412 views

அத்தியாயம் 34

“எதுவும் நினைக்காமல் தூங்கு இளா.காலையில் சீக்கிரம் எழுந்திருக்கனும்” என்று உபதேசம் அளித்து விட்டு தானும் உறங்கினார் சிவசங்கரி. 

 

இளந்தளிருக்கு இரவு உறக்கம் சந்தேகம் தான் என்பது போல, நாளைய நாள் இப்போது அவளுக்கு வண்ணக் கனவுகளைக் தோற்றுவித்தது. 

 

அதையெல்லாம் சமாளித்துக் கொண்டு, உறங்கிப் போனாள். 

 

“சுபா! வா நாம கொஞ்ச நேரம் பேசிட்டு தூங்கலாம்” என்று மைதிலி தன் அறைக்கு அவளை அழைத்துச் சென்றாள். 

 

ரோகிணி இரு கோப்பைகளில் மிதமான சூட்டுடன் இருந்த வெந்நீருடன் அங்கே வந்தார். 

 

“நைட் ஹெவி டின்னர் அதனால் ஹாட் வாட்டர் குடிச்சிட்டு தூங்குங்க” என்று அவர்களைப் பருகச் செய்து விட்டே அங்கிருந்து அகன்றார். 

 

“பாதாம் பால் சூப்பரா இருந்துச்சுல்ல சுபா” என்றாள் மைதிலி. 

 

“ஆமா மைத்தி. எனக்கும் அது ரொம்ப பிடிச்சிருந்தது. இன்னும் நிறையவே வாங்கி டேஸ்ட் பண்ணி இருக்கலாம்” என்று அதன் சுவையைச் சிலாகித்துப் பேசினாள் சுபாஷினி. 

 

அக்காவின் திருமணத்தில் தானே தங்கைகள் தங்களால் முடிந்தளவிற்கு  லூட்டி அடிக்க முடியும். 

 

இன்றைய நலங்கு விழாவிலேயே தன்னுடன் மைதிலியைச் சேர்த்துக் கொண்டு, மண்டபத்திற்குள் வலம் வந்து, அலங்காரங்கள் எல்லாவற்றையும் பார்த்து வியந்தாள் சுபாஷினி. 

 

உணவின் சுவையும் இப்போது வரை நாவில் நர்த்தனம் ஆடிக் கொண்டிருந்தது சுபாஷினிக்கு. 

 

சாப்பிடும் போதே, மைதிலியுடன் ஒவ்வொரு பதார்த்தத்தைப் பற்றியும் ரிவ்யூ கொடுத்தவாறே உண்டாள். 

 

இப்போதும் அது ஞாபகமிருக்க, தோழிகள் இருவரும் அப்பேச்சிலேயே லயித்து விட்டனர். 

 

மைதிலியும் சிறு பெண் இல்லையே? தோழி தன் தமக்கையைப் பிரிவதை நினைத்து, நொறுங்கிப் போய் விடுவாள் என்று பேச்சைத் தன்னால் ஆன மட்டும் திசை திருப்பிக் கொண்டிருந்தாள். 

 

அப்படியே பேச்சு முடிந்து உறக்கத்தில் ஆழ்ந்தனர். 

 

இங்கோ, இளந்தளிர் தாயின் அருகில் கண் மூடி படுத்திருந்தாலும், உறக்கம் வராமல் திண்டாடிக் கொண்டு இருந்தாள். 

 

‘கல்யாணத்திற்கு முந்தைய நாள் இரவு மணப்பெண்ணிற்கு உறக்கம் வரக்கூடாது என்று சட்டம் உள்ளதா என்ன?’ புலம்பித் தவித்துக் கொண்டு இருந்தாள் இளந்தளிர். 

 

அவள் எப்போதும் காலையில் சீக்கிரம் எழுந்து விடுவாள் தான். ஆனால் அவள் எழுவதோ ஆறு அல்லது ஏழு மணி தான். 

 

இப்போதோ, கல்யாணச் சடங்குகள் ஒவ்வொன்றிற்கும் காலை நான்கு மணிக்கே எழுந்து கொள்ள வேண்டி இருந்ததால், அவளும் என்ன செய்வாள்? உறக்கம் கண்ணைச் சுழற்றினாலும் ஏனோ பகலில் உறங்க இயலவில்லை. 

 

எத்தனை சீக்கிரம் தூங்கப் போனாலும், காலையில் நான்கு மணிக்கு எழும்ப வேண்டும் என்றாலே, கிலி பிடித்து விடுகிறது அவளுக்கு. 

 

இப்போது, காலையில் திருமணத்திற்கும் நான்கு மணிக்கு எழுந்துக் குளித்துக் தயாராக வேண்டும். நல்லவேளை, நிச்சயத்தன்றே மெஹந்தி வைத்தாயிற்று. இல்லையென்றால், அதற்கும் இரவு நீண்ட நேரம் விழித்திருக்க வேண்டி இருக்கும். 

 

இது மட்டுமா அவளது நினைவலைகளை ஆக்கிரமித்து இருக்கிறது? இல்லையே! தன்னவனுடைய எண்ணங்களும் தனக்குள் விரவிக் கிடப்பதை அறிந்திருந்தாள் தானே! 

 

புன்னகை அரும்பியது இதழ்களில், வேறெந்த நினைவும் அவளைத் தற்போதைக்கு அமைதிப்படுத்தாது அவனது நினைவைத் தவிர. 

 

அருகில் படுத்திருக்கும் சிவசங்கரியோ, மகள் அறியாமல் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டார். 

 

 மகளைப் பிரிகையில், எத்தனைப் பாடுபடுகிறது தாயாரின் மனது. 

 

 தன்னைத் தொடர்ந்து சமன்படுத்திக் கொண்டே உறங்கினார் சிவசங்கரி. 

 

இவ்வளவு அதிகாலையில், குளிர்ந்த நீரில் குளித்தால், ஜஷதோ வந்து விடும் என்று மகனுக்கும், மருமகளுக்கும் சுடு தண்ணீர் தயார் செய்து வைத்திருந்தார் சுமதி. 

 

🌸🌸🌸

 

“சீக்கிரம் மைத்தி! உடனே நான் அக்காவைப் பாக்கனும்” என்று குதித்துக் கொண்டிருந்தாள் சுபாஷினி. 

 

இளந்தளிருடன் இருக்கப் போவதே கொஞ்ச நேரம் தான் எனும் பொழுது, அந்த நேரமும் குறைவதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை அவளால். 

 

மைதிலி, “இதோ ரெடி சுபா. வா கீழே போகலாம்” என்று அவளை அழைத்துக் கொண்டு, பெற்றோரிடம் சென்றாள். 

 

ரோகிணியும், பரதனும் தயாராகி இருந்தனர். 

 

ஹரீஷிடம் ஃபோனில் பேசிக் கொண்டு இருந்தார் ரோகிணி. 

 

“எல்லாம் இருக்குல்ல ஹரீஷா? என்ன வேணும்னாலும் இப்போவே சொல்லிடுங்க. எடுத்துட்டு வந்துட்றோம். சிவா அக்காகிட்ட கேளு போ” என்று மகனிடம் கூறினார். 

 

அவனும் சிவசங்கரியை வெளியே அழைத்து, “அம்மா எதாவது எடுத்துட்டு வரனுமான்னு கேட்டாங்கம்மா?” என்றான். 

 

“எதுவும் எடுத்துட்டு வர வேணாம் தம்பி.அவங்களைச் சீக்கிரம் வர சொல்லுப்பா.” என்கவும் அதை அப்படியே மொபைலில் தாயிடம் தெரிவித்தான். 

 

அதற்கு மேலும் தாமதிக்காமல், எல்லாரும் மண்டபத்திற்கு வந்தனர். 

 

எழுந்ததில் இருந்து அங்கே தான் கோவர்த்தனனும் தங்கியிருக்கிறான் என்றாலும் காலையிலிருந்து ஒரு தடவை கூட அவர்கள் சந்தித்துக் கொள்ளவில்லை. 

 

திருமணத்திற்காக என்று மஞ்சள் சேலையில், அதி அம்சமாக இருந்தாள் இளந்தளிர். 

 

முக அலங்காரம் செய்து கொண்டு இருந்ததால், கவனமாக இருந்தவளோ உள்ளே நுழைந்த சுபாஷினியையும், மைதிலியையும் பார்த்ததும் உற்சாகம் ஆனாள். 

 

“ஹேய் ! செல்லக்குட்டீஸ்… !” என்று அவர்களை வரவேற்றவள், அருகில் அமருமாறு கூறி விட்டு, அலங்காரம் செய்பவருக்குச் சங்கடம் விளைவிக்காத வகையில், பேசிக் கொண்டு இருந்தாள் அவர்களிடம். 

 

மணமகன் அறையிலோ, 

” நண்பா ! வேட்டியைச் சரியாகக் கட்டி விடு. அவிழ்ந்து விழவே கூடாது” என்று நண்பனிடம் கூறினான் கோவர்த்தனன். 

 

வெளியிலிருந்து குரல் எழுப்பினார் சுமதி. 

 

“தயாராகிட்டியா கோவர்த்தனா?” 

 

“ரெடி அம்மா. உள்ளே வாங்க” என்று அவரை உள்ளே அழைத்தனர். 

 

அவனிடம் சிலவற்றை சொல்லி விட்டு, ஹரீஷிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறி மற்றவர்களிடம் சென்றார். 

 

“பொண்ணுக்கு மேக்கப் போட்டுட்டு இருக்காங்கப் போல நண்பா?” என்றான் ஹரீஷ். 

 

“ஆமாடா. இன்னும் கொஞ்ச நேரத்தில் ஸ்டேஜூக்குப் போகனும்.நீயும் ரெடியாகு போ” 

 

ஹரீஷைத் தயாராகச் சொன்னவன், தன்னைக் கண்ணாடியில் ஒரு முறை பார்த்துக் கொண்டான் கோவர்த்தனன். 

 

மாப்பிள்ளை என்றால் இவனுக்கு மட்டும் பதட்டம், படபடப்பு இல்லாமல் இருக்குமா? நிச்சயம் இருந்தது. 

 

பெண்ணுக்குத் தூக்கம் தொலைந்தது போலவே, இவனுக்கும் தூங்கா இரவாகத்தான் நேற்று இருந்தது. 

 

கனவுகளில் மிதந்து கொண்டிருந்தவன் தாமதித்து தான் உறங்கினான். 

 

அப்படியென்றாலும், அதிகாலை வேளையில் எழ வேண்டுமே? 

 

அவனுக்கும் கனவுகள் கொடி கட்டிப் பறந்தாலும் தாலி கட்டியப் பின் தான் தன்னருகாமையில் இளந்தளிரைப் பார்க்க முடியும் என்று நினைத்துக் கொண்டு தயாரானான். 

 

🌸🌸🌸

 

“வா மிதுனா” என்று சிவசங்கரி அவளை வரவேற்றார். 

 

நெருங்கிய தோழியின் திருமணத்திற்குச் சொன்னது போல், விரைவாக வந்து விட்டாள் மிதுனா. 

 

“தண்ணீர் குடிம்மா” என்று சரியாக அவளுக்காக நீர் கொணர்ந்தார் ரோகிணி. 

 

அதை வாங்கிப் பருகியவளிடம், 

“இளா மேக்கப் போட்டுட்டு இருப்பா. போய்ப் பாரும்மா” என்று சுமதி சொல்லவும், 

 

“சரிங்க அம்மா” என்று இளந்தளிரைச் சந்திக்கச் சென்றாள் மிதுனா. 

 

சுமதி, “கோவர்த்தனன் தயாராகிட்டான் சிவா. ஏழு மணிக்கு முகூர்த்தம்.இன்னும் எதாவது பொருள் வைக்கனுமான்னு ஐயர்கிட்ட நான் போய்க் கேட்டுட்டு வர்றேன்” என்று ஐயரிடம் சென்றார். 

 

சிவசங்கரியும், ரோகிணியும் பந்தி நடக்கப் போகும் இடத்திற்குப் போனார்கள். 

 

கேட்டரிங் ஆட்களிடம், 

“யாருக்கும் சாப்பாடு குறைவாக இருக்கக் கூடாதுப்பா.பார்த்துப் பரிமாறுங்க. வர்றவங்க முகம் சுளிக்குறா மாதிரி நடந்துக்காதீங்க” என்று அறிவுரை வழங்கினார் சிவசங்கரி. 

 

ரோகிணி, “காஃபி, டீ ரெடியா வச்சிடுங்க சார்.அதுவும் காலியாக, ஆக நிரப்பி வைங்க” என்று கூறினார். 

 

🌸🌸🌸

 

“கல்யாணப் பொண்ணு!!” என்று மகிழ்ச்சியான கூவலுடன் உள்ளே வந்தாள் மிதுனா. 

 

அலங்காரத்தைக் கருத்தில் வைத்துக் கொண்டு, கண்களைச் சிமிட்டி தோழியை வரவேற்றாள் இளந்தளிர். 

 

அலங்காரம் முடியும் தருவாயில்,

“அப்படியே அசையாம உக்காந்து இருங்க. மேக்கப் செட் ஆகிடட்டும்” என்று பியூட்டிஷியன் அறிவுறுத்தினார். 

 

மிதுனா தன் கையில் கொண்டு வந்திருந்த பரிசுப் பொருளை அங்கிருந்த அலமாரியில் வைத்தாள். 

 

அப்போது மீண்டும் உள்ளே வந்த சிவசங்கரி, 

“மிதுனாம்மா போய் சாப்பிட்டு வாடா” என்றார். 

 

“வரும் போதே சாப்பிட்டுட்டு வந்துட்டேன்மா.லன்ச் சாப்பிட்றேன்”என்றாள் மிதுனா. 

 

” சரிம்மா” என்று சின்ன மகளிடம் திரும்பினார். 

 

“சுபா! ஒரு இலையில் சாப்பாடு போட்டுக் கொண்டு வா.கையோட அக்காவுக்கு ஊட்டி விட்டுட்றேன்” என்று அனுப்பி விட்டு, 

 

சுமதியிடமும், “மாப்பிள்ளைக்குச் சாப்பாடு கொண்டு போ சுமதி. சாப்பிட வை” என்று ஞாபகப்படுத்தினார். 

 

 அலங்காரமும் முகத்தில் சரியாக அமைந்து விட, தாயின் கைகளில் உணவுண்டு கொண்டிருந்தாள் இளந்தளிர். 

 

மணப்பெண் கோலத்தில் சர்வ லட்சணங்களுடன் இருந்த மகளை வாஞ்சையாகப் பார்த்துக் கொண்டே உணவை ஊட்டினார் சிவசங்கரி. 

 

ஏனையவர்கள் சிட்டாய்ப் பறந்து வேலை செய்து கொண்டிருந்தனர். 

 

இரு வீட்டாருக்கும் இது முதல் விசேஷம் அதுவும் கல்யாணம் எனும் பொழுது கேட்கவா வேண்டும்? 

 

துரிதமாக மகளுக்கு  உணவூட்டி முடித்தவர், மேடைக்குப் போனார். 

 

மாப்பிள்ளையை மேடைக்கு அழைத்து வரும் நேரம் என்பதால், 

“மாப்பிள்ளையை அழைச்சுட்டு வாங்கோ” என்று ஐயர் அறிவித்தார். 

 

ஹரீஷ் தான் தன் நண்பன் கோவர்த்தனனை மேடைக்கு அழைத்து வந்தான். 

 

சுபாஷினி, மைதிலி மற்றும் மிதுனா மணப்பெண்ணிற்கு அருகிலேயே இருந்ததால், மாப்பிள்ளையின் வருகையைப் பார்க்க இயலவில்லை. 

 

கோவர்த்தனன் மேடைக்கு வந்ததும் அவனுக்கு மாலை கொடுக்கப்பட்டது. அதை வாங்கி கழுத்தில் போட்டுக் கொண்டவன், அவர் சொல்லும் மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்து விட்டான். 

 

மகனின் மாப்பிள்ளைக் கோலத்தைப் பார்த்து ரசிக்க சுமதி அங்கே எப்போதோ ஆஜராகி விட்டார். 

 

அங்கே மேடையில் கோவர்த்தனன் அமர்ந்திருக்கிறான், இன்னும் சற்று நேரத்தில் தானும் அவனது அருகில் அமரப் போகிறோம், என்ற ஆவல் பெருகிக் கொண்டு இருந்தது இளந்தளிருக்கு. 

 

“பெண்ணை அழைச்சுட்டு வாங்கோ” என்று காதில் விழுந்ததும், 

 

இளந்தளிர் தங்கையின் கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள். 

 

ரோகிணி, “இளந்தளிரைக் கூப்பிட்டு வாங்கம்மா” என்கவும், 

 

மூன்று பெண்களும் மணப்பெண்ணை அலுங்காமல், மேடைக்கு அழைத்துப் போனார்கள். 

 

மஞ்சள் வர்ணப் பூவாய் மலர்ந்து வந்தவளை தலை உயர்த்திப் பார்த்தான் கோவர்த்தனன். 

 

அவளுடைய நிமிர்வு எப்போதும் போல இப்போதும் பிரம்ம்பிப்பைத் தான் கொடுத்தது. 

 

கோவர்த்தனனின் அருகில் அமர்த்தி வைக்கப்பட்டாள் இளந்தளிர். 

 

கன்னியாதானம் தொடங்கி, எல்லா சடங்குகளும் ஒரு பக்கம் நடந்து கெண்டிருக்க, இன்னொரு பக்கமோ 

தனக்கு மிக அருகில் இதழோரம் புன்னகையுடன் உட்கார்ந்து இருந்த பெண்ணவளின் காது மடல்களை ரசித்துக் கொண்டு இருந்தான் கோவர்த்தனன். 

 

மணமக்களின் குடும்பங்கள் தவிர, திருமணத்திற்கு வந்த அனைத்து சொந்தங்களும் இருவரது பொருத்தத்தைப் பார்த்துச் சிலாகித்துக் கொண்டனர். 

 

சுபாஷினி தமக்கையை விட்டு எங்கும் நகரவில்லை. 

 

இளந்தளிரின் இடப்புறம் அமர்ந்து கொண்டாள். 

 

சடங்குகள் செய்யும் போது, இருவரின் கரங்களும் ஒன்றோடொன்று இணைந்த தருணம், அனிச்சையாக அவர்களின் கண்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டது. 

 

ஐயர் தொடர்ந்து மந்திரம் ஓதியதால், இந்தப் பார்வையை மாற்றிக் கொண்டு, சடங்குகளை செய்து முடித்தனர் மணமக்கள். 

 

அடுத்த நிகழ்வு, கோவர்த்தனன் மற்றும் இளந்தளிர் கணவன், மனைவியாகப் போகிற தருணம் தான்! 

 

  • தொடரும்

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்