300 views

33.என் தளிர்மலரே

“பொண்ணு அழைப்புக்கு ஆறரைக்கு வந்துக் கூப்பிட்டுப் போகனும்க்கா.ஏழரை டூ எட்டரை தான் நலங்கு வைக்கனும். மாப்பிள்ளை அழைப்பையும் அதுக்கப்புறம் நடத்தனும்” 

 

கான்ஃப்ரன்ஸ் காலில் இதெல்லாம் பேசிக் கொண்டு இருந்தார் ரோகிணி. 

 

“நீங்கப் பொண்ணு அழைப்புக்கு வந்துடுங்க அப்படியே சுமதி வீட்டுக்குப் போய் மாப்பிள்ளை அழைப்பையும் செய்திடுங்க” என்று சிவசங்கரி கூறினார். 

 

“சரிங்க அக்கா. சுமதியக்கா! உறவுக்காரவங்க, ஃப்ரண்ட்ஸ்ன்னு யார், யார் வருவாங்க, எவ்ளோ பேர் வருவாங்கன்னு நலங்கு ஃபங்க்ஷன்லயே தெரிஞ்சிடும்.காலையில் கல்யாணத்துக்கும் அவ்ளோ பேர் தான் வருவாங்க.அதனால், நாம மொய்க்கு மட்டும் ஆள் வச்சிட்டாப் போதும்” 

 

“செய்வோம் ரோகிணி” – சுமதி. 

 

பெண் அழைப்பு மாலையில் தான் நடைபெறும் என்பதால், இளந்தளிர் நான்கு மணி போல் குளித்துத் தாயாரானாள். 

 

அங்கே கட்டிச் செல்லப் பட்டுப்புடவை எடுத்து வைத்துக் கொண்டவள், மதிய உணவினை உட்கொண்டு முடித்தாள். 

 

சுபாஷினி அழகு நிலையத்திற்குத் தொடர்பு கொண்டு, அவர்கள் மண்டபத்திற்கு இத்தனை மணிக்கு வந்து விடுவார்களா? என்பதைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டாள். 

 

எல்லாமே தயாராக இருந்தது. சிவசங்கரிக்கோ பெண் வீடு என்பதால், கூடுதல் பரபரப்பு இருந்தது. 

 

மாலையில் அனைவரும் தனக்கென்று வேலையைப் பிரித்துக் கொண்டனர். 

 

சுபாஷினிக்கு தமக்கையின் அருகில் இருக்கும் வேலையே தான். ஆனாலும் அவ்வப்போது தாய்க்கு உதவிக் கொண்டு இருந்தாள். 

 

குளித்திருந்த இளந்தளிரோ, பெண் அழைப்பிற்கானப் பட்டுச் சேலையை உடுத்தினாள். 

 

“மடிப்பை எடுத்து விடு சுபா” என்று தங்கையிடம் உதவி கேட்டுப் பெற்றுக் கொண்டாள். 

 

இங்கிருந்து மண்டபத்திற்குச் செல்லும் போது, மாப்பிள்ளை வீடு சார்பாக சிலர் வந்து தான் பெண்ணை அழைத்துப் போக வேண்டும். எனவே, ரோகிணி, பரதன் மற்றும் மைதிலி வந்திருந்தனர். 

 

“முதல்ல உக்காருங்க” என்று அவர்களுக்குப் பழச்சாறு கொடுத்து உபசரித்தவர், 

 

“பொண்ணழைப்புக்கு எல்லாம் சரியா எடுத்து வச்சிருக்கேனான்னு ஒரு தடவை பார்த்துடு ரோகிணி” என்று அவரிடம் கூறினார். 

 

ரோகிணி அனைத்தையும் சரிபார்த்து விட்டு, 

 

“சரியா இருக்கு அக்கா. பொண்ணை அழைச்சுட்டுப் போகலாம். இப்போ நல்ல நேரம்ன்னு ஐயர் சொன்னாரு” என்று இளந்தளிரை மண்டபத்திற்கு அழைத்துப் போக ஆயத்தமாகினர். 

 

தன் இட, வலம் சுபாஷினி மற்றும் மைதிலியை அமர்த்திக் கொண்டு, மிதமான அலங்காரத்துடன் காரில் அமர்ந்திருந்தாள் இளந்தளிர். 

 

மண்டபத்தை நெருங்க, நெருங்க அவளைப் பதட்டம் சூழ்ந்து கொண்டது. 

 

உள்ளே செல்வதற்கு முன்பு, இளந்தளிருக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. 

 

மணமகள் அறைக்குள் நுழைந்ததும், 

சுபாஷினி, “இந்தாங்க அக்கா. குடிங்க” என்று தண்ணீர் பாட்டிலை நீட்டினாள். 

 

நன்றியுரைத்து விட்டு, அதை வாங்கி கடகடவென குடித்தாள் இளந்தளிர். 

 

இன்னும் சற்று நேரத்தில் கோவர்த்தனன் மண்டபத்திற்குள் பிரவேசித்து விடுவான். 

 

நிச்சயத்திற்குக் கூட வீட்டில் இருந்தவர்கள் முன்னிலையில் இருவரும் இணைந்து நின்றிருந்தனர். 

 

ஆனால் இங்கோ, பல பேர் முன்னால், தம்பதியாக நிற்கப் போகிறோம்! பதட்டத்திற்குக் காரணம் இது தானோ? 

 

இந்தப் பதட்டத்தை மட்டும் தணிக்க முடியவில்லை அவளால். 

 

அன்னையைக் கண்களால் தேடினாள். அறைக்குள்ளேயும், வெளியேயும் அவரைக் காணவில்லை. 

 

“அம்மாவைக் கூப்பிட்டு வா சுபா” என்று தங்கையை அனுப்பி வைத்தாள். 

 

மைதிலி அவளருகிலேயே தான் இருந்தாள்.ஆனால் அவளிடமும் தன்னுணர்வைக் கூற முடியாதே!

 

காத்திருந்தாள் அன்னையின் வருகைக்காக. 

 

சிவசங்கரி அறைக்குள் வந்ததும், 

“என்னடா ஆச்சு?” ஆறுதலாக விசாரித்தார். 

 

அவரை அருகே அழைத்து தோளில் சாய்ந்துக் கண்களை மூடிக் கொண்டாள். 

 

பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தாலும் மகளின் இந்த நிலை உணர்ந்தவர் மௌனமாக அவளது தலை கோதி விட்டுக் கொண்டிருந்தார். 

 

“மைதிலி ம்மா. நீ போய் அம்மாகிட்ட நான் கொஞ்ச நேரத்தில் வர்றேன். அதுவரை சமாளிக்கச் சொல்றியா?” என்றார் சிவசங்கரி. 

 

“சரிங்க அம்மா” என்று தாயைத் தேடிப் போனாள். 

 

முக அலங்காரம் செய்பவர் வரும் வரை இப்படியே இருக்கலாம் என்று நினைத்திருந்தாள் இளந்தளிர். 

 

சிறிது நேரம் கழித்து உள்ளே வந்த மைதிலி, 

“அம்மா அங்கே பார்த்துக்குறேன், நீங்க அக்காவைப் பாருங்கன்னு சொன்னாங்க சங்கரியம்மா” என்றாள். 

 

அவளது பதட்டம் குறைந்த பிறகு, 

” நீ சபையில் வந்து புடவை வாங்கிட்டுப் போகனும் இளா

குறைவான நாழிகைகள் கடந்திருக்க, 

மாப்பிள்ளை அழைப்புக்கான நேரம் வந்து விட்டது. 

 

🌸🌸🌸

 

அன்னையின் கால்களைத் தொட்டு எழுந்தான் கோவர்த்தனன். 

 

“சிஸ்டரை அழைச்சுட்டு எல்லாரும் மண்டபம் போய்ட்டாங்களாம்.இப்போ நாம கிளம்பிப் போகனும்” என்று ஹரீஷ் ஞாபகப்படுத்தவும் தான், சற்று முன்னர் சுமதியிடம் ஆசீர்வாதம் வாங்கினான் கோவர்த்தனன். 

 

பெண்ணவளுக்கு இருக்கும் பதட்டம் ஆண் இவனுக்குள்ளும் இருந்ததோ? 

 

காரில் போய்க் கொண்டிருக்கும் போது,

கோவர்த்தனன்”நண்பா! நர்வஸா இருக்குடா” என்றான் ஹரீஷிடம். 

 

அவனது கரங்களைப் பற்றிக் கொண்டவன், 

“சில் (Chill) நண்பா!.பதட்டப்படாத. ஜஸ்ட் என்ஜாய் பண்ணு” என்று எடுத்துக் கூறினான் ஹரீஷ். 

 

மண்டபத்தில் காலடி எடுத்து வைத்ததும் இவனுக்கும் ஆரத்தி எடுத்தனர். 

 

பரதன், “உள்ளே போய் ஸ்டேஜ்ல நிற்கனும் கோவர்த்தனா” என்று அவனை உள்ளே  மேடைக்கு அழைத்துச் சென்றார். 

 

“மாப்பிள்ளை வந்தாச்சு சிவா அக்கா” என்று கூறிக் கொண்டே இளந்தளிரின் அறைக்குள் வந்தார் ரோகிணி. 

 

அதைக் கேட்டதும் இளந்தளிரின் மனம் இனிமையை உணர்ந்தது.

 

“இதோ வர்றேன் ரோகிணி” 

 

அவர் பேசிக் கொண்டு இருக்கும் போது, யுக அலங்காரம் செய்யும் பெண் வந்து விட, 

 

அவரிடம் “பொண்ணு ஸ்டேஜ்ல போய் புடவை வாங்கிட்டு வந்துடட்டும்.அதைக் கட்டி விட்டுட்டு, மேக்கப் போட்டு விடும்மா” என்றார் சிவசங்கரி. 

 

மேடையில் நின்றிருந்த கோவர்த்தனனோ, தன் அருகாமையில் இளந்தளிர் நிற்கப் போகும் தருணத்தை நினைத்துக் கொண்டு இருந்தான். 

 

அப்போதே தாமதிக்காமல், இளந்தளிர் அவன் பக்கத்தில் நிற்க வைக்கப்பட்டாள். 

 

இந்த அருகாமை இருவருக்குமே, ஒரு வித களிப்பைத் தந்தது. 

 

நிமிர்ந்து பார்க்க மனம் துடித்தாலும், நாணம் தடுத்தது பெண்ணவளை. 

 

ஆடவனுக்கோ, அவளது பார்வை தரிசனத்தைக் காண மனம் ஏங்கியது. 

 

இமைகள் படபடக்க, இவனின் விழிகளை எதிர் கொண்டவளுக்கு வெட்கத்தில் உடல் சிலிர்த்தது. 

 

இவனுமே சிறிதாக நாணம் கொண்டு, அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். 

 

அதற்குள், தட்டில் புடவையை வைத்து இளந்தளிரிடம் கொடுத்தனர். 

 

அங்கிருந்து அகன்று புடவை உடுத்தச் சென்றவளின் முகத்தில் மென்மையான புன்னகை. 

 

அந்தப் புன்னகையுடன் மேடை சென்றாள்  எனில், கோவர்த்தனனின் நிலைமை அதோகதி தான்! 

 

அசுர வேகத்தில் மணப்பெண்ணுக்குச் சேலை உடுத்தி விட்டிருந்தார் பியூட்டிஷியன். 

 

அவளது சருமத்திற்கு ஏதுவான முக அலங்காரம் செய்தவர், தலையலங்காரத்தையும் சிறப்பாக செய்து முடித்தார். 

 

கழுத்தில் சிறிதாக திருஷ்டிப் பொட்டு வைத்து, மீண்டும் மேடைக்கு வந்தாள் மணப்பெண். 

 

சில மணி நேரம் பிரிவிற்குப் பின், இளந்தளிரைக் கண்டான் கோவர்த்தனன். 

 

இவர்களது இந்த மெல்லிய பார்வைப் பரிமாற்றங்களே அங்கு புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்த புகைப்படக்காரருக்கு ஏதுவாகப் போய் விட்டது. 

 

அத்தனைப் பாந்தமான ஜோடி அவர்களது பார்வைகள், அவர்களது பாந்தமான பந்தத்தை எந்தவித செயற்கையைத் தராததால், இயற்கையாகவே இருவரையும் அழகாகப் புகைப்படம் எடுக்க அவரால் முடிந்தது. 

 

சடங்குகள் அடுத்தடுத்து நடந்து முடிந்தது மட்டுமில்லாமல், புகைப்படங்களும் அழகாகவை வந்திருந்தன. 

 

சுபாஷினியும் , மைதிலியும் இளந்தளிரின் அருகிலேயே நின்று கொண்டு, அவளது ஒப்பனைகளைத் திருத்திக் கொண்டு இருந்தனர். 

 

வரிசையாக வந்த ஒரு சில உறவினர்களும், நண்பர்களும் தொடர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்ததால், வீட்டினர் மேடைக்குக் கீழே நாற்காலியில் அமர்ந்து கொண்டனர். 

 

மத்தாப்பாய்ச் சிரித்துக் கொண்டிருந்த ஜோடியைப் பார்த்துப் பொறாமை கொள்ளத் தோன்றாமல், வாழ்த்த மட்டுமே தோன்றியது அனைவருக்கும். 

 

ஹரீஷ், “நண்பா! நம்ம ஆஃபீஸ்ல இருந்து நிறைய பேர் வந்திருக்காங்க” என்றான் தோழனிடம். 

 

கோவர்த்தனன், “ஆமா டா. நானுமே இதை எதிர்பார்க்கல” என்று கூறினான். 

 

இளந்தளிரின் அலுவலகத்தில் இருந்து குறைவான நபர்களே வந்திருந்தனர். எல்லாரும் நாளைக் காலை திருமணத்திற்கு வருவார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டாள். 

 

சிவசங்கரி மற்றும் சுமதிக்கோ ஆனந்தத்தில், இடை விடாமல், கண்கள் நீரைச் சொரிந்தது. 

 

நல்ல நாள், நல்ல நிகழ்வின் போது, கண் கலங்கினால் அபசகுனம் ஆகி விடுமோ! என்று யாரும் கவனிக்காத வேளையில், இருவரும் ஒரு சேர கண்களைத் துடைத்துக் கொண்டனர். 

 

சுமதி, “ரோகிணி நீங்க வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுத்துட்டு காலையில் வாங்க. நாங்க இங்கத் தங்கிக்கிறோம்” என்று கூறினார். 

 

ரோகிணியோ, “பரவாயில்லை அக்கா. நாங்களுமே இங்கயே தங்கிக்கிறோம்” என்று கூறவும், 

 

“இல்லை ரோகிணி. அண்ணாவும், நீயும் வீட்ல மைதிலியையும், சுபாவையும் பாத்துக்கோங்க. அவங்களை மண்டபத்தில் விட மனசில்ல.சுபா அக்கா கூட தங்கனும்னு அடம் பிடிச்சாலும் நான் சமாளிச்சுக்கிறேன்.மைதிலியையும் ஏன் சிரமப்படுத்திக்கிட்டு? சுபாவை நீங்க தான் நல்லா பாத்துக்குவீங்க. ப்ளீஸ் ரோகிணி” என்று சிவசங்கரியும் கூறினார்.

 

அந்தப் பேச்சு நியாயமெனப்பட்டது ரோகிணிக்கு. 

 

எனவே, “அப்போ சரி அக்கா. சுபாவைக் கூப்பிட்டுப் போறோம்.கோவர்த்தனன் கூட தான் நைட் தங்குவேன்னு ஹரீஷ் எப்பவோ சொல்லிட்டான்.அதனால் அவன் இங்கயே இருக்கட்டும்க்கா. உங்களுக்கும் பாதுகாப்பு தான” என்று சொன்னார். 

 

நயனங்களின் மோதல்கள் அதிகமாகிக் கொண்டே, இருந்த போதும், அருகிலேயே நின்றிருந்த போதும், இருவரின் இதழ்களும் பேசவே இல்லை.

 

புகைப்படம் எடுப்பது முடிந்ததும், உணவுண்ணா அழைத்துச் செல்லப்பட்டார்கள் மணமக்கள். 

 

கோவர்த்தனனின் அருகில் இருக்கும் அத்தனை தருணங்களும் பொக்கிஷமாகப்பட்டது இளந்தளிருக்கு. அவனைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ! 

 

உணவுண்ண அமர்ந்ததும், இனிய அதிர்வொன்று ஏற்பட்டது இளந்தளிருக்கு.

 

கோவர்த்தனன் அவளது கரத்தைப் பற்றியது தான் அந்த அதிர்வுக்குக் காரணம். 

 

இதமான வருடலுடன் அக்கரத்தை தனது கைக்குள் அடக்கியிருந்தவனோ, அவளது ஐந்து விரல்களையும் , தன் விரல்களுடன் கோர்த்துக் கொண்டான் கோவர்த்தனன். 

 

அவனை ஏறிட்டுப் பார்க்கவும், நிமிரவில்லை பெண்ணவளது கண்கள். 

 

“கோவர்த்தனன்” மெல்லிய முனகலைக் கேட்டதும், 

 

“சொல்லு தளிர்?” என்று கேட்டானே தவிர கையைப் பிரித்து எடுத்துக் கொள்ளவில்லை. 

 

“ஒன்னும் இல்லை. சாப்பிடுங்க” என்று நெளிந்தவாறே கூறியவளது கரத்தை விடுவித்தான். 

 

“நர்வஸ் ஆகாமல் சாப்பிடு” என அவன் கூறி விட்டு சாப்பிட்டான். 

 

“நர்வஸ் எல்லாம் இல்லையே” என்று இவள் பொய்யாய்க் கூற, 

 

“அப்போ வெட்கம்?” என்றான் மெலிதான குரலில். 

 

“அதுவும் இல்லையே! பசிக்குதுங்க”என்று பெரும்பசி கொண்டிருப்பவளைப் போல கூறினாள். 

 

அது பொய்யென்று புரிந்தாலும் அவளை உணவை உட்கொள்ள வைத்தான். 

 

பின்னால் இருக்கும் வரிசையில் மொத்த குடும்பமும் அமர்ந்து உண்டனர். 

 

கடைசியாக, பாதாம் பாலுடன் விமரிசையாகப் பந்தி நடந்து முடிந்தது. 

 

நாளை காலையில் தன் மணிக் கழுத்தில், கோவர்த்தனனின் கரங்களில் இருந்து தாலியைப் பெறப் போகிறோம் என்று நினைத்த இளந்தளிருக்கு  கல்யாணக் கனவுகள் தான்! 

 

இவ்வளவு தாமதமாக கல்யாணக் கனவுகள் வரக்கூடாது என்ன? 

 

“ரெண்டு பேரும் போய் ரெஸ்ட் எடுங்க” அவர்களை அனுப்பி வைத்தார் சிவசங்கரி. 

 

பின்பு சுபாவை அழைத்து, “நீ ரோகிணியம்மா வீட்டுக்குப் போ. மைதிலி கூட தூங்கு. காலையில் கிளம்பி மண்டபத்துக்கு வா. ட்ரெஸ் பேக் வச்சிருக்கேன் அதையும் எடுத்துக்கோ” என்றதும், 

 

சிணுங்கத் தொடங்கி விட்டாள் இளையவள். 

 

“அம்மா! நான் உங்க கூடயும், அக்கா கூடயும் இருக்கேனே ப்ளீஸ்” 

 

“சுபா! இங்க உனக்குச் சரியா தூக்கம் வராது. ரோகிணி வீட்டுக்குப் போ.காலையில் நிறைய வேலை கிடக்கு. அடம் பிடிக்காம போம்மா” என்று அவளை ரோகிணியுடன் அனுப்பி வைத்து விட்டு, மணமகள் அறைக்குப் போனார் சிவசங்கரி. 

  • தொடரும்

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்