அத்தியாயம் 30
ராணிம்மாவின் உடல் நிலை சரியாகும் வரை, மாதவே உடன் இருந்து பார்த்துக் கொண்டான். நான்கு நாட்களும் மின்னல் வேகத்தில் கடந்திட, அவர்கள் கிளம்பும் நேரமும் வந்தது.
“ரொம்ப தேங்க்ஸ் டாக்டரே!” எனப் புன்னகையுடன் கூறிய ரோஜாவைக் கண்டு இளநகை புரிந்தவன், “வெறும் தேங்க்ஸ் மட்டும் தானா?” எனக் கேட்டதில், “ஃபீஸ் எல்லாம் கட்டிட்டேனே?” என்றாள் குழப்பத்துடன்.
அவளை வேற்றுக்கிரகவாசி போல பார்த்து வைத்த மாதவ், மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டு, “கிளம்புமா!” என்று கையெடுத்து கும்பிட்டான். பின்னே, அவள் மீது ஒவ்வொரு நொடியும் ஏற்பட்ட உணர்வுகளை அவள் கிளம்பும் போது தானே காதல் என்று கண்டறிந்தான்.
அதே உணர்வு அவளுக்கும் இருக்க வேண்டுமல்லவா? “அப்பாடா… ஹாஸ்பிடல்ல அடைச்ச மாதிரி இருக்கு. ஒரு வழியா வீட்டுக்கு கிளம்பியாச்சு” என்று பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தவளுக்கு, இவனது நினைவு கூட வரவில்லையே.
அவள் கிளம்பி ஒரு வாரம் கடந்திருக்க, மாதவிற்கு இருப்பு கொள்ளவில்லை.
ரோஜாவின் பூ முகம் அவன் மனக்கண்ணில் தோன்றி இம்சித்தது. அவளைக் காண வேண்டி ஒவ்வொரு அணுவும் இம்சை செய்ய, இறுதியில், அவளது வீட்டிற்கே சென்று விட்டான்.
ஒரு படுக்கையறை கொண்ட சிறிய வீடு தான். பக்கவாட்டில் இருந்த அடுக்களையில் ராணிம்மா சமைத்துக் கொண்டிருக்க, அறையில் இருந்து காதில் சிறு காதணியை மாட்டியபடி வெளியில் வந்த ரோஜா, “அம்மா, எத்தனை தடவ சொல்றது, நானே சமைச்சு எடுத்துக்குறேன்னு. ஏன் இப்படி ஸ்ட்ரெய்ன் பண்றீங்க?” என்று குறைபட்டாள்.
“அங்கேயும் போய் நீ அடுப்புல தான் நிக்கணும். வீட்லயும் சமைக்கணுமாமா?” என்றவர் அவளுக்கு பொங்கலை தட்டில் வைத்துக் கொடுக்க, “உள்ள வரலாமா?” எனக் குரல் கொடுத்தான் மாதவ்.
அவனைக் கண்டு இரு பெண்களின் முகமும் வியப்பில் மலர, “வா தம்பி… இதென்ன கேள்வி வரலாமான்னு.” என பாசம் பொங்க அழைத்த ராணிம்மா, அவனுக்கும் ஒரு தட்டில் பொங்கலை எடுத்து வைத்தார்.
வந்த விஷயத்தை மறந்து விட்டு, பொங்கலில் ஐக்கியமானவன், “இன்னும் உங்க கைப்பக்குவம் மாறவே இல்ல ராணிம்மா.” எனக் கண்ணை மூடி ரசித்துக் கூற, “இதை சொல்ல தான் இவ்ளோ தூரம் வந்தீங்களா” என்பது போல ரோஜா பார்த்து வைத்தாள்.
அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், உண்டு முடித்தவன், “இப்ப உங்களுக்கு எப்படி இருக்கு?” என்று ராணியிடம் விசாரித்திட, “நீங்க பேசிட்டு இருங்க டாக்டரே. எனக்கு டைம் ஆச்சு கிளம்புறேன்.” என்று அவசரகதியில் கிளம்ப எத்தனித்தவளை நிறுத்திய மாதவ், “நான் டிராப் பண்றேன் இரு…” என்று அவனும் உடன் கிளம்பினான்.
அதில் தயக்கம் கொண்டு தாயைப் பார்த்தவள், “வேணாம்… நானே போயிடுறேன்” என்றிட, “உனக்கு சேதாரம் ஆகமா விட்டுடுறேன் பாட்டி…” என்று கிண்டலடித்ததில், அவள் நெளிந்தாள்.
ராணி தான், “தம்பி சொல்லுதுல போயிட்டு வா ரோஜா.” என்றதில், அவளும் அவனுடன் கிளம்பினாள்.
மாதவ்க்கு சற்று கடுப்பு தான். அதனை மறைத்துக் கொண்டு, அவன் புதிதாய் வாங்கிய ஐ – 20 யின் முன் பக்க கதவை திறந்து விட, அவள் பின்னால் ஏறிக்கொண்டதில், இன்னும் சுறுசுறுவென கோபம் வந்தது அவனுக்கு.
அமைதியாக காரை கிளப்பியவன், வீட்டில் இருந்து சற்று தூரம் தள்ளி நிறுத்தி விட்டு, வேகமாக இறங்கி பின் பக்கம் வந்து அவளருகில் அவளை இடித்தபடி அமர்ந்தான்.
அவளோ திகைத்து விழிக்க, “என்னமோ நீ என் பக்கத்துல உட்காந்ததே இல்லையா? வாரம் வாரம் சீரிஸ் பாக்குறேன்னு சொல்லி, என்ன உரசிட்டு தான உட்காந்து இருப்ப. அதுலயும் என் பவுல்ல இருக்குற பாப்கார்னை புடிங்கி தின்னுட்டு, நான் வாய்க்கு கொண்டு போனதையும் சேர்த்து ஆட்டைய போட்டப்ப கூட நான் சும்மா தான இருந்தேன். இதுல, படம் பாக்கும் போதே என் மேல சாஞ்சு மட்டையாகிடுவ. நான் என்னை உன்னை தள்ளியா விட்டேன். இப்ப என்னமோ புதுசா சீன் போடுற?” எனக் கோபத்துடன் கேட்டவனைக் கண்டு மலங்க மலங்க விழித்தாள்.
கூடவே ஒரு வெட்கம் வந்து ஒட்டிக்கொண்டது. ‘சே… பாப்கார்னை புடுங்கி தின்னதுலாம் ஞாபகம் இருக்கு, ஆனா தூங்குறேன்னு இவரு மேல சாஞ்சா தூங்குனேன்.’ என எண்ணும் போதே, கன்னங்கள் சிவந்து விட்டது அவளுக்கு.
“அது ஏதோ அறியா வயசுல… அறியாம செஞ்சது…! இப்ப நான் பெரிய பொண்ணாகிட்டேன்” எனத் தலையை ஆட்டிக் கூறியவளைக் கண்டு கோபம் மறைந்து சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.
“ப்ச் ப்ச்… இல்ல…” என்று மறுப்பாக தலையசைத்த மாதவ், “அப்போ தான் பெரிய பொண்ணு மாதிரி நடந்துக்கிட்ட… இப்ப ரொம்ப மெச்சூரா நடந்துக்குறேன் பேர்வழின்னு சைல்டிஷ்ஷா பிஹேவ் பண்ற!” என்று கேலி செய்தவனைக் கண்டு முறைத்தாள்.
அதனை ரசித்தவன், “சரி நீ பெரிய பொண்ணுன்னே ஒத்துக்குறேன். அப்போ உன்கிட்டயே இதை பத்தி பேசலாம்…” என்று பீடிகையுடன் ஆரம்பித்தவனை அவள் புரியாமல் பார்க்க, அவனோ சற்றும் யோசியாமல், “நான் உன்னை லவ் பண்றேன் பாட்டி. நம்ம கல்யாணம் பண்ணிப்போமா?” என்று கேட்டதில், இன்னுமாக விழித்தாள்.
அவனோ அவளது பாவனை கண்டு, “ஒன்னு ஷாக் ஆகு, இல்ல கோபப்படு… இதென்ன ரியாக்ஷன்” என்றதில்,
“பின்ன, நீங்க பாட்டுக்கு காமெடி பண்ணிட்டு இருக்கீங்க. இதுக்கு ஷாக் ஆக வேற செய்யணுமா? எனக்கு லேட் ஆச்சு மொதோ வண்டியை எடுங்க டாக்டரே…” என்று தலையில் அடித்துக் கொண்டவளை அவன் தான் பாவமாக பார்த்தான்.
அவளோ உண்மையிலேயே அவன் விளையாட்டுக்கு அவளை சீண்டுவதாக எண்ணி, இயல்பாக இருக்க, அவனுக்கு எங்கு சென்று முட்டுவது என்று தான் புரியவில்லை.
காதலை சொல்லியும் தனக்கு பல்ப் கொடுத்து விட்டாளே, என்ற கடுப்பில் தான் மந்த்ராவிடம் ஒரு தலைக்காதல் என்று சோக கீதம் வாசித்தான்.
தயங்கி தயங்கி ஆஷாவின் அறைக்கு சென்ற மதனை, ஆஷா தான் புன்சிரிப்புடன் வரவேற்றாள்.
“நான் கண்ணு முழிச்சு, பத்து நாள் ஆகுது, இப்ப தான் உனக்கு என்னை பாக்கணும்ன்னு தோணிருக்கா?” என்றவள், அவனை மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்து,
“என்னடா மறுபடியும் பழைய ரௌடி மாதிரி இருக்க. உன்னை தஷு வீட்டுக்கு போகும் போது அமி எப்படி சேஞ்ச் பண்ணிருந்தான். அதே மாதிரி இருந்துகிட்டே ரௌடிசம் பண்ண வேண்டியது தான… ரௌடின்னா பரட்டை தலை, கலைஞ்ச சட்டைன்னு சுத்தணும்ன்னு யாரு தான் கண்டுபுடுச்சாங்களோ” என சிரிப்பை அடக்கிக்கொண்டு மதனை கேலி செய்திட, அவனுக்கு கண்ணீரை அடக்கத்தான் படாத பாடாக இருந்தது.
அவள் முன் அழுதிடக் கூடாதென்று உறுதியாக இருந்தவன், மொத்தக் கண்ணீரையும் உள்ளிழுத்துக் கொண்டு, “இப்படி இருந்தா தான ரௌடின்னு நம்புறாங்க…” என்றான் வரவழைக்கப்பட்ட சிரிப்புடன்.
“நீ வேணும்னா நானும் ரௌடி தான்னு ஒரு போர்டை முதுகுக்கு பின்னாடி மாட்டிக்கிட்டே சுத்து.” என்று நக்கலடிக்க, அதற்கும் புன்னகைத்தான்.
“ஐயோ… உனக்கு முறைக்கவே வராதா.” என்று ஆஷா சலித்துக் கொண்டதில், ‘உன்கிட்ட கோபமா? அதெல்லாம் வர மாட்டேங்குதே…’ என மனதினுள் சொல்லிக்கொண்டவன், அதற்கும் சிறு புன்னகையுடன் வெளியில் சென்று விட, அவள் மீண்டு விட்டதில் சந்தோஷக் கண்ணீர்த்துளிகள் முத்து முத்தாக கன்னத்தில் வடிந்தது.
மந்த்ரா தனதறையில் வெளி நோயாளிகளை பார்த்துக் கொண்டிருக்க, அன்று மஹாபத்ராவை அழைத்துக் கொண்டு அங்கு வந்தான் தஷ்வந்த். அவனைக் கண்டதும் முறைத்தவள், மஹாபத்ராவை கண்டும் காணாதது போல இருக்க, அவளை மஹாபத்ரா இங்கு எதிர்பார்க்கவில்லை.
“இவள் இங்க என்ன பண்றா?” தஷ்வந்திடம் கேட்ட மஹாபத்ராவிடம், அவன் விவரம் கூறியதில், “ஓ” என்றதோடு முடித்துக் கொண்டாள்.
மந்த்ரா தான், “சொல்லுங்க சார் என்ன பிரச்சனை?” என்று பல்லைக்கடித்துக்கொண்டு கேட்க, அவனோ “நீ எப்ப ஜென்ட்ஸ்க்கு ப்ரெக்னன்சி செக் அப் பண்ண ஆரம்பிச்ச?” என்று உதட்டை மடித்து சிரித்தான்.
அதில் கடியானவள், “யூ பிராடு… என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம இருந்துட்டு, என்னையவே கலாய்க்கிறியா?” எனப் பழக்க தோஷத்தில், அவனது முடியை பிடித்து ஆட்டிட, மஹாபத்ரா அமைதியாக விழிகளில் நெருப்பைக் கக்கினாள்.
அதன் பிறகே, ஏதோ உறுத்தியதில் அவளைப் பார்த்த மந்த்ரா, மஹாபத்ராவின் பார்வையைக் கண்டு விருட்டென கையை எடுத்துக் கொண்டாள். இன்னும் கூட அவள் மீதான பயம் குறையவில்லை அவளுக்கு. கோபமும் சிறு வெறுப்பும் தான்…!
அதில் தஷ்வந்த் புரியாமல் மஹாபத்ராவைப் பார்க்க, அவளோ கண்ணை சுருக்கி அவனையும் முறைத்து விட்டு, “ஸ்கேன் பண்ணலாமா? இல்ல அதுக்கு நல்ல நேரம் எதுவும் பாக்கணுமா?” என்று மந்த்ராவிடம் அமர்த்தலாகக் கேட்டதில், அவள் எழுந்து ஸ்கேன் செய்யும் அறைக்கு சென்று விட்டாள்.
மஹாபத்ராவிற்கு கோபமெல்லாம் இல்லை. ஆனாலும், ஒரு வித பொறாமை எழுந்ததை தடுக்க இயலவில்லை.
அவளது கோபம் கண்டு தஷ்வந்திற்கு ரசனைப்புன்னகையே பிறந்தது. “கல்யாணமே ஆகிடுச்சு டாலு… இப்பவும் இப்படி பொஸஸ்ஸிவ்வா இருக்குறது நல்லா இல்ல சொல்லிட்டேன்…” என்றதில் முறைத்தவளிடம், “அன்னைக்கு அமியும் தான் உன்னை கட்டிப்பிடிச்சான் நான் ஏதாச்சு கேட்டேனா? எப்ப பார்த்தாலும் என்னமோ எங்க ரெண்டு பேரையுமே முறைக்கிற” அவனும் சிலுப்பினான்.
அதனை உள்ளுக்குள் ரசித்து வைத்தவள், “உன்னை யாரு சண்டை போட வேணாம்ன்னு சொன்னா? உனக்கு பொஸஸிவ்நெஸ் கம்மியா இருக்கு…” என தோளைக் குலுக்கிக் கொள்ள,
“அடிப்பாவி… விட்டா லவ்வே கம்மியா இருக்குன்னு சொல்லுவ போல…?” என்றவனுக்கு சிரிப்பு வந்தது.
நாக்கைத் துருக்கி அழகு காட்டியவள், “வா… ஸ்கேன் பார்க்கலாம்…” என்று அழைத்தாள் எழுந்து.
அதில் அத்தனை நேரம் இருந்த புன்னகை முகம் இறுகிப் போக, “நீ போ! நான் வரல” என்றான்.
“ஏன்?” மஹாபத்ரா புரியாமல் கேட்டதில், அவளை உறுத்து விழித்தவன், “நான் வரலைன்னு சொல்லிட்டேன்ல. ஜஸ்ட் கோ!” என்று எரிந்து விழுந்தவன், விருட்டென எழுந்து வெளியில் சென்று விட்டான்.
குழந்தையை பார்த்தால், எடுத்த முடிவிலிருந்து மாறி விடுவோமோ என்ற பயத்தை விட, பிறக்கும் போதே தாய் தகப்பனற்று பிறக்கப் போகும் குழந்தையை எண்ணி, மனம் வெந்தது.
“யார் யாரோ செஞ்ச தப்புக்கு, என் குழந்தை என்ன பண்ணுச்சு?” என்றதே அவனுக்கு பெரிய ஆதங்கம்.
ஸ்கேன் முடிந்து வெளியில் வந்த மஹாபத்ரா, மந்த்ராவின் அறையில் அமர, மந்த்ராவோ சற்று குழப்பத்துடன் இருந்தாள்.
அவளிடம் நேரடியாக பேசிட, ஏதோ தடுத்ததில், தஷ்வந்திற்கு அழைத்திட, அவனும் சிறிது நேரத்தில் உள்ளே வந்தான்.
அவன் வந்ததும், “பேபி க்ரோத் நல்லா இருக்கு. ஆனா…” என்று இன்னும் குழப்பத்துடன் பேசியவள், “இதுக்கு முன்னாடி ஏதாச்சும் சர்ஜெரி நடந்துச்சா?” என்று தஷ்வந்திடம் கேட்க, “ம்ம்” என்றவன், “பேபி நல்லா இருக்குல்ல. தென் ஓகே.” என்று எழுந்து விட, மந்த்ராவிற்கு முற்றிலும் குழம்பியது.
மஹாபத்ராவின் எண்ணமோ, அவனது இறப்பை பற்றிய சிந்தனையை எப்படி மாற்றுவது என்றே சுற்றி வர, அவன் பின்னே வெளியில் நடந்தாள்.
அதில், அவன் எங்கு செல்கிறாள் என்று தெரியாமல் அவனுடனே செல்ல, அவனோ சரியாக ஆஷாவின் அறைக்கு சென்றதில், அப்போது தான் ஆஷா அங்கிருப்பதைக் கண்டு திகைத்தாள்.
அவள் இருக்கும் மருத்துவமனையின் பெயர் கூட கேட்டுக்கொள்ளவில்லையே அவள். மருத்துவரிடம் மட்டும் பேசிக்கொள்பவள், மற்ற சிகிச்சைக்கு ஏற்பாடு செய்பவள், தற்போது அவள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளாத மடத்தனத்தை எண்ணி நொந்து கொள்ள, கூடவே தஷ்வந்தை, ‘அமுலு… நீ இருக்கியே…’ என மானசீகமாக திட்டினாள்.
ஆஷாவைக் கண்டதும், வெளியில் எகிறி குதித்த இதயத்தை அடக்க அரும்பாடுபட்டவளுக்கு, இன்னும் அவளுக்கு நிகழ்ந்த கோர விபத்து கண் முன் தோன்றி அதற்கு காரணமானவர்கள் மீது அளப்பரிய கோபத்தையும், அவளது நிலையைக்கண்டு வேதனையையும் ஒரு சேரக் கொடுக்க, எப்போதும் போல ரத்த அழுத்தம் அதிகமானது.
இப்போது கருவுற்றிருந்ததில், அந்த ரத்த அழுத்தம் அவளது கண்களை இருட்ட செய்ய, அப்படியே மயங்கி சரிந்து விட்டவளைக் கண்டு தஷ்வந்த் பதறினான்.
இதுவரை மயங்கி எல்லாம் விழுந்தது இல்லையே… என புரியாமல் அவளைத் தூக்கி சோபாவில் கிடைத்தியவனுக்கு, அதன் பிறகே ஆஷாவைக் கண்டதும் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறாள் என்றே புரிந்தது.
ஆஷாவும் மஹாவைக்கண்டு குதூகலித்து, பின் அவள் மயங்கி விழுந்ததில், திகைத்தாள்.
சட்டென எழுந்து வர இயலாமல், அவளது கால்களும் சதி செய்தது. இத்தனை வருட கோமாவின் பலனாக, சட்டென எழுந்து நிற்க கூட இயலவில்லை அவளால். ஸ்டிக் வைத்து நடக்க முயற்சி செய்பவளுக்கு, ஃபிஸியோதெரபியும் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
நாட்கள் செல்ல செல்ல, அவளது உடல்நிலை முற்றிலும் சரியாகிவிடும் என்ற கூற்றில் தான் அமிஷும் மதனும் சற்று நிம்மதி அடைந்தனர்.
ஆஷாவிற்கு ஆறு வருடம் கோமாவில் இருந்தோம் என்றதே அதிர்வு தான். ஆனாலும் அத்தனை பெரிய விபத்தில் இருந்து மீண்டு வந்திருக்கிறோம் என்று எண்ணும் போதே, அது பெரிய விஷயமாக தான் தெரிந்தது.
“டாலு… என்னை பாருடி…? என்ன ஆச்சு டாலு.” என்று மஹாபத்ராவின் கன்னத்தைத் தட்டிய தஷ்வந்திற்கு அடுத்து என்ன செய்வதென்றே மூளை செயலிழந்து விட்டது.
சில நொடிகள் மூச்சை இழுத்து விட்டு தன்னை ஆசுவாசப்படுத்தியவன், நீரை முகத்தில் தெளித்து, அவளை விழிக்க செய்ய, அவளோ கண் திறக்காமல் சதி செய்தாள்.
“டாலு… இங்க பாருடி…” என பரிதவித்த தஷ்வந்த், அவள் இந்த அளவு உணர்ச்சிவசப்படுவாள் என எதிர்பார்க்கவில்லை.
அவளை தூக்கிக் கொண்டு மருத்துவர் அறைக்கே செல்ல எத்தனிக்கையில், பாதி வழியிலேயே மெல்ல கண் திறக்க முயற்சி செய்தாள்.
அதில், ஓரத்தில் இருந்த நாற்காலியில் அவளை அமர வைத்தவன், “பத்ரா… பத்ரா! கண்ணை திற. இங்க பாரு!” என்று அவள் கன்னத்தை மெல்லத் தட்டி, சுயநினைவிற்கு கொண்டு வந்தவன், சிறிது நீரையும் குடிக்க செய்தான்.
அவன் முகத்தில் தெரிந்த வருத்தத்தில், தன்னை சீராக்கிக்கொண்டவள், “இப்ப ஓகே அமுலு” என சோர்வுடன் கூற, அவளை இறுக அணைத்துக் கொண்டான்.
கரங்கள் நடுக்கம் எடுக்க, இதற்கே தாங்காத இதயம், அவளது பிரசவ நேரத்தை எப்படி தாங்க போகிறதோ என அரண்டு தான் போனான். அவன் நடுக்கத்தை உணர்ந்து, மெல்ல முதுகை நீவி விட்டவள், “ரிலாக்ஸ் அமுலு… ஒண்ணும் இல்ல. சாதாரண மயக்கம் தான்.” என்று சமன் செய்ய அவனோ சிறிதும் விலகவில்லை.
“அமுல் பேபி சொல்றதை கேளுடா… ரிலாக்ஸ் ஆகு. ஐ ஆம் ஓகே நொவ்.” என அவனது கன்னத்தில் முத்தமிட்டவள், அவனை விலக்க முற்பட தோல்வியே கிட்டியது.
சில நிமிடங்கள் கழித்தே இருக்கும் இடம் உணர்ந்தவன், மெல்ல நகர்ந்து “இப்போ ஓகே தான?” என்றிட, “ஓகே டா…” என சிறு சிரிப்புடன் கூறியதில், அவள் வாயை பொத்தினான்.
“இன்னொரு தடவை இந்த ‘ஓகே’ வை சொல்லி தொலையாத” என்று சிடுசிடுத்தவனிடம், “நீ தானடா ஓகே வான்னு கேட்ட?” என்று குறுநகை புரிந்தாள்.
அதில் அவளை முறைத்து வைத்தவன், “உன்னை பார்த்து சீனியரும் பயந்துருப்பாங்க. வா…!” என்றதில், முகம் சுருங்கியவள், “இருந்தாலும் உனக்கு இவ்ளோ பிடிவாதம் வேணாம் தஷ்வா. நான் தான் வரலைன்னு சொல்றேன்ல.” என்றாள்.
“பிடிவாதம் எனக்கு? உன்னை விட கம்மி தான்டி.” என காய்ந்ததில், அவள் அமைதியானாள்.
“யூ நோ! முதல்ல எல்லாம் உன் மிரட்டல் தான் பயமா இருக்கும். இப்போ உன் அமைதி ரொம்ப பயமா இருக்கு டாலு.” தொண்டை அடைக்க கூறியவனை, நிமிர்ந்து பார்த்தவள், என்ன நினைத்தாளோ அவனை இழுத்து நெஞ்சோடு கட்டிக்கொண்டாள்.
மருத்துவமனையில் இருந்த ஆட்கள் அவர்களை விசித்திரமாக நோக்குவதை எல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் இருவரும் இல்லை.
அவளது மார்பில் இதழ்களை பதித்தவன், “இந்த குட்டி நெஞ்சுக்குள்ள என்ன இருக்குன்னு முழுசா சொல்லிடேன் டாலு! உள்ளுக்குள்ளயே போட்டு புழுங்காத!” என்று கண்டிப்பு கலந்த அக்கறையுடன் கூறியவனை இன்னும் வாகாக அணைத்துக் கொண்டாள்.
தஷ்வந்த் உடனான, முதல் கூடல் சிலிர்ப்பையும் கூச்சத்தையும் தந்ததோடு, தந்தையை எண்ணி கலக்கமும் கொடுத்தது மஹாபத்ராவிற்கு.
அந்த கலக்கத்தில், அத்தனை களைப்பிலும் சிறிதும் உறங்கவில்லை. விடிகாலையிலேயே ஆஷா அவளை அழைத்திருக்க, தன் மீதிருந்த தஷ்வந்தின் கரங்களை அவன் உறக்கம் கலையாமல் எடுத்து விட்டவள், போனை எடுத்து பேசினாள்.
“எங்க இருக்க மஹூ?” ஆஷா கேட்டதில்,
“வீட்ல” என்றாள் மொட்டையாக.
“உன் வீட்டுக்கு தான் வந்தேன். உன்னை காணோமே?” என்றதும்,
“அபார்ட்மெண்ட்ல இருக்கேன்.” என்றாள் ஹஸ்கி குரலில்.
“அதுக்கு ஏண்டி ஹஸ்கி வாய்ஸ்ல பேசுற…” புரியாமல் கேட்ட ஆஷாவிடம், “அமுலு ஸ்லீப்பிங்.” என்று ஒற்றை வார்த்தையில் கூறி விட, ஆஷா வாயைப் பிளந்தாள்.
“ரெண்டு பேரும் அவ்ளோ பக்கத்துலயா தூங்கிட்டு இருக்கீங்க” என்ற ஆஷாவின் கேள்வியில், மஹாபத்ராவின் வதனம் சிவந்து போனது.
ஆஷாவோ, “ஒழுங்கு மரியாதையா… நம்ம ரெகுலரா போற காபி ஷாப்க்கு வா. இப்பவே” என்றதோடு அழைப்பைத் துண்டிக்க, “சிவபூஜை கரடி” என்று தோழியை திட்டிக்கொண்டவள், ஆடைகளை அணிந்து கொண்டாள்.
உறக்கத்திலும் “டாலு” என்று சிணுங்கியவனின் நெற்றியில் அழுத்த முத்தத்தை பதித்தவளுக்கு, அப்போதும் உறைக்கவில்லை, அவனிடம் ஒருமுறையாவது தனது காதலை உணர்த்தி இருக்கலாம் என்பது!
சில நேரம் ஜாகிங் செல்லும் ஆஷா, நான்கு தெருக்கள் தள்ளி இருக்கும் மஹாபத்ராவின் வீட்டிற்கு வந்து, அவளுடன் அரட்டை அடிப்பதும், அப்படியே காபி ஷாப் செல்வது வழக்கம். அதில் தான், அன்று அவளும் அங்கு வந்தது. சொன்னது போன்றே, மஹாபத்ரா காபி ஷாப்பிற்கு வந்து விட, ஆஷா அப்போது தான் தனது ஸ்கூட்டியை வாசலில் நிறுத்தி விட்டு உள்ளே வந்தாள்.
“ஜாகிங் போறவ ஸ்கூட்டியை ஏண்டி எடுத்துட்டு வந்த?” மஹாபத்ரா கேட்டதில்,
“எப்படியும் நீ வர லேட் ஆகும்னு தெரியும். அதான் வீட்டுக்கு போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்தேன்.” என்றவாறே அவளுக்கு எதிரில் அமர்ந்த ஆஷா, அவளை ஆராய்ந்தாள்.
“எதுக்கு என்னையவே வெறிச்சு பாக்குற?” மஹாபத்ரா முறைப்பாக பார்க்க,
“இல்ல… இன்னைக்கு ரொம்ப வித்தியாசமா இருக்கியே அதான் பார்த்தேன். நைட்டு முழுக்க தூங்கலையோ?” எனக் கிண்டலாக கேட்டதில், சிவந்த கன்னத்தை பல்லைக்கடித்து அடக்கினாள்.
அதனைக் கண்டுக்கொண்ட ஆஷாவிற்கு வியப்பில் விழிகள் விரிந்தது.
“மஹூ … நீ வெட்கப்படுறடி?” என்று கிண்டலடிக்க, “கொஞ்ச நேரம் சும்மா இரேன்.” என்றாள் அவளை பாராமல்.
நமுட்டு சிரிப்பு சிரித்த ஆஷா, “நான் சும்மா தான் இருக்கேன். ஆனா, மேடம் தான் நைட்டு சும்மா இல்ல போலயே…” என வாரிட, ‘ஐயோ’ என நொந்தவள், “ஆஷா!” என அதட்டினாள்.
அதனை ஒதுக்கிய ஆஷா, “எனக்கு என்னமோ, பிஜிக்கு அட்மிஷன் போடுறதுக்கு முன்னாடி, உன் பையனுக்கு ஸ்கூல் அட்மிஷன் போடணும்ன்னு நினைக்கிறன்” என்று பக்கென சிரித்திட, மஹாபத்ராவிற்கும் சிரிப்பே வந்தது.
“வாயை தான் மூடேன்டி…” வெட்கத்தை அடக்கிய மஹாபத்ராவை பார்த்து மேலும் சிரித்து வைத்தவள், மெல்ல இயல்புக்கு மீண்டு, “நீ தஷுவை இப்பவும் லவ் பண்ணலயா மஹூ” எனக் கேட்டாள் வருத்தமாக.
அதில் ஒரு கணம் அமைதியான மஹாபத்ரா, “அவன் என் மாமா பையன் ஆஷா” என்றதில், ஆஷா தான் அதிர்ந்தாள்.
அதன் பிறகு நிகழ்ந்த சம்பவங்களை எண்ணி சங்கடப்பட்டவள், “இருந்தாலும் அங்கிள் கொஞ்சம் பொறுமையா இருக்கலாம் மஹூ. ரெண்டு பேரோட தனிப்பட்ட பிரச்சனைக்கு குடும்பம் என்ன பண்ணுச்சு?” என்றாள்.
அதில் நெற்றியை பிடித்துக் கொண்ட மஹாபத்ரா, “ம்ம்… ஒன்னும் புரியல. ரொம்ப குழப்பமா இருக்கு ஆஷா. இதுல ரொம்ப தலைவலி என்ன தெரியுமா? மந்த்ராவோட பிரச்சனைல, தஷு அந்த பொலிடிஷன் சங்கரனோட பையன் லலித்கிட்ட சண்டை போட்டான்ல. அவனோட அப்பாவும் என் நானாவும் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்ஸாம். அவனை அன்னைக்கே போட்டு தள்ளிருக்கணும். இப்போ என்னன்னா, அவன் ஒரு பக்கம், தஷு மேலயும் அமி மேலயும் கடுப்புல சுத்திட்டு இருக்கான். எப்படா சான்ஸ் கிடைக்கும் போட்டு தள்ளலாம்ன்னு…” என்றாள் எரிச்சலாக.
அதில் திகைத்த ஆஷா, “என்ன சொல்ற மஹூ?” என்றதில்,
“ம்ம்… மந்த்ராவையும் ஃபாலோ பண்ணிட்டு தான் இருக்கான். என் கெஸ் க்ரெட்ன்னா, தஷுவையும் அமியையும் போட்டு தள்ளிட்டு, மந்த்ராவை டார்ச்சர் பண்றது தான் அவன் பிளானா இருக்கணும். அவள் தான அவனை அடிக்க வச்சதுக்கு காரணம். இதுல அந்த லூசு என்னை வேற அட்டாக் பண்ண ட்ரை பண்ணுச்சு. அவனை வச்சு செய்யலாம்ன்னா, நானா அவனை அடிச்சதுக்கு என் மேல கோபப்படுறாரு.
ப்ச்… இப்ப நான் தஷுக்கு காவல் காக்குறதா… இல்ல அமியை பாக்குறதா… இல்ல… அவன் லவ் பண்ற அந்த அரை லூச பாக்குறதா? ஷப்பா முடியலடி. யாரையாச்சு அடிச்சு வெளுக்கணும்ன்னா கூட ஈஸியா இருக்கு. காப்பாத்துற வேலை எல்லாம் பார்க்கவே முடியல…” என்று சோர்வாக கழுத்தைத் தடவிக் கொண்டாள்.
“அமிக்கிட்ட இதை பத்தி சொன்னியா?” ஆஷா கேட்டதில்,
“ம்ம்… சொன்னேன். மந்த்ராவை அவன் பாத்துக்குறதா சொன்னான். அவள் வீட்டுக்கு போற வரை, அவளுக்கு இவன் காவல், இவனுக்கு திரு காவல்… அதான், நான் மேக்சிமம் தஷு கூடவே இருக்கேன். பாவம் மதனும் 24 மணி நேரமும் எப்படி பாடி கார்ட் வேலை பாக்க முடியும்.” என்றாள் சலிப்பாக.
“பேசாம இதெல்லாம் தஷுகிட்ட சொல்லலாம்ல மஹூ?”
“ம்ம்… சொல்லணும். இப்போ அவன்கிட்ட பேசி புரிய வைக்கிற அளவு நிஜமா எனக்கு பொறுமை இல்லை. ஃபீலிங் சம்திங் ஆக்வார்ட் ஆஷா. ஏதோ மனசை போட்டு பிசைஞ்சுக்கிட்டே இருக்கு. அது என்னன்னு புரியவே இல்ல.” எனப் பாவமாக பேசிய தோழியின் கரத்தை பற்றி ஆறுதல் அளித்தாள் ஆஷா.
“உன்னை இவ்ளோ டவுன்னா நான் பார்த்ததே இல்லை மஹூ. இனிமேலும் நீ டவுன் ஆகுறதை பார்க்க முடியாது. எதுனாலும் ஃபேஸ் பண்ணலாம். நாங்க உன் கூடவே இருக்கோம்ல? சியர் அப் பேபி!” என்று கண்களை சிமிட்டி அவளை உற்சாகப்படுத்தியவள், “காபி?” என்றாள் கேள்வியாக.
“எஸ் ப்ளீஸ்… செம்ம ஹெட் ஏக்!” என்று மஹாபத்ரா உரைத்ததும், “என் போன் வண்டில இருக்கு எடுத்துட்டு வந்துட்டு காபியோட வரேன். சூடா காபி குடிக்கிறோம். பிரச்சனையை எல்லாம் பீசா மாதிரி பீஸ் பீஸா சால்வ் பண்றோம்?” எனக் கட்டை விரலை உயர்த்தி வெற்றிக்குறி காட்டியவளைக் கண்டு பக்கென புன்னகைத்தாள் மஹாபத்ரா.
ஆஷா வண்டியை நோக்கி செல்ல, ‘இந்த அமுலு இவ்ளோ நேரமா தூங்குறான்…’ என்று தஷ்வந்திற்கு போன் செய்ய எத்தனிக்க போனை எடுக்கும் போதே பெரிய சத்தம் கேட்டு, கண்ணாடி ஜன்னல் வழியே பார்வையை பதித்தவளுக்கு, ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்த ஆஷாவின் உடலே தோன்றியது.
அத்தியாயம் 31
ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை மஹாபத்ராவிற்கு. அதன் பிறகே, எங்கிருந்தோ வந்த வேன் ஒன்று ஆஷாவைத் தூக்கி அடித்து விட்டு சென்றிருக்கிறது என்ற உண்மை புரிய, ஆஷாவை நோக்கி விரைந்தவளுக்கு, மயக்கமே வரும் போல் இருந்தது.
அவசரமாக சாலையை நிமிர்ந்து பார்க்க, தூரத்தில் ஒரு வேனும், ஓட்டுநர் இருக்கையில் இருந்த ஒருவன் அவளை எட்டிப் பார்த்து நக்கலாக சிரித்து விட்டு செல்வதும் தெரிய, அவளுக்கு சீற்றம் தலைக்கு மேல் ஏறியது.
முதலில் ஆஷாவை பார்ப்பதே உசிதம் என்று, வேகமாக அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அங்கோ அவளை காப்பாற்றுவதே கடினம் என்ற மருத்துவரின் வார்த்தையில், உடைந்து விட்டாள்.
சில நிமிடங்களுக்கு முன்பு தானே, தனக்கு ஆதரவாக பேசினாள். அனைவரைப் பற்றியும் சிந்தித்த நான், கூடவே இருக்கும் இவளது பாதுகாப்பையும் சிந்தித்திருக்க வேண்டுமோ என்ற ஞானம் தாமதமாக வர, கண்களில் இருந்து அமைதியாக வெளியேறியது கண்ணீர்.
விஷயம் கேள்விப்பட்டு அழுத முகத்துடன் வந்த ஆஷாவின் பெற்றோர், மஹாபத்ராவை புழுவைப் போல பார்த்து வைத்தனர்.
கிட்டதட்ட, 7 மணி நேரம் ஆகியும் கூட, அவள் உடல்நிலையில் சிறிதும் மாற்றமில்லை. இன்னும் 24 மணி நேரம் சென்றால் தான், நிலைமை என்னவென்றே தெரியும் என்ற சூழ்நிலை அவளை நடுங்க வைத்தது.
அதில் மொத்தமாக பயந்த ஆஷாவின் தாய், “நான் எத்தனையோ தடவை சொன்னேன்… அடுத்தவங்களை காயப்படுறது பெரிய பாவம். அந்த பாவம் பண்ற நட்பு உனக்கு வேணாம்ன்னு. இப்போ, கூட இருந்த பாவத்துக்கு, தப்பு செஞ்சவள்லாம் நல்லா இருக்கும்போது, என் பொண்ணு இப்படி உயிருக்கு போராடிட்டு இருக்காளே…” என்று அழுதிட, என்னவோ அந்த வார்த்தைகள் அவளுள் ஆழமாக இறங்கியது.
ஆஷாவின் நிலையை எண்ணி உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருந்த மதனை அங்கு இருக்க சொல்லி விட்டு, வீட்டிற்கு விரைந்தவள், அறைக்குள் நுழைந்து ஏற்பட்ட பெரும் அதிர்ச்சியில் இருந்து வெளிவர இயலாமல் தவித்தாள்.
இதுவரை கடவுள் மீது நம்பிக்கை கொண்டெல்லாம் அவளுக்காக எதுவும் வேண்டிக்கொண்டதில்லை. இப்போது அவளது அதிகப்பட்ச பேராசையே ஆஷா பிழைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான். மருத்துவர் கூறிய ஹெட் இன்ஜியூரியின் விளக்கம் அவளுக்கும் புரியத்தான் செய்தது. அவளும் மருத்துவம் படித்து தொலைத்த காரணத்தால், அவளது முடிவு என்னவென்றும் மூளை அறைந்து விளக்க, மனதோ கடவுளிடம் மன்றாடிக் கொண்டிருந்தது.
வெகு நேரம், அறைக்குள்ளேயே அடைந்திருந்தவள், ஆஷாவை தாக்கி விட்டு சென்ற ஓட்டுனரின் நினைவு வர, விறுவிறுவென வெளியில் வந்து, ஹர்மேந்திரனின் அடியாள் ஒருவனை அழைத்தாள்.
அவன் பணிவாய் அவள் முன் வந்து நிற்க, அவர்கள் இருந்த காபி ஷாப்பிங் சிசிடிவி புட் ஏஜையும், அவளை அடித்து விட்டு போன வேனின் ஓட்டுனரையும் கண்டுபிடித்து, அவள் காலடியில் போட வேண்டுமென உத்தரவிட, அவனும் தலையாட்டி விட்டு கிளம்ப எத்தனிக்கையில் ஹர்மேந்திரன் தடுத்தார்.
அவனுக்கு வேறொரு வேலையை கொடுத்து அனுப்பி விட்டதில், மஹாபத்ரா எரிச்சலின் உச்சத்திற்கு சென்றாள்.
“நானா, ஆஷா அடிபட்டு ஹாஸ்பிடல்ல இருக்கா. அவளை அட்டாக் பண்ணுவனை தேடுறது தான் எனக்கு இப்ப ரொம்ப முக்கியம்” எனக் கோபத்துடன் கூற, அவரோ சிறிதும் இரக்கமின்றி, “அவனை ஏன் தேடிட்டு இருக்கு. உன் முன்னாடி தான நிக்கிறேன்” என்றார் நக்கலாக.
அவளுக்கு தான், அவரின் கூற்றில் கால்கள் தளர்ந்தது!
“நா… நானா…” நம்ப இயலாமல் தந்தையைப் பார்த்தவள், “ஆ… ஆஷா நானா… அவள்… அவள்… உங்களை சொந்த அப்பா மாதிரி நினைச்சா… ஏன்… ஏன் நானா…” கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது இந்த துரோகத்தை தாங்க இயலாமல்.
“நீ யாரை காப்பாத்தணும்ன்னு நினைச்சியோ, அவன்கிட்ட இருந்து உன்னை தள்ளி வச்சு, அவனை அழிக்கணுமே. அதான், ஆஷாவை கேடயமா யூஸ் பண்ணிக்கிட்டேன். எனக்கு சொந்த பொண்ணு நீ இருக்கும் போது யார் யாரையோ நான் ஏன் பொண்ணா நினைக்கணும் மஹாம்மா. எவனையோ காப்பாத்துறதுக்காக, நீ ஏன் என்னை விட்டு இவ்ளோ விலகி போற? உனக்கு நான் வெறும் அப்பா மட்டும் இல்ல… சில நேரம் ஹர்மேந்திரனாவும் இருப்பேன்னு தெரிய வேணாம்.” என வில்லங்கமான சிரித்தார்.
ஆக, அவருக்கு அனைத்தும் தெரிந்து விட்டது. எப்படி? இதெப்படி தெரிந்திருக்க முடியும்? வாய்ப்பே இல்லையே! எனக் குழம்பியவளுக்கு, தற்போது யோசிக்க கூட முடியவில்லை. அவர் செய்த இழிசெயல் அவளைக் கூறு போட்டது. ஆஷாவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? தேவையற்று அவளது உயிர் அல்லவா ஊசல் ஆடுகிறது… ஏனோ இப்போதே பூமிக்கு அடியில் புதைந்து விட மாட்டோமா என்றிருந்தது அவளுக்கு.
தொப்பென அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து விட்டவள், “ஆஷாவை ஏன் நானா…?” ஆதங்கத்துடன் கேட்டாள்.
“அமியையும் அவன் ஒரு பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருக்கானே, அவங்க ரெண்டு பேரையும் போடுறது தான் என் திட்டமே. தேவை இல்லாத பிரச்சனைக்குள்ள புகுந்து, என் அரசியல் பலத்தை ஆட்டிப்பாத்துட்டாங்க. ஒண்ணு நீ சாகனும், இல்லன்னா அவங்க ரெண்டு பேரும் சாகணும்ன்னு அந்த சங்கரன் டீல் பேசுனான். இதுக்கெல்லாம் நீயும் முழுக் காரணம் மஹா. பெத்த பொண்ணை கொல்ல முடியலையே. அதான், தேவை இல்லாத செடியை எல்லாம் புடுங்க நினைச்சேன்.” என்றார் சீற்றத்துடன்.
நினைக்கவே வலித்தது அவளுக்கு. இப்படி ஒரு நிலை வருமென்று தெரிந்திருந்தால், யாருடனுமே தோழமை பாராட்டி இருக்க மாட்டாளே! பள்ளியிலும் கல்லூரியிலும் அவளைப் பார்த்து பயந்து விலகியவர்கள் தான் அதிகம். சிலர் காரணமே இன்றி வெறுப்புடன் பார்ப்பர். விவரம் புரியாத வயதில், தந்தை தானே சூப்பர் ஹீரோ. விவரம் தெரிந்த பிறகே, மற்றவர்களின் பார்வைக்கான அர்த்தம் புரிய, அவளே மற்றவர்களிடம் இருந்து அவளை ஒதுக்கிக் கொண்டாள். ஆனால், அமிஷும் ஆஷாவும் எப்போதும் அவளை விட்டுக்கொடுத்ததில்லை. அந்நட்பில் எப்போதும் அவளுக்கொரு கர்வம் உண்டு. இப்போது நட்புடன் சேர்ந்து அவர்களின் வாழ்வும் அந்தரங்கத்தில் தொங்குவதை எண்ணி, நெஞ்சம் வெந்தது.
“அவன் பையன் ஒரு கேவலமானவன் நானா. மந்த்ராகிட்ட சீப்பா பிஹேவ் பண்ணுனான். அதுக்கு அவள் ரியாக்ட் பண்ணுனா. அவ்ளோ தான். அதே மாதிரி அவன் என்கிட்ட நடந்துருந்தா கூட, நீங்க அவனுக்கு தான் சப்போர்ட் பண்ணுவீங்களா?” ஆற்றாமை தாளாமல் அவள் கேட்க,
அவர் முகத்தில் சிறு சுளிப்பு. “நீ அவன்கிட்ட கேவலமா நடந்துக்காம இருந்தா போதும். எவன் எவன் கூடயே படுத்துட்டு வந்துட்டு, என்னமோ பெரிய பத்தினி மாதிரி கேள்வி கேக்குற. இவனை மாதிரி மாசத்துக்கு பத்து பேரை நான் கொல்லுவேன். எல்லார் கூடவும் படுத்து அவனுங்களை காப்பாத்துவியா?” என அருவருப்புடன் கேட்டவர், “இப்படி நடந்துக்க உனக்கு வெட்கமா இல்ல” என்றார் குத்தலாக.
அவளுக்கு அவரது கேள்விகள் உணர்வுகளை மரக்க வைத்தது. தந்தையிடம் இருந்து கேட்க கூடாத வார்த்தைகள் அல்லவே!
ஆனாலும் நிமிர்வுடன், “பெத்த பொண்ணு ஒருத்தன் கூட மூணு வருஷமா ஒரே வீட்ல இருக்கும் போது, அதை சில்லறை காரணத்துக்காக வேடிக்கை பார்த்த உங்களுக்கே வெட்கம் மானம் சூடு சொரணை எதுவுமே இல்லாதப்ப, உங்க பொண்ணு எனக்கு எப்படி இருக்கும்…?” என்றாள் சூடாக.
அதில், ஹர்மேந்திரனுக்கு கோபம் கொழுந்து விட்டு எரிந்தது.
சட்டென நினைவு வந்தது போல, “தஷ்வாவை என்ன செஞ்சீங்க?” எனத் தவிப்புடன் கேட்க, “நீ காப்பாத்தணும்ன்னு நினைச்சவனை, நான் உன் முன்னாடி கொல்றது தான நியாயம்… இப்ப அவனே வருவான்…” என்று கேலியாக கூறியதில், அவள் திகைத்து விட்டாள்.
வீட்டினுள் நுழைந்ததும், கையில் இருந்த போனை ஹால் சோபாவில் போட்டு விட்டு சென்றதில், அதிலிருந்து தஷ்வந்திற்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார் ஹர்மேந்திரன்.
“ப்ளீஸ் நானா…! அவன்… அவனை விட்ருங்க” தன் இயல்பை தொலைத்து தந்தையிடம் கெஞ்சினாள்.
அவரோ முகத்தில் அத்தனை வன்மத்தையும் காட்டி, “ஹும்… விடுறதா? விடவே மாட்டேன். அந்த கதிரேசனும், அவன் குடும்பமும் உயிரோடயே இருக்க கூடாது…” என்ற வஞ்சத்துடன் கூறியவர் வேறு ஏதோ கூற வந்து பின் அதனை விழுங்கிக் கொள்ள, அதனை கவனித்தாலும், அப்போது அதற்கு எதிர்வினை ஆற்றத்தான் தெரியவில்லை அவளுக்கு.
“அவன் சாக கூடாது நானா… அவனை விட்ருங்க.” என இறுகிய முகத்துடன் அழுத்தம் பொங்க கூறியவளைக் கண்டு, கேலி நகை புரிய அதிலேயே புரிந்து போனது, தன்னவனது உயிருக்கு உத்திரவாதம் இல்லை என.
“அந்த லலித் ஓட அப்பா சங்கரன், என்னை தான கொல்ல சொன்னான். ஏன் என்னை கொல்லலை நானா?” உணர்வின்றி கேட்டவளிடம், “என்ன பேசுற மஹாம்மா… என்ன இருந்தாலும் நீ என் ரத்தம். எனக்கு அடுத்து, என் பேர் சொல்ல இருக்குற ஒரே சொந்தம் நீ தான். நீ எனக்கு வேணும் மஹாம்மா.” என்றவரின் எண்ணம் நன்றாகவே புரிந்தது அவளுக்கு.
அதாவது, அவரது சொத்துக்களை கட்டிக் காக்கவும், இந்த தொழில் சாம்ராஜ்யத்தை அவருக்குப் பிறகு தளர்ந்து போகாமல் தூக்கி நிறுத்தவும் அவள் வேண்டும்… என தெள்ளந் தெளிவாக உணர்ந்து கொண்டவளின் இதழ்கடையோரம் விரக்தி புன்னகை மலர்ந்தது.
சற்று சிந்தித்தவளுக்கு, தற்போது அவரை எதிர்க்கும் அளவு மன தைரியம் இல்லை என்பதை உணர்ந்து, டைனிங் டேபிளில் இருந்த கத்தியை எடுத்து அவள் கழுத்தில் வைத்துக் கொண்டாள்.
“அவனுக்கு ஏதாவது ஆச்சுன்னா, உங்களுக்கு கொள்ளி வைக்க பொண்ணு கூட இருக்க மாட்டேன். அவன் என் கண்ணு முன்னாடி சாகுறதுக்கு பதிலா, உங்க முன்னாடி நான் செத்தா என்ன?” அவளது கண்களில் வெறி பிறந்தது.
ஹர்மேந்திரன் இதனை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. அவனுக்காக சாகத் துணியும் அளவு, தீவிரமாக இருப்பாள் என்று அவரும் எண்ணவில்லையே!
ஒரு நிமிடம் பெரும் அதிர்ச்சியில் அவர் நின்றிருக்க, “என்ன? இவள் சாக மாட்டாள்ன்னு நினைக்கிறீங்களா?” என நெருப்பாய் காய்ந்தவள், மணிக்கட்டு நரம்புக்கு அருகில் கையை அறுத்துக் கொள்ள, அவளது உதிரம் கண்டு பதறி விட்டார்.
என்ன இருந்தாலும், அவர் பாசம் கொட்டி வளர்த்த பெண்ணாகிற்றே. அவளது இழப்பை தாங்க இயலாது உள்ளம் துடிக்க, “வேணாம் மஹாம்மா சொன்னா கேளு” என ஒரு அடி முன்னால் எடுத்து வைத்ததில், அவள் மீண்டுமொரு முறை தன் கையை அறுத்துக் கொண்டாள்.
அது கொடுத்த வலி சிறிதும் உறைக்கவில்லை அவளுக்கு. அதை விட பெரும் துரோகங்கள் எல்லாம் வரிசை கட்டி நிக்கிறதே!
“நான் வேணாம்ன்னு நினைச்சா… ஆசை தீர அவனை கொல்லுங்க. ஆனா, அதை பார்க்க நான் இருக்க மாட்டேன். என்னை ஏமாத்திட்டு, அவனை கொல்லணும்ன்னு நினைச்சீங்க, அவன் சாகுறதுக்கு ஒரு செகண்ட் முன்னாடி நான் சாவேன்! நான் சொல்றதை செய்வேன்னு உங்களுக்கு தெரியும் நானா…!” என்றவளின் இந்த அவதாரத்தில் திகைத்தவருக்கு, அவளை சரி செய்யும் வித்தை தான் தெரியவில்லை.
கோபம் கட்டுங்கடங்காமல் எழுந்தாலும், உயிரை மாய்த்துக்கொள்வாளோ என்ற பயம் அளவுக்கு அதிகமாகவே எழுந்தது அவருக்கு.
அதில் நிதானித்தவர், முதலில் அவளை சரி கட்ட எண்ணினார்.
“சரி மஹாம்மா நான் அவனை எதுவும் பண்ணல. கத்தியை குடு.” என்றதில், கண்ணை சுருக்கி அவரைப் பார்த்தாள்.
“என்னை நம்பு. எனக்கு நீ ரொம்ப முக்கியம். அவனை நான் கொல்ல மாட்டேன். ஆனா, அவனை நீயே அடிச்சு அனுப்பணும். உன்னை உருகி உருகி காதலிக்கிறான்ல, அவன் வாழ்க்கையவே வெறுத்து போகணும். இல்லன்னா, இந்த பொண்ணு செண்டிமெண்ட்டையும் நான் பார்க்க மாட்டேன்…” என்றார் திட்டவட்டமாக.
அவளுக்கு அப்போதைக்கு அவன் உயிர் வாழ்வது மட்டுமே பெரிய விஷயமாக தோன்றிட, முயன்ற மட்டும், அவனைக் காயப்படுத்தி அனுப்பினாள். அதனால், மஞ்சுளாவின் குழந்தை தொலைந்தது அவள் எதிர்பாராத ஒன்று.
தஷ்வந்திற்கு சில பல நிமிடங்கள் பேச்சே வரவில்லை. அன்று சாமர்த்தியமாக கையில் ஏற்பட்ட காயத்தை தனது முழுக்கை டீ ஷர்ட்டை கொண்டு மறைத்து விட்டவள், முகத்தில் சிறிது கூட எதையும் காட்டவில்லையே. அவனெல்லாம் என்ன மனிதன்…? பெத்த பெண்ணை வார்த்தைகளாலேயே கூறு போட்டிருக்கிறான்… என உள்ளுக்குள் கோபம் தீயாய் கனன்றாலும், ‘அவன் சாகுறதுக்கு ஒரு செகண்ட் முன்னாடி நான் சாவேன்’ என்றவளின் கூற்று அவனை மொத்தமாக சுருட்டியது.
தன் ஒருவனின் உயிரைக் காப்பாற்ற எத்தனித்து, இன்று அத்தனை பேருடைய வாழ்வும் அல்லவோ சூன்யமாகி விட்டது! என ஆதங்கம் கொண்டவன், “உன் அப்பாவை கொல்லவே விட்டுருக்கலாம் டாலு. செத்தா நான் மட்டும் தான் செத்துருப்பேன். இப்போ, எல்லாரும் கஷ்டப்படுறாங்க.” என்றான் வேதனையாக.
அவனது சட்டையைப் பற்றி தன் புறம் இழுத்தவள், “என் நானா, உன்னை கொல்றதுக்காகவும், அவரோட வளர்ச்சிக்காவும் எந்த எல்லைக்கும் போவாருன்னு எனக்கு தெரியும் தான். ஆனா என் கூட இருக்குறவங்களையே கொல்ல நினைப்பாருன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல அமுலு. தெரிஞ்சுருந்தா, அமி, ஆஷா கூட ப்ரெண்டாவே இருந்துருக்க மாட்டேன். என்னால தான, என்னால தான அவள்… என்னால அதை ஒத்துக்கவே முடியல அமுலு. அவ அம்மா சொன்ன மாதிரி, தப்பெல்லாம் நான் தான பண்ணுனேன். அவளுக்கு ஏன் தண்டனை!” என்று கண்ணில் நீர் வழிய கேட்டவளைக் கண்டு அவனுக்கு இதயத்தில் உதிரம் வழிந்தது.
“லூசு மாதிரி பேசாத டாலு. உனக்கு தெரிஞ்சா அவளுக்கு ஆக்சிடெண்ட் ஆச்சு? அந்த அரசியல்வாதியோட பிரச்சனை பண்ணுனது நாங்க தான். எனக்காக அடிக்க போய் தான், நீயும் அந்த பிரச்சனைக்குள்ளயே வந்த. மந்த்ராக்காக போய் அமி மாட்டிக்கிட்டான். இதுல உன் தப்பு எதுவுமே இல்ல. எல்லாம் உன் அப்பனோட கிறுக்குத்தனம். கத்தியை எடுத்து அவனை குத்திருக்க வேண்டியது தான…!” என்றான் அவள் அறுத்துக் கொண்ட கரத்திலிருந்த காயத்தை நீவி விட்டபடி.
அவளுடன் கூடும் போதே அதனைப் பார்த்தானே! இதென்ன காயம் என்று கேட்டதற்கு, ஏதேதோ சமாளித்தாள்.
அவள் வயிற்றில் இருந்த தழும்பையும் கண்டு அவன் என்னவென்று கேட்டபோதும், “ரொம்ப வருஷமா இருக்கு” என்றாளே.
அவனும், “இல்லையே, ஃபர்ஸ்ட் டைம் நான் பாக்கும் போது இந்த காயம் எல்லாம் இல்லையே?” என தஷ்வந்த் புருவம் சுருக்கி கேட்டதற்கு, “நீ எங்கடா பொறுமையா என்னை பார்த்த. காஞ்ச மாடு மாதிரி தான பாஞ்ச…” என்று அவனை வாரி, கடுப்பேற்றி சாமர்த்தியமாக பேச்சை மாற்றி இருந்தாளே.
இப்போது நினைக்க நினைக்க அவன் மனம் ஆறவே இல்லை. “உன் அப்பன் கையால சாக கூடாதுன்னு, தினம் தினம் என்னை சாக வைக்க முடிவு பண்ணிட்டியாடி.” அவன் வேதனை மிஞ்ச கேட்க, அவளுக்கு தான் ஏதோ போல் ஆகி விட்டது.
“ஆஷாவுக்கு ஆக்சிடெண்ட் ஆச்சு… அப்போ அதுக்கு அப்பறம் என்ன ஆச்சு… மந்த்ராவையும் அமியையும் அவனுங்க டார்கெட் பண்ணுனாங்களா?” எனக் கேட்டான் தன்னை சமாளித்து.
“ம்ம். உன்னை அனுப்பி விட்டதுமே, எனக்கு அமி ஞாபகம் தான் வந்தது. அவன் இங்க இருக்குற வரை, சேஃப் இல்லைன்னு, அப்பவே ஏர்போர்ட்க்கு அனுப்பிட்டேன். நாங்க ஏற்கனவே லண்டன்ல பிஜி பண்ற ஐடியால இருந்தோம். அதுக்கு அப்ளையும் பண்ணிருந்தோம்.” என்றவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
“அமி எப்பவும் நான் என்ன சொன்னாலும், அதுக்கு காரணம் கூட கேட்காம உடனே செய்வான். அன்னைக்கு அவனை நைட்டோட நைட்டா, லண்டன்க்கு அனுப்ப பிளான் பண்ண, ஏர்போர்ட்ல இருந்தப்ப, அவனால என்கிட்ட காரணமும் கேட்க முடியல… கடைசியா ஒரு தடவை மந்த்ராவை பார்க்கணும்ன்னு கண்ணுல தண்ணியோட கேட்டப்ப எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு அமுலு. அவனுக்காக பஸ் ஸ்டாப்ல வெய்ட் பண்ணுவாள்ன்னு சொன்னான்.
அப்போதைக்கு அவன்கிட்ட ஆஷாவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆனதையும் நான் சொல்லல. தெரிஞ்சா கண்டிப்பா போக மாட்டான். இருக்குற பிரச்சனைல, அவன் மந்த்ராவ தேடிப் போய், அவளுக்கும் சேர்த்து ஏதாச்சு ஆச்சுன்னா, நான் முழு பைத்தியமாவே ஆகிடுவேன்.
அவனை எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியல… அதான் நான், அவள் அவனை தேடி பஸ் ஸ்டாப்க்கு வரல. காலேஜ் முடிஞ்சதும் வீட்டுக்கு போய்ட்டதா, மதன் சொன்னான்னு பொய் சொன்னேன். அதை கேட்டு ரொம்ப உடைஞ்சுட்டான். அதுக்கு அப்பறம் எந்த காரணமும் கேட்கல, அப்டியே கிளம்பி போய்ட்டான்.” என்றவளுக்கு தேம்பலாக வந்தது.
தஷ்வந்த் அவளை தோளோடு அணைத்து, “இட்ஸ் ஓகே டாலு. இட்ஸ் ஓகே!” எனக் கண்ணீரை அடக்கிக்கொண்டு தேற்றியவன், “அப்போ இவ்ளோ நாளா, மந்த்ரா தனியா இருந்தாளே… அவனுங்க இவளை அட்டாக் பண்ணல தான?” என்று கேட்டான்.
அதற்கு ஏதோ கூற வந்தவள், வார்த்தைகளை விழுங்கி விட்டு, “அவளுக்கு தெரியாம என் ஆளுங்க ரெண்டு பேரு அவளுக்கு கார்ட்ஸ்ஸா கூடவே தான் இருந்தாங்க.” என்று விட்டு, “ப்ச், இவ்ளோ கஷ்டப்படுறதுக்கு பேசாம இதுக்கு எல்லாம் காரணமான என் நானாவையே போட்டு தள்ளிட்டா என்னன்னு தோணுச்சு…” என்றாள் எரிச்சலாக.
வெகு நேரமாக அழுது சிவந்த பெண்ணவளின் கண்கள், அவனை வாட்ட, அவளை இயல்பாக்கும் பொருட்டு, “நீ செஞ்சாலும் செய்வடி…” என்றான் குறும்பாக.
அவளோ அவனை நிதானமாக ஏறிட்டு, “செஞ்சேன்…” என்றிட, அவன் அதிர்ந்தான்.
இருந்தும் அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு, “நான் திருச்சிக்கு போகலாம்ன்னு இருக்கேன்” என்று சம்பந்தமின்றி பேசிட, பழையவை மறந்து “என்னடா திடீர்ன்னு?” என்றாள் புரியாமல்.
“ம்ம்ம்… நீ குடுக்குற ஷாக்ல, என் ஹார்ட்ல குட்டி குட்டியா ஓட்டை விழுந்து இப்ப பெருசாகிடுச்சு டாலு. அதான் திருச்சிக்கு போய் மாதவை பார்த்து, என் ஹார்ட்டை வெளிய எடுத்து பட்டிங் டிங்கரிங் பார்த்து உள்ள வைக்க சொல்லப் போறேன். இதுக்கு மேல ஓட்டை விழுக இடமே இல்லையாம்…” என உதட்டைப் பிதுக்கி பாவமாக கூறியதில், போலியாய் முறைத்தவள், பின் அவன் பாவனையில் அழகாய் புன்னகைத்தாள்.
காயம் ஆறும்!
மேகா!