Loading

தேசம் 3

திருமண சடங்குகள் அனைத்தும் எப்படி நடந்ததோ சற்றும் உணர்வில்லை பிரார்த்தனாவிடம். மற்றவர்கள் இழுத்த இழுப்பிற்கு கை பொம்மை ஆனாள். எல்லாம் முடிந்து அவரவர் கலைந்து சென்றுவிட நான்கு நபர்கள் மட்டுமே மண்டபத்தில்.

சாமிநாதன் பெண்ணை அப்படியே விட்டு விட்டு கிளம்ப, தாய் பாசம் அதை செய்யவிடாமல் தடுத்தது. போதாக்குறைக்கு சரவணப் பொய்கையும் மாமனாரை சமாதானம் செய்ய முயன்றான். தன்னவன் பேச்சுத் திறமையை அசந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

மனதில் வேண்டாத எண்ணங்கள் படை எடுத்தாலும் ஏதோ ஒரு வித குழப்பத்தில் அமைதி காக்க வேண்டிய சூழ்நிலை. எப்படியோ மனம் இறங்கி வந்த சாமிநாதன் வீட்டிற்கு அழைத்து சென்றார். மகள் செய்த காரியத்தால் வந்த சொந்த பந்தங்களை அப்படியே அனுப்பியவர்,

“என் மருமகனுக்கு மனைவியா மட்டும் தான் இந்த வீட்டுக்குள்ள வரான்னு மட்டும் அவ கிட்ட சொல்லிடு. இனி அவளுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” உள்ளே சென்றுவிட, ஆரத்தி எடுத்து வரவேற்றார் வள்ளி.

பாலும் பழமும் அடுத்த சம்பிரதாயமாக அங்கு அரங்கேற, “இதெல்லாம் வேணாம் அத்தை அவளே ரொம்ப டயர்டா இருக்கா. எதுவா இருந்தாலும் நாளைக்கு பார்த்துக்கலாம். மத்த எந்த ஏற்பாட்டையும் செய்யாதீங்க.” என்ற மாப்பிள்ளையின் பேச்சை உச்சி குளிர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார் சாமிநாதன்.

எல்லாம் அடங்கிய பின் தான் கோபம் எட்டிப் பார்க்க தொடங்கியது பெண்ணவளுக்கு. மாப்பிள்ளையாக இவன் இருக்க எதற்காக என்னிடம் மறைத்தான் என்ற கேள்வி உதட்டு நுனியில் நின்றது. இவனால் தானே மண்டபத்தை விட்டு சென்று அவனிடம் சிக்கினேன். உண்மையைச் சொல்லி ஊருக்கு தன்னை புரிய வைக்காமல் நல்லவன் போல் பேசும் காதலன் பேச்சு எரிச்சலை கொடுத்தது.

தனிமைக்காக காத்திருந்தவளுக்கு அவை கிடைத்து விட வேக நடையிட்டு அவன் முன்பு நின்றாள். ‘எதுக்காக இப்படி பண்ணிங்க?’ என மனதில் கேள்வியை தயாரித்து அவனிடம் கேட்கும் நேரம்,

“எதுக்கு தனா இப்படி பண்ண?” என இவன் கேட்டான்.

கோபத்தை குழப்பம் மறைத்தது. வேகமாக வந்தவள் புரியாத பாஷையோடு பொறுமையாக முகம் நோக்க, இறுக்கமாக கட்டி அணைத்தான் சரவணப் பொய்கை. இதுவே அவளுக்கு பெரும் குழப்பமாக இருக்க உடல் குலுங்கி அழுகையை வெளிப்படுத்தும் கணவன் செயல் இன்னும் பெரும் குழப்பத்தை கொடுத்தது.

தன்னிடம் இருந்து அவனைப் பிரிக்க நினைத்து தோற்றுப் போனவள் கோபத்தை வெளிப்படுத்த நினைக்கும் நேரம், “என்னை இந்த அளவுக்கு நீ காதலிப்பேன்னு சத்தியமா நினைக்கல தனா. உன்ன காணாம ஒரு நிமிஷம் அப்படியே செத்துட்டேன் தெரியுமா. உன்ன சந்தோஷப்படுத்த நான் செஞ்ச செயல் இவ்ளோ கஷ்டப்படுத்தும்னு சத்தியமா நினைச்சு கூட பார்க்கல. என்னை மன்னிச்சிடு தனா.” என்றான்.

வந்த கோபம் அப்படியே அடங்கி செல்ல, “நான் எதுவும் வேணும்னு பண்ணல. என் மேல கோபப்பட்டு ஒரு வார்த்தை பேசிடாத தாங்கிக்க முடியாது. இதை நான் செய்ய முழுக்க முழுக்க நீ மட்டும் தான் காரணம். உன் மேல நான் வைச்சிருந்த காதல் தான் காரணம்.” என இன்னும் தேம்பி அழ துவங்கினான்.

அடங்கிப்போன கோபம் காணாமல் போனது. முதுகை தடவி கொடுத்து ஆசுவாசப்படுத்தியவள், “முதல்ல என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க. நீங்க எப்படி மாப்பிள்ளையா?” என அவனைப் பிரித்தாள்.

கண் சிவந்து முகமெல்லாம் வீங்கி பாவமாக அவள் கன்னத்தைப் பற்றியவன், “கொஞ்ச நேரம் உன் மடியில படுத்துக்கிறேன் தனா…ப்ளீஸ். ஒரு மாதிரி கை கால் எல்லாம் நடுங்குது.” என உதட்டை பிதுக்கி வெதும்பினான்.

என்ன பேசுவது என்று தெரியாமல் குழப்பக் குட்டையாக மாறியவள் காதல் மனம் கண்ணை மறைத்தது. மற்றதை எல்லாம் ஒதுக்கி வைத்தவள் அழுது கொண்டிருக்கும் தன் குழந்தையை மடியில் சாய்த்துக் கொண்டு தலை கோதி விட்டாள். அப்படியே உடல் சுருங்கி அவள் மடியில் தஞ்சம் அடைந்தவன் இடுப்பை கட்டிக் கொண்டான் இறுக்கமாக.

“சாரி தனா” என்பதை தான் விடாமல் மந்திரம் போல் சொல்லிக் கொண்டிருந்தான்.

தன்னவனை இப்படி பார்க்க மிகவும் பாவமாக இருந்தது பிரார்த்தனாக்கு. அவன் மனநிலையை கருத்தில் கொண்டு மருத்துவராக சாந்தப்படுத்த முயன்றாள். அவ்வளவு எளிதாக புலம்புவதை நிறுத்தவில்லை சரவணப் பொய்கை. நேரம் கூட பயம் தொற்றிக் கொண்டது இவளுக்கு. இப்படியே விட்டால் மனதோடு சேர்ந்து உடல் நிலையும் சிதைந்து விடும் என்ற பயத்தில் மெத்தையில் படுத்து அவனையும் தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டாள்.

“நான் பண்ணதெல்லாம் தப்புதான் தனா. என்னை வேணாம்னு மட்டும் சொல்லிடாத. நீ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது.”

“அப்படியெல்லாம் எதுவும் நடக்காதுங்க. எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்.
கொஞ்ச நேரம் தூங்க முயற்சி பண்ணுங்க. இவ்ளோ மைண்ட் டிஸ்டர்ப் ஆகுறது உங்களுக்கு நல்லது இல்ல.”

அழுகை மாறாத முகத்தோடு அவளை விட்டு சற்று விலகி படுத்தவன் அவள் கைகளை தன் கைக்குள் அடக்கிக் கொண்டு, “நான் தூங்கினதுக்கு அப்புறம் என்னை விட்டு போயிட மாட்டியே.” கேட்டான் ஏக்கமாக.

“நான் எதுக்குங்க உங்களை விட்டு போக போறேன். என் வாழ்க்கையில என்ன நடந்தாலும் அது உங்களோட தான்.”

“சத்தியமா போகக்கூடாது.” என்ற நிபந்தனையோடு அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு உறங்க ஆரம்பித்தவன் உறக்கத்திலும் அவள் பெயரை உச்சரித்து புலம்பத் துவங்கினான்.

வெகு நேரம் சிரமப்பட்டு கணவனை துயில் கொள்ள வைத்தவள் தன் கைகளைப் பிரிக்க, “நான் பண்ணதெல்லாம் உனக்காக தான் தனா. என்னை விட்டு போயிடாத நான் செத்துப் போயிடுவேன்.” இறுக்கமாக பிடித்துக் கொண்டு புலம்பினான்.

அவன் மனநிலை அறிந்து அவஸ்தையாக உணர்ந்தவள் எப்படியோ முயற்சி செய்து கைகளைப் பிரித்துக் கொண்டாள். நேராக நிமிர்ந்து படுத்து சுழலும் மின்விசிறியை தெளிவில்லாது பார்த்தாள். எத்தனை கேள்விகள் மனதில் இருந்தாலும் காதலன் காதல் ஈடு செய்ய துவங்கியது‌. என்னவோ நடந்திருக்கிறது அதற்கு தன் மேல் அவன் கொண்ட காதலே காரணம் என எண்ணி அவன் பக்கம் சாய நினைத்தவளை தூக்கம் ஆட்கொண்டது.

அவள் விழி மூடியதும் இவன் விழி திறந்து கொண்டது. என்ன நினைத்தானோ மெல்ல சிரித்தான். சத்தம் வராமல் கட்டிலை விட்டு இறங்கியவன் அவள் எழும் அளவிற்கு அதே நேரம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க என்ன செய்யலாம் என யோசித்தான்.

காதல் பரிசாக இவன் வாங்கி கொடுத்த கண்ணாடி பொம்மை ஒன்று பல் இளித்துக் கொண்டிருந்தது. அதை கண்டு இவன் சிரிக்க, அடுத்த நொடி தரையில் விழுந்து நொருங்கியது அந்த பொம்மை. சத்தம் கேட்டு அதிர்ந்து எழ,

“என் தனாக்கு நான் துரோகம் செஞ்சிட்டேன். என்னை அவ மன்னிக்க மாட்டா. இப்பவே என் மாமனார் கிட்ட எல்லாத்தையும் சொல்லி கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்க போறேன்.” என விழந்த பொம்மையை பார்த்து பேசிக் கொண்டிருந்தான்.

அவசரமாக எழுந்தவள் என்னவென்று உணர்வதற்குள் திடுக்கிட வைத்தது இவன் பேச்சு. மனைவி எழுந்து விட்டதை உணர்ந்தவன் வேகமாக,

“மாமா…! மாமா…!” கூச்சலிட்டான்.

“உங்களை தூங்க தான வைச்சேன் எதுக்கு எழுந்து அப்பாவ கூப்டுட்டு இருக்கீங்க?”

“விடு தனா! நான் நடந்த எல்லாத்தையும் மாமா கிட்ட சொல்லி இப்பவே மன்னிப்பு கேட்க போறேன்.”

“ஐயோ! ஒரு நிமிஷம் நில்லுங்க.” என அவள் தடுத்தும் கேட்காதவன் கதவை திறந்தான். தன் பலம் திரட்டி அதை சாற்றியவள்,

“நீங்க சொல்லுங்க நான் வேணாம்னு சொல்லல. அதுக்கு முன்னாடி என்ன நடந்துச்சுன்னு என்கிட்ட சொல்லுங்க.” என்றாள்.

“நான் சொன்னதை கேட்டா கோவத்துல என்னை விட்டு போயிடுவ. மாமா கிட்ட பேசி மன்னிப்பு கேட்குறது தான் சரியா இருக்கும்.”

“திரும்பத் திரும்ப ஒரே வார்த்தையை சொல்லாம என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க. தலையும் புரியாம வாலும் புரியாம மண்டை வெடிக்குது. இருக்கிற தலைவலிக்கு நான் பைத்தியம் ஆகிடுவான் போல.” எனக் கத்தியவள் மெத்தையில் அமர்ந்து தலையை பிடித்துக் கொள்ள,

“என்னை பைத்தியம்னு சொல்றியா தனா.” தாழ்வான குரலில் கேட்டான்.

அவசரப்பட்டதை எண்ணி மனதில் கடிந்து கொண்டவள் அவனை சமாதானம் செய்ய, “நீ சொன்னாலும் சொல்லலனாலும் நான் பைத்தியம் தான. இந்த பைத்தியத்தை ஏன் கல்யாணம் பண்ணோம்னு யோசிக்கிறியா.” என அவளை நோகடித்தான்.

“அப்படியெல்லாம் நினைப்பேன்னு நம்புறீங்களா?”

“இல்ல…ஆனா…” எனக் கண் கலங்க ஆரம்பித்தான்.

அணைத்துக் கொண்டவள் தன் நிலையை வார்த்தையால் புரிய வைக்க, “சாரி என்னால தான இதெல்லாம்.” என மன்னிப்பு வேண்டினான்.

“ஒன்னு புரிஞ்சுக்கோங்க சரவணா… உங்களை தப்பா நினைச்சிருந்தா இந்த தாலியை வாங்கி இருக்க மாட்டேன். என்னவோ நடந்திருக்குன்னு புரியுது அது என்னன்னு தான் புரியல. நீங்க என்னை எவ்ளோ காதலிக்கிறீங்களோ அதைவிட அதிகமாக நான் உங்களை காதலிக்கிறேன். என்ன நடந்துச்சுன்னு சொல்லக்கூட வேண்டாம் நீங்க இந்த மாதிரி நடந்துக்காதீங்க ரொம்ப கஷ்டமா இருக்கு.” என்றவளை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

மனம் அவள் பக்கம் மாறுவதை உணராமல் கன்னம் பிடித்தவன், “என்னை ஏன் உனக்கு இவ்ளோ பிடிச்சது?” கேட்டான்.

“குழந்தையை யாருக்காது பிடிக்காம இருக்குமா. என்னை பொறுத்த வரைக்கும் வயசுல பெரிய குழந்தை நீங்க. குழந்தை தான் சொல்றதை புரிஞ்சுக்காம அடம் பிடிக்கும். இப்ப நீங்க பிடிக்கிற மாதிரி. இந்த குழந்தைக்கு அம்மாவா, காதலியா, இனி மனைவியா இருக்கப் போறதை நினைச்சு ரொம்ப பெருமைப்படுறேன்.” என்றதும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

இந்த அணைப்பு காதலால் மட்டுமே உருவாகி இருக்கிறது என்பதை அவன் மனம் அவனுக்கு புரிய வைத்திருந்தால் எல்லாம் மாறி இருக்கும். மனதைப் பற்றிய புரிதல் இல்லாமல் அனைத்தையும் தவறாக செய்தவன் வெகு நேரமாகியது அவளை விட்டு விலக.

அன்பாக நெற்றியில் முத்தமிட்டவள் கன்னத்தை கிள்ளியும் முத்தமிட்டு, “இப்ப உங்க தனாவ நம்புறீங்களா.” கேட்டிட, “இப்ப இல்ல எப்பவும்” என்று விட்டு மீண்டும் அணைத்துக் கொண்டான்.

புன்னகை தவழ பதிலுக்கு அணைத்துக் கொண்டவள், “இப்படியே என்னை கட்டிப்பிடிச்சிட்டே என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க பார்ப்போம்” என்றதும் அவன் விலகப் பார்க்க,

“நோ! இப்படியே இருந்து தான் சொல்லணும்.” அன்பு கட்டளை போட்டாள். அந்த அன்புக்கு கட்டுப்பட்டவன் நடந்ததை எல்லாம் சொல்லி முடிக்க, விலகி நின்றவள் கண்ட மேனிக்கு முறைத்தாள்.

***

தேசம் 4

கடிகார முட்கள் தன் இடத்தை மாற்றியும் பிரார்த்தனா கோபம் குறைவதாக இல்லை. கை கட்டி தலை குனிந்தவாறு நின்றிருந்தான் கணவன். அடிக்கடி அவள் முறைப்பு குறைந்து விட்டதா என ஓர விழியில் பார்க்க, அவை தான் இன்னும் கோபத்தை தூண்டியது.

“இன்னொரு தடவை அப்படி அப்பாவியா பார்த்தீங்க அவ்ளோ தான்” என்றபோது வேண்டுமென்றே குனிந்தவாறு அவளைப் பார்த்தவன் ஓயாமல் கண் சிமிட்டினான்.

“ச்சீ! மூஞ்ச மாத்துங்க பார்க்கவே சகிக்கல.”

“என்னை பார்க்க கூட பிடிக்கலையா தனா.”

“நான் இப்ப அப்படியா சொன்னேன்”

“சகிக்கலன்னா என்ன அர்த்தம்? இந்த மாதிரி நீ என்னை வெறுக்க கூடாதுன்னு தான் உங்க அப்பா கிட்ட சொல்லி மன்னிப்பு கேட்க போறேன்னு சொன்னேன். நீதான் அப்படி இல்ல இப்படி இல்லன்னு எல்லாத்தையும் கேட்டுட்டு மாத்தி பேசுற.”

“கடவுளே!”

“சாரி தனா”

“இப்ப சாரி சொல்லி என்ன ஆகப் போகுது. கொஞ்சம் கூட யோசிக்காம இப்படி ஒரு காரியத்தை பண்ணி இருக்கீங்க.”

“எல்லாம் உனக்காக தான”

“இன்னொரு தடவை இந்த வார்த்தையை சொன்னீங்க செம கோவம் வந்துரும். எனக்காக யோசிச்சதெல்லாம் சரிதான். ஆனா, என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம பண்ணது தான் தப்பு.”

“உன்ன சர்ப்ரைஸ் பண்ணலாம்னு…” என இழுத்தவன் அவள் முறைப்பைக் கண்டு அப்பாவியாக குனிந்து கொண்டான்.

“தானா வந்த வரன் மாதிரி எங்க அப்பா கிட்ட கல்யாணத்தை பேசி முடிச்சது தப்பு இல்ல. என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா எவ்ளோ சந்தோஷமா இந்த கல்யாணம் நடந்திருக்கும். அதை விட்டுட்டு அதைப் பண்ற இதை பண்றேன்னு யாரோ ஒரு மாப்பிள்ளையா என்னை கல்யாணம் பண்ண பார்த்து, என்னை விட்டு விலகி போற மாதிரி நடிச்சு, கடைசி நேரத்துல பித்து பிடிக்க வச்சு மண்டபத்தை விட்டு ஓட வச்சிருக்கீங்க.

ஒருவேளை நான் திரும்பி வராம போயிருந்தேன்னா என்ன பண்ணி இருப்பீங்க? எதுல விளையாடுறதுன்னு ஒரு விவஸ்தை இல்லையா”

“இது விளையாட்டு இல்ல. தாலி கட்ட போற நேரத்துல என்னை மாப்பிள்ளையா பார்த்து நீ எவ்ளோ சந்தோஷப்பட போறேன்னு தெரிஞ்சுக்க ஒரு சின்ன ஆசை.”

“இது சின்ன ஆசை இல்லைங்க விபரீத ஆசை. உங்களால எங்க அம்மா அப்பாக்கு எவ்ளோ கஷ்டம். தேவை இல்லாம என்னையும் தப்பா நினைச்சுட்டாங்க. அதைக் கூட விடுங்க ஒருவேளை நான் காதலிச்ச ஆளு நீங்கன்னு தெரிஞ்சிருந்தா உங்களை என்ன நினைச்சு இருப்பாங்க. இன்னும் இதுல விளக்க முடியாத நிறைய சிக்கல் இருக்கு. கொஞ்சம் பொறுமையா யோசிச்சு இருந்தீங்கன்னா இப்படி ஒரு காரியத்தை பண்ணி இருக்க மாட்டீங்க.”

“சாரி!” என வருந்தி கேட்க,

“அப்பா அம்மா கிட்ட நடந்ததை சொன்னா என்ன ஆகும் தெரியுமா. வாழ்க்கை முழுக்க ஓடிப்போனவன்ற அசிங்கத்தை சுமந்துகிட்டு இப்ப நான் வாழனும்.” என அவனை விட அதிகமாக வருந்தினாள்.

அருகில் நகர்ந்தவன் அவள் காலடியில் முட்டி போட்டு அமர்ந்து இரண்டு காதுகளையும் பிடித்துக் கொண்டான். கவனித்தும் கவனிக்காதது போல் இவன் செய்த வேலையால் உண்டான பிரச்சனையை எப்படி தீர்க்க போகிறோம் என்ற கவலையில் அவள் இருக்க,

“எனக்கு இவ்ளோ பிரச்சனை ஆகும்னு தெரியாது தனா. நான் எதிர்பார்த்தது எல்லாம் நான்தான் இனி உன் புருஷன்னு உணர்ர நொடி நீ எப்படி சிரிக்கப் போறேன்னு மட்டும் தான். அதுக்காக தான் கல்யாண விஷயத்தை சொல்லும் போது கூட விலகி போற மாதிரி நடிச்சேன். நீ காணாம போயிட்டேங்கற செய்தி வந்ததுக்கு அப்புறம் தான் தப்பு என்னன்னு புரிஞ்சது.

எப்படியா இருந்தாலும் என்னை தேடி தான் போயிருப்ப. வீட்ல நான் இல்லாம மண்டபத்துக்கு வருவேன்னு ஒரு சின்ன நம்பிக்கை. இனிமே இந்த மாதிரி தப்பு பண்ண மாட்டேன் தனா. தயவு செஞ்சு என்கிட்ட கோபப்படாத. எனக்கு இந்த உலகத்துல இருக்கிறது நீ மட்டும் தான. நீயே என்னை வெறுத்து ஒதுக்கலாமா. நான் பாவம் இல்லையா…” கண்ணில் நீர் கோர்க்க மன்னிப்பு வேண்டி அவள் காலடியில் தவம் கிடந்தான்.

“சரி பண்ணது தான் பண்ணிங்க எனக்கு யாரும் இல்ல நான் ஒரு அனாதைங்குற உண்மையை சொல்லியாவது கல்யாண பேச்ச ஆரம்பிச்சு இருக்கலாம்ல. யாரோ ஒருத்தரை கூட்டிட்டு வந்து அப்பா அம்மானு நாடகமாடி இருக்கீங்க. இப்ப அவங்களை பத்தி கேட்டா என்ன சொல்லுவீங்க?”

“சொன்னா திட்டக்கூடாது” குழந்தை போல் முகம் சுருக்கி கேட்க,

“ஆனா ஊனா முகத்தை இப்படி பாவமா வெச்சுக்கோங்க. திட்ட மாட்டேன் என்னன்னு சொல்லுங்க.” என்றாள்.

“நீ செஞ்ச காரியத்தால உன்ன பிடிக்காம கிளம்பிட்டாங்கன்னு சொல்லிட்டேன்.”

சட்டென்று முறைத்தவள், “அப்பா சமாதானம் பேசலாம் வாங்கன்னு உங்க வீட்டுக்கு கூப்பிட்டா” என்றிட,

“அப்பா அம்மா ரெண்டு பேரும் ஃபாரின் போய்ட்டாங்களே உடனே எப்படி உங்க அப்பாவால பார்க்க முடியும்.” என்றான்.

“பிராடு…பிராடு… என்னெல்லாம் வேலை பார்த்து இருக்கீங்க. இந்த மாதிரி யோசிக்க எவன் உங்களுக்கு சொல்லிக் கொடுத்தது. ஒரு வார்த்தை சொல்லி இருந்தா எல்லாத்தையும் அழகா நடத்தி இருப்பேன். உங்களால இப்ப எனக்கு தான் தலைவலி.” அவனைப் போட்டு அடிக்க ஆரம்பித்தாள்.

அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டவன் மனைவி மடியில் தலை வைக்க, “ப்ச்! கொஞ்சாம எந்திரிச்சு போங்க.” தள்ளி விட்டாள்.

நகராமல் அப்படியே படுத்துக்கொண்டு, “என் தனா கோபம் போற வரைக்கும் இப்படித்தான் இருக்க போறேன்.” என அதையே செய்து அவள் கோபத்தை சற்று குறைத்தும் விட்டான்..

***

இரண்டு நாட்கள் ஆகியும் திருமணத்தால் ஏற்பட்ட கலவரம் குறையவில்லை. சாமிநாதன் முற்றிலும் மகளைப் பார்ப்பதை தவிர்த்து விட, தந்தையை பார்த்தால் நடந்ததைப் பற்றி பேச வேண்டி இருக்கும் என்பதால் அவளும் முயற்சிக்கவில்லை.

வள்ளி மட்டும் மருமகனுக்காக மகளை அழைத்து அறிவுரை கூறினார். செய்யாத தப்புக்கான தண்டனையாக அனைத்தையும் கேட்டவள் உள்ளம் கணவனை குற்றம் சாட்டியது. அவன் செய்த செயலுக்கு நியாயமாக பொங்கி எழ வேண்டியவள் மன்னிக்க வேண்டிய சூழ்நிலை. உன் மீது உள்ள காதலே இதை செய்ய காரணம் என ஒரே வார்த்தையில் அவன் தன் செயலுக்கு நியாயத்தை தேடிக்கொள்ள, அதீத காதலில் தன்னை இழந்தவள் அவனிடம் வசியப்பட்டு போனாள்.

மனம் அவன் மீது உள்ள காதலால் மன்னித்து விடு என்றது. மூளை வேண்டாம் நடந்ததை தீர விசாரி என்றது. கண்ணில்லாத காதல் மூளையை தோற்கடிக்க, மனம் தன் காதலுக்காக தன்னவன் செய்த செயலை தனக்குத்தானே நியாயப்படுத்திக் கொண்டது.

போதாக்குறைக்கு கட்டியவனும் தொடர்ந்து குழந்தை போல் அவளை சுற்றி வந்து போதும் என்ற வரை மனதை கரைக்க, தெரியாமல் செய்து விட்டான் என தீர்ப்பு வழங்கி விட்டாள்.

இதையெல்லாம் விட கடத்திய அவன் நியாபகம் வேறு குடைந்தது. முதலில் அவனை அறிய வேண்டும் என்ற முடிவில் இருந்தவள் மனம் இதை இரண்டாம் பட்சமாக எண்ணி சாதரணமாக விட்டது.

இரண்டு நாட்களாக மாமனாரிடம் பேச சமயம் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு மூன்றாவது நாள் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் பேசும் பொழுது மனைவி இருக்கக் கூடாது என்பதற்காக,

“தனா…!” புத்தகம் படித்துக் கொண்டிருந்தவளை சீண்டினான்.

“ம்ம்!”

“நான் ஒன்னு கேட்பேன் செஞ்சி தருவியா?”

புத்தகத்தை மூடி வைத்தவள், “கொல்லப் போறேன் பாருங்க… இது என்ன யாரோ மாதிரி கேட்டுக்கிட்டு.”

“என்னை யாரோ மாதிரி தான் நடத்துற.” என வழக்கம்போல் முகத்தை வைத்தான்.

முதல் நாள் இரவு அவளை தொந்தரவு செய்யாதவன் அடுத்த நாள் இரவு ஆசையாக நெருங்கினான். கோபம் இல்லை என்றாலும் தெளியாத மனநிலையில் வாழ்க்கையை தொடங்க விரும்பாதவள் விலகி விட்டாள். அத்தோடு அவனும் தொந்தரவு செய்யாமல் இருப்பது போல் காட்டிக் கொண்டான்.

எதைக் குறிப்பிடுகிறான் என்பதை அறிந்தவள் அவன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு, “எல்லாத்துக்கும் குழந்தை மாதிரி பிஹேவ் பண்ணாதீங்க. இது நம்மளோட வாழ்க்கை நமக்கு பிடிச்ச மாதிரி ஆரம்பிக்க வேணாமா.” என்று விட்டு,

“சொல்லுங்க என்ன வேணும்” பதிலை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

“நீ அடிக்கடி செஞ்சு எடுத்துட்டு வருவியே மட்டன் பிரியாணி அதை சாப்பிடணும் போல இருக்கு. அத்தை கிட்ட கேட்க ஒரு மாதிரி இருக்கு. எனக்காக செஞ்சு தரியா” என்றதும் சிரித்தவள்,

“என் அழகு பாப்பா. உங்க கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சதே இந்த வெகுளித்தனம் தான். அப்படியே குழந்தை மாதிரியே இருக்கு நீங்க பண்ற ஒவ்வொன்னும்.” எனக் கொஞ்சி சில முத்தங்களை கொடுத்துவிட்டு கடைக்கு கிளம்பினாள்.

அவள் சென்ற பின் நடந்ததை எல்லாம் கோர்வையாக்கி சிரித்தான். மனதில் அடுத்து நடக்கப் போவதை சரியாக திட்டமிட்டு மாமனார் முன்பு நிற்க, மகள் செய்த அசிங்கத்தால் மருமகன் முன்பு கம்பீரமாக நிற்க முடியாமல் தளர்ந்தார். அதைக் கண்டு பரம ஆனந்தம் கொண்டவன் இன்னும் குத்த ஆரம்பித்தான்.

“ஓடிப்போன பொண்ண சரியா வளர்க்கலன்னு பீல் பண்றீங்களா மாமா.”

மருமகனின் வார்த்தை பெரும் மன உளைச்சலை கொடுக்க, “உண்மை தான் மாப்பிள்ளை. சரியா வளர்க்காத என்னை சரியான நேரத்துல காப்பாத்தி இருக்கீங்க. என் உயிர் இருக்கிற வரைக்கும் உங்களை மறக்க மாட்டேன். நீங்க மட்டும் அவளுக்கு வாழ்க்கை தராம இருந்திருந்தா கடைசி வரைக்கும் ஒருத்தனும் கல்யாணம் பண்ண சம்மதித்து இருக்க மாட்டான்.” என கண் கசக்கினார்.

“உங்க மானத்தை காப்பாத்த மூனு முடிச்சு போட்டு இப்போ நான் அனாதையா நிக்கிறேன் மாமா. எனக்கு என்ன பண்ணப் போறீங்க?”

“அப்பா அம்மா கோச்சிக்கிட்டு போனதை பத்தி தான மாப்பிள்ளை சொல்றீங்க. அவங்களுக்கு போன் பண்ணி கொடுங்க கைல கால்ல விழுந்தாவது நான் சமாதானம் பண்றேன்.”

“அதுக்கெல்லாம் இனி வாய்ப்பே இல்லை மாமா. என்னை மொத்தமா தல முழுகிட்டாங்க.”

“என்ன மாப்பிள்ளை சொல்றீங்க?”

“ஆபீஸ்க்கு போன் பண்ணி வேலை நடக்குதான்னு விசாரிச்சேன். ஆடிட்டர் இனி உங்களுக்கும் ஆபீசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்றாரு. வக்கீலுக்கு போன் பண்ணி கேட்டா குடும்ப சொத்து உட்பட எல்லாத்துல இருந்தும் எனக்கு உரிமை இல்லைன்னு சொல்றாரு. இங்க இருந்து அப்பா அம்மா ஃபாரின் போறதுக்கு முன்னாடி எல்லா ஏற்பாட்டையும் தெளிவா பண்ணிட்டு தான் போயிருக்காங்க.”

“எங்களால உங்களுக்கு இவ்ளோ கஷ்டம் மாப்பிள்ளை. எங்களை மன்னிச்சிடுங்க.”

“உங்க பொண்ண இனி எப்படி வாழ வைக்க போறேன்னு தெரியல மாமா. போட்டிருக்க துணியை தவிர கையில ஒத்த பைசா இல்லை.” என்றவன் பேச்சைக் கேட்டு குற்ற உணர்வில் தவித்த சாமிநாதன்,

“அப்படியெல்லாம் சொல்லாதீங்க மாப்பிள்ளை என்னோட சொத்து அத்தனைக்கும் ஒரே வாரிசு நீங்க தான். இப்பவே எல்லாத்தையும் உங்க பேருக்கு மாத்துறேன்.” என அவன் திட்டத்திற்கு பலியாடாக, குத்தாட்டம் போட்டான் சரவணப் பொய்கை.

தேசம் தொடரும்.

அம்மு இளையாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
8
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்