உத்ராவின் ஃபாக்டரியில் நடந்த தீ விபத்திற்கு காரணம், அங்கு வேலை செய்யும் ஒருவரின் கவனக்குறைவே என்று கண்டறிந்து, அவனை வேலையை விட்டுத் தூக்கினாள்.
மேலும், தீ விபத்து ஏற்பட்டாலும், உடனே அதனைக் கட்டுப்படுத்த கூடியதாகக் கட்டடத்தை வடிவமைத்து, வேலையாட்களை உடனே வெளியில் அனுப்பும் வசதியும் இருந்ததால் பொருட்கள் இழப்பு தவிர வேறு எந்தப் பாதிப்பும் இல்லை.
பங்கு சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களும், சிறிது நேரத்தில் மாறி, அவளுக்கு ஆதரவாகவே இருந்தது. அன்று முழுதும், இதே வேலையில் சுற்றிக் களைத்து அலுவலகம் வந்தவள், தீவிர யோசனையில் இருந்த அஜய் முன் அமர்ந்தாள்.
“பங்கு, அந்த துருவ் இந்தியா வரேன்னு சொன்னதுல இருந்து, நீ ஏதோ அம்மா வீட்டுக்குப் போன பொண்டாட்டி சொல்லாமல் கொள்ளாமல் திரும்பி வந்த ரேஞ்சுக்கு டென்ஷன் ஆகவே இருக்கியே வொய்…?” அவனைக் கேலியுடன் பார்த்தாள் உத்ரா.
சுஜி “ஹா ஹா ஹா” என்று விழுந்து விழுந்து சிரிக்க, அஜய், “நானே அவன் வரானேன்னு எரிச்சல்ல இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் என்னன்னா கலாய்ச்சுட்டு இருக்கீங்க” என்றான் கோபமாக.
பின், “அவன் இங்க வர்றது எனக்குச் சுத்தமா பிடிக்கல. நீ முதல்ல சொன்ன மாதிரி நம்ம அவன் ப்ராஜெக்ட்ட கான்செல் பண்ணி இருக்கலாம்.
பட், பண்ணுனா மட்டும் அவன் சும்மாவா இருக்கப்போறான். இதுல அவன் உன்னை வேற அங்க வரச்சொன்னான். இப்போ எதுக்கு நீ சொன்னதுக்கு உடனே ஒத்துக்கிட்டான்னும் தெரியல” என்று தன் போக்கில் புலம்பிக்கொண்டிருந்தான்.
சுஜிதான்.அவன் அருகில் வந்து “பங்கு உண்மைய சொல்லு தண்ணி கிண்ணி அடுச்சுருக்கியா. இல்லை ஜன்னி எதுவும் வந்துடுச்சா” என்று நெற்றியை தொட்டு பார்த்து விட்டு,
உத்ராவிடம்,” ஒரு நாள் இல்லை ஒரு நாள் இவன் கிறுக்கனாவான்னு நினைச்சேன். பட் அது இவ்ளோ சீக்கிரம் நடக்கும்னு நான் நினைக்கல பங்கு” எனக் கிண்டலடித்தாள்.
அவள் கையைத் தட்டி விட்டவன், “உங்க ரெண்டு பேருக்கும் இதுல இருக்குற சீரியஸ்நெஸ் தெரியல. அங்கேயே ஒரு பொண்ணை விடமாட்டான். இங்க வந்து சும்மா இருப்பானா?” எனக் கடுகடுக்க, உத்ரா அவனை நினைத்து முகம் சுளித்தாள்.
மேலும் அஜய், “அவனும் அவன் கேரக்டரும்…” என்று பொரிய,
சுஜி, “போதும் நிறுத்துறியா! ஒருத்தரை பார்க்கறதுக்கு முன்னாடியே அவங்களை பத்தி ஒரு அபிப்ராயத்தை நம்மளா ஏற்படுத்திக்கிறது சரி இல்ல அஜய். அவன் எப்படிப் பட்டவனா வேணும்னாலும் இருந்துட்டு போகட்டும், பட் ஹி இஸ் வெரி இன்டெலிஜெண்ட். அது மட்டும் இல்லை.
நானும் அவனைப் பத்தி விசாரிச்சேன். நீ அவனைப் பத்தி சொன்னதெல்லாம் அவனோட பாஸ்ட் தான். லாஸ்ட் 3 இயர்ஸ் – ஆ அவன் எவ்வளவோ பாசிட்டிவ் ஆன விஷயம் பண்ணி இருக்கான்…” என்று சற்று குரலை உயர்த்தி சொன்னதில், அஜய்க்கு தான் புசுபுசுவெனக் கோபம் வந்தது.
“அப்படி என்ன பண்ணிருக்காரு?” நக்கல் தொனியில் கேட்டவனிடம்,
“நிறைய திறமை இருக்குற இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துருக்கான். இந்த 3 வருஷத்துல அவனால வளர்ந்தவங்க தான் நிறைய இருப்பாங்க” என்றாள்.
அவனோ, “ஆமா அவனால அவன் பிள்ளைங்க தான் வளர்ந்துருக்கும்” என்று நக்கலாகவும் ‘அது எப்படி நீ அவனுக்கு சப்போர்ட் செய்யலாம்’ என்ற அதீத கோபத்துடனும் அவளை முறைத்தான்.
சுஜி, “நீ பெர்ஃபெக்ட் ஆ இருந்துட்டா எல்லாரும் அப்படி இருக்கணும்னு நினைக்கிறது தப்பு அஜய். அது மட்டும் இல்லை. ஒருத்தரை பத்தி நீயே ஒரு எண்ணத்தை வளர்த்துக்குறது தப்பு இல்ல. ஆனா, அதை மத்தவங்க மேல திணிக்கிறது ரொம்ப ரொம்ப தப்பு.
இப்போ அவன் கேரக்டர் எப்படி இருந்தா என்ன? நம்ம என்ன அவன் கூடச் சம்பந்தமா பண்ணப்போறோம்?
அண்ட்… இந்த ப்ராஜெக்ட் ஸ்டார்ட் ஆனதும், நம்ம நம்ம வேலைய பார்த்துட்டு போயிடுவோம். அவன் கூட ஃபுல் அண்ட் ஃபுல் சமாளிக்க போறது உத்ரா தான். நீ இப்படி தேவை இலலாமல் அவன் பர்சனல் விஷயத்தைச் சொல்லி, அவளை குழப்புனா, அவள் எப்படி அவன் கூட ஒண்ணா வேலை பார்க்க முடியும். ஒருத்தரை பத்தி தேவை இல்லாமல் தப்பா பேசக் கூடாது” என்று பொரிந்தாள்.
அதில் கோபமானவன், “நீ எதுக்கு அவனுக்கு இவ்ளோ சப்போர்ட் பண்ற” என்று கடுப்புடன் கேட்க,
“நான் சப்போர்ட்லாம் பண்ணல. எதார்த்தத்தை தான் சொல்றேன்” என்றதில், இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, ஃபைலை ஒருவர் மேல் ஒருவர் எரிந்து கொள்ளும் அளவுக்கு வளர்ந்தது.
உத்ராவிற்கு சுஜி சொல்வதும் சரிதான் என்று தோன்றியது.
இதை அஜய்கிட்ட சொன்னால் இன்னும் சாமி ஆடுவான் என்று நினைத்து விட்டு,
“ஐயோ கொஞ்சம் சண்டையை நிறுத்துங்க. இன்னும் அவன் ஊருக்கே வரல அதுக்குள்ள நமக்குள்ள சண்டையா. அஜய் இனிமே இதைப் பத்தி பேச வேணாம்.
ஐ நோ ஹொவ் டு மேனேஜ் ஹிம். ரெண்டு பேரும் போய் வேலைய பாருங்க” என்று சற்று கடுமையான குரலில் சொல்ல, இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்து விட்டு, சென்றனர்.
இரவு அஜயும், உத்ராவும், வீட்டிற்கு செல்ல, அங்கு கருணாகரன் “உத்ரா நீ பிசினெஸ் தான் பண்ற ரௌடிசம் பண்ணல” என்று அதட்டினார்.
அஜய் புரியாமல் முழிக்க, உத்ரா “சிக்கிட்டேனா இவருக்கு எப்படி தெரிஞ்சுச்சு” என்று யோசனையுடன் பார்த்தாள்.
மேலும் அவர் திட்டுத் திட்டு எனத் திட்ட, அர்ஜுன் அங்கு வந்தவன், உத்ரா திட்டு வாங்குவதை ஸ்னாக்ஸ் சாப்பிட்டு கொண்டே பார்த்தான்.
பின், அவர், அஜயையும், அர்ஜுனையும் சேர்த்து திட்டி, “அவள் எது பண்ணாலும் அவளுக்கு சப்போர்ட் பண்றனால தான் அவள் இப்படி பண்ணிக்கிட்டு இருக்காள்.” என்க, அஜய்க்கு தான் ஒன்றுமே புரியவில்லை.
அர்ஜுன் எதுக்கு இவரு நம்மளையும் சேர்த்து திட்டுறாரு எனக் குழம்பி கருணாகரனிடம், “மாமா நீங்கத் திட்டுங்க. ஆனால் எதுக்கு திட்டறீங்கன்னு காரணத்தைச் சொல்லிட்டு திட்டுங்க” என்று கேட்க,
அவர் அவனை முறைத்து விட்டு, “ஏன் திட்டுறேன்னு உனக்குத் தெரியலையாக்கும். உன்கிட்ட சொல்லிட்டு தான இவள் எல்லாத்தையும் பண்ணுவாள். உனக்குத் தெரியாதா” என மேலும் திட்ட,
அவனோ “இவள் என்கிட்டே எதைச் சொல்லிட்டு பண்ணிருக்கா. இன்னுமா இந்த உலகம் இதை நம்பிகிட்டு இருக்கு” என்று நொந்தான்.
அதன் பின்னே, வேணுகோபாலன் ஃபாக்டரியில் தீ விபத்து ஏற்படுத்தி, அதனை ஒன்றும் இல்லாமல் ஆகிவிட்டது தெரிய, அஜயும் அர்ஜுனும் அவளை “அடிப்பாவி” என்று பார்த்தனர்.
உத்ரா ஏதோ அவர் அவளைப் புகழ்ந்து கொண்டிருப்பதை போல, அவர் திட்டுவதை என்ஜாய் செய்து கேட்டுக்கொண்டிருந்தாள்.
பின், அவரே இதற்கு மேல் உன்னிடம் பேசுவதே வேஸ்ட் என்று உள்ளே போய் விட்டார்.
உத்ரா “பாவம் அவரே டயர்ட் ஆகிட்டாரு” என்று நினைத்து, அர்ஜுன் வைத்திருந்த ஸ்னாக்ஸ் – ஐ அவள் பிடுங்கி சாப்பிட,
அஜய், “நான் உன் கூடவே தான இருந்தேன் இந்த வேலைய எப்போ பார்த்த” என்றான் முறைப்பாக.
“இதெல்லாம் தொழில் ரகசியம் பங்கு” என்று கண் சிமிட்டிய உத்ரா, இதற்குமேல் இருந்தால் கேள்வியாய் கேட்பார்கள் என்று உள்ளே சென்று விட்டாள்.
இரண்டு நாளில், துருவ் வேலை எல்லாம் முடித்து விட்டு, மீரா மற்றும் சஞ்சுவுடன் இந்தியா வந்தடைந்தான்.
ஏர்போர்ட்டிலிருந்து காரில் செல்லும்போது, தன் மனம் எங்கும் நிறைந்திருப்பவனின் நினைவுகள் மீராவை வாட்ட, முயன்று அதனை ஒதுக்கி விட்டு, சஞ்சு கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூறிக் கொண்டிருந்தாள்.
துருவ் ஆஸ்திரேலியாவில் இருந்ததை விட மிகவும் கடுமையாக இருக்க, அவனிடம் பேசக் கூட அவளுக்குப் பயமாக இருந்தது.
சஞ்சு தான் அவ்வப்பொழுது அவனிடம் ஏதாவது கேள்வி கேட்டுக்கொண்டு வந்தான். அவன் பேசினால் மட்டுமே துருவ் சற்று இயல்பிற்கு வந்து பதில் பேசுவான்.
பின், ஒரு ஹோட்டலில் கார் நிற்க, துருவ் “இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நீ இங்க ஸ்டே பண்ணிக்கோ” என்க,
அவள் ‘அப்போ அடுத்த நாள்
ல இருந்து எங்க ஸ்டே பண்ண’ என்று முழித்தாள். ஆனால் கேட்கத்தான் முடியவில்லை.
அவளின் அறைக்குச் சென்றவள், எதுவும் செய்யத் தோன்றாமல், கடந்த காலத்திலேயே உழல, துருவ் அங்கு வந்தவன்,
சஞ்சுவிடம் “சஞ்சு பாய்… இன்னைக்கு நீங்க என்கூட தூங்குறீங்களா” என்று கேட்க, அவன் துள்ளிக் குதித்து அவன் தோளில் தொங்கி கொண்டான்.
அவளைப் பாராமல், அவனைத் தூக்கி கொண்டு அவன் அறைக்குச் சென்று விட்டான்.
அவள் தான் இது எதையும் உணரவில்லை.
“எனக்காகக் காத்திருப்பேன் என்று சொன்னானே… உண்மையில் காத்திருப்பானா இல்ல இல்ல” என்று அவளுக்கு நினைக்கவே நெஞ்சை அடைத்தது.
அதன் பின்னே சஞ்சு அறையில் இல்லை என்று உணர்ந்தவள், போனை பார்க்க, அதில் துருவ் “சஞ்சு இஸ் வித் மீ” என்று குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.
அதனைப் பார்த்துப் பெருமூச்சு விட்டவளுக்கு, இவன் நல்லவனா கெட்டவனா என்று தான் இருந்தது.
அவள் முதன் முதலில் அங்கு வேலையில் சேர்ந்தபோது, அவனைப் பற்றி எல்லாரும் ஒரு மாதிரி தான் கூறுவார்கள்.
முதலில் அவளுக்கும் பயம் தான் என்றாலும், அவன் இவளிடம் வேலை விஷயத்தைத் தவிர வேறு எதைப் பற்றியும் கேட்கமாட்டான்.
அப்பொழுது சஞ்சு 3 மாத குழந்தை தான். க்ரஷ் இல் விட்டு விட்டு, வேலைக்கு வந்தவளுக்கு, சஞ்சுவிற்கு உடல்நிலை சரி இல்லை என்று தகவல் வர, அவளுக்கு என்ன செய்வதென்று கூடத் தெரியவில்லை.
துருவ் தான் சஞ்சுவை மருத்துவமனைக்குத் தூக்கி சென்று, அவளுக்கு உதவினான்.
அப்பொழுதும், அவன் எதனைப் பற்றியும் அவளிடம் கேட்டுக்கொள்ள வில்லை.
ஆனால் அப்போதிருந்து சஞ்சு வளரும் வரை அலுவலகம் தூக்கி வரச் சொன்னான்.
சில நேரம் அவனே அவன் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு சென்று பார்த்துக் கொள்வான். இது எதற்கும், அவன் அவளிடம் அனுமதி கூடக் கேட்டது கிடையாது. வெறும் தகவல் மட்டும் தான் சொல்லுவான்.
இவன் ஏன் தனக்கு மட்டும் இவ்வளவு செய்கிறான் என்று மட்டும் அவளுக்குப் புரிவதே இல்லை.
மறுநாள், உத்ராவின் அலுவலகமே பரபரவென இருந்தது. உத்ராவிற்கும் எப்போதும் விடச் சிறு படபடப்பு இருக்கதான் செய்தது.
“ஏன் இப்படி எப்பவும் இல்லாமல், ஹார்ட் இப்படி துடிக்குது” என்று நினைத்தவள்,
“ஒரு வேலை ஹார்ட் அட்டாக் வரப்போகுதோ” என வெளிறினாள்.
அந்நேரம் ஜன்னல் வழிப் பார்வையைத் திருப்பியவள், துருவ் ஒரு சிறு பையனிடம் ஏதோ பேசி கார் டிரைவரிடம் அவனை விட்டு விட்டு வர, அவன் பின்னே, ஒரு பெண் அந்தச் சிறுவனுக்கு முத்தம் கொடுத்து விட்டு, துருவின் பின்னே வருவதைக் கண்டாள்.
அஜய் கூறியது அவளுக்கு ஞாபகம் வர, பின் முயன்று, சுஜி சொன்ன அறிவுரையை மனதில் நிறுத்திக் கொண்டு, அவனை நேருக்கு நேர் சந்திக்கப்போகும் நிமிடத்திற்காய் சற்று பதட்டத்துடன் அமர்ந்திருந்தாள்.
கம்பீரமான “எக்ஸ்கியூஸ் மீ” என்ற குரலில் அவளறைக்குள் அவன் நுழைய,
அவளின் “எஸ்” என்ற வார்த்தை சிறிது பிசிறடித்ததோ என்று அவளுக்கே சந்தேகம் வந்தது.
உள்ளே நுழைந்தவன், அவள் முன், அவளைக் கூர்மையாகப் பார்த்தபடி, நிற்க, அவள் எழுந்து, “ஹலோ சார் வெல்கம் டு இந்தியா…” என்று வரவேற்று இருக்கையைக் காட்டினாள்.
அவன் அமர்ந்து விட்டு, அவளைப் பார்க்க, அவளுக்குத் தான், ஏதேதோ இனம் புரியா உணர்வுகள் அவனைக் கண்டதும்.
பின், மீராவை அறிமுகப்படுத்தி வைக்க, உத்ரா, அஜயையும், சுஜியையும் அறிமுகப்படுத்தினாள்.
நேரடியாக, அவன் ப்ரொஜெக்ட்டை பற்றிப் பேச, அவளால் அவன் பேசுவதை கூடக் கேட்க முடியவில்லை.
அவனின் கம்பீரத்திலும், அவனின் அறிவுக்கூர்மையிலும், மயங்கிப் போனதென்னமோ உண்மைதான்.
ஆனால் அது சில நொடிகளே! சட்டென்று தன்னை சுதாரித்தவள், தன் கம்பீரத்தை மீட்டுக்கொண்டு, அவனிடம் எதிர்கேள்வி கேட்டு, அவனையே திணறடிக்க, மீரா அவளைப் பார்த்து வியந்து தான் போனாள்.
துருவ் ‘இப்பொழுதுதான் ஃபார்ம்க்கு வந்துருக்க போல’ என்ற ரீதியில் அவளை ஒரு பார்வை பார்க்க, அவளும் அவன் பார்வையை சலிக்காமல் தாங்கினாள்.
பின் துருவ், “இதைப் பத்தி ஃபைனலைஸ் பண்ண, உங்க கம்பெனி ஓட ஷேர் ஹோல்டர் எல்லாரையும் கூப்பிட்டு மீட்டிங் வைக்கணும். மேக் தி அரேஞ்மென்ட்ஸ் வித்தின் லன்ச்” என்றான் உத்தரவாக.
அதில் உத்ரா, ‘இப்போவே மணி 12, அதுக்குள்ளே எப்படிடா மீட்டிங் வைக்க முடியும்’ என்று பேந்த பேந்த முழித்து விட்டு,
“சாரி சார்… உடனே எல்லாரையும் வரச் சொல்ல முடியாது” என்று மறுக்க,
அவன், “கெட் ரெடி ஃபார் தி மீட்டிங்” என்று விட்டு, அவன் மடிக்கணினியில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தான்.
திமிர் பிடிச்சவன் என வாய்க்குள்ளேயே வஞ்சித்த உத்ரா, சுஜியையும், அஜயையும் பார்த்தாள்.
அவனைத் திட்டுத் திட்டு எனத் திட்டிய அஜயே சற்று மிரண்டு போய் அமர்ந்திருக்க, சுஜி தான் உடனே அர்ஜூனுக்கும், விதுனுக்கும் போன் செய்து வரச் சொன்னாள்.
அர்ஜுன், சர்ஜெரியில் இருப்பதால், “நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க. நான் வந்து இடைல ஜாயின் பண்ணிக்கிறேன்” என்று கூற, அதைத் துருவிடம் கூறியதும், அவன் தோளை மட்டும் குலுக்கி விட்டு, மீண்டும் அவன் வேலையைத் தொடர்ந்தான்.
அஜய்யும், சுஜியும் மீட்டிங் வேலையைப் பார்க்கப் போக, மீரா, துருவ் கேட்கும் கேள்வி எதற்கோ பதில் சொல்லிக்கொண்டிருக்க, உத்ரா, துருவை தான் பார்வையாலேயே அளந்து கொண்டிருந்தாள்.
பின், மீண்டும் ஜன்னல் வழியே பார்த்தவள், அந்தச் சிறுவன் அழுதுகொண்டிருப்பதை பார்த்து, துருவிடம், “அந்தக் குழந்தை யாரோடது” என்று கேட்க,
மீரா, “என் பையன் தான் மேம்” என்றாள்.
எதற்கு என்றே தெரியாமல் நிம்மதியாய் உணர்ந்த மனதை கண்டுகொள்ளாமல், மீராவிடம், “ஏன் வெளிய கார்ல இருக்க வச்சிருக்கீங்க… உள்ள கூட்டிட்டு வாங்க” என்க, அவள் துருவை பார்த்தாள்.
அவன் லேசாய் தலையை மட்டும் அசைக்க, உத்ராவிற்கே அவன் என்ன சொன்னான் என்று புரியவில்லை.
மீரா மின்னல் வேகத்தில் வெளியில் சென்று சஞ்சுவை உள்ளே அழைத்து வந்தாள்.
உத்ராதான் “ஷப்பா செம்ம கெத்து தான். நல்ல செகரட்டரி.” என்று மனதில் வியந்து கொள்ள, மீரா சஞ்சுவை உள்ளே அழைத்து வரவும், அவனை அருகில் அழைத்தவள், “ஹாய் டார்லிங் உங்க பேர் என்ன” என்று கேட்க, அவன் “சஞ்சய்” என்றான்.
“வாவ் வாட் அ ஸ்வீட் நேம். எதுக்கு அழுதீங்க” என அவன் கன்னம்பற்றிக் கொஞ்சிட,
“போர் அடிக்குது” என்று சஞ்சு உதட்டைப் பிதுக்கினான்.
உத்ரா அவனை மடியில் அமர வைத்துக் கொண்டு, “போர் அடிக்குதா என் டார்லிங்க்கு. ம்ம் என்ன பண்ணலாம்” என்று சிறிது யோசிக்குமாறு பாவனை செய்து விட்டு, “நம்ம டாம் அண்ட் ஜெரி லைவ் ஷோ பாக்கலாமா” எனக் கேட்க, அவன் ஆர்வமாகி வேகமாகத் தலையாட்டினான்.
உத்ரா அஜயையும், சுஜியையும் அழைக்க, இருவரும் புரியாமல் என்ன என்று கேட்டனர்.
இருவரும் அன்று சண்டை வந்ததிலிருந்து பேசிக்கொள்ளவே இல்லை
இது எப்போதும் நடப்பது தான் சண்டை போட்டால் வருடத்தில் பாதி நாட்கள் பேசாமல் தான் இருப்பார்கள்.
உத்ரா, அஜயிடம், “பங்கு, நீ சுஜிகிட்ட ஏதோ சொல்லணும்னு சொன்னியே” என்று கேட்க,
அவன் குழப்பமாக, “இந்த லூசுகிட்ட நான் என்ன சொல்லப் போறேன்.” என்று சற்று சலித்தான்.
சுஜி, “நான் லூசுன்னா அப்போ இவன் யாராம்” என்று அவள் ஆரம்பிக்க,
“நான் லூசா நீ தான் லூசு உன் குடும்பமே லூசு” என்று அவன் தொடர்ந்தாள்.
“என் குடும்பத்தைப் பத்தி ஏதாவது பேசுன… நான் மனுஷியா இருக்க மாட்டேன்”
“இப்போ மட்டும் என்ன மனுஷியாவா இருக்க, ரத்த காட்டேரி” என்று அஜய் வம்பை வளர்க்க, அங்கிருந்த பொருளைத் தூக்கி ஒருவர் மேல் ஒருவர் எறிந்து சண்டை போடும் அளவிற்கு வளர்ந்தது.
சஞ்சு வாயைப் பொத்தி சிரித்து கொண்டு, கைத்தட்டி பார்த்துக்கொண்டிருந்தான் இவர்கள் சண்டையை.
மீரா சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தே விட்டாள்.
துருவ் தான் “ஸ்டாப் இட். நியூசன்ஸ். இதென்ன ஆஃபீஸ் ஆ? இல்ல மீன் மார்க்கெட் ஆ?” என்று கடிந்தான்.
உத்ரா தான், “ஓ மீன் மார்க்கெட்ல இப்படி தான் சண்டை போடுவாங்களா மிஸ்டர். துருவேந்திரன். எனக்குத் தெரியாம போச்சே” என்று அவனை வார, துருவ் அவளை அமைதியாக முறைத்தான்.
மீரா பே வென முழித்துக் கொண்டு அவளைப் பார்க்க, அஜயும் சுஜியும் தான் உத்ராவை முறைத்தனர்,
‘ இவள் போடுற மொக்கைல அவன் ப்ராஜெக்ட் ஏ வேணாம்னு ஆஸ்திரேலியா ஓடப் போறான்’ என்று…
பின், விதுன் வந்துவிட, மீட்டிங் ஹாலிற்கு சென்றார்கள்.
சஞ்சு இயல்பாய், துருவின் மடியில் அமர்வதை சிறு வியப்புடன் கண்ட உத்ராவிற்கு இவர்கள் என்ன உறவு என்று சிறிது குழப்பம் கூட வந்தது.
மீட்டிங் ஆரம்பித்துச் சிறிது நேரம் செல்ல, “சாரி கைஸ்… ஐ ஆம் லேட்” என்ற படி அர்ஜுன் உள்ளே வந்தான்.
அவனைப் பார்த்த மீரா, அதிர்ச்சியின் உச்சிக்கே சென்று உறைந்து போய் நிற்க, அர்ஜுனுக்கு தன் முன் நிற்பது அவள் தானா என்று நம்ப கூட முடியவில்லை.
அனைவரும், இவன் ஏன் இவளை இப்படி பார்க்குறான் என்று ரீதியில் குழம்ப, மீராவிற்கு கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டே இருந்தது.
அதனைப் பார்த்தவன், “என்னை அழுக வச்சுட்டு போயிட்டு நீ ஏன் மீரா அழகுற. நான் சொன்ன மாதிரி நீயே என்னைத் தேடி வந்துட்ட பார்த்தியா” என்று தலையைச் சாய்த்து கேட்க, அவள் உதட்டைக் கடித்துக் கொண்டு, அழுகையை அடக்க, சஞ்சு அவள் அழுவதைக் கண்டு மிரண்டு “அம்மா” என்றான்.
அதில் குழம்பிய அர்ஜுன், அவளை நோக்க, அவள் அவனைப் பார்க்காமல், வெளியில் சென்று விட்டாள். சஞ்சுவும் அவள் பின்னேயே செல்ல, உத்ரா, அஜய், சுஜிக்கு புரிந்து விட்டது. அவன் தேடி கொண்டிருந்த பெண் அவள் தான் என்று.
உத்ரா “டேய் லவர்ன்னு தானடா சொன்ன இந்த வரலாற்று சம்பவத்தை எப்படா நடத்துன?” என்று வாயில் கை வைத்து சஞ்சுவை நிநினைத்துக் கேட்க அர்ஜுன் பேந்த பேந்த முழித்தான்.
அஜய், “டேய் என்னடா இதெல்லாம். நீ இப்படி பண்ணிருப்பன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல” என்று திட்ட,
சுஜிதான் “ஹுக்கும். இவன் வேற. இவனும் லவ் பண்ணமாட்டான். பண்றவங்களையும் பண்ண விடமாட்டான். அன்னைக்கு அர்ஜுன் சொன்ன மாதிரி நம்மளும் இவன் பிரெண்ட்ஷிப் – அ கட் பண்ணுனா தான் கமிட் ஆவோமோ” என எண்ணினாள் தீவிர சிந்தனையுடன்.
அஜய், “நீ மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு வெளியில பேசிகிட்டு இருக்க பஜ்ஜி” என்று முறைத்ததில், அவள் அவனிடம் பேச வருவதற்குள்,
அர்ஜுன், “ஹையோ நிறுத்துறீங்களா. அவளை எனக்கு மூன்றரை வருஷமா தான் தெரியும். இதுல மூணு வருஷம் நான் அவளைப் பார்க்கவே இல்லை. அந்தப் பையனுக்கு 3 வயசு.தான் இருக்கும். அப்பறம் எப்படி டா” என்று பாவமாய் கேட்டான்.
உத்ரா, “ஆமா பங்குக் கணக்கு இடிக்குது” என்று யோசிக்க,
அதில் அர்ஜுன் தான் “அவள் ஆர்ஃபனேஜ்ல வளர்ந்தவள். அவளுக்கு அங்க குழந்தையைத் தத்து எடுத்து வளர்க்கணும்னு ஆசை. மே பி அந்தக் குழந்தையா இருக்கும்னு நினைக்கிறேன்” என்றவன், “அந்தக் குழந்தை யாரோடதா வேணும்னாலும் இருந்துகிட்டு போகட்டும். அந்தப் பையனுக்கு அவள் அம்மான்னா நான் தான் அப்பா” என்றான் திட்டவட்டமாக.
விதுன் “நமக்கு இவன் வச்சுட்டான் பெரிய ஆப்பா… இதை வீட்ல சொன்னா என்ன பூகம்பம் வெடிக்குமோ” என்று தனக்குள் மிரண்டுகொண்டிருந்தான்.
இவர்களிடம் பேசி விட்டு அர்ஜுன் வெளியில் செல்ல, துருவ் நடந்த எதனையும் கண்டு கொள்ளாமல், “ஷால் வி ஸ்டார்ட் தி மீட்டிங்” என்று கேட்க,
மற்றவர்கள் அவனை “டேய் இங்க சரித்திரத்தில பொறிக்க வேண்டிய சம்பவங்கள்லாம் நடந்துகிட்டு இருக்கு. நீ என்னடா மீட்டிங் ஆரம்பிப்போமான்னு கேட்குற” என்ற ரீதிரியில் பார்க்க,
உத்ரா துருவைக் கூர்மையாக நோக்கி “மீட்டிங் கான்செல்” என்றாள்.
மூவரும், ‘இப்போ இதுங்க நம்மளை போன்னு சொல்லுதுங்களா வான்னு சொல்லுதுங்களா’ என்று புரியாமல் இருவரையும் மாறி மாறி விழிக்க, துருவ் அவளை அழுத்தமான பார்வை பார்த்துக் கொண்டே ஃபைலை மூடிவைத்தான்.
மற்ற மூவரும் வெளியில் சென்றிட, உத்ரா, துருவிடம் “சோ மீராவோட லவர் அர்ஜுன் தான் அப்டின்னு உங்களுக்கு ஏற்கனவே தெரியும் அப்படித்தான…?” என்று கேட்க,
அவன் அவளை மெச்சிய பார்வை பார்த்தான்.
பின், “உங்களுக்கு எப்படி அவளோட லவர் அர்ஜுன் இங்க தான் இருக்கான்னு தெரியும்?” என்று மறுகேள்வி கேட்க,
அவன் “நான் இன்னும் ஃபர்ஸ்ட் கேட்ட கேள்விக்கே பதில் சொல்லல” என்றான் திமிராக.
அவனை இன்னும் ஆழமாக நோக்கியவள், “இப்போ நான் மூணாவதா கேட்குற கேள்விக்கும் சேர்த்து பதில் சொல்லுங்க மிஸ்டர் துருவேந்திரன். நீங்க எதுக்கு இங்க வந்துருக்கீங்க” என்றாள் பார்வையால் துளைத்து.
அதில் அவன் மெல்ல அவள் அருகில் வந்து, அவன் மூச்சுக்காற்று அவள்மேல் படும் அளவுக்கு அவளை நெருங்கி நின்று கொண்டு, அவள் விழிகளுக்குள் தன் விழியால் மின்சாரத்தைக் கடத்திட,
அவள் தான் அசையக்கூட தோன்றாமல், அவன் நெருக்கத்தில் உறைந்து நின்றிருந்தாள்.