Loading

 

 

ஜீவா சொன்ன வாக்கியத்தில் அதிர்ந்து நின்ற கயலை, ஏளன சிரிப்புடன், விரலை ஒடிக்கும் படி இழுத்து, மீண்டும் அக்னியை சுற்ற ஆரம்பித்தான் ஜீவா.

இவர்களின் உள்நாட்டுப் போர் அறியாமல், கயலின் தோழிகள் அவளை கிண்டலடிக்க, அவளின் பெற்றோரும் மனமார ஆசீர்வாதம் செய்தனர். கயல் தான் குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை.

திருமணம் முடிந்த கையோடு, சாப்பிட கூட செய்யாமல், உடனே ஊட்டிக்கு செல்ல வேண்டும் என்று நிலையாய் நின்றான் ஜீவா.

சிவமூர்த்தி, “மாப்பிள்ளை… இப்போ தான் கல்யாணம் முடிஞ்சுருக்கு. மத்த சம்ப்ரதாயம்லாம் இருக்கு.” என்று இழுக்க,

அவன் “அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் அங்கிள். இப்போ, நான் அவசரமா போகணும். வேணும்னா உங்க பொண்ணு இங்க இருக்கட்டும். நான் அப்பறம் வந்து கூட்டிட்டு போறேன்” என்று போட்டு வாங்க,

கலை பதறி, “ஐயோ வேணாம் வேணாம் நீங்க அவளை கையோட கூட்டிட்டு போங்க. அப்படிலாம் விட்டுட்டு போக கூடாது மாப்பிள்ளை” என்று சொன்னதும், அவளை அவள் வீட்டிற்கு கூட அழைத்து செல்லாமல், கட்டிய புடவையோடு, அங்கிருந்தே காரில் ஏற்றினான்.

கயலுக்கு சில அறிவுரைகள் சொன்ன பெற்றோரை, கண் கலங்க பார்த்தவள், இருவரையும் கட்டிக்கொண்டு அழுக, அவர்களோ, தங்களை விட்டு பிரிவதை நினைத்து அழுகிறாள் என்று நினைத்து ஆறுதலளித்தனர்.

ஆனால் அவள் தான் பலியாடு போல, இனிமேல் உயிருடன் இந்த ஊருக்கு திரும்பி வருவோமா என்று அரண்ட படி அவன் பின்னே சென்றாள்.

காரை, ஜீவாவே ஓட்டிக்கொண்டு வர, கயலுக்கு முள் மேல் அமர்ந்திருந்தது போல், தவிப்பாக இருந்தது.

அவனுடன் இனிமையாக செல்ல வேண்டிய பயணம். இப்போது அவனின் கடுமையான முகத்தைக் கண்டு, உயிர் பயத்துடன் செல்ல வேண்டியது இருக்கிறதே என்று வேதனையாய் நினைத்தவள், அவன் ஏன் இப்படி செய்கிறான் என்று அறிந்து கொண்டே ஆக வேண்டும் என்று தனக்குள் உறுதி எடுத்துக்கொண்டாள். ஊட்டி செல்லும் வரையிலும் இருவரும் எதுவும் பேசவே இல்லை.

ஜீவா காரை நேராக, சுற்றி ஒரு ஈ காக்கா கூட இல்லாத ஒரு பங்களாவில் நிறுத்தினான்.

சுற்றிலும் பசுமையாய், கண்ணுக்கு குளிர்ச்சியாய், மேலும், அந்த வீட்டின் தோட்டத்தில் இருக்கும் புல்கள் எல்லாம் சீராக வெட்டப்பட்டு, நேர்த்தியாய் இருந்த அந்த வீட்டை கண்டவளுக்கு, அந்த அழகெல்லாம் கண்ணுக்கு தெரியவில்லை மாறாக. அந்த வீட்டை பார்க்கவே அவளுக்கு உள்ளுக்குள் நடுங்கியது.

 கால் நகரமுடியாமல் அதே இடத்தில் நிற்க, ஜீவா, அவளைப் பார்த்து, “மகாராணிக்கு நடந்து வர முடியலையா. இல்ல நாங்க தூக்கிட்டு போகணுமா” என்று நக்கலுடன் கேட்க, அவளுக்கு தான் முந்தைய நாள் நலுங்கு வைக்கும் போது, நடந்து வருகையில் லேசாக கால் பிசகிட, ஜீவா அவளைத் தூக்கி கொண்டு வந்து சேரில் அமர வைத்தது தீயாக எரிந்தது… மனமும், அவன் தொட்ட இடமும்…

கண்ணில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டு, உள்ளே செல்ல, அவன் அவளை கண்டுகொள்ளாமல், அந்த வீட்டில் அவனுக்கென்று இருக்கும் அறையில் சென்று அடைந்து கொண்டான்.

அந்த வீட்டை சுற்றி பார்த்தவளுக்கு அங்கிருந்த ஒவ்வொரு பொருளும் அவனின் பணச்செழுமையை சுட்டி காட்டுவது போல் இருந்தது.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகியும் அவன் வெளியில் வரவே இல்லை.

கயலுக்கு காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல், மேலும், எதிர்பாராத அதிர்ச்சி அனைத்தும், குடலை பிரட்டியது.

மாற்றத் துணி கூட இல்லாமல், அதை அவனிடம் கேட்கவும் முடியாமல் அங்கிருந்த சோபாவில் அவள் அமர்ந்திருக்க, சிறிது நேரம் கழித்து அறையில் இருந்து வெளியில் வந்தவன், அவளை ஏற இறங்க பார்த்து “உள்ள வா” என்று அழைத்தான்.

அதில் மேலும் மிரண்டவள், திருதிருவென முழித்து கொண்டு பார்க்க, அவன் பல்லைக்கடித்து கொண்டு, “உன்னை உள்ள வான்னு சொன்னேன்…” என்று விட்டு அறைக்குள் சென்றான்.

சில நிமிடங்கள் தன்னை சமன்படுத்தி கொண்டு, அறைக்கு சென்றவள், அங்கு அவன் கையில் பீர் பாட்டிலுடன், கண்கள் சிவந்து, அதனை மடக் மடக் என குடித்து கொண்டிருப்பதை கண்டவளுக்கு, அப்படியே எங்கயாவது ஓடிவிட மாட்டோமா என்று இருந்தது.

அவள் உள்ளே வரவும், அவளையே மேலும் கீழும் ஆராய்ந்தவன், “ஹ்ம்ம்.. அழகா தான் இருக்க…” என்று விட்டு அவளை பார்த்து கொண்டு மீண்டும் குடிக்க,

கயல், “ஜீ ஜீ ஜீவா” என்று அழைக்க, அவன் “ஏய்” என்று கத்திக்கொண்டு எழுந்து அவளருகில் வந்தான்.

அந்த பாட்டிலை தூக்கி எறிந்து விட்டு, “அப்படி கூப்பிடாத… என் பேரை சொல்ல கூட உனக்கு தகுதி கிடையாது. என் அனுமதி இல்லாம நீ பேச வாய் திறக்க கூட கூடாது… காட் இட்” என்று அழுத்தமாய் மிரட்ட, அவள் உடலெல்லாம் நடுங்கி, ம்ம் என்று தலையாட்டினாள்.

“சார் சார்” என்று கூப்பிட்டு கொண்டிருந்தவளை, “பெயர் சொல்லி கூப்பிடு ஸ்வீட் ஹார்ட்” என்று கட்டாயப்படுத்தி, பெயர் சொல்லவில்லை என்றால் முத்தம் கொடுத்து விடுவேன் என்று மிரட்ட,

அவள் ஜீவா என அவன் பெயரை சொன்னதும், அவள் கன்னத்தில் அழகாய் ஒரு முத்திரையை பதித்து விட்டு வசீகரமாய் சிரித்தவன், இப்பொழுது, வன்மையாய் தன்னை கண்டிப்பது ஏன் என்று அவளுக்கு புரியவே இல்லை.

அவளின் எண்ணப்போக்கை அறிந்தவன், “என்ன உருகி உருகி லவ் பண்ணிட்டு இப்போ இப்படி பேசுறானேன்னு பார்க்குறியா…” என்றவன் நக்கல் நகையுடன் பார்த்தான்.

“உன்னை போய்… நான் லவ் பண்ணுவேனா… உனக்கே உன் தகுதி தெரியவேணாம். ஹ்ம்ம்?” என்று கேள்வியாய் கேட்டவன், “என் ஸ்டேட்டஸ் என்ன… உன் ஸ்டேட்டஸ் என்ன. உனக்கு என்ன பெரிய உலக அழகின்னு நினைப்பா.  உன்னை பார்த்ததும் காதல் கடல்ல விழுகுறதுக்கு… அந்த கண்ணை வச்சு… என்னை வசியம் பண்ணிடலாம்னு நினைச்சியா. என்னை எல்லோரை மாதிரியும் நினைச்சிட்டியா. ஹான்…” என்று கண்ணில் ரௌத்திரம் தெறிக்க கேட்டவன்,

பின், அவளை ஒரு மாதிரியாக பார்த்து, “பட்… சும்மா சொல்லக்கூடாது, பேரழகி இல்லைன்னாலும், ஓகே ஒரு தடவை உன்னை டேஸ்ட் பண்ணலாம்” என்று நெருங்க, கயல் அவன் பேசியதில் நொறுங்கி போயிருந்தாள்.

அவனுக்குத் தெரியவில்லை இதெல்லாம் வட்டியும் முதலுமாக தான் பெறப்போவதை…

அவன் அருகில் வந்ததும், “வேணாம் ஜீ” என்று சொல்லவந்தவள் வார்த்தையை முழுங்கி விட்டு,

“வேணாம்ங்க… ப்ளீஸ் என்னை விட்ருங்க” என்று கெஞ்ச, அவளை சுவற்றோடு நெறுக்கியவன்,

“உன்ன விட்றதுக்கா நான் அவ்ளோ பிளான் பண்ணி, ஒவ்வொரு தடவையும் உன் வண்டியை பஞ்சர் ஆக்கி, உன்னை என் வலைல விழ வச்சேன்… என்ன ஸ்வீட் ஹார்ட்…

ம்ம்ஹும் நோ நோ. யு ஆர் நாட் ஸ்வீட் அட் ஆல். பிட்டர் ஹார்ட்…” என்று மேலும் நெருங்க..

அவள் கண்ணீருடன் “ப்ளீஸ் உங்களுக்கு என்ன தான் பிரச்சனை… எதுக்கு இப்படி மிருகம்  மாதிரி நடந்துக்குறீங்க…” என்று கேட்க, அவளை பளாரென அறைந்தான்.

அவள் தோளைப் பிடித்து உலுக்கி, “நான் மிருகம் தாண்டி… மிருகம் என்ன பண்ணும்னு காட்டவா… காட்டவா” என்று அவள் கழுத்தை பிடித்தான்.

பின், பயத்தில் நடுங்கி கொண்டிருந்தவளை கண்டு, “சரி… உனக்கு மூணு சாய்ஸ் தரேன். நீயே உனக்கு என்ன வேணும்னு சூஸ் பண்ணு ஓகே வா பிட்டர் ஹார்ட்” என்று கேட்க, அவள் அடுத்து என்ன செய்ய போகிறானோ என்று குலை நடுங்கி போயிருந்தாள்.

அவன் அழுத்தி “சே எஸ் ஆர் நோ” என்று கேட்க, அவள் ம்ம் என்று தலையை உருட்டினாள்.

அவன் வேகமாக கப் போர்டை திறந்து, ஒரு நைந்து போன சேலையை எடுத்து அவள் மேல் வீசி,

“ஒன்னு நகையெல்லாம் கழட்டிட்டு, இந்த புடவையை கட்டிக்கிட்டு, இந்த வீட்டு வேலைக்காரியா என் காலுக்கடில இரு.

இல்லைன்னா… உனக்கு இன்னொரு ஸ்வீட் ஆஃபர் இருக்கு…” என்றவன், “நீ இந்த வீட்டு மஹாராணியாவே இரு. உன்னை நான் எல்லா விதத்திலயும் சந்தோசப்படுத்துறேன்” என்றவன் எல்லா என்பதை அழுத்தி சொல்லிவிட்டு,

“பட்… நீ என் பொண்டாட்டியா இல்லை வப்பாட்டியா தான் இருக்கணும்.” என்று சொல்ல, அவளுக்கு அதற்கு மேல் அதிர்ச்சியை தாங்க முடியாதது என்பது போல் இதயமே மரத்துப் போனது.

பின் மூன்றாவதாக, இப்பொழுதே, நீ உன் வீட்டிற்கு செல்லலாம்… உனக்கு ஒரு நிமிட நேரம் கொடுக்கிறேன். நீயே முடிவெடுத்து கொள்… என்று மற்றொரு பீர் பாட்டிலை திறந்து குடிக்க ஆரம்பிக்க, அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, அங்கிருந்த குளியலறைக்குள் சென்றவள், அவன் சொன்னது போல் தாலியை தவிர, அனைத்து நகைகளையும் கழட்டி வைத்து, அந்த புடவையை கட்டிக்கொண்டு வெளியில் வந்தாள்.

அவளை ஒரு முறை எப்பொழுதும் போல் எக்ஸ்ரே பார்வை ஒன்றை பார்த்தவன், “ஹ்ம்ம்… உனக்கு ஆப்ஷன் கொடுத்தும் வேணாம்னு சொல்லிட்ட. பட் இனிமே என்கிட்டே இருந்து தப்பிக்கலாம்னு மட்டும் நினைக்காத. இந்த வீட்டு கேட்டை தாண்டி கூட நீ போக முடியாது. எல்லா இடத்துலயும் கேமரா இருக்கு. அப்பறம் உனக்கு தண்டனை ரொம்ப மோசமா இருக்கும்” என்று மிரட்டியவனை இதுக்கு மேலயுமா என்பது போல் உணர்ச்சியற்று பார்த்து கொண்டிருந்தாள்.

அவளை பார்க்காமல் வேறு புறம் திரும்பி ஜீவா, பின், அவளை இழுத்துக் கொண்டு, அடுக்களைக்குள் சென்றான்.

அங்கு சென்று, “இனிமே இதான் உனக்கு ரூம். இந்த வீட்ல எல்லா வேலையும் நீ தான் செய்யணும்…” என்று காலை ஐந்து மணியில் இருந்து இரவு 12 மணி வரைக்கும் அவள் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டு, இதில் ஒன்று தவறினாலும், என் கடுமையான கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று எச்சரித்து விட்டு, அவன் அறைக்குள் புகுந்து கொண்டான்.

அந்த பெரிய அடுக்களையை கண்ணீருடன் பார்த்தவள், அங்கேயே அமர்ந்து கதறி அழுக ஆரம்பித்தாள்.

எவ்வளவு நேரம் அழுதாலோ தெரியாது… அந்த குளுமையான தரையிலே தன்னை சுருக்கிப் படுத்து உறங்கி விட்டாள்.

மறுநாள், தலை வலியுடன் எழுந்தவள், மணி ஐந்து ஆகிருப்பதை பார்த்து அவசரமாக எழுந்து, அவனுக்கு காபி போட்டு, கொண்டு அவன் அறைக்கு சென்றாள்.

அங்கே அவன் அப்பொழுது தான் உடற்பயிற்சி செய்து விட்டு, பனியனும் ஷார்ட்ஸ்சுடனும்  இருக்க, அவனைப் பாராமல், அங்கிருந்த டேபிளில் காபியை வைத்து விட்டு திரும்ப, அவன் “ஏய்” என்று அழைத்தான்.

“காபியை கைல குடுக்க முடியாதா… அவ்ளோ திமிரா உனக்கு” என்று அதட்ட, அவள் “இல்ல நீங்க இப்படி…” என்று பேச தடுமாற, அவன் “எப்படி” என்று எதிர்கேள்வி கேட்டான்.

கயலுக்கு கண்ணில் இருந்து நீர் உருண்டோட, அவன் போ என்று அனுப்பினான்.

அங்கிருந்து தப்பித்து பிழைத்து வந்தவளுக்கு, அப்பொழுது தான் நேற்றிலிருந்து பச்சை தண்ணி கூட குடிக்கவில்லை என்று ஞாபகமே வந்தது.

அவன் வீட்டில் எதுவும் சாப்பிட பிடிக்கவில்லை என்றாலும், அவன் முன்னே தான் பலவீனமாய் போய்விட கூடாது, உடலிலும், உள்ளத்திலும் பலம் வேண்டும் என்று நினைத்து கொண்டு, காபியை குடித்தவள்,

அந்த பெரிய வீட்டை கூட்டி சுத்தம் செய்து, துடைத்து விட்டு, தோட்டத்திற்கு வந்து, செடிகளுக்கு தண்ணீர் விட்டு, பின், காலை உணவை தயாரித்து என ஒன்பது மணி வரை நிற்க கூட நேரம் இல்லாமல் சுற்றியவள்,

ஜீவா சரியாக ஒன்பது மணிக்கு டைனிங் டேபிள் வரவும், வேகமாக சாப்பாடை எடுத்து தட்டில் வைக்க, அவன் அவளை கண்டுகொள்ளாமல், போனை பார்த்து கொண்டே சாப்பிட்டு விட்டு, எழுந்து சென்று விட்டான்.

பின், மீண்டும் பாத்திரம் கழுவி, மறுபடியும் அந்த பெரிய வீட்டை கூட்டி, துடைத்து விட்டாள்.

இது ஜீவாவின் கட்டளை தான். ஒரு நாளைக்கு மூன்று முறை வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்பது. பின் தோட்டத்திற்கு சென்றவள், அங்கேயும் சுத்தம் செய்து விட்டு, இரண்டு மணிக்குள் அவனுக்கு மதிய உணவும் தயார் செய்தாள்.

அவன் மீண்டும் வந்து சாப்பிட்டு வெளியில் செல்லவும், காலையில் இருந்து சாப்பிடாத வயிறு என்னையும் கொஞ்சம் கவனியேன் என்று கதற, கஞ்சியைக் கரைத்து குடித்து விட்டு, மீண்டும் வீட்டை சுத்தம் செய்தாள்.

பின், மீண்டும் இரவு உணவு தயாரித்து என அந்த நாள் முழுதும் பம்பரமாய் சுழன்றாள்.

அந்த நாள் மட்டுமல்ல, அடுத்து வந்த, மூன்று நாட்களும், இதே தான்.

மிகவும் சோர்ந்து போனவளுக்கு, அவ்வப்பொழுது அவன் காட்டும் பயமும், முள் போன்ற வார்த்தைகளும் மேலும் சோர்வை தர, சில நேரம், இப்படி ஒருத்தி இருக்கிறாள் என்று கூட உணராமல், அவன் இஷ்டத்திற்கு குடித்து விட்டு, ஹால் சோபாவிலேயே படுத்து விடுவான்.

அவளுக்கு மாற்றுத் துணியும் தராததால், அவளே குளிக்கும் போது உடையைத் துவைத்து, மீண்டும் அந்த ஈர உடையையே அணிந்து கொள்வாள்.

இப்பொழுதும், அவன் எந்த அளவுக்கு சென்றாலும், தான் என்ன தவறு செய்தோம் என்று அறியாமல், இங்கிருந்து செல்ல கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். அதனாலேயே அவன் சொன்ன அனைத்தையும் பொறுமையாய் செய்தாள்.

இப்படியே, ஒரு வாரம் கடந்திருக்க கயலுக்கு தான், உடல் நெருப்பாக சுட்டது.

வெறும் தரையில் படுப்பதும், ஈர உடையை அணிந்ததும், மேலும் ஒரு வாரமாக வெறும் கஞ்சியை மட்டும் குடித்து கொண்டு இருந்ததும் அவள் உடல்நிலையை வெகுவாக தாக்கியது.

அவளுக்கு உடல் நிலை சரி இல்லை என்று உணர்ந்தாலும், அதனை கண்டுகொள்ளாமல் இருந்தவன், மறுநாள் கடுகடுவென இருந்தான்.

அவனின் முகத்தில் தெரிந்த கடுமையில், உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும், இப்பொழுது பயப்பட கூட உடலில் அவளுக்கு தெம்பு இல்லை.

அன்று காலை உணவிற்கு ஒன்பது மணி தாண்டியும் ஜீவா வரமால் இருக்க பயந்து கொண்டே அவன் அறைக்குள் சென்றவள், அவன் கையில் ஏதோ ஒரு புகைப்படத்தை வைத்துக் கொண்டு, வெறி பிடித்தவன் போல் அந்த அறையை அளந்து கொண்டிருப்பதை கண்டு, அவனே வரும்போது வரட்டும் என்று நினைத்து கொண்டு, அங்கிருந்து செல்ல போக, கயல் வந்ததை பார்த்து விட்ட ஜீவா,

“ஏய் நில்லுடி..” என்று கத்த, அதில் அவள் அரண்டு போய் பார்த்தாள்.

“எவ்வளோ நாள்டி நடிப்ப. அப்படியே நீ நல்லவ மாதிரி நடிச்சா நான் நம்பிடுவேனா… உனக்கு உனக்கு இதெல்லாம் பத்தாது… உன்னை” என்று கடுங்கோபத்தில், இருந்தவனை, திடீரென என்ன ஆனது இவனுக்கு என்று பேந்த பேந்த முழித்து கொண்டு பார்த்தவள், அப்பொழுது தான் அவன் கையில் இருந்த புகைப்படத்தை பார்த்தாள்.

அதனை கண்டு அதிர்ச்சியுடன், “கா கா கார்த்தி.”என்று சொன்னவள், “உங்க கிட்ட எப்படி கார்த்தி போட்டோ” என்று விழி விரித்து கேட்க,

அவன், “சும்மா சொல்ல கூடாது ரொம்ப தைரியம்டி உனக்கு… அவனை கொன்னுட்டு என்கிட்டயே அவனை விசாரிக்கற பார்த்தியா… வாவ்…” என்று பல்லைக்கடித்து கொண்டு பேசியவனை திகைப்புடன் பார்த்தவள்,

“என்ன உளறுறீங்க. நான் கார்த்தியை… கார்த்தி எங்க…” என்று கேட்டதும் தான் தாமதம், அவள் கழுத்தைப் பிடித்து,

“நீ தாண்டி நீ தானடி கொன்ன அவனை” என்று சொன்னதும், அவள் கண்ணீருடன்,

“விடுங்க… நான் நான்… ஒன்னும் பண்ணல” என்று திக்கி திணறி சொன்னவள் கழுத்தை மேலும் இறுக்கி பிடித்தவன்,

“அவனை லவ் பண்ணி ஏமாத்தி, கடைசில அவனை செத்து போக சொன்னீலடி… அவன் அவன் தற்கொலை பண்ணிகிட்டான். யாரால?? உன்னால… உன்னால தான் அவன் செத்தான். நீ அவனை கொன்னதும் இல்லாம, அவனோட அண்ணனுக்கே வலை விரிக்க பார்த்தீல…” என்று வெறியுடன் கழுத்தை நெறிக்க, வலுக்கட்டாயமாக அவன் கையை தடுத்தவள்,

 உச்ச பட்ச அதிர்ச்சியில், “கார்த்தி கார்த்தி செத்து…” என்றவள் வாயை பொத்தி அழுது,

“இல்லை கார்த்திக்கு ஒன்னும் இல்ல நீங்க பொய் சொல்றீங்க… அவன் அவன்” என்றவள், தன் உயிர் தோழன் இறந்து விட்டானா என்பதை நம்பமுடியாமல், மேலும், தான் சொன்ன ஒரு சொல்லால் அவன் இறந்து விட்டானா என்பதையும் ஏற்று கொள்ள முடியாமல், கதறி அழுதவளுக்கு அப்பொழுது தான் ஜீவா அவனின் அண்ணன் என்று சொன்னது உறைத்தது.

“வாசு அண்ணாவை நீ கல்யாணம் பண்ணி என் அண்ணியா வந்துடு பட்டி (buddy)” என்ற கார்த்தியின் வாசகம் காதில் எதிரொலிக்க, ஜீவாவையே அதிர்ச்சியுடன் பார்த்து,

“வாசு” என்று உதட்டை அசைத்தவளை, எவ்வளவு நேரம் என்னிடம் நடிக்க போகிறாய் என்று நானும் பார்க்கிறேன் என்று அவளை உறுத்து விழித்து கொண்டிருந்தான் ஜீவா என்கிற ஜீவா வாசுதேவன்.

நேசம் தொடரும்..
-மேகா

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
35
+1
80
+1
5
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. priyakutty.sw6

      கார்த்திக் அண்ணா அஹ் ஜீவா… 😳

      இதுல வேற என்னவோ விஷயம் இருக்கு… னு தோணுது…

      ஓவரா பண்றாரு… ஒரு நாள் ரொம்ப வருத்தப்படுவாரு…😤

      பாவம் அவங்க…. 😔