Loading

தன் முன்னே அழுத்தமாக நின்றிருந்த வைஷாலியைப் பார்வையாலேயே எரித்தான் இந்திரஜித்.

“ப்ளீஸ் அத்தை… இதை வாங்கிக்கோங்க. சத்யாவுக்கு செய்ய வேண்டியது தான்.” கையில் அவளுக்கு போட்ட பதினைந்து பவுன் நகையை பானுரேகாவிடம் நீட்டினாள்.

அவர் வாங்காமல் இந்திரஜித்தைப் பார்க்க, அவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது.

“வைஷு… டென்ஷன் பண்ணாத. உங்கிட்ட இதெல்லாம் நாங்க கேட்டோமா?” என எரிச்சலுற்றவனிடம்,

“இது முறை தான இந்தர். இப்போ இல்லைன்னாலும், நான் வேலைக்கு போய் இதோட இன்னும் கொஞ்சம் நகை வாங்கி செய்யணும்ன்னு தான் நினைச்சுருந்தேன். இப்ப வர்ற சொந்தக்காரங்க அவளை தப்பா பேசிட கூடாதுல. அதான் கைல இருக்கறதை கொடுக்குறேன். நான் செஞ்ச தப்புக்கு அவ அவமானப்பட வேணாம். ப்ளீஸ் வேணாம்ன்னு சொல்லாம வாங்கிக்க.” என்றாள் கெஞ்சல் குரலில்.

பாலகிருஷ்ணனோ, “இப்ப நீ எங்களை அவமானப்படுத்துற அது பரவாயில்லையா?” என முறைப்புடன் கேட்க,

அதில் பதறியவள், “அப்படிலாம் சொல்லாதீங்க மாமா. எப்படியும் அவள் கல்யாணத்துக்கு போட வேண்டியது தான.” என்று தயங்கிட,

அவளை அழுத்தமாக ஏறிட்ட பானுரேகா, “இந்தர்… வாங்கிக்க.” என்றார்.

“ப்ச், அம்மா… அவ தான் பைத்தியம் மாதிரி உளறிட்டு இருக்கான்னா…” என தாயை அதிருப்தியாய் பார்க்க, அவர் வாங்கும் படி கண்ணசைத்ததில், கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, அவளிடம் இருந்து நகைப்பெட்டியை வெடுக்கென வாங்கியவன்,

“இனிமே என் மூஞ்சிலயே முழிக்காத…” என்று கடிந்து விட்டு சென்றான்.

தோழனின் கோபம் கண்டு, அவளுக்கு கண்ணில் நீர் நிறைந்தது. யாரையும் பாராமல் அறைக்குள் புகுந்தவளை, எழிலின் பார்வை தாக்கியது.

அவனிடம் சம்மதம் கூட கேளாமல் கொடுத்து விட்டாள். கேட்கவும் தோன்றவில்லை. அவனும் அதனை எதிர்பார்க்கவில்லை.

விறுவிறுவென அவனது பெட்டியை திறந்தவன், வேறொரு நகைப்பெட்டியை எடுத்து, அவளிடம் நீட்டினான்.

அவள் புருவம் சுருக்கி பார்க்க, “இது என் மாமா பொண்ணுங்களுக்காக, நான் வேலைக்கு போக ஆரம்பிச்ச நாள்ல இருந்து சேர்த்து வச்சது. உனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சப்பவே கொஞ்சம் சேர்த்துருந்தேன். உன் கல்யாணத்தப்ப குடுக்கலாம்ன்னு நினைச்சேன். முன்னாடியே குடுத்தா, எப்படியும் அத்தை மறுத்துடுவாங்க. அப்பறம் தான், ஏதேதோ குழப்பம் நடந்து, சத்யாவுக்கும் எனக்கும் பிரச்சனை ஆகி…” என பெருமூச்சை வெளியிட்டவன்,

‘அதுக்கு அப்பறமும், என்னால சேர்க்குறதை நிறுத்த முடியல. நியாயமா இது உங்க ரெண்டு பேருக்கும் சேர வேண்டியது தான். என்கிட்ட கேட்டுருந்தா, இதோட சேர்த்து குடுக்க சொல்லிருப்பேன்.” என்றவனுக்கு, சிறு ஆதங்கம் தான்.

வைஷாலி அவனை திகைத்துப் பார்த்திட, “சரி பரவாயில்ல. இந்தர் கொஞ்சம் நல்ல மூட்ல இருக்கும் போது, நேரம் பார்த்து குடுத்துடுறேன். இப்போ போய் குடுத்தா மொத்த குடும்பமும் அடிக்க வந்துடுவாங்க…” என்றதில்,

“நீ எப்ப வந்து குடுத்தாலும் அடி தான் விழும்…” என்ற இந்திரஜித்தின் குரலில் திரும்பினான்.

வைஷாலியின் கண்ணீரைக் கண்டு வருத்தமாகிப் போக, தான் வேறு திட்டிவிட்டு வந்ததில், மனம் கேளாமல், அவளைப் பார்க்க வந்தவனுக்கு, தலையில் அடித்துக்கொள்ளலாம் போல இருந்தது.

“ இது மாமா வீட்ல செய்ற சீர்… வேணாம்ன்னு சொல்ல கூடாது” என எழில் மடக்கிட,  “என்னவோ பண்ணி தொலைங்க” என்று சற்று  கோபத்துடனே கூறிய இந்திரஜித், ஏதோ யோசனைத் தோன்ற அப்படியே நின்றான்.

“இப்போ என்ன இதை நீ குடுக்கணும் அவ்ளோ தான…” என ராகம் பாடியவன்,

“நீரஜ்க்கு பிறந்த வீட்டு சைட்ல எந்த ரிலேட்டிவ்ஸ்ஸும் இல்ல. அவளோட அப்பாவே வருவாறான்னு தெரியல.  அவளுக்காக நகை எல்லாம் நான் வாங்கி தான் வச்சு இருந்தேன். ஆனா, கண்டிப்பா அதை எல்லாம் கொடுத்தா, என்னை செருப்பாலேயே அடிப்பா. நான் குடுத்தா, அவளுக்கு காம்ப்ளக்ஸ் தான் வரும். நீ அவளுக்கு அண்ணனா ரிசப்ஷன்ல நின்னு, சத்யாவுக்கு குடுக்க நினைச்சதை அவளுக்கு குடுத்தா, அவளுக்கும் ஒரு சொந்தம் கிடைச்ச மாதிரி இருக்கும்.” என்றான் தீவிரமாக.

“நீ சொன்னாலும் சொல்லலைன்னாலும் நான் அவளை  தங்கச்சியா தான் நினைக்கிறேன் இந்தர். சிறப்பா பண்ணிடலாம். ஓகே வா…” என்ற எழிலுக்கு இந்திரஜித்தை எண்ணி வியப்பே எழுந்தது.

சொந்த மாமா பெண்களுக்காக தான் சேர்த்தது சொந்தத்தின் மீதிருந்த பாசத்திற்காக. ஆனால், எந்த உறவும் இல்லாமல், நட்பின் அடிப்படையில் நீரஜாவிற்காக இத்தனை யோசிப்பபவனின் மீது மதிப்பு கூடியது.

அவர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ரிசப்ஷன் நாளும் வந்தது.

முந்தைய நாளே, நெருங்கிய உறவினர்கள் சிலர் வீட்டிற்கு வந்து விட, சத்யரூபாவும், வைஷாலியும் பம்பரமாக சுழன்று வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டனர். மறந்தும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை.

இதற்கிடையில், இந்திரஜித் மட்டும் சத்யரூபாவின் ஊருக்கு சென்று, அவளது சொந்தங்களை அழைத்து விட்டு, கூடவே எழிலின் வீட்டிற்கும் சென்றான்.

அங்கு அவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்றும் அறிய விழைந்தவனை, அவர்கள் கடுகடுப்புடன் வரவேற்றிட, அவனும் பட்டும் படாமல் சொல்லி விட்டு வந்தான். அப்படியே சாவித்ரி பாட்டியையும் கையோடு அழைத்து வந்தான்.

அவருக்கு தான், தர்மசங்கடமாக இருந்தது. இத்தனைக்கும் அவர்கள் யாரும் அவருக்கு சொந்தம் கூட இல்லையே. சில வருடங்களுக்கு முன்பு, கணவனையும் ஒரே மகனையும் விபத்தில் பறிகொடுத்தவருக்கு, பழக்கம் காரணமாக தாமரை அடைக்கலம் கொடுத்தார்.

சத்யரூபாவும், அவரை சொந்த பாட்டியாகவே உடன் வைத்துக்கொண்டாலும், இப்போது அவர்களைத் திருமணம் செய்து கொடுத்த பின்னும் அவர்கள் பின்னே வருவது ஒப்பவில்லை.

ஆனால், மற்றவர்கள் அவரை வேற்றாளாக யோசிக்கவே இல்லை.

பானுரேகா, “ஏன்மா… அப்பவே எங்க கூட வந்து இருக்கலாம்ல. அங்க தனியா இருந்து என்ன செய்வீங்க. இங்க இருந்து உங்க பேரன், பேத்திகளுக்கு நல்ல புத்தி சொல்லுங்க.” என கண்டிப்பாகவே கூறிட, சாவித்ரி சிறிதாய் புன்னகைத்தார்.

அவரைக் கண்டதும், சத்யரூபா ஓடி வந்து, “ஆயா” எனக் கட்டிக்கொள்ள, அருகில் நின்ற இந்திரஜித் தான் பெருமூச்சு விட்டான்.

அதில் பார்வையாலேயே என்ன என வினவியவளிடம், “என்னை கட்டிப்பிடிக்கல…” என சைகையில் கேட்க, அவள் திருதிருவென விழித்தாள்.

நடு கூடத்தில் நின்று கொண்டு, அத்தனை பேர் முன்னிலையிலும் என்ன பேசுகிறான்… என்றே வெட்கம் ஆட்டுவித்தது.

அதனை மறைத்து போலி முறைப்பை பரிசளிக்க, வைஷாலியும் வந்து சாவித்ரியுடன் இணைந்து கொண்டாள்.

வந்த சொந்தங்கள் தான், நீரஜாவை பார்த்து விட்டு, தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர்.

“என்னமோ, இந்த பையனுக்கு ஏன் தான் புத்தி இப்படி போச்சோ.” சித்தி முறை பெண் ஒருவர் சலிக்க,

“பானு பிள்ளைங்களை ரொம்ப கண்டிச்சு வைக்கும் போதே நினைச்சேன். இப்படி தான் சொல்லு பேச்சு கேட்காம போவாங்கன்னு.” என கூட சேர்ந்து சலித்தார் அத்தை முறையானவர்.

“உடம்பு நல்லா இருக்குற பொண்ண கல்யாணம் பண்ணுனா தான குழந்தையும் ஆரோக்கியமா பிறக்கும்.”

“காதல் கண்றாவின்னு அவன் தான் உளறுறான்னா, பெத்தவங்க தான அறிவுரை சொல்லி, அந்த பொண்ண வீட்டுக்கு அனுப்பி வைக்கணும். இப்படியா இழுத்துட்டு வந்தவளை வீட்டுக்குள்ள வச்சு இருக்குறது…”

முணுமுணுவென அனைவரின் வாயும் பேசிக்கொண்டே இருந்தது.

இதில் வைஷாலியும் தப்பவில்லை. “கல்யாணத்து அன்னைக்கு ஓடிப்போனவ தான இவ. அக்காவே குடும்பத்தை மதிக்காம ஓடிகாலியா இருக்கா, தங்கச்சிக்காரி எத்தனை நாளைக்கு இந்த வீட்ல தாங்குவாளோ. அதுவும் பானுவோட குணத்துக்கு அவளால ஈடு கொடுக்கவே முடியாது.” என சத்யரூபாவை இழுத்து வைத்தனர்.

அனைத்தும் காதில் கேட்டாலும், தமக்கையும் தங்கையும் அமைதியுடன் வேலையைத் தொடர்ந்தனர்.

நீரஜாவை மட்டும் அறையை விட்டு வெளியில் வரவே விடவில்லை. ஏற்கனவே, சிறு குழப்பத்தில் தவிப்பவளுக்கு, இப்பேச்சுக்கள் எல்லாம் மனக்கஷ்டத்தைக் கொடுக்கும்.

“சத்யா… நான் ரெடி பண்ண சொன்னதை பண்ணிட்டியா?” எப்போதும் போல அதிகாரமாக பானுரேகா கேட்க,

“எல்லாம் ரெடி தான் அத்தை. நீங்க ஒரு தடவை பார்த்துடுங்க.” என்றதும், அதனைப் பார்த்தவருக்கு சிறு அதிருப்தி.

வரும் சொந்தங்களுக்கு தேங்காய் பழம் கொடுப்பது அவர்களின் வழக்கம். அதனை சிறு சிறு பையாக போட்டு வைக்க சொல்லி இருந்தார். அவளோ, அதற்கு பதிலாக சிறு தாம்பூலத் தட்டில் பழத்தையும் தேங்காயையும் அடுக்கி, அதன் அருகிலேயே ஒரு பையையும் வைத்திருந்தாள்.

“ஏன் சத்யா இதை இப்படி வச்சு இருக்க?” அவர் கேட்டதும்,

“எல்லாருக்கும் பையில அப்படியே தூக்கி குடுத்தா நல்லா இருக்காது அத்தை. தட்டோட குடுத்தா அவங்களுக்கும் மரியாதையா இருக்கும். அதுக்கு அப்பறம் அவங்க பைலை போட்டுக்கிறட்டுமேன்னு இப்படியே வச்சுட்டேன்” என்றாள் சத்யரூபா.

“ப்ச்… தட்டோட கொடுக்குறேன் பேர்வழின்னு, யாரையாவது விட்டுட்டா தப்பாகிடும்.” பானுரேகா கண்டித்ததில்,

“அதான் நாங்க இருக்கோம்ல அத்தை…” என வைஷாலியின் பெயரைக் கூறாமல் அவளை இணைத்துக் கொண்டவள், “நாங்க கரெக்ட்டா உங்களுக்கு எடுத்து குடுத்துடுறோம். இதை போட்டோல பார்க்கவும் அழகா இருக்கும் அத்தை…” என வீம்பு பிடித்தாள்.

“என்னமோ பண்ணு…” என அவளை முறைத்து விட்டு பானுரேகா நகன்று விட, சத்யரூபா சிறு சிரிப்புடன் அடுத்த வேலையைத் தொடர்ந்தாள்.

வீட்டினருக்கு, இவர்களது சிறு சிறு வாதங்கள் பழகி விட்டது. சத்யா சில விஷயத்தில் முரண்டு பிடிப்பதும், பானுரேகா அவளை திட்டுவதும் இயல்பாகி போனது. ஆனால், வந்தவர்களோ, அங்கு ஒரு பெரிய சண்டைக்காட்சி இருக்கிறது என ஆர்வமாகப் பார்த்தனர்.

“இப்ப தான ஆரம்பிச்சு இருக்கு… ரிசப்ஷன் முடியிறதுக்குள்ள ஒரு சண்டை இருக்கு மாமியார் மருமகளுக்குள்ள” என தங்களுக்குள் பேசி தீர்த்துக்கொண்டனர் அவர்களைப் பற்றி அறியாமல்.

ஆனால், அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை என்ற ரீதியில் பானுரேகா ஒவ்வொரு விஷயத்திற்கும் சத்யாவிடம் அபிப்ராயம் கேட்பதும், அவள் அனைத்திற்கும் பானுரேகாவிடம் வந்து நிற்பதும், பார்ப்பவர்களை எரிய வைத்தது. கூடவே வியக்கவும் வைத்தது.

வைஷாலி தான், “அத்தை… நீங்க டென்சன் ஆகாதீங்க. முதல்ல இதை குடிச்சுட்டு கொஞ்சம் நேரம் உட்கார்ந்து வந்தவங்ககிட்ட பேசிட்டு இருங்க…” என்றவளுக்கு, அவர் காலையில் இருந்து சிறிது கூட அமரவில்லை என்ற கவலை.

அவரோ, அவளிடம் இருந்து பழச்சாறை வாங்கி விட்டு, “உட்கார்ந்து பேசுனா நமக்குள்ள சண்டை இழுத்து விட்டு, உன்னை உன் ஊருக்கே ஓட விட்டு, நீரஜாவை வீட்டை விட்டே போக வச்சுடுவாங்க பரவாயில்லையா?” எனக் குரலைத் தாழ்த்திக்கேட்க,

அதில் விழித்த வைஷாலி, “அய்யயோ… நான் இந்த பக்கமே வரல…” என்று அடுக்களையிலேயே தஞ்சம் புகுந்து விட்டாள்.

அங்கேயே இருக்க இயலாதே, வந்தவர்களுக்கு பானம் வழங்குவது அவள் பொறுப்பு. அதனால், மீண்டும் காபி கோப்பைகளை தட்டில் நிரப்பிக்கொண்டு வெளியில் வரும் போதே, எழிலழகன் அங்கு வந்து விட்டான்.

அவனைக் கண்டதும், சட்டென விழிகளை தாழ்த்திக் கொண்டவள், அவன் மீது சேறாக இருந்ததைக் கண்டு, நிமிர்ந்து பார்த்தாள்.

நெற்றியிலும் சிறு காயம். காதல் கொண்ட மனது, ஒரு கணத்தில் துடித்து விட, “எ… என்ன ஆச்சு?” எனக் கேட்டாள்.

“அது… ஒண்ணும் இல்ல. கடைக்கு போனேன். வண்டி ஸ்கிட் ஆகிடுச்சு.” என அவளைப் பாராமல் பொய்யுரைத்தவன்,

“கிச்சனுக்கு பின்னாடி பாத்ரூம் இருக்குல்ல… அங்க போய் க்ளீன் பண்ணிட்டு வரேன். வாசல்ல நின்னா, எல்லாருக்கும் பதில் சொல்லணும்.” என அவசரமாக சென்றான்.

சமையலறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சத்யரூபாவும் எழிலைக் கண்டு அதிர்ந்து விட, வைஷாலிக்கும் இதயம் அதிவேகமாகத் துடித்தது.

வேகமாக அறைக்குள் சென்று அவனுக்கு, மாற்று உடையும், துவாலையும் எடுத்தவள், அவசரத்திற்கு வைத்திருந்த மருந்தையும் எடுத்துக்கொண்டு மீண்டும், அடுக்களைக்கே சென்றாள்.

அங்கு சத்யா தான், புருவம் சுருக்கி, “என்ன ஆச்சு?” என வைஷாலியை பாராமல் வினவ,

அவளோ பதற்றத்துடன், “வண்டில இருந்து விழுந்துட்டாராம்.” என்றாள்.

சத்யாவிற்கு தான் ஏதோ உறுத்தியது. புல்லட்டையே இரண்டு கைகளையும் எடுத்து விட்டு ஓட்டும் அளவு, இலாவகமாக வண்டி ஓட்டுபவனாகிற்றே.

தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வந்த எழிலிடம், உடையை நீட்டியவள், “அங்கேயே மாத்திட்டு வாங்க.” எனக் கொடுக்க,

அவன் இரு பெண்களையும் ஒரு முறை பார்த்து விட்டு, “இதை யார்கிட்டயும் சொல்ல வேணாம். பங்க்ஷன் நேரத்துல அபசகுணம்ன்னு புரளியை கிளப்பிடுவாங்க.” என எச்சரித்து விட்டு, சத்யாவைப் பார்த்து “முக்கியமா உன் புருஷன்காரங்ககிட்ட சொல்லிடாத…” என்றான்.

அதில் திகைத்தவள், “அவரு இல்லாம நீ மட்டும் எங்க போன?” எனக் கேட்டு விட, வைஷாலியும் அதே கேள்வியுடன் கணவனை நோக்கினாள்.

இருவரின் பார்வையையும் தவிர்த்தவன், “கொஞ்சம் திங்ஸ் வாங்க வேண்டியது இருந்துச்சு. இந்தர் வேற வேலையா இருந்தான். அதான் நான் போய் வாங்கிட்டு வரேன்னு அவன் வண்டியை எடுத்துட்டு போனேன்.” என்றதும்,

வைஷாலி, “வண்டில பிரேக் பிடிக்கலையா? அவன் எல்லாத்தையும் சரியா தான வச்சு இருப்பான்.” என அவசரமாக கேட்டு விட்டு நாக்கை கடித்துக்கொண்டாள்.

இந்திரஜித்தின் அனுமதி இல்லாமல், அவர்களின் உறவைப் பற்றி கூற அவளுக்கு விருப்பமில்லை. சொல்வதில் அவளுக்கொன்றும் பிரச்சனை இல்லை தான்… ஆனால், நடந்த நாடகம் அனைத்திற்கும் காரணம் அவனென்று தெரிந்தால், தனது தங்கை சாமி ஆடிவிடுவாள் என்பது மட்டும் சர்வ நிச்சயம்.

தான் கூறியதை சத்யா கேட்டிருப்பாளோ என அரண்டு போனவள், மெல்ல திரும்பி அவளைப் பார்க்க, நல்லவேளையாக அவள் ஏதோ யோசனையில் மூழ்கி இருந்தாள்.

அதில் கண்ணை மூடி பெருமூச்சு விட்டுக்கொண்டதில், எழில் தான் எழுந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு, “ரிசப்ஷன் முடியிற வரை எதையாவது உளறி வச்சுடாத. அப்பறம் உன் தங்கச்சி உனக்கும் உன் ப்ரெண்டுக்கும் தனியா விழா எடுத்து சிறப்பிப்பா.” என அடிக்குரலில் நக்கலாகக் கூறிய தொனியில், அவளுக்கும் லேசாக புன்னகை மலர்ந்தது.

“எழில்…” என அழைத்தபடி இந்தர் வருவது தெரிந்து அவசரமாக குளியலறைக்குள் புகுந்து கொண்டான் எழிலழகன்.

“ஓய் தியாக்குட்டி உன் மாமன்காரனை பார்த்தியா என்ன?” வியர்வை வழிய வெளிவேலைகளை முடித்து விட்டு வந்த கணவனிடம் பதில் கூற தெரியாமல் விழித்தாள்.

வைஷாலி தான், “அவரு… வெளில தான் போயிருப்பாரு இந்தர்” என சமாளிக்க,

“வெளில தான் போனான். ஆனா வண்டி இருக்கே. அவனை காணோம். சரி நான் பாத்துக்குறேன்.” என நகர போனவன், அடுப்பு மேடையில் காபி கப் இருந்ததை கண்டு,

“காலைல இருந்து அண்டா அண்டாவா காபி போடுறாளுகளே தவிர ஒரு கப்பையாச்சு நம்ம கண்ணுல காட்டுறாளுகளா.” என புலம்பி விட்டு, அவனே வந்து எடுத்துக்கொண்டான்.

அங்கேயே நிறுத்தி நிதானமாக குடிக்க தொடங்கி விட்டு, “காபி யார் போட்டா…” என இருவரையும் பார்த்து கேட்க, வைஷாலி “நான் தான்…” என்றாள்.

“அப்பாடா… ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு தான் நல்ல காபி குடிக்கிறேன்” என மனையாளை ஓரக்கண்ணில் பார்த்தபடி வாரி, அவளது முறைப்பை பரிசாக வாங்கிக்கொண்டான்.

வைஷாலி தான், பின்பக்கம் இருந்த குளியலறையை ஒரு முறை தவிப்புடன் பார்த்து விட்டு, “ஏன் இப்படி ஹீட்ல நின்னு குடிக்கிற இந்தர். வெளில உட்காந்து ரிலாக்ஸ்சா குடியேன்…” என சமாளிக்க,

“வெளில பாத்தீல, புறணி பேக்டரியே அங்க தான் உட்காந்து இருக்கு. என் அத்தை சித்தின்னு ஒரு பட்டாளமே, கடிச்சு குதற நேரம் பார்த்துட்டு இருக்கு. அவங்க பக்கத்துல நான் உட்காந்து காபி குடிக்கிறதுக்கு, ஒரு டம்பளர் விஷத்தை குடிச்சுடலாம்.” என  உதட்டைப் பிதுக்கியவன், வைஷாலியின் கையிலிருந்து மருந்தைக் கண்டு,

“இது என்ன கைல மருந்து வச்சுருக்க. யாருக்கு?” எனக் கேட்டபடி காபியை அருந்தினான்.

அவளோ பார்வையை பின்பக்கம் செலுத்தியவாறு, “ரூ… ரூம்ல இருந்துச்சு. அதான் எடுத்துட்டு வந்து இங்க வைக்கலாம்ன்னு…” என சமாளிக்க முற்பட,

“உனக்கு பொய்யெல்லாம் அவ்ளோ சரளமா பேச தெரியல வைஷு. உண்மையை பேசவே திணறுவ… சரளமா பேச வந்துருந்தா தான், இந்நேரம் எழிலை கரெக்ட் பண்ணி, வீட்லயே அவனை லவ் பண்றதை சொல்லிருப்பியே. எதுக்கு இந்த வீண் முயற்சி…” என நக்கலாக தோழியை வாரினான்.

அதில் அவள் முகம் சுருக்க, இந்திரஜித் தான், அவளை முறைத்தபடி, “டேய்… எவ்ளோ நேரம் பாத்ரூம்க்குள்ள தம் கட்டி நிப்ப. வெளில வா!” என குரல் கொடுத்தான்.

கண்ணை மூடித் திறந்து நொந்த எழில், தயக்கத்துடன் உடையை மாற்றி விட்டு வெளியில் வர, அவன் நெற்றியில் இருந்த காயத்தை ஆராய்ந்தான்.

இப்போது தடித்து சிவந்திருந்தது.

கோபத்தையும் இழுத்துப் பிடிக்க இயலாமல், அவனது காயத்தை புறக்கணிக்கவும் இயலாமல் தவித்த வைஷாலிக்கு, கரங்கள் பரபரத்தது.

“என்ன ஆச்சு?” இந்திரஜித் கூர்மையுடன் வினவ,

“வண்டில இருந்து விழுந்துட்டேன்டா. வேற ஒண்ணும் இல்ல” என்றான்.

“ஓஹோ. ஆனா, வண்டில சின்ன கீறல் கூட இல்ல…” கண்ணை சுருக்கி கடினத்துடன் கேட்ட இந்திரஜித், “உண்மையை சொல்லு எழில்!” என்றான் அதட்டலாக.

பெருமூச்சு விட்டவன், “முதல்ல ரிசப்ஷன் முடியட்டும் இந்தர். இப்போ நின்னு பேச நேரம் இல்ல. நீ போய் வந்தவங்களை கவனி. மண்டபத்துக்கு வேற போகணும். லேட் ஆச்சு…” என அவனை திசை திருப்ப முயன்றான்.

“இவ்ளோ டயலாக் பேசுனதுக்கு, என்ன ஆச்சுன்னு ஒரே வரில சொல்லி இருக்கலாம். நீ சொல்லாம இங்க இருந்து நகர போறது இல்ல.” என்று பிடிவாதம் பிடிக்க,

“ப்ச்… ஏன்டா நீ வேற.” என சலித்தவன், “யாருன்னு தெரியல என்னை அடிக்க வந்தாங்க. நான் தப்பிச்சு வந்துட்டேன்.” என்றதும் மூவருக்குமே பதறி விட்டது.

வைஷாலியோ, “இங்க யாருக்கு உங்க மேல கோபம் அத்தான். அவங்க யாருன்னு பார்த்தீங்களா?” என பரபரக்க, வெகுநாட்கள் கழித்து கேட்ட, அவளது அழைப்பில், மனம் சற்று நிம்மதி அடைந்தது.

“தெரியல. வீட்டுக்கு உசுரோட வந்தா போதும்ன்னு ஆகிடுச்சு.” என கேலி மிதக்க கூறியதில், தன்னை அறியாமல் விழி கலங்கி விட்டது அவளுக்கு.

சத்யரூபா அதிர்ந்து இந்திரஜித்தைப் பார்க்க, அவன் அவளை பார்வையாலேயே சமன்செய்து விட்டு, “யாருன்னு கண்டுபிடிக்கலாம் எழில். இனிமே தனியா வெளிய போகாத.” என எச்சரித்தவன், இன்னும் அவனது தந்தையின் முழு அவதாரத்தைப் பற்றிக் கூறவில்லை.

அதற்குள், பானுரேகா அவனை அழைப்பது உணர்ந்து, “முதல்ல காயத்துக்கு மருந்து போடு.” என்று விட்டு நகர, அவன் வைஷாலியின் கண்கள் தாங்கிய கண்ணீரை அமைதியாக ஏறிட்டான்.

அவளும், அவன் காயத்தையே பார்வையால் வருடி இருக்க, எழிலிடம் மேலும் விவரம் கேட்க எண்ணிய சத்யரூபா, அவர்களின் பார்வை பரிமாற்றத்தைக் கண்டு விட்டு, அமைதியாக வெளியேறினாள்.

சில நிமிடங்கள் கழித்து, வைஷாலி தலையைத் தாழ்த்திக்கொள்ள, அவனும் அங்கிருந்து நகர எத்தனித்தான்.

கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்ட வைஷாலி, “ஹாஸ்பிடல் போகலாமா?” எனக் கேட்டாள்.

“வேணாம். கொஞ்ச நேரத்துல சரி ஆகிடும்.” என்றவனிடம்,

“மருந்தாவது போட்டுக்கோங்க.: என கையில் இருந்த மருந்தை பஞ்சில் நனைத்து, அவன் நெற்றியில் வைத்தாள்.

“ஸ்ஸ்…” வலியில் அவன் முகத்தை பின்னால் சரித்துக் கொள்ள, அவளுக்கு தான் நிலை கொள்ளவில்லை.

மீண்டும், மருந்திட்டு முடித்தவள், “வேற எங்கயும் அடி படலைல.” எனக் கேட்டாள் அவனை ஆராய்ந்தபடி.

“இல்ல…” என வேகமாக கூறியவனை மனம் நம்ப மறுத்தது.

“நிஜமா இல்லைல?” விழிகளை உருட்டி அவள் கேட்ட விதத்தில், மென்புன்னகை சிந்தியவன், “நிஜமா இல்லடி…” என்றான்.

அதில் நிம்மதியானாலும், நெஞ்சத்தை எதுவோ அரித்துக் கொண்டே இருந்தது. அவளது வதனம் தாங்கிய குழப்பத்தை ஊடுருவியவன், “நீ போய் கிளம்பு வைஷு. நீரஜாவையும் ரெடி பண்ணு. போ! லேட் ஆகுது பாரு.” என அனுப்பி வைக்க, அவளும் அவனை விட்டு விலக இயலா மனநிலையுடன் அங்கிருந்து நகர்ந்தாள்.

மீண்டும் குளியலறைக்குள் சென்ற எழிலழகன், சட்டையைக் கழற்றி விட்டு, கண்ணாடி வழியே தன்னைப் பார்த்துக்கொண்டான்.

கத்திகளால் உடலில் ஆங்காங்கே கீறப்பட்டிருந்தது. ‘யாரு இவனுங்க… என்னை ஏன் கொலை பண்ண வந்தானுங்க…’ என்ற புதிர் புரியாமலே, அதற்கும் மருந்திட்டான்.

இந்திரஜித்தின் பின்னாலேயே வந்த சத்யரூபா, “ஜித்து… மாமாவை யாரு அடிக்க வந்துருப்பா. அவனோட அப்பாவா இருக்குமோ?” ஐயத்துடன் அவள் விளிக்க,

“நீ உன் மாமா பத்தி சொன்னதுமே, நான் ஒரு போலீஸ் கம்பளைண்ட் குடுத்து வச்சுருந்தேன். யாரு என்னன்னு விசாரிக்க சொல்லலாம் தியா.” என்றதும்,

“என்னமோ, எனக்கு மனசே சரி இல்ல ஜித்து. எத்தனை நியூஸ் பார்த்துருப்போம், ஆணவக்கொலை அது இதுன்னு… அதை நினைச்சாலே பயமா இருக்கு.” என வாடலுடன் கூறிட, அவளை நெருங்கி, கன்னத்தைத் தாங்கியவன்,

“ரொம்ப யோசிக்காத தியாக்குட்டி. அப்படி எல்லாம் எதுவும் நடக்காது. ஆணவக்கொலை பண்றவங்களா இருந்தா, வைஷுவும் எழிலும் வீட்ல இருக்கும் போதே பண்ணிருப்பாங்கள்ல…” என்றான் சமாதானமாக.

“யாருக்கு தெரியும், நேரம் எதிர்பார்த்துட்டு இருந்துருப்பாங்க. உடனே ஏதாவது பண்ணிருந்தா, அவங்க மேல நேரடியா சந்தேகம் வந்துருக்குமே.” ஆதங்கத்துடன் கூறியவளிடம், “சில் தியாக்குட்டி. இதை நான் பாத்துக்குறேன். நீ ப்ரீயா விடு. மண்டபத்துக்கு போகணும்ல. வா ரெடி ஆகலாம்…” என அவளை அறைக்குள் அழைத்தான்.

“ஹான்… ரெடி ஆகலாமா? நீங்க வெளில இருங்க. நான் ரெடி ஆகிட்டு கூப்புடுறேன்.” என்றிட,

“லேட் ஆச்சுடி. சேர்ந்து ரெடி ஆனா, சீக்கிரம் கிளம்பலாம்ல.” என குறும்பு மின்ன கூறினான்.

புன்னகைக்கத் துடித்த இதழ்களை அடக்கிய சத்யரூபா, “பிச்சுடுவேன் ஜித்து…” என விரல் நீட்டி எச்சரிக்க,

“நானும் பிச்சுடுவேன்டி… லிப்ஸ…” ஹஸ்கி குரலில் கூறியபடி அவளை இன்னும் நெருங்க, அவளோ வெட்கம் தாங்க முடியாமல், அறைக்குள் புகுந்து கதவை அடைத்துக் கொண்டாள்.

“ஏய் கதவை திறடி.” இந்திரஜித் கதவை முறைத்து அழைக்க,

“முடியாது. டிரஸ் மாத்திட்டு வரேன். அதுவரை வெளிலயே நில்லுங்க” என்றாள் சிணுங்களாக.

“அதுவரை என்ன பண்றது? சரி ஏதாச்சு பேசு. டைம் பாஸ் ஆகும்.” என கதவில் சாய்ந்து நின்று கொள்ள,

அவளிடம் பதிலில்லை. “என்ன தியாக்குட்டி பண்ற?” இப்போது அவன் சிணுங்கினான்.

“இருங்க ஜித்து. புடவை மடிப்பு வச்சுட்டு இருக்கேன்.” என்றதும்,

“நான் ஹெல்ப் பண்ணட்டா…” என்றான் மர்மப்புன்னகையுடன்.

“நானே வச்சுக்குவேன்.” புன்னகை மிதக்க, சத்யரூபா முனகலாக கூற,

“நானும் வச்சுக்குறேன்… உன்ன…” என சீண்டி சிவக்க வைத்தவன், நேரப்போகும் ஆப்பு அறியாமல் காதல் மழையில் நனைந்து கொண்டிருந்தான்.

அலைபாயும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
22
+1
132
+1
3
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment