Loading

மனமே!

 

நான் தடம் பிறழும்போது

நீ என்னுடைய கைப்பாவையாக இருக்க வேண்டாம்.

எதிர்கட்சியாக இரு!

 

 

நாட்குறிப்பில் எழுதியவைகளைத் தொகுத்தான் நேத்ரன்.

 

தேவாவும் மைத்ரேயனும் நண்பர்கள். குருத்தணு பதப்படுத்தும் தொழில் தொடங்கி  இருவருமே நன்றாக வாழ்ந்தருக்கின்றனர். பணம் அதிகமாய் புழங்க இருவருக்கும் ஆசை அதிகமானது.

 

சில வருடங்களுக்கு முன்பு திடீரென ஒரு சிந்தனை வருகிறது. மைத்ரேயனும் இந்த சம்பவத்தை தான் நினைத்துக் கொண்டிருந்தான்.

 

“தேவா… இந்த வருஷம் நிறைய லாபம்” மைத்ரேயன்.

 

“ஆமாடா.. மைத்தி.. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இதே மாதிரி இன்னும் சில கார்ப்பரேட் ஹாஸ்ப்பிட்டல் ஆர்டர் எடுத்தா நாம வாழ்க்கை முழுக்க சந்தோஷமா இருக்கலாம்” என்றான் மிகவும் மகிழ்ச்சியாக.

 

“இல்லைடா… அப்படி இருக்க முடியாது. சரியான நேரத்தில் இந்த தொழிலை நாம் ஆரம்பிச்சோம். ஆனா இப்போ இதில் நமக்கு போட்டியாளர்கள் நிறைய பேர் வராங்க. நாம எந்த சரிவும் இல்லாம இருக்கணும்னா இதில் வித்யாசமா ஏதாவது யோசிக்கணும்.”

 

“மக்களுக்கு உயிர் பயம் இருக்கவரை நமக்கு லாபம்தானே.”

 

“இன்னைக்கு பத்தா இருக்க குறுத்தணு சேகரிப்பு மையம் நாளைக்கு நூறா மாறுச்சுன்னா நம்ம நிலைமை. நம்ம இருப்போம். ஆனா இப்போ உள்ள வளர்ச்சி அப்போ இருக்காது.”

 

“அப்போ வேற என்ன செய்யலாம்” என்றான் தேவா. அவனுக்குத் தெரியும். மைத்ரேயன் ஏதோ ஒரு திட்டத்துடன் செயல்படுகிறான் என்று‌.

 

“இப்போ ஒரு நோய் வந்தா உயிரோட இருக்க மனிதனை இந்த குறுத்தணு காப்பாத்தும். இதுதான் நம்ம வியாபார உத்தி. ஆனா செத்துப் போனவன், திரும்ப உயிருடன் வாழ முடியும்னு இருந்தா எப்படி இருக்கும்.”

 

“டேய்.. உனக்கென்ன வைத்தியம் புடிச்சிருக்கா. அது எப்படி சாத்தியம்.”

 

“இல்லடா.. நான் தெளிவாக இருக்கேன். இருபது வருஷத்துக்கு முன்னாடி உடல் உறுப்பு தானம் செய்ய முடிஞ்சிதா?”

 

“அது ஆராய்ச்சி செய்தாங்க. ஆராய்ச்சி முடிஞ்ச அப்புறம்தானே நடைமுறைக்கு வரும்.”

 

“அப்போ இருபது வருஷத்துக்கு முன்னாடி உறுப்புகள் பழுதாகி இருந்தவுங்க, வாழ வாய்ப்பு இல்லாம இறந்து போனவுங்க.”

 

“ஆமா… அதுல ஒண்ணும் சந்தேகம் இல்லை. ஆனா அதுக்கும் நீ சொல்ற விஷயத்துக்கும் என்ன சம்மந்தம்.”

 

“இப்போ மருத்துவ வளர்ச்சி ரொம்பவே இருக்கு. நம்ம கற்பனைக்கு எட்ட முடியாத தூரத்தில் இருக்கு. இன்னைக்கு ஒருத்தன் ஒரு நோயால் செத்துப் போறான். இரண்டு வருஷம் கழிச்சு அந்த நோய்க்கு சிகிச்சை கண்டுபிடிக்கப்படுது. அப்போ அவன் வாழ்வதற்கு நாம் வாய்ப்புக் கொடுத்தா எப்படி இருக்கும்.”

 

“வாட்.. என்னடா ஆச்சு உனக்கு.”

 

“இந்தா இதைப் படித்துப் பார்” என்று சில அச்சடித்த காகிதங்களை அவன் முன் போட்டான். அதை எடுத்துப் பார்த்தவன் விழிகள் மின்னியது. 

 

அதாவது இறந்தவரின் உடலை திரவ நைட்ரஜனில் பதப்படுத்தி வைத்து, பின் வேண்டிய பொழுது, அந்த உடலுக்கு உயிர் கொடுக்கும் சிகிச்சை என்ற சிகிச்சையின் தகவல்கள் அதில் இருந்தது. 

 

“இந்த குறுத்தணுவை லிக்விட் நைட்ரோஜனில் பாதுக்காக்குறோம். அதேபோல் மனித உடலை அதில் பாதுக்காக்க வேண்டும். அவ்வளவுதான். முதலில் எலியை வைத்து இந்த சோதனையை செய்யலாம். பின் மனிதர்களிடம் கேட்கலாம்.”

 

“ஆனா இதுக்கு நிறைய பணம் தேவைப்படுமே.”

 

“பெரும் பணக்காரர்களைப் பிடிப்போம். அவர்கள் கொடுக்கட்டும்” என்றான் மிக சாதாரணமாக.

 

இறந்தவரின் உடலை குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதாவது இறந்தவர்களுக்கு இதயம் நின்றுபோயிருந்தாலும் மூளையின் திசுக்கள் உயிருடன் இருக்க வேண்டும். பின் உடலில் உள்ள உதிரத்தை நீக்கிவிட்டு, உடல் உறுப்புகள் கெடாமல் இருக்க திரவங்கள் உள்ளே செலுத்தப்படும்‌. பின் மூளைக்கு தொடர்ந்து செயற்கை உயிர்வாயு அளிக்கப்படும். அதன் மூலம் மூளையின் திசுக்கள் உயிருடன் இருக்கும். உடல் முழுக்க திரவ நைட்ரஜனில் பதப்படுத்தப்படும். ஒருவர் ஒரு உறுப்பு செயலிழந்து இறந்துவிட்டால், குறுத்தணு கொண்டு ஆராய்ச்சி கூடத்தில் செயற்கை முறையில் அந்த உறுப்பை வளர்ப்பது, பின் அதை இறந்தவரின் உடலில் பொறுத்தி, உடலுக்குள்ளே உதிரம் செலுத்தி, உடலுக்குத் தேவையான சூட்டை அளித்து, இயந்திரங்கள் கொண்டு இதயத்தை உயிர்ப்பிப்பதுதான் இந்த திட்டம்.

 

முதலில் எலியை வைத்து இதை செய்து அதில் வெற்றியும் கண்டனர். ஆனால் உயிர்பெற்ற எலியின் மூளை நினைத்தது போல் செயல்படவில்லை. எலி மிகவும் பயந்த சுபாவத்துடன் இருந்தது. இதை அறிந்து கொண்ட பண முதலீட்டாளர்கள் கோபம் கொண்டு இவர்களை மிரட்ட, மைத்ரேயன் இந்த ஆராய்ச்சிக்குத் தன்னையே சோதனைக்குட்படுத்த ஒப்புக் கொண்டான். அவனே முன் வந்ததால், முதலீடு செய்தவர்கள் அமைதி காத்தார்கள். 

 

எலியின் மூளையில் உள்ள நினைவுகள் அழிக்கப்பட்டிருக்கிறது. அதை சரி செய்துவிட்டால் இந்த திட்டம் வெற்றி பெரும் என்று எண்ணியவர்கள், மூளையின் நினைவுகளை மைக்ரோ சிப்பில் பதிவேற்றும் மென்பொருளைக் கண்டறிந்தனர். 

 

பின் இந்த திட்டத்திற்காக துணிந்து உயிரை விட்டான் மைத்ரேயன். அதற்கு முன் தேவாவுடன் அனைத்தையும் கலந்தாலோசித்து வைத்திருந்தான். அனைத்தும் திட்டத்தின் படியே சென்றது. ஆனால் தேவாவிற்கு பணத்தின் மேல் ஆசை வர, மைத்ரேயன் இறந்துவிட்டதாக அறிவித்து, அவன் மனைவியிடம் அவனின் பங்கையும் எழுதி வாங்கிவிட்டான். மீண்டும் அவனை உயிர்பித்த பொழுது, மைத்ரேயனுக்கு நினைவுகள் அவ்வளவு எளிதாக வரவில்லை. மைத்ரேயனை ஒரு அறைக்குள்ளே வெகு நாட்கள் அடைத்து வைத்திருந்தான். மைத்ரேயன் உயிர்பெற்ற விஷயத்தை வைத்து பல பண முதலைகளிடம் இந்த திட்டத்திற்கு ஒப்புக் கொள்ள வைத்து, அவர்களிடம் பணமும் வாங்கினான்.

 

மூளையில் வைத்திருந்த நினைவுகளை உள்ளடிக்கிய சிப் வேலை செய்ய ஒரு உந்து சக்தி(ட்ரிகரிங் பாயிண்ட்) தேவைப்பட்டது. மைத்ரேயன் தேவாவைக் காணும்பொழுது அவனுக்கு பழைய நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக வந்தது. தேவா செய்திருந்த அனைத்தும் தெரிந்தது. ஆனால் அவனைத் தவிர்க்கவும் முடியவில்லை. எதிர்க்கவும் முடியவில்லை. நீண்ட நெடிய சிந்தனைக்குப் பின், மீண்டும் தேவாவுடன் இணைந்தான். அந்த நிறுவனத்தில் வேலைப் பார்ப்பதுபோல். தேவாவிற்கும் இவனின் மூளை முதலீடாக தேவைப்பட, அவனை சேர்த்துக் கொண்டான். இதனால்தான் தேவா மைத்ரேயனை ஓரிடத்தில் டெட் இண்வெஸ்ட்மெண்ட் என்று கூறியது. 

 

இப்படி மீண்டு வந்த மைத்ரேயினுக்கு உடல் சோர்வும் மன சோர்வும் அடிக்கடி வர, அவனின் தினசரி பழக்கவழக்கங்கள் பட்டியலிடப்பட்டு அதன் படி நடக்க வேண்டும் என்ற உத்தரவும் அவனுக்கு இருந்தது. 

 

மைத்ரேயன் மூளையின் இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று செய்த ஆராய்ச்சியே இப்பொழுது நிகழ்வதெல்லாம். மொழி, நிரண்யா மற்றும் நற்பவியின் இந்த நிலைக்குக் காரணம் இந்த ஆராய்ச்சிதான். மொழிக்கு தலையில் அடிப்பட்டதென்று, அவளின் தலையில் வேறு ஒரு நபரின் நினைவுகள் சுமந்த மைக்ரோ சிப்பைப் பொறுத்தி, அவளைப் பைத்தியமாக்கி தற்கொலை செய்ய வைத்தான். பின் மொழியின் உடல் மாற்றப்பட்டது‌. உடற்கூராய்வு முடித்து, உடலை ஒப்படைக்கும் பொழுது, வேறு உடலைக் கொடுத்தனர். அதனால் மொழியின் முகம் முற்றிலுமாக சேதமடைந்தது என்று கூறி மறைத்தனர்.

 

பின் மொழியின் மூளையில் உள்ள நினைவுகளை சேகரித்து அதை நிரண்யாவின் தலையில் பொறுத்தினர். நிரண்யாவிற்கும் சில ட்ரிகரிங் பாயிண்ட் தேவைப்பட்டது. அதனால் மொழியின் வீட்டை வாங்கினான். அவன் கனவு நினைவான இடமும் அந்த வீடுதான்‌. ஏனெனில் மொழியை இவன் வழிக்குக் கொண்டு வர வருடங்கள் பிடித்தது. ஆனால் நிரண்யாவைக் கொண்டு வர சில காலம்தான். அதற்கு அந்த வீடு உறுதுணையாக இருந்தது. அங்கு சென்றான் ஒருமுறை. நிர்ணயா அந்த வீட்டிற்குள் வந்ததும் மொழியின் நினைவுகளைத் தூண்ட தீபன் என்ற பெயரில் உரையாடினான். அப்பொழுது மொட்டை மாடியில் காதலனுடன் பிறந்தநாள் கொண்டாடிய பெண், இந்த வீட்டில் ஏதோ சத்தம் கேட்க, உள்ளே எட்டிப் பார்த்தாள். ஏதோ மர்மம் நிகழ்ந்ததென்று அவள் அந்த நேரத்தில் வேலை செய்த செக்யூரிட்டியுடன் வர அவர்கள் மூவரையும் கொன்றனர் தேவாவும் மைத்ரேயனும்‌.

 

பின் தேவாவால் தனக்கு ஏதேனும் நிகழலாம் என்று நினைத்த மைத்ரேயன், அவனின் நினைவை நற்பவிக்கு மாற்ற முடிவு செய்தான். இதில் மைத்ரேயனின் எண்ணம் துரதிர்ஷ்டவசமாக பலிக்காமல் போனது. நற்பவி மனதளவில் மிகவும் வலுவானவள். அதனால் அவனுடைய நினைவுகள் அவளுக்கு சென்றாலும், அவளின் மூளை பல சமயங்களில் விழித்துக் கொண்டது. அதாவது பாதி நற்பவியாகவும் பாதி மைத்ரேயனாகவும் இருக்கும் பொழுதே அவள் நினைவில் தோன்றியவை அனைத்தையும் எழுதி வைத்துவிட்டாள். 

 

மூளையில் வைத்து தைத்திருக்கும் மைக்ரோ சிப் மூளையின் நியூரான்களுடன் தொடர்பு கொண்டே நினைவுகளைத் கடத்தும்‌. நினைவு தோன்றும் இடம் அந்த மைக்ரோ சிப். அதன்பின் மூளையின் நியூரான்கள் செயல்பட்டு சிந்தனைகளை வளர்க்கும்‌. அதனால் அந்த நபர் கொஞ்சம் அதிகமாக சிந்திக்க வேண்டியிருக்கும். அதன் விளைவே மூளைச் சோர்வு ஏற்படுகிறது. இதில் நிரண்யா மற்றும் மொழி இருவரின் மனதையும் மிக எளிதாகக் களவாடியவர்களால், நற்பவியின் மனதை களவாட முடியவில்லை. அவள் மனதின் திடம் வென்றது. அவளுக்குப் பொறுத்தியிருந்த சிப் வேலை செய்தாலும், அவளின் நினைவுகள் அவளை பல சமயங்களில் ஆக்கிரமித்துக் கொண்டது. 

 

திகையாதே மனமே!

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்