1,005 views

ஒரு மாதம் ராட்டினம் போல் சுழன்று காணாமல் போயிருந்தது. செல்வகுமார் உடல்நிலை முழுவதும் தேறி இருக்க, திவ்யா செல்லமாகி போனாள் அவருக்கு. தங்கை மகளை பார்த்த பின் தான் அவர் செய்த துரோகத்தின் ஆழம் புரிந்தது. இவ்வளவு நடந்ததற்கு பிறகும் தன்னைப் பார்க்க அனுமதிக்கும் பரமேஸ்வரி உள்ளத்தை மனதார பாராட்டினார். 

 

திவ்யாவிடம் பேச்சு கொடுக்கும் பொழுது மெல்ல தங்கையை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். அவர் சொந்தத்தை நினைத்து ஏங்குகிறார் என்பதை அறிந்து கொண்ட வருங்கால மருமகள் பாட்டியை சமாதானப்படுத்தி அழைத்து வந்தாள். மகனைப் பார்க்கும் வரை தான் அவருக்கு வீம்பு.  பெற்ற பாசம் அவரை மன்னிக்க வைத்தது. 

 

திவ்யாவின்  தேவைகளை முழுமையாக கவனிக்கவும், அவளின் பெற்றோர்கள் நம்பி திருமணம் செய்து கொடுக்கவும் நன்முறையில் தன்னை வளர்த்துக் கொள்ள தொடங்கினான் விக்ரம். தந்தையை விட சிறப்பான நிர்வாக திறமை அவனுக்கு இருக்க அதே துறையில் இருப்பதால் மருமகனின் நடவடிக்கையை கவனித்து பாராட்டினார் பரமேஸ்வரி.

 

அனைவரும் அவரவர் எதிர்காலத்தை நினைத்து நகர்த்திக் கொண்டிருக்க மிஸஸ் அக்னி ஜோடி ஊரிலே இல்லை. ஒரு வாரம் ஹனிமூன் என்று அழைத்துச் சென்றவன் ஒரு மாதம் ஆகியும் ஊர் திரும்ப வில்லை ‌. இன்று தான் சென்னை விமான நிலையத்தில் மனைவியோடு வந்து இறங்குகிறான். 

 

ஒரு மாத காதல் உலகம்  அக்னியை காதல் மன்னனாக மாற்றி இருக்கும் என்று எதிர்பார்த்து உலகம் காத்திருக்க, அவனோ பாவமாக அன்பினியின் அனைத்து பெட்டிகளையும் தூக்கிக் கொண்டு வந்தான் சுமை தூக்கியாய். 

 

“அன்பு” என்று அழைத்தவனை திரும்பி ஒருமுறை முறைத்தவள் வேகமாக நடக்க துவங்கினாள்.

 

 

“அடியே! எதுக்கு கோவமா இருக்குன்னு சொல்லிட்டாது போடி.” புலம்பியவன் பேச்சை சிறிதும் மதிக்கவில்லை அவனின் மனைவி.

 

மணிவண்ணன் அவர்களுக்காக காத்திருக்க மாமனாரின் காரை கண்டுபிடித்தவள் அமர்ந்துக் கொண்டாள். மருமகளின் முகத்தைப் பார்த்தவர் கமுக்கமாக வாய் திறக்காமல் இருக்க,

 

“அன்பு வீட்டுக்கு போய் எதுவும் சம்பவம் பண்ணிட மாட்டியே.” என்ற பயத்தோடு காரில் அமர்ந்தான்.

 

மகனைப் பார்த்த மணிவண்ணன் ஷோ பார்க்கும் ஆர்வத்தில் விரைவாக வீட்டின் முன்பு நிறுத்தினார் காரை. வேகமாக உள்ளே சென்றவள் பின்னே பாவமாக ஓடி வந்தான் அக்னி. அவன் ஓட்டத்தை பார்த்த பரமேஸ்வரி என்னவென்று விசாரிக்க,

 

“நம்ம பையனுக்கு இந்த ஜென்மத்துல ரோடு தான் வீடுன்னு நினைக்கிறேன் பரமு.” என்று சிரித்தார்.

 

 

“அம்மா அப்போ என்னை தயவு செஞ்சு எங்கயாது நாடு கடத்திடுங்க இல்லன்னா கொரியர் வேலை பார்க்க வைச்சு கொன்றுவாங்க.” என்றவளுக்கு ஏற்றார் போல்…

 

அன்பினி தன் ஆடைகளை வேகமாக சுருட்டி வைத்துக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்தவன் கதி கலங்கி கெஞ்சி கொண்டிருக்க, அவளோ வேகமாக கீழ இறங்கினாள். பேரன் பல தோரணையில் கெஞ்சிக் கொண்டிருக்க, “ராசா இதெல்லாம் வேலைக்கு ஆகாது பட்டுன்னு கால்ல விழுந்திடு.” என்று தரமான யோசனையை வழங்கினார். அடுத்த நொடி அவள் பாதத்தை பிடித்துக் கொண்டான். 

 

 

“அன்பு என்ன தப்பு பண்ணன்னு தெரியல தயவுசெஞ்சு வீட்டை விட்டு மட்டும் போய்டாதடி. உன் புருஷன் பாவம் இதுக்கு மேல ரோடு ரோடா அலையுற சக்தி  இல்ல. தாலி கொடுத்த புண்ணியவான மன்னிச்சு விட்டுடுமா.” என்று சரணடைந்து விட்டான்.

 

அப்போதும் அன்பினி எதுவும் பேசாமல் இருக்க, “உன் அடிமைய மன்னிச்சு அருள் புரியுமா தாயே!” என்றவனின் காலை யாரோ பிடித்தார்கள்.

 

கெஞ்சி கொண்டிருக்கும் முக்கியமான வேலையில் அவன் இருக்க தொந்தரவு செய்தது யார் என்று திரும்பிப் பார்த்தான்.

 

“நீ எதுக்குடா என் கால பிடிச்சிட்டு இருக்க.”

 

மச்சானின் காலை விக்ரம் பிடித்துக் கொண்டு, ” தயவு செஞ்சு உன் தங்கச்சிய எனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க சம்மதம் சொல்லு.” என்றான் அவசரமாக.

 

“இப்ப இது ரொம்ப முக்கியம். நானே எங்கடா அவ போய்ட போறான்னு பயத்துல கால பிடிச்சிட்டு இருக்கேன் ச்சீ கால விடுடா.” என்றவன் மனைவியை பார்த்து,

 

“அன்பு இவனை வேற நான் சமாளிக்கணும் டக்குனு என்ன பண்ணன்னு சொல்லுடி.” என்றான்.

 

 

சிரிக்கும் உதட்டை மடித்து கட்டுப்படுத்தியவள், “முதல்ல எந்திரி.” என்றாள்.

 

“எதுக்கு கோவமா இருக்குன்னு சொல்லு.” காரணத்தை கேட்டுக் கொண்டிருக்க,

 

“மச்சான் உங்க பஞ்சாயத்தை அப்புறம் பார்த்துக்கோ. எனக்கு முதல்ல சம்மதம் சொல்லு” தன் காரியத்தில் குறியாக இருந்தான்.

 

பல்லை கடித்த அக்னி, “சும்மா இருடா கொஞ்ச நேரம். அவ போய்டுவா இல்ல என்னை அனுப்பிடுவா.” கோபம் கலந்த பாவமான முகத்தோடு பேசி முடித்தான்.

 

 

“அதனால தான் மச்சான் கேக்குறேன் யாரு வெளிய இருப்பா யாரு உள்ள இருப்பான்னு தெரியாது. அடுத்து நீங்க எப்ப சேருவீங்கன்னு கூட தெரியாது. உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்க எனக்கு வயசு இல்ல மச்சான். உங்க தங்கச்சி வேற அண்ணன் சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு  ஒத்த கால்ல நிக்கிறா. கல்யாண வரம் புரிஞ்சிட்டு  உங்க குடும்ப விவகாரத்தை பாருங்க மச்சான். ” என்றதும் சத்தமாக சிரித்து விட்டாள் அன்பினி.

 

 

“கொஞ்சம் கூட வெக்கமா இல்லையாடா உனக்கு.” 

 

“உங்கள பார்த்ததுக்கு அப்புறம் அதெல்லாம் போயிடுச்சு மச்சான்” என்று பல்லை காட்டினான் விக்ரம்.

 

 

பேச்சுக்கு நடுவில் அக்னி அன்பினியின் காலை விட்டிருக்க அவளோ அங்கிருந்து மறைந்து இருந்தாள். பல பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு அதை கண்டு கொண்ட அக்னி,

 

“அய்யய்யோ அன்பு போயிட்டியா….” என்று பதறி அடித்து எழுந்தான்.

 

எழுந்த வேகத்தில் மீண்டும் விழ, “டேய்! எதுக்குடா இப்ப காலை பிடிச்சி இழுத்த.” தன்னை விழ வைத்த விக்ரமிடம் சண்டைக்கு பாய்ந்தான்.

 

“எனக்கு ஒரு முடிவ சொல்லிட்டு அப்புறம் அன்பு பாசம்னு போ.” என்றவன் மீது கொலை வெறி வந்தது அக்னிக்கு.

 

 

அக்னி எழ முயற்சிக்க, விக்ரம் கீழே விழ வைக்க என்று நிமிடங்கள் ஓடிக்கொண்டிருக்க, “ஆங்கிரி பேர்ட் மேல வா.” சத்தமிட்டாள் அன்பினி.

 

“அன்பு மேலையா இருக்க” என்று குதூகளித்த அக்னி, “இந்தா வந்துட்டேன் டி செல்லம்.” என்று ஓட பார்க்க, விக்ரம் விடவில்லை.

 

“சொன்னா கேளுடா கல்யாணம் பண்ணாத. அப்புறம் சிங்கமா இருந்த நீ பூனையா கால சுத்த வேண்டியதா  இருக்கும்.” தத்துவ ஞானி ஆக மச்சானுக்கு அறிவுரை கூற, கேட்பதாக இல்லை விக்ரம்.

 

“அக்னி பத்து எண்ணி முடிக்கிறதுக்குள்ள மேல வரல நான் நிஜமாவே கிளம்பிடுவேன்.” மேலிருந்து பயம் காட்டினாள் அவனின் மனைவி.

 

 

“அடியே உன் கூட பொறந்தவன் தான்டி விட மாட்றான்.” புலம்பி குழந்தை போல் வெம்பியவன், “இப்ப என்ன தான்டா உனக்கு வேணும்.” என்று கேட்டான்.

 

 

அவனைப் பார்த்து ஒரு மாதிரியாக குழைந்தான் விக்ரம். அதைப் பார்த்தவன் முகம் அஷ்ட கோணலாக மாற, “ச்சீ கருமம்! இந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு இந்த குண்டம்மாவ எப்படிடா கரெக்ட் பண்ண.” என்றதும் அவன் காலை விட்டு எழுந்து நின்ற விக்ரம்,

 

“இன்னொரு தடவை என் வருங்கால பொண்டாட்டிய குண்டம்மான்னு சொன்ன நான் மனுஷனா இருக்க மாட்டேன்.” என்று நெஞ்சை நிமிர்த்தி நின்றான்.

 

“சரிடா நாய் குட்டியா மாறிடு. காலை பிடிக்கிற வேலையாது மிச்சமாகும்.” என நக்கல் அடித்தான் அக்னி. 

 

பத்து பேரை அடித்து சுவைத்தது போல் மூச்சு வாங்கியவன், “வேணாம்டா இந்த விக்ரம் கிட்ட வம்பு வச்சுக்காத.” என்று வசனம் பேச,

 

“ஏன்டா வேதா கிட்ட காட்டி கொடுக்கப் போறியா.” என கேலி செய்து கடுப்பேத்தினான் அக்னி.

 

 

 

“டேய்!” என்று விக்ரம் சட்டையை பிடிக்க, “கடைசி வரைக்கும் உனக்கு கல்யாணம் ஆகாதுடா.” என்று விட்டு படியேறினான். 

 

 

திவ்யா கடுமையாக அவனை முறைக்க, உள்ளுக்குள் நொந்து கொண்டு படிக்கட்டில் ஏறும் அக்னியின் காலை தாவி பிடித்தான். இரண்டு படிக்கட்டு தடுமாறி அமர்ந்தவன், “மேல போகணும் விடுடா.” என்று நழுவ பார்க்க, அவன் விடவில்லை.

 

அதற்குள் அன்பினி பத்து எண்ணி முடிக்கும் நிலையில் இருக்க, “அடுத்து பத்து தான்டா வரப்போகுது சொன்னா கேளு டா என் சாபத்தை வாங்கிக்காத.” ஓட முயற்சி செய்தும் விடாதவன், 

 

“ஓகே சொல்லிட்டு போ.” என்றான்.

 

“இப்ப என்ன தான்டா உனக்கு வேணும்.” தலையில் அடித்துக் கொண்டு அக்னி இறங்கி வர,

 

“என் தங்கச்சி உனக்கு கொடுத்த மாதிரி உன் தங்கச்சிய எனக்கு கொடு.” என்றான் கூச்சம் இல்லாமல்.

 

 

“படிக்கிற யாராவது கேவலமா நினைக்க போறாங்கடா ச்சைக்!” என்ற வார்த்தையில் கூட விக்ரமிற்கு ரோஷம் வரவில்லை அவன் பதிலுக்காக காத்திருக்க, “எடுத்துக்க போடா.”என்று ஓடி விட்டான் தன் அறைக்கு. 

 

***

 

உள்ளே வந்தவனை பின் நின்று அணைத்தாள் அன்பினி. அந்த அழைப்பு சொல்லியது அவள் மகிழ்வை. முகத்தை அவள் புறம் திருப்பியவன், “எதுக்குடி இவ்ளோ நேரம் கோவமா இருந்த” கேட்க,

 

“ரொம்ப நேரமா ஒரு விஷயம் சொல்லணும்னு கூப்பிட்டா நீ கண்டுக்காம கேம் விளையாடுற. ” என்றவளை தன் புறம் கொண்டு வந்து முறைத்தவன்,

 

 

“இது ஒரு காரணம்னு இவ்ளோ நேரம் என்னை கதற விட்டிருக்க. உன்ன….” என அவன் அடிக்க துரத்தினான்.

 

“நான் சாதாரணமா தான் இருந்தேன் நீ தான் ஓவர் ரியாக்ட் பண்ணி குடும்பத்தையே சிரிக்க வச்சுட்ட.” என்றவள் சிக்காமல் ஓடினாள்.

 

“வரவர உனக்கு கொழுப்பு கூடிப் போயிடுச்சுடி. இரு அடக்குறேன்.” என்றவன் கைக்குள் அடக்கிக் கொள்ள, அன்பினியின் பார்வை மயக்கியது அவனை.

 

“என்ன அன்பு அப்படி பார்க்குற.”

 

“லவ் யூ அக்னி” என்று கட்டிக்கொண்டாள்.

 

 

லேசாக சிரித்தவன் அவளை அணைத்துக் கொண்டு, “லவ் யூ அன்பு.” என்று உச்சந்தலையில் முத்தம் வைக்க,

 

“நாள் தள்ளி போயிருக்கு அக்னி.” என்று முகத்தை அவன் நெஞ்சோடு புதைத்துக் கொண்டாள்.

 

“ஓய்!” என அவள் முகத்தை நிமிர்த்த முயற்சிக்க, வெட்கத்தில் இன்னும் புதைத்தாள்.

 

 

“அன்பு ப்ளீஸ்டா பாரு” என கெஞ்ச, லேசாக முகம் பார்த்தவள் உடனே அடங்கினாள் அவனிடம்.

 

குதிக்காத குறையாக வானில் பறந்தவன் ஒரு வழியாக மெத்தையில் சரிந்தான். குளியல் அறையில் இருந்து வந்தவள் பிரக்னன்சி கிட்டை கையில் கொடுத்து, “நீயே பாரு அக்னி” என்றாள்.

 

“என்ன அன்பு பயமா இருக்கா.” என்றவன் மடியில் அமர்ந்து “ரொம்ப ரொம்ப” என்றாள்.

 

தன்மீது நன்றாக சாய்த்து, ” இதுக்கு எதுக்கு பயம் அன்பு. இந்த முறை இல்லன்னா அடுத்த தடவை அவ்ளோ தான்.” சாதாரணமாக ஆறுதல் படுத்த,

 

“கொஞ்சம் கஷ்டமா இருக்கும் அக்னி. கிளம்பும் போது தான் நானே நோட் பண்ணேன். உன் கிட்ட சொல்லலாம்னு பேச்சு கொடுத்தா நீ கண்டுக்கல. அதுலயே பாதி டென்ஷன் வந்துடுச்சு.” பேச்சு கொடுத்துக் கொண்டே தலைகாணியை மடியில் வைத்தவள் பிரக்னன்சி கிட்டை அதில் வைத்து,

 

“சீக்கிரம் பாரு  வெயிட் பண்ண முடியல.” என்றாள்.

 

அவன் பரிசோதிப்பதற்குள் கண்களை மூடிக்கொண்டு, “கன்ஃபார்மா அக்னி.” என்றாள் பதட்டத்தில்.

 

பயத்தில் நடுங்கும் அவள் விழிகளை உள்ளங்கையில் மூடியவன் கைகள் நடுங்கியது. ஒரு சொட்டு நீர் தான் அவை பல நொடிகளுக்குப் பின் சென்றடைந்தது அதில். ஏதோ ஒரு பரவசம் அவனுள் ஊற்றெடுக்க கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 

பயத்தில் அன்பினி உளறிக் கொண்டிருக்க, லேசான கண்ணீர் தேக்கம் அக்னியின் கண்களில். மனைவியின் தோள் மீது முகம் புதைத்து, “வி ஆர் பிரகனண்ட்.” என்று கையை எடுக்க அன்பினி விழிகளில் இரு கோடு தென்பட்டது.

 

 

இரு கோடுகளும் இரு குழந்தைகள் என்று தெரியவர மகிழ்ச்சி இரட்டிப்பானது. குடும்பம் மொத்தமும் அன்பினியை கொண்டாட, செல்வகுமார் மருகி நின்றார். 

 

 

***

 

அன்பினிசித்திரை வளைகாப்பு: 

அவள் மீது கொண்ட பாசம் மொத்தத்தையும் காட்டி விட்டான் வளைகாப்பு நிகழ்ச்சியில் அக்னி. முதல்முறையாக  அவனின் காதலை நினைத்து பெருமை கொள்ள, செல்வகுமார் இல்லாதது ஒரு குறையாக தெரிந்தது. மனைவியின் முகம் வாடுவதற்கு முன் அழைத்து வந்திருந்தான் மாமனாரை. 

 

 

யாரும் ஒதுக்கவும் இல்லை உறவாடவும் இல்லை. மகளுக்கு தந்தையாக நலங்கு வைத்து ஆசீர்வதித்தவர் பக்கத்தில் திவ்யா மட்டுமே நின்றுக் கொண்டிருந்தாள். கிளம்ப முற்பட்டவரை சாப்பிட வைத்தவள் வழி அனுப்பினாள். மற்றவரின் ஒதுக்கதை விட திவ்யாவின் அன்பு அவரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்த வைக்க, யாரையும் கேட்காமல் மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தார். 

 

 

அனைவரும் அவரையே பார்த்திருக்க, “செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்க வரல. கேட்கிற தகுதியும் எனக்கு இல்லை. உங்க கிட்ட கேட்க வந்திருக்கிறது என் மருமகளை. செஞ்ச பாவத்துக்கும் சேர்த்து அவள நல்லா பார்த்துப்பேன். என் மகனுக்கு உங்க பொண்ணு கொடுங்க. ” நேரடியாக மணிவண்ணன் தம்பதிகளை பார்த்து கேட்க, அவர்களோ அக்னியை பார்த்தார்கள்.

 

 

“உங்களை நம்பி என் தங்கச்சிய அனுப்ப தயாரா இல்லை.” என்றதும் அவர் முகம் வாடி விட,

 

“ஆனா அவன நம்பி அனுப்புவேன் முழு மனசோட.” என்றான் விக்ரமை கைகாட்டி.

 

 

பிறகு என்ன அடுத்த நிகழ்வு நடந்தேறியது வீட்டில். அன்பினி பிரசவத்திற்கு முன் திருமணத்தை முடிக்க எண்ணியவர்கள் ஒரு மாதத்தில் நடத்தியும் காட்டி விட்டார்கள். மகளை தாய் வீட்டில் சேர்த்த நிம்மதியோடு பரமேஸ்வரி கடமையை முடித்து விட, பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததில் அன்னபூரணி மனம் மகிழ்ந்தார். 

 

அன்பினி பிரசவத்திற்கு முன் மனைவியை தூக்கி சென்றான் ஹனிமூனுக்கு விக்ரம். ஆறு நாட்களில் திரும்பி வந்தவன் சமத்தாக கல்லூரி வாசலில் இறக்கி விட்டான் . காதல் பாடம் முடிந்து கல்லூரி பாடத்தை சரியாக கற்பித்தவள் அரக்க பறக்க ஓடினாள் மருத்துவமனைக்கு.

 

 

அக்னியின் புதல்வர்கள் இருவரும் மண்ணில் தடம் பதித்து விட, அத்தை அள்ளிக் கொண்டாள். முன்னரே விக்ரமிற்கு அவள் கட்டளை இட்டிருக்க இரண்டு மருமகன்களையும் தங்கச் சங்கிலி போட்டு தான் தூக்கினான். அடுத்த கல்யாணத்திற்கு இப்பவே அடி போடும் எண்ணத்தில். 

 

 

“என்ன பேரா அடுத்த 25 வருஷத்த இப்பவே பிளான் பண்ணிட்டியா.” என்று அன்னபூரணி கொள்ளு பேரன்களை பார்த்துக் கொண்டு கேலி பேச,

 

“ஆமாம் பாட்டி இனிமே தான் எனக்கு கடமை நிறைய இருக்கு” என்றான் திவ்யாவை அர்த்தத்தோடு பார்த்து.

 

 

முன்னர் விட செல்வகுமார் உறவு பழகிப்போனது அனைவருக்கும். உரிமையோடு உள்ளே வந்தவர் இரு பேரன்களையும் பார்க்க, ஒன்று அழுதது ஒன்று சிரித்தது தாத்தாவை கண்டு.

 

அழுத குழந்தையை தூக்காமல் சிரித்த குழந்தையை அன்போடு தூக்க, சரியாக அவர் நெஞ்சில் சிறுநீர் கழித்தது. அக்னி கமுக்கமாக சிரித்துக் கொண்டிருந்தான் அவருக்கு தெரியாமல். பேரன் செயலைக் கண்டவர் மனதில்,

 

‘இவன் என் மருமகன் சந்திரா மாதிரி’ நினைத்துக் கொண்டார்.

 

 

கையில் இருக்கும் பேரனை மகளிடத்தில் கொடுத்து விட்டு அழுத குழந்தையை தூக்க, அதுவோ இன்னும் சத்தமாக அழத் துவங்கியது. ‘இது நம்ம பொண்ணு மாதிரி பட்டாசு’ என இரு குழந்தைகளின் குணத்தை சரியாக கணித்து விட்டார் செல்வகுமார்.

 

 

மிஸ்ஸஸ் அக்னியின் உலகம் மாறி போனது. வேலை வெட்டி எதற்கும் செல்லாமல் மூவருக்கும் காவலாய் அவன் நிற்க, அவனைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு அன்பினிக்கு அதிகமானது. 

 

 

****

 

மனைவி முதுகலை பட்ட படிப்பு முடிக்கும் வரை அமைதி காத்த விக்ரம் மருமகன்களுக்கு விளையாட வாரிசு ஒன்றை உருவாக்கினான். அன்பினிக்கு என்ன செய்தார்களோ  அதையே பிறந்த பெண்ணிற்கும் செய்தார்கள். இந்த முறை குடும்பத்தின் மகிழ்விற்கு எல்லை அதிகமானது. செல்வகுமார் மருமகளின் நெருக்கமாகி போக அவரே முதல் நலங்கு வைத்தார். மகளின் வளர்ப்பை நினைத்து பெற்றோர்கள் உள்ளம் மகிழ, அக்னி ஓரளவிற்கு சகஜமாகி விட்டான் அவர் விஷயத்தில். 

 

அவனைப் போல் பெற்ற மகன்கள் இருவரும் சமாதானமாகவில்லை. அனைவரிடமும் சேட்டைகளை செய்வார்கள் தான் ஆனால் செல்வகுமாரிடம் அவை அதிகமாக வெளிப்படும். இன்றும் வளைகாப்பு நிகழ்ச்சியில் அத்தையோடு ஆளுக்கு ஒரு பக்கம் நின்றிருந்தார்கள். ஒரே மாதிரி வெள்ளை சட்டை, வேட்டி , மைனர் செயின் என்று  தோரணையில் நிற்கும் பேரன்களை தாண்டி அவர் நலங்கு வைப்பதற்குள் போதும் என்றாகி விட்டது. 

 

 

“தாட்டா அத்த கையில வை” என்று அகரனும்,

 

“தாட்டா இங்தா வைக்னு ஃபஸ்ட்.” என்று அகிலனும் பாடாய் படுத்தி விட்டனர்.

 

விக்ரம் குணத்தை போல் ஒரு மகள் பிறந்து விட அதற்கு பெயர் சூட்டினார்கள்  “சித்திரைச் செல்வி” என்று. அவன் மருமகன்களுக்கு செய்தது போல் மருமகன்கள் இருவரும் ஆளுக்கு ஒரு தங்கச்சங்கிலியை போட்டு உரிமை கொண்டாட ஆரம்பித்தார்கள் சித்திரையை.

 

 

ஒவ்வொரு வருடமும் அக்னி தேவன் சித்திரை மாதத்தில் நன்றாக விளையாடி எட்டு வருடங்களை கடத்தி ஒன்பதாவது வருடத்தில் இருக்கிறான். அகரன், அகிலன் இருவரும் மட மடவென வளர்ந்து விட, சித்திரை மெல்ல வளர்ந்திருந்தாள் மாமன் மகன்களோடு விளையாடும் அளவிற்கு. 

 

 

வார விடுமுறை நாள் அக்னியின் வீட்டில் தான் அனைவருக்கும் பொழுது கழியும். மனைவியோடு தனிமை கழிக்க விக்ரம் விரும்ப, மகள் அடம்பிடித்து அழைத்துச் சென்று விடுவாள். இன்றும் அது போல் அடம் பிடித்தாள். கெஞ்சி கொஞ்சி அழகுப்படுத்தி அழைத்துச் சென்றான்.

 

 

வாசலில் கார் நின்றதும், “அகரா… அகிலா..” என்று சித்திரை ஓட, அவர்களோ பிசியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

 

“டேய் அகரா இதுக்குள்ள வை டா.”

 

“அதையும் எடுத்து போடுடா”

 

“இது போதுமா அகிலன்” 

 

“இதுவே ரொம்ப அதிகம் டா.” 

 

அக்னி அன்பினி சாயல்கள் இருவரும் அலமாரியில் இருந்த துணிகளை சிறு கையால் கடினப்பட்டு பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தார்கள். 

 

“அகிலா என்ன பண்ற.” என்ற சித்திரை பார்த்ததும், “சித்து” என்று கட்டிக் கொண்டான் அகிலன்.

 

 

அந்த சத்தத்தில் அகரனும் அவர்களோடு இணைந்து விட, “எங்க போறீங்க.” துணி மூட்டைகளை பார்த்து கேட்டாள் சித்திரை செல்வி.

 

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, “சித்து பாப்பா நீ படி இறங்கி பொறுமையா வா.” என்று விட்டு மூட்டைகளை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு படி இறங்கினார்கள் இரட்டையர்கள். 

 

 

மருமகன்களை பார்த்த விக்ரம், “என்னடா பண்றீங்க.” என்றபடி பெட்டிகளை கீழ் கொண்டு வந்தான். 

 

“வீட்டை விட்டு வெளிய போறோம் மாமா.” என கோரசாக இரட்டையர்கள் கூற, குடும்பமே முழித்தது. 

 

அக்னி அங்கிருந்து நழுவ பார்க்க, “எங்கடா தனியா  மாட்டி விட்டுட்டு போற.” கழுத்தைப் பிடித்து தன் புறம் வைத்துக் கொண்டாள் அன்பினி.

 

 

“எதுக்கு” என்று  அக்கறையோடு மருமகன்கள் உயரத்திற்கு அமர்ந்து திவ்யா கேட்க,

 

 

“டார்ச்சர் பண்றாங்க அத்தை. டெய்லி இவங்களோட முடியல எங்களால. ராத்திரி எல்லாம் தூங்காமல் பால்கனியில நின்னு கதை பேசுறாங்க.” என்ற அகிலன் பெற்றோர்களை முறைக்க,

 

“வீக் டேஸ் ஆனா போதும் எங்களை விட்டுட்டு நடு ராத்திரில காணாம போயிடுறாங்க.” குறைப்பட்டுக் கொண்டான் அகரன்.

 

 

அங்கிருந்த அனைவரும் அவர்களைப் பார்த்து சிரிக்க, “போன போறாங்க அதுக்கு எதுக்கு நீ ஃபீல் பண்ற அகரன். அவங்க இல்லாம நிம்மதியா இருக்க வேண்டியது தான.”

 

அகிலன், “எங்க அத்தை தூங்க முடியுது என்னோட கிளாஸ் ஃப்ரெண்ட் மீனா இருக்கால..” என்றதும் திவ்யாவிற்கு யார் என்று தெரியவில்லை என்றாலும் தெரிவது போல் தலையாட்டினாள்.

 

“அந்தப் பொண்ணு ஸ்கூல்ல வந்து எங்கள ரொம்ப கிண்டல் பண்ணுது.” என்றதும் கதை கேட்கும் ஆர்வத்தில் மனைவி பக்கத்தில் அமர்ந்த விக்ரம் மகளையும் அமர்த்திக் கொண்டு,

 

“எதுக்குடா” என கேட்டான்.

 

அகரன், “இவங்க ரெண்டு பேரும் நடு ராத்திரில ரோட்ல நின்னு டான்ஸ் ஆடுறாங்கன்னு சொல்லி தான்.” என்றான் பெற்றோர்களின் கூத்தை பார்க்க முடியாமல். 

 

 

அக்னி அன்பினி இருவரும் அனைவரின் முன்பும் குற்றவாளியாக நிற்க, குடும்பமே இரட்டையர்கள் பின் தான் நின்றது. இன்றோடு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற தோரணையில் இரட்டையர்கள் விடாமல் வாதம் செய்து கொண்டிருக்க,

 

“அத்தை மாமா ஏன் சேட்டை பண்றீங்க. அகிலா அகரா ரெண்டு பேரையும் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுவேன்.” சித்திரை அழகாக மிரட்ட, கம்பீரமாக நின்றார்கள் அகிலனும், அகரனும்.

 

“நீங்க போக வேணாம் நாங்களே வீட்டை விட்டு போறோம்.” பெருந்தன்மையோடு சண்டையை முடிவுக்கு கொண்டு வந்தான் அக்னி.

 

“ஆமா எங்களால யாருக்கும் தொந்தரவு வேணாம் நாங்களே வெளிய போறோம்.” என்ற அன்பினி கண் அசைக்க இருவரும் சிட்டாக பறந்து விட்டார்கள் அடுத்த ஹனிமூனுக்கு .

 

வித் லவ் அக்னி சித்திரை….

 

முற்றும்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
11
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *

    1 Comment

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.