706 views
அத்தியாயம் 3
” தாங்க்ஸ்” என்றாள் அதிரூபா பிரித்வியிடம்.
” எதுக்கு?”
“அதான் எங்க வீட்டாளுங்க கிட்ட நல்லா பேசினதுக்கு” என்று அவனிடம் மெல்லிய குரலில் கூறியவளைப் பார்த்து சிரித்தான்.
பிறகு, “உனக்கு மெதுவாகப் பேச கூட வருமா?” எனவும்,
“கொஞ்சம் இடத்தைக் குடுத்தா மடத்தைப் பிடிச்சிடுவியே! கிண்டல் பண்ணாமல் தூங்கு” என்றாள்.
“இங்கே வா ” என்று அவளை அருகில் அழைத்தான் பிரித்வி.
கட்டிலில் அவனது அருகில் சென்றவளின் கைகளில் அழுத்தமாக முத்தமிட்டு விட்டு உறங்கப் போய் விட்டான்.
இருவருக்கும் இடையே உள்ள காதலை அவ்வப்போது பிரித்வி அவளுக்குத் தெரிவித்துக் கொண்டே இருக்க, அதை நம்புவதா? வேண்டாமா? என்ற நிலையில் இருந்தாள் அதிரூபா.
அடுத்து வந்த தினங்களில் அதிரூபா தனது இல்லத்திற்குச் செல்வதற்காகத் தயாராகிக் கொண்டு இருந்தாள்.
ஆகாய நீல வர்ணம் கொண்ட புடவை உடுத்தி இருந்தவள் அதன் மடிப்பை சரி செய்து முடித்து விட்டு, ட்ரஸ்ஸிங் டேபிளில் உட்கார்ந்து தனது கண்களுக்கு மை தீட்டிக் கொண்டு இருந்தாள்.
வேட்டி, சட்டையின் கையை மடித்துக் கொண்டே அங்கே வந்த பிரித்வி,
“உன் வீட்டுக்குப் போறதால் இவ்ளோ டைம் எடுத்து மேக்கப் போடாமல் கொஞ்சம் சீக்கிரம் வர்றியா?” என்று அவளை வம்புக்கு இழுத்தான்.
“அதனால தான் நீ கம்மியா மேக்கப் போட்ருக்கியா?” என்று இவளும் சலிக்காமல் அவனிடம் கேட்டாள்.
“ப்ச்…ஹேய்…!” இவன் ஆரம்பிப்பதற்குள்,
“லிசன்… நீ என்கிட்டப் பேசுற மாதிரி தான் நானும் பேசுவேன்.சோ, ஒழுங்கா பேச கத்துக்கோ”
“இதையே ஏன் சொல்லிக்கிட்டே இருக்கிற? எத்தனை தடவை தான் சொல்லுவா?”
” நீயே யோசி…! நீ பண்றதை தான் நானும் பண்றேன். அதை உன்னால ஏத்துக்க முடியலனா நீ அதை எனக்குப் பண்ணக் கூடாதுல்ல?”
என்று அவள் வாதம் செய்யவும்,
“ஆர்க்யூமெண்ட் பண்ண டைம் இல்லை. கிளம்பலாம்” அவளை அழைத்து விட்டு அமைதியாக நின்று கொண்டான் பிரித்வி.
அவளோ,”பதிலுக்குப் பதில் பேசினா தான் உன்னை அமைதியாக்க முடியும் போல?” கேட்டுக் கொண்டே தனது அலங்காரம் சரியாக உள்ளதா? என்பதைப் பார்வையிட்டு விட்டே அவனுடன் சென்றாள்.
கீழேயிருந்தவர்கள் பிரித்வி மற்றும் அதிரூபா வந்ததும், ” நல்ல நேரத்துக்குக் கிளம்புவோம் ” என்று அப்போதைய நேரத்தைப் பார்த்து விட்டு கிளம்பினர்.
“ரூபா, லயா நீங்க ரெண்டு பேரும் என் கூட பின் சீட்ல வந்து உக்காருங்க ” என்று அவர்களை அழைத்து தன்னருகே அமர்த்திக் கொண்டார்.
பிரித்வி முன் சீட்டில் அமர்ந்து கொள்ள, மகேஸ்வரன் காரை இயக்கினார்.
பிரித்விக்கு முன்னால் இருந்த கண்ணாடியில் மனைவியின் பிம்பம் தெரியவும், அதை முறைத்துப் பார்க்கலானான்.
அதிரூபா நிமிர்ந்து பார்த்தால் இவன் முகத்தைத் திருப்பிக் கொள்வான்.
அதிரூபாவின் இல்லம் வந்ததும் இவர்கள் இறங்கிச் செல்ல, வாயிலில் நின்று வரவேற்றனர் தீனதயாளும், கிருஷ்ணவேணியும்.
“அதிம்மா…!” மகளைப் புன்னகையுடன் வரவேற்றவர்,
“வாங்க மாப்பிள்ளை… சம்பந்தி உள்ள வாங்க… லயா ம்மா வாடா” என்று அவர்களை உள்ளே அழைத்தனர்.
பிரித்வியோ மனைவியின் அருகிலேயே அமர்ந்து கொண்டு அவளிடம்,
“எப்போ சாப்பாடு போடுவாங்க?” என்று கேட்க,
“இருங்க.கேட்டுட்டு வர்றேன்” என அம்மாவிடம் சென்று விட்டாள் அதிரூபா.
அதிரூபாவின் இல்லம் ஆதலால் இங்கு லயா வீட்டை நன்றாகச் சுற்றிப் பார்க்கக் கிளம்பி விட்டாள்.
“லயாம்மா.. பொருளைக் கலைக்காம பாரு” என்று சகுந்தலா அவளுக்கு அறிவுறுத்தினார்.
மகேஸ்வரன் மற்றும் தீனதயாள் இவர்களுடன் அமர்ந்து கொண்டான் பிரித்வி.
மகேஸ்வரன், ” இவனைப் பாருங்க சம்பந்தி.ஹேர் ஸ்டைலை மாத்துடா. ட்ரெண்ட்டுக்கு செட் ஆகுன்னு சொன்னா இது தான் ட்ரெண்ட்ன்னு பொய் சொல்லிட்டு இருக்கான் ” என்று தீனதயாளிடம் சொன்னார்.
அதைக் கேட்டதும் பிரித்வியோ,
” அப்பா… ” என்று அவரை அழைத்து,
“உண்மையிலேயே இது தான் ட்ரெண்ட் ப்பா” என்று கதற ஆரம்பித்து விட்டான்.
இவர்களைப் பார்த்துச் சிரித்த தீனதயாள்,
” விடுங்க சம்பந்தி. மாப்பிள்ளை தான் இவ்ளோ தூரம் சொல்றாரே? நம்புங்க” என்று மருமகனுக்கு உதவிக்கரம் நீட்டினார்.
“அம்மா சாப்பாடு ரெடியா?” அதிரூபா தன் அம்மா கிருஷ்ணவேணியிடம் வினவினாள்.
” ரெடியா இருக்கு அதி. ஒரு தடவை செக் பண்ணிடலாம்ன்னு வந்தேன்.நீ போய் உக்காரு. நான் பரிமாறுறேன்” என்று கூற,
” நீங்களும், அப்பாவும் மட்டும் தான் இருக்கீங்க. உங்களைப் பரிமாற விட்டுட்டு நான் உக்காந்து சாப்பிட்றதா ம்மா? நானும் பரிமாறுறேன்” என அவள் கூறவும்,
” அதிம்மா… நீ விருந்துக்கு வந்துருக்கடா. இது சம்பிரதாயம். போய் உக்காரு போ” என்று அவளை அனுப்பி விட்டார்.
ஆனாலும் அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை.
இருந்தாலும் அவர் சொன்னதற்காக போய் மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டாள்.
பிரித்வி தன் தந்தை மற்றும் மாமனாரின் கிண்டலில் இருந்து தப்பிக்க எண்ணி மனைவியைப் பார்த்தான்.
அவளோ தான் அன்னையுடன் இருக்க முடியவில்லையே என்ற சோகத்தில் இருந்தாள்.
அதனால் இவனைக் கண்டு கொள்ளவில்லை.அது புரியாமல்,
அதிரூபாவின் அருகில் சென்றுசென்று மெதுவாக,
“என்ன ஒரே ஃபீலிங்ஸ் போல?”
என்று கேலி செய்தான்.
“ஃபீலிங் ஆ? நான் எதுக்கு ஃபீல் பண்ணப் போறேன்?” என அவனை ஏறிட்டாள்.
“முகத்தைப் பார்த்தேன், தோனுச்சு” என்றான்.
“ஓஹோ…! ஃபீலிங்ஸ் எதுவும் இல்லை. நார்மலாக தான் இருக்கேன். உன் முகத்தைப் பார்த்தா நீ தான் பல்ப் வாங்கிட்டு இருந்த போல” என்று சிரித்த முகத்துடன் கேட்டாள்.
“அண்ணி ! அந்த ரோஜாச் செடியில் அவ்ளோ ஃப்ளவர்ஸ் இருக்கு.நான் ரெண்டு பறிச்சுக்கவா?”
அவள் வளர்த்த ரோஜா பூக்களைப் பறித்துக் கொள்ளலாமா? என்று கேட்ட நாத்தனாரிடம்,
“எடுத்துக்கோ லயா. உனக்குப் பிடிச்சக் கலரைப் பறிச்சுக்கோ”
அவளும் அனுமதி கொடுத்து விட்டாள்.
“தாங்க்ஸ் அண்ணி” என்று சிட்டாய் ஓடியவள் ரோஜாப் பூக்களைப் பறித்துக் கொண்டாள்.
இதையெல்லாம் பார்த்த பிரித்வி,
‘வேறென்ன எல்லாம் வளக்குறா?’ என்ற யோசனையுடன் வீட்டைச் சுற்றிப் பார்க்கப் போனான்.
தொட்டிகளில் இருந்த ரோஜா செடிகளும், மற்ற பூ செடிகளும் இவன் பார்வையைக் கவர்ந்தன.
வேறெந்த செல்லப் பிராணியையும் அதிரூபா வளர்ந்திருக்கவில்லை.
அதற்குள், கிருஷ்ணவேணி,
“அதி ! மாப்பிள்ளையையும், எல்லாரையும் சாப்பிடக் கூப்பிடும்மா” என்றார் மகளிடம்.
தீனதயாள், “சம்பந்தி வந்து சாப்பிடுங்க” என்று அவரை அழைத்து அமர வைத்தவர்,
மகளையும், மருமகனையும் அதேபோல் அழைத்து அமர வைத்தார்.
பறித்த ரோஜாப் பூக்களை குளிர்சாதனப் பெட்டியின் மேல் வைத்தவள் உணவுண்ண வந்தாள் லயா.
பிரியாணியின் மணம் நாசியைத் தொட்டு என்னவோ செய்தது பிரித்விக்கு. அந்தளவிற்கு அதன் சுவையும் இருக்குமா? என்பது போல் சுவைக்க ஆரம்பித்தான்.
நான்கு கவளங்கள் உள்ளே சென்றதும் உணவின் சுவையும் சளைக்கவில்லை என்று ரசித்து உண்டான் பிரித்வி.
அவன் உண்பதைப் பார்த்த அதிரூபா, திருப்தியுடன் தானும் உண்டாள்.
“கொஞ்சம் கிரேவி ஊத்துங்க அத்தை” என்று கேட்டு வாங்கி உண்பவனை அவனது குடும்பமே மகிழ்ச்சியாகப் பார்த்தனர்.
தீனதயாளுக்கும், கிருஷ்ணவேணிக்கும் மகளுடைய புகுந்த வீட்டாரின் முக பாவனைகளைப் பார்த்து சந்தோஷம் அடைந்தனர்.
“சாப்பாடு பிரமாதம் சம்பந்தி” என்று வெளிப்படையாகவே பாராட்டினார் சகுந்தலா.
“ஆமா அத்தை. எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. அதுவும் இந்த ஃப்ரை அவ்ளோ சூப்பரா இருக்கு”
“நிறைவா இருக்கும்மா.நீ நல்லா சாப்பிடு”
சகுந்தலா அவளைப் பார்த்துப் புன்னகைத்தார்.
உணவு உண்டு முடித்ததும் வீட்டை ஒருமுறை ஆசை தீர சுற்றிப் பார்த்தாள் அதிரூபா.
தன் அறைக்குள் சென்றவள் அதை விழி நீர் வழியப் பார்த்தாள்.
பின்னாலிருந்து, “ரூமைப் பெயர்த்து எடுத்துட்டு பேக் பண்ணிட்டுப் போய்டுவோமா?”
அவளை இலகுவாக்க கூறினான் என்பதை ஆராயாமல்,
“உனக்கு வேற வேலையே இல்லையா? என் அழுகையைக் கூட கிண்டல் பண்ணனுமா?” எனக் கேட்டு விட்டு, கீழே சென்று விட்டாள்.
“ஜாலியாக கூட பேச விட மாட்றா” புலம்பியபடியே வந்தான்.
கிளம்பும் சமயம் வந்ததும்,
“அதி! அழாமல் போய்ட்டு வா” என்று மகளுக்கு நிறையவே நம்பிக்கை அளித்தார்.
சகுந்தலாவிடம், “பாத்துக்கோங்க சம்பந்தி” என்றார் கிருஷ்ணவேணி.
தந்தையுடன் தானே மகள்கள் கூடுதல் அன்புடன் இருப்பார்கள் என்று சிலர் கூறுவார்கள்.அதே போல், தான் அதிரூபாவும்.
தீனதயாளுடையத் தோளைப் பற்றி கண்ணீருடன் விடை பெற்றாள்.
பிரித்வி மனைவியை மென்மையாகப் பார்த்தான்.
வீட்டிற்குப் போனதும் அவளுக்கு ஆறுதல் வார்த்தைகளைப் பேச எண்ணினான்.
“நிறைய ரோஜா செடி வளர்த்து இருக்கியே? இங்கே வேணும்னாலும் செடி வாங்கி நட்டு வச்சுக்கோ” – பிரித்வி.
அதிரூபா, “ம்ம்… செடி வளர்க்கனும்னு தோணுச்சுன்னா வளத்துக்கிறேன். உங்க ஆஃபிஸ் வேலை நிறைய இருக்குமே? அதெல்லாம் எப்போ பார்க்கப் போறீங்க?”
என்று கேட்டாள் கணவனிடம்.
“ஏன் இப்படி கேக்குற? வீட்ல இருந்து துரத்தி விடப் பாக்குறியா?” என்றான் பிரித்வி.
“அந்த ஐடியா இப்போ எனக்கு இல்லை.நானும் வேலைக்குப் போகனும். நிறைய நாள் லீவ் போட்டு இருக்கேன்” என்று அதிரூபா கூறவும் தான், பிரித்விக்கு அவள் வேலைக்குப் போகிறாள் என்பதே நினைவிற்கு வந்தது.
“அது என்னோட ஆஃபிஸ். சோ, எப்போ வேணும்னாலும் நான் போகலாம்.ஆன்லைன் – ல முக்கால்வாசி வேலை ஓவர். நேர்ல போய்ப் பார்க்கிற வேலை மட்டும் தான் பாக்கி”
“அப்போ நான் நெக்ஸ்ட் வீக்ல இருந்து வேலைக்குப் போறேன்”
இத்தனை நாட்கள் விடுப்பு எடுத்திருந்தால், அதிரூபாவிற்குத் தன் வேலை பாதிக்கும் என்ற பயம் இருந்தது.
“சரி. ஹனிமூனுக்குப் பிளான் பண்ணி இருந்தேன். பட் இட்ஸ் ஓகே”
தோளைக் குலுக்கி விட்டு குளிக்கச் சென்றான்.
அதிரூபா, “எதே…?!”
– தொடரும்