2,991 views

ஜிஷ்ணு தன்னைத் தூக்கி அறைக்குள் இழுத்ததில், முதலில் அதிர்ந்த பெண்ணவள், மறு கணமே, “விடுடா பொறுக்கி நாயே. உன் வீரத்தை எல்லாம் என்கிட்ட காட்டாத” என்று அவன் பற்றி இருந்த கரங்களை உதற முயன்று, அறை அதிர கத்தினாள்.

“ஷு… வாய மூடுடி!” ஜிஷ்ணு அடிக்குரலில் கர்ஜனை புரிய,

அதனைக் கண்டுகொள்ளாதவள், “முடியாதுடா. அப்படி தான் கத்துவேன். கொலைகாரா…” என்று அவளும் உறும, ஜன்னலில் நங்கென அவளை முட்ட வைத்து, ஒற்றை கையால் அவளின் இரு கன்னத்தையும் அழுத்திப் பிடித்திருந்தான் கண்ணில் தெறித்த சினத்துடன்.

“வாயை மூடுன்னு சொன்னது உன் காதுல விழுகலையா? பல்லை சுக்கு நூறா உடைச்சுடுவேன். அர்த்த ராத்திரியில திருடி மாதிரி வீட்டுக்குள்ள வந்து எதை திருட பாக்குற வக்கீலே. ஹ்ம்ம்?” என அடக்கப்பட்ட சீறலுடன் ஜிஷ்ணு வினவ,

ஜன்னலில் முட்டியதாலும், அவனின் அழுத்தப் பிடியினாலும் அவளுக்கு தலையும் கன்னமும் விண்ணென வலி எடுத்து கண்ணை சொருக வைத்தது.

முயன்று விழித்தவள், அவனை முடிந்த அளவு தடுத்தபடியே, “நான் எதுக்குடா திருடனும். நீ தான் ஊர அடிச்சு திருடி வச்சு இருக்கியே.” என பேச முடியாமல் பேசியவள், “பொறுக்கி… என் மேல கை வைச்சதுக்கு உன்னை சும்மா விட மாட்டேன்.” என வலியில் முகத்தை சுருக்கினாள்.

அவள் கூற்றில் இன்னும் சினம் பீறிட, “நான் திருடி வச்சுருக்குறதை நீ திருட வந்து இருக்கியாடி. அதுக்கு ஏன் ஜன்னல் வழியா வரணும். நேரா என் பெட் ரூம்க்கு வந்துருந்தா, நானே ‘எல்லாம்’ குடுத்து இருப்பேனே…” என்றவன், எல்லாம் என்ற வார்த்தையை அழுத்தி, கோபமும், தாபமும் போட்டி போட, அவள் கூந்தலை ஆழ்ந்து முகர்ந்தான்.

அதன் மணத்தில் மூச்சை இழுத்து விட்டவன், “இந்த ராத்திரியிலயும், கமகமன்னு வந்து இருக்கியே, மாமா மேல அவ்ளோ ஆசையாடி வக்கீலு.” என கரகரப்புடன் கேட்டு, அவள் மீதே சாய, மொத்த பலத்தையும் கொண்டு அவனை வெடுக்கென தள்ளி விட்டவள்,

“உன் மேல ஆசை வர எனக்கு என்ன பைத்தியமாடா பிடிச்சு இருக்கு. அதுவும் அரசியல் அடியாளு நீ எல்லாம் எனக்கு மாமாவா? இன்னும் கொஞ்ச நாள்ல தூக்கு ரெடியா இருக்கும். போய் தொங்கு.” என்றாள் பற்களை நறநறவென கடித்து.

ஜிஷ்ணுவின் கண்களோ ஏளனமாக அவளை ஏறிட, “தொங்க தான போறேன். ஆனா, அதுக்கு முன்னாடி உன்ன தொங்க விட்டுட்டு தான் நான் போவேன்.” என கடுமையுடன் கூறியவன், அவளை அப்படியே கரங்களில் அள்ளியபடி வெளியில் சென்றான்.

மொத்த வீடும், இரவு விளக்கின் வெளிச்சத்தில் மின்ன, அவளோ கீழே இறங்கத் திமிறினாள்.

“என்னடி… திரும்ப ரூமுக்கே போய் ஜல்சா பண்ணனுமா? நாளைக்கே நான் ஊருக்கு வந்துடுவேன். நீ சமத்தா ஊருக்கு போய் ரெடியா இரு. நம்ம ஜல்சாவை கன்னிமனூர்லேயே வச்சுக்கலாம்.” என வெகுவாய் தெளித்த நக்கலுடன் அவன் கூற,

“ச்சை… ஊர்ல எவ்ளவோ நல்லவன்லாம் இருக்கான். அவனை விட்டுட்டு உன்கூட… நான்… இந்த நினைப்பை எல்லாம் இதோட அழிச்சுடுடா. கன்னிமனூர் கன்னிமனூர்ன்னு வாய் நிறைய சொல்லிட்டு, அந்த ஊரை சுடுகாடா மாத்த நீ போடுற திட்டம் எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறியா. அதுக்கு முன்னாடி உன்னை சுடுகாட்டுல எரிக்கிறேன்.” என வசுந்தரா சபதத்துடன் சீறும் போதே அவள் எகிறி குதித்து வந்த அதே காம்பவுண்ட் சுவற்றின் மறுபுறம் அவளை தொப்பென கீழே போட்டிருந்தான்.

நல்லவேளையாக, அங்கு மணல் குவித்து வைக்கப்பட்டிருந்ததால், அதில் விழுந்தாள். இல்லையென்றால், இந்நேரம் கை கால் உடைந்திருக்கும். அப்படியும், அங்கிருந்த போஸ்ட் முனையில் முட்டி, அவள் நெற்றியில் இருந்து இரத்தம் பீறிட்டது.

ஜிஷ்ணு அதனை கண்டுகொள்ளாமல், இரு கையையும் தட்டி விட்டு, “கன்னிமனூர மட்டும் இல்ல, உன் ஊரு வெள்ளப்பாளையத்தையும் சுடுகாடா மாத்துவேன். ஏன், உன் அப்பனையும் சுடுகாட்டுக்கு அனுப்புவேன். அது என் இஷ்டம். என் விஷயத்துல மூக்க நுழைச்சு, என் கோபத்தை அதிகப்படுத்த அதிகப்படுத்த, சேதாரம் உனக்கு தான் அதிகமாகும் வக்கீலே.” என அழுத்தத்துடன் மிரட்டியவனைக் கண்டு, எழ முடியாமல் முறைத்தாள் வசுந்தரா.

“நீயும் என்னை சீண்ட சீண்ட, உனக்கு சேதாரம் அதிகமாகும் அடியாளே. என் அப்பா மேல கை வைச்ச, அதான் உனக்கு கடைசி நாள்.” என விரல் நீட்டி எச்சரித்தவள், அங்கிருந்த கல் ஒன்றை எடுத்து அவன் மீது வீச, அது சரியாக அவன் நெற்றியை பதம் பார்த்தது.

“ஸ்ஸ்ஸ்… ஏய்…” என்று ஜிஷ்ணு உறுமிட, தட்டு தடுமாறி எழுந்து நின்றவள், “நீ குடுத்தது தாண்டா. நீயே வைச்சுக்கோ” என அவனை உறுத்து விழித்து விட்டு, தலையை பிடித்தபடி அங்கிருந்து அகன்றாள்.

‘மவளே… என்னைக்கு என்கிட்ட சிக்குறியோ அன்னைக்கு செத்த…’ என்று வாய்க்குள் முணுமுணுத்தவன், அவளை மொத்தமாக அடக்க வழி யோசித்துக்கொண்டிருந்தான்.

ஆனால், அதற்கு அவள் ஏற்கனவே ஒரு வழியை கண்டுபிடித்து இருப்பதை அவன் அறிந்திருக்கவில்லை. அதனால், இன்னும் அவனின் கோபத்தீயை ஏற்றப்போவதை அவளும் அறிந்திருக்கவில்லை.

நெற்றியில் அவளால் சிந்திய சிறு இரத்தத்தை துடைத்த படி விறுவிறுவென உள்ளே வந்த ஜிஷ்ணுவை நிறுத்தியது அவனின் தாய் அலமேலுவின் குரல்.

“எதுவும் பிரச்சனையா தம்பி. இந்த நேரத்துல வெளிய இருந்து வர்ற?” என தாய்க்குரிய பாச தொனியில் கேட்க,

“ஒண்ணும் இல்லமா.” என அவரை பாராமல் பதிலளித்தவனின் நெற்றிக் காயத்தை கண்டு கொண்டவர், “என்ன தம்பி இது. ரத்தம் வருது. அய்யயோ என்னங்க, அத்தை எல்லாரும் வாங்க…” என்று கத்தி அவரின் கணவர் கணபதியையும், மாமியார் சோலையம்மாவையும் எழுப்பி இருந்தார்.

“ப்ச்… யம்மோவ். எதுக்கு இப்ப நீ ஊர கூட்டுற?” என அவன் பல்லைக்கடித்து முறைக்க, அதற்குள் கணபதி அருகில் வந்து பதறினார்.

“அட நான் தான் ஒண்ணும் இல்லன்னு சொல்றேன்ல. எல்லாரும் போய் தூங்குங்க” என கிட்டத்தட்ட எரிந்து விழுந்தவனை இருவரும் தயக்கமாக பார்க்க,

சோலையம்மா தான், “அடிபட்டவனே, தூங்க சொல்றான். நீ ஏன் அலமேலு, இந்த நேரத்துல தூக்கத்தை கெடுத்த. உன் மவனுக்கு அடிபட்டுருக்குறத பார்த்தா, எவளோ ஒருத்தி கல்லால அடிச்ச மாதிரி இருக்கு. அவனே பாத்துப்பான். நீ போ…” என நக்கலாக, சுருக்கம் கொண்ட கைகளை நெற்றிக்கு கொடுத்து சொடுக்கிட்டு கொண்டார்.

‘கெழவி, நேர்ல பாத்த மாத்தி பேசுது பாரு. ஏத்தம் அதிகமாகிடுச்சு கெழவி ஒனக்கு…’ என்றபடி ஜிஷ்ணு அவரை முறைக்க, வீம்பாக அவரும் முறைத்து வைத்து, விட்ட உறக்கத்தை தொடரச் சென்றார்.

“மருந்தாவது போடு தம்பி” என அலமேலுவும் மனது கேளாமல் கூறி விட்டு உள்ளே செல்ல, கணபதி, “ஏப்பா… உண்மையாவே கல்லால அடிச்சாங்களா என்ன?” என்று பதற்றத்துடன் அவன் நெற்றியைப் பார்க்க, அவனோ பதில் பேசாது பார்வையாலேயே சுட்டெரித்தான்.

அதில் சமாளிக்கும் பாவனையில், “சரிப்பா சரிப்பா… நீ தடுமாறி கீழ விழுந்து அடிபட்டுருக்கும் அதான. எனக்கு தெரியும்” என்று பெருமையாக முகத்தை வைத்துக் கொள்ள, ‘இப்ப இங்க இருந்து போறியா இல்லையாப்பா?’ என்ற ரீதியில் அவன் அனலை கக்கினான்.

பின் அவனே, “நாளைக்கு நான் ஊருக்கு போறேன். நீங்க மூணு பேரும் இங்கயே இருங்க…” என உத்தரவாக கூறியதில், “நாங்களும் ஊருக்கே வர்றோமேப்பா. நம்ம ஊரை பேரூராட்சியா வேற அறிவிச்சு இருக்காங்க. இந்த நேரத்துல…” என்று அவர் பேசிக்கொண்டே செல்ல, அவனோ அழுத்தமாக “அப்பா” என அவரை அழைத்து, “நான் சொல்றவரை இங்கயே இருங்க. அவ்ளோ தான்” என்றபடி உரையை முடித்துக்கொண்டு அவன் அறைக்கு சென்று விட, கணபதி தான் சலித்தார்.

“ஹ்ம்ம்… கட்சில தொண்டனா இருந்தப்பவாவது நாலு வார்த்தை பேச முடிஞ்சுது. இப்ப, எம். எல். ஏ க்கு அப்பாவா ஆகி, எண்ணி எண்ணி பேச வேண்டியதா இருக்கு!” என முணுமுணுத்துக் கொள்ள,

“இன்னும் நீங்க போகலையா?” என்ற ஜிஷ்ணுவின் குரலில் அடுத்த நொடி அறையில் இருந்தார்.

மறுநாள், கன்னிமனூருக்கு விரைந்தவன், முதலில் சென்றது கட்சி அலுவலகத்திற்கு தான்.

வேஷ்டியை ஒரு கையால் பிடித்தபடி, வேக எட்டு வைத்து நடந்தவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல், கிட்டத்தட்ட ஓடி வந்து கொண்டிருந்த கௌரவ், “ஜீ, எதிர்க்கட்சி ஆள் ஒருத்தன் நேத்து நைட்டு கன்னிமனூருக்குள்ள புகுந்து, தீய வைக்க பாத்தான். நல்லவேளை, நீங்க ஏற்கனவே, ஊரை சுத்தி போலீச போட சொன்னனால, எந்த அசம்பாவிதமும் நடக்கல.” எனக் கூறிட, கையில் இருந்த காப்பை பின்னால் நகர்த்தி, கண்ணில் நெருப்பை தாங்கி எதிர்க்கட்சி ஆள் முன் அமர்ந்தான்.

அவனோ, பயத்தில் நடுங்கிட, டேபிளில் இருந்த சிறிய பழம் வெட்டும் கத்தியை, கையில் எடுத்த ஜிஷ்ணு தர்மன், அதன் கூர்மையை அளந்தபடியே, “ஒரு வேலைல இறங்குனா, ஒண்ணு அதை முழுசா செய்யணும். இல்ல, செத்துறணும். குடுத்த வேலையை ஒழுங்கா செய்யாத உன்ன நான் இப்ப என்ன செய்ய…” என்றவனின் விழிகள் குரூரத்தை தாங்க, கௌரவ் ஒன்றும் புரியாமல் விழித்தான்.

இப்பிரச்சனையை கேள்வி பட்டு, அங்கு வந்த குமரனும் திகைக்க, “மாப்ள… அப்ப நீ தான் இவன தீ வைக்க சொன்னியா?” என மிரட்சியுடன் கேட்க,

“ஆமா… நான் தான் சொன்னேன். அதுவும் என் வீட்டை எரிக்க சொல்லி…” என்று இதழ் விரிக்க, குமரன் நெஞ்சை பிடித்தான்.

“என்னடா உளருற?”

“நான் உளறல குமரா. ஒரு சின்ன அரசியல் தான் பண்ணேன்…” என்றான் தோளை குலுக்கி.

“என்ன” என்று குமரன் விழிக்க,

“இந்த வெள்ளப்பாளையத்துல இருக்குற எதிர்க்கட்சி ஆளுங்க, இந்த ஜாதி தலைவருங்க எல்லாம், என் மேல கொலை காண்டுல இருக்கானுங்க. கன்னிமனூருக்குள்ள எந்த பில்டிங்கும் வரவைக்க கூடாதுன்னு கங்கணம் கட்டிட்டு அலையுறானுங்க. அதான்… நானே எதிர்கட்சில இருந்து ஒருத்தன பிடிச்சு, ஊருக்குள்ள இறங்கி கலவரம் பண்ண சொன்னேன்” என அசட்டையாக கூறியபடியே, அந்த ஆளின் கையின் மீது செருப்பை வைத்து நசுக்கினான்.

அவனோ வலியில் அலற, “இந்த பரதேசி… நானே கலவரம் பண்ணுடான்னு சான்ஸ் குடுத்தும், கேவலமா மாட்டிக்கிச்சு” என்றபடி, அவன் நெஞ்சில் ஏறி மிதித்தான்.

கௌரவ் அரண்டு, “இதுனால நமக்கு என்ன ஜீ லாபம்?” எனக் குழப்பமாக கேட்க, அவனை திரும்பி முறைத்தவன்,

“என்ன லாபமா? இதை வச்சு கன்னிமனூர் வளர்ச்சி வெள்ளப்பாளையத்துக்காரனுக்கு பிடிக்கல, எதிர்கட்சிக்கு பிடிக்கலன்னு இந்த தொகுதி முழுக்க பரப்புவேன். என் வீட்டையே எரிக்க வந்தானுங்கன்னு, தீய மூட்டி விடுவேன். மக்கள்லாம், இன்னும் உசார் ஆகி, என்னை இன்னும் நம்புவாங்க.” என்று கதை போல, எக்களிப்புடன் கூற,

“ஆத்தாடி” என கன்னத்தில் கை வைத்த கௌரவ், “அப்பறம் ஏன் ஜீ ஊரை சுத்தி போலீசையும் போட சொன்னீங்க?” என்றான் புரியாமல்.

“ஆமா, இந்த மாதிரி ஏற்கனவே நடக்கும்ன்னு கணிச்சு, போலீசை முன்னேற்பாடா போட்டு இருக்கேன்னு வெளிய தெரிஞ்சா என்ன ஆகும்?” என ஜிஷ்ணு விழி உயர்த்தி வினவ, குமரன் “என்ன ஆகும்… நீ ரொம்ப முன்னேற்பாடா வேலை பார்த்து இருக்கன்னு சொல்லுவாங்க” என்றான் வேகமாக.

“ம்ம். அதே தான். நம்ம தொகுதி எம். எல். ஏ ரொம்ப ஷார்ப்புன்னு எல்லாருக்கும் தெரிய வேணாம். அதுவும் அடுத்த எலக்ஷன் வர்ற டைம்ல இதெல்லாம் பண்ணா தான, நம்ம ஞாபகத்துல இருப்போம்” என பக்கா அரசியல்வாதியாக பேசியவனை குமரன் தன்னை நொந்து பார்த்தான்.

“அது மட்டும் இல்ல, இனிமே ஊருக்குள்ள என்ன பிரச்சனை ஆனாலும், அதை இன்னும் ஈஸியா எதிர்க்கட்சி மேலயோ இல்ல, வெள்ளப்பாளையம் ஜாதி வெறி பிடிச்ச ஆட்கள் மேலையும் போட்டுட்டு நம்ம ஜாலியா வேடிக்கை பாக்கலாம்” என்றவனின் குரலில் இருந்த குழையும் தன்மை, முகத்தில் இல்லாது அதுவோ வஞ்சத்தை கக்கியது.

கூடவே, எதிரில் கட்சி ஆளின் வாயை உடைத்தவன், அவன் தொண்டையில் ஏறி மிதித்திருக்க அவன் மயங்கியே விட்டான்.

குளிர் கண்ணாடியை ஊதி அணிந்து கொண்டவன், “இவனை ஆஸ்பத்திரில போடு. கண்ணு முழிக்க கூடாது. முழிச்சா உயிர் இருக்க கூடாது” என்ற கடுமையான உத்தரவை தன் ஆட்களுக்கு கொடுத்து விட்டு புயலாக வெளியில் செல்ல, அவன் பின்னே வந்த குமரன், “உன் நெத்தில என்னடா காயம்…?” எனக் கேட்டான்.

அதில், வசுந்தராவின் முகம் நினைவு வர, மேலும் இறுகியவன், “கால் தடுக்கி விழுந்துட்டேன்…” என அடிக்குரலில் கூற, அவனை ஒரு மாதிரியாக பார்த்த குமரன் தான், “இதுலயும் ஏதாவது பாலிடிக்ஸ் இருக்கா?” என்றான் சிரிப்புடன்.

“மூடு” என்று அவனுக்கு சைகை கட்டிய ஜிஷ்ணு,

“அந்த வக்கீலுக்கு எப்படி நம்ம மூவ்ஸ் எல்லாம் தெரியுது. கன்னிமனூரை சுடுகாடா மாத்த போறதை, அவ்ளோ தைரியமா சொல்றா. ஏதோ சரி இல்ல. ஒண்ணு அவ ஆழம் பாத்துருக்கணும். இல்ல, என்னை அடி ஆழத்துக்கு தள்ள ஏதோ திட்டம் போட்டு இருக்கணும். கண்டுபிடிக்கிறேன்…” என சட்டையின் கைப்பகுதியை தூக்கி விட்டுக்கொண்டான்.

“தாரா… நீ வீட்டுக்கு போகாம இருந்தா அப்பாவும் அம்மாவும் பயந்து போய்டுவாங்க. சென்னைல இருந்து வந்தும், இன்னும் வீட்டுக்கு போகாம ஆபீஸ்லயே இருந்தா எப்படி…?” என பரத் கேள்வியாய் பார்க்க,

அவளோ தடிப்பாக கட்டிட்டு இருந்த நெற்றியில் எரிச்சலுடன் கை வைத்து, “இதை பார்த்தா ரெண்டு பேரும் கேள்வி மேல கேள்வி கேட்பாங்க பரத்.” என்றவள், “நான் சொன்னது ரெடியா?” எனக் கேட்டாள் காரியத்தில் கண்ணாக.

“எல்லாம் ரெடி தான்” என வேகமாக தலையாட்டியவன், ‘நானும் சாக ரெடி’ என்றான் முணுமுணுப்பாக.

“ஓகே… இப்போ அவன் கட்சி ஆபிஸ்ல இருந்து, வெள்ளப்பாளையத்துல இருக்குற அவன் வீட்டில தான் இருக்கான்… அங்கேயே நம்ம பிளானை எக்சிகியூட் பண்ணிடலாம்” என்றாள் இளக்கார நகையுடன்.

கன்னிமனூரில் தான் ஜிஷ்ணுவின் வீடு இருந்தாலும், அவனை எதிர்க்கும் ஜாதி ஆட்களை வெறுப்பேற்றவென்றே, வெள்ளைப்பாளையத்தில் அதிலும், வசுந்தராவின் தந்தையின் அலுவலகத்திற்கு எதிரவே, அலுவல் சம்பந்தமாக ஒரு வீட்டையும் அமைத்திருந்தான்.

அங்கே கட்சி ஆட்களும், அடியாட்களும் எப்போதும் குழுமி இருக்க, தூரத்தில் ஒரு மரத்தின் மறைவில் நின்று இதனை பார்த்த வசுந்தரா, “ம்ம்க்கும்… அடியாளுக்கு அடியாளு வேலை பார்க்க நாலு அடியாளு வேற… உன் கொட்டத்தை அடக்குறேண்டா தர்மா” என்று கறுவியவள், பரத்திற்கு கண்ணை காட்டினாள்.

ஆனால், உணவு டெலிவரி செய்யும் டெலிவரி பாய் வேஷத்தில் உள்ளே சென்றவன் தான் வரவே இல்லாது போக, பாவைக்கு சற்றே பதற்றம் சூழ்ந்தது.

அங்கோ, சோபாவில் ஜிஷ்ணு வெறி கொண்ட வேங்கையாய் அமர்ந்திருக்க, அவனுக்கு கீழே முட்டியிட்டு பரத் உயிர் பயத்தில் நடுங்கி கொண்டிருந்தான்.

“யார் நீ? எதுக்கு இங்க வந்து இருக்க? உனக்கு என்கிட்ட இருந்து என்ன வேணும்?” என்றே வாள்விழியால் கூறு போட்டான் ஜிஷ்ணு தர்மன்.

அச்சத்தில், வியர்த்துக் கொட்டியபடி பரத், “சார்… நான்… நான்… உண்மையா டெலிவரி பாய் தான் சார்!” என நடுங்கினான்.

அழுத்தப் பார்வையில் ஆதிக்கம் கலந்து இளிவாய் இதழ் விரித்த ஜிஷ்ணு, இரு விரல் கொண்டு அவன் அணிந்திருந்த பிரபல உணவு விற்பனை டீ – ஷர்ட்டை இழுத்துப் பிடித்தான்.

“இந்த டீ – ஷர்ட்ல கம்பெனி லோகோ தப்பா இருக்கு. அதாவது, அவசரமா என்ன பார்க்க வர்றதுக்காக பிரிண்ட் செஞ்சது. ரைட்டா…?” புருவம் நெறித்து வினவியதில் அவன் அரண்டான்.

மேலும் அவனை பீதியாக்கும் பொருட்டு, “நீ வண்டில என் வீட்டு தெருவுக்கு வரும் போது கையில பாக்ஸ் இல்ல. உள்ள வரும் போது தான், எங்க இருந்தோ எடுத்துட்டு வந்து இருக்க. இது ரைட்டா?” என்ற ஜிஷ்ணுவின்  விழிகள் நெருப்பை உமிழ்ந்தது.

அந்நேரம், “ஜீ… மினிஸ்டர் லைன்ல இருக்காரு!” என ஜிஷ்ணுவின் அடியாள் ஒருவன் அலைபேசியை நீட்ட, “ம்ம்…” என்ற உறுமலுடன் அதை வாங்கியவன், தீவிரத்துடன் ஏதோ பேசிக்கொண்டிருக்க,

அவனிடம் சிக்கிய பரத் தான், காதினுள் வைத்திருந்த மைக்ரோ ப்ளூ டூத்தில் “மாட்டிக்கிட்டோம் தாரா. இப்ப என்ன பண்ண?” என்றான் கலவரமாக.

ஜிஷ்ணுவின் பேச்சுக்களை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த வசுந்தரா, “ஒண்ணும் பண்ண முடியாது. அவன்கிட்டயே சாவு. நான் வேற ஆள் வச்சு பாத்துக்கிறேன்” என கடுப்புடன் கூறி விட்டு போனை கட் செய்ய, பரத்திற்கு விழி பிதுங்கி விட்டது.

‘அடிப்பாதகத்தி… உயிர் நண்பி கேள்வி பட்டு இருக்கேன். என் உயிரை எடுக்குற நண்பி நீ தாண்டி.’ என எச்சிலை விழுங்கியவன், நொடி நேரத்தில் அருகிலிருந்த டீ பாய்க்கு அடியில் ‘பக்’ ஒன்றை ஃபிக்ஸ் செய்தான்.

கூடவே, பாக்கெட்டில் இருந்த ஒரு கவரை யாரும் அறியாமல் டேபிளுக்கு அடியில் போட, சரியாக ஜிஷ்ணு அவன் புறம் திரும்பியதில் இன்னும் வெலவெலத்தான்.

“உன்ன நான் ஊருக்குள்ள பார்த்ததே இல்லையே. ஆனாலும், எங்கயோ உன் மொகர கட்டையை பார்த்து இருக்கேன்…” என்று நெற்றியில் தட்டி சிந்தித்தான்.

குமரன் தான், “இவன நான் தாரா கூட பார்த்து இருக்கேன் மாப்ள கோர்ட்ல. இவனும் வக்கீல் தான்” என்று கோர்த்து விட, பரத்திற்கு சங்கு சத்தம் இப்போதே கேட்டது.

“ஓஹோ…! சார் ஸ்பையா வந்துருக்காருன்னு சொல்லு” என்றபடி, அவன் கையை முறுக்கியதில், “சார் சார்… எனக்கு ஒண்ணும் தெரியாது சார். அவள் தான், என்ன உள்ள அனுப்புனா” என கெஞ்சும் போதே, இன்ஸ்பெக்டரும், இரண்டு கான்ஸ்டபிளும் மடமடவென உள்ளே நுழைய, ஜிஷ்ணு என்னவென பார்த்தான்.

அந்த இன்ஸ்பென்டர் சங்கர், பழைய பகையுடன் ஜிஷ்ணுவை முறைத்து, “நாங்க ரெய்டுக்கு வந்து இருக்கோம் எம். எல். ஏ சார்.” என எரிச்சலுடன் அவனை ‘சார்’ என அழைக்க, “ரெய்டு? எதுக்கு?” என்றான் விழி இடுங்க.

“ம்ம்… நீங்க போதை பொருளை வீட்ல மறைச்சு வைச்சு இருக்கறதா எனக்கு தகவல் வந்து இருக்கு…” என்றதில், ஜிஷ்ணு கோபத்துடன் ஏதோ பேச வர, அவனை தடுத்த சங்கர், “சர்ச் வாரண்ட் இருக்கு எம். எல். ஏ சார்” என்றான் நக்கலாக.

‘ஏதோ தப்பா இருக்கு…’ என தொடையில் விரல்களை தாளமிட்டவன், “ம்ம்” என்று தேட அனுமதி கொடுப்பது போல சைகை காட்ட, அவர்கள் தேடும் போதே, கௌரவை அழைத்து ஏதோ முணுமுணுத்தான். 

அவனோ “ஜீ” என மிரள, பின் அவன் பார்த்த பார்வையில் கப்சிப் என சொன்ன வேலையை செய்ய, பின் பக்கம் எகிறி குதித்து வெளியில் சென்று, வெளியில் இருந்த ஆட்களை வரவழைத்து வேலையில் இறங்கினான்.

சில நிமிட தேடலுக்கு பிறகு, பரத்தின் அருகில் வர, அவனோ “சார்… நான் டெலிவரி பாய் தான் சார். என்னை விடுங்க” என்று கதற, அவனின் பையை மட்டும் சோதித்த சங்கர், “நீ போ” என்று அனுப்பி விட, ஜிஷ்ணுவின் விழிகள் பரத்தை எரித்தது.

அத்துடன் அவன் வெளியில் ஓடிவிட, மரத்தின் மீது அசட்டையுடன் சாய்ந்து, கழுத்தை தேய்த்துக்கொண்ட வசுந்தரா, ‘சட்டத்துல இருக்குற ஓட்டையை நீ உருவாக்குவியா… ஹா… நான் உன்மேல, நீ செய்யாத தப்பையே உருவாக்கி, அதுக்கு ஆதாரமும் வைப்பேன்டா என் டொமேட்டோ’ என எகத்தாளம் புரிந்தாள்.

அரை மணி நேரம் கடந்திருக்க, இன்னும் ஜிஷ்ணுவின் வீட்டில் இருந்து காவலர்கள் வெளிவராததைக் கண்டவள், லேசாக புருவம் சுருங்க, ‘இந்நேரம் அவனை அரெஸ்ட் பண்ணிருக்கணுமே. இந்த இன்ஸ்பெக்டர் என்ன பண்றாரு?’ என குழம்பினாள்.

அவளை மேலும் குழப்பும் விதமாக, சங்கர் மட்டும் பதற்றமாக வெளியில் வந்தவர், வெளியில் நின்றே, “சாரி சார்… தப்பான இன்ஃபர்மேஷன் வந்து இருக்கு. உங்க வீட்ல போதை பொருள் எல்லாம் இல்ல” என்று கத்தி சொல்லி விட்டு, வேகமாக கிளம்பினார்.

அவர் செயலில் திகைத்த வசுந்தரா, ‘ஏதோ பண்ணிட்டான். பொறுக்கி பைய… ஏதோ பண்ணிட்டான்’ என உள்ளுக்குள் சுறுசுறுவென ஆத்திரம் எழ, கண நேரத்தில் பின்னங்கழுத்தில் ஆடவனின் சூடான கோப மூச்சுக்கள் சுட, அவனின் கரங்கள் அவள் கரங்களை கிடுக்கு பிடியாக பிடித்திருந்ததை உணர்ந்து அப்படியே நின்றாள் அசையாமல்.

தீயோ தென்றலோ அவள்(ன்)
மேகா

ஹாய் டியர் பிரண்ட்ஸ்… இதுல வர்ற ஊர், பேர் எல்லாமே கற்பனை தான். யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல😜… ஸ்டோரி எப்படி இருக்குன்னு சொல்லுங்க drs… கண்டிப்பா லவ் அண்ட் லவ் நிறய இருக்கும். 🥰 அடுத்த ud Monday drs.. good night sweet jishu dreams❤️🥰

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
24
+1
76
+1
4
+1
3

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  2 Comments

  1. priyakutty.sw6

   அவரு ஒரு பக்கவான அரசியல்வாதி ல…

   கதை செம்மயா போகுது dr… 🤩

   அவர் மனசுல இருக்க பிளான் என்ன?

   தாரா அஹ் பாத்துட்டாரு…

   இனி என்ன…ஆகும்…

   நைஸ் எபி.. ❤