621 views

அத்தியாயம் 3 ❣️

” எப்பவும் டைம்க்கு வர்ற நீங்க ! ஏன் இன்னைக்கு இவ்ளோ லேட் ஆக வந்து இருக்கிங்க  கோவர்த்தனன் ? ” அவனது முதலாளி கடுமையான முகத்துடன் கேட்டார்.

” சாரி சார். எப்பவும் நான் நேரத்துக்கு வந்துருவேன் , இன்னைக்கு தான் லேட் ஆக  வந்தேன்னு நீங்களே சொன்னிங்க.

அதையே தான் நானும் சொல்றேன். நான் லேட் ஆக வந்ததுக்கு ரீசன் இருக்கு.ஆனால், அதை சொல்ல தான் முடியாத நிலைமை.சோ ப்ளீஸ் சார் இந்த ஒரு தடவை எக்ஸ்க்யூஸ் குடுங்க !” 

அவனுக்குப் பொய் கூறும் பழக்கம் அவ்வளவாக கிடையாது.

அதனாலேயே அவனது முதலாளியும் இதற்கு மேல் கேள்வி கேட்டுக் குடையாமல் , 

” சரி இனிமே இப்படி இருக்காத ” என்று எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தார்.

வெளியே வந்த கோவர்த்தனன் தனது இடத்திற்குச் சென்று அங்கே கர்ம சிரத்தையாக வேலை செய்து கொண்டு இருந்த நண்பன் ஹரீஷ்ஷின் தோளில் தட்டி விட்டு தன் இருக்கையில் அமர்ந்தான்.

” டேய் கோவர்த்தனா ! எனக்கு முன்னாடி வந்து உக்காந்து வெறித்தனமா வேலை பாத்துட்டு இருப்பியே ! இப்போ என்ன ஆச்சு ? கடமை தவறிட்டியேடா நண்பா ! ” 

தன்னைக் கலாய்த்த ஹரீஷை முறைத்தான் .

கோவர்த்தனன் , ” ஆமா கடமை தவறிட்டேன்.அதை சரி செய்ய தான் நீங்க சீக்கிரமே வந்தீங்களோ ? ” நக்கலாகக் கேட்டான்.

” இல்லடா. நானே லேட்டுத் தான்.நீ என்ன விட லேட் ! அதைத் தான் நம்ப முடியலன்னு கேட்டேன். கோவிச்சுக்கிறப் பாத்தியா ? ” என்று அவனைப் பார்த்து அசடு வழிந்தான் ஹரீஷ்.

” நான் எங்கடா கோவிச்சுக்கிட்டேன் ? ஆமா நீ ஏன் இப்படி என்றைக்கும் இல்லாம இன்னைக்கு ரொம்ப தெழில் பக்தியைக் காமிக்குற ? வீட்ல சாப்பாட்டுல அம்மா ஸ்பெஷல்லா எதாவது இன்க்ரிடியன்ட் போட்டு இருந்தாங்களா ? “

அவன் கலாய்ப்பதும் நியாயம் தான். ஹரீஷ் என்றும் இல்லாமல் இன்றோ இத்தனைக் கடமையாக வேலை பார்க்கிறான் என்றால் அதில் ஏதோ ஒரு விஷயம் உள்ளது என்று நினைத்துக் கேட்டான் கோவர்த்தனன்.

” ஒரு கடமையும் இல்லை.நீ இல்லாம போர் அடிச்சுருச்சு.சும்மா இருக்கறது கூட இப்போ எல்லாம் ரொம்ப கஷ்டமான வேலையா இருக்கு.அதை விட கஷ்டம் நான் பேசுறதை எல்லாம் கேட்டுக்கிட்டே வேலை பார்க்குற நீ இல்லன்னதும் மனசக் கல்லாக்கிக்கிட்டு , வொர்க் பண்ணிட்டு இருக்கேன்டா ” 

கணிணியைப் பார்த்துக் கொண்டே நண்பன் கூறுவதைக் கேட்டுக் கொண்டு இருந்தவன் ஹரீஷ் கூறிய அந்த இறுதி வாக்கியத்தைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தான்.

சோகமே உருவாக , கப்பல் கவிழ்ந்ததை நினைத்துக் கவலைப்படுபவன் போல இருந்தான் ஹரீஷ்.

தாமதிக்காமல் பக்கென்று சிரித்து விட்டான் கோவர்த்தனன்.உடன் பணிபுரியும் அனைவரும் இவனைத் திரும்பிப் பார்த்தனர்.

” டேய் இதை உன்கிட்ட மட்டும் தானே சொன்னேன் . இப்படி சிரிச்சு மாட்டி விட்டு எல்லாருக்கும் சொல்ல வைக்குற முடிவு ல இருக்கியா  ?  நெவர் !  நான் தீவிரவாதியா வேலைப்  பாக்கப் போறேன்” என்று கணிணிப் பக்கம் திரும்பினான்.

” என்னது தீவிரவாதியா வேலைப் பாக்கப் போறியா ? !” என்று அதற்கும் வாய் விட்டுச் சிரித்தான் கோவர்த்தனன்.

” அட … ச்ச… டேய் நான் தீவிரமா வேலைப் பாக்கப் போறேன்.லன்ச் டைம் வர்ற வரைக்கும் என்னை டிஸ்டர்ப் பண்ணாத.இன்னொரு விஷயத்தையும் கேட்டுக்கோ என் வொர்க்கிங் ஸ்பீட் பார்த்துக் கண்ணு வச்சிடாத. முடிஞ்சா அட்லீஸ்ட் என் ஸ்பீடுக்கு வர முயற்சி பண்ணுடா ” 

வாயில் கை வைத்து அதிர்ந்த கோவர்த்தனன் , ” யப்பா ! டேய் !ஒன் ஹவர் தான் லேட் ஆக வந்தேன்.அதுக்குள்ள உனக்கு யாரு சூனியம் வச்சது ? ” என்று அவனைக் கேட்டான்.

” நீ பார்த்துட்டே இரு.உன்னை விட ஸ்பீட் ஆக வேலைப் பார்த்துக் காட்றேன் ” என்று சத்தியம் எல்லாம் செய்து வேலை பார்த்தான்.

” காட்டுத்தனமா வேலை பார்க்கிறானே ! என் ஹரீஷை இப்படி பண்ணவங்களைக் கண்டுபிடிச்சுப் பழி வாங்குறேன் பாருங்கடா ! ” என அவனும்   சபதம் போட்டு புன்னகைத்துக் கொண்டே வேலையைத் தொடர்ந்தான்.

இருவரும் என்ன தான் கலாய்த்துக் கொண்டாலும் வேலை நேரத்தில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு விரைவிலேயே தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்து முடித்து விடுவர்.

அவர்களது பேச்சுவார்த்தை அக்கம் பக்கத்தில் வேலை பார்ப்பவர்களுக்கும் கேட்க வாய்ப்பு உள்ளதால் அவர்களும் அதை ரசித்த வண்ணமே வேலையைச் செய்வர்.

மணி ஒன்றைத் தாண்டி இருந்த சமயத்தில் , தீயாய் வேலை பார்த்துக் கொண்டு இருந்த ஹரீஷ் பக்கவாட்டில் திரும்பி நண்பனைப் பார்த்தான்.

கோவர்த்தனன் ஒரு முக்கியமான மெயிலைப் பார்வையிட்டுக் கொண்டு இருந்தான்.

” ஸ்ஸ்… நண்பா ” என்று பசியில் பலவீனமான குரலில் அவனை அழைத்தான். 

” என்னடா காட்டுத்தீ ஹரீஷ் !” என்று கிண்டல் செய்தான் கோவர்த்தனன்.

” காட்டுத்தீ ஹரீஷா ? இதெல்லாம் ரொம்ப ஓவர்டா ! ” பசி வயிற்றைக் கிள்ளிய போதும் அவன் நண்பனைத் திட்டத் தவறவில்லை.

“வேற எப்படி சொல்லலாம் ? ஹான் திடீர் தீவிரவாதி ! இது நல்லா இருக்குல்ல நண்பா ! ” வெடிச் சிரிப்பு சிரித்து விட்டனர் அருகில் இருந்த இரண்டு பேர்.

அவர்களைத் திரும்பிப் பார்த்து முறைத்த ஹரீஷ் , ” காதை மட்டும் பக்கத்து ஊர் வரைக்கும் வைங்க.வேலையைப் பாத்துடாதீங்க ! ” என்று திட்டினான்.

சிரித்தவர்களில் ஒருவனோ ,

“லன்ச் டைம்ப்பா. இப்போ கூட வேலைப் பார்க்குற அளவுக்கு உன்னை மாதிரி கடமை கண்ணாயிரம் இல்லையேப்பா !” அவர்களும் இவனுக்கு அடைமொழி கெடுத்தனர்.

” லன்ச் டைம்ன்னு தெரியுதுல்ல போய் சாப்பிடுங்கய்யா.இவன் தான் அடைமொழி வச்சுக் கொல்றான்னா நீங்களும் இதுதான்டா சாக்குன்னு வந்துடறது ! போங்கய்யா ” என்று துரத்தி விட்டான்.

” ம் சரி. எப்படியும் கோவர்த்தனன் வேலையை முடிக்கிற வரைக்கும் வர மாட்டான். நீ இங்கயே இருந்து தீயா வேலையைப் பாரு ஹரீஷ்  ” அவனை வம்பிழுத்து விட்டுச் சென்றனர்.

” நண்பா அவனுங்களைப் பாருடா. கரெக்ட்டா ஒரு மணி ஆனதும் சாப்பிடக் கிளம்பிட்டாங்க.நீ ஏன்டா இன்னும் வேலைப் பாக்குற ? சாப்பிடலாம் வாடா ” 

கணிணியே கதியென்று இருந்த கோவர்த்தனன் புன்னகையுடன் நண்பனைப் பார்த்து , ” என்னடா இப்படி சொல்ற ? இப்போவே சாப்பிடக் கூப்பிட்ற ?  தீவிரவாதியா வேலைப் பாக்கலயா ? ” 

பசியின் தாக்கம் ஹரீஷின் முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்தாலும் அவனைக் கலாய்க்கும் மனநிலையில் தான் இருந்தான்.

” தீவிரவாதியா ஆகி ஜெயிலுக்குப் போற எண்ணம் எனக்கு இல்லை.அதனால் நேர்மையான குடிமகன் ஆக இருக்கனும்னு ஆசைப்பட்றேன். சோ இப்போ மணி ஒன்னு.லன்ச் டைம்  அந்த நேரத்தில் சாப்பிட மட்டுமே செய்யனும். அது மட்டும் இல்ல உன்னையும் திருத்தனும்னு கொள்கை வச்சுருக்கேன். எழுந்து வா நண்பா ! ” 

பெரிய தத்துவ ஞானியாக முழுவதும் மாறி இருந்த ஹரீஷ்ஷின் வசனங்கள் யாவும் கோவர்த்தனனின் முகத்தில் சிரிப்பை வரவழைத்தது.

” உடனே வர்றேன் நண்பா ! ” கணிணியை அணைத்து விட்டு எழுந்து அவனுடன் சென்றான்.

” வேகமா வாடா ! ” என்று அங்கிருந்த இருக்கையில் அமரச் சொல்லி தானும் வேறொரு இருக்கையில் அமர்ந்தான் ஹரீஷ்.

அங்கு பணிபுரியும் ஊழியர்கள் உணவு அருந்தும் அறையில் ஹரீஷை சிறிது நேரத்திற்கு முன்பு கலாய்த்துச் சென்ற அந்த இருவரும் அமர்ந்து உணவுண்டு கொண்டு இருந்தனர்.

” நானும் சாப்பிட வந்துட்டேன்ல ! ” என்று அவர்களை வேறுப்பேற்றிப் பார்த்தான்.

” ஹரீஷ் சும்மா இருடா. ஆமா இந்த போட்டெட்டோ ஃப்ரை நல்லா இருக்கே ! மைதிலி செஞ்சாளா ? ” என்று ஹரீஷிடம் அவனது தங்கையைப் பற்றிக் கேட்டான்.

” இல்லடா.அவ மதியம் தான் சமைப்பா.காலையில் அம்மா சமையல் தான்.அவங்க தான் இந்த ஃப்ரை செஞ்சாங்க ” 

மைதிலி ஹரீஷின் உடன் பிறந்த தங்கை,  கல்லூரியில்  கணினி அறிவியல் இரண்டாவது வருடம் படித்துக் கொண்டு இருக்கிறாள்.

” ஓகோ .. டேஸ்ட் நல்லா இருக்குடா .நான் சொன்னேன்னு அம்மாகிட்ட சொல்லிடு ” 

என்று கூறிக்கொண்டு இன்னும் கொஞ்சம் பொரியலை எடுத்து வைத்துக் கொண்டான்.

” சொல்றேன்டா.அடுத்த தடவை உனக்கும் சேர்த்து வச்சுடுவாங்க ” 

அரை மணிநேரம் கடந்த நிலையில் சாப்பிட்டு முடித்தவர்கள் தங்கள் இடத்திற்கு வந்தார்கள்.

” டேய் உனக்கு ஒரு ஃபைல் அனுப்பி இருக்கேன் பாரு.அதை ரெடி பண்ணிக் குடு. இதை இன்னைக்கு சப்மிட் பண்ணனும்.முடிஞ்சுட்டா வீட்டுக்கு சீக்கிரம் போயிடலாம் ” என்றதும் ஹரீஷ் , ” முடிச்சுடலாம்டா. ஆல்ரெடி ஒரு தடவை இதே மாதிரி ஃபைல் ரெடி பண்ணி இருக்கோம்ல ! நான் முடிஞ்சுட்டு சொல்றேன். நீ எடிட் பண்ணிக் குடுத்துரு “

வேலையைத் துரிதமாகச் செய்து முடித்து , அதை உரிய இடத்தில்  சமர்ப்பித்தும் விட்டனர்.

ஏழு மணிக்கு முன்னரே வீட்டிற்குச் செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் குஷியாக தத்தமது இல்லத்தை அடைந்தனர்.

அப்போது தான் கோவர்த்தனனுக்கு ஞாபகம் வந்தது.அன்று நடந்த விஷயத்தை நண்பன் ஹரீஷிடம் பகிர்ந்து கொள்ளவில்லையே ! 

சரி நாளைக்கு சொல்லிடலாம் என்று தன் தாயிடம் வந்தான்.

” அம்மா நான் வீட்டுக்கு வந்துட்டேன் ” என்று உற்சாகமாக வந்த மகனைப் பார்த்து அவருக்கும் அவனது உற்சாகம் தொற்றிக் கொண்டது.

” கோவர்த்தனா வொர்க் டென்ஷனே இல்லாம இருக்கியே ! ஹரீஷ் காமெடி எதுவும் பண்ணானா ? ” 

அவனின் தாய் சுமதி அவனிடம் கேட்டவாறே தேநீர் தயாரித்தார்.

” அதே தான்மா ! அவனோட இன்னைக்கு செம்ம கலகலப்பா இருந்துச்சு.அதைச் சொல்றேன் ” 

சமையலறையில் இருந்து வெளி வந்த தாயார் கொடுத்த தேநீர்க் கோப்பையை வாங்கியவன் அவரிடம் ஹரீஷ் காலையில் செய்தவற்றைக் கூறலானான்.

” பட்டப்பேர் எல்லாம் வேற லெவல்ல இருக்கேடா ” அதைக்கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார் சுமதி.

தாயுடன் பேசிச் சிரித்து இரவு உணவையும் ஒரு பிடி பிடித்து விட்டு உறங்கப் போனான் கோவர்த்தனன்.

சுமதியும் ஹாலில் சிறியதாக மாட்டி வைக்கப்பட்டு இருந்த அவரது கணவர் தென்னவனைப் பார்த்துக் கும்பிட்டு விட்டுத் தூங்கச் சென்றார்.

இங்கு , தங்கையின் தலையை மெல்லத் தன் கைகளால் கோதி விட்டுக் கொண்டே யோசனையில் ஆழ்ந்து இருந்தாள் இளந்தளிர்.

சுபாஷினியோ எதையும் நினைக்காமல் நிம்மதியாக உறங்கிக் கொண்டு இருந்தாள்.ஆனால் இளந்தளிருக்கோ ,

 ‘ கோவர்த்தனன் மட்டும் இவளை மருத்துவமனை சேர்க்காமல் இருந்திருந்தால் , இவளது நிலை என்னவாகி இருக்கும் ? அவனிடம் கடுமைக் காட்டிப் பேசியது தவறா தானோ ‘ என்று பலமுறை சிந்தித்துக் கொண்டு இருந்தாள்.

நாளை வேலைக்குப் போக வேண்டும் என்பது ஞாபகம் வர அவளும் துயில் கொண்டாள்.

– தொடரும் 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *