூங்க ஆரம்பித்தாள்.
ஜீவன் துடிக்கும்…
Pavam agal