710 views

தேவன் 3

 

“பாப்பா! இங்க எதுக்கு வந்த? உங்க அப்பாக்கு தெரிஞ்சா சத்தம் போட போறாரு.” என்ற தன் மகனுக்கு முகத்தை துடைக்க துண்டை எடுத்துக் கொடுத்த அன்னம் ,

 

“என்னப்பா  வீட்டுக்கு வந்த பிள்ளைய இப்படி பேசுற.” என்றார் வருத்தத்தோடு. 

 

“உங்க அண்ணனுக்கு தெரிஞ்சா பாப்பா தான் திட்டு வாங்கும்.” எதற்காக தான் பேசினோம் என்பதை அவன் எடுத்துக் கூறியதும் எழுந்து நின்றாள் யாழினி.

 

அவள் கிளம்ப போகிறாளோ! என்று அச்சம் கொண்டவர் வேகமாக மருமகளிடத்தில் நகர்ந்து, “யாழு அவன் இதோ தெரியாம சொல்லிட்டான் நீ உட்காருடா.”  குரலில் பரிதவிப்பு கூடியது.

 

“அத்தை நான் எங்கயும் போகல நீங்க  பதட்டப்படாதீங்க.” என்றவள் தேவநந்தனை முறைத்துக் கொண்டே வெளியில் சென்றாள்.

 

அவள் பேசியது ஒன்றாக இருக்க, நடப்பது ஒன்றாக இருப்பதால் அன்னம் தன் மகனை புரியாமல் பார்த்தார். அவனும் செல்பவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். 

 

யாழினி பின்னால் அன்னம் செல்வதை உணர்ந்தவன், “அம்மா! பாப்பா எங்கயும் போகாது பின்னாடி புளியமரத்து கிட்ட தான் இருக்கும் நான் பார்த்துக்குறேன் விடுங்க.” என்றவன் கால்கள் பின்வாசல் நோக்கி நகர்ந்தது.

 

அவன் சொன்னது போல் புளிய மரத்திற்கு கீழ் நின்றிருந்தவள் அவன் வருகையை அறிந்து, “மாமா இங்க ஒரு ஊஞ்சல் கட்டுங்க.” எதுவும் நடக்காதது போல் கூறினாள்.

 

“பாப்பா உன்ன கிளம்ப சொன்னேன்.” 

 

“எங்க மாமா” என்றவளின் பார்வை மரத்தை ஆராய்ந்து கொண்டிருந்தது.

 

“விளையாட்டுக்கு நேரமில்ல பாப்பா உங்க அப்பா வர்றதுக்குள்ள வீடு போய் சேரு.” தேவநந்தன் குரலில் வித்தியாசத்தை உணர்ந்தவள் திரும்பினாள்.

 

“சொன்னா புரிஞ்சுக்க பாப்பா ஏற்கனவே அவரு ரொம்ப கோவத்துல இருக்காரு. எங்க மேல இருக்க கோபத்தையும் சேர்த்து உன்கிட்ட காட்டிட போறாரு.” என்றவன் அருகில் சென்றவள்,

 

“இதுக்கு தான் மாமா இந்த ஊரே எனக்கு வேணாம்னு சொல்றேன். இங்க நடக்குற எதுவும் பிடிக்கல. அதை விட நீ இந்த மாதிரி பேசுறது சுத்தமா பிடிக்கல.” என்றாள் அவனை நேராக பார்த்து.

 

“இதான் பாப்பா நம்ம வாழ்க்கை. மனசுல என்ன கோபம் இருந்தாலும் அதை வெளியில காட்ட முடியாது.”

 

“ஏன் மாமா” உடனே இடை வெட்டினாள் அவனை.

 

“எதிர்ல நிற்கிற ஆள் என் மாமா.” 

 

“அவர் உன்னை அப்படி பார்க்கலயே மாமா.” 

 

“அதுக்காக உறவு இல்லன்னு ஆகிடுமா பாப்பா.” என்றவன் முகத்தில் தெரியும் சோகங்களை உணர்ந்தவள் பேச்சை மாற்ற எண்ணினாள்.

 

“எனக்கு இப்ப இங்க ஊஞ்சல் வேணும் மாமா. கட்டு!” என்று கட்டளை இட, அவன் மறுத்து நின்றான்.

 

“மாம்மாமா” என்று வலது காலை நிலத்தில் உதறி பிடிவாதம் பிடித்தவள் புளிய மரத்தின் அடியில் உம்மென்று அமர்ந்து கொண்டாள். அவன் இரு முறை அழைத்தும் திரும்பாதவள் அப்படியே அமர்ந்திருக்க, உள்ளே சென்று வந்தான் தேவநந்தன். 

 

 

அவன் உள்ளே சென்றதும் துள்ளி குதித்து எழுந்து நின்றவள் தயாராக இருந்தாள் ஊஞ்சல்‌ ஆட. அவள் எண்ணம் போல் கையில் அன்னம் புடவையோடு வந்தவன் குழந்தையை தாலாட்டும் தொட்டிலாக இல்லாமல் குமரி அமர்ந்து ஆடும் ஊஞ்சலை கட்டினான் நடுவில் இரு மரக்கட்டைகளை வைத்து.

 

 

“இதான் என் மாமா.” என்றவள் ஒய்யாரமாக அதில் அமர்ந்துக் கொள்ள, அவளை முறைத்துக் கொண்டே பின் நின்றான் தேவநந்தன்.

 

 

அவனின் முறைப்பை உணர்ந்தவள் பின்னால் முகத்தை திருப்பி கண் சிமிட்ட, “எத்தனை வயசானாலும் இந்த பிடிவாதம் மட்டும் உனக்கு இன்னும் போகல பாப்பா.” என்றவன் கைகள் ஊஞ்சலை ஆட்டத் துவங்கியது.

 

“அப்படி என்ன மாமா எனக்கு வயசு ஆயிடுச்சு. இப்போ தான் இருபத்தி ரெண்டு ஆகப்போகுது. உன்ன விட நாலு வயசு சின்ன புள்ள. நீயே இன்னும் குழந்தை மாதிரி இருக்கும் போது எனக்கு என்ன.” என்றவள் வார்த்தையில் ஊஞ்சலை சுழற்றி தன்னை பார்க்குமாறு திருப்பினான்.

 

திடீரென்று திருப்பியதில் அதிர்ந்து விழ போனவளை விழாமல் பிடித்துக் கொண்டவன், “யாரு நான் குழந்தையா?.” என்றான் முறைப்பை விடாமல்.

 

“ம்ம்!” பதில் ஏதும் சொல்லாமல் ஓசையை மட்டும் அவனிடம் அனுப்பியவள் சிரிக்க, “எங்க அம்மா கேட்டா சிரிப்பாங்க.” என்றான்.

 

 

ஊஞ்சலில் இருந்து குதித்தவள், “அத்தை இங்க வாங்க.” என்று சத்தமிட்டாள்.

 

வெளியில் ஓடி வந்தவர் என்னவென்று விசாரிக்க, “மாமா குழந்தை மாதிரி தான இருக்காரு.” 

என்று தேவநந்தன் தாடையைப் பிடித்துக் காட்டி கேட்க, அவர் தன் மகனை சிரிப்போடு பார்த்தார்.

 

“என்ன அத்தை சிரிக்கிறீங்க! பதில் சொல்லுங்க மாமா உங்களுக்கு குழந்தை தான.” மீண்டும் வினாவை அவரிடம் கொடுக்க,

 

“இப்ப மட்டும் இல்ல எப்பவும் என் மகன் எனக்கு குழந்தை தான்.” பேசி முடிக்கும் வரை மகனிடம் இருந்த பார்வை முடித்ததும் மருமகள் மீது தாவியது.

 

‘பார்த்தியா’ என்பது போல் கண்களால் சைகை செய்தவள் தலையில் கொட்டியவன், 

 

“அது எங்க அம்மாக்கு. உனக்கு எப்படி நான் குழந்தை மாதிரி தெரியுறேன்.” என்றவனை கண்டு இப்போது முறைப்பது யாழினியின் முறை.

 

 

“என்னப்பா பிள்ளை தலையில இப்படி கொட்டிட்ட. வலிக்க போகுது.” அன்னம் மருமகளுக்கு வலிக்காமல் இருக்க தலையை தேய்த்துக் கொண்டிருந்தார்.

 

“அதெல்லாம் அப்படித்தான். உனக்கு எல்லாம் சொன்னா புரியாது மாமா. புரிஞ்சிக்கிற வயச நீ எட்டும் போது புரிய வைக்கிறேன்.” என்றாள் பெரிய மனிதியாக.

 

அவள் வார்த்தையில் அன்னம் மகனைப் பார்த்து கேலி சிரிப்பை உதிர்க்க, அவனோ பெண்கள் இருவரையும் முறைத்தான். இவர்கள் சம்பாஷனைகளுக்கு நடுவில் ஆடு தன் இருப்பை காட்டிக் கொள்ள சத்தமிட,

 

“சித்தப்பா வேலையா” என்றான் அவரை நன்கு அறிந்து.

 

“எத்தனை தடவை சொன்னாலும் நீயும் கேட்க மாட்ட. உன் சித்தப்பனும் கேட்க மாட்டாரு. உங்களுக்கு நடுவுல இந்த ஆடுங்க தான் அவஸ்தப்படுது.” என்றவர் மகனுக்காக ஆட்டை பலி கொடுத்து சமைக்க சென்றார்.

 

அவர் சென்றதும் மீண்டும் ஊஞ்சலில் அமர்ந்தவள் ஆட்டி விடும்படி செய்கை செய்ய, மாமன் மகளை முறைத்தாலும் அவள் ஆசையை நிறைவேற்றினான்.

 

ஒரு மணி நேரம் கடந்ததே தெரியவில்லை இருவருக்கும். சமையல் செய்து முடித்தவர் இருவரையும் சாப்பிட அழைக்க, குளித்து விட்டு வருவதாக தேவநந்தன் நகர்ந்தான் அவ்விடம் விட்டு.

 

உள்ளே வந்த யாழினி மீண்டும் தன் அத்தையை பார்வையால் எச்சரித்து, அவளுக்காக போட்டு வைத்திருந்த பாயை தூரம் வைத்து விட்டு தரையில் அமர்ந்தாள். 

 

அவள் சாப்பிடாமல் தேவநந்தனுக்காக காத்திருக்க, பதினைந்து நிமிடத்தில் வந்தவன் அவளோடு அமர்ந்தான். இருவருக்கும் சாப்பாட்டை போட்ட அன்னம் அடுத்து பரிமாறுவதற்காக பக்கத்திலேயே அமர, “நீங்க சாப்பிடலையா அத்தை.” வாய் முழுக்க சாதத்தை அடைத்துக் கொண்டு கேட்டாள்.

 

“நீ சாப்பிடு யாழு நான் அப்புறம் சாப்பிடுறேன்.” என்றவரை கட்டாயப்படுத்தி தங்களோடு சாப்பிட வைத்தாள்.

 

தனக்காக அங்கு ஒரு சமையல் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை முழுதும் மறந்தவள் அத்தை கை மனதில் ஒரு வெட்டு வெட்டி முடிக்க, இன்னும் அள்ளி வைத்தார் தொடை கறிகளை அவளுக்கு.

 

“வேண்டாம்” என்று வாய் மறுத்தாலும் கை அதை  எடுத்துக் கொண்டது. அவள் செய்கைகளை கண்டு புன்னகைத்த தேவநந்தனை பார்த்தவள்,  

 

“அத்தை பாருங்க!  மாமா கேலி பண்ணுது.” என்று அத்தையிடம் புகார் வாசிக்கும் நேரம் புரை ஏறியது.

 

 

நாசியில் அவை வேகமாக ஊடுருவ இரும்ப ஆரம்பித்தவள் கண்ணெல்லாம் கலங்கி விட்டது. வேகமாக மருமகளின் தலையைத் தட்ட சென்ற அன்னம் அப்படியே தன் செயலை நிறுத்திக் கொண்டார் மகனின் செயலை பார்த்து.

 

தலையை பொறுமையாக தட்டியவன் அவளிடம் நிதானம் வரத் துவங்கியதும் குடிக்க தண்ணீர் கொடுத்தான். இருப்பினும் இருமல் நிறுத்தாமல் வந்து கொண்டிருக்க, தொண்டைக்குழியில் இருந்து நெஞ்சுக்கு மேல் வரை இருக்கும் பகுதியை நீவி விட்டு, “அவ்ளோ தான் பாப்பா போய்டுச்சு”  என்று குழந்தையை சமாதானப்படுத்துவது போல் படுத்திக் கொண்டிருந்தான்.

 

சில நிமிடங்கள் கழித்து அதிலிருந்து தெளிந்தவள் அவன் முகத்தை நோக்கினாள். இருமும் போது வாயில் இருக்கும் சாப்பாடு சில அவன் முகத்தில் பட்டிருந்தது.  வேகமாக அதை துடைத்து விட்டவள், “சாரி மாமா” என்றாள் அவசரமாக.

 

 

தலையை வருடி அவளை அமைதி படுத்தியவன், “போதும் பாப்பா இதுக்கு மேல வேணாம்.” என்று சாப்பாட்டை ஒதுக்கி வைத்தான்.

 

சம்மதமாக தலை அசைத்தவளின் பக்கத்தில் கை கழுவ தண்ணீர் வைத்தார் அன்னம்.  அவள் கை கழுவிய கையோடு தேவநந்தனும் கை கழுவ முயல, “நீ சாப்பிடு மாமா.” என்றாள்.

 

“எனக்கும் போதும் பாப்பா.” என்றவன் அவளை காத்தாட வெளியில் அமர வைத்தான். .

 

 

தன்னால் தான் அவன் சரியாக சாப்பிடவில்லை என்பதை உணர்ந்து யாழினி கவலை கொள்ள, “யாழு அப்பா வந்துட்டாருடி சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பு” என்றவாறு வேகமாக உள்ளே வந்தார் பரிமளம்.

 

“வந்தா வரட்டு ம்மா அதுக்கு எதுக்கு நீ இப்போ ஓட்டப்பந்தயம் வச்சிக்கிட்டு இருக்க.” என சாதாரணமாக பேசும் மகளை முறைத்தவர்,

 

“உனக்கு என்ன நாலு நாள் கழிச்சு நீ படிக்க போறன்னு போயிடுவ. உங்க அப்பா இவங்க ரெண்டு பேரையும் தான் ஏசிக்கிட்டு இருப்பாரு. இன்னும் ஒரு வாரத்துல குலதெய்வ திருவிழா வேற வரப்போகுது உன்னால எந்த பிரச்சனையும் வேணாம் யாழு.” என்றவருக்கு ஏற்றார் போல் அன்னமும் பரிதவிப்போடு மருமகளை பார்க்க, பெருமூச்சு விட்டவள் மாமனை ஒரு முறை பார்த்து விட்டு நகர்ந்தாள்.

 

 

அவர்கள் சென்றதும் நினைவெல்லாம் கடந்த ஆண்டு குலதெய்வ திருவிழாவில் நின்றது தாய் மகன் இருவருக்கும். கோபாலன் வேறு சமூகத்தை சார்ந்தவர். அதுதான் சண்முகம் காதலை மறுக்க முதல் காரணம். அவர்கள் வழக்கத்தில் வேறு சமூகத்தை சார்ந்தவர்களை திருமணம் செய்தால் குலதெய்வ கோவிலில் அனுமதிக்க மாட்டார்கள். கோவிலே சண்முகத்தோடது என்று இருக்க அன்னம் செய்த செயலை ஏற்க முடியவில்லை அவரால். 

 

எங்கு தன்னையும் அன்னம் திருமணத்தை காரணம் காட்டி ஒதுக்கி வைத்து விடுவார்களோ என்ற பயத்தில் தான் இத்தனை வருடமாக அவரும் ஒதுக்கி வைத்திருக்கிறார் தங்கையை. 

 

வரிப்பணம் கட்டுவது என்பது அவர்கள் வழக்கத்தில் ஒர் கௌரவம். அவை திருமணம் ஆனதிலிருந்து அன்னத்திற்கு கிடைக்கவில்லை.  அவற்றில் கூட அவர் மனம் பெரிதாக வருந்திக் கொள்ளவில்லை. என்னமோ செய்யக்கூடாத தவறை செய்து விட்டவர்கள் போல் அவரை ஒதுக்கி வைப்பதை தான் ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை. 

 

வழக்கம் போல் தன் நிலையை எண்ணி பெருமூச்சு விட்டவர் அமைதியாக வீட்டிற்குள் சென்று விட, இந்த வருடமாவது அன்னையை கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று உறுதி எடுத்து தான் தேவநந்தன்.

 

 

அம்மு இளையாள்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
16
+1
18
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *