258 views
அத்தியாயம் 30
சுபாஷினி தன் தமக்கையை சந்தோஷமாகப் பார்த்துக் கொண்டு, தானும் அவளுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிட நினைத்தாளே!
அது போலவே, கல்லூரி விட்டு வரும் வழியில் அவளுக்குப் பிடித்தமான ஐஸ்க்ரீம் வாங்கி வந்தாள்.
எப்பொழுதும் தனக்குப் பிடித்த ஐஸ்க்ரீமை தங்கை தன்னிடம் சொல்லி, வாங்கி வரச் சொல்லுவாள். இப்போதோ தனக்காக வாங்கி வந்திருக்கிறாள் என்று நெகிழ்ச்சி அடைந்த இளந்தளிர்,
“சுபா! உனக்கு ஐஸ்கிரீம் வாங்கலயா?” என்று கேட்டவாறே தன்னதை உண்ண ஆரம்பித்தாள்.
“வாங்கினேன் அக்கா. ஃப்ரிட்ஜில் வச்சுட்டேன். நீங்க சாப்பிடுங்க”என்று கூறிவிட்டு அதற்கு மேல் அங்கிருந்தால் கலங்கி விடுவோம் என சென்று விட்டாள் சுபாஷினி.
அந்த நெகிழ்ச்சியை உணர்ந்து கொண்ட இளந்தளிரோ, அவள் பின்னாலேயே சென்று,
” உன்னோடதையும் எடுத்துட்டு வா. சேர்ந்து சாப்பிடுவோம். இல்லன்னா இதை ஷேர் பண்ணிப்போம்” என்றாள்.
“சரி அக்கா” என தன்னுடைய ஐஸ்க்ரீமையும் கொண்டு வந்து அவளுடன் சாப்பிட்டாள் சுபாஷினி.
அவளது தலையைக் கோதி விட்டுக் கொண்டே, தன்னுடைய ஐஸ்க்ரீமை உண்டு முடித்தாள் இளந்தளிர்.
திருமணத்திற்கான வேலைப்பாடுகள் எல்லாம் செய்ய ஆரம்பித்து விட்டனர். இதில், ரோகிணியின் கணவர் பரதன் தான் எல்லாவற்றையும் எடுத்து நடத்தியது.
“மண்டபம் பார்த்தது எல்லாமே பாதிச் செலவுன்னு சொல்லி, சொல்லியே இவங்கக் காசைக் குடுத்துட்றாங்க” என்று சலித்துக் கொண்டார் சுமதி.
கோவர்த்தனனும் தன் வருங்கால மனைவியிடம் சொல்லியிருந்தான் அல்லவா! அதையே பிடித்துக் கொண்ட சிவசங்கரி, மொத்தச் செலவில் சரி பாதி கணக்கிடுவதற்கு முன்பாகவே அவரே முன் வந்து, தங்களது சரி பாதி பணத்தைக் கொடுத்து விடுவார்.
“அவங்களும், நாமளும் இந்த விஷயத்தில் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கோம் அம்மா” என்று மகன் சிரித்தான்.
இதை இளந்தளிரிடமுமே சொல்லி விட்டான் கோவர்த்தனன்.
அவளும் சிரித்து விட்டு,
“அது தானே டீல்!!” என்றாள்.
“நல்லாப் பேசு” என்று செல்லமாக கடிந்து கொண்டான்.
🌸🌸🌸
“அந்தா, இந்தான்னுக் கல்யாண நாள் நெருங்கிக்கிட்டே இருக்கு. பத்து நாள் தான் இருக்கு. முக்கியமானவங்க எல்லாருக்கும் பத்திரிக்கை குடுக்கனும்னா குடுத்து முடிச்சுருங்க.அடுத்து எல்லாம் எங்கேயும் நகர முடியாது” என்று பரதன் கூறவும்,
இளந்தளிர் தன் அலுவலக நண்பர்களுக்கு , அலுவலகத்திற்குச் சென்றே பத்திரிக்கை வைத்து விட்டாள்.
அதேபோல், கோவர்த்தனனும் தன்னுடைய அலுவலக நண்பர்களுக்குப் பத்திரிக்கை வைத்தான்.
ஹரீஷின் வீட்டிற்கு முறையாகப் பத்திரிக்கை வைக்கலாம் என்று பேசிக் கொண்டு இருக்கும் போது,
“என்ன தள்ளி வைக்கப் பாக்குறீங்களா எங்களை?” என்ற ரோகிணியின் ஒற்றைக் கேள்வியில்
பேச்சற்று நின்றனர்.
ஹரீஷூம், “என்னடா இதெல்லாம்? உனக்கு உதை தான் தரப் போறேன்?”
“நெருங்கின சொந்தம்ன்னு தான் நினைக்கிறீங்களே தவிர, ஒரே குடும்பம்ன்னு நினைக்கலைல” என்று மீண்டும் ரோகிணி கேட்க,
“அச்சோ! என்னம்மா நீ இப்படி யோசிக்கிற? அப்படியா உங்களைப் பாக்குறோம் நாங்க?” என்று சுமதி அவரைச் சமாதானம் செய்ய முயன்றார்.
“அப்பறம் என்னக்கா? நீங்க இப்படி பத்திரிக்கை வைக்குறேன்னு வர்றீங்க?உறவுமுறை அவ்வளவு தானா அக்கா?”
“இல்லவே இல்ல ரோகிணி.எங்க ரெண்டு பேரையும் மன்னிச்சுருங்க” என்று சிவசங்கரி அவரிடம் மன்னிப்பு வேண்டியதையும் கடிந்து கொண்டார்.
“இப்போ சாரி கேளுங்கன்னு சொன்னேனா நானு?” ரோகிணி பொரிந்து தள்ளினார்.
“அதுவும் இனிமேல் கேட்க மாட்டோம். நீ வா. வேலைக் கிடக்குல்ல” என்று அவரை தாஜா செய்து எப்படியோ மலையிறக்கி விட்டனர் சிவசங்கரியும், சுமதியும்.
இளந்தளிரோ தன் வீட்டாரும், கோவர்த்தனனின் வீட்டாரும் ஒரே இல்லத்தில் வசிக்கத் போகிறோம் என்பதை முன்னரே அறிந்து கொண்டதாலோ, என்னவோ பிரிந்து செல்லும் வருத்தம் தோன்றாமல், கல்யாணத்திற்காகச் செய்யும் சடங்குகளை சந்தோஷமாக, மனதார அனுபவித்துச் செய்து கொண்டு இருந்தாள்.
“இளா! ஒரு டவ்ட்?” என்றாள் மறுமுனையிலிருந்த மிதுனா.
“என்ன மிது?”
“கல்யாணத்துக்கு மூனு நாளைக்கு முன்னாடி வளையல் போட்ற ஃபங்க்ஷன் வைப்பாங்கள்ல. அதுக்கப்புறம் முகூர்த்தக்கால் நடுவாங்க தான?” என்று தன் சந்தேகத்தைக் கேட்டாள் மிதுனா.
“ஆமா மிது. அப்படித்தான் சொல்லியிருக்காங்க.இதுல என்ன டவ்ட் உனக்கு?”
“வளையல் ஃபங்க்ஷன் எந்த டைமிங்? முகூர்த்தக்கால் நட்றது எந்த டைமிங்?” என்று விசாரித்தாள்.
“வளையல் போட்ற ஃபங்க்ஷன் காலையில் எட்டு மணிக்கு நடக்கும். முகூர்த்தக்கால் நட்ற ஃபங்க்ஷன் ஏர்லி மார்னிங் ஆறரை மணிக்கு நடக்கும்” என்று விளக்கம் கொடுத்தாள் இளந்தளிர்.
“அப்போ நான் எந்த ஃபங்க்ஷனுக்கு வரட்டும்?”
தன்னிடமே கேட்ட தோழியை நினைத்து வாய் விட்டு சிரித்தாள் இளந்தளிர்.
“சிரிக்காம சொல்லு இளா?”
“மிது! நீ ரெண்டு ஃபங்க்ஷனுக்கும் வரனும்னு தான் நான் ஆசைப்படுவேன். ஆனா உனக்கு என்ன இஷ்டமோ அதைச் செய்” என்றாள் இளந்தளிர்.
“ரெண்டு ஃபங்க்ஷனையுமே நான் பார்த்ததில்லை இளா. சோ, ரெண்டுக்குமே வர்றேன். டைமிங் மட்டும் இன்னோரு தடவை கன்ஃபார்ம் பண்ணிட்டு எனக்கு அனுப்பி விடு” என்று கூறினாள் மிதுனா.
“உடனே கேட்டு அனுப்பி விட்றேன் மிது”
அன்னையிடம் கேட்டு உடனே மிதுனாவிற்கு அனுப்பியும் வைத்தாள் இளந்தளிர்.
வளையல் போடும் சடங்கிற்காக இரு டஜன் வளையல்கள் வாங்கி வைத்தனர்.
முந்தைய நாள் தனது புடவையை எடுத்து வைத்துக் கொண்டு இருந்த தமக்கையிடம்,
“எனக்கும் அப்படியே ஒரு ட்ரெஸ் செலக்ட் பண்ணிக் குடுங்க அக்கா?” என்று வந்து நின்றாள் சுபாஷினி.
“அனார்கலி சுடிதார் போட்டுக்கோ சுபா. க்ரீம் கலர்ல கிராண்ட் ஆக இருக்குய்ல அந்தச் சுடிதார். மைதிலியும் வருவா தான? அவகிட்டயும் கேட்கலையா?” என்றாள்.
“அய்யோ! ஆமா. இருங்க அவகிட்ட கேட்டுட்டு வர்றேன்” என்று அம்மாவிடமிருந்து செல்பேசி வாங்கி மைதிலியிடம் பேசப் போய் விட்டாள்.
ஒரு வழியாக அவளும், மைதிலியும் அனார்கலி சுடிதார் வேறு வேறு நிறத்தில் அணிவது என்று முடிவு செய்தனர்.
மறுநாள் காலையோ, இனி தாய் புலர, தலைக்குக் குளித்து வந்து விடியலை ரசித்துக் கொண்டு இருந்த அக்காவிடம் ,
காப்பிக் கோப்பையை நீட்டினாள் சுபாஷினி.
‘இதே மாதிரி நீங்களும், நானும் இனி எப்போ காலையில் சூரியனைப் பார்த்து ரசிக்கப் போறோமோ?’ என்ற வருத்தம் பிரதிபலித்தது தங்கையின் முகத்தில்.
‘சுபா!! உன் முகத்தைப் பார்த்தாலே உளறிடுவேன் போலிருக்கே!’ என்று மனதினுள் நினைத்துக் கொண்டவள் மறந்தும் வாய் திறக்கவில்லை.
“அக்கா காஃபியைக் குடிங்க” தங்கையின் கூற்றில் மௌனமாக காஃபியை அருந்தினாள் இளந்தளிர்.
இவர்களைத் தேடி மேலே வந்த சிவசங்கரியோ, மகள்களைப் பார்த்து நிறைவாகப் புன்னகைத்தார்.
“தலையைக் காய வச்சிட்டேன்னா வந்து சேலையை மாத்து இளா.அவங்க சீக்கிரமே வந்துருவாங்க.சுபா காஃபியைச் சீக்கிரம் குடிச்சிட்டுப் போய்க் குளி” என்று அவர்களிடம் கூறினார்.
“அம்மா.. மைதிலி வீட்ல இருந்து எப்போ வர்றாங்க? இப்போவே வந்துடுவாங்களா?” என்றாள் சுபாஷினி.
“நாம தயாரானதும் சொல்லுவோம். அப்போ வருவாங்க சுபா” என்று கூறி அவர்களைத் தயாராகுமாறு அனுப்பி வைத்தார்.
இளந்தளிர் தாயையும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாள்.
அவருக்குத் தான் மகளைப் பற்றிய அக்கறை அதிகம் இருக்கும்!
இப்போது மாடியில் தனித்து நின்றிருந்த சிவசங்கரியோ, இளந்தளிரை அவ்வப்போது பார்த்து வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.கோவர்த்தனன் மற்றும் சுமதியிடம் இதைக் கேட்டு விட வேண்டும் என்றும் முடிவெடுத்தார்.
இளம் ஆரஞ்சு நிறத்தில் இருந்தச் சேலையை உடுத்தியிருந்த இளந்தளிர் சிகையையும் ஒழுங்குபடுத்தி முடித்து இருந்தாள்.
🌸🌸🌸
சிவசங்கரியின் அழைப்பு வந்ததும், எப்போதும் போல, அவரது வீட்டிற்கு ஆஜர் ஆகினர்.
இந்த முறை மிதுனா இன்னும் வீட்டிற்கு வரவில்லை. மாப்பிள்ளை வீட்டார் வரவேற்றார் சிவசங்கரி.
“மூணாவது மனுஷங்க மாதிரி வரவேற்காம உள்ளே வாங்க அக்கா” என்று ரோகிணி அவரைக் கலாய்த்தாவறே, கைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார்.
அதில் அனைவரின் முகத்திலும் புன்னகை அரும்பியது.
“அக்கா! அவங்க வந்துட்டாங்களே!! மைத்தி இங்க தான் வருவா. அவகிட்ட எல்லாத்தையும் கேட்டுப்போம்” என்று சுபாஷினி உற்சாகமாக கூறினாள்.
புடவையைச் சரி பார்த்துக் கொண்டே,
“சரி சுபா.இந்த மிதுனாவை இன்னும் காணோமே? எங்கேட்ஜ்மெண்ட்டுக்குச் சீக்கிரமே வந்தா. இன்னைக்கு லேட் பண்றாளே?” என்று தங்கையிடம் கூறினாள் இளந்தளிர்.
“அவங்களுக்குக் கால் பண்ணிப் பாருங்க அக்கா”
“பண்ணிட்டேன்.அட்டெண்ட் பண்ணல” – இளந்தளிர்.
“அப்போ வந்துட்டு இருப்பாங்க அக்கா” என்றாள் சுபாஷினி.
அதற்குள் அறையினுள் நுழைந்தாள் மைதிலி.
“அக்கா!! சுபா!!”
மிகுந்த நாட்கள் பிரிந்திருந்து ஒன்று சேர்வதைப் போல நடந்து கொண்டாள் மைதிலி.
“மைத்தி!! உன்னைப் பத்தித் தான் பேசிட்டு இருந்தோம்.கரெக்டா வந்துட்ட” என்றாள் சுபாஷினி.
மைதிலி,”அக்கா கார்ஜியஸ் ஆக இருக்காங்க” என்று இளந்தளிரைப் பார்த்துக் கூறினாள்.
“தேங்க்ஸ்டா” என நன்றி தெரிவித்தாள் இளந்தளிர்.
பிறகு,”மிதுனாவுக்கு இன்னொரு தடவை கால் பண்ணிப் பாக்குறேன்டா” என்று மீண்டும் தோழியின் செல்பேசிக்கு அழைத்துப் பார்த்தாள்.
அவள் கால் அட்டெண்ட் செய்ததும்,
“ஹலோ மிது!! எங்க இருக்க? டிராஃபிக்ல மாட்டிக்கிட்டியா?” என்று கேட்டாள்.
“ஆமா இளா. இதோ வந்துட்டேன், வந்துட்டேன்” என்று வீட்டிற்கு அருகில் வந்து விட்டாள் போலும்! அழைப்பைத் துண்டித்து இருந்தாள் மிதுனா.
காலிங்பெல் சத்தம் கேட்டதும், மிதுனா தான் என்பது இளந்தளிருக்குத் தெரியும்! ஆனால் சிவசங்கரி யார் என்று பார்க்கச் சொன்றார்.
“மிதுனா… நீ தானாம்மா? உள்ளே வா” என்று வரவேற்றார் சிவசங்கரி.
வரவேற்பறையில் அமர்ந்திருந்தவர்களும் ஏற்கனவே நிச்சயம் அன்று வந்த இளந்தளிரின் தோழி தான் இவள் என்பதைக் கண்டு கொண்டவர்கள், ஸ்நேகமாய்ப் புன்னகைத்தனர்.
“கீழே போய் பார்த்துட்டு வா சுபா. மிதுனாவா இருந்தா கூப்பிட்டு வந்துரு” என்று தங்கையை அனுப்பி வைத்தாள் இளந்தளிர்.
மிதுனாவே தான் வந்திருப்பதை அறிந்ததும்,
“வாங்க அக்கா. உங்களைத் தான் இளா அக்கா எதிர்பார்த்துட்டு இருந்தாங்க” என்று கூப்பிடவும், சிவசங்கரியிடம் சொல்லி விட்டு போனார்கள்.
🌸🌸🌸
மிதுனாவும் அக்கா, தங்கைகளுடன் (சுபாஷினி , மைதிலி) இணைந்து கொள்ள, வளையல் போடும் நேரம் வரை கலகலப்பாகத் தான் இருந்தது அவ்வறை.
வளையல்களை அடுக்கி வைத்துக் கொண்டு இருந்த ரோகிணி,
“மைதிலியைப் போட்டு விடச் சொல்லுவோமா சுமதியக்கா? அவ கோவர்த்தனனுக்குத் தங்கச்சி மாதிரி தான?” என்று கேட்டார்.
சுமதி, “ஆமா ரோகிணி. நானே இதை உங்கிட்ட கேட்கலாம்னு இருந்தேன். மைதிலியே போடட்டும்” என்று அவரும், சிவசங்கரியும் அனுமதி அளித்தனர்.
மேலே இருந்தவர்களைக் கீழ் வருமாறு பணித்து விட்டு,
“மாப்பிள்ளையோட தங்கச்சின்னு மைதிலி! நீ தான் வளையல் போடப் போற” என்று மைதிலியிடம் கூறவும் அவளுக்கு ஏக சந்தோஷம்!
சபை நாகரீகம் கருதி இளந்தளிரும், கோவர்த்தனனும் புன் சிரிப்புடன் கூடிய பார்வைப் பரிமாற்றம் செய்து கொண்டனர்.
“இந்தாம்மா” என்று மைதிலியின் கரத்தில் வளையலைக் கொடுத்தார் சிவசங்கரி.
அதை வாங்கி ஆசை ஆசையாகத் தன் கைகளிலிருந்து, இளந்தளிரின் கரங்களுக்குச் சேர்ப்பித்தாள் மைதிலி.
மிதுனாவும் சுபாஷினியைத் தன் அருகில் அமர்த்திக் கொண்டு, இளந்தளிரின் கரங்களில் தவழும் வளலயல்களைப் பார்வையிட்டாள்.
“வாழ்த்துகள் அக்கா” என்று மைதிலி கூற,
இளந்தளிரும், “தாங்க்யூடா” என்றாள் மன நிறைவுடன்.
கோவர்த்தனனும் கை வளையல் குலுங்கிட, முகம் முழுக்க புன்னைகையைத் தத்தெடுத்து இருந்த தன் உயிரானவளை ரசனையுடன் பார்த்தான்.
கூடி இருப்பவர்கள் பேசியதெல்லாம் செவியில் விழாது போல், அவளது அப்பழுக்கற்ற அழகை ரசித்துக் கொண்டு இருந்தான்.
வளையல் போடும் சடங்கும் மற்ற சடங்குகளைப் போல நல்லபடியாகவே முடிந்தது.
மிதுனா, “இந்த வளையலைக் கழட்டவே கூடாதா இளா?” என்று தோழியிடம் கேட்டாள்.
“ஆமா மிதுனா. வளையலை இப்போதைக்குக் கழட்டவே கூடாது. உடைஞ்சுப் போகாமலும் பார்த்துக்கனும். ஆஃபர் மேரேஜ் உடைஞ்சா ஒன்னும் இல்லன்னு சொன்னாங்க”
இவையெல்லாம் தாய் தனக்களித்த அறிவுரை என தோழியிடம் கூறினாள் இளந்தளிர்.
“அப்போ கல்யாணத்தன்னைக்கு இதே வளையல் தான் போட்டு இருப்பியா?” – மிதுனா.
“அப்போ மட்டும் கழட்டிக்கலாம் மிதுனா” என்றார் சிவசங்கரி.
ஆள் எவரேனும் துணைக்கு இல்லாத நேரங்களில், கையிலிருக்கும் வளையல்கள் எழுப்பும் சத்தம் மணப்பெண்ணிற்குத் துணையாக
இருக்கும் என்பது நம்பிக்கை.
(என் அபிப்பிராயம் மட்டுமே)
மீண்டும் தன்னவனைக் கண்களால் தேடினாள் இளந்தளிர்.
அவனோ, “சூப்பர்!!!” என்று அழகாய்ச் சிரித்தான்.
அதில், மொத்தமாக விழுந்து விட்ட இளந்தளிரோ, சில கணங்கள் அவனது பார்வையின் பிடியில் இருந்தாள்.
“மிதுனாம்மா! அப்படியே முகூர்த்தக்கால் நட்ற அப்பவும் வந்துடனும்” என்றார் சிவசங்கரி.
“வந்துட்றேன் மா. இளாகிட்ட எல்லாமே கேட்டுட்டேன்.”
“இன்னும் இரண்டு நாள்ல நடலாம்ன்னு இருக்கோம் மா. வந்துடு சரியா?”
மிதுனா, “சரிங்க அம்மா” என கூறினாள்.
கோவர்த்தனன் வீட்டிலும் சரி, இறந்தளிரின் வீட்டிலும் சரி
அவர்களது திருமண விஷயத்தைக் கேள்விப்பட்ட சில சொந்தங்கள்,
“எல்லாமே எங்ககிட்ட சொல்லாமலே செஞ்சுட்டீங்கள்ல. கல்யாண வேலை அவ்வளவு இருக்கும். அதையெல்லாம் யார் செய்றாங்கன்னுப் பாக்குறோம்!” என்று விஷத்தைக் கக்கினர்.
அவற்றையெல்லாம் துடைத்தெறிந்து விட்டு, இதோ எல்லா சடங்குகளையும் ஒரு குறையும் இல்லாமல் செய்து முடிக்கப் போகிறார்கள் இரு வீட்டாரும்.
அடுத்தச் சடங்கு முகூர்த்தக்கால் நடும் விழாவும் விமரிசையாக நடக்கும் என்று எதிர்ப்பார்ப்போம்.
இதற்கிடையில், கோவர்த்தனன் மற்றும் இளந்தளிர் தங்களது பிடித்தங்களை ஒருவரிடம் மற்றொருவர் பகிர்ந்து கொள்ளத் தொடங்கி இருந்தனர்.
தொடரும்.