Loading

அத்தியாயம் 33

“உன் ஊரையே தீய வைச்சுக் கொளுத்தணும் டார்ல்ஸ்” என அக்ஷிதா பொங்கிட,

“நீ ஏண்டி திருடுனேன்னு ஒத்துக்கிட்ட. அந்த ரங்கனைப் பிடிச்சு குடுத்துருக்கலாம்ல” என்று விஹானா ஆதங்கத்துடன் கேட்டாள்.

“நான் சொல்லி நம்புற அளவு அங்க யாரும் இல்லை. ஏற்கனவே நான் திருடுறது ஊர்ல எல்லாருக்கும் தெரியும். சோ, பேனா பென்சில் திருடுறவ, நகையையும் திருடி இருப்பேன்னு ஆணித்தரமா நம்புனாங்க. அதுக்கு மேல மறுத்துப் பேசிக் கூட கொஞ்சம் அடி வாங்கி பாடியை பஞ்சராக்குறதுக்கு, மூடிக்கிட்டு இருக்குறது தவுசண்ட் டைம்ஸ் பெட்டர் டார்ல்ஸ்” என்றாள் கேலி போல.

அது அவர்களின் மனதையும் புண்ணாக்கியது.

ஆடவர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சஜித் தான், “என்ன மனுஷனுங்களோ… எப்படி ஒரு சின்னப் பொண்ணை இப்படித் தண்டிக்க முடியுது. அறிவே இல்லாதவனுங்க.” என்று முகத்தைச் சுளித்தான்.

ஜோஷித்தோ, “அதெல்லாம் அறிவு பொங்கி வழியுதுடா. அது இருக்கப்போய் தான இவளை நேக்கா மாட்டிவிட்டுட்டு நகையையும் ஆட்டைய போட்டிருக்கான் தட் ஸ்கவுண்ட்ரல்.” எனப் பல்லைக்கடித்தவன், “உன் ஊர் பேரை மட்டும் சொல்லு ஷவி. எல்லாரையும் நிக்க வச்சு சுட்டுத் தள்ளுறோம்.” என்றான் ஆவேசமாக.

அவர்களை இப்போதும் அவள் விழிகள் வியப்புடன் தான் நோக்கியது.

ஸ்வரூப் எந்த எதிர்வினையும் காட்டவில்லை. கோபத்தையும் சரி, அவளுக்காக துடிக்கும் மனதையும் சரி.

“அப்போ நான் சொல்றதை நீங்க நம்புறீங்களா என்ன?” சற்றே ஆச்சர்யம் கலந்து கேட்டவளிடம், “ஏன் நம்பாம?” எனப் புருவம் சுருக்கிப் பார்த்தான் ஸ்வரூப்.

இப்போது தான் அவனது தோள்கள் தன் தோள்களுடன் உரசுவதையே உணர்ந்தவள், மெல்ல அவன் கையை விடுவித்துக் கொண்டு, “இல்ல… உங்க வீட்ல திருட வந்தவ, நகையை திருடி இருக்க மாட்டேனா என்ன? உங்களுக்கு அந்த சந்தேகம் வரவே இல்லையா.” என ஏதோ ஆர்வம் தோன்றக் கேட்டு விட்டாள்.

அதில் அவளை சுவாரஸ்யத்துடன் பார்த்தவன், “சந்தேகம் வந்துருக்கும்… ஒருவேளை நான் காட்டுன பணத்தையும் நகையையும் வாங்கிட்டு, உண்மையை சொல்லிட்டு உன் ப்ரெண்ட்ஸ விட்டுட்டு போயிருந்தா, மே பி சந்தேகம் வந்துருக்கலாம். ஆனா இப்போ வரல. அதுக்குலாம் நீ சரிப்பட்டு வரமாட்ட.” என்றதில் உத்ஷவிக்கு ஏனோ சிறு திருப்தி.

நிக்கியிடம் இந்த விஷயங்களை சிறு வயதாக இருக்கும் போது பகிர்ந்திருக்கிறாள். அப்போது அவனுக்கு அது புரிந்ததா இல்லையா எனறு கூட தெரியவில்லை. ஆனாலும் கள்ளங்கபடமில்லாமல் நட்பு பாராட்டுவான்.

வேறு யாரிடமும் அவள் தன்னைப் பற்றிக் கூறுவதில்லை. தனிமையே அவளுக்கு உற்றத் தோழி. பணம் வேண்டும் நேரத்தில் திருட்டு வேளையில் ஈடுபடுபவள், வேண்டிய பணம் ஈட்டியதும் தானே தனியா ஊர் சுற்றிப் பணத்தை செலவழித்து விட்டு, மீண்டும் அடுத்த திருட்டில் இறங்குவாள்.

அவளது வாழ்க்கை முறை மாறியது கூட தோழிகள் வந்த பின்னால் தான்.

இருப்பினும், “ஏன்? ஏன் நான் சரிபட்டு வரமாட்டேன்?” என சிலுப்பியபடிக் கேட்க, அவளை நக்கலாக ஏறிட்டவன்,

“கேவலமா என்கிட்ட மாட்டிக்கிட்ட. அதுக்கு அப்பறமும் பணத்தாசைக் காட்டி உன்னை செட்டில் பண்ணப் பார்த்தேன். பட் நீ மடங்கலையே. பொழைக்கத் தெரிஞ்சவளா இருந்தா இந்நேரம் அதை வாங்கிட்டுக் கிளம்பி இருக்கணும்.” என்றதும், கழுத்தை வெட்டிக்கொண்டவள்,

“எனக்கு உழைச்சு தான் சாப்பிட பிடிக்கும். அதே பணத்தை, திருடி எடுத்துட்டுப் போயிருந்தா நிம்மதியா இருந்துருப்பேன். திருடாத காசு ஒட்டாது டைனோசர்.” என வெகு நேர்மையுடன் கூறியவளைத் தீயாக முறைத்தான்.

ஜோஷித், “இனிமே திருட்டைப் பத்தி மூணு பேரும் பேசுனீங்க, கரண்டியைக் காய வச்சு சூடு வச்சுடுவேன். பணத்தைக் காட்டியும் நீங்க மூணு பேரும் ஒருத்தரை ஒருத்தர் காட்டிக்கொடுக்காத ஒரே காரணத்துக்காக தான், உங்களை சேவ் பண்ணனும்ன்னு கூட வச்சு சுத்திட்டு இருக்கோம்.” என்றதும், மூன்று பாவைகளின் முகமும் வியந்தது.

பின், பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்கள் அடுத்த கட்டமாக மேகனாவைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஆறு பேருக்குமே உடலில் ஏற்பட்ட காயங்கள் சோர்வுற வைத்தாலும், சற்று நேரம் கடத்தினாலும் தலைக்கு மேலே தொங்கும் கத்தி எப்போது வேண்டுமானாலும் கழுத்தை நறுக்கும் என்ற உண்மை உணர்ந்து, வேகமாக செயல்பட்டனர்.

“மேகனா பத்தி வேற ஏதாவது டீடெய்ல்ஸ் தெரியுமா விஷா?” தீவிரத்துடன் ஸ்வரூப் கேட்க,

உதட்டைப் பிதுக்கியவள் “இல்ல டைனோசர். ரொம்ப வருஷம் ஆகிடுச்சுல. பெருசா டீடெய்ல்ஸ் எதுவும் ஞாபகம் இல்ல. அவளைப் பத்தி எனக்கு பெருசா எதுவும் தெரியவும் செய்யாது.” என்றவாறு சிந்தித்தவள், “ஹே ஸ்வரூ… இதுல ஒரு இன்டரஸ்டிங்கான விஷயத்தை நான் சொல்லாம விட்டுட்டேன் பாரேன்.” என ஆர்வத்துடன் ஆரம்பித்தாள்.

அதே ஆர்வம் அவனிடமும் தொக்கி நிற்க, “என்னடி?” எனக் கேட்டான் இயல்பாக.

“ஜுவனைல்ல ஒரு வார்டன் இருப்பாரு. ஒரு மாதிரி வித்தியாசமா நடந்துப்பாரு.” என்றதும், சஜித் “வித்தியாசமான்னா எப்படி ஷவி?” எனக் கேட்க,

அவளோ யோசித்துக் குழம்பித் தலையையும் சொரிந்து கொண்டாள்.

“ஐயோ எனக்கு சொல்லவே தெரியல. அதை சொன்னா உங்களுக்குப் புரிஞ்சுக்க முடியுமான்னு தெரியல. ம்ம்… ம்ம்… ஒரு மாதிரி யார் என்ன சொன்னாலும் கேட்பாரு.” என்றாள்.

விஹானா, “இதுல என்ன டார்ல்ஸ் வித்தியாசம் இருக்கு?” என்றதில்,

“ஆனா எனக்கு வித்தியாசமா தெரியும் டார்ல்ஸ். இப்ப இந்த டைனோசர் சஜிகிட்ட ஒரு விஷயம் பண்ண சொன்னான்னா, இவன் என்னப் பண்ணுவான். உடனே செய்வான் தான். ஆனால், அதுல அவனோட ஐடியாஸ் அவனோட சந்தேகத்தையும் க்ளியர் பண்ணிக்குவான் தான. அப்படி தான சஜி? என சஜித்திடம் வினவ, அவனும் அவள் சொல்ல வருவது புரியாமல் தலையாட்டினான்.

ஆனால் அந்த வார்டன் அப்படி இல்ல. அவரோட ஹையர் அஃபிஷியல் சொல்றதைக் கேட்டுக்கிட்டா ஒரு நியாயம் இருக்கு, ஆனா பத்ரி சொல்றதை எல்லாம் கேட்பாரே.” என்றதும் ஜோஷித், “அவன் பணம் ஏதாவது குடுத்து அவரைக் கைக்குள்ள போட்டு வச்சுருக்கலாம்…” என்று யோசனைக் கூற,

“எனக்கு அப்படி தெரியல ஜோ. வீட்ல வளர்க்குற நாய்க்குட்டி எல்லாம் பார்த்து இருக்கியா? நம்ம சொன்னதை உடனே காலை மடக்கி உட்காந்து பவ்யமா கேட்டுக்கும்ல அந்த மாதிரி ஃபீல் ஆகும் எனக்கு அவரைப் பார்க்கும் போது.” எனக் கூறி முடிக்கையில், “என்னது இங்கயும் நாயா? இந்த நாயின்ற வார்த்தை என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது டார்ல்ஸ்” என அக்ஷிதா மிரண்டாள்.

ஸ்வரூப்பிற்கு அவளது உணர்வை அசட்டை செய்ய இயலவில்லை. “எங்க சுத்துனாலும் இந்த டாக் கான்செப்ட் தான் வருது. என்னவோ இருக்கு இதுல.” என சிந்தனையுடன் கூற,

“நடக்குறதை எல்லாம் பார்க்கும் போது அப்படி தான் இருக்கு ஸ்வரூ. ஒருவேளை கடத்துனவங்க மேல ஏதாவது ட்ரக்ஸ் யூஸ் பண்ணிருப்பாங்களோ?” என உத்ஷவிக் கேட்டதில்,

“இருக்கலாம்டி.” என்றவன், “ஜோ… காடனோட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் என்ன ஆச்சு.” என வினவினான்.

“இன்னும் ஒன் ஹவர்ல வந்துடும் ஸ்வரா. மே பி அதை பார்த்தா கொஞ்சம் க்ளியர் விஷன் கிடைக்கலாம்” என்றான்.

“ம்ம்… விஷா… அந்த வார்டன் இப்ப அதே இடத்துல தான் இருக்கானா. அவன்கிட்ட விசாரிக்கலாமா?” என உத்ஷவியிடம் வினவ,

“அது தான் முடியாது. ஒரு நாள் அந்த ஆளு ஜுவனைல்க்குள்ளயே சூசைட் பண்ணிக்கிட்டான்.” என்றதும் “ப்ச்…” என சலித்தான்.

அவனது சோர்வைப் பொறுக்க இயலாமல், “ஆனா அங்க எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ற வார்டன் ஒருத்தவங்க இருக்காங்க. பேர் பரிமளா. அவங்க தான் என்னை நர்சிங்கும் சேர்த்து விட்டாங்க.” என ஒரு கணம் தயங்கியவள், “அவங்களோட நம்பர் அட்ரஸ் எல்லாம் என் ரூம்ல இருக்கு. அதுக்கு அப்பறம் நான் அவங்களை காண்டாக்ட் பண்ணவும் இல்ல” என்றாள்.

“ஏன் டார்ல்ஸ்?” என அக்ஷிதா கேட்க,

“நர்சிங்ல இருந்து பாதில வந்துட்டேன்னு சொன்னதுக்கு, நீ திருந்தவே மாட்டன்னு கோபத்துல போனை கட் பண்ணிட்டாங்க. அதுக்கு அப்பறம் நான் பேசல.” என்றதும் ஸ்வரூப் சற்று கனிந்து, “கவுன்சிலிங் போயிருக்கலாம்ல” என்றான் மென்மையாக.

“அது போற அளவு எனக்குப் பொறுமை இல்லை. திருடுனா சந்தோசமா இருக்கு. அதை ஏன் நான் கெடுத்துக்கணும். இப்ப ரெண்டு நாளா நீ தான் என்னை எதுவும் திருட விட மாட்டேங்குற. அதுவே எனக்கு ஒரே பீலிங்கா இருக்கு…” என்று மிகவும் வருந்திக் கூறியவளை, அமைதியுடன் பார்த்தானே தவிர அதற்குப் பதில் கூறவில்லை.

அக்ஷிதாவும் “எனக்கு கூட பிக் பாக்கெட் அடிக்காம கை நமநமன்னு தான் இருக்கு…” என முணுமுணுத்து சஜித்தின் சினப்பார்வையைப் பரிசாக வாங்கிக் கொண்டாள்.

‘இவன் பாக்குறதை பார்த்தா என் திருட்டு ஆர்வத்துக்கு தடா போட்டுருடுவான் போலயே.’ என்று தனக்குள்ளேயே நொந்தாள்.

ஸ்வரூப், “கிளம்பலாம். இவள் ரூம்க்கு போய் பரிமளாவோட டீடெய்ல்ஸ் எடுத்துட்டு, அவங்களை காண்டாக்ட் பண்ணலாம். அவங்ககிட்ட இருந்தும் தகவல் கிடைக்கலைன்னா, ஜுவனைல்க்கே போய்டலாம்.” என்றதும்,

ஜோஷித் “நம்ம ஏன்டா போகணும். அதான் மினிஸ்டர்கிட்ட சொன்னா, அவரே ஜுவனைல் ரெக்கார்டை வாங்கி நம்ம கிட்ட குடுத்துடுவாரே.” என்றான்.

“வேணாம் ஜோ. இப்போதைக்கு யாரையும் நம்பி எதையும் சொல்ல வேணாம். யாரோட ஹெல்ப்பையும் எதிர்பார்க்கவும் வேணாம். அந்த மினிஸ்டர் மேலயே எனக்கு கொஞ்சம் டவுட் இருக்கத் தான் செய்யுது நாகா விஷயத்துல. நம்மளே ட்ரை பண்ணிப் பாக்கலாம். அப்படி எதுவுமே முடியலைன்னா கடைசி ஆப்ஷனா மினிஸ்டரை நம்ம கஸ்டடில வச்சு விசாரிக்க வேண்டிய விதத்துல விசாரிக்கலாம்.” என்றதும்,

மினிஸ்டருக்கே இந்த நிலைமையா என விஹானா தான் மிரண்டாள்.

அனைவரும் உத்ஷவியின் அறையில் இருக்கும் தகவலை எடுக்கும் பொருட்டு, பிரைவேட் ஜெட்டில் சென்னை சென்று இறங்கினர்.

அங்கிருந்து காரில் உத்ஷவியின் வீட்டின் அருகில் நிறுத்த, பெண்களுக்குள் கிசுகிசுவெனப் பேச்சு வளர்ந்தது.

“நீ போ டார்ல்ஸ்… நீ போ அக்ஷி” என மூவரும் மாறி மாறி கூறிக் கொள்ள, கண்ணாடி வழியே உத்ஷவியின் முகத்தைக் கண்ட ஸ்வரூப், “ஏய் திருடி… உனக்கு தான உன்னோட பொருளை எங்க வச்சன்னு தெரியும். போய் எடுத்துட்டு சீக்கிரம் வா.” என்றிட, “நான் மட்டும் போக மாட்டேன் நீயும் வா.” என்று அவனையும் அழைத்தாள்.

“இவளோட… வந்துத் தொலை” என்று அவளுடன் சென்றான். சிறிய கேட்டைத் தாண்டி மாடி ஏறப் போனார்கள். கீழே தான் ஹவுஸ் ஓனர் சதாசிவம் தனியாக இருக்கிறார். மனைவி குழந்தைகளுடன் பள்ளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்றிருக்க, தனிமையிலே இனிமை பாடியபடி, விஸ்கி பீருடன் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தார்.

உத்ஷவியோ, “மெதுவா வா!” என ஹஸ்கி குரலில் பேச, “என்னடி உன் வீட்டுக்கே திருட்டுத்தனமாப் போற.” எனக் கேட்டவனுக்கு அவள் பதுங்கிப் பதுங்கி சென்றதைக் கண்டு சிரிப்பு மலர்ந்தது.

“டேய் டைனோசர்… மூணு மாச வாடகை பாக்கி. ரெண்டு மூணு நாளா சொல்லாம கொள்ளாம வீட்டை பூட்டிட்டு போனதுல அந்த ஹௌஸ் ஓனர் மாங்கா மடையன் வீட்டை உடைச்சு எங்க திங்க்ஸ வெளில போட்டாலும் போட்டு இருப்பான்.” என அடிக்குரலில் கூறியவள், பாதி படி ஏறி விட்டாள்.

“யாருப்பா அது?” என ஆண்குரல் கேட்டதில், “ஸ்ஸ்” எனக் கண்ணை மூடி நொந்து கொண்டவள், மெல்லத் திரும்பி பல்லைக்காட்டி, “ஹாய் சார்… ஸ்வரூ நான் சொன்னேன்ல எங்க ஹவுஸ் ஓனர் ரொம்ப நல்லவருன்னு. அது இவரு தான்…” என்று நெளிய, ஸ்வரூப்பிற்கு சிரிப்பு முட்டியது.

“ஆமா ஆமா… ஆனா ஏதோ மாங்கா மடையன்னு சொன்ன மாதிரி இருந்துச்சே…” என யோசிக்கும் பாவனையில் கூறிட, “அடேய்…” எனப் பல்லைக்கடித்தவள், “அவர் வீட்ல மாங்காய் தோட்டம் போட்டுருக்காருன்னு சொன்னேன் ஸ்வரூ…” என சமாளித்து,

“இவனுக்கு கொஞ்சம் காது மந்தம் ஹவுஸ் ஓனர் சார்…” என அவனை வாரினாள்.

“அடியேய்” இப்போது பற்களை கடிக்கும் முறை அவனது ஆனது.

“போதும் போதும். யார் இந்த பையன். வீட்டைப் பூட்டிட்டு எங்க போனீங்க.” என சதாசிவம் அதட்டலுடன் கேட்டதில், ஒரு கணம் திருதிருவென விழித்தவள், ஸ்வரூப்பின் புறம் மெல்லச் சாய்ந்து, “டைனோசர் கொஞ்ச நேரத்துக்கு உன்னை என் ஃபியான்சியா தத்து எடுத்துக்குறேன்.” என்று கூறியவள், அவன் அதனை உணரும் முன்னே, “இவர் என் ஃபியான்சி சார்” என்றாள் கால் கட்டை விரலை நிலத்தில் தேய்த்தபடி.

“பேன்சி ஸ்டோர் வச்சுருக்குறவன் கூட உனக்கு என்ன பழக்கம்” அவள் சொன்னது புரியாமல் அவர் பேச, உத்ஷவி “கர்த்தரே…” என நொந்ததில், ஸ்வரூப்பிற்குச் சிரிப்பை அடக்குவதே பெரும் பாடாக இருந்தது.

இதழ்களை மடித்து தன்னை அடக்கிக் கொண்டவன், அவளது கைகளைப் பற்றிக்கொண்டு, “நானும் இவளும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம். இந்த விளக்கம் போதுமா?” எனக் கண்டிப்புடன் கூற, அவரோ இருவரையும் ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு உள்ளே சென்று விட்டார்.

“வாடகை குடுக்க வக்கில்லை… இதுல கல்யாணம் ஒன்னு தான் குறைச்சல் இதுங்களுக்கு” என்று அவர் இளக்காரம் புரிந்தது இருவரின் காதிலும் விழுந்ததில், உத்ஷவி எப்போதும் போல அதனைத் தட்டி விட்டு மாடி ஏறிட, ஸ்வரூப்பிற்கு சுறுசுறுவென ஆத்திரம் வந்தது.

அத்தியாயம் 34

கோபத்தை அடக்கியபடி அவளுடன் வீட்டிற்குச் சென்ற ஸ்வரூவ் அவ்தேஷ், ஒரு பெட்ரூம் அளவிலான சிறிய வீட்டை விழிகளால் துழாவினான்.

“போட்டது போட்ட படி கிடக்கு… உன் வீட்ல ஆட்டைய போட்டுட்டு வந்து வீட்டை க்ளீன் பண்ணலாம்ன்னு நினைச்சேன். பாரு இப்ப என் வீட்டுக்கே நான் ஏதோ கெஸ்ட் மாதிரி வந்துட்டு இருக்கேன்” எனப் புலம்பிக் கொண்டவள்,

சில நிமிடம் செலவழித்துத் தேடி பின் பரிமளாவின் தகவலை எடுத்து விட்டாள்.

“எஸ்… காட் இட். ஸ்வரூ இது தான் பரிமளா மேம் நம்பர் அட்ரஸ்” என்றதில், அதனை வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்டவன், “வா போகலாம்.” என்றிட,

“நீ போ. நான் எங்களுக்கு கொஞ்சம் திங்க்ஸ் எடுத்துட்டு வரேன். இன்னும் எத்தனை நாள் உங்ககூட ரோந்து போகணுமோ யார் கண்டா.” என்றபடி, ஒரு பையை எடுத்து சேனிட்டரி நாப்கின், மற்றும் இதரப் பொருட்களை அவள் எடுத்து வைத்துக் கொண்டதில், அவனும் “சரி இருக்கறதை எடுத்து வைடி. ஏதாவது வேணும்ன்னா வெளில வாங்கிக்கலாம்.” என்றபடி கீழிறங்கிச் சென்றான்.

சிறிது நேரத்தில் உத்ஷவியும் கீழே வர, சதாசிவம் வாசலிலேயே நின்றார்.

‘ஆத்தாடி இவரு என்ன… இங்கயே நிக்கிறாரு. வாடகை கேட்பாரோ… சரி அட்வான்ஸல கழிச்சுக்க சொல்லலாம்’ என யோசித்தபடியே அவள் அருகில் வர, அவரோ “சாவியை குடுங்கம்மா.” என்றார் வெகு மரியாதையுடன்.

“சாவி எதுக்கு சார்?” என அவள் புரியாமல் கேட்க, “சார் தான் வீட்டை க்ளீன் பண்ணி வைக்கச் சொன்னாரு. பெயிண்ட் எல்லாம் உதிர்ந்து போயிருக்காம். நீங்க வர்றதுக்குள்ள பெயிண்ட் அடிச்சு வைக்கிறேன். நீங்க திரும்பி வர்றப்ப ஒரு மிஸ் கால் மட்டும் குடுங்க. நான் சாவியோட வெளில நிக்கிறேன்.” என்றவரின் பேச்சிலும் செயலிலும் அத்தனை அடக்கம்.

ஆனால் நேராக நிற்காமல், வயிற்றைப் பிடித்தபடி லேசாய் குறுகியபடி நின்றார்.

‘என்னடா இது எலி ஹெலிகாப்டர்ல பறக்குது…’ எனக் குழப்பத்துடன் சாவியை நீட்டியவள், திரும்பி வாசற்புறம் பார்க்க, அங்கு காரின் மீது கையைக் கட்டிக்கொண்டு ஸ்வரூப் தான் அவளைக் கூர்மையுடன் அளவெடுத்துக் கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்ததும் சதாசிவமும் சைகையிலேயே “சார் வாங்கிட்டேன்” என்று சலியூட் அடிப்பது போலக் கூறி விட்டு தட்டுத் தடுமாறி வீட்டினுள் நுழைய, ஸ்வரூப்பை யோசனையுடன் பார்த்தபடி வந்த உத்ஷவி “என்னடா செஞ்ச அவரை… மனுஷன் பொட்டிப் பாம்பா அடங்கி இருக்காரு.” என வாயில் கை வைத்தாள்.

“பெருசா ஒன்னும் இல்ல. லைட்டா வயித்துல ஒரு குத்து விட்டு, துப்பாக்கியை நீட்டுனேன். பயந்துட்டான்.” என தோளைக் குலுக்கிக் கொண்டவன், அவளிடம் இருந்து பையை வாங்கி டிக்கியில் வைத்தான்.

“அடப்பாவி! இதுக்கு பேர் தான் உங்க சித்தூர்ல லைட்டா பாஸ்…” என்றதில், அவன் விழியோரம் சுருங்கப் புன்னகைக்க, அச்சுருக்கத்தின் வரிகளில் கவிதை வரிகளே பிறந்தது அவளுக்கு.

‘இவன் வேற க்ளோசப் விளம்பரத்துல வர்ற மாதிரி சிரிச்சு வைக்கிறான். பயபுள்ள சிரிச்சா இன்னும் அழகாத்தான் இருக்குது. அடுத்த வீட்டு தோட்டமா இருந்தாலும் பக்கத்து வீட்ல இருந்துகிட்டே ரசிக்கிற மாதிரி, இவனையும் சைட் அடிச்சு வச்சுக்கணும்.’

விழியோர வரி வழியே 
வருமான வரி விதிக்கிறாய்…
அத்தனை வரிகளுக்கும்
அள்ளிக் கொடுக்க
கவி வரிகளே
கைவசம்!

“யோசிச்ச கவிதையை வெளில சொன்னா நானும் தெரிஞ்சுப்பேன்.” என்றபடி டிக்கியை மூடி விட்டு, அதில் ஒரு கையை வைத்துக் கொண்டு ஸ்டைலாகப் பார்த்தான் ஸ்வரூப் அவ்தேஷ்.

‘ங்கே’ வென விழித்தவள், “நான் கவிதை யோசிச்சது உனக்கு எப்படித் தெரியும்” எனத் தன் வாயால் மாட்டிக்கொள்ள, மீண்டும் பல்வரிசை மினுமினுக்கப் புன்னகைத்தவன், “இப்ப எல்லாம் என்னை நினைச்சு கவிதை யோசிச்சு மிஸ் திருடி கவிதாயினி ஆக போறேன்னு நீதானடி சொன்ன.” எனக் கேட்டான் ரசனையுடன்.

“ஆமால்ல…” என அசடு வழிந்தவளிடம், “சரி கவிதையைச் சொல்லு.” என்றான் விடாப்பிடியாக.

அவளும் பாக்யராஜ் போன்று கையை அவன் முன் நீட்டி, ரைமிங்காகக் கூற, அடக்கப்பட்ட நகையுடனும் ரசனை மின்னும் விழிகளுடனும் அவளை வருடியவன், “நல்லாத்தான் இருக்கு.” எனத் தலையை ஆட்டி விட்டு காரினுள் நுழைந்தான்.

உள்ளே பெரும் போரே நிகழ்ந்து கொண்டிருந்தது.

உத்ஷவியிடம், சஜித்தின் பர்சையும் எடுத்து வரக் கூறி இருந்தாள் அக்ஷிதா. அவளே சமத்தாக அதனைக் கொடுக்கும் படி தான் இருந்தது.

அதற்குள் சஜித், “கேடி என் பர்ஸை எடுத்துட்டு வாடி” என்று அதிகாரமாகக் கூறியவன், “அதுல என் எங்கேஜிமென்ட் ரிங்க் இருக்கு. அப்பறம் என் ஃபியான்சி என்கிட்ட கோச்சுப்பா.” என்று விட்டு அவளை ஓரக்கண்ணில் பார்த்தான்.

அவளோ அதற்கு பதில் கூறாமல், ஜோஷித்திடம் திரும்பி “ஏன் ஜோ உன் உடன்பிறப்பு நிச்சயதார்த்த மோதிரத்தை கழட்டி பர்ஸுக்குள்ள வச்சுருக்கானே… இதைக் கேட்க மாட்டியா.” என்று கோர்த்து விட, ஜோஷித் அவனைப் பார்வையால் ஊடுருவினான்.

அதில் தடுமாறிய சஜித், “அது… ஜோ…விரல்ல அடிபட்டு இருந்துச்சு. அதான் கழட்டி வச்சுருந்தேன்.” என வேகமாக சமாளிக்க, “ஸ்வரா பார்த்தா தப்பாகிடும் சஜி” என அதட்டினான்.

“அதை இவள் தான் வச்சுருக்கா. ஏய் எங்கடி என் மோதிரம்” என்று கடுப்புடன் கேட்க, அவனை இன்னும் அலையவிடும் பொருட்டு, “அந்த பர்ஸுல காசு தான் இருந்துச்சு. மோதிரம் இருந்த மாதிரி தெரியலையே… என அவனது இரத்தக்கொதிப்பை அதிகப்படுத்தியதில், அவன் திட்ட, அவள் பதிலுக்குப் பேச என்று கலவரமே நிகழ்ந்தது.

விஹானா தான், ஒரு முறை ஜோஷித்தின் விரலில் அணிந்திருந்த மோதிரத்தையும் அவனையும் நிமிர்ந்து பார்த்து விட்டு, பின் ஜன்னல் வழியே விழிகளைத் திருப்பினாள்.

அவளது பார்வையை உணர்ந்தாலும் அவளைப் பாராமல் தன்னை அடக்கியவனுக்கு மூச்சு விடவே சிரமமாக இருந்தது. இது என்ன இப்பெண்ணின் அருகாமை தன்னை சுயம் இழக்க வைக்கிறது என்று எரிச்சலும் கொண்டான்.

அவளைப் பற்றி அறியும் முன்னே அவளது இதழில் வீழ்ந்த இதயம்! இப்போது அவளைப் பற்றி முழுதாய் அறிந்த பின்பு இன்னுமாக உருகச் சொல்லி அடம்பிடிக்கிறது. எப்படிச் செய்வான்… தன்னை நம்பி ஒரு பெண் தன்னை நிச்சயம் செய்து கல்யாணக் கனவுடன் காத்திருக்கையில்! குடும்பத்தின் பழக்க வழக்கங்களைத் தாண்டி, பெற்றோரின் பேச்சுக்களை மீறி, இன்னொரு பெண்ணை நினைத்தது கூட பாவமல்லவா? என எண்ணிக்கொண்டே சென்றவன் சரட்டென நினைவுகளுக்கு அணை போட்டான்.

‘இந்த அளவிற்கா இவள் தனக்குள் புகுந்து விட்டாள்…’ எனத் திகைப்புடன் எண்ணியவனுக்கு, செய்வதறியாத நிலை. இதனை ஸ்வரூப் அறிந்தால், மீண்டும் ஒரு பிரிவு நேரிடுமோ என அஞ்சியும் போனான்.

ஜோஷித்தின் முக பாவனைகளை பார்த்துக் கொண்டே வந்த சஜித்திற்கு அடிவயிறு கலங்கியது.

‘ஸ்வரூப்பிடம் சொல்லி விடுவானோ… தான் மோதிரத்தைக் கழற்றியதில் கோபம் கொண்டு தான் முகத்தை இறுக்கமாக வைத்திருக்கிறானோ’ என அச்சம் எழ, அவஸ்தையுடன் அமர்ந்திருந்தான்.

சகோதரர்களின் பயத்தை அறியாத ஸ்வரூப் அவ்தேஷ், தெளிந்த மனதுடன் காரை ஓட்டியபடி கண்ணாடி வழியே தெரிந்தப் பெண்ணவளின் பிம்பத்தையும் அவ்வப்பொழுது வருடிக் கொண்டான்.

கார் நேராக பரிமளாவின் வீட்டிற்குச் சென்றது. பழைய கால அடுக்குமாடிக் கட்டடம் அது.

காரில் இருந்து இறங்கிய அறுவர் அணி, அங்குச் சென்று விசாரிக்க, ஒரு முதியவர் தான் பேசினார்.

“பரிமளா என் சம்சாரம் தான் நீங்க யாரு?” எனக் கேட்டவர் தனது மூக்குக் கண்ணாடியை சரி செய்ய, உத்ஷவி தன்னைப் பற்றிக் கூறினாள்.

“ஓ. அது நீ தானா. உன்னைப் பத்தி பரிமளா சொல்லிருக்கா. உள்ள வாங்க.” எனத் தனது ஸ்டிக்கைப் பற்றியபடி வீட்டிற்குள் அழைத்தார்.

“பரிமளா மேடம் இல்லையாங்க சார்…” எனக் கேட்டபடி உள்ளே வந்த உத்ஷவிக்கு ஐயோ என்றிருந்தது. பரிமளாவின் புகைப்படம் சுவற்றில் மாட்டப்பட்டு அதற்கு மாலையும் அணிவித்து மரியாதை செய்யப்பட விதமே, அவர் பூவுலகில் இல்லை என்பதைப் பறைசாற்ற, “சார்… மேடம்…” என இழுத்தாள்.

முதியவரோ, “ஒரு வாரத்துக்கு முன்னாடி வந்துருந்தா அவளைப் பார்த்து இருக்கலாம்…” என்றிட, ஸ்வரூப் உச்சகட்ட எரிச்சலில் “புல்ஷிட்…” எனக் கையை இறுக்கி மூடினான்.

அதனை உணர்ந்து அவன் கையைப் பற்றி அமைதிபடுத்திய உத்ஷவி, “ஒரு முக்கியமான கேஸ்க்காக விவரம் கேட்க வந்தோம் சார். ப்ச்… இப்படி ஒரு அசம்பாவிதத்தை எதிர்பார்க்கல…” என்றாள் இழையோடிய வருத்தத்துடன்.

அவரும் கனத்த இதயத்துடன் தலையசைக்க, ஜோஷித் “வேஸ்ட் ஆஃப் டைம் ஆகிடுச்சு ஸ்வரா. ஜுவனைல்க்கே போய்டலாம்.” என சலிப்புடன் கூறியதில்,

முதியவர் “என்ன விஷயமா வந்தீங்க?” என விசாரித்தார்.

ஸ்வரூப் அவர்களைப் பற்றிக் கூறியதுமே முதியவரின் முகத்தில் வெளிச்சம் பிறந்தது.

“உங்களைப் பத்தி நிறைய கேள்விப்பட்டுருக்கேன். பல வருஷத்துக்கு முன்னாடி சித்தூர்ல தான் ஹாஸ்பிடல்ல கம்பவுண்டரா வேலை பார்த்துட்டு இருந்தேன். உங்க அப்பா எனக்கு ரொம்ப ஆதரவா இருந்துருக்காருய்யா. உங்களைப் பார்த்ததுல ரொம்ப சந்தோசம். நான் ஒருத்தன், இவ்ளோ பெரிய ஆளுங்களை நிக்க வச்சே பேசிட்டு இருக்கேன்.” என ஒரு கணம் பதறியே போனவர், நாற்காலிகளை எடுத்துப் போட முயல,

“பரவாயில்ல இருக்கட்டுங்கைய்யா.” எனத் தடுத்த சஜித், “பரிமளா மேடம் ஜுவனைல் சம்பந்தப்பட்ட எதையாவது உங்ககிட்ட ஷேர் பண்ணிருக்காங்களா” எனக் கேட்டான் வினவளாக.

“நிறைய சொல்லிருக்கா. ஆனா நீங்க எதைக் கேட்குறீங்கன்னு தெரியல…” என யோசித்தவர், “அவளுக்கு டைரி எழுதுற பழக்கம் இருக்கு. ஒவ்வொரு வருஷமும் அவளோட டைரில சீர்திருத்தப்பள்ளிக்கு வந்த பசங்களோட பேர், அவங்களோட விவரத்தை எல்லாம் எழுதி வைப்பா. மேல பரணி மேல போட்டு வச்சுருக்கேன். உங்களுக்கு உதவியா இருக்குமான்னு பாக்குறீங்களா?” எனக் கேட்டதும்,

“தெய்வமே… முதல்ல அந்த பரணி எங்கன்னு காட்டுங்க.” என்று அக்ஷிதா பெரிய கும்பிடாகப் போட்டாள்.

“என் புள்ள வெளில போயிருக்கான். அவன் வந்ததும் எடுக்க சொல்றேன். ஒரே தூசியா இருக்கும்.” எனத் தயங்கிட, “தேள், பாம்புன்னு இருந்தா கூட தூக்கிப் போட்டுட்டு தேடுவோம். அவசரம் புரியாம தூசியா இருக்கு பாசியா இருக்குன்னுட்டு.” என விஹானா முணுமுணுத்தாள்.

ஸ்வரூப் இரு பெண்களையும் பார்வையால் அடக்கி விட்டு, “நாங்க பாத்துக்குறோம்ய்யா எங்க இருக்குனு சொல்லுங்க.” என்றதும், பரணியில் இருந்தப் பொருட்களை எடுத்துப் பரப்பினர்.

“ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் இறந்தாங்கன்னு சொன்னீங்க. அப்பறம் ஏன் இவ்ளோ தூசி படிஞ்சு போயிருக்கு.” ஆராய்ச்சியுடன் ஸ்வரூப் வினவ,

“அவளுக்கு அஞ்சாறு வருஷமாவே பக்கவாதம் வந்துடுச்சுய்யா. அப்பவே எல்லாத்தையும் எடுத்துப் போட்டாச்சு, அவளால எழுதவும் முடியிறது இல்ல.” என்றதும்,

உத்ஷவி, “எல்லாத்துக்கும் சந்தேகமா உனக்கு.” என முறைத்து விட்டு, மீண்டும் தேடுதலைத் தொடர்ந்தாள்.

“ஸ்வரூ… இங்க பாரு 2011 டைரி. இந்த வருஷம் தான் பத்ரி வந்துருப்பான்னு நினைக்கிறேன்.” என டைரியைப் பிரட்டினாள். அதில் உத்ஷவிப் பற்றய விவரங்களுடன் மற்றவர்கள் பற்றியும் இருந்தது.

மேகனா, வயசு 16, ஆந்திரா, கஞ்சாக்கடத்தல், வழிப்பறி செய்தல்.
பத்ரி, வயது 17, ஆந்திரா, கஞ்சாக்கடத்தல், வழிப்பறி செய்தல், கற்பழிப்பு.
நிர்மல், வயது 17, ஆந்திரா, கஞ்சாக்கடத்தல், வழிப்பறி செய்தல்.

என நீண்டுகொண்டே செல்ல, அதனைப் படித்தவர்களுக்கும் அதிர்ச்சி.

“என்னடா இது எல்லாரும் ஆந்திரான்னு போட்டு இருக்காங்க.” சஜித் குழப்பத்துடன் கேட்க,

“ஆந்திரால தப்பு பண்ணவங்களை ஏன்டா சென்னைல இருக்குற ஜுவனைல்ல வைக்கணும்?” என ஜோஷித்தும் தாடையைத் தடவினான்.

உத்ஷவி, “ஆனா அவங்க எல்லாருமே நல்லா தமிழ் பேசுவாங்களே.” என்றிட, விஹானா “இவனுங்க கூட தான் நல்லா தமிழ் பேசுறானுங்க. அப்போ ஆந்திரா இல்லைன்னு சொல்லிட முடியுமா டார்ல்ஸ்” என்க, இதனைக் கேட்ட முதியவர், “அவ சில போட்டோ கலெக்ஷன்ஸ் கூட வச்சிருந்தா. உங்களுக்கு தேவைப்படுமா?” எனக் கேட்டார்.

அக்ஷிதா, “நீங்க வச்சுருக்குறது எல்லாமே தேவையான ஆணி தான்.” என்றதில், சஜித் அவள் கையைக் கிள்ளினான், ‘கொஞ்ச நேரம் வாயை மூடேன்டி’ என்று.

ஒரு பெரிய கோப்பு ஒன்றை எடுத்து வந்தவர், “இதுல ஏகப்பட்ட போட்டோஸ் இருக்குங்கய்யா.” எனக் கொடுத்தார்.

சொன்னது போன்றே மலை போல குவிந்திருந்தது புகைப்படங்கள்.

“அடி ஆத்தாடி… இதுல தேடுறதுக்குள்ள, நான் நாயா மாறிடுவேன் போலயே” என உத்ஷவி அங்கலாய்க்க, “இப்ப மட்டும் என்னவாம்…” என்று ஸ்வரூப் வாரியதில், அவனைக் கண்ணைச் சுருக்கி முறைத்தாள்.

புகைப்படத் தேடுதலில் ஈடுபட்டவர்களுக்கு தலைவலியே வந்து விட்டது.

ஜோஷித் கண்ணைக் கசக்கிக்கொண்டு, “எல்லா போட்டோவும் ரொம்ப பழசா இருக்கே ஸ்வரா… இதுல நம்ம தேடுறவனுங்க கிடைப்பானுங்களா.” என்றதில், அக்ஷிதாவும், “எனக்கு தூங்காம எல்லாமே ரெண்டு ரெண்டாத் தெரியுது ஜோ.” என்றாள் பரிதாபமாக.

இந்த வேலையை முடித்ததும், இரண்டு மணி நேரமாவது தூங்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டவர்கள் ஒவ்வொரு புகைப்படமாகப் பார்த்தனர்.

“விஷா…” எதையோ கண்டுகொண்ட பாவனையுடன் ஸ்வரூப் பரபரத்தான்.

“இந்த க்ரூப் போட்டோல நீ இருக்க தான?” என்றிட, அவளும் அதனை வாங்கிப் பார்த்து விட்டு, “என்னை எப்படி டைனோசர் கண்டுபிடிச்ச” என ஆச்சர்யப்பட்டாள்.

“திருட்டு முழி தனியா தெரியுது போல” என்று சஜித் கேலி செய்ததில், நொடித்துக் கொண்டவள், “இதோ பாரு இது பத்ரி. இது மேகனா” என இருவரையும் அடையாளம் காட்டியவள், “ஒரு தடவை இண்டிபெண்டன்ஸ் டே க்கு எடுத்த க்ரூப் போட்டோ. இது நிக்கி…” என அவன் புகைப்படத்தை நொடியில் நீர் தளும்பிய கண்களுடன் வருடியவளை, தோளோடு அணைத்து லேசாய் தட்டிக் கொடுத்தான் ஸ்வரூப்.

அக்ஷிதாவோ வேறொரு புகைப்படத்தில் மூழ்கி, “டேய் சமுத்திரம் பாய்ஸ்… உங்களுக்கு டிவிஸ்ட் வர்றது பத்தாதுன்னு எனக்கும் சேர்த்து டிவிஸ்ட் வருதுடா.” என்று பேந்தப் பேந்த விழிக்க, “என்ன உளறுற?” என்றான் ஜோஷித்.

அவளோ போட்டோவை விரித்துக் காட்டி, “இது என் அப்பா. ஷவி சொன்ன பத்ரியும் மேகனாவும் அவரு கூட நிக்கிறாங்க பாரு.” என்றதில், அனைவரின் முகத்திலும் அதிர்வு பரவியது.

முதலும் முடிவும் நீ
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
20
+1
92
+1
2
+1
3

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  7 Comments

  1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  2. Indhu Mathy

   Very interesting 🤩🤩🤩🤩🤩🤩
   ஸ்டோரி சூப்பரா போகுது சஸ்பென்ஸ் ஓட இவங்க கலாட்டாவும் சேர்ந்து.. 👌

  3. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  4. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல்

  5. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.