Loading

வேதம் 3

அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு இருவரும் வெளியில் செல்லவில்லை. வீரபாண்டியிடம் விஷயத்தை சொல்ல முயன்ற நரேந்திரனை தடுத்துவிட்டாள். ஏன் என்ற கேள்விக்கு பிரச்சனை வேண்டாம் என்ற பதில் மட்டுமே அவளிடம். அவனைக் கண்டு பயப்பட என்ன காரணம் எனவும் கேட்டு விட்டான். அதற்கு,

“அவனைக் கண்டு எனக்கு எந்த பயமும் இல்லை. கல்யாணம் நடக்கிற வரைக்கும் எந்த பிரச்சனையும் வேணாம்னு நினைக்கிறேன். அப்பாக்கு இந்த ஊர்ல நல்ல பேர் இருக்கு. அது ஒரு நாளும் என்னால கெட்டுப் போக கூடாது.” என்ற பதில் அவளிடம்.

வீரபாண்டியை மனதில் வைத்து வாய் திறக்கவில்லை நரேந்திரன். கல்யாணத்திற்கு நாள் நெருங்கி விட்டதால் அந்த வேலையில் பரபரப்பானார்கள் வீட்டு ஆட்கள். மாப்பிள்ளையின் பெற்றோர்கள் மருமகளை பார்க்க வந்து விட்டார்கள். ஏற்கனவே நன்கு பழக்கப்பட்ட உறவு தான் என்றாலும் எதிர் கொள்ள புதிதாக இருந்தது ஆத்ரிகாவிற்கு.

அவர்களைக் கண்டு தலைகுனிய ஆரம்பித்து விட்டாள். நரேந்திரன் உட்பட அனைவரும் கேலி செய்து ஒரு வழி ஆக்கி விட்டார்கள். சுற்றி வரும் கிண்டல்களை எதிர்கொள்ள முடியாமல்,

“பாருங்கப்பா” என சினுங்க,

“மாமனார் மாமியார் கிட்ட வாய் நிறைய பேசு ஆத்ரிமா. உன்ன பார்க்க தான இவ்ளோ தூரம் வந்திருக்காங்க.” என அவரும் மாப்பிள்ளை பக்கம் நின்றார்.

“விடுங்க சம்பந்தி நேத்து வரைக்கும் ஃப்ரெண்டோட அப்பா அம்மாவா பார்த்துட்டு இன்னைக்கு மாமியார் மாமனாரா பார்க்க புதுசா இருக்கோ என்னவோ. போகப் போக சரியாகிடும். “

“இப்பவே மருமகளுக்கு சப்போர்ட்டா… பேஷ் பேஷ் டாடி.”

“நரேன்!”

“ஓகே மம்மி. இனிமே உங்க மருமகளை கிண்டல் பண்ணல.”

“அவன் அப்படித்தான் வேலை இல்லாம கிண்டல் பண்ணிட்டு இருப்பான். நீ அதெல்லாம் பெருசா எடுத்துக்காம நார்மலா இரு ஆத்ரி. நாங்க உனக்கு நல்ல ஃப்ரெண்ட்ஸா இருப்போம்.” என்ற மாமனாருக்கு தலையாட்டியவளை தன் அருகே அழைத்தார் நரேனின் தாயார்.

வழக்கமாக எப்பொழுது அவனின் வீட்டிற்கு சென்றாலும் அவரோடு தான் அதிகமாக பொழுதை கழிப்பாள். இருவரும் பெண்கள் உலகத்திற்குள் சென்றால் இரு ஆண்களையும் கண்டுகொள்ள மாட்டார்கள். அப்படி அவரோடு நெருக்கமாக இருந்தவள் இன்று விலகி அமர்வதை வைத்து புன்னகைத்தவர் தன் கைக்குள் அவள் கையை வைத்து தடவி கொடுத்தார்.

இருவருக்கும் தனிமையை கொடுக்க நரேந்திரனின் தந்தை மற்றவர்களை அழைத்துச் சென்று விட்டார். அங்கிருந்தவர்கள் சென்றதை கூட அறியாமல் அமர்ந்திருந்தாள் ஆத்ரிகா.

“ஆத்ரி!”

“சொல்லுங்க ஆன்ட்டி” என சொல்ல வந்தவள், “சொல்லுங்க அத்தை” திருத்தினாள்.

“என்னை பாருடா” என அவள் முகம் நிமிர்த்தி பதமாக தலையை வருடி கொடுத்தார்.

ஆத்ரிகா அவரையே பார்த்திருக்க, “என்னை பார்த்த பயமா இருக்கா?” கேட்டதும் வேகமாக தலையசைத்து மறுத்தாள்.

சின்ன புன்னகையோடு, “எனக்கு இருக்கிறது ஒரே மகன். அவன் கூட வாழ வர பொண்ணு எனக்கு ஒரே மருமகள். எனக்கு உங்க ரெண்டு பேரையும் விட்டா வேற ஆள் இல்லை. எங்க வாழ்க்கை இதுவரைக்கும் எங்க மகனுக்காகனா இனிமே உனக்காகவும். எல்லா மாமியார் மாதிரியும் நான் நடந்துக்க மாட்டேன். என்னை கண்டு புதுசா நீ பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எப்பவும் என்கிட்ட பேசுற மாதிரி சகஜமா பேசு.

அந்த மாதிரி இருந்ததால தான் எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சுது. என் மகனே ஆசைப்படாம இருந்திருந்தாலும் உன்னை கட்டி வைக்க முயற்சி பண்ணிருப்பேன். நீ எப்ப எங்க வீட்டுக்கு வர போறன்னு மூணு பேரும் ரொம்ப ஆவலா காத்திருக்கோம். நம்ம வீட்டுக்கு வரும்போது நீ முழு மன நிறைவா வரணும்னு ஆசைப்படுறேன். ஏதாச்சும் குறை இருந்தா சொல்லு நாங்க நிச்சயம் மாத்திக்கிறோம்.” என்றார்.

“என்ன ஆன்ட்டி இப்படி எல்லாம் பேசுறீங்க. உங்க கிட்ட எந்த குறையும் இல்லை. உங்கள மாதிரி ஒரு மாமியார் யாருக்குமே கிடைக்காது. உங்க விஷயத்துல நான் ரொம்ப லக்கி. நீங்க எதையும் மாத்திக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் தான் என்னை கொஞ்சம் மாத்திக்கணும்.”

“உன் மனசுல என்னமோ ஓடுதுனு தெரியுது. அது என்னன்னு தான் தெரியல. அதான் எங்க சைடு ஏதாவது தப்பு இருக்குமான்னு கேட்டேன்.”

“இல்ல ஆன்ட்டி நீங்க ரொம்ப ஸ்வீட். இவ்ளோ நாள் பிரண்ட்ஸா பார்த்துட்டு திடீர்னு உறவா பார்க்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு. நரேன் கிட்ட கூட அந்த தயக்கம் தான் எனக்கு. வேற எந்த பிரச்சனையும் இல்லை.”

“உனக்கு மட்டும் இல்ல கல்யாணம் பண்ணிக்க போற எல்லா பொண்ணுங்களுக்கும் வர பிரச்சனை தான் இது. கல்யாணமானதும் எல்லாம் சரியாகிடும். அதுவரைக்கும் மனச போட்டு குழப்பிக்காம உன் வீட்ல சந்தோஷமா இருந்துட்டு வா. ஏன்னா இப்ப இருக்கிற வாழ்க்கை நீ ஆசைப்பட்டாலும் திரும்ப கிடைக்காது.”

“இப்பதான் மாமியார் மாதிரி பேசுறீங்க ஆன்ட்டி.” என்றதும் அவளை அடிக்க கை உயர்த்தியவர்,

“கேடி… புருஷன் குழந்தைங்கன்னு காலம் ஓடிடும்னு சொல்ல வந்தேன். விட்டா என்னை கொடுமக்காரின்னு பட்டம் கட்டிடுவ போல.” என்றிட,

“வாய்ப்பு இருக்குன்னு நினைக்கிறேன்.” என சிரித்தாள்.

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, “உள்ள வரலாமா” என நரேந்திரன் குரல் கொடுக்க, “சாரி, நாட் அலோட்.” என ஆத்ரியும்,

“உன் சேவை இப்ப எங்களுக்கு தேவை இல்லை.” என அவன் அன்னையும் சேர்ந்து கலாய்த்தார்கள்.

“ஒன்னு சேர்ந்துட்டாங்கய்யா இனிமே நம்மளை கண்டுக்க மாட்டாங்க.” என்றவன் பேச்சிற்கு அங்கிருந்து அனைவரும் சிரித்தார்கள்.

***

கல்யாண புடவை எடுக்க அனைவரும்  வந்திருக்கிறார்கள். வழக்கமாக மாப்பிள்ளை வீட்டு சார்பாக அவர்கள் அழைக்கும் கடைக்கு சென்று எடுப்பது தான் வீரபாண்டி வீட்டு முறை. தன் வருங்கால மருமகளுக்காக அவள் இருக்கும் இடத்திற்கே வந்த மாமியார் அவளுக்கு பிடித்த கடைக்கு அழைத்து வந்திருக்கிறார்.

“உனக்கு பிடிச்சத எடுத்துக்க ஆத்ரி. எவ்ளோ விலையா இருந்தாலும் பரவால்ல.”

“நீங்களே உங்க மருமகளுக்கு ஏத்த மாதிரி ஒரு புடவைய எடுத்து கொடுங்க சம்பந்தி. அவள விட்டா ஒரு நாள் ஆக்கிடுவா” என்றார் அவள் அம்மா கண்ணகி.

“இருக்கட்டும் சம்பந்தி எத்தனை நாள் ஆனாலும் பரவால்ல அவளுக்கு பிடிச்சதையே எடுத்துக்கட்டும்.”

“நான் வேணா கார்ல வெயிட் பண்றேன் பொறுமையா முடிச்சிட்டு வரீங்களா.”  நரேந்திரன் அவர்களை கேலி செய்ய,

“எங்களை விட உனக்கு தான் இங்க வேலை அதிகம், வா.” என மகனை அழைத்தவர்,

“என் மருமக புடவைய செலக்ட் பண்ற வரைக்கும் டயர்ட் ஆகாம பேச்சு கொடுத்துட்டு இரு. நாங்க எங்களுக்கு டிரஸ் எடுத்துட்டு வரோம்.” என அவர்கள் விருப்பத்திற்கு விட்டுவிட்டு சென்று விட்டார்கள்.

“நீ செலக்ட் பண்றியா”

“உன் மாமியார் என்னை புரட்டி போட்டு அடிக்கவா.”

“அப்படியே அம்மாக்கு பயந்துடுவ பாரு.”

“அம்மாக்கு பயந்ததில்ல இனிமே பொண்டாட்டிக்கு பயப்படனும்.”

“ரொம்ப வருத்தமா சொல்ற மாதிரி இருக்கு.”

“ஆமானு வேற தனியா சொல்லனுமா குல்பி. இந்த அப்பாவி முகத்தை பார்த்தா தெரியல.” என்றவனை முறைத்துக் கொண்டு புடவை எடுக்க ஆரம்பித்தாள்.

“அந்த மஞ்சள் கலர் புடவைய எடுங்க.” என்றவன் குரல் கேட்டு இருவரும் திரும்பினார்கள்.

அங்கு அவர்கள் இருப்பதை அறியாதவாறு, “அது இல்லங்க அய்யா… பக்கத்துல இருக்கே அது.” என்றான்.

ஏனோ அவனைக் கண்டதும் குபுகுபுவென கோபம் வந்தது நரேந்திரனுக்கு. பக்கத்தில் இருந்தவள் எதையும் கண்டுகொள்ளாமல் புடவை எடுத்துக் கொண்டிருக்க,

“பொறுக்கி! எனக்கு வர ஆத்திரத்துக்கு இவன அப்படியே…” வாய்க்குள் முணுமுணுத்தான்.

“சும்மா இரு நரேன்”

“இவனை பார்த்தாலே பத்திட்டு வருது. உன்னால தான் சும்மா இருக்கேன்.”

“அவன் எது பேசினாலும் பதில் கொடுக்காத.” என எச்சரிக்கும் பொழுதே,

“மிஸ்டர்… கொஞ்சம் தள்ளி நில்லுங்க” என இருவருக்கும் நடுவில் வந்து நின்றான்.

பல் உடையும் அளவு நரநரவென கடித்து திட்ட போவதற்குள் அவன் கையைப் பிடித்து தன் பக்கம் இழுத்துக் கொண்டாள் ஆத்ரிகா. அவளைக் கண்டு மெச்சும் பார்வையை வீசியவன்,

“இது நல்லா இல்ல அய்யா வேற எடுத்து காட்டுங்க.” எனப் புடவையை பார்க்க ஆரம்பித்தான்.

“நம்ம வேற இடத்துக்கு போகலாம்.” என அழைத்தவளிடம் வீம்பு பிடித்தவன் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருக்க, தலை வலித்தது அவளுக்கு.

“சொன்னா கேளு அங்கிள் ஆன்ட்டினு எல்லாரும் இருக்காங்க.”

“இருக்கட்டும் அதுக்கு என்ன இப்போ குல்பி.”

“புரியாதா நரேன் உனக்கு”

“உனக்கு தான் புரியல. அவன் வேணும்னே பிரச்சனை பண்றதுக்காக வந்திருக்கான். வந்தவனை கண்டு பயந்து ஓட சொல்றியா.

“அவன் புடவை எடுக்க வந்திருக்கான்”

“யாரு அவனா? அவன் பண்றதெல்லாம் பார்த்தா அப்படியா தெரியுது. நீ எதை எடுக்குறியோ அதை எடுக்கிறான். நீ வேணாம்னு சொன்னா வேணாம்னு சொல்றான்.”

“அதுக்கு தான் சொல்றேன் இங்க இருக்க வேணாம்னு.”

“அவனுக்கு எதுக்கு நீ இவ்ளோ பயப்படுற? அவன் யாரு உனக்கு?” என சற்று குரலை உயர்த்த,

“சார், பொறுமையா பேசுங்க. புடவை எடுக்க முடியல டிஸ்டர்பன்ஸா இருக்கு.” கூலாக கூறினான் இளங்கீரன்.

“நீ தான்டா எங்களை டிஸ்டர்ப் பண்ற.”

“டாக்டருக்கு மரியாதையா பேசுனு அப்பப்போ நியாபகப்படுத்தணுமோ.” சாதாரணமாக சொன்னவன், “ப்ளீஸ் ரெஸ்பெக்ட் சர்ர்ர்…” என்றான் நக்கலாக.

“தெரியும் போடா”

“பல்லு பறக்க போகுது”

“பறக்கும் பறக்கும்”

“இப்படியே பேசினா கண்டிப்பா பறக்கும்.”

“ப்ளீஸ் நரேன்”

“ப்ச்! என்னையவே அடக்கு”

“பின்ன என்னையா அடக்க முடியும்.”

“வேணாம்டா”

“கல்யாணத்துக்கு புடவை எடுக்க வந்திருக்கோம். இந்த மாதிரி நேரத்துல சண்டை போடுறது நல்லா இருக்காது. சொன்னா புரிஞ்சுக்க நரேன். இதனால அவனுக்கு ஒரு நஷ்டமும் இல்ல நமக்கு தான் எல்லாம். நம்ம சந்தோஷத்த கெடுக்க போறியா” என்றவளின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து பேச்சை நிறுத்தினான்.

“தேங்க்யூ மேடம்” என்றதும் அவனை பார்காது முகத்தை திருப்பினாள்.

வெகு நேரமாக அமைதியாக இருக்கும் அவர்களை வெறுப்பேற்ற நினைத்த இன்ப இளங்கீரன்,

“என்னய்யா கலரே தெரிய மாட்டேங்குது. எல்லா புடவையும் கருப்பா இருக்கு.” அவர்களை பார்த்து பேச,

“கண்ணாடிய கழட்டிட்டு பாருடா. பெரிய ராஜ வம்சத்து ராஜதுரை கண்ணாடிய கழட்ட மாட்டாரு.” என்றான் நரேன்.

“கண்ணாடிய கழட்டிட்டா… இந்த மூஞ்சியவா கல்யாணம் பண்ணிக்க போறேன்னு அந்தப் புள்ளைய பார்த்து கேட்பேன் பரவாயில்லையா.”

“டேய்!” துள்ளும் நரேந்திரனை அடக்க பெரும் பாடுபட்டவள் ஒரு வழியாக தூரம் அழைத்து வர, பொறுமையாக ஒரு புடவையை தேர்ந்தெடுத்தான்.

அதை எடுத்துக்கொண்டு அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தவன் ஆத்ரி கையில் கொடுப்பது போல் கொண்டு வந்து திரும்பி கொண்டான்.

வேதம் ஓதும்…

 

வேதம் 4

அப்புவெட்டி வெட்டப்பாளையம் இரு கிராமத்திற்கு நடுவில் இருக்கிறது இரு ஊர்களின் குலதெய்வம். எப்பொழுதும் சித்திரை மாதத்தில் தான் திருவிழா கொண்டாடுவார்கள். ஐந்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் பொங்கல் வைத்து படையல் இடுவது சிறப்பு. இன்று கொடி ஏற்றுவதற்கான முதல் நாள்.

இதையெல்லாம் பார்க்காத நரேந்திரன் உற்சாகத்தோடு கோவிலுக்கு கிளம்பினான். அவனது பெற்றோர்களும் ஆர்வமாக கிளம்ப, தயாராகாமல் அமர்ந்திருந்தாள். அவளை நோட்டம் விட்ட கண்ணகி கணவனுக்கு கண் காட்ட, தான் பார்த்துக் கொள்வதாக தலையசைத்தார்.

“ஹாய் குல்பி! இந்த டிரஸ் எப்படி இருக்கு?”

“ஹேய்…குல்பி” என உசுப்பியதும் நினைவு திரும்பியவள் முழிக்க,

“பகல் கனவா” அவள் தலையை தட்டி, “இந்த டிரஸ் எப்படி இருக்குனு கேட்டேன்.” என்றான்.

“ம்ம்!” என்றதோடு அவள் நிறுத்த, “இது ஒரு பதிலா குல்பி.” முறைத்தான்.

“நல்லா இருக்கு நரேன்.”

“தேங்க்யூ!”

“எங்க போற?” என்றவளை விசித்திரமாக நோக்கியவன், “கோட்டைச்சாமி கனவுல இருந்து எந்திரி. நம்ம எல்லாரும் கோவிலுக்கு போறோம்.” என்றான்.

“நான் வரல”

“ஏன்?”

“வர பிடிக்கல”

“ஏன்?”

“தெரியல, ஒரு மாதிரி இருக்கு. நான் வரல.”

“நீதான நைட் கேட்டதுக்கு கிளம்பலாம்னு சொன்ன. இப்ப என்ன மாத்தி பேசுற.”

“நைட்டு போகலாம்னு தோணுச்சு சொன்னேன். இப்ப போக வேணாம்னு தோணுது.”

“அதான் ஏன்னு கேக்குறேன்”

“அதான் தெரியலன்னு சொல்லிட்டேன்ல திரும்பத் திரும்ப அதையே கேட்டா என்ன அர்த்தம்.”

சற்றென்று கோபப்பட்டவள் தன் அறைக்கு சென்றுவிட்டாள். இதுவரை தன்னிடம் இப்படி ஒரு முகத்தை காட்டாத வருங்கால மனைவியின் செயலை ஜீரணிக்க முடியாமல் அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தான். நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கண்ணகி மகளிடம் சென்று,

“எதுக்குடி மாப்ள கிட்ட இப்படி கோவமா கத்திட்டு வர. அவர் அப்பா அம்மா இங்க தான் இருக்காங்க நியாபகம் இருக்கா இல்லையா? உன்னையும் எங்களையும் என்ன நினைப்பாங்க. ஒழுங்கா பேசினதுக்கு மன்னிப்பு கேளு போ.” திட்ட துவங்கினார்.

அவர் திட்டுவதை கருத்தில் கொள்ளாமல் தன் போக்கில் அமர்ந்திருந்தாள். அவரோ, “கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லனா எதுக்காக அந்த புள்ள மனசுல ஆசைய வளர்த்துட்டு இருக்க. ஆமா இல்லன்னு சொல்லிட்டா அந்த புள்ள வாழ்க்கையாது நல்லா இருக்கும்ல.” என்று விட்டு, அவள் முகத்தை பார்க்காமல்,

“நீயும் வாழ மாட்ட அடுத்தவங்களையும் வாழ விட மாட்ட.” என்றார்.

அதுவரை ஏதோ ஒரு சிந்தனையில் சுழன்று கொண்டிருந்தவள் அன்னையை ஏறிட, திட்ட திரும்பியவர் அதிர்ந்தார். தெப்பக்குளம் போல் தேங்கி இருந்தது அவள் விழியில் நீர். மகளின் கண்ணீரைக் கண்ட பின் தான் சொன்ன வார்த்தையின் வீரியம் புரிந்தது.

கக்கிய வார்த்தையை வாங்க முடியாமல் தவித்தவர் மகளை நெருங்கும் முன் கண்ணீரை துடைத்தான் நரேந்திரன். மருமகனை கண்டதும் பயந்து கை பிசைய,

“எதுக்கு அத்தை என் குல்பிய அழ வைக்கிறீங்க. எங்கிட்ட கோபப்பட அவளுக்கு எல்லா உரிமையும் இருக்கு. சொல்லப்போனா… இப்பதான் என்னை கல்யாணம் பண்ணிக்க போறவனாவே பார்க்க ஆரம்பிச்சிருக்கா. எங்களுக்குள்ள நடக்கிற பிரச்சனைக்கு நடுவுல நீங்க வராதீங்க.” என்றதும் அவர் சென்று விட்டார்.

“அத்தை நீ அழுகுற அளவுக்கு என்ன சொன்னாங்க குல்பி.” என்றதற்கு எதுவும் பேசாமல் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

இங்கு வந்ததிலிருந்து ஆத்ரிகாவின் செயல் புரியாத புதிராகவே இருக்கிறது நரேந்திரனுக்கு. பேசிக் கொண்டிருக்கும் பொழுதே திடீரென்று அமைதியாகி விடுவது, சுற்றி நடப்பதை உணராமல் இருப்பது, சோகமான முகத்தோடு எப்போதும் இருப்பது என சொல்லிக் கொண்டே போகலாம். இன்று கோபப்பட்டதையும் விட பெரிய அதிர்வு அவள் அழுகை தான். பழகிய நான்கு வருடத்தில் ஒரு முறை கூட அவள் அழுது பார்த்ததில்லை.

பலத்த யோசனைகளுக்கு நடுவில், “உனக்கு பிடிக்கலைன்னா நம்ம போக வேண்டாம். இந்த மாதிரி சின்ன காரணத்துக்காக எல்லாம் அழாத குல்பிமா. நீ அழுறதை பார்க்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.” தேற்ற,

“சாரி” என்றாள் அழுகைக்கு நடுவில்.

“நான் தான் சாரி சொல்லணும் உன்ன அழ வச்சதுக்கு.”

“நான்தான் உனக்கு நிறைய சாரி சொல்லணும்.”

அவள் முகம் தூக்கி, “ஆர் யூ ஓகே குல்பி.” கேட்டு முடிக்க, ‘இல்லை’ என தலையசைத்தாள்.

“ஓகேடா ஒன்னும் பிரச்சனை இல்ல எல்லாம் சரியாகிடும். உனக்கு பிடிக்காத எதையும் நான் பண்ண மாட்டேன். அம்மா திட்டுனதை மனசுல வச்சுக்காம ரிலாக்ஸா இரு.” தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

வாய்மொழிக்கு வேலை இன்றி அவன் தோள் மீது தலை சாய்த்து அமர்ந்திருந்தாள். தயாராகி வந்த அவனது பெற்றோர்கள் கோவிலுக்கு அழைக்க,

“நீங்க வேணா போயிட்டு வாங்க அம்மா நாங்க வரல.” என்று விட்டான்.

நடந்ததை அறியாமல் அவன் பதிலில் குழம்பியவர்கள் காரணம் கேட்க, மணக்க போகும் பெண்ணை காட்டிக் கொடுக்காமல் அவனாக ஒரு பதிலை கூறி சமாளித்தான். அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவள்,

“போகலாம் ஆன்ட்டி. ஒரு பைவ் மினிட்ஸ் இருங்க ரெடி ஆயிட்டு வந்துடுறேன்.” எந்திரிக்க,

“நான் பார்த்துக்கிறேன்.” தடுத்தான்.

“ஆன்ட்டிய டிசப்பாய்ண்ட்மெண்ட் பண்ண வேண்டாம். ரொம்ப ஆசையா கிளம்பி வந்தேன்னு சொல்றாங்க.”

“அத்த மாமா கூட போயிட்டு வரட்டும்.”

“நீயும் நானும் இல்லாம அவங்க கம்ஃபர்டபிளா இருக்க மாட்டாங்க. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல நல்லா இருக்கேன். கொஞ்சம் மைண்ட் அப்செட்டால அப்படி பேசிட்டேன்.” அவனை சமாளித்து கோவிலுக்கு புறப்பட்டாள்.

வெள்ளை நிறத்திற்கு குறைவில்லாமல் மின்னியது கோவில். நாற்பது வயதிற்கு மேல் இருக்கும் ஆண்கள் அனைவரும் வேட்டி சட்டையில் மிரட்டினார்கள். அதில் ஒரு சிலர் அதிகார தோரணையில் கோவிலை நிர்வாகிக்கும் உரிமத்தோடு பேசிக் கொண்டிருக்க, அதில் ஒருவராக கலந்து கொண்டார் வீரபாண்டி.

கண்ணகி தன் சொந்த பந்தங்களோடு உரையாட சென்று விட்டார். புதிய இடம் என்பதால் நரேந்திரன் தன் பெற்றோர்களோடு ஓரிடத்தில் அமர்ந்து கொண்டான். அவர்களுக்கு துணையாக ஆத்ரிகாவும் உடன் இருந்தாள்.

முதல் நாள் கொடியேற்றும் பொழுது ஊரில் இருக்கும் இரு பெரிய தலைக்கட்டு பொங்கல் வைக்க வேண்டும். அப்புவெட்டி கிராமத்திற்கு வீரபாண்டி, வெட்டப்பாளையம் கிராமத்திற்கு எத்திராஜுன் மனைவிமார்களும் தயாராக இருந்தார்கள்.

இரு ஊரின் பெரிய தலைக்கட்டுகளும் நேருக்கு நேராக பார்த்துக் கொள்வதை தவிர்த்தார்கள். அவர்களது துணைவியார்களும் அதையே செய்தார்கள். அங்கிருந்த மற்றவர்களும் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்து அவரவர் வழியில் அவரவரை விட்டு விட்டனர்.

வெளியில் சிரித்துக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் நடுக்கத்துடனே இருந்தாள் ஆத்ரிகா. அந்த நடுக்கத்திற்கு என்ன காரணமோ அவள் மனம் மட்டுமே அறியும்! பக்கத்தில் அமர்ந்திருந்த நரேனுக்கும் கொஞ்சம் உணர முடிந்தது. அவளை தொந்தரவு செய்ய விரும்பாமல் அவள் போக்கில் விட்டு விட்டான்.

“குல்பி”

“ம்ம்!”

“இவன் எங்க இங்க?”

“யாரு?”

“அந்த ஜீப்கார மென்டல்” என்றதும் பேச்சை நிறுத்தினாள்.

விடாமல் கேள்விகளை தொடுத்துக் கொண்டிருந்தான். அங்கு இவனை பற்றிய சம்பாஷனைகள் சென்று கொண்டிருக்க, அவர்களைப் பார்த்தபடி வெள்ளை வேட்டி சட்டையில் அம்சமாக வந்து கொண்டிருந்தான் இன்ப இளங்கீரன். ஊருக்கே உரித்தான அழகான முகம் அவனுக்கு.

கருப்பும் சிவப்பும் அன்றி நடுவில் அவன் முகம். பெரிய நெற்றியில் மூன்று திருநீற்று பட்டை. நல்ல உயரத்திற்கு ஏதுவான உடல் அமைப்பு. கேசமும் சற்று அடர்த்தி என்பதால் அழகாக சீவி படிய வைத்திருந்தான்.

கண்ணில் அணிந்திருந்த கருப்பு கண்ணாடியை கழட்டாமல் ஜீப்பில் இருந்து இறங்கியவன் வேட்டியை ஒரு கையால் மடித்து பிடித்து, “ஹாய் டாக்டரே!” என்றிட, அவன் சத்தத்தில் அங்கிருந்த மொத்த கூட்டமும் அவர்கள் பக்கம் திரும்பியது.

ஆத்ரிகா தலை குனிந்து கொள்ள, வழக்கம் போல் பல்லை கடித்தான் நரேந்திரன்.

“வேலையெல்லாம் முடிச்சுட்டு வரேன். பொறுமையா பேசலாம்.” என கை காட்டி விட்டு சென்றான்.

கை அசைத்ததோடு தன் வேலையை கவனிக்க சென்று விட்டான். தன்னிடம் வம்பு இழுப்பான் என்று எதிர்பார்த்த டாக்டருக்கு ஏமாற்றமே மிச்சம். அவன் செய்கைகளை கவனித்துக் கொண்டிருந்தவன்,

“ஆள் பெரிய தலையோ எல்லாரும் வணக்க வைக்கிறாங்க.” விசாரிக்க,

“வெட்டப்பாளையம் ஊர் தலைவரோட பையன்.”

“யார் அந்த ஊர் தலைவர்” என்றதற்கு தன் தந்தைக்கு எதிரில் நின்றிருக்கும் எத்திராஜை கை காட்டினாள்.

அதற்குள் இன்ப இளங்கீரன் தன் தந்தை அருகில் வந்து எதையோ பேசிக் கொண்டிருந்தான். மகன் வரவை அறிந்த திலகவதி கொடியேற்றம் பொழுது கொடுத்த திருநீற்றை வைத்து ஊதி விட, தலை குனிந்து நெஞ்சில் கை வைத்தான்.

“அம்மாவா”

“ம்ம்”

“அது”

“அவனோட பெரியப்பா பெரியம்மா.” என ராஜேந்திரன் அம்பிகா தம்பதிகளை அறிமுகப்படுத்தினாள்.

அவருக்கு பக்கத்தில் நின்றிருந்த, கிட்டத்தட்ட இன்பனை போல் இருந்தவனை யார் என்று கேட்க, “பெரியப்பா பையன் ஆதவன் அவரோட வைஃப் சரஸ்வதி.” என்று விட்டு,

“அது அவன் கூட பிறந்த தங்கச்சி யாமினி. அந்த வயசானவங்க ரெண்டு பேரும் தாத்தா பாட்டி. பேரு சண்முகவள்ளி சிவமுனி.” என்றாள்.

“ஃபேமிலி ரொம்ப பெருசோ…”

“ரொம்ப பெருசு. இவங்க கூடவே அத்தை மாமானு ரெண்டு பொண்ணுங்களோட ஒரு கேட்டகிரி இருக்கு. பெரிய பொண்ணு சரஸ்வதிய தான் அவனோட பெரியப்பா பையன் கட்டி இருக்கார்.” பேசிக் கொண்டிருக்கும் பொழுதே இவளை முறைத்தபடி அன்பு சித்ரா தம்பதிகள் வந்து கொண்டிருந்தார்கள்.

“இவ்ளோ பெரிய ஃபேமிலில இருந்துட்டு இப்படி அரக்கன் மாதிரி நடந்துக்கிறான்.”

“சத்தமா சொல்லாத தலையை வெட்டிடுவாங்க.”

“எது!” என அவன் அதிர,  “அவங்க சொன்னா செய்றதுக்கு இங்க நிறைய பேர் இருக்காங்க. அந்த தைரியத்துல தான் அவன் இப்படி ஆடிட்டு இருக்கான்.” என்றாள் அவனை பார்த்தபடி.

அவன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அறிமுகப்படுத்தியவள் ஒருத்தியை தேடிக் கொண்டிருந்தாள். அவளுக்கு விடை கொடுக்குமாறு கை குழந்தையுடன் வந்த பெண் ஒருத்தி அவனை நெருங்கி,

“மாமா, பாப்பாவ பிடிங்க. உங்கள கேட்டு தான் ரொம்ப நேரமா அழுதுட்டு இருக்கா.” எனக் கொடுத்து விட்டு செல்ல, யார் என்று விசாரித்தான்.

“அது அவனோட பொண்டாட்டி. பேரு சரண்யா இன்ப இளங்கீரன்.”

“ஓஹா… இவனோடவும் ஒரு பொண்ணு வாழுதா. அந்த பொண்ணு தைரியத்தை பாராட்டியே ஆகணும்.” என்றவன் பேச்சை காதில் வாங்காமல் சென்று கொண்டிருந்த சரண்யாவையே வெறித்துப் பார்த்தாள் ஆத்ரிகா.

வேதம் ஓதும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
13
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்