Loading

அந்த மூவரையும், உயிர் இருந்தும் உணர்வற்றவர்களாய் ஆக்கி விட்டு, மருத்துவனைக்கு வந்து சேர்ந்தனர் துருவும் உத்ராவும்.

பின், இரண்டு நாட்களில் அர்ஜுனையும், விதுனையும் டிஸ்சார்ஜ் செய்து, வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

இப்படியே ஒரு நான்கு நாட்கள் கடந்த நிலையில், இருவருக்கும் உடல் நிலை சிறிது சரியாக, உத்ராவும், துருவும் எப்போதும் போல் அலுவலகம் சென்று கொண்டிருந்தனர்.

அர்ஜுன் மீராவிடம் காதலை வளர்த்துக் கொண்டும், அஜய் சுஜியின் நினைவில் யாரிடமும் பேசாமல் மௌனமாகவும், விதுன் அனுவை மறக்க முடியாமல் தவித்து, அதை மற்றவர்களிடம் இருந்து மறைத்துக் கொண்டு சாதாரணமாக இருப்பது போன்று நடித்தும் நாட்கள் நகர, அன்று தான், உத்ராவிற்கு அவார்ட் ஃபங்ஷன் இருந்தது.

கண்ணாடி முன்பு நின்று, கிளம்பிக் கொண்டிருந்தவளை ரசித்த துருவ்,

“ஹனி… திஸ் இஸ் ஃபார் யூ” என்று ஒரு பிங்க் நிறத்தில் வேலைப்பாடுகள் நிறைந்த புடவையைக் கொடுத்தான்.

அவள் “வாவ் அழகா இருக்கு துருவ்…” என்று விழி விரித்ததும், அவன் மெலிதாய் புன்னகைத்து, “ரெடி ஆகி வா. நான் வெளிய இருக்கேன்” என்று விட்டு சென்றான்.

அந்த புடவையை ஆசையாக தடவியவள் நேர்த்தியாய், நளினமாய் கட்டிக்கொண்டு வெளியில் வர, மூன்று பேரிடமும் ஏதோ பேசிக்கொண்டிருந்த, துருவ் அவளை பார்த்து இமைக்கவும் மறந்து விட்டான்.

உத்ரா கண்ணாலேயே “எப்படி இருக்கிறது” என்று விழி உயர்த்தி வினவ, அவன் மயங்கி விழுவது போல் நடித்ததில், வெட்கத்துடன் புன்னகைத்தவள், அவனுக்கு அழகு காட்ட., அவன் அவளுக்கு ஃபிளையிங் கிஸ்ஸை காற்றில் கலந்து, அனுப்பினான். 

அதை அவள் சரியாக கேட்ச் பிடித்து, மார்போடு கையை ஒட்டிக்கொள்ள, அவன் அவளை குறுகுறுவென பார்த்து, “லிப்ஸ்டிக் நிறைய இருக்கு” என்று உதட்டில் கை வைத்து சைகை காட்டினான்.

அவள், புருவத்தை சுருக்கி, போன் கேமராவில் தன்னை பார்த்து லிப்ஸ்டிக்கை சரி செய்து அவனிடம் காட்ட, இன்னும் சரி இல்லை என்று தலையாட்டினான்.

மீண்டும் அவள் முகத்தை சுருக்கி சரி செய்து விட்டு காட்ட, அவன் அப்பொழுதும் இல்லை என தலையாட்டி விட்டு, “இரு நான் வரேன்” என்று வாயசைத்து சொல்ல, இவர்கள் அடிக்கும் கூத்தை பார்த்து கொண்டிருந்த மூவரும்,

“டேய் போதும்டா… முடியல” என்று கலாய்க்க, விது “டேய், அண்ணன்காரன் முன்னாடியே தங்கச்சிக்கு ஃபிளையிங் கிஸ் குடுக்கருதுலாம் ரொம்ப ஓவருடா” என்று கிண்டல் செய்ய, துருவ் “நீங்கல்லாம் இன்னும் போகலையா. போய் காரை எடுங்க நாங்க வரோம்” என்று உத்ராவை நோக்கி சென்றான்.

உத்ரா, அவன் அருகில் வந்ததும், “ப்ச் லிப்ஸ்டிக் இன்னும் சரி இல்லையா. நான் போய் அழிச்சுட்டு வரேன்” என்று திரும்ப,

அவளை பிடித்து இழுத்தவன்,” நான் சரி பண்ணுறேன் ஹனி.” என்று டிஷ்ஷியூ பேப்பரை எடுத்து, சரி செய்தவன்,

” ம்ம்ஹும்… இது சரி வராது.” என்று பேப்பரை தூக்கி போட்டு விட்டு, அவள் கன்னத்தை தாங்கி, அவன் இதழ் மூலம் சரி செய்ய ஆரம்பித்தான்.

அவன் செயலில் திணறியவள், அவனை தள்ள முயற்சிக்க அவன் அசையவே இல்லை. வெகு நேரம் கழித்து அர்ஜுன் அடித்த ஹாரன் சத்தத்தில் தான் அவளை விடுவித்தான்.

அவன் விட்டதும் அவனை பார்க்க முடியாமல் முகத்தை மூடிக் கொண்டவள், “பிராடு பிராடு… லிப்ஸ்டிக்கை சரி பண்றேன்னு சொல்லிட்டு என்ன பண்ற” என்று தோளில் அடிக்க,

அவன் சிரித்துக் கொண்டே, “ஹே நான் லிப்ஸ்டிக்க தான் ஹனி சரி பண்ணுனேன். இப்போ பாரு கரெக்ட் ஆ இருக்கு.” என்று போன் கேமராவில் காட்ட, அவள், ‘லிப்ஸ்டிக்கை எல்லாம் அழிச்சு விட்டுட்ட’ என்று முணுமுணுத்தாள்.

“என்ன ஹனி சொன்ன எனக்கு கேட்கல” என்று குறும்பாய் கேட்க, உத்ரா வெட்கப் புன்னகையுடன் “ஒன்னும் சொல்லல” என்று வெளியில் செல்ல போனாள்.

துருவ் அவளைப் பிடித்து, அவனே அவளுக்கு உதட்டுச் சாயத்தைப் போட்டு விட்டு, “இப்போ ஓகே போலாமா?” என்று கேட்க, அவனையே ரசித்துக் கொண்டிருந்தவள், அவன் கன்னத்தில் அழுத்தமாய் முத்தம் கொடுத்து விட்டு, “போலாமே…” என்று சொல்லி வெளியில் சென்றாள்.

அவள் முத்தத்தில் திளைத்தவன், சிரித்துக் கொண்டே வெளியில் வர, வெளியில் பெரியவர்களும் ஃபங்க்ஷன் வருவதற்கு காரில் ஏறி கொண்டிருந்தனர். பெரியவர்களும் சிறியவர்களும் தனி தனி காரில் செல்ல ஏற்பாடாக, அர்ஜுன் துருவை தரதரவென இழுத்து, காரில் அமர வைத்தான்.

அவன் புரியாமல் “எதுக்குடா இப்படி இழுத்துட்டு வர?” என்று கேட்க, காரில் அமர்ந்திருந்த  உத்ராவும், மீராவும் அதே கேள்வியை முகத்தில் தாங்கி அர்ஜுனை பார்க்க, அர்ஜுன் உத்ராவை ஒரு பார்வை பார்த்து விட்டு,

“கன்னத்துல இருக்குற லிப்ஸ்டிக்கை தொடைடா. இதை மட்டும் வீட்டுல பார்த்தாங்க. உங்களோட சேர்த்து எங்களுக்கும் சங்குதான்” என்று முறைக்க,

உத்ரா “ஸ்ஸ்ஸ்” என்று தலையை குனிந்து கொள்ள, மீரா, உதட்டைக் கடித்து கொண்டு, நக்கலாக சிரித்தாள்.

துருவ் அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. கண்ணாடி வழியாக பின்னாடி இருந்த உத்ராவை பார்த்து ரசித்துக் கொண்டே, கன்னத்தைத் துடைக்க, உத்ராவுக்கு தான் ‘ஐயோ இவன் ஏன் இன்னைக்கு எல்லார் முன்னடியும்  இப்படி பண்றான்’ என்று வெட்கமாக இருந்தது.

பின், அஜயும், விதுனும் காரில் ஏற, இந்த நேரத்தில் சுஜி இல்லாதது வருத்தமாக இருந்தது.

அந்த நேரத்தில் சுஜி அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி,

“ஹார்ட்லி காங்கிரேட்ஸ் டியர். நான் அங்க இல்லைனாலும் டிவில உன்னை பார்த்துகிட்டு தான் இருப்பேன். என்னோட கைதட்டல் உனக்கு இங்க இருந்தே வரும். அப்பறம்  ப்ரோ கையால அவார்ட் வாங்க போற, அங்க போய் அவரை சைட் அடிச்சுக்கிட்டு மானத்தை வாங்காத பங்கு. என்ஜாய் தி பார்ட்டி… உம்மா” என்று அனுப்பி இருந்தாள்.

அதனைக் கண்டவளுக்கு அவள் அன்பில் கண்ணில் நீர் கசிய, இதற்கு ஒரு முடிவு எடுத்தே ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

பின், அனைவரும் விழாவிற்கு சென்று சீட்டில் அமர, விழா இனிதே ஆரம்பம் ஆகியது.

முதலில் சில கலை நிகழ்ச்சிகளுக்கு பிறகு, அந்த விழாவின் தொகுப்பாளர்,

“ஹலோ பிரெண்ட்ஸ். இன்னைக்கு நம்ம என்ன விழாவுக்காக வந்துருக்கோம்னு உங்களுக்கே தெரியும். சவுத் இந்தியால தி நம்பர் ஒன் பிசினெஸ் வுமன் அவார்ட் வழங்குறதுக்காக தான் இங்க கூடி இருக்கோம்.

அண்ட், இந்த விழா இந்த வருஷம் நிறைய விதத்துல  ரொம்பவே ஸ்பெஷல்ன்னு சொல்லலாம். ஏன் அப்படினு கேக்குறீங்களா…

பொதுவா இந்த அவார்ட் வாங்குறது குறைஞ்சது 30 வயசுக்கு மேல இருக்குறவங்களா தான் இருப்பாங்க. அது கூட ரேர் தான்.

ஆனால் இந்த வருஷம் தி வெரி யங். அண்ட் பியூடிஃபுல்… மிஸ் உத்ரா அவர்கள் இந்த விருதை வாங்க போகிறார்கள். அண்ட் இதுல இன்னொரு ஸ்பெஷல் இருக்கு. ஃபர்ஸ்ட் டைம் இந்த பிசினெஸ் ஃபங்க்ஷன்க்கு, ஒரு  இன்டெர்நேஷனல் பிசினெஸ் மேன் அதுவும் இல்லாம, யங் அண்ட் எனர்ஜெட்டிக் அண்ட் ஹாண்ட்ஸம் அப்டின்னு சொல்லிகிட்டே போற அளவுக்கு ஒரு MR ஆஸ்திரேலியா வந்துருக்காரு.

அவரு தான் இந்த அவார்டை மிஸ் உத்ரா அவர்களுக்கு கொடுக்க போறாங்க… ஐ ஹார்ட்லி வெல்கம் தி கிரேட் MR. துருவேந்திரன் ஆன் ஸ்டேஜ் ப்ளீஸ்…”  என்று சொன்னதும், பல பெண் ரசிகைகள் தான் அவனுக்கு சடசடவென கை தட்டினர்.

ஆனால் துருவின் கண்களோ உத்ராவின் மீது மட்டும் தான் இருந்தது.

அவளும் அவனின் கம்பீரத்தையும், மிடுக்காக அவன் சென்ற தோரணையையும் வெகுவாய் ரசித்து கொண்டிருந்தாள்.

பின், தொகுப்பாளர் உத்ராவை மேடைக்கு அழைக்க, அவள் எங்கே இதை எல்லாம் காதில் வாங்கினாள். சுஜி சொன்னது போல் துருவை தான் சைட் அடித்து கொண்டிருந்தாள்.

அஜய் தான், “பங்கு, எல்லாரும் உன்னை தான் பார்க்குறாங்க. ஜொள்ளு விடுறதை நிறுத்து” என்று கேலி செய்ய, அவள் அசடு வழிந்து விட்டு மேடைக்கு ஏறினாள்.

துருவ் உத்ராவையே பார்க்க, அவளும் அவனை மட்டும் தான் பார்த்து கொண்டிருந்தாள். பின் அவன் கையாலேயே அவள் விருதை வாங்க, அவளுக்கு இந்த நிமிட சந்தோசத்தை விவரிக்க வார்த்தையே இல்ல.

யாரென்றே அறியாதவனாய் தன் வாழ்வில் நுழைந்து, இன்றும் அவன் யாரென்று அறியாமல் இருந்தாலும், தன் ஊனிலும் உயிரிலும் இன்னுயிராய் கலந்து விட்டனை காதலுடன் நோக்கினாள்.

பின், தொகுப்பாளர் அவளிடம் பேச சொல்லி மைக்கை கொடுக்க, துருவ் அவளிடம் இருந்து மைக்கை வாங்கினான்.

அவள் புரியாமல் அவனைப் பார்க்க, அவன் சிறு சிரிப்புடன் கணீர் குரலில்,

“குட் ஈவினிங் லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன்… ம்ம்… உத்ராவுக்கு பதிலா இங்க நான் ஒரு 10 மினிட்ஸ் பேசலாம்னு நினைக்கிறேன். இஸ் தட் ஓகே” என்று தொகுப்பாளரைப் பார்க்க,

அவன், “தாராளமா பேசுங்க சார்…” என்று சொல்லவும்,

“தேங்க்ஸ்.” என்று, குழப்பமாய் நின்றிருந்த உத்ராவை பார்த்து விட்டு, பேச ஆரம்பித்தான்.

“ஒரு சின்ன ஸ்டோரி சொல்ல போறேன். இதை கேட்டுட்டு… உங்களுக்கு புரிஞ்சா நீங்களும் தாராளமா பதில் சொல்லலாம்” என்று சொல்லி விட்டு, சிறு இடைவெளி விட்டு,

“ஒரு ஊர்ல ஒருத்தன் இருந்தான். அவனை சுத்தி இருக்குறதுலாம் பால்ன்னும். தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாதுன்னும், நம்மளை யாராலயும் ஏமாத்த முடியாதுன்னும் ரொம்ப கெத்தா இருந்தான்.

ஆனால் அவனுக்கு ஒரு முதல் சோதனை அப்போ தான் வந்தது. தன்னை சுத்தி இருக்குறவங்களுக்காக, அவங்க நட்பை பாதுகாக்குறதா நினைச்சு ஒரு சின்ன பொண்ணை ஏமாத்த முயற்சி செஞ்சான்

ஆனால் அந்த பொண்ணு அவன் வாழ்க்கையிலே ஏற்படுத்துன மாற்றம் அளவில்லாதது.

அவனை சுத்தி இருக்குறவங்க நல்லவங்களா கெட்டவங்களான்னு புரிய வச்சா. அவளோட அன்பு, அவன் மனசுல பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அவன் குணத்தையே மாத்தும்ன்னு புரிய வச்சா.

அவளை ஏமாத்தி அவளுக்கு துரோகம் பண்ணனும்ன்னு நினைச்ச அவனை காதலால மொத்தமா மாத்துனாள்.

ஒரு கட்டத்துல, அவள் தான் அவனோட வாழ்க்கையா உயிராவே ஆனாள்…” என்று உத்ராவை பார்க்க, அவள் கண்ணில் நீர் வழிய திகைத்து நின்றிருந்தாள்.

பின் துருவ் தொடர்ந்து, “அவன் அவளை எவ்ளோ லவ் பண்ணுனான்னா… அவளுக்காக அவன் உயிரையே குடுக்குற அளவுக்கு…

ஆனால், அப்பறம் தான் அவனுக்கு இன்னொரு சோதனை வந்தது. அந்த பொண்ணு அவனை மறந்துட்டா. மறந்துட்டான்னா ஒரு விபத்துல, அவளுக்கு பழசுலாம் மறந்து போய்டுச்சு. அதுல அந்த பையனை மட்டும் அவள் மறந்துட்டாள்.
அவளுக்கு ஒரு சின்ன ஞாபகம் கூட இல்லை.

அந்த பையனுக்கு பயம். எங்கே அவள் முன்னாடி போய் நின்னால், தன்னை யாருன்னு அவள் கேட்டுடுவாளோன்னு…

அந்த ஒரு வார்த்தை அவன் உயிரையே எடுக்குற அளவுக்கு வலிக்கும்னு நினைச்சு அவளை விட்டு பிரிஞ்சு போய்ட்டான்..” என்று குரல் கமர கூறியவன் தன்னை சமன்படுத்திவிட்டு,

“என்னைக்காவது அவளுக்கு அவனோட ஞாபகம் வரும்… அப்போ கண்டிப்பா அவனைத் தேடி அவள் வருவாள்ன்னு அவன் காத்திருக்க ஆரம்பிச்சான்.

ஆனால் அப்போ இன்னொரு சோதனையா மறுபடியும் அவன் அவள் முன்னாடி போய் நிற்க வேண்டியது இருந்தது. அதுவும் தப்பான சிச்சுவேஷன்ல.

எவ்வளவு தப்பான்னா…? அந்த பொண்ணு அவன் ஒரு பெண் பித்தன், அவள் வாழ்க்கையை கெடுக்க வந்த அரக்கன்னு நினைக்கிற அளவுக்கு…

அவள் அவன் காதலை மறந்ததை விட, அவள் அவனை தப்பா நினைச்சதை தான் அவனால தாங்க முடியல. அது அவன் மனசுல உறுத்திக்கிட்டே இருந்துச்சு. அப்பறம் ஒரு கட்டத்துல வேற வழி இல்லாம அந்த பையன் யாருன்னும், அவங்களுக்கு இருந்த ரிலேஷன்ஷிப் பத்தியும் அந்த பையன் வாயாலேயே சொல்ல வேண்டியதா போய்டுச்சு. ஆனால்… இதுல ஆச்சர்யம் என்னன்னா?

அவனை தப்பாவே நினைச்சுருந்தாலும் அப்போ அந்த பொண்ணு அவனை நம்புனா. அவன் வார்த்தையை முழுசா நம்புனா.

ஆனால் அப்போ அந்த பையனால அவளோட காதலை ஏத்துக்க முடியல. அவள் பாவம் பார்த்து காதலிக்கிகறாளோனு ஒரு ஃபீலிங்… அவளை தவிர்க்க முயற்சி செஞ்சான்.

அவளுக்கு ஞாபகம் வர்ற வரைக்கும் அவளுக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு அவளை அவாய்ட் பண்ணுனான்.

ஆனால் அப்போ தான் அவள், அவன் மேல எவ்ளோ காதல் வச்சுருக்கான்னுக்கு அந்த பையனுக்கு புரிய வச்சா. அந்த பையனும் புருஞ்சுகிட்டான். அவள் மறந்துருந்தாலும், அவள் இன்னும் அவனை நம்புறான்னு நினச்சு அவளை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டான்…” என்றவன் நிறுத்தி கலங்கிய கண்ணுடன், உத்ராவை பார்க்க, அவள் கண்ணெல்லாம் சிவந்து போய் நின்றிருந்தாள்.

“அப்போ, அந்த பொண்ணு அவளுக்கு ஞாபகம் வந்ததும் தான் அவனை கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டாள். அவளுக்கு பயமாம்…

எங்க அந்த பையன் அவளோட ஒரிஜினாலிட்டியை விட்டுட்டு பழைய காதலியை அவள்கிட்ட தேடி, அது கிடைக்கலைன்னா அவளை விட்டு போய்டுவானோன்னு… இது நியாயம் தான” என்று கேட்க, அவனின் குரலிலேயே ஏதோ வசியம் இருக்க அந்த சபையில் அமர்ந்திருந்த அனைவரும், கண்ணில் நீர் கோர்க்க, “நியாயம் தான்” என்று கத்தினர்.

அவனும் தலையாட்டி “ம்ம் அந்த பையனுக்கும் அது நியாயமா தான் பட்டுச்சு… ஆனால் அவளுக்கு ஞாபகம் எப்போ வரும்னே தெரியாம அவன் விலகி… ஒருவேளை ரொம்ப வருஷம் கழிச்சு அவளுக்கு எல்லாமே ஞாபகம் வந்தால், அப்போ அவன் சட்டையை பிடிச்சு நான் தான் வேணான்னு சொன்னா நீ ஏண்டா என்னை கல்யாணம் பண்ணிக்கலைன்னு கேட்டா என்ன பண்றது?

அது போக, இன்னொரு தடவை அந்த பொண்ணை தெரிஞ்சே தவற விட அந்த பையனுக்கு விருப்பம் இல்லை. ஏன்னா அந்த பையன் அப்போ இருந்த பொண்ணை மட்டும் இல்லை.. இத்தனை வருஷத்துல, எல்லாமே மாறி அந்த பையனுக்கே டஃப் குடுக்குற அளவுக்கு பெரிய அளவுல வளர்ந்து நிற்கிற அந்த பொண்ணை இப்பயும் உயிரா காதலிக்கிறான்…

அவன் அவளோட ஒரிஜினாலிட்டியை தான் காதலிக்கிறான். அந்த பொண்ணு எப்படி இருந்தாலும், அவன் காதலிப்பான். ஆனால் இப்போ அந்த பையன் ஒரு முடிவு எடுத்துருக்கான்…” என்று அமைதியாய் இருக்க, உத்ராவிற்கு மறுபடியும் தன்னை விட்டு செல்ல போகிறேன் என்று சொல்ல போறானோ என்று இதயம் பயத்தில் வேகமாக துடித்தது.

அங்கிருந்தவர்களும் அந்த பையன் இப்பொழுது என்ன முடிவு எடுத்துருக்கிறான் என்று கேட்க ஆர்வமாகவும் பதட்டமாகவும் அமர்ந்திருக்க, துருவ் மெலிதாய் சிரித்து கொண்டு,

“அந்த பையன் இப்போ இந்த நிமிஷத்துல இருந்து அவளை புதுசா காதலிக்க போறான். அவளை மாதிரியே அந்த பையனும் பழசை மறந்துட்டான். ஆனால் அவள் மேல இருந்த காதலை மறக்கலை.

இப்போ இந்த இடத்துலயே, இங்க அத்தனை பேர் முன்னாடியும் அந்த பையன் அந்த பொண்ணுகிட்ட ப்ரொபோஸ் பண்ண போறான்…” என்று சொல்ல, அனைவரும் யார் அது என்று திரும்பி திரும்பி பார்த்தனர்.

உத்ராவிற்கு வெடித்து வந்த அழுகையை கட்டுப்படுத்தவே போதும் போதும் என்றானது. துருவ் சபையை பார்த்து “அந்த பையன் எடுத்த முடிவு சரிதான” என்று கேட்க, அனைவரும் “சரி சரி” என்று கத்தினர்.

இப்பொழுது அவன், அர்ஜுனை பார்க்க, அவன் ஒரு பொக்கேவையும் மோதிரத்தையும் அந்த தொகுப்பாளரிடம் கொடுத்து துருவிடம் கொடுக்க சொன்னான். பாவம் அவருக்குத்தான் எதுவுமே புரியவில்லை.

அதனை துருவ் கையில் வாங்கி விட்டு, “பாத்துக்கோங்க பிரதர்ஸ்  அண்ட் சிஸ்டர்ஸ். இப்போ உங்க எல்லார் முன்னாடியும் அந்த பையன் அவளோட ஆசை காதலிக்கு ப்ரொபோஸ் பண்ண போறான்…” என்று சிறு சிரிப்புடன் சொல்லி விட்டு,

உத்ராவின் முன் முட்டி போட்டு அமர்ந்து, பொக்கேவை நீட்டி “ஐ லவ் யு உத்ரா… என் உத்ரா எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும். அப்போ இருந்த உதியா இருந்தாலும், இப்போ இருக்குற என் உத்ராவா இருந்தாலும்… எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். லவ் யு ஹனி…” என்று அளவில்லா காதலுடன் சொல்ல, அவள் அவனை தாவி அணைத்துக் கொண்டு, கத்தி அழுதாள்.

தேம்பி தேம்பி அவள் அழுக, அவளை விலக்கியவன் அவள் கண்ணைத் துடைத்து, “நோ மோர் டியர்ஸ் ஹனி…” என்று அவள் கண்ணை துடைத்தான்.

அங்கிருந்த அனைவரும் இவர்கள் அன்பில் நெகிழ, அங்கு உத்ராவின் குடும்பமும் இதனை ஆனந்தத்துடன் பார்த்தது. துருவ் அவர்களிடம் அனைத்தும் கூறி இருந்தான். அவர்களின் சம்மதத்துடன் தான் இங்கு இவ்வளவும் பேசினான்.

மீண்டும் பொங்கி வந்த அழுகையுடன் அவனைக் கட்டி கொண்டவளிடம், “நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா ஹனி” என்று கேட்க,

அவள் “எப்போடா புருஷா கல்யாணம் பண்ணிப்ப?” என்று தலையை சாய்த்து, அழுகையும் சிரிப்பும் கலந்து கேட்க, அவன் “இப்போவே கல்யாணம் பண்ணிக்கலாம் ஹனி நான் ரெடி தான்” என்று கண்ணடிக்க, ஆண்கள் மூவரும் ஓ வென கத்தினர்.

உத்ரா, சிறு சிரிப்புடன், “அப்போ பண்ணிக்கோ” என்று குறும்பாய் சொல்ல, அவன் சிறு புன்னகையுடன், ஒரு மோதிரத்தை அவளின் விரலில் கண்ணில் காதலுடன் போட்டு விட்டான்.

பின் அவள் கையை பிடித்து முத்தமும் கொடுத்து, “ரெண்டாவது தடவை இப்போ கல்யாணம் பண்ணிருக்கோம் ஹனி.” என்று அவள் நெற்றியில் முத்தம் கொடுக்க, அதில் பெண்ணவள் சிவந்து போனாள்.

சுற்றி இருக்கிறவர்களை மறந்து இருவரும் கண்ணிலேயே பேசிக்கொள்ள, விது தான், “இவன் இப்போதைக்கு அடங்கமாட்டான். இதுங்க ரொமான்ஸை ஸ்டாப் பண்ணுங்கடா” என்று மற்றவரிடம் சொல்ல, மூவரும் மேடையில் வந்து, துருவை தூக்கி சுற்றினர்.

அவர்களும் அவன் பேசியதில், உருகி போய் தான் இருந்தனர். பின், பெரியவர்கள் நால்வரும், உத்ராவை  உச்சி முகர்ந்து, உணர்ச்சி பெருக்கில் இருந்தனர்.

பின் விழா முடிந்து, கிளம்பும் வேளையில், துருவும் உத்ராவும் பிறகு வருவதாய் சொல்ல, மற்றவர்கள் கிளம்பினர். உத்ராவிடன் போன் அஜயிடம் தான் இருந்தது.

அப்பொழுது, சுஜி “பங்கு செம்ம ரொமான்டிக் சீன் பங்கு… ப்ரோ சூப்பர். சோ ஹாப்பி ஃபார் யு டியர்… சீக்கிரம் கல்யாண பத்திரிக்கை அனுப்பு.”  என்று குறுஞ்செய்தியில் பல முத்த ஸ்மைய்லிகளையும் வாழ்த்து படங்களையும் அனுப்பி இருந்தாள்.

அவள் பெயரையே ஆசையாய் வருடிக்கொண்டிருந்தவனைப் பார்த்த விதுன், அவன் தோளை தட்டி, சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றான்.

காரில், உத்ரா துருவின் தோளில் சாய்ந்து கொண்டு, நடந்ததை நினைத்து கொண்டே வர, துருவ் “ஹனி.” என்று அழைத்தான்.

அவள் நிமிர்ந்து, என்னவென்று பார்க்க, அவன் “என்ன ஹனி எதுவுமே பேச மாட்டேங்குற…” என்று கேட்டதும், அவள் எக்கி அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்து, மீண்டும் தோளிலேயே சாய்ந்து கொண்டாள்.

அதில் சிரித்தவன், “உதி… இப்போ எப்படி இருக்கு தெரியுமா… மனசெல்லாம் அவ்ளோ லேசா உலகத்தையே ஜெயிச்ச மாதிரி… ரொம்ப ஹாப்பியா இருக்கு.” என்று சிலிர்த்த படி சொல்ல,

அவள் எதுவும் சொல்லாமல் புன்னகைத்து, மீண்டும் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

துருவ் “ஹே நான் கார் ஓட்டிக்கிட்டு இருக்கேன். அமைதியா வா.” என்று பொய்யாய் கண்டிக்க, அவள் அவனை இழுத்து, நெற்றியில் முத்தமிட்டாள்.

அதற்கு மேல் பொறுக்க முடியாமல், காரை ஓரமாக நிறுத்தியவன், “ஏண்டி மனுஷனை கொல்ற…” என்று பாவமாக கேட்டதில்,

அவள் “லவ் யு டா புருஷா” என்று அவன் கழுத்தை கட்டி கொண்டு சொல்ல, அவன் முறுவலித்து, அவள் நெற்றியில் முட்டி, “பொண்டாட்டி. இப்படிலாம் பார்க்காதடி. அப்பறம் நான் காருன்னு கூட பார்க்க மாட்டேன்…” என்று மிரட்டினான்.

 “என்னடா புருஷா பண்ணுவ… ஹ்ம்ம்?” என்று உத்ரா கேலியாய் கேட்க,

அவன் “ஹக் பண்ணுவேன்டி…” என்று சொல்ல,

அவள் “பண்ணிக்கோ” என்றதும்,

“கிஸ் பண்ணுவேன்” என்றான்.

அவள் தோளை குலுக்கி “பண்ணிக்கோ” என்று அசட்டையாக சொல்ல, அவன் அவளை சுவாரசியமாய் பார்த்து, காதில் ஏதோ கிசுகிசுக்க, அவள் ஐயோ என்று வெட்கத்தில் முகத்தை மூடி கொண்டு, “காரை எடு.” என்றாள்.

அவளை பார்த்து வாய் விட்டு சிரித்தவன், அதே சிரிப்புடன் காரை வீட்டிற்கு விட்டான்.

மறுநாள், உத்ராவை தவிர வீட்டினர் அனைவரும் பேசிக்கொண்டிருக்க, கருணா உத்ரா துருவ் திருமணத்தை பற்றி பேசினார். உடனே கல்யாண தேதி குறிக்கிறேன் என்று சொல்ல, மற்றவர்களும் ஆர்வமாய் துருவை பார்த்தனர்.

அவன் சிறிது யோசித்து விட்டு, “இல்ல அங்கிள் நான் ரெண்டு நாள்ல ஆஸ்திரேலியா போகணும். அங்க நிறைய வேலை பெண்டிங்ல இருக்கு. சோ 2  மந்த்ஸ் போகட்டும்.” என்று சொன்னதும், ஆண்கள் மூவரும் பொங்கி விட்டனர்.

அர்ஜுன், “இந்த கதையே வேணாம். நீ எங்க போறதுனாலும் அவளை கல்யாணம் பண்ணி கூட கூட்டிகிட்டு போ” என்று சொல்ல,

அஜய், “ஆமா துருவ் இங்க இருக்குற வேலையெல்லாம் நாங்க பாத்துக்குறோம். அவள் அங்க இருந்து மானிடர் பண்ணுனா மட்டும் போதும்.” என்றதும்,

விது “அவள் உன்னை விட்டு இருக்க மாட்டாள். துருவ். நீ பாட்டுக்கு போறேன்னு சொல்ற.” என்று கடிந்தவர்களுக்கு, அவனை இங்கயே இருக்க சொல்ல வாய் வரை வந்தது.

ஆனால், என்ன இருந்தாலும், பெரிய ஸ்டேட்டஸில் இருப்பவன், உத்ராவிற்காக அனைத்தையும் விட்டு விட்டு இங்கு வந்து அனைவர் முன்னிலையிலும், அவன் மரியாதை பற்றி எல்லாம் நினைக்காமல், அவளிடம் முட்டி போட்டு காதலை யாசகம் கேட்டு, இப்பொழுது, இங்கயும் அனைவரிடமும் நன்முறையில் பழகுகிறான்.

இதற்கு மேலும், அவனை இறங்கி போக சொல்வது மிகவும் தவறு. என்ன இருந்தாலும், அவன் இந்த வீட்டு மாப்பிள்ளை ஆகிற்றே என்று மூவரும், கூடவே பெரியவர்களும், வார்த்தையை விழுங்கினர்.

துருவ், “நான் உத்ராகிட்ட பேசிட்டேன் விது. இங்கயும் நிறைய வேலை இருக்கு… சோ” என்று சொல்ல,

லட்சுமி, “உங்க ரெண்டு பேருக்கும் எப்போ தான் வேலை இல்லாம இருந்துருக்கு. எப்போ பாரு வேலை வேலைன்னு தான சுத்துறீங்க.” என்று முகத்தை தூக்கி வைத்து கொள்ள,

அவன் புன்னகைத்து, “இல்ல ஆண்ட்டி. கொஞ்சம் ஒர்க் மட்டும் முடிச்சுட்டு ஃபிரீ ஆகிட்டு கல்யாணம் பண்ணுனா தான் நானும் அவள் கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியும். தென் அவளுக்கு எல்லாத்தையும் செட் ரைட் பண்ண டைம் வேணும்” என்று சொல்ல, மற்றவர்கள் மறுக்க, உத்ரா அங்கு வந்தாள்.

அவளிடம் அர்ஜுன், “உதி இவன் ஆஸ்திரேலியா போறேன்னு சொல்றான்” என்று சொல்ல,

அவள் “ம்ம் தெரியுமே… நான் தான் போயிட்டு வர சொன்னேன்” என்றதும், கருணா கல்யாணம் செய்து கொண்டு போக சொல்ல, உத்ரா பிடிவாதமாக, “நான் அன்னைக்கே சொன்னேன்ல பெரியப்பா. எங்க நாலு பேருக்கும் ஒரே நாள்ல தான் கல்யாணம் நடக்கணும்னு…” என்று சொல்ல,  அஜயும், விதுவும் வெகுவாய் அதிர்ந்தனர்.

அஜய், சட்டென்று எழுந்து, “லூசுத்தனமா பேசாத உதி. நடக்குற காரியத்தை பேசு.” என்று திட்ட,

விது, “உதி… அர்ஜுன் ரூட்டும் க்ளியர் தான. அவனுக்கும் உனக்கும் வேணும்னா ஒரே நாள்ல கல்யாணம் வைக்கலாம்” என்று ஐடியா கொடுக்க, அவள் அழுத்தமாய், “நம்ம எல்லாருக்கும் ஒரே நாள்ல கல்யாணம் நடந்தா எங்க கல்யாணம் நடக்கும்.” என்று சொல்ல, இருவரும் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.

உறைதல் தொடரும்…
-மேகா..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
44
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.