4,331 views

 

உதகமண்டலம் என்றதும் ஆரவிற்கும் வான்மதிக்கும் சொல்லில் விளக்கமுடியாத உணர்வுகள் பொங்கி எழ, சோகமும் நேசமும் தவிப்பும் கலந்து இருவரும் அவரவர் உலகில் சஞ்சரித்தனர். அடுத்த இரு நாட்களில்  நான்கு ஜோடியும் ஊட்டிக்கு செல்ல திட்டமிடப்பட்ட, சுதாகர், தங்கை மற்றும் ஆரவின் அபிப்ராயத்தை ஏற்று, மீண்டும் சிறிய தந்தையின் கடைகளை பார்த்துக்கொண்டான்.

ஆனால், ஹேமாவுடன் சென்னையிலேயே தனியாக வசிக்க, அவனின் பெற்றோர் இடையில் பல முறை போன் செய்து கெஞ்சியும் திட்டியும் கூட அவன் மனதை மாற்றவில்லை.

இறுதியில், “மாசத்துக்கு ஒரு தடவையாவது உங்களை வந்து பார்த்துட்டு போலாம்ன்னு நினைச்சுருக்கேன். அது கூட என் தங்கச்சி சொல்ற ஒரே காரணத்துக்காக தான். அந்த உறவையும் துண்டிக்க வைச்சுடாதீங்க. எப்போ அடுத்தவங்க உணர்வையும் கொஞ்சமாவது புருஞ்சுக்குறீங்களோ. அப்போ நானே உங்க கூட வரேன்.” என அழுத்தம் திருத்தமாக கூறி விட, அப்போது தான், தன் மகன் முழுவதுமாக தன் கையை விட்டு சென்றது புரிந்து திடுக்கிட்டனர்.

கண்ணாடி வளையல் கலகலவென ஓசை எழுப்ப, புது பெண்ணிற்குரிய நாணம் முகத்தில் அணிவகுக்க, அவனருகில் வந்து அமர்ந்தாள் ஹேமா.

அவளைக் கண்டதும், கோபமுகம் மெல்ல இயல்புக்கு திரும்ப, அவளுடன் உரசியபடி தள்ளி அமர்ந்தவன், “என்னங்க மிஸஸ் சைட்… புருஷன் பக்கத்துல ஆசையா வந்து உட்காந்து இருக்கீங்க” என்று குறும்பு மின்ன கேட்க,

அவளோ வெட்கத்துடன் முறைத்து, “சாப்பிட கூப்பிட தான் வந்தேன் மிஸ்டர் சைட். ஒழுங்கா எந்திரிச்சு வாங்க…” என்றபடி நழுவ எத்தனிக்க, மறுநொடி சுதாகரின் கையணைப்பில் சிக்கினாள்.

“ஐயோ விடுங்க சுதி…!” என்று நெளிந்தவளின், இடை இடுக்கில் கரங்களை பயணித்தவன், “கல்யாணம் ஆகி டூ நைட்ஸ் வேஸ்ட்டா போச்சுங்க மிஸஸ் சைட். லேசா உரச கூட பெர்மிஷன் இல்லைன்னா மீ பாவம் இல்ல…” என்று கிண்டலுடன், கன்னத்தில் முத்தமிட, கூச்சத்தில் சிவந்தவள்,

“யாரு நீங்க பாவமா? கமுக்கமா பசங்களோட சேர்ந்து எல்லா வில்லத்தனமும் பண்ணிட்டு, என்னமோ ரொம்ப அப்பாவி மாதிரி சீன் போட வேண்டியது.” என செல்லமாக அவனின் கன்னத்தை கிள்ளும் போதே, அலைபேசி அழைக்க, வான்மதியின் எண்ணைக் கண்டு வேகமாக எடுத்தான்.

எதிர்முனையில் கேட்ட விஷயத்தில் இருவரும் அதிர்ந்திட, அவசரமாக ஆரவின் வீட்டை நோக்கி பயணித்தனர்.

எனக்கு ஒரு ஐடியா!” என கவின் கூக்குரலிட்டபடி லயாவை நோக்கி வர, இப்போதிருந்தே தேன்நிலவு செல்ல, உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவள், “என்னடா?” எனப் பார்த்தாள்.

“ஊட்டிக்கு போனதும், மதியை தனியா போட்ல அனுப்பி விட்டுடலாம். ஆரவ் அது தெரிஞ்சு, இன்னொரு போட்ல மதியை தேடி போய், அவளை கண்டுபிடிச்சு காப்பாத்தி பயத்துல எல்லாத்தையும் உளறிடுவான். அதை கேட்டு மதியும், ‘யூ லவ்ட் மீ?’ ன்னு ஷாக் ஆகி, ஆனந்த கண்ணீர்ல எல்லாத்தையும் மறந்து அவன் கூட சேர்ந்துடுவா. எப்படி?” எனக் கோர்வையாக காட்சிகளை விவரித்து யோசனை கூற, லயா அவனை மேலிருந்து கீழ் வரை கடுப்பாக பார்த்தாள்.

“இந்த கருமத்தை எல்லாம் சொந்த லவ்க்கு யூஸ் பண்ணிருந்தா, நீ எப்போவோ கமிட் ஆகிருப்ப.” என அவன் முடியை பற்றி ஆட்டி விட்டு, “ஐடியா எல்லாம் ஓகே தான். ஆனா, மதியை தனியா போட்ல அனுப்புனது நீ தான்னு தெரிஞ்சா, அதே லேக்ல உன்ன முக்கிடுவான். பரவாயில்லையா?” என எகத்தாளமாக கேட்க, கவின் அசடு வழிந்து,

“குட் பாய்ண்ட் ஆஃப் யூ! கல்யாணம் ஆன ரெண்டாவது நாளே, சாக ஆசை இல்லடி. நான் வேறொரு ஐடியாவோட வரேன்.” என்று மீண்டும் வெளியில் சென்று தீவிர சிந்தனையில் ஆழ, அவனைக் கண்டு லயாவின் இதழ்கள் தான் மென்னகை பூத்தது.

“மாமா, மாமா எந்திரி மாமா!” என கட்டிலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தன்விக்கை அவசரமாக எழுப்பிக் கொண்டிருந்தாள் மோனிஷா.

“ப்ச்… போடி.” என திரும்பி படுத்தவன், உறக்கத்தில் அவளையும் இழுத்திருக்க, அவளோ மொத்தமாக அவன்மீது சரிந்தாள்.

“மா… மா” என்றே மோனிஷாவின் குரல் உள்ளே சென்றிருக்க, கனவுலகில் மிதந்தவன் இதையும் கனவென்றே எண்ணி, “ம்ம்… மோனி” என மோகத்தில் அவளை இறுக்கிப் பிடிக்க, முதலில் கிறங்கியவள், அதன்பிறகே நிகழ்வு உணர்ந்து, “டேய் மாமா. எந்திரிடா. எமர்ஜென்சி…” என்று அவனை உலுக்க, அதில் தான் உறக்கம் கலைந்தவன் சற்றே விழித்து,

“தூங்குறவனை இப்படி தான் எழுப்புவியாடி?” என்றான் தன்னை மீறி வெளிவந்த முறுவலுடன்.

அதில் சிவந்தவள், “எரும மாடே. நீ தான்டா புடிச்சு இழுத்த.” என்று திட்டி விட்டு, “இப்படி எழுப்புனாலும் தப்பு ஒன்னும் இல்லையே…” என அவன் சட்டை பொத்தானை திருகியபடி சிணுங்க, அவனுக்கு தான் அவஸ்தையாக இருந்தது, அவளின் மென்மை.

பின் அவளே, மீண்டும் பதறி, “ஒரு ப்ராப்ளம் மாமா…” என்க, அவளை புரியாமல் பார்த்தவன் விஷயம் அறிந்து திகைத்தான்.

இதற்கு முந்தைய நாள் இரவு, இரு திருமணத்திற்கும் மாறி மாறி வேலை பார்த்த அலுப்பில் ஆரவ் களைப்பாக தெரிய, இஷாந்தும் உறங்காமல் சிணுங்கியபடி இருந்தான்.

அவன் சோர்வைக் கண்டு, வான்மதி தான் “பேபியை குடுத்துட்டு நீங்க தூங்குங்க ஆரவ். நான் என் ரூம்ல தூங்க வச்சுக்குறேன்.” என்று இஷாந்தை தூக்கிக்கொள்ள, அவளை நிமிர்ந்து கனல் பார்வை வீசியவன், அதே கடுகடுப்புடன் அறைக்கு சென்று கதவை அறைந்து சாத்திக்கொண்டான்.

அவளுக்கு தான் ஒன்றும் புரியவில்லை. ‘நான் இப்ப என்ன சொல்லிட்டேன்னு கோபமா போறாரு. அவரு டயர்டா இருக்காருன்னு தான சொன்னேன்.’ என வெதும்பியவளுக்கு, அவனின் காரணமற்ற கோபம் கண்டு வேதனையே எஞ்சியது.

அந்நேரம் கதவு தட்டுப்பட, இஷாந்தை தோளில் சரித்தபடியே கதவை திறந்தாள். திறந்ததும் தான் தாமதம், புயலென உள்ளே நுழைந்த சௌமியா, “ஆரவ்…! ஏய் எங்கடி அவன்?” என உட்சபட்ச கோபத்தில் கத்த, அவரைக் கண்டதும் எப்போதும் போல நிதானமாக எதிர்கொண்டவள்,

“யாரு?” எனக் கேட்டாள் விழி உயர்த்தி.

“ம்ம். உன் ரெண்டாவது புருஷன்.” என வெகு எகத்தாளமாக கூற,

“ஓ… உங்க பையன்னு சொல்லுங்க அத்தை…” என்று ‘அத்தை ‘ என்ற வார்த்தையை அழுத்திக் கூறியதில், மேலும் வெறியான சௌமியா, “இங்கிதமே இல்லாம, அண்ணனையும் தம்பியையும் கல்யாணம் பண்ண நீ என்னை அத்தைன்னு கூப்புடுறியா?” என பார்வையால் அவளை சுட்டெரித்தார்.

அந்நேரம், “அதை புருஷன் செத்த ஒரே மாசத்துல ரெண்டாவது கல்யாணம் பண்ண நீங்க சொல்ல கூடாது மிஸஸ் சரவணன்.” என்று ஆரவ் கதவில் வாகாக சாய்ந்தபடி ஏளனம் புரிய, சௌமியா பற்களை நறநறவெனக் கடித்தார்.

“நான் நம்ம நல்லதுக்கு தான் பண்ணேன். உன் அப்பா மாதிரி நடுத்தெருவில உன்னையும் விட்டுருந்தா, இப்போ நீ இப்படி பேச மாட்ட” என விஷத்தைக் கக்க,

“அவரு உங்களை கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா நடுத்தெருவுக்கு போயிருக்கவே மாட்டாரு” என அசராமல் பதிலளித்தான்.

கோபத்தை கட்டுப்படுத்த இயலாத சௌமியா, “போதும் நிறுத்து ஆரவ். விக்ராந்தையும் அவரையும் என்ன பண்ணுன? எங்க அவங்க?” எனக் கேட்க, அவனோ சுளித்த புருவத்துடன்,

“ரெண்டு பேரும் பிசினஸ் விஷயமா மேலோகம் போக டிக்கட் வாங்கி இருக்காங்க மதர். ஆனா, பாருங்க… டிக்கட் தான் கன்ஃபார்மும் ஆகாம, ரிஜெக்ட்டும் ஆகாம, அல்லாடுது. நீங்களாவது ஒரு காஸ்ட்லி டிக்கட் வாங்கி குடுத்து அனுப்பி விடுங்க.” என முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு, இதழ் வளைக்க, சௌமியா அதிர்ந்து போனார்.

“எ… என்ன சொல்ற?” என்றவருக்கு இதயம் அதிவேகமாக துடிப்பது போல இருக்க, “உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சு இருக்கு. எப்போவுமே என் உயிரை வாங்குறதையே வேலையா வச்சு இருப்பியா?” என கோபத்தில் மூச்சு வாங்க,

“சாரி… இன்னும் உங்க உயிரை வாங்கல. வாங்குறதுக்குள்ள என் கண்ணை விட்டு தூரமா போய்டுங்க.” என்று விழியில் அனல் தெறிக்க எச்சரிக்க,

“சொல்லுவ சொல்லுவ ஏன் சொல்ல மாட்ட. நீ விக்ராந்தை அடிச்சுட்டு வீட்டை விட்டு போகும் போதே, அவனோட அப்பா உன்ன கொல்ற அளவு கோபத்துல தான் இருந்தாரு. நான் பேசி, உன்ன விட்டு வைச்சேன்ல.
நீ இதுவும் பேசுவ இன்னுமும் பேசுவ. அப்பவே உன்னை கொல்ல சொல்லிருக்கணும்…” என்று ஆத்திரத்துடன் கூறி முடிக்கும் போதே, அவரின் கன்னத்தில் பளாரென ஒரு அறை விழுந்தது.

வான்மதி தான் தீப்பிழம்பாக நின்றிருந்தாள். “என் முகில் மேல கை வைக்கிறதுக்கு முன்னாடி, நானே உன்ன கொன்னுடுவேன். அவரோட அம்மான்ற ஒரே காரணத்துக்காக தான் இப்போ வரை, உன்மேல கோபத்தை காட்டாம பொறுமையா இருக்காரு. ஆனா, நான் அப்படி இருக்க மாட்டேன். செவுல பேத்துருவேன். மருமகள் கொடுமைன்னா என்னன்னு காட்டுனேன்னு வை… நீயே சூசைட் பண்ணிக்குவ. போய் உன் புருஷனையும் அந்த ரேப்பிஸ்ட்டையும் காப்பாத்திக்க பாரு. அவுட்!” என்றாள் கர்ஜனையுடன்.

சௌமியாவோ அவளின் மிரட்டிலில் மிரண்டிருக்க, அவள் கொடுத்த அடியில் எரிந்த கன்னத்தை தேய்த்துக் கொண்டவர், ஆரவைப் பார்க்க, அவனின் பார்வை என்னவோ வான்மதி மீது தான் துளைக்கும் தன்மையுடன் படிந்திருந்தது ரசனையாக.

“இவ என்ன அடிக்கிறா நீ வேடிக்கை பார்த்துட்டு இருக்க?” சற்றே ஏமாற்றத்துடன் சௌமியா வினவ,

“இத்தனை வருஷமா நீங்களும் வேடிக்கை பார்த்துட்டு தான இருந்தீங்க.” சலனமின்றி குத்தலாகக் கூறியவன், அறைக்குள் புகுந்து கொள்ள, சௌமியா சினத்துடன் வான்மதியை முறைத்து விட்டு செல்ல, அவளோ வேகமாக ஆரவின் அறைக்கு சென்றாள்.

அங்கு அவன் கரத்தை தலைக்குக் கொடுத்து, கட்டிலில் விட்டத்தை பார்த்து படுத்திருக்க, அவனையே சிறிது நேரம் பார்த்திருந்தவள், ஏதோ பேச வந்துவிட்டு வார்த்தை வராமல் நகர போக, “மதி” என்று ஆரவ் அழைத்தான்.

அதில் வேகமாக திரும்பியவள், “சொல்லுங்க ஆரவ்” எனக் கேட்க, “இஷு ஆல்மோஸ்ட் தூங்க போற ஸ்டேஜ்ல இருக்கான். என்கிட்டயே குடுத்துட்டு போ!” என்று அவனைக் கண் காட்ட, அவனும் கண்ணை சொருகி அவள் மீது சாய்ந்திருந்தான்.

வான்மதிக்கு தான் மனதெங்கும் ஏமாற்றம் சூழ்ந்தது. ‘இஷு மட்டும் தான் வேணுமா? நான் வேணாமா…?’ என வாய் வரை வந்தாலும், அதனை கேட்க முடியாமல்,

“தொட்டில்ல படுக்க வைக்கிறேன்” என முணுமுணுத்து விட்டு, அவனை படுக்க வைக்க, அவளையே ஓர விழியில் பார்த்திருந்தவன், ‘இஷுவை மட்டும் தான் இங்க இருக்க வப்பியா? நீ இருக்க மாட்டியாடி?’ என நெஞ்சம் கேள்வியெழுப்ப, அதனை கேளாமல் “கதவை சாத்திட்டு போ!” என்றான் உத்தரவாக.

“ம்ம். எங்களுக்கு தெரியும்” என வாய்க்குள்ளேயே முனகிக் கொள்ள, ஆரவ் சிறு புன்சிரிப்புடன், “மதி…” என்று மீண்டும் அழைத்தான்.

அவள் அதே வேகத்துடன், “சொல்லுங்க ஆரவ்” என்று கேட்க, “இஷுக்கு பால் பாட்டில் எடுக்க மறந்துட்டேன். கிட்சன்ல இருக்கு எடுத்துட்டு வந்துடு.” என்றிட, விழிகள் மின்ன தலையாட்டியவள் உடனே அதனை எடுத்து வந்து கொடுத்து விட்டு, “வேற ஏதாவது வேணுமா?” எனக் கேட்டாள் கையை பிசைந்து கொண்டு.

மறுப்பாக தலையசைத்தவன், “குட் நைட்” என்று விட்டு, போர்வையை போர்த்த விழைய, ‘அவ்ளோதானா?’ என்பது போல நோக்கியவள், முகத்தை சுருக்கிக் கொண்டு நகர, “மதி” என்றழைத்தான் மறுபடியும்.

‘ஏன் கண்ணம்மான்னு கூப்பிட்டா வாய் சுளுக்கிக்குமா?’ என்றே தனக்குள்ளே திட்டியவள் திரும்பாமல் “இப்ப என்ன வேணும்?” என்றாள் கடுப்பாக.

“நான் என் அம்மான்றனால கோபத்தை காட்டாம இல்ல. என் கோபத்தை காட்ட கூட அவங்களுக்கு தகுதி இல்ல. எனக்கு உரிமையும் இல்ல. என் அதிகபட்ச கோபத்தையும், அதிகபட்ச அன்பையும் பார்க்குற தகுதியும், அதை குடுக்குற உரிமையும் என் கண்ணம்மாவை தவிர வேற யாருக்கும் கிடையாது.” என்றதில், சட்டென திரும்பியவள், வெகு அருகில் நின்றிருந்தவனை உணராது, அவன் இதழோடு இதழ் பதித்திருந்தாள்.

அவனும் இதனை எதிர்பார்க்காது விழிகளை விரிக்க, அவளும் உறைந்து கண்களை சாஸர் போல விரித்திருந்தாள்.

சில நொடிகள் அதே நிலையில் இருவரும் நிற்க, ஆரவ் அதரங்களை மெல்ல விரித்து, இதழ் முத்தத்தை தொடர, அதற்கு மேல் தாக்குப் பிடிக்க இயலாமல், மூச்சு வாங்க பின்னால் நகர்ந்தவள், அவனுக்கு முதுகு காட்டி கண்ணை மூடிக்கொள்ள, ஆரவ் வெள்ளிப்பற்கள் மினுமினுக்க உதட்டை வருடியபடி அம்முத்தத்தை எண்ணி திளைத்திருந்தான்.

கூடவே, “இது என்ன சர்ப்ரைஸ் லிப்லாக்கா?” என ஹஸ்கி குரலில் கேட்டபடி, அவள் புறம் அடி எடுத்து வைக்க, அவளோ அவன் அருகில் வருகிறான் என்று அறிந்ததுமே, வெட்கம் தாளாமல் அறையை விட்டு ஓடி இருந்தாள்.

அதில், அவன் நன்றாகவே சிரித்திருக்க, வான்மதிக்கு இன்னும் அவன் மூச்சுக்காற்று அவள் மீது பரவி இருப்பது போன்றே ஒரு பிரம்மையை கொடுத்தது.

‘சே… அப்படி ஓடி வந்துருக்க கூடாதோ.’ என தன்னையே திட்டிக்கொண்டவள், ‘அங்கேயே இருந்துருக்கலாம்… முகில் கூடவே…!’ என தலையைச் சாய்த்து கனவு கண்டபடி, தலையணையை நெஞ்சோடு கட்டிக்கொண்டாள்.

இருவரும் அதே மோனநிலையில் தான் இருந்தனர், மறுநாள் மிருணா அங்கு வரும்வரை…!

தேன் தூவும்…!
மேகா…!

ஹாய் டியர்ஸ். சாரி. கொஞ்சம் ஹெல்த் இஸ்ஸியூ. அதான், குட்டி யூடி. மேக்சிமம் நாளைக்கு ப்ரி ஃபைனல் யூடி போட்டுருவேன். அண்ட் கெட் ரெடி ஃபார் ஊட்டி ட்ரிப். குட் நைட்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
34
+1
194
+1
3
+1
7

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *

    2 Comments

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    2. Adhana ennada nalla pochenu pathrn villan vandhutan