Loading

சீமை 7

அடித்து துவைத்தவன் மூச்சு வாங்க நேரம் கொடுத்து சென்று விட்டான். இருவரும் இரு வேறு திசையில் குப்புறப் படுத்து கிடந்தார்கள். அண்ணன் சென்று விட்டதை அறிந்து உள்ளுக்குள் கொண்டாடினாலும் எழ முடியாமல் செய்ததில் திட்டவும் செய்தார்கள். அதிலும் மொழியன் ஒரு படி மேலே சென்று,

“இந்த விருமாண்டி கைக்கு செய்வினை வெக்கணுடா அண்ணா. அவன் பாட்டுக்கு வரா, அவன் பாட்டுக்கு அடிக்குறா, அவன் பாட்டுக்கு போறா… வாருங்கள் அடி வாங்கப்படும்னு பலகயா வெச்சிருக்கோம்.” புலம்பினான் சத்தமாக.

பேச்சை முடிக்கும் நேரம் தலையில் யாரோ பலம் கொண்ட அடித்தார்கள். அண்ணன் தான் என அலறியவன், “யண்ணா… இதுக்கு மேல அடிச்சா உன் தம்பி உடம்பு தாங்காது வுட்டுடு ண்ணா…” என்றான் அழுகையோடு.

“அட நார பயலே! நா உன் மதினிடா. இந்த வாய் தா உங்கள இந்த நெலைமைல படுக்க வெச்சிருக்கு. உங்க அண்ண அடுத்த ரவுண்டு வரதுக்கு முன்னாடி  வந்து படுத்துடுங்க.”  என்றவள் அவர்களை எழ வைக்க முயற்சிக்க,

“மதினி உங்க புருச விரட்டி… விரட்டி வெளுத்தது அவனை இல்ல என்னை. முதல்ல வந்து என்னை தூக்குங்க மதினி.” தலையை உயர்த்திக் கூட பார்க்க முடியாமல் அந்தோ பரிதாபமாக மண்ணுக்குள் மண்ணாக புதைந்தவாறு பேசினான் சிலம்பன்.

“இவ்ளோ மிதிச்சும் உங்க கொழுப்பு அடங்க மாட்டுது பாரு.” என்றவள் ஒரு வழியாக இருவரையும் எழுந்து நிற்க வைத்தாள்.

உடலெல்லாம் வலி பின்னி எடுத்தது இருவருக்கும். கொழுந்தன்களின் முக பாவனையை பார்க்க வருத்தமாக இருந்தது சாமந்திக்கு. அவளுக்கு இவர்கள் செய்யும் சேட்டைகள் எல்லாம் பிடிக்காது என்றாலும் கணவன் இப்படி அடிப்பதும் பிடிக்காது. இடையில் தடுக்க வந்தால் இன்னும் அதிகமாக அடி விழும் என்பதால் அவள் ஒதுங்கே இருப்பாள்.

“யா… மதினி”

“என்னாடா”

“இவரயா கட்டிக்கணுனு ஒத்த கால்ல நின்னீங்க. இந்தப் படுபாவி கூட வாழ்ந்து எங்க குப்புற விழுந்து கெடக்க போறீகளோ… நெனச்சாலே இந்த பிஞ்சு மனசு பதறுது.” என்ற சிலம்பனை முறைத்தவள்,

“எம்புருசன என்கிட்டியே தப்பா பேசுற படுவா. வாயில சூடு வச்சுருவே, மூடிக்கிட்டு நடங்கடா ரெண்டு பேரும்.” அதட்டினாள்.

“மதினி நீங்களும் இந்த விருமாண்டிய வளைச்சி போட என்னா என்னாமோ திட்டம் போடுறிய்ங்க.  பலன்தா ஒன்னு கெடைக்க மாட்டிகுது. இப்ப கூட ஒன்னு கெட்டுப் போவல மதினி. உங்களுக்கு வயசு இருக்கு வேற ஒரு நல்ல பையனா பாத்து நல்லபடியா வாழுங்க.” வயதுக்கு ஏற்றதை விட அதிகமாக பேசும் மொழியன் முதுகில் அடை சுட்டவள்,

“இரு உங்க அண்ணன கூட்டிக்கிட்டு வர” என நகர்ந்தாள்.

“மதினி….ரெண்டு கொழுந்தய்ங்க உயிரோட விளையாடாதீய்ங்க.” ஒன்று போல் கதறினார்கள் அண்ணன் மனைவியிடம்.

வீட்டிற்குள் வந்தவள் நோட்டம் விட்டாள் கணவன் எங்கிருக்கிறான் என்று. அவனது வருகை இல்லாமல் போக, இருவரையும் அவர்கள் அறைக்கு அழைத்துச் சென்றாள். “ஐயோ….யம்மா” என்ற கதறலோடு இருவரும் மெத்தையில் அமர,

“செத்த நேரம் பல்ல கடிச்சுக்கிட்டு உக்காருக மருந்து போட்டு விடுற.” சொன்னது போல் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த மருந்தை காயம் பட்ட இடத்தில் தேய்த்தாள்.

சிலம்பனுக்கு அவள் தேய்த்துக் கொண்டிருக்க, மொழியன் சட்டையை கழட்டி கொண்டே, “ஆனாலும் மதினி மாதிரி ஒரு பதிவிரதைய பாத்ததே இல்லிடா.” என்றான் கேலியாக.

சாமந்தி எதுவோ இருக்கும் என்று புருவம் சுருக்க கேட்க, “புருச கடமை தவறாம அங்க அடிச்சிட்டு இருக்கும்போது அதுக்கான மருந்த இங்க தயாரா எடுத்து வெச்சிருக்காங்க பாத்தியா அங்க நிக்குறாய்ங்கடா நம்ம மதினி.” என்றதில் அடிப்பட்ட இடத்தில் ஓங்கி அடித்தாள் சின்னவனை.

இளையவன் வலி பொறுக்க முடியாமல் சத்தமிட, அவன் வாயை மூடிய சிலம்பன், “எடேய்! அலாரத்த ஆரம்பிச்சு விருமாண்டிய வர வெச்சுடாதடா.” என்றான் பயந்து.

“ரெண்டு பேரும் வாய அடக்குங்கடா. எத்தினி தடவ சொல்ற உங்க அண்ண ஊர்ல இல்லினா வால சுருட்டிக்கிட்டு சும்மா இருங்கனு. மாட்ட அடிக்குறத வுட மோசமா அடிக்குறாரு. அப்ப கூட சொரணை இல்லாம எப்டி தா திரும்பவும் வம்பு வளக்க தோணுதோ. நீங்க அடி வாங்குறத பாத்தா எனக்கு பயமா இருக்கு.”

இருவரும் மதினியின் பேச்சில் இருக்கும் வருத்தம் புரிந்து அமைதி காக்க, “இதைக் கேட்டா மட்டும் வாய மூடிக்கோங்க ரெண்டு பேரும். என்னிக்கு தா நீங்க திருந்த போறீங்களோ தெரியல.” என்றாள் கவலையாக.

“மதினி கவலப்பட்டா கூட அழகா இருக்காய்ங்களே எப்டிடா மொழியா?” என்ற கொழுந்தனின் பேச்சில் முறைத்தவள் தன் வேலையை கவனிக்க,

“கவலப்படுறத வுட முறைச்சா தா மதினி அழகோ அழகுடா.” மொத்தமாக கவிழ்த்தான் மொழியன்.

எப்படியும் வம்பு வளர்த்து தன்னை இவர்கள் கூட்டத்தில் சிக்க வைத்து விடுவார்கள் என்பதால் சாமந்தி சாதுர்யமாக வேலையை மட்டும் செய்ய, அடங்கும் ஆட்களா இவள் கொழுந்தர்கள்.

விடாமல் வம்பு இழுத்துக்கொண்டு இருந்தார்கள். முறைத்தவள் சிரிக்கவே ஆரம்பித்து விட்டாள். எங்கோ இருந்தவனின் செவியில் மனைவியின் சிரிப்பு சத்தம் கண்ணாடி வளையலாய் கலகலக்க, மனம் அவள் பின்னால் வந்தது.

தாய் இல்லாத மூவருக்கும் சண்முகம் மட்டுமே ஒரே ஆதரவு. அவரும் சென்ற பின் தனிமை மட்டுமே இம்மூவருக்கும். தம்பிகளை பெரியவன் ஆதரித்துக்கொள்ள, அவனது இரவு தனிமையில் கழிந்தது. இளவரசி தாலி வாங்கிய கையோடு வீட்டில் கால் வைக்க, அவனது தனிமை இனிமை காண ஆரம்பித்தது.

இருந்தும் கட்டியவள் மீது இருக்கும் கோபத்தால் அவன் வெளிக்காட்டி கொள்ளாமல் இருக்க, மொத்தமாக அவன் மனதை கொள்ளையடித்ததை காலம் தான் சாமந்திக்கு உணர்த்த முடியும்.

விடாமல் கேட்கும் சிரிப்பு சத்தத்தில் அவனது கால்கள் மனைவியை நோக்கி செல்ல, “ஏண்டா சின்ன கொரங்கு உன்கிட்ட தா உங்க அண்ண ஊருக்கு வந்துட்டு இருக்க விசயத்த சொன்னல. அமைதியா இருக்காம எதுக்குடா தோப்புல உருண்டிங்க.”

“அத ஏன் கேக்குறீங்க! இவன் ஒரு லூசுன்னு தெரியாம இவன் கிட்ட சொல்ல வந்து நானும் இந்த நெலைமைக்கு ஆளாகிட்ட.” மதினியின் கேள்விக்கு பதில் அளித்தான் சின்னவன்.

“மதினி அப்ப நீங்கதா அந்த உளவாளியா.” சிலப்பனின் கேள்விக்கு புன்னகைத்தவள், “நீங்க ரெண்டு பேரும் அடி வாங்க கூடாதுனு அமைதியா இருக்க சொன்னா இதியே பெருசாக்கி அடி வாங்கிட்டீங்க” பேச்சை முடித்தாள்.

“நா கூட ரொம்ப பயந்துட்ட மதினி… எங்கடா நாங்க மதியம் அவுனுங்களோட சண்ட போட்டதை தெரிஞ்சு அடிக்க வந்துட்டாரோனு.”

“ஆமாடா இதுக்கே இந்த அடி அடிக்குறாரு அந்த விசயம் தெரிஞ்சா நம்ம தோல இன்னியோட தனியா கழட்டி இருப்பாரு.”

“அப்டியே அண்ணனுக்கு பயப்படுற மாதிரியே ரெண்டு பேரும் பேசாதீய்ங்கடா. கேக்குற எனக்கே சிரிப்பு வருது.”

“உங்களுக்கு சிரிப்பு மட்டும் தா வருது. பேசுற எங்க ரெண்டு பேத்துக்கும் என்னென்னமோ வருது.”

கொழுந்தனின் பேச்சில், “எடேய்! எதாச்சு ஏடாகூடமா சொல்லுறியா.” சந்தேகமாக கேட்டிட,

“உங்க புருசன பத்தி உங்க கிட்டியே சொல்ல முடியுமா மதினி.” என்றவன் அலறி நின்றான் அறை வாசலில் இருக்கும் அண்ணனின் உருவத்தில்.

எப்போது வந்தான் என்ற யோசனையில் சாமந்தி பார்க்க, “நல்லா கெடுத்து வச்சிருக்க இவுனுங்களை.” என்றவன் தம்பிமார்களை பார்த்து,

“என்னென்னமோ வருதா… ஏற்கனவே பூச போட்டதால வுட்டுட்டு போற. இன்னொரு தடவ இந்த மாதிரி ஏதாச்சு நடந்துச்சு உங்க மதினி மட்டும் இல்ல எவ வந்தாலும் உங்க உசுர காப்பாத்த முடியாது.” முறைத்து விட்டு சென்றான்.

நின்றிருந்த மூவரும் எதையும் பேசிக்கொள்ளாமல் அப்படியே சில நொடி நிற்க, “என்னாத்துக்கு அவுனுங்களோட ஜோடி போட்டு நிக்குற? வந்து வேலய பாரு.” குரல் கொடுத்தான் அவர்களை திரும்பி பார்க்காது மச்சக்காளையன்.

கணவனின் வார்த்தையை கேட்டபின் அங்கு இல்லை சாமந்தி. எங்கு செய்த சம்பவத்தைக் கேட்டு மீண்டும் படையெடுப்பானோ என்று அஞ்சு நடுங்கிய இருவரும் நிம்மதி பெருமூச்சோடு மெத்தையில் சாய்ந்தார்கள்.

இரவு நேர சமையலை முடித்தவள் வெளியில் வந்து கணவனை தேட,  எங்கும் இல்லை. யோசனையோடு வீட்டின் பின்புறம் வந்தவள் அமைதியாக புன்னகைத்தாள் அவன் செயலில்.

தம்பிகளின் காரியத்தால் மண்ணில் சாய்ந்த வாழை மரத்தை புதுப்பித்துக் கொண்டிருந்தான் நிலத்தில் ஊன்றி. கூடவே இனி அந்த வாழை மரத்தை யாரும் நெருங்காதபடி வேலியும் சுற்றி அமைத்து இருந்தான். வாழை மரத்தின் மீது கொண்டுள்ள பாசமா அல்லது மனைவி மீது கொண்டுள்ள பாசமா என்று தான் விளங்கவில்லை அவனுக்கு.

உள்ளம் மகிழ்ந்தவள் காலில் அணிந்திருக்கும் கொலுசின் ஓசை கேட்காதவாறு மெதுவாக நடந்தாள். மனைவியின் வருகை அறியாதவன் நீர்ப்பாய்ச்சி கொண்டிருக்க, பின்புறம் நின்று கட்டி அணைத்தாள்.

யார் என தெரியும் என்பதால் அவன் பேச்சு கொடுக்காமல் உடலை கல்லாக்கி நிற்க, “ம்க்கும்…! எங்கடா நம்ம புருசனுக்கு நம்ம மேல பாசம் வந்துருச்சோனு தப்பா நெனைச்சுட்டே. கல்ல கட்டிப்புடிச்ச மாதிரி வேறப்பா நிக்காதய்யா. கட்டிக்கிட்டவ கைப்படலனா கட்டைல போனாலும் நிம்மதி இருக்காது.” என்றாள் விலகி நின்று.

“நீ என் பின்னாடி வராம இருந்தாலே நா நிம்மதியா இருப்ப.”

“அப்போ உங்களுக்கு என்னிக்கும் நிம்மதி கெடைக்காது மாமோய்…” என முன் உடலை சிறைப்பிடித்தாள்.

விலகுமாறு அவன் கண்ணால் சைகை செய்ய, விட முடியாது என்றாள் கன்னத்தில் இதழ் பதித்து. விருப்பம் இல்லாதது போல் அவன் முகபாவனையை காட்டினாலும் உள்ளம் இன்னொரு முத்தத்திற்கு ஏங்கியது.

உணர்ந்தாளோ கட்டியவள்… அந்த இடத்தில் எச்சில் பதித்து, “உன்ன இன்னு என்னா பண்ணி மடில விழ வெக்குறதுனு தெரியல மாமா. ஆனா ஒன்னு, அடுத்த வருசம் நா புள்ளத்தாச்சி ஆகணும். இல்லினா உனக்கு ஏதும் குறை இருக்குறதா ஊர் சொல்லிபுடும்.” என்ற கட்டியவளை தள்ளியவன்,

“தின்னுட்டு தூங்குற வேலய பாரு… உருப்படாத பேச்ச பேசிக்கிட்டு.” அங்கிருந்து நடையை கட்டினான்.

தன் ஆசை கொண்ட வாழைமரம் மீண்டும் உயிர் பெற்று நிற்கும் அழகை பொறுமையாக நின்று ரசித்தவள் கணவன் கால் தடத்தை பின் தொடர்ந்தாள்.

சட்டி நிறைய சோறை போட்டவள் நன்றாக பிசைந்து கணவன் முன்பு நீட்டினாள். வேலை முடித்து கொண்டு வந்த பம்பையை துணியில் கட்டிக் கொண்டிருந்த மச்சக்காளையன் கேள்வியோடு பார்க்க, “சோறு போட்டு அடி குடுக்குற வம்சம் இல்ல என் புருச, அடி குடுத்துட்டு சோறு போடுற வம்சம்.” என்றாள் கேலியாக.

அவளை முறைத்தவன் நீட்டிய சட்டியை வாங்கிக் கொண்டு தம்பிகளின் அறைக்குச் சென்றான். பின்னால் இவளும் செல்ல, காயங்களோடு படுத்திருக்கும் உடன்பிறப்புகளை எண்ணி உள்ளுக்குள் கலங்கினான்.

படுத்துக் கொண்டிருந்த இருவரும் எதுவும் நடக்காதது போல் எழுந்தமர்ந்து சிரிக்க, அடித்த கையால் சாதத்தை பிசைந்து இருவருக்கும் சரிசமமாக ஊட்ட ஆரம்பித்தான்.

அண்ணன் மனதில் இருக்கும் இந்த பாசத்தை அறிந்து தான் தம்பிமார்கள் சேட்டை செய்கிறார்கள் போல!

****

சீமை 8

“இங்க பாரு தம்பிங்களா… எப்டியா இருந்தாலும் இந்நேரம் அண்ண காதுக்கு சேதி போய் இருக்கும். கட்டபொம்மன் வந்து நம்மளை என்னான்னு கேக்குறதுக்குள்ள நம்ம ஒரு நாடகத்த ரெடி பண்ணி வெச்சிருக்கணும். நம்ம போடுற நாடகத்துல அண்ண அப்டியே கவுந்து போவணும் கவுந்து.” பலமான ஏற்பாட்டிற்கு முதல் அடி எடுத்து வைத்தான் இமையவன்.

“போன தடவ மாதிரி சொதப்பிடாம இந்த தடவ அண்ணன நம்ம நடிப்பால நம்ப வெக்கணுடா.” அண்ணனுக்கு தோதாக எழில்குமரனும் களத்தில் கைகோர்க்க,

“போன தடவ நீ தாண்டா ஒழுங்கா நடிக்காம காட்டி குடுத்த முட்டா பயலே.” மரியாதை இல்லாமல் அண்ணனை கேவலப்படுத்தினான் கவிநேயன்.

இளையவனின் வார்த்தையில் ஆழ்ந்த மூச்சை வெளியிட்டு முறைத்த எழில்குமரன், “எடேய்! இமையா இவன் கிட்ட சொல்லி வை. கூட பொறந்துட்டானு பொறுத்துப்போற. இப்டியே பேசிக்கிட்டு திரிஞ்சானா சங்க அறுத்துப்புடுவே.” என்றான்.

“இந்த மாதிரி உதாறு மிரட்டல் எல்லா அந்த ரெண்டு லூசு பசங்களோட வெச்சுக்கோடா. தம்மா தூண்டு பொடியனுங்க வந்து பிரச்சன பண்றாய்ங்க, என்னானு கேக்காம கமுக்காம இருந்துட்டு சின்ன பைய என்னை ஏமாத்த பாக்குறியா. உங்க வயச எட்டுனதுக்கு அப்புறம் இந்த ஊருக்குள்ள ஒருத்தனையும் நடமாட வுட மாட்ட எனக்கு சரிசமமா.”  இவ்வீட்டில் இருப்பதிலேயே கவிநேயன் மட்டும் தான் இந்த அளவிற்கு தில்லாக பேசுவான்.

இவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த ஒளிர்பிறை, “எப்டியா இருந்தாலும் என் புருச வந்ததுக்கு அப்புறம் கட்டி வெச்சி மிதிக்கதா போறாரு. ஐய்யோ…அம்மானு கத்திட்டு கெடக்க போற கிறுக்குங்களுக்கு பேச்சா பாரு.” என்றிட,

“என்னா மதினி பொசுக்குனு கிறுக்குனு சொல்லிட்டீங்க என் தம்பிமார.” கேட்டான் செந்தமிழன்.

“பின்ன என்னா தமிழு இவனுங்க பண்றத நீயும் பாக்குற தான. எம்புட்டு நாளுக்குதா இவனுங்களுக்கு ஆதரவா பேசி என் புருச கிட்ட சண்ட போட முடியும். வூட்டுக்கு வாழ வந்ததுல இருந்து கொழுந்தய்ங்க என் புள்ளைங்க மாதிரினு நெனைச்சு இவனுங்களுக்கு வக்காலத்து வாங்கிட்டு இருக்க. ஆனா, இவனுங்க கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம ஒரு நாளுக்கு ஒரு வம்ப வாங்கிட்டு வராய்ங்க.”

“அது என்னாமோ நெசம் தா மதினி. நானும் எம்புட்டு திட்டுறது. அப்டி என்னாதா இவுனுங்க மனசுக்குள்ள இருக்கோ தெரியல. பகையாளிங்க கிட்ட பாயுற மாதிரி அந்த ரெண்டு புள்ளைங்க கிட்ட பாய்ஞ்சுக்கிட்டு போறாய்ங்க.” என தம்பி செய்யும் தவறுகளை செந்தமிழன் சுட்டிக்காட்டி பேச,

“ம்க்கும்! அவுனுங்களும் லேசு பட்ட ஆளுங்க இல்ல தமிழு. இவுனுங்க மூணு பேத்த மட்டும் இல்ல ஊரே வந்தாலும் சமாளிக்குற தில்லு அதுங்க கிட்ட கெடக்கு. அதுவும் சிலம்ப இருக்கான் பாரு… அவன் பேசுறத கேட்டாலே எதுக்குடா வம்புனு ஓடிடுவாய்ங்க.” எங்கோ ஆரம்பித்து முடிக்கும் பொழுது சிரித்தாள் வானரப் படைகளை நினைத்து.

கேட்ட தமிழும் சிரிக்க, “இவுனுங்க மூணு பேத்தயும் நெனைச்சா எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு தமிழு. உங்க அம்மாவும் ஒரு வார்த்த கேக்காம அமைதியா இருக்காய்ங்க. நா திட்டவும் முடியாம புருசன எதிர்த்து ஆதரிக்கவும் முடியாம அல்லோலப்பட்டு போற. இந்த ஊருல இருக்க கண்ட சிறுக்கி எல்லா கொழுந்தமார அடக்கி வைனு என்கிட்ட வந்து சொல்லும்போது எரிச்சலா வருது.” என்றாள் கவலையாக.

மதினியின் வருத்தம் அவனுக்குள்ளும் இருப்பதால் அமைதி காக்க, “என்னாடி என் புள்ளை மூணு பேத்தியும் கொற சொல்லிட்டு திரியுற. கட்டிக்கிட்டு வந்தோமா சோத்த பொங்கி போட்டமானு இருக்கு பாரு. என் புள்ளைங்க அப்டித்தா சண்டித்தனம் பண்ணிட்டு வருவாய்ங்க.

அவங்க அண்ணகார அதுக்கு கண்டிக்குறான். உனக்கு என்னாடி பிரச்சனை. ஒருத்தன பத்தி இன்னொருத்த கிட்ட கொற சொல்லி குடும்பத்த பிரிக்கலானு பாக்குறியா.” தன் வீட்டின் நலன் மட்டும் இல்லாமல் மச்சக்காளையன் வீட்டின் நலனையும் அதிகம் நினைக்கும் ஒளிர்பிறையின் மனம் நோகும்படி பேசினார் மாமியார்.

எப்பொழுதும் கேட்கும் புராணம் என்பதால் அவள் அமைதியாக இருக்க, “என்னாத்துக்கு ம்மா மதினிய இந்த மாதிரி ஏசுற. அவங்க தப்பா எதுவும் சொல்லலியே. தம்பிங்க நல்லதுக்கு தான சொல்லுறாய்ங்க.” ஆதரவு கரம் நீட்டினான் செந்தமிழன்.

“எதுடா நல்லது? தம்பிகளை பத்தி அண்ண உன் கிட்ட கொற சொல்றதா.”

“என்னாத்துக்கு யா…வூட்டு புள்ளைங்களை பத்தி நா கொற சொல்லணும். அம்மா நீங்கதா கண்டிக்கல… மதினி நானும் கண்டிக்கலனா வூட்டு புள்ளைங்க நாலு பேரு பேசுற மாதிரி வாழ்க்கைய இழந்துட்டு வந்து நிப்பாய்ங்க. எனக்கு அவுனுங்களை கண்டிக்குற உரிமையும் கொற சொல்ற உரிமையும் இருக்கு. அத இல்லினு உங்களால சொல்ல முடியாது அய்த்த.”

“மாமியானு மரியாதை இல்லாம பேசுறா பாரு. எல்லாம் பெத்தவய்ங்க வளர்த்து வுட்ட லட்சணம்.”

அத்தையின் வார்த்தையில் ஒளிர்பிறையின் பொறுமை குறைந்துவிட, “இந்தா அய்த்த யா வூட்டு ஆளுங்களை பத்தி பேசாதீங்கன்னு உங்களுக்கு எத்தினி தடவ சொல்றது.” குரல் உயர்த்தினாள்.

மதினியின் கோப குரலில் திட்டம் தீட்டிக் கொண்டிருந்த மூவரும் நடுக்கூடத்திற்கு வந்துவிட, “ஏண்டி தாலி கட்டி வாழ வந்த வூட்ல இப்டி நின்னு கத்துனா குடும்பம் விளங்குமா? இதுக்குத்தா நா தலப்பாடா அடிச்சிக்கிட்ட.” என்றவர் தலையில் அடித்துக் கொண்டு,

“பொண்டாட்டிய அடக்கி வைடா பெரியவனேனு.” கிராமத்து மாமியாராக பக்காவாக பேசினார் மதுரவீரனின் தாய் ஆண்டாள்.

“யம்மா எதுக்கு மதினிய ஏசிக்கிட்டு கெடக்க?” என்ற இமையவனின் பக்கம் அவரின் கோபத்தை திருப்பியவர்,
“வாங்கடா! என்னாடா இவளை பேசிட்டோமே இன்னு யாரும் வரலயேனு பாத்த. நீங்கதா மதினி மதினினு உருகிட்டு கெடக்குறீங்க இவகிட்ட. ஆனா, இவ என்னா பண்றா தெரியுமா…” என இழுத்தார்.

“உங்களை பத்தி உங்க அண்ண கிட்ட கொற சொல்லி குடும்பத்த பிரிக்க பாக்குறா. அதான யம்மா சொல்ல வர.” அன்னையின் மூக்கை உடைத்தான் கவிநேயன்.

மகனின் பேச்சில் கடுப்பானவர், “பள்ளிக்கூடத்துக்கு போக சொன்னா போவாத. மதினிக்கு வக்காலத்து வாங்க மட்டும் சரியா வந்துடு. உங்கள இந்த அளவுக்கு கெடுத்து வெச்சிருக்குறதே இவதான்.” என்று கொதித்தார்.

“யம்மா மதினி எங்களை ஒரு நாளும் கெட்டுப் போற எண்ணத்துல பாத்தது கெடையாது. அவங்க வீட்ல எப்டி வாழ்ந்தாங்கன்னு தெரியும் தான. ஒரு வூட்டு வேல கூட செய்யாம பதமா வளர்த்து விட்டாக அய்த்தயும் மாமாவும். இந்த வூட்டுக்கு வந்ததுல இருந்து எங்களுக்கு பொங்கி போட்டே அவங்க வாழ்க்க முடிஞ்சு போச்சு.” என்ற எழில்குமரனின் பேச்சில் வந்த கோபம் அடங்கியது ஒளிர்பிறைக்கு.

ஆண்டாளின் அண்ணன் மகனை தான் மதுரவீரன் மணம் முடித்தான். உறவுமுறை என்பதால் இருவருக்குள்ளும் சிறு நேசம் துளிர்விட, தன்னை மீறி மகன் சென்று விடுவானோ என்ற பயத்தில் தானே திருமணத்தை நடத்தி வைத்தார். கணவன் அருகில் இல்லாத நேரத்தில் திருமணம் செய்து ஊர் பேச்சுக்கும் ஆளானார்.

அவர்களுக்கு பதில் சொல்ல முடியாதவர் வன்மத்தை வளர்த்தார் மருமகள் மீது. அண்ணன் மகளாக இருக்கும்பொழுது பாசத்தை கொட்டியவர் தன் வீட்டில் ராஜ்ஜியம் நடத்தும் பொழுது வெறுப்பை கொட்டினார். அதுவும் பெற்ற பிள்ளைகள் அனைவரும் அவள் ஒரு மணி நேரம் வீட்டில் இல்லை என்றால் கூட ஆர்ப்பாட்டம் செய்து விடுவதை பார்த்து இன்னும் வன்மத்தை வளர்த்துக் கொண்டார்.

“அத தாண்டா நா நடிப்புன்னு சொல்லுற. பொறந்த வூட்டுல தின்ன தட்ட கூட எடுத்து வெக்காதவ உங்க எச்சி தட்ட எல்லாம் எதுக்காக கழுவனும். உங்க எல்லாரயும் முந்தானைல முடிஞ்சு வெச்சுக்கிட்டு இந்த சொத்து மொத்தத்தியும் ஆளனுனு கணக்கு போட்டு இருக்கா. அதுக்கேத்த மாதிரி இவ புருசனும் பொண்டாட்டி கண்ணுல ஒரு சின்ன தண்ணி வந்தா கூட பதறிப் போறா. கட்டி கிட்டவன்தா அப்டி இருக்கானு பாத்தா நீங்க அவனுக்கும் மேல இருக்கீங்க.”

“அவங்க ஆருமா? எங்க மதினி. அவங்க கண்ணுல தூசி விழுறதுக்கு முன்னுக்கூட்டியே காத்த நிறுத்தி வெக்குறது தான எங்க வேல.” என்ற இமையவன் பேச்சில் சிரித்துவிட்டாள் ஒளிர்பிறை.

அத்தை மகன் மீது கொள்ளை பிரியம் கொண்டவள் பட்டதாரி படிப்பை முடித்தாள். கூடவே வருங்கால கணவன் வீட்டையும் கவனித்துக் கொண்டே இருந்தாள். அவளது ஆசை அரசு துறையில் பணிபுரிவது. ஆசையா காதலா என்று வரும் பொழுது அவள் காதலை தேர்வு செய்ய, இதோ ஆகிவிட்டது அவள் இந்த வீட்டில் காலடி எடுத்து வைத்து மூன்று வருடங்கள்.

உள்ளம் கவர்ந்தவனின் நேசத்தை முழுவதுமாக கொள்ளையடிக்க நினைத்தவள் வீட்டை முழுவதுமாக கவனிக்க ஆரம்பித்தாள். கொழுந்தன்கள் செய்யும் சேட்டையை கண்டு கடுகடுத்தாலும் அவர்களை குழந்தையாகவே இன்று வரை எண்ணிக் கொண்டிருக்கிறாள். கணவனுக்கு பிடித்த உணவு இருக்கிறதோ இல்லையோ கொழுந்தன்களுக்கு பிடித்த உணவு தான் தினமும் அவளது முன்னுரிமை.

என்ன கலவரம் நடந்தாலும் உணவு நேரத்திற்கு சரியாக சட்டியை எடுத்து வந்து விடுவாள். அங்கு மச்சக்காளையன் ஊட்டி விடுவான் என்றால் இங்கு பெரும்பாலும் இவள் கையில் தான் உணவு. இந்த விஷயத்தில் சாமந்திக்கு கூட சிறு பொறாமை இருக்கும்.

மருமகள் சிரிப்பில் கடுப்பானவர், “ஏத்தம் கூடிப்போச்சுடி உனக்கு. பெரியவன் வரட்டும் நடந்த எல்லாத்தியும் சொல்லி உன் தம்பிங்க கெட்டு போறதுக்கு இவ தா காரணம்னு போட்டு ஒடைக்கிற.” என்றதும்,

“யம்மா மதினிய போட்டுக் குடுக்குறாய்ங்கனு சொல்லிட்டு இப்ப நீ தா அந்த வேலய பாக்குற.” என்றான் செந்தமிழன்.

இரண்டாவது மகன் மீது அவருக்கு கொஞ்சம் பயம் இருப்பதால் பேசாமல் முறைக்க மட்டுமே செய்ய, “என் மேல உங்களுக்கு கோபம் இருந்தா அத என்கிட்ட காட்டுங்க அய்த்த. ஏற்கனவே அவரு எதியும் யோசிக்காம கைல கெடைக்குறதை தூக்கி அடிக்குறாரு. வயசு பசங்க  மூணு பேரும். எப்ப என்னா நடக்குனு சொல்ல முடியாது.” மாமியார் இவ்வளவு பேசிய பின்பும் கொழுந்தன்கள் பக்கம் வாதாடினாள் அன்பு மருமகள்.

“யம்மோய்… எங்க மதினி மனச பாருமோய். எல்லாரும் மகாலட்சுமி மாதிரி தா பொண்ணு வேணுனு நெனைப்பாய்ங்க. ஆனா, நீ மகாலட்சுமிய வூட்டுக்குள்ள வெச்சிக்கிட்டு காட்டேரி கணக்கா கத்திக்கிட்டு கெடக்க.”

“இமையா பெரியவங்களை இப்டித்தா பேசுவியா?” கொழுந்தனின் வார்த்தையை திருத்தினாள்.

“அம்மா பெரியவங்க மாதிரி உங்க கிட்ட நடந்துக்கலயே. நாங்க பண்ற எல்லா சேட்டைக்கும் உங்க கிட்டதா வராய்ங்க.” கவிநேயன்.

“உங்களால தா பிரச்சனை வருதுனு தெரியுது இல்லிடா வால சுருட்டிக்கிட்டு இருந்தா என்னா? நீங்க பண்ற தப்பு எல்லாத்திக்கும் மதினி பேச்சு வாங்கிட்டு இருக்காய்ங்க இந்த வூட்ல.” கண்டிக்கும் அண்ணனின் பேச்சுக்கு மூவரும் பதில் கொடுக்காமல் தலையை மட்டும் கவிழ்த்துக் கொண்டார்கள்.

****

சீமை 9

“பெத்தவ புகார் சொல்லும் போது ஒரு வார்த்தை என் பக்கம் பேசல. இப்போ உன் மதினிக்காக கூட பொறந்தவய்ங்களை ஏசுறியே நியாயமா சின்னவனே.”

“ஆரு தப்பு செஞ்சாங்களோ அவங்களை தான ஏச முடியும்.”

“ஆமாண்டா சின்னவனே, உங்க எல்லார் கண்ணுக்கு மதினி ஒரு தப்பும் செய்யாத நல்லவ. எனக்கு மட்டும் விசப் பூச்சியா தெரியுது எப்டினுதா புரியல.  இவுனுங்க பண்ற சேட்ட அத்தினியையும் புருச கிட்ட மாட்டி குடுக்குறது இவ தான். ஆனா, குட்டு உடையாத மாதிரி உங்க கூடவே ஜோடி போட்டு சுத்துறா.” என்றதும் கொழுந்தன்கள் நால்வரும் பெற்ற தாயிடம் சண்டை பிடித்தார்கள்.

வலி தாங்கி பெற்ற பிள்ளைகள் வாழ வந்தவளுக்காக தன்னையே எதிர்த்து பேசுவதை தாங்கிக்கொள்ள முடியாதவர், “அண்ண பொண்ண கட்டுனா குடும்பம் நல்லா இருக்குனு தப்பு கணக்கு போட்டுட்ட. புருச இல்லாம கூட இவ கழுத்துல தாலி ஏறனுனு நெனைச்ச பாவத்துக்கு என் புள்ளைங்களை எங்கிட்ட இருந்து பிரிக்கிறாளே நல்லா இருப்பாளா.

எல்லாரும் புருசன தான் மயக்கி முந்தானைல முடிஞ்சிப்பாய்ங்க. இவ அவன் கூட பொறந்த அத்தினி பேரயும் முடிஞ்சு வெச்சிருக்காளே…. இவ வாழுவாளோ இல்லினா என் புள்ளைங்களை வாழ வுடாம பண்ணுவாளோ என் குல சாமிக்கு மட்டும் தா வெளிச்சம்.” இடுப்பில் சொருகி இருக்கும் முந்தானையை அவிழ்த்து நீர் கொட்டிக் கொண்டிருக்கும் மூக்கை துடைத்துக் கொண்டு மூலையில் அமர்ந்தார்.

மாமியாரின் பேச்சு உள்ளத்தை வதைத்தது மருமகளுக்கு. அடிக்கடி கேட்கும் வார்த்தை என்றாலும் ஒவ்வொரு முறையும் வலிப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை அவளால். தன் குடும்பம் என்று எண்ணித்தான் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஏற்கனவே பல பிரச்சனைகளை சுமந்து கொண்டிருக்கும் கணவனை குடும்ப விஷயத்திலும் வருத்தப்பட வைக்கக் கூடாது என்பதற்காகவே கொழுந்தன்களின் விஷயத்தை முடிந்தவரை மறைப்பாள்.

அதனை மதுரவீரன் கண்டுபிடித்து தம்பிகளை திட்டுவதற்கு முன் ஆதரவு தெரிவிக்கும் மனைவியை திட்டுவான். அதைக் கூட பெரிது படுத்தாமல் மீண்டும் அதே விஷயத்தை இன்று வரை செய்து கொண்டிருக்கிறாள். அப்படிப்பட்டவள் மீது சுமத்தும் பழியை தாங்கிக் கொள்ள முடியாமல் கண் கலங்கி சமையலறை புகுந்தாள்.

மதினியின் முக வாட்டத்தை கண்ட செந்தமிழன் அன்னையை திட்டிக் கொண்டிருந்தான். மீதம் இருந்த மூவரும் குரங்கு வாலை பிடிப்பது போல் அவளின் பின்னே சென்றார்கள். சமையலறை திண்டில் அமர்ந்தவள் தலை குனிந்து அழுக, கொழுந்தன்கள் மூவரும் வருந்தினார்கள்.

“மதினி அதுதா வயசான காலத்துல என்னா பேசுறதுனு தெரியாம பேசிக்கிட்டு கெடக்கு. நீங்க எதுக்காக காதுல போட்டு அழுவாதீங்க.” இமையவன்.

“ஆமா மதினி, வயசானாலே இந்த மாமியா எல்லாத்துக்கு புத்தி மங்கி போயிடும் போல. கிறுக்குத்தனமா பேசுற பேச்ச எல்லாம் காதுல போட்டு அழுவாதீங்க.” எழில்குமரன்.

“மதினி நீங்க அழுதா என் மனசு தாங்காது அழுவாதீங்க.” கவிநேயன்.

மூவரும் ஏதேதோ சமாதானங்கள் செய்து கொண்டிருந்தார்கள். அழுகையை நிறுத்தினாளே தவிர சோர்ந்த முகத்தை உயிர்ப்பிக்கவில்லை. அன்பு மதினியின் முக வாட்டத்தை‌ சரி செய்ய எண்ணிய மூவரும் அவளை உரசிக்கொண்டு அமர்ந்தார்கள்.

இடித்துக்கொண்டு அமர்ந்ததில் மூவரையும் அவள் முறைக்க, “ஏ… மதினி முறைக்கும் போது கூட இப்டி கோவில்ல இருக்க சிலை மாதிரி மின்னுறீங்களே  எப்டி?” சிரிக்காமல் அவளை சிரிக்க வைக்க பேசினான் இமையவன்.

“எடேய், உனக்கு சொல்ல வேற எதுவுமே கெடைக்கலயாடா. கோவில் சிலை சிரிக்காம கெடக்கும். நம்ம மதினி அப்டி இல்லிடா. சிரிப்பு மட்டும்தா அவங்க முகத்துல வரும். அவங்க சிரிப்புக்கு இணையா இந்த சிறுமயிலூர்  கிராமத்தையே எழுதி வெக்கலாம்.”

“நீ என்னாடா எழிலா அம்புட்டு கொறைவா சொல்லுற.
மதினி சிரிப்புக்கு பக்கத்து ஊரையும் சேர்த்து எழுதி வெச்சாலும் தகும். அதுவும் அண்ண நம்மளை அடிக்கும் போது நம்ம கதறுறத பாத்து கமுக்கமா சிரிப்பாய்ங்க பாரு அதுக்கு இன்னு பத்து ஊர கூட சேர்த்து எழுதி வெக்கலாம்டா.”

கவிநேயனின் வார்த்தையில் அவனை தள்ளி விட்டவள், “என்னாய்ங்கடா மூணு பேரும் அம்மாக்கு அடுத்து வம்பு இழுக்க வந்து இருக்கீங்களா. என் புருச வரட்டும் நீங்க மூணு பேரும் அடிச்ச கூத்த சொல்லி தலைகீழ தொங்க வுட வெக்குற.” என்றாள்.

“எடேய்! மதினி சிரிப்பையும் முறைப்பையும் புகழ்ந்தமே இந்த வீரத்தை புகழ்ந்தோமா. இந்த ஊருல கட்டுக்கடங்காம திரிஞ்ச கட்டபொம்மனையே கைக்குள்ள போட்ட ஆளுடா நம்ம மதினி .” எழில்.

“அதுமட்டுமாடா… நம்ம அண்ண மதினி பின்னாடி சுத்துவாரு பாரு அய்யய்யயோ… இப்டி ஒரு கணவன் மனைவி ஒத்துமைய நா பாத்ததே இல்லினா பாத்துக்கோடா.” இமையவன்.

“நீ மட்டுமாடா நானும் பாத்தது கெடையாது. நம்ம எல்லாரும் தூங்குறோம்னு நெனைச்சு ரெண்டு பேரும் ஓடிப் புடிச்சு விளையாடுறது என்னா… புருசன குழந்தை மாதிரி தெனமும் குளிக்க வெச்சு சட்டை போட்டு வுடுறது என்னா…

ஆருக்கும் தெரியாம கறிய அதிகமா அள்ளி வெக்குறது என்னா… மதினி மாதிரி ஒரு பொண்டாட்டி கெடைக்கணுனு சாமி கிட்ட வேண்டுற அளவுக்கு கலக்குறாய்ங்கடா.” கவிநேயன்.

“பாருங்க மதினி இவனுக்கு இப்பதா பல்லே முளைச்சிருக்கு அதுக்குள்ள பொண்டாட்டி கேக்குது.” என்ற இமையவன் பேச்சில் கவிநேயன் அவனிடம் சண்டைக்கு பாய,

“எடேய், என்னை சிரிக்க வெக்குறதா நெனைச்சு கேவலமா நாடகம் பண்ணிக்கிட்டு இருக்காதீய்ங்கடா.” என்ற ஒரே வாசகத்தில் அவர்கள் மூவரையும் அவமானப்படுத்தினாள்.

மாட்டிக்கொண்டதை ஒப்புக் கொள்ளாமல் அவர்கள் சமாளிக்க, “த்தூ! உங்க மூணு பேத்த பத்தி எனக்கு தெரியாதா. நா இந்த மாதிரி மூக்க உறிஞ்சிக்கிட்டு உக்காந்து இருக்க காரணமே நீங்க மூணு பேரு தான். படிக்கப் போனோமா, வந்தோமா, தின்னோமானு இருக்காம எதுக்குடா சண்டைக்கு போறீங்க.” என்றவள் தன்னை உரசிக் கொண்டு அமர்ந்திருக்கும் மூவரையும் பாரபட்சம் பார்க்காமல் அடிக்க ஆரம்பித்தாள்.

கவிநேயனின் தலை முடியை பிடித்து, “என்னாடா சொன்ன அப்போ… அது கலவரம் நடக்குற பூமி அங்க நா வரக்கூடாதா. இடுப்புல இன்னு குழா கூட சரியா நிக்கல நீ எல்லாம் கலவரத்த பத்தி பேசுற.” என அந்த முடியை ஒரு சுழற்று சுழற்றினாள்.

“யம்மா ஐய்யோ… மதினி வலிக்குது வுட்டுடுங்க…” என்ற கதறலைக் கேட்டு எழில்குமரன் சிரிக்க, மற்றொரு கை அவன் தலை முடியை பிடித்தது.

“ஏண்டா உன்ன விட சின்ன பைய மொழியன். அவனை அடிச்சதை பெருமையா பேசுறியே வெட்கமா இல்ல உனக்கு. மூணு பேருலயே நீ தான் ஓவரா ஆடிக்கிட்டு இருக்க. உன் கால ஒடச்சு கஞ்சி வெச்சு உன்னயே குடிக்க வெச்சாத்தா நீ திருந்துவ.” என்றவள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே பூனை போல் நான்கு காலில் நகர ஆரம்பித்தான்  இமையவன்.

அதை கவனித்த எழிலன், “மதினி அந்த திருட்டு பைய போறா பாருங்க புடிங்க.” என சிக்க வைத்தான்.

அகப்படக் கூடாது என்பதற்காக அவன் வேகமாக நகர, இடது காலை பிடித்து இழுத்தாள். பூனை போல் குனிந்திருந்தவன் தரையில் விழுந்து முகத்தை சேதப்படுத்திக் கொள்ள,

“எங்கயாது பெரியவன் மாதிரி நடந்துக்குறியாடா. உனக்கு கைப்புள்ள மாதிரி இதுங்க ரெண்டுத்தியும் வெச்சுக்கிட்டு ஊருக்குள்ள மைனர் கணக்கா சுத்திக்கிட்டு கெடக்க. இந்த திறமைய படிப்புல காட்டி இருந்தா எட்டு அரியர் வந்திருக்காது.” கணுக்காலை கிள்ளி வைத்தாள் வலிக்குமாறு.

வலியை தாங்கிக் கொள்ளும் திராணி இல்லாததால் இமையவன் அலறி துடிக்க, மீதமிருந்த இருவருக்கும் அதே அலறலை கொடுத்தாள். உள்ளே நடக்கும் கலவர சத்தத்தை கேட்ட செந்தமிழன் திட்டுவதை நிறுத்தி விட, சமையல் கட்டை எட்டிப் பார்த்த ஆண்டாள் புகைந்தார்.

அதையெல்லாம் கண்டு கொள்ளாத ஒளிர்பிறை மூவரையும் கோபம் தீரும் வரை அடித்து துவைத்தாள். அழுகும் மதினியை சிரிக்க வைக்க முயற்சி எடுத்த மூவர் படை அழுகும் நிலைக்கே வந்துவிட்டது. அதிலும் கோபம் குறையாது அங்கிருந்த கரண்டியை எடுத்து பதம் பார்த்தாள் மூவரையும்.

உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மூவரும் மூன்று திசைக்கு ஓட, முடிந்தவரை விரட்டிப் பிடித்து தோசை சுட்டாள் முதுகில். மூவரில் அதிகமாக இமையவனுக்கு அடி விழுந்தது. பெரியவனின் பின்னால் தான் மற்ற இருவரும் சுற்றுவதால் கொஞ்சம் அதிகம்.

தன் கை ஓயும் அளவிற்கு அடித்தவள் சோர்ந்து மீண்டும் சமையல் கட்டுக்கு சென்று விட்டாள். அடி வாங்கிய மூவர் அணி ஓரிடத்தில் மையம் கொள்ள,

“எடேய்! மூலையில மூக்க உறிஞ்சுகிட்டு முட்ட வுடுற அம்மாவ கூப்பிடுங்கடா.” என்றான் எழில்குமரன்.

அடி வாங்கிய சோர்வில் அவர்கள் ஏன் என்று கேட்க, “அந்த அருணாச்சல பட குன்கிழவி கிட்ட இந்த மண்டகோளாறு மதினிய கோர்த்து விட்டாதான் நம்ம அடி வாங்குனதுக்கு அர்த்தமா இருக்கும்.” என்றான் வலியை பொறுத்துக் கொண்டு.

“ஆமாண்டா, அடுத்த தடவ அம்மா ஏசும்‌ போது நம்ம கண்டுக்காத மாதிரி இருந்துடுவோம்.” கவிநேயன்.

“நீ சொல்ற மாதிரி செஞ்சா அதுக்கும் மதினி நம்மளைதா வந்து அடிப்பாய்ங்க. பேசாம அடுத்த தடவ அம்மா பக்கம் நின்னு மதினிய இன்னும் நல்லா அழுக விடுவோம்.” என பேசிக் கொண்டிருந்த மூவரும் முதுகு காட்டி அமர்ந்திருக்க, பின்னால் நின்று கேட்ட ஒளிர்பிறை மூவருக்கும் சேர்த்து கரண்டியை வீசினாள்.

எப்படி ஓட்டம் பிடித்தார்களோ அந்த இடத்தில் இல்லை மூவரும். இவர்களின் வேடிக்கையை கண்டு சிரித்த செந்தமிழன் கைபேசிக்கு அழைப்பு வந்தது. யார் என்று பார்த்தவன் காதலி பெயரால் புன்னகைத்தான். யாரும் அறியாது வெளி பக்கம் சென்றவன் இனிமையான காதலை வளர்த்தான்.

சமையலை முடித்தவள் எதுவும் நடக்காது போல், “அய்த்த சாப்ட வாங்க.” என்று அழைத்தாள்.

மருமகள் மீது இருக்கும் கோபத்தில் அவர் இரவு உணவை வேண்டாம் என்று மறுக்க, தட்டில் உணவை எடுத்து வந்து அவர் பக்கம் வைத்தாள். அன்பு மருமகளின் உள்ளம் அறியாதவர் அதையும் மறுத்து படுத்துக்கொண்டார்.

அடி வாங்கி ஓடிய கொழுந்தன்கள் மூவரையும் தேடி வெளியில் வர, செந்தமிழன் விழுந்தான். ஒளிர்பிறையை பார்த்ததும் கைபேசி அழைப்பை துண்டிக்க,

“தமிழு பனில ரொம்ப நேரம் பேசிக்கிட்டு கெடக்காத. உள்ள போய் பேசி முடிச்சுட்டு சாப்ட உக்காரு. ஓடுன மூணு பேத்தயும் இழுத்துக்கிட்டு வர.” வெள்ளந்தி மதினியின் பேச்சில் குற்ற உணர்வு அவனுக்கு.

சீக்கிரமாக காதல் விவகாரத்தை மதினியின் காதில் போட வேண்டும் என்று எண்ணியவன் அறியவில்லை வருங்காலத்தில் தங்கையை கொடுக்க மனமின்றி  மதினியே தனக்கு வேறு ஒரு பெண் பார்ப்பார் என்று.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்