322 views

 

வளையல் ஃபங்க்ஷனில் போட்ட கை வளையல்கள் யாவும் குலுங்கிச் சத்தமெழுப்பும் போதெல்லாம் இளந்தளிருக்கோ மனதில் ஒரு இதத்தைத் தருவித்தது. 

கல்யாணம் நடந்து முடியும் வரை வளையல்கள் உடையாமல் பத்திரமாக கைகளில் இருக்க வேண்டும் என்று கூறியதால், அவ்வப்போது எண்ணிப் பார்த்துக் கொள்வாள். 

அந்தச் சத்தம் சுபாஷினிக்குமே மிகவும் பிடித்திருந்தது.இயற்கையாகவே ஒரு சில பெண்களுக்கு கொலுசு மிகவும் பிடித்த ஆபரணம். அதன் ஒலி காதுக்கு இனிமை அளிப்பதைப் போல, இந்த வளையங்களும் இனிய ஓசையை எழுப்பியவாறே இருக்க, அதில் மனம் லயித்தனர் சகோதரிகள். 

இப்படியான கட்டத்தில் தான், முகூர்த்தக்கால் நடும் விழாவும் நிகழ்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. 

இந்நிகழ்ச்சியின் முக்கியமான விஷயமே பெண் வீட்டார் மணமகன் வீட்டிற்குச் சென்று தான் விழாவைச் சிறப்பிக்க வேண்டும். 

பிரம்ம முகூர்த்தத்தில் இதைச் செய்ய வேண்டும் என்பதால் அதிகாலை வேளையில் விரைந்து எழுந்து, தங்களது சம்பந்தியின் வீட்டிற்குச் சென்றனர் சிவசங்கரி குடும்பத்தினர். 

மிதுனாவும் வந்திருந்ததால், அவளையும் முறைப்படி வரவேற்று உள்ளே அழைத்த சுமதி மற்றும் ரோகிணி குடும்பத்தினர், 

“ஆறு மணிக்குள்ள முகூர்த்தக்கால் நட்றனும் சம்பந்தி.அதுக்கு முன்னாடி டீ குடிங்க” என்று அனைவருக்கும் தேநீர் தயாரித்துக் கொடுத்தனர். 

“எப்படி இருக்கீங்க?” என்று அனைவரையும் பார்த்துக் கேட்டாலும், தன்னவளிடம் தான் பார்வையைப் பதித்திருந்தான் கோவர்த்தனன். 

அவளும் மெல்லிய சிரிப்பைச் சிந்தி விட்டு, மற்றவர்களின் கவனத்தை ஈர்க்காத வண்ணம் தான் நலமாக உள்ளதாகத் தெரிவித்தாள். 

ஆறு மணிக்கு சிறிது நேரம் முன்னர், முகூர்த்தக்கால் நடும் விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தயாராக இருந்தது. 

வீட்டின் முன்னால், வடகிழக்குப் பகுதியில், மஞ்சள், குங்குமம் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பந்தக்காலை வீட்டில் பெரியவரான பரதனை நட வைத்தனர். 

அங்கிருக்கும் யாவருமே வீட்டிலுள்ளவர்களுக்கு நல்லது மட்டுமே நினைப்பவர்கள் ஆதலால், அனைவருமே பரதனுக்குப் பக்கபலமாக நின்று பந்தக்காலை நட வேண்டும் என்று முடிவெடுத்தனர். 

அதற்கு முன்னர் தேங்காய் உடைத்து, சாம்பிராணி காட்டி பூஜை செய்து முடித்து விட்டு, நீர், பால் மற்றும் நவதானியங்களை அடியில் ஊற்ற வேண்டும். 

அதன் பிறகும் மரத்திற்குப் பூஜை செய்து முடிக்க வேண்டும். 

திருமணச் சடங்குகள் எல்லாவற்றையும் முடிப்பதற்கு முன்னரும், முடித்தப் பின்னரும் பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் அசைவம் உண்ணக் கூடாது. 

பூ வைத்து அலங்கரிக்கப்பட்டு வீட்டின் முன்னால் நட்டு வைத்திருந்த பந்தக்காலை கோவர்த்தனன் மற்றும் இளந்தளிரின் கண்கள் ஆசையோடு பார்வையிட்டன. 

மணமக்கள் வெளியே நிற்கக் கூடாது என்பதால், 

“கோவர்த்தனா, இளா உள்ள வாங்க” என்று சுமதி அவர்களை வீட்டிற்குள் அழைத்தார். 

மிதுனாவைத் தனித்து விடாமல் தங்களுடன் அமர வைத்துக் கொண்டனர் இளந்தளிர், சுபாஷினி மற்றும் மைதிலி. 

அதனாலேயோ? என்னவோ? மிதுனாவிற்கு இளந்தளிரின் வீட்டார் அனைவரையும் பிடித்துப் போனது. 

இனி திருமணத்தன்று முந்தைய நாள் மாலை நிகழப் போகும், நலங்குக்கும் விஜயம் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அவளுள் தோன்றியது. 

நல்ல எண்ணங்களும், நேர்மறையான அதிர்வுகளும் இருக்கும் இந்த இல்லத்திற்குள் நுழையும் ஒவ்வொருவரும் இதை மனதார உணர்ந்தே இருந்தனர் அவ்வரிசையில் மிதுனாவும் சேர்ந்து கொண்டாள். 

மதிய உணவிற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்க, ஆண்கள் காய் நறுக்கிக் கொண்டிருந்தனர். பெண்கள் சமையலில் ஈடுபட்டனர். 

“வெங்காயம் போதுமா ரோகிணி?” என்று பரதன் கண் எரிச்சலுடன் மனைவியிடம் கேட்டார். 

“போதும்ங்க.அதை வச்சிட்டு முகம் கழுவிட்டு வாங்க” என்றார் ரோகிணி. 

“ஹரீஷ் ! வெண்டைக்காய் இன்னும் கொஞ்சம் அதிகமாக கட் பண்ணு. இது பத்தாது” என்று மகனிடம் கூறிவிட்டு, சமையலறைக்குள் சென்றார். 

இளந்தளிர், “சாரி மிது. இங்க கல்யாணம் முடியுற வரைக்கும் வெஜ் மட்டும் தான்.இல்லைன்னா நான் வெஜ் ஐட்டம்ஸூம் செஞ்சிருப்போம். மேரேஜ் முடிஞ்சதும் நான் உனக்குத் தனியா ட்ரீட் வைக்கிறேன்” என்று மன்னிப்புக் கேட்டாள் தோழியிடம். 

அதைக் கேட்ட மிதுனாவோ, “அச்சோ இளா!! இட்ஸ் ஓகே. அதெல்லாம் அப்போ பார்த்துக்கலாம்.நீ வொர்ரி பண்ணிக்காத.மேரேஜ்ல இதெல்லாம் இருக்கும் தான! விடு” என்று கூறினாள். 

அனைவரும் உணவு அருந்திய பின்னர், 

மிதுனா சென்றதும், மற்றவர்கள், பத்திரிக்கைப் பற்றிய விஷயத்தைப் பேசினர். 

“மண்டபம் பார்த்தாச்சு,சாப்பாட்டுக்குச் சொல்லியாச்சு.வேற எதுவும் இருக்கா?” என்று பரதன் வினவினார். 

“எல்லாமே நம்ம எல்லாரும் நல்லா பார்த்து வச்சுட்டோம் அண்ணா. வேற எந்த வேலையும் இல்லை.இனி பொண்ணு அழச்சுட்டுப் போறதுல இருந்து தான் வேலையே ஸ்டார்ட் ஆகுது” என்று சிவசங்கரி கூறினார். 

மாப்பிள்ளை, பெண் மற்றும் தங்கைகளை அறைக்கு அனுப்பி விட்டு இவர்கள் இங்கு அமர்ந்திருந்தனர். 

🌸🌸🌸

இளந்தளிர், “சுபா! பக்கத்துல வந்து உக்காரு. மைதிலி எனக்கு லெஃப்ட் சைட் வந்து உக்காரு” என்று அவர்களை வலப்புறம், இடப்புறம் அமர்த்திக் கொண்டாள். 

அக்காவின் செய்கைப் புரியவில்லை என்றாலும், அவள் சொன்னதைச் செய்தார்கள் இருவரும். 

இரண்டு நாட்களில் திருமணம் என்ற சந்தோஷம் உள் மனதில் கொட்டிக் கிடந்தாலும், தனக்குள் எழுந்த பதட்டத்தைத் தங்கைகளின் அருகாமையில் குறைக்க எண்ணினாள் இளந்தளிர். 

அப்படியே அவர்களிடம் இலகுவாகப் பேச்சுக் கொடுக்க முயற்சித்தாள். 

“மேரேஜூக்கு நீங்க நிறைய ப்ளான் வச்சிருக்கீங்க போலயே?” 

“ஆமாம் அக்கா. டான்ஸ் ஆடலாம்ன்னு இருந்தோம். ஆனால் கடைசி நிமிஷத்துல வேண்டாம்ன்னு விட்டுட்டோம். நிறைய ரிலேடிவ்ஸ் வரலைன்னு இருந்தாலும், நாம மட்டும் ஃபேமிலியோட இருக்கிறது தான் எங்களுக்குப் பிடிச்சிருக்கு. அதனால் மேரேஜ் முடிஞ்சு ஈவ்னிங் அதை ப்ளான் செய்திருக்கோம்” என்றாள் மைதிலி. 

“ஜஸ்ட் ஒரு மணி நேரம் தான் அதெல்லாம் நடக்கும். அதுக்கப்புறம் நீங்க அவங்க வீட்டுக்குப் போய்டுவீங்கள்ல” என்று குரலில் சுரத்தே இல்லாமல் கூறினாள் சுபாஷினி. 

எதுவும் பேச இயலவில்லை பெண்ணவளால்.அமைதியாக இருவரின் பேச்சையும் கேட்க ஆரம்பித்து விட்டாள். 

மாலை நெருங்கியதும், கிளம்பத் தயாரான ஆடவனோ,தன்னவளின் மலர்ச்சியான முகத்துடன், கலங்கிப் போயிருந்தக் கண்களையும் காண தவறவில்லை.

ஏன் என்று இப்போது கேட்க வேண்டாம் என்று நினைத்தவன், அவளைப் பார்த்துப் புன்னகைக்குமாறு சைகை செய்தான். 

அவன் சொன்னது போல் இவளும் சிறு புன்னகை உதிர்த்தாள் தான் அதிலும் இவனுக்குத் திருப்தியில்லை. 

தலையசைப்புடன் வெளியேறினான் கோவர்த்தனன். 

இவர்கள் இருவருக்கும் இடையிலான, இப்பார்வைகள்  யாவற்றையும் வீட்டினர் அறியவில்லை. 

🌸🌸🌸

 இளந்தளிர் எதிர்பார்த்தது போன்றே, 

குறுஞ்செய்தியில் கோவர்த்தனன் அவளது கலக்கத்திற்கான காரணத்தைக் கேட்டான். 

அவளும் மறைக்காமல் கூறி விட்டாள். 

“இன்னும் ரெண்டே நாள் தான் தளிர்.கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணிக்கோ” என்று அவளிடம் கூறினான் கோவர்த்தனன். 

வீடே கல்யாணக் களையில் திளைத்து இருந்தது. நாட்கள் இரண்டு என்பதாலேயே, துரிதமாக கல்யாணத்திற்குத் தயார்படுத்திக் கொண்டு இருந்தனர். 

முக அலங்காரம், தலை அலங்காரம் எல்லாவற்றிற்கும், நிச்சயத்திற்கு வந்த பியூட்டிஷியனே தயாராக இருந்தார். 

எனவே அவரிடமே அலங்காரம் செய்து கொள்ள முடிவெடுத்தாள் இளந்தளிர். 

சொந்தங்களால் மண்டபம் நிறையாது என்பது முன்னரே தெரிந்திருந்ததால், அலுவலக நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரைத் தவறாது அழைத்திருந்தனர். 

சீர் வரிசைகளைப் பற்றி இன்னமும் சுமதியோ, கோவர்த்தனனோ வாய் திறக்கவில்லை என்பதால் தன் மகளுக்காகச் செய்ய வேண்டியதை சிவசங்கரி செய்ய நினைத்தார். 

அது மட்டுமில்லாமல், சுபாஷினியும் அக்காவிற்காக என்று தனியாக சிறப்புப் பரிசொன்றை வாங்கி வைத்திருந்தாள்.

ஹரீஷோ நண்பனுக்காக அவனுடைய வேலையையும் சேர்த்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். 

“நான் வீட்லயே சிஸ்டம்ல வேலையைப் பார்த்துடறேன்டா. நீ ஏன் இப்படி எக்ஸ்ட்ரா என் வேலையையும் பார்த்துட்டு இருக்க?” என்றான் கோவர்த்தனன். 

“விடுடா.நான் எதுவும் ஸ்ட்ரெய்ன் பண்ணல. உன் வேலையை ரெண்டு நாள் கூட பார்க்க மாட்டேனா?” என்று நண்பனுடைய வேலையை ஹரீஷே பார்த்தான். 

சுபாஷினி, “அக்கா ! சாப்பாடு செய்துட்டோம். நாங்க நாம அம்மா கூட சேர்ந்து மாடியில் சாப்பிடுவோம்” என்று அழைத்தாள் சகோதரியை. 

“சரி சுபா” என சுட்டு வைத்த தோசைகளை எடுத்துக் கொண்டு, இருவரும் மாடிப்படி ஏறினர். 

சுபா அங்கேயிருக்க, இளந்தளிரோ, 

“அம்மா! மேலே வாங்க. இங்க உக்காந்து இன்னைக்கு டின்னர் சாப்பிடலாம்” என்று சிவசங்கரியை அழைத்தாள். 

மூத்த மகளின் குரலைக் கேட்டதும், 

மாடிக்கு விரைந்தார். 

 அவர் வந்து அமர்ந்ததும், ஹாட் பாக்ஸில் இருந்த தோசைகளைத் தட்டில் பகிர்ந்தளித்தாள் இளந்தளிர். 

சட்னி, சாம்பார் ஊற்றும் வேலை சுபாஷினிக்கு. 

என்ன செய்தாலும் இவ்விருவருக்கும் இளந்தளிரைப் பிரியப் போகிறோம் என்ற உணர்வையோ, எண்ணத்தையோ உதாசீனம் செய்ய இயலவில்லை. 

மகள்கள் முன்னிலையில் தான் உடைந்து விடக் கூடாது என்று சிவசங்கரி அதிகம் காட்டிக் கொள்ளவில்லை. 

“இதே இடத்தில் தான் உக்காந்து உன்கிட்ட கல்யாணத்தைப் பத்திக் கேட்டுட்டு இருந்தேன்.இப்போ கல்யாணமே நடக்கப் போகுது இளா! மாப்பிள்ளை, அவரோட அம்மான்னு எல்லாருமே உன்னைச் சுத்தி நல்லவங்களா இருக்காங்க. ஆனாலும், எதையும் எதிர்பார்க்காதே.நல்லதையே நினை. ஆனால், நல்லது மட்டுமே நடக்கும்னு நினைக்காத.மனுஷங்க நல்லவங்களா இருந்தால், சூழ்நிலை எப்படி மாறும்னு தெரியாது. அதுனால தான் சொல்றேன்”

சற்று இடைவெளி விட்டு, 

“இது உனக்கு மட்டுமில்லை. அந்த வீட்ல எல்லாருக்காகவும் தான் சொல்றேன்.சுமதியும் உன்கிட்ட நல்லவிதமாக நடந்துக்குறா. மாப்பிள்ளையைப் பத்தி சொல்லவே வேணாம். தங்கமானவர்.நீயும் அந்த வீட்ல உன் குணத்துக்கு ஏற்ற மாதிரி பெருந்திக்குவ.எல்லாத்தையும் ஆராய்ந்துப் பாரு.முடிவுகளும் அப்படித்தான் இருக்கனும். ஆனால் அது எல்லாருக்கும் நன்மையைக் கொடுக்குமான்னும் யோசிச்சு முடிவெடு” என்று அறிவுரை கூறினாலும், 

ஒரு கட்டத்தில் தன்னையும் அறியாமல் நெகிழ்ந்து போனார் சிவசங்கரி. 

அமைதியாக தாய் கூறியதைக் கேட்ட இளந்தளிர், அவரது கரத்தைப் பற்றிக் கொண்டாள். 

அதில் தன்னிலை அடைந்தவர், 

“சுபா! நாளைக்கு ஞாபகப்படுத்து. இளந்தளிருக்கு வெள்ளி மோதிரம் எடுத்து வச்சு இருந்தேன் அதை அவளுக்குப் போட்டு விடனும்” என்று கூறவும், 

சின்ன மகள் சரி என தலையசைத்தாள். 

“எதுக்கு அம்மா வெள்ளி மோதிரம்?” – இளந்தளிர். 

“அதுவா! நீ இங்க இருந்து உன் புகுந்த வீட்டுக்குப் போற நேரத்துல, நீ எதையாவது குடுத்துட்டுப் போகனும். வெள்ளி மோதிரத்தைக் குடுத்துட்டுப் போறது நம்ம வீட்டு ஐதீகம் ” என்றார் தாய். 

தோசைகள் காலியானதும் தட்டிலேயே கையைக் கழுவி விட்டு, இன்னும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். 

“சுபா! நீ தான் மாப்பிள்ளைக்கு மெட்டிப் போடப் போற” என்றார் சிவசங்கரி. 

“ஓஹோ…! சூப்பர் மா. மைதிலி அக்காவுக்கு வளையல் போட்ட மாதிரி நான் மாமாவுக்கு மெட்டிப் போட்டு விடனுமா?” என்றாள் சுபாஷினி. 

“ஆமா ம்மா.நீ தான் அதைப் பண்ணனும்.இதுக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரவங்க உனக்கு ட்ரெஸ் எடுத்துக் குடுக்கனும்னு சொன்னாங்க. நான் தான் கொஞ்ச நாள் போகட்டும். கல்யாணம் முடிஞ்சுப் பாத்துக்கலாம்னு சொல்லிட்டேன்” 

ஆம். மாப்பிள்ளைக்குப் பெண்ணின் தங்கை தான் மெட்டி அணிவிக்க வேண்டும். இது கல்யாணத்தில் ஒரு மிக முக்கியமான ஐதீகம். 

அந்த மெட்டி விஷயத்தைப் பற்றி கோவர்த்தனனிடம் பகிர்ந்து கொண்டாள் இளந்தளிர். 

“ஆமா இளா. அம்மாவும் சொன்னாங்க. மறக்காமல் ஆஃப்டர் மேரேஜ் சுபாவுக்கு ட்ரெஸ் எடுத்துக் குடுக்கனும்” என்று அவனும் கூறினான் கோவர்த்தனன். 

 

  • தொடரும்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்