Loading

தாயின் மறைவு ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து சிறிது சிறிதாக வெளியில் வந்து கொண்டிருந்தாள் சத்யரூபா. முழுதாக இல்லையென்றாலும், இந்திரஜித் உடன் இருக்கும் போது, மற்றவை தானாக மறந்து போவது தான் அதிசயம் அவளுக்கு.

சத்யரூபாவின் மனதில் இடம் பிடித்து விட்டே, தன் காதலை உரைக்க வேண்டும் என்றெண்ணி இருந்தவனுக்கு, இப்போது மனதிலிருக்கும் காதலை உரைக்க இயலா சங்கட நிலை. புதிதாய் முளைத்த பயமும் ஒரு காரணம்.

எல்லாம், சத்யரூபாவின் சுடு வார்த்தைகள் மீது தான். கோபத்தில் தன் காதலைத் தவறாக பேசி விட்டால், நிச்சயம் அது அவனைக் காயப்படுத்தும்.

எப்போதும் அனைத்து விஷயங்களையும் பளிச்சென பேசுபவனுக்கு, முதன் முறை காதலைக் கூறவே தயக்கம் ஏற்பட்டதில், தன் மீதே கோபம் எழுந்தது.

‘இது என்ன புது பழக்கம் இந்தர்… உன் கேரக்டர் இது கிடையாது…’ என பலமுறை தன்னைப் பலப்படுத்திக்க முயன்றாலும், மனையாளின் சிறு புன்னகை கூட, அவனை பலவீனமாக்குவதே உண்மை!

அதற்காக நடந்த குழப்பங்களுக்கான காரணத்தை அவளிடம் கூறமால், அவளுடன் ஒன்றவும் இயலவில்லை.

இவை அனைத்தையும் மனதில் போட்டு புதைத்து கொண்டவனோ, வெளியில் எப்போதும் போல குறும்புடன் தான் வளைய வந்தான்.

இதில், சிரஞ்சீவியின் ரிசப்ஷன் வேலை இழுக்க, அதனை சிரத்தையாக செய்தான்.

கூடவே, இந்திரஜித்திற்கும் சத்யரூபாவிற்கு சேர்த்து ரிசப்ஷன் போல வைக்கலாமா என பாலகிருஷணன் கேட்க, இந்திரஜித் மறுத்து விட்டான்.

சத்யரூபாவிற்கும் அதில் பிடித்தமில்லை என்பது அவள் முகத்திலேயே தெரிய, அதனை பார்வையால் அளந்தான்.

“வேணாம்ப்பா. எங்க கல்யாணம் எல்லார் முன்னாடியும் தான நடந்துச்சு. வேணும்ன்னா, எழிலுக்கும் வைஷுக்கும் வைக்கலாம்…” என்றதில், அமைதியாக உண்டு கொண்டிருந்த வைஷாலி நிமிர்ந்து முறைத்தாள்.

எழிலோ, அந்த வீட்டின் விதிமுறைகளை பார்த்து விட்டு ஏற்கனவே நொந்து போயிருந்தான்.

அவன் அந்த வீட்டிற்கு வந்த உடனேயே, சிரஞ்சீவியும் இந்திரஜித்தும் ஒரு முழு நீள தாளை நீட்டினர்.

அதனை சந்தேகமாக பார்த்த எழில், “இது என்னடா, சூப்பர் மார்க்கெட் பில் சைசுக்கு இருக்கு… இங்க தங்குறதுக்கு, வாடகை எதுவும் போட்டு இருக்கீங்களா?” எனக் கேட்க,

இந்திரஜித்தோ, “சே சே… பில் எல்லாம் தர வேணாம். கொஞ்சம் டர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் மட்டும் இருக்கு.” என்று சிரித்து வைக்க, குழம்பியபடி அதனை வாங்கி ப்படித்தவனுக்கு மயக்கம் வராத குறை தான்.

“காலை சாப்பாடு எட்டு மணியா? அந்த நேரத்துல சாப்பிட்டா எனக்கு வாமிட் வரும் டா” என எழில் முகத்தை சுளிக்க,

சிரஞ்சீவியோ, “அப்போ சாப்பிடாம இருந்துக்க…” என்று தம்பிக்கு ஹைஃபை கொடுத்துக்கொண்டான்.

அவர்களை முறைத்து விட்டு மேலும் படித்தான் எழிலழகன்.

“வெளில சாப்பிட கூடாது, ஒன்பது மணிக்கு மேல வெளில போக கூடாது, எல்லாரும் சாப்பிடும் போதே, சேர்ந்து சாப்பிடணும். பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் வச்ச சாப்பாட சாப்பிட்டு தான் ஆகணும். குளிக்காம ரூமை விட்டு வர கூடாது. நைட் ஷோ படத்துக்கு போக கூடாது. ப்ரெண்ட்ஸ் கூட அவுட்டிங் ஒரு மாசத்துக்கு ஒரு தடவை தான். அதுவும் ஒரு வாரத்துக்கு முன்னாடியே சொல்லணும்…” இன்னும் கணக்கில் வராத பல விதிமுறைகளைப் படித்தவன், அந்த தாளை மீண்டும் இந்திரஜித்திடமே கொடுத்தான்.

“என்னடா விளையாடுறீங்களா? நானே, ஹாஸ்டல்ல இப்படி இருந்து நொந்து போய் தான், தஞ்சாவூர்ல தனியா வீடு எடுத்து தங்கி இருந்தேன்.
இப்ப என்னன்னா, மறுபடியும் என்னை ஹாஸ்டல் வாழ்க்கை வாழ சொல்றீங்க. இந்த வீடை ஹாஸ்டலுக்கு உள் வாடகைக்கு விட்டுடீங்களா… இதெல்லாம் என்னால ஃபாலோ பண்ண முடியாது. வீட்டுக்கு வந்த கெஸ்ட்க்கு கூடவா ரூல்ஸ் போடுவீங்க.” என கதறி விட்டான்.

சிரஞ்சீவி தான், “நீ கெஸ்ட் – ஆ இருந்தா நாங்க ரூல்ஸ் போட மாட்டோம் எழில். நீ தான் எங்க அம்மாவை உன் அம்மாவா தத்து எடுத்துக்கிட்டியாமே. அப்போ, நீ இதை எல்லாம் ஃபாலோ பண்ணி தான் ஆகணும்” என்றான் அசட்டையாக.

“எதே? அது ஒரு சென்டிமென்டலா அட்டாச் ஆகுமேனு சொன்னேன். இப்படிலாம் ரூல்ஸ் இருக்குன்னு தெரிஞ்சுருந்தா, நான் வைஷுவையே அனுப்பி இருக்க மாட்டேன். என்னையும் என் பொண்டாட்டியையும் விட்டுடுங்கடா… இதுல ஒன்னு கூட எனக்கு செட் ஆகாது.” என பாவமாக கேட்க,

இந்திரஜித், சிரிப்பை அடக்கிக்கொண்டு, “வெரி சாரி… இது ஒரு வழிப்பாதை. வந்தா திரும்ப போக முடியாது. இருந்தாலும் உனக்கு ஒரு ஆப்ஷன் இருக்கு.” என்றான் மர்மப்புன்னகையுடன்.

எழில் ஆவலுடன் “என்னது?” எனக் கேட்க,

“அதாவது, வைஷு இங்க இருக்கட்டும். பாவம் உனக்கு தான் இந்த ரூல்ஸ் செட் ஆகாதே. சோ நீ தனியா வீடு எடுத்து தங்கிட்டு வாரம் ஒரு நாள் மட்டும் வந்து வைஷுவை பார்த்துக்க…” என்றான் அமர்த்தலாக.

இருவரையும் கடுமையாக முறைத்த எழில், “ம்ம்க்கும்… தினமும் என் பாவப்பட்ட மூஞ்ச பார்த்து கூட அவள் மனசு இறங்க மாட்டேங்குறா. இதுல வாரம் ஒரு தடவைன்னா, என் மூஞ்சியவே மறந்துடுவா…” என இந்திரஜித்திடம் கொடுத்த தாளை மீண்டும் பிடுங்கி ஒரு முறை கடுப்புடன் படித்தவன், “ஃபாலோ பண்ணி தொலைக்கிறேன்.” என உதட்டைக் குவித்தான்.

அதில் வாய் விட்டு சிரித்து விட்ட சகோதரர்களின் மீது கொலைவெறியே வந்தது.

இப்போதும் காலை எட்டு மணிக்கு, பசியே எழாமல் இருக்க, அங்கிருந்த பூரியை பார்த்து எச்சிலை விழுங்கினான்.

அவனுக்கு தான் பூரியே பிடிக்காதே. இதில் ரிசப்ஷன் பற்றி பேசியதும் கடியானவன், “எதுக்கு? ரிசப்ஷன் வச்சுட்டு, அதுக்கும் நிக்க கூடாது உட்கார கூடாது, பொண்டாட்டியை அஞ்சு தடவைக்கு மேல திரும்பி பார்க்க கூடாதுன்னு ரூல்ஸ் போடவா… ஆணியே ப்ளக் பண்ண வேணாம்…” என முறைத்தான்.

அதில் கமுக்கமாக சிரித்த இந்திரஜித், “இது நல்லா இருக்கே. அம்மாகிட்ட சொல்லி இம்ப்ளிமென்ட் பண்ண சொல்லிடலாம்.” எனக் குறும்புடன் கூற, “முதல்ல இதை உனக்கு தான் இம்ப்ளிமென்ட் பண்ணனும். நீ தான நிமிஷத்துக்கு நூறு தடவை சதுவை பார்த்து வழிஞ்சுக்கிட்டே இருக்க.” என வாரினான்.

“நீ மட்டும் ரொம்ப ஒழுங்காக்கும். வைஷுமா உன்னை மதிக்கவே இல்லைன்னாலும், பட்டிக்காட்டான் மிட்டாயை பார்த்த மாதிரி ‘பே’ ன்னு பாக்குற…” என்றதில்,

எழில், “அவளை வைஷுமான்னு கூப்பிடாத” எனப் பல்லைக்கடிக்க, “நீயும் அவளை சதுன்னு கூப்பிடாத” எனக் கண்ணை சுருக்கி முறைத்தான் இந்திரஜித்.

மீண்டும் அவர்களுக்குள், உள்நாட்டுப் போர் ஆரம்பித்ததில், சிரஞ்சீவி தான், “கொஞ்ச நேரம் உங்க திருவாயை மூடுங்கடா. உங்க வண்டவாளம் எல்லாம் அம்மாவுக்கும் சத்யாவுக்கும் தெரிஞ்சா, நடக்க இருக்குற என் ரிசப்ஷன்க்கும் ஆப்பு வச்சுடுவாங்க. ப்ளீஸ் கோ ஆபரேட். ஐ ஆம் யுவர் பெஸ்ட் பிரதர்…” என்றான் அழுவது போல.

அதன் பிறகு, ரிசப்ஷன் ஷாப்பிங் நடைபெற, சத்யரூபாவிற்கும் வைஷாலிக்கும் தான் இதில் எதிலும் ஒன்ற இயலவில்லை. இருவரும் அமைதியையே கடைபிடிக்க, பானுரேகா தான், “சத்யா நீ இந்த வீட்டு மருமக. இங்க நடக்க போறது உன் வீட்டு விஷேஷம் தான். யாரோ போல ஒதுங்கி இருக்குறது நல்லா இல்ல. இந்த ஃபங்க்ஷன்க்கு உன் சொந்தக்காரங்களையும் கூப்பிடனும். அதை எல்லாம் நீ தான் முன்னாடி நின்னு நடத்தணும்ன்னு எதிர்பார்க்குறேன்.” என்றார் கண்டிப்பாக.

அதில் நிகழ்வு உணர்ந்தவள், வேதனையை விழுங்கிக் கொண்டு, “நான் பாத்துக்குறேன் அத்தை…” என மெதுவாய் கூறி விட்டு, விழாவிற்கு தேவையான அனைத்தையும் பார்த்துக் கொண்டாள். சாவித்ரியும் சிறிது நாட்கள் ஊரில் இருந்து விட்டு வருவதாக கூறியதில், அவரிடம் மட்டும் தினமும் பேசிக்கொள்வாள்.

அமைதியின் சிகரமாக இருந்த வைஷாலியையும் விடவில்லை பானுரேகா.

“உன்மேல எனக்கு கோபம் அதிகமா தான் இருக்கு. ஆனா, உன் மேல கோபப்பட்டு ஒரு பிரயோஜனமும் இல்ல. முதல் தப்பே… என் பசங்ககிட்ட இருந்து தான் ஆரம்பிக்கும் போது, உன்கிட்ட கோபத்தை காட்டுறது நியாயமும் இல்ல. என் பையனோட ஃப்ரெண்டுறதை தாண்டி, இப்போ, நீயும் என் வீட்டு பொண்ணு தான் வைஷு. எழிலுக்கும் உனக்கும் இருக்குற பிரச்சனையை பத்தி நான் கேட்க மாட்டேன். அது நீ தேர்ந்தெடுத்த வாழ்க்கை. அதை சரியா கொண்டு போய் உன் அம்மா பேரை காப்பாத்துறதும், தாமரை பொண்ணு, புருஷனை விட்டுட்டு வந்துட்டான்னு பேர் வாங்குறதும் உன் கைல தான் இருக்கு…” என்றதில், சட்டென நிமிர்ந்து அடிபட்ட பார்வை பார்த்தாள்.

உண்மையில் அவருக்கு, அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று தெரியாது. யாரும் மறந்து கூட, எழிலுக்கும் சத்யாவிற்கும் இடையில் நிகழ்ந்த விஷயங்களை கூறவில்லை. இனி கூறப்போறதும் இல்லை.

வைஷாலியை பெண் பார்க்க போகும் வரை, அவள் இந்திரஜித்தின் தோழி என்று தெரியவில்லை. பின், அவளது கல்லூரி விவரங்களை அறிந்த பின்பு தான், அவரும் தெரிந்து கொண்டார்.

அப்போதும், இப்படி ஒரு நாடகம் நடக்கும் என்று அவர் உணரவில்லை. நீரஜாவை அடிக்கடி வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறான் இந்திரஜித். ஆனால், வைஷாலி விடுமுறை தினங்களில் எல்லாம் ஊருக்கு சென்று விடுவதை வழக்கமாக்கி இருந்ததில், அவளைப் பார்த்தது இல்லை.

வைஷாலி பார்த்த பார்வை அவரை என்ன செய்ததோ, “உன்னை நான் இதுக்கு முன்னாடி பார்த்தது இல்ல. ஆனா, இந்தர் நிறையவே சொல்லி இருக்கான். எனக்கு தெரிஞ்சு, சத்யாவை விட உனக்கு நிதானம் ஜாஸ்தி வைஷு. ஆனா, எழில் விஷயத்துல நீ எப்போவுமே நிதானமா முடிவெடுக்க மாட்டேங்கிறியோன்னு தோணுது. கல்யாணம் பண்ணும் போதும் சரி, இப்போ பிரிஞ்சு வந்தும் சரி… என்ன பிரச்சனையா இருந்தாலும், எழில் மேல எனக்கு தப்பான அபிப்ராயம் வரல. சரி செய்யிற பிரச்சனையா இருந்தா, அதை சரி பண்ற வழியை தேடு. அது தான் உன் அம்மாவுக்கு நீ செய்ற நன்றி கடன்.” என்று போற போக்கில் பேசி விட்டு செல்ல, அவள் அசையாமல் நின்றாள்.

இந்திரஜித்திற்கும், சத்யாவும் வைஷாலியும் ஒரு பெரிய இழப்பைத் தாங்கி நிற்கையில், விழா எடுத்துக் கொண்டாட அவனுக்கு மனதில்லை தான். அதனாலேயே, அவ்வப்பொழுது, விழாவைப் பற்றி பேசிக்கொள்வானே தவிர, அவளை பொறுப்பேற்க சொல்லமாட்டான்.

ஆனால், இப்போது இந்த விழா தான், தமையனின் வாழ்வை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றுணர்ந்து ஏற்றுக்கொண்டான்.

இப்போது தாயின் கூற்றில், “சத்யாவை ஏன்மா இழுக்குறீங்க.” எனக் கேட்டு விட்டு, அவரின் முறைப்பைக் கண்டு,

“இல்ல… அதான் நான் எல்லாம் பாத்துக்குறேன்ல. அவள் ஆக்வார்டா ஃபீல் பண்ண போறாமா…” என்றான்.

“அப்போ அழுது வடிஞ்சுகிட்டு இருந்தா பரவாயில்லையா? உன் பொண்டாட்டிக்கு வக்காலத்து வாங்கிட்டு வராத. என்ன பண்ணனும்ன்னு எனக்கு தெரியும்.” என்று அழுத்தத்துடன் பேசிட,

“சர்வாதிகாரி…” என எப்போதும் போல் முணுமுணுத்தான்.

வைஷாலியும் அதன் பிறகு, நீரஜாவிற்கு தேவையான அனைத்தையும் பார்த்துக் கொண்டாள். கூடவே, ஒரு சிறு யோசனையும் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருந்தது.

எழிலுக்கு சில நேரம் மனதில் ஒரு வேதனை அரிக்கும். தன் வீட்டினரும் இதே போல இருந்து இருக்கலாமே என்று… பின் அதனை ஒதுக்கித் தள்ளுபவன், அந்த வீட்டில் ஒருவனாகவே மாறி, விழாவை அவனே எடுத்து நடத்துவது போல இந்திரஜித்துடன் மண்டபம் பிடிப்பதிலிருந்து, அனைத்திற்கும் ஓடி ஓடி வேலை செய்தான்.

இந்நிலையில், நீரஜாவிற்கு அவளது தந்தையிடம் இருந்து போன் வந்ததில், அவளுக்கு புருவம் சுருங்கியது.

அவர் அவளை அழைத்தே கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகி விட்டது. இப்போது ஏன் புதிதாக? என குழம்பியவள், இன்னும் அவளது திருமண விஷயத்தைக் கூட அவரிடம் கூறவில்லை. கூறவும் தோன்றவில்லை.

அதே குழப்பத்துடன் போனை எடுத்திட, எதிர்முனையில் தந்தையின் குரல் கேட்டதில், மனம் வெறுமையாய் இருந்தது.

“கல்யாணம் ஆனதை கூட சொல்ல தோணலையாமா?” பரிதவிப்புடன் அவர் கேட்டதில், லேசாய் வலித்திட, “சொல்ற தூரத்துல நீங்க இல்லையப்பா…” என்றாள் இதழ் கடித்து.

சில நிமிட மௌனங்களுக்குப் பிறகு, “மாப்பிள்ளை எனக்கு போன் பண்ணி சொன்னாரு. அடுத்த வாரம் ரிசப்ஷன்னு என்னை கண்டிப்பா வர சொன்னாரு.” என்றதும், அவர் போன் செய்ததற்காக காரணத்தை அறிந்து கொண்டாள்.

“கண்டிப்பா வரணும்ன்னு இல்லைப்பா. உங்களுக்கு வேலை இருந்தா பாத்துக்கோங்க.” என்று பேச்சைத் துண்டித்து போனை வைத்து விட்டவளுக்கு, சிரஞ்சீவி மீது தான் கோபம் பெருகியது.

தன்னைக் கேட்காமல், தந்தைக்கு எதற்காக போன் செய்தார்… என நெஞ்சம் பாரமாக, அப்போது தான் அவனும் அறைக்குள் நுழைந்தான்.

“அப்பாகிட்ட பேசுனீங்களா ஜீவி?” அவள் கேட்டதும்,

“ம்ம். என்ன இருந்தாலும் அவருகிட்ட சொல்லணும்ல வாட்டர்…” என்றான்.

“சொல்ல வேண்டிய அவசியம் இருந்தா நானே சொல்லிருப்பேனே. அதை என்கிட்ட கேட்க கூட தோணலையா உங்களுக்கு.” என கரகரப்புடன் கேட்க,

சற்றே திகைத்தவன், “ஹே… அப்படி எல்லாம் இல்லடி. அம்மா தான், உன் ஃபேமிலி பத்தி கேட்டாங்க. உன் அப்பா பத்தி சொன்னதும், முதல் வேலையா அவருக்கு போன் பண்ணி பேச சொன்னாங்க… அதான்…” என்று கூறி முடிக்கும் முன்பே,

“அப்போ அவங்க சொன்னா, என்னை துரத்தி விட்டுருவீங்களா?” எனக் கேட்டாள் எரிச்சலாக.

கண்ணை மூடி நிதானித்தவன், “நீரு! என்ன இது.” என்று கண்டிப்பாகக் கேட்க,

“என் அப்பாகிட்ட சொல்றதுக்கு முன்னாடி என்கிட்ட சொல்லவா வேணாமான்னு கேட்டு இருக்கணும் ஜீவி. ஆண்ட்டிக்கு என் ஃபேமிலி பத்தியும் என் மனநிலை பத்தியும் பெருசா தெரியாது. ஆனா உங்களுக்கு தெரியும் தான. என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்க தோணலைல உங்களுக்கு.” கேட்கும் போதே கண்ணீரும் வெளிவந்தது.

பானுரேகா சொன்னதும், எதைப் பற்றியும் யோசியாமல் அவருக்கு போன் செய்து விட்ட சிரஞ்சீவிக்கு, அவள் கண்ணீரைக் கண்டதும் தான், சற்று அவசரப்பட்டது புரிந்தது.

“கேட்டு இருக்கணும். அது இப்ப தான் புரியுது. அவரை ஒண்ணும் நீங்க கண்டிப்பா வரணும்ன்னு நான் சொல்லலடா. ஜஸ்ட் இன்ஃபர்மேஷன் தான் சொன்னேன். அதையும் உங்கிட்ட கேட்டு இருக்கணும். ஐ ஆம் சாரி…” என உடனடியாக மன்னிப்பை வேண்டியவனிடம் கோபம் கொள்ள கூட இயலவில்லை.

ஆனால், ஆதங்கம் மட்டும் நீங்காமல் இருக்க, “அதான் சொன்னேன், அவங்க என்னை வீட்டை விட்டு போக சொன்னா கூட, நீங்க முதல்ல சொன்னதை செஞ்சுட்டு, அதுக்கு அப்பறம் தான் யோசிப்பீங்கன்னு… என்னை லவ் பண்றேன்னு வெளில சொல்லவே உங்களுக்கு வருஷ கணக்காகிடுச்சே…” எனப் பொங்கிட,

அவனோ பொறுமையிழந்து, “அறைஞ்சேன்னா தெரியும்” என்று கோபத்தில் கத்தி விட்டான்.

நீரஜாவிற்காக, சத்யரூபாவே ஆரி வேலைப்பாடுகளுடன் பிளவுஸ் தைப்பதாக கூறி, அவளே முக்கால்வாசி முடித்திருந்தாள். அதனை அவளிடம் காட்டும் பொருட்டு, கதவைத் தட்டாமல் உள்ளே வந்த சத்யரூபா, இறுதியில் சிரஞ்சீவி பேசியதை மட்டும் கேட்டு விட்டு விழித்தாள்.

அவசரக்குடுக்கையாக, சிரஞ்சீவி வீட்டினுள் வந்ததைக் கவனியாமல், அவர்கள் அறைக்கு வந்ததில் தன்னையே மானசீகமாக அறைந்து கொண்டவளுக்கு, நீரஜாவின் கண்ணீரைக் கண்டு ஒன்றும் புரியவில்லை.

சிரஞ்சீவி தான், கோபத்தை அடக்க இயலாமல், புயல் வேகத்தில் வெளியில் சென்று விட்டான்.

சத்யரூபாவிற்கு நிற்பதா செல்வதா என்று தெரியாமல், பின் நீரஜாவிடமே சென்றாள்.

“என்ன ஆச்சுக்கா. மாமா ஏன் கோபமா போறாங்க…” எனத் தயக்கத்துடன் கேட்க,

மௌனமாக கண்ணீர் வடித்தவள், “ஒண்ணும் இல்ல” என்று தலையாட்டினாள்.

“ஒண்ணும் இல்லாததுக்கா அழுதுட்டு இருக்கீங்க.” எனக் கேட்டதில், அவளது விசும்பல் கூடியது.

அதில் அவளருகில் அமர்ந்த சத்யரூபா, “அக்கா… அழாதீங்க ப்ளீஸ். என்ன ஆச்சு?” என்று கனிவுடன் வினவ, அவளும் மனதை மறைக்க இயலாமல் அனைத்தையும் கூறினாள்.

அவளது குடும்ப சூழ்நிலையை எண்ணி சத்யரூபாவிற்கும் வருத்தம் தான். அதே போல அவளது மனநிலையையும் புரிந்து கொண்டவள், “மாமா தான் சாரி கேட்டாருல்லக்கா. எதார்த்தமா பண்ணிருப்பாரு. அத்தைக்கும் இதெல்லாம் விலாவரியா தெரிஞ்சுருக்காது. விடுங்கக்கா.” என ஆறுதல் உரைக்க,

“அது எனக்கும் புரியுது தான் சத்யா. ஆனா, ஒரு மாதிரி இன்செக்கியூர்ட் ஃபீல். ஃபங்க்ஷன் பத்தி சொன்னதுல இருந்தே அப்படி தான் இருக்கு. ஒருவேளை, எங்க கல்யாணம் நார்மலா நடந்துருந்தா ஒன்னும் தெரிஞ்சுருக்காதோ என்னவோ… இன்னும் ஆண்ட்டியும் என்கிட்ட பேச கூட இல்ல. எப்படியும் கோபமா இருப்பாங்க. நாளைக்கு ரிலேட்டிவ்ஸ் வந்து யாராச்சு ஏதாச்சு சொன்னா…” எனத் தன்னை ஒரு முறை பார்த்துக்கொண்டவளுக்கு, திடீரென ஒரு தாழ்வு மனப்பான்மைத் தானாக முளைத்தது.

“என்னக்கா பேசுறீங்க. உங்களை யாராச்சு ஏதாச்சு பேசுனா, அப்படியே பேசட்டும்ன்னு விட்டுருவோமா? முதல்ல பேசுற அளவுக்கு உங்ககிட்ட ஒண்ணும் எந்த குறையும் இல்ல. மனசுல குறை இருக்கறவங்க தான், உங்களை வேணும்ன்னே குறை சொல்லுவாங்க. அப்படியே பேசுனா கூட, இங்க யாரும் சும்மா விடமாட்டாங்க. நானே நல்லா சுருக்குன்னு கேட்டு அனுப்பி விடுவேன்.” என்றவளை ஆதூரமாகப் பார்த்தாள் நீரஜா.

இதற்கு முன் பல முறை அவள் இந்த வீட்டிற்கு வந்து இருக்கிறாள் தான். அப்போதும், அவளை வீட்டினர் யாரும் குறைவாக ஒரு பார்வை கூட பார்த்ததில்லை. அதிலும் பானுரேகா அவளை சொந்தப்பெண் போல தான் நடத்துவார்.

அப்படி இருப்பவர் தன்னை மறுத்ததே அவளுக்கு பெரும் அதிர்ச்சி தான். ஆனாலும், அதனைத் தவறாக நினைக்காமல், அவர் முடிவை ஏற்றுக்கொண்டாள்.

இதை எல்லாம் கூறினால், தனக்கும் இந்திரஜித்திற்கும் இடையில் இருக்கும் தோழமைப் பற்றி தெரிந்து விடுமென்றெண்ணி, அமைதி காத்தவள், “மத்தவங்க கேட்குறதுக்கும், ஜீவி கேக்குறதுக்கும் வித்தியாசம் இருக்குல்ல சத்யா. என்னை காதலிக்கிறதை பத்தி அம்மாகிட்டயே சொல்ல முடியலைன்னா, வர்ற சொந்தகாரங்க பேசுறதுக்கு எப்படி பதில் சொல்ல முடியும்…” என ஆற்றாமை கொண்டவள், சில நொடிகளில் தன்னை சமாளித்து, கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

சத்யா தான் அவளை பாவமாகப் பார்த்து விட்டு, “அக்கா… அத்தை பேசலைன்னு வருத்தப்படுறீங்களே… நீங்க முதல்ல அவங்ககிட்ட மன்னிப்பு கேட்டீங்களா?” என்றாள்.

“நானும் மன்னிப்பு கேட்க தான், அவங்ககிட்ட பேச ட்ரை பண்றேன். ஆனா, என்னை பார்த்தாலே, அந்த இடத்தை விட்டு போயிடுறாங்க சத்யா” என வருத்தமாக கூறினாள்.

“நீங்க சொன்னதை வச்சு பாக்கும் போது, அத்தைக்கு உங்களை பிடிக்காததுனால எல்லாம், உங்களை வேணாம்ன்னு சொல்லிருக்க மாட்டாங்கக்கா. மாமாவோட குணத்தை வச்சு தான் வேணாம்ன்னு சொல்லிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.” என்றாள் யோசனையாக.

அவளைப் புரியாமல் பார்த்த நீரஜாவிடம் மேலும் விளக்கினாள்.

“பெரிய மாமா, அவருக்கும் அத்தைக்கும் கல்யாணம் நடந்தது, அதுக்கு அப்பறம் வீட்ல பிரச்சனை ஆனதை பத்தி எல்லாம் சொல்லிருக்காரு. மாமாவையோட அண்ணிங்க எல்லாரும் அத்தையை கார்னர் பண்ணிருக்காங்க. அதனால அத்தை மனசளவுல உடைஞ்சு போயிருக்காங்க. அத்தைக்கு பிறந்த வீட்டு சப்போர்ட்டும் இல்லைல… மாமாவோட சப்போர்ட் முழுசா இருந்தா கூட, குடும்பத்துல யாருமே கண்டுக்காம, குத்திக்காட்டிட்டே இருக்கும் போது, நிம்மதியா வாழ முடியாதுலக்கா.

எனக்கு தெரிஞ்சு, அவங்க உங்களை மறுத்ததுக்கு காரணமே, பின்னாடி நீங்க மனசளவு வருத்தப்படக்கூடாதுன்றதா கூட இருக்கலாம்.

இப்ப ஜீவி மாமாவுக்கு உங்களை கல்யாணம் பண்ணி வைக்க, அத்தை ஒத்துக்கிட்டாலும், இந்தர் கல்யாணம் பண்ணும் போது அவருக்கு வரப்போற வைஃப் எப்படி இருப்பான்னு யாருக்கும் தெரியாதுல. அவங்க கூடவே இருந்து, உங்களை தாழ்வா நடத்துனா, என்ன ஆகும்? எல்லாரும் அந்த பொண்ணை திட்டுவாங்க. புருஞ்சுக்குற பொண்ணா இருந்தா பரவாயில்ல. அப்படி இல்லன்னா, அப்பறம், சண்டை வரும். குடும்பம் பிரியும்.

அதுக்கும் மேல ஜீவி மாமாவோட எதிர்த்து பேச தயங்குற குணம். ஒரு பிரச்சனைன்னு வரும் போது, அப்போதும் தயங்கி, உங்களுக்கு ஆதரவா பேசாம விட்டுட்டா, அது உங்களை ரொம்ப பாதிக்கும்ல… அதனால தான், ஜீவி மாமாவே, அவங்க காதல் விஷயத்தை அவங்ககிட்ட சொல்லி சம்மதம் வாங்கணும்ன்னு அத்தை எதிர்பார்த்தாங்க போல. ஒருவேளை மாமா பேசி இருந்தா, அப்பவே அத்தை சமாதானம் ஆகி இருப்பாங்களா இருக்கும்.” என பேசி முடித்தவளை வியப்புடன் ஏறிட்டாள் நீரஜா.

‘இப்படியும் இருக்குமோ…’ என சிந்தித்தவளுக்கு, அதுவே காரணம் என்று தோன்றியது.

அறை வாசலில் வாயடைத்து நின்றிருந்த இந்திரஜித்திற்கு கூட, மனையாளின் புரிதல் கண்டு மலைப்பு தான்.

சற்று முன், சிரஞ்சீவி போன் செய்து, நீரஜாவிடம் சண்டையிட்டு விட்டதை கூறியதில், அவளைப் பார்க்க வந்திருந்தான்.

மேலும், முந்தைய நாள் தான், இதை பற்றி தாயிடமும் பேசி இருந்தான்.

அவனும் இதனை ஓரளவு கணித்தே இருந்தான். அதனால், “இப்ப தான் எனக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. சத்யாவும் யாரையும் தாழ்த்தி பேசுற ஆள் இல்ல. உங்களுக்கும் பெர்சனலா நீரஜ் மேல கோபம் இல்ல. அப்பறம் ஏன்மா, அவளை அலைய விடுறீங்க” எனத் தாங்களாக கேட்க,

“முதல்ல ரிசப்ஷன் முடியட்டும். அங்க வர்ற சொந்தக்காரங்க பேசுறதுக்கு எல்லாம் உன் அண்ணன் எப்படி ரியாக்ட் பண்றான்றதை பார்த்துட்டு தான், நான் இதுல முடிவெடுப்பேன். அப்பவும், உன் அண்ணணுக்கு நீ வாய்தாவுக்கு போகாத. அவனா தான் எல்லாத்தையும் சமாளிக்கணும். அப்படி அவன் சொதப்புனா, நானே அவனுக்கு டைவர்ஸ் வாங்கி கொடுத்துடுவேன். கல்யாணம் பண்ணிக்கிறது ரொம்ப ஈஸி இந்தர். காலம் முழுக்க, அந்த கல்யாணம் குடுக்குற காயத்தை தாங்கிக்கிட்டு வாழறது சாதாரணம் இல்லை…” என இறுகளுடன் கூறியவரின் இறுதி வரியில் அதிக அளவிலான வலி தெரிந்தது.

பாலகிருஷ்ணன், ஆதரவாக அவர் கையைப் பிடித்துக்கொள்ள, அவரது பயமும் சரிதான் என்றே தோன்றியது இந்திரஜித்திற்கு.

“அப்படி எல்லாம் அவன், யார் வேணாலும் என்ன வேணாலும் பேசட்டும்ன்னு விடமாட்டான்ம்மா. உங்கமேல அவனுக்கு நிறைய மரியாதை இருக்கு, அது தான், அவனை பேச விடாம தடுக்குதே தவிர, அவளை மத்தவங்ககிட்ட விட்டுக் குடுக்க மாட்டான்…” என தீர்மானமாகக் கூறிய இந்திரஜித், தமையனின் மீது அபாரமான நம்பிக்கை வைத்திருந்தான்.

இப்போது, சத்யரூபாவும் தாயை சரியாக கணித்ததில் சிறு முறுவல் தோன்றியது ஆடவனுக்கு.

நீரஜாவோ, “உன்ன சாதாரணமா நினைக்க கூடாதுன்னு, அப்போ அப்போ ப்ரூவ் பண்ணிடுற சத்யா.” எனப் புன்னகைத்து விட்டு,

“எல்லாரையும் புருஞ்சுக்குற மாதிரி, உன் அக்காவையும் புருஞ்சுக்கோயேன் சத்யா.” என்றாள் கெஞ்சல் பார்வையுடன்.

எப்படியவாது தோழியின் வாழ்வை சரி செய்ய வேண்டுமென்ற கவலை தெரிந்தது அவள் முகத்தில்.

பெருமூச்சு விட்ட சத்யரூபா, “என்னால அத்தை அளவுக்கு டக்குன்னு சமாதானம் ஆக முடியலக்கா. கொஞ்சம் டைம் வேணும். பாக்கலாம்.” என்று விட, நீரஜா முகத்தை சுருக்கினாள்.

“அது எல்லாம் எனக்கு தெரியாது. என் ரிசப்ஷன் அப்போ, நீ உன் அக்கா கூட பேசுற. நம்ம ஃபேமிலி போட்டோ எடுக்குறோம்.” என உரிமையுடன் அவளிடம் நிபந்தனை கூற,

“பேமிலி போட்டோ எடுக்க, பேச வேண்டிய அவசியம் இல்லையேக்கா…” கிண்டலாக கூறி விட்டு எழுந்தவள், இந்திரஜித்தைப் பார்த்து விழி விரித்தாள்.

“நீங்க எப்ப வந்தீங்க?” என்றதும், அவள் மீதிருந்த பார்வையை துளியும் திருப்பாமல், “நான் வந்தது இருக்கட்டும். நீங்க ரெண்டு பேரும் என்ன ‘காசிப்’ பேசிட்டு இருக்கீங்க.” என்றான் கேலியாக.

நீரஜா தான், அவனை மெல்ல முறைத்து, “ஹலோ கொழுந்தனாரே எங்களை பார்த்தா உங்களுக்கு ‘காசிப்’ பேசுற மாதிரி இருக்கா. அப்பறம் அண்ணி கொடுமை எல்லாம் காட்ட வேண்டியதா இருக்கும்” என்று மிடுக்காக கூற,

“ஹலோ அண்ணியாரே… நாங்களும் அப்பறம் கொழுந்தனார் கொடுமை காட்ட வேண்டியது இருக்கும்… பார்த்துக்கோங்க.” என விளையாட்டாய் இருவரும் மரியாதை நிமித்தம் பேசி விட்டு, சிரித்தும் கொண்டனர்.

“போதும் ரெண்டு பேரும் மாறி மாறி கொடுமைபடுத்திக்கிட்டது, முதல்ல தள்ளுங்க எனக்கு வேலை இருக்கு…: என வாசல் படியை மறைத்து நின்ற கணவனை விலக்கினாள் சத்யரூபா.

“என்ன வெங்காயம் உறிக்க போறியா?” சிரியாமல் அவன் கேட்ட விதத்தில், அவள் தான் நீரஜாவை ஒரு முறை அவசரமாகப் பார்த்து விட்டு, கன்னம் சிவந்து, “ஜித்துஊ… சும்மா இருங்க.” என்றாள் பதற்றமாக.

அவனோ கீழுதட்டைக் கடித்தபடி, பாவையின் தவிப்பை ரசித்தவாறு, “மதியம் லன்ச் செய்யணும்ல ரூப்ஸ். அதுக்கு வெங்காயம் உறிக்க போறியான்னு கேட்டதுக்கு ஏன் இவ்ளோ தடுமாறுற. வர வர நீ ரொம்ப கெட்டு போய்ட்ட போ… “என்று துளைக்கும் பார்வை வீச, நீரஜா அறியாமல் அவன் தோள்பட்டையைக் குத்தியவள்,

“காண்டாமிருகம்… அடி வாங்க போற நீ…” என்று பல்லைக்கடித்து, எழுந்த வெட்கத்தை அடக்க இயலாமல் அடுக்களைக்குள் சரணடைந்து விட்டாள்.

உண்மையாகவே வெங்காயம் உறிக்க வேண்டியது இருந்ததில், செங்கொழுந்தாக சிவந்தவள், வெட்க புன்னகையுடன் அதனை சிறிது உறிக்க ஆரம்பிக்க, அவள் பின்னிருந்து அணைத்து தடுத்தான் இந்திரஜித்.

அவன் அணைப்பில் திணறியவள், “என்ன பண்றீங்க ஜித்து. யாராச்சு வர போறாங்க. தள்ளுங்க. வேலை பாக்குற அக்கா வேற இப்ப வருவாங்க.” எனப் பதறிட,

“அதான், வேலை பார்க்க ஆள் வர்றாங்கள்ல, நீ ஏண்டி இப்ப இவ்ளோ ரிஸ்கியான ஜாபை பார்த்துட்டு இருக்க…” என்றவன், செவிமடலில் ஊதினான்.

மேனியெங்கும் சிலிர்ப்பு பரவ, கைகளெல்லாம் நடுங்கியது அவளுக்கு.

“வெங்காயம் உறிக்கிறது ரிஸ்கியான ஜாபா? இன்னைக்கு கார்மெண்ட்ஸ் லீவ். சும்மா தான் இருந்தேன். அதான், அந்த அக்கா வர்றதுக்குள்ள கொஞ்ச வேலை பார்த்து வைக்கலாம்ன்னு…” என்னும் போதே, அவனது மீசை அவள் கன்னத்தில் உராய்ந்ததில் பேச்சோடு சேர்த்து அவ்வப்பொழுது மூச்சையும் நிறுத்தி சுவாசித்தாள்.

“இனிமே, இதெல்லாம் பண்ணாத தியாக்குட்டி. கிஸ் பண்ண டிஸ்டர்பன்ஸா இருக்கு.” எனக் கிறங்கியவன், அவளைத் திருப்பி, இதழோடு இதழை உரசினான்.

அவளோ வெட்கம் தாளாமல் துவள, ஆழ்ந்து முத்தமிடப் போனவன், சட்டென நகர்ந்து, “ஆ…” எனக் கண்ணை கசக்கினான்.

“அடிப்பாவி… கண்ணு எரியுதுடி கரடி.” எனக் கண்ணை சுருக்கி முறைக்க, “இப்படி எல்லாம் சேட்டை பண்ணுனா, இதான் பனிஷ்மென்ட் காண்டாமிருகம்.” என்று அவள் சிரித்திட, அங்கு மீண்டுமொரு அழகிய இதழொற்றல் அரங்கேறியது.

அலைபாயும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
36
+1
158
+1
7
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment