Loading

அத்தியாயம்-3

ஆறெழிலுக்கு அந்த நொடியை புரிந்து கொள்ளவே முடியவில்லை, கோபம் கோபமாக வந்தது, எரிச்சலாக இருந்தது, அவள் பின்னாடியே வந்த லட்சு, யோசனையாக நிற்கும் ஆறெழிலை தோளில் தட்டி, “ஏண்டி நின்னுட்ட நட” என்றாள்.

“ப்ரெசிடெண்ட எங்கடி?”.

“எனக்கெப்டி தெரியும்? நீ எதுக்கு அந்த அண்ணன தேடுற?”.

“நா தேடுனா உனக்கு என்ன?. இத்தன நாள் கழிச்சு சந்தோஷமா பிரயேர் அட்டென்ட் பண்ண வந்தவள கடுப்பேத்திக்கிட்டு” என வெக்குவெக்கென தன் இடத்தில் சென்று நின்று கொண்டாள்.

“நா என்ன கேட்டேன்னு இப்ப இவ௭ன்னய திட்டிட்டு போறா” என புலம்பியவாறே லட்சுவும் சென்று நின்றாள்.

அன்று முழுவதும் எரிச்சலுடனே பொழுதை கழித்துவிட்டு, மறுநாள் அவன் வரவை எதிர்பார்த்து சீக்கிரமாகவே கிளம்பி வந்தாள். ஸ்டாஃப்ஸ் யாரும் வந்திருக்கவில்லை, ஸ்டூடண்ட்ஸூம் கம்மியாகவே கிரௌண்ட்டில் அங்கங்கு நின்றிருந்தனர். வாசலில் இருந்து சற்று உள் தள்ளி, கேட்டினுள்ளே நுழையுபவர்கள் தெரியுமாறு உள்ள மரத்தடியில் அமர்ந்து கொண்டாள்.

சற்று நேரத்தில் ஹீரோசைக்கிளில், முன் நெற்றி முடியைக் கோதி விட்டவாறு, வாட்ச்மேனிடம் ஏதோ பேசி சிரித்துக் கொண்டே உள் நுழைந்தான் ப்ரகலத்தன். அவன் கண்ணைத் தாண்டி அவளால் அங்கிங்கு திரும்ப முடியவில்லை.

மனதில் அப்படி ஒரு சந்தோசம், 3 மணி நேரம், திருப்பதி வெங்கடாசலபதியை காண காத்திருந்து தரிசனம் கிடைக்கும் அந்த ஐந்து நொடி வந்து செல்லும் பக்தியும், பரவசமும் அவள் முகத்தில் தாண்டவமாடியது. இது எதனால் என சிந்திக்கும் பக்குவம் இல்லை, புரிந்துகொள்ளும் வயதும் இல்லை. அதனால அதை அப்படியே அனுபவிக்க தயாரானாள்.

அவன் சைக்கிளை நிப்பாட்டிவிட்டு, கேரியரில் இருந்த பேக்கை எடுத்து வலது கை பக்கம் மாட்டிக் கொண்டு அவனது வகுப்பை நோக்கி நடக்க ஆரம்பிக்க, வேகமாக எழுந்து ஓடியவள், அவன் முன் சென்று மேலும் போகவிடாமல் மறைத்தவாறு நின்றாள்.

திடிரென அவளை ௭திர் பாக்காதவன் ஜர்க்காகி 2 அடி பின்னால் எடுத்து வைத்து, ஒரு முறை அவள் முகம் மொத்தமும் பார்வையை சுழல விட்டு, பின் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு “என்ன?” என்றான். அவளிடம் அவன் பேசிய முதல் வார்த்தை, அதை பத்திரப்படுத்தினாள்.

“நேத்து ஏன் ஸ்கூலுக்கு வரல?” ௭ன அவள் நேரடியாக விசயத்திற்கு வர, 

“வாட்? கம் அகைன் (என்ன?.. திரும்ப சொல்லு)” ௭ன்றான் அவன்.

“நேத்து தான் நா 16 நாள் கழிச்சு ஸ்கூலுக்கு வந்திருக்கேன், ஆனா கரெக்ட்டா நீங்க நேத்து வரல… அதான் ஏன் வரலன்னு கேக்குறேன்”    

“ஒய் சுட் ஐ எஸ்பிளைன் தட் டு யூ (அத எதுக்கு நா உனக்கு சொல்லணும்)”

“ஐய பிரிட்டிஷ் காரனா நீங்க, ௭ந்த நாட்டுக்கு போயும் பொழச்சுக்கணும்னு தான் இங்கிலீஷ் மீடியம் படிக்கிறோம். இங்க தமிழ்நாட்டுல தூய தமிழிலேயே பேசலாம். நேத்து ஏன் ஸ்கூலுக்கு வரல?. இத்தன நாள் கழிச்சு ஒருத்தி ஸ்கூலுக்கு வாராளே. வந்தா நம்மள தேடுவாளே சொல்லிட்டு போணும்ன்ற எண்ணம் வேண்டாம்?” ௭ன்க. 

கண்ணை விரித்து அவள் பேசுவதை பார்த்தானே தவிர அவனிடமிருந்து சிறு தலையசைப்பு கூட இல்லை.

“உங்கட்ட தான கேக்றேன். இப்டி அமைதியா நின்னா என்ன அர்த்தம்?”. 

“நேத்து லீவுக்கு நா என் கிளாஸ் மிஸ்ட்ட லீவ் லெட்டர் சப்மிட் பண்ணிட்டேன். உங்களுக்கு எதுக்கு நா பதில் சொல்லணும்” என்றான் இப்போது முறைத்து.

தன் தலையில் தட்டிக் கொண்டவள், “என்ன யாருன்னே தெரியாதுல்ல உங்களுக்கு., சாரி. என் பேரு ‘ஆறெழில் 8A’ ” என கையை நீட்ட, 

“சோ” என்றான் சுருக்கமாய், பேண்ட் பாக்கெட்டில் விட்ட கையை வெளி ௭டுக்காமலே.

“ப்ரண்ட்ஸ்” என்றாள் அவளும் விடாமல். 

“நாட் இன்ட்ரஸ்டட்” என அவன் அவளை சுற்றி முன் நடக்க போக.

“இங்கிலீஷ விட மாட்டேங்கிறானே. இவன்ட்ட ப்ரண்ட்ஸிப் புடிக்கணும்ன்னா ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாஸ்ல்லாம் போணும் போல இருக்கே” என அவன் காதில் விழுமாறே முனங்கினாள்.

அவனும் அவளை சுற்றிப் போனதே, சிரிப்பை வெளிப்படுத்த தான். மீண்டும் அவள் கூறியதைக் கேட்டு வந்த சிரிப்பை தராளமாக அவள் பக்கம் திரும்பாமலே சிரித்தவாறு, வகுப்பை நோக்கி நடக்க, “நெடு நெடுன்னு வளந்துட்டு வேகவேகமா நடந்தா, நா ஸ்கேட்டிங் போட்டு தான் போய் புடிக்கணும்” என்றவாறே மறுபடியும் வந்து அவன் முன் நின்றாள்.

“இங்க பாருங்க பிரசிடென்ட், நா உங்கட்ட ப்ரண்ட்ஸ் ஆக தான கேட்டேன். அதுக்கு ஏன் மூஞ்சியை திருப்பிட்டு போறீங்க?. உங்கள நேத்து ப்ரேயர் முன்னாடி தேடுனேனா, காணுமா ரொம்ப கஷ்டமா போச்சுதா, அதான் ப்ரண்ட்ஸ் ஆயிடலாம், ப்ரண்ட்டாகிட்டா, எப்ப லீவ் எடுத்தாலும் என்ட்ட சொல்லிட்டு போவீங்கன்னு தோணுச்சு, அதான் கேட்டேன். இட்ஸ் ஓ.கே. இனி லீவு எடுத்தா, அத மட்டுமாது சொல்லுங்க ஓகேவா. உங்களுக்கு ஃபிளாக்குள்ள பூ வைக்குற நேரமாச்சு, பை ப்ரெசிடெண்ட்” என்றுவிட்டு, டாட்டா காமித்தவாறு ஆப்போசிட் பில்டிங்ல் உள்ள தன் வகுப்பை நோக்கி ஓடியே விட்டாள்.

ஓடியவளைப் பார்த்தவாறே “வெரி டிஃபிக்கல்ட் ஆட்டிட்யூட்” என சிலாகித்துக் கொண்டான்.

அவனைப் பொறுத்தவரை அவளது ஈஸி கோயிங் ஆட்டிட்யூடை ரசித்தான். அதற்கு மேல் கொண்டு செல்ல அவனது மெச்சூரிட்டி அனுமதிக்கவில்லை, அவளையும் தன் மேல் ௭ந்த ௭ண்ணத்தயும் வளர்த்துக் கொள்ள அனுமதிக்க விருப்பில்லாத காரணத்தாலேயே அவள் பக்கம் திரும்பாமல் பிடிகொடுக்காமல் சுற்றி வருகிறான்.

அதனாலேயே அவளது ப்ரண்ட் ரெக்யூஸ்ட்டை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவனுக்கும் அவளுடன் பிரண்டாக வாழ்க்கை முழுவதும் பயணம் செய்ய ஆசைதான், ஆனாலும் உள்ளுர ஏதோ பயம். ‘வேண்டாம்’ என முடிவெடுத்து விட்டான். தள்ளி நின்று ரசிப்பதும் ஒரு வகையில் அவனுக்கு சுவாரஸ்யமாகவே இருந்தது.

ஆறு கிளாஸினுள் நுழைய, அவ்வளவு நேரமும் தங்கள் கிளாஸ் வாசலில் நின்று அவளையே பார்த்து கொண்டிருந்த லட்சு “ஏ! அந்த அண்ணன்ட்ட என்னடி பேசிட்டுருந்த, நீ போற போக்கு ஒன்னும் சரியில்ல சொல்லிட்டேன்” என்க.

“நீயும் எங்க அம்மா மாதிரி யோசிக்காத. ஜஸ்ட் ப்ரண்ட்ஸாகிடலாமான்னு கேட்டேன். முடியாதுன்னுட்டாங்க சரின்னுட்டு வந்துட்டேன் அவ்வளவுதான்”.

“லூசாடி நீ, அவங்கட்ட பிரெண்ட்ஷிப் வச்சுட்டு என்னடி பண்ண போற. மொதல்ல அந்த அண்ணன அண்ணன்னு கூப்பிடுடி” என்றாள் சீரியஸாய்.

“ஏன்??? நா ஏன் அண்ணான்னு கூப்டணும், சரி, இப்ப உங்கிட்ட அண்ணான்னு சொல்லிட்டு, அப்றமா போய் லவ் பண்ணிட்டா ௭ன்ன பண்ணுவ?” என கண்ணடிக்க.

“லூசு, கோட்டி கணக்கா பேசாத. உன்ன நம்ப முடியாது, இனி நீ பிரேயருக்கு லேட்டாவே வா, இல்ல உங்க அம்மாட்ட சொல்லி குடுத்திருவேன்” என்றாள் லட்சு.

“நீ ஏன் இவ்ளோ டென்சன் ஆகுற, ஒன்னுமேயில்ல பாத்துக்கலாம் விடு. நா பாத்துக்றேன்” என ஆறு அவளை சமாதானப்படுத்தினாலும், பதில் அவ்வளவு தெளிவில்லாமலே வந்தது.

‘தவறான பாதையில் செல்கிறோமோ?’ என இடை இடையே சிந்திக்க ஆரம்பித்தாள். அன்று முழுவதும் வகுப்பில் கவனம் செல்லாமல் இதே யோசனையில் இருக்க, லட்சு தான் “இப்ப நமக்கு எதயும் தெளிவா முடிவெடுக்க முடியும்னு தோணலடி. சரியாவும் முடியலாம் தப்பாவும் முடியலாம், அதனால அப்படியே விட்டுரு பாத்துக்கலாம்” என்றாள்.

குழப்பத்துடனே வீட்டிற்கு சென்ற ஆறெழில், யூனிஃபார்ம் கூட மாற்றாமல் அப்படியே அமர்ந்திருக்க. அன்று ஜெயந்தியும் வர தாமதமாக, குணசீலன் 7 மணிக்கு வீட்டுக்கு வந்தவர், லைட் எதுவும் போடாமல் வாசலில் ஆழ்ந்த யோசனையில் இருக்கும் மகளை பார்த்து விட்டு தானும் யோசனையுடன், எல்லா ரூம் லைட்டையும் போட்டவாறு வீட்டுக்குள் தன் அறைக்குள் சென்று விட்டார்.

பின்னர் தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வெளியே வர, அப்பொழுதும் அவள் அப்படியே அமர்ந்திருக்க மெதுவாக சென்று அவள் அருகில் வாசலில் அமர்ந்தார்.

பக்கத்தில் அரவம் உணர்ந்து, அம்மாவோ என எண்ணி “ம்மா” என திரும்பியவள், தந்தையைக் கண்டதும், கண்ணை அகல விரித்து, “என்னப்பா” என்க.

“உனக்கு என்னாச்சு? ஏன் லைட் கூட போடாம யோசிச்சுகிட்டு உட்கார்ந்திருக்க. இந்த வயசுல அப்டி என்ன சுத்தி நடக்றத மறக்குற அளவுக்கு யோசன?” ௭ன்றார்.

அவளுக்கு விவரம் தெரிய அவர் அவளிடம் பேசிய நீள வசனமே இதுவாகத்தான் இருக்கும்.

அந்த பிரமிப்பு நீங்காமலே “ஒன்னுமில்லப்பா” என சொல்ல வந்தவள், அப்பாவிடம் பேசக் கிடைத்த வாய்ப்பை விட வேண்டாம் என்றெண்ணி, “இந்த வயசுல நாம எடுக்குற முடிவு கரெக்டா இருக்குமா? தப்பா இருக்குமா?” ௭ன கேக்க.

“சரி தப்புன்றது 2வது விஷயம். நாம ஒரு முடிவு எடுக்குமுன்ன ஆயிரம் இல்ல ரெண்டாயிரம் தடவ கூட யோசிக்கலாம், பிறர் அபிப்ராயம் கேட்கலாம். ஆனா முடிவெடுத்துட்டா மறு பரிசீலனையே பண்ணக் கூடாது. ௭டுத்த முடிவுல ஸ்டராங்கா இருக்கணும். தப்பா போற மாதிரி தெரிஞ்சாலும், விடாம போராடியாவது அந்த முடிவ சரியாக்கணும். இத இப்ப சின்ன சின்ன விஷயத்துல பாலோவ் பண்ணுனா நாளைக்கு வாழ்க்கையில ஒரு முக்கிய முடிவெடுக்கும் போதும் அது உதுவும்” ௭ன்றார்.

மௌனமாய் கேட்டவள் “ஓ! சரிப்பா, இப்ப நா சரியான வழில போற முடிவத்தான் எடுத்துருக்கேன்னு எப்டி தெரிஞ்சுகிறது?. இப்போ நான் திருடனும்ன்னு முடிவெடுத்துட்டேன். அப்ப அத நா செஞ்சு முடிச்சாகணும்னு பண்ணலாமா?”.

மகளின் புத்திசாலித் தனத்தை எண்ணி சிரித்துக் கொண்டவர், அவள் தலையை வாஞ்சையாய் தடவி, “இந்த சொசைட்டி முன்னால, நா இதச் செஞ்சேன், செய்றேன், செய்யப் போறேன்னு சொல்ல முடியாத விஷயம் எல்லாமே தப்பான விஷயம் தான்”.

இருவரும் அடுத்த சில நிமிடங்கள் அமைதியாக இருந்தனர். வந்ததுமே கண்டுகொண்டார்,௭ப்பவுமே கல கலவென இருக்கும் மகள் உலகம் மறந்து அமர்ந்திருப்பதை கண்டே, ஜெயந்தி இப்படி விட மாட்டாளே, அவளுக்கு உடம்பு ௭தும் சரியில்லயோ ௭ன்றெண்ணி உள்ளே சென்று பார்த்து வந்தவர், மகள் தனியாக தான் இப்படி அமர்ந்திருக்கிறாள், ௭ன்னவாக இருக்குமென பேச்சை ஆரம்பித்தார். இப்போது அவள் கேக்கும் கேள்விகளை கொண்டு, அப்படி ௭ன்ன பெரிய முடிவு ௭டுக்க போகிறாள் ௭ன அவர் யோசிக்க, அடுத்த கேள்விய ௭ப்படி கேக்கலாமென மகள் யோசித்தாள்.

பின் இயல்பாக “பாய் ஃப்ரண்ட் வச்சுக்குறது சரியா? தப்பா ப்பா? என்னால தைரியமா சொல்ல முடியும் இந்த பையன் என்னோட ஃப்ரண்ட் அப்டின்னு யார்ட்ட வேணாலும் சொல்ல முடியும். ஆனா அத கேக்குறவங்க தப்பா புரிஞ்சுகிட்டா, அது தப்பான விஷயமா? சரியான விஷயமா?” ௭ன கேக்க.

இதற்கு எப்படி பதிலளிப்பது என்று சற்று நேரம் திணறித்தான் போய்விட்டார் குணசீலன்.

“சொல்லுங்கப்பா நா இப்டி கேட்டதக்கூட நீங்க தப்பான கேள்வின்னு நினைக்கிறீங்களாப்பா?”.

“இல்லாம்மா, உங்க அம்மா உனக்கு ஃப்ரீடம் குடுத்து வளத்தது வீண் போகல, உனக்கு நீ செய்யுறது தப்பா தோணாததுனாலதான தைரியமா இந்த கேள்விய என்ட்ட கேக்குற. எனக்கு தான் என்ன பதில் சொல்லி உனக்கு புரிய வைக்குறதுன்னு தெரியல” என்றார் வெளிப்படையாகவே.

“உங்க அனுபவத்துல எனக்கு புரியிற மாதிரி சொல்லுங்கப்பா”.

“உங்க காலத்துல பசங்க கிட்ட பேசுறது அவ்வளவு பெரிய கொலை குத்தமில்ல, ஆனாலும் இவன்ட்ட பேசினா பிரச்சன வரும், இவன்ட்ட பேசினா பிரச்சின வராதுன்னு வகைப்படுத்த தெரியணும். அந்தப் பக்குவம் உள்ள வயசு இப்போ உனக்கு இல்ல. அளவோட இருக்குற வர எதுவுமே தப்பு இல்லை. இப்போ உனக்கு பதிமூணு வயசு, இன்னும் அஞ்சு வருஷம், படிப்ப மட்டும் கான்சன்ட்ரேட் பண்ணு, அதுக்கு அப்புறம் உனக்கு முடிவெடுக்குற ஒரு பக்குவம் வரும், அப்ப நீ எடுக்கிற முடிவு 80% கரெக்ட்டா இருக்கும்”.

அப்படியே மகள் அமைதியாகிவிட. “என்னம்மா உனக்கு பிடிக்காத பதில் சொல்லிட்டேனா?” என்றார் அவள் தோளில் கையிட்டு.

“ஏன்பா இத்தன வருஷமா நீங்க இப்டி என்கிட்ட பேசல. உங்களுக்கு பேசவே தெரியாது, ௭ங்களலா பிடிக்காதுன்னு நெனச்சிட்டு இருந்தேன்”.

இப்போது அவர் அமைதியாகி விட, “சாரிப்பா மறுபடியும் பேசாம போயிடாதீங்க. நா இப்ப கேட்டத மறந்துடுங்க. இப்டியே பாசமாக இருக்கப்பா. அம்மாட்டயும் பேசுங்கப்பா”.

“உங்க மேல பாசமில்லன்னு யாரு சொன்னது, வெளிக்காட்டல அவ்வளவுதான்”.

“வெளிக்காட்டுனா தான் என்ன?”.

“எனக்கு வெளிக்காட்ட தெரியலன்னு வச்சுக்கோயேன்”. “ம்” என மகள் தலையை குனிந்துகொள்ள.

“எப்பயும் நீ ஸ்டராங்கா இருக்கணும். உன்ன நீ மட்டும்தான் பாத்துக்க முடியும். அம்மா இருக்குற வர பாத்துப்பா, அடுத்து உனக்குன்னு கூட பிறந்தவங்க யாருமே கிடையாது, அதனால உன் படிப்பு தான் உனக்கு கடைசி வர துணையா இருக்கும். இப்போதைக்கு நல்லா படி, ஆழமா இப்டி உலகத்தை மறந்து சிந்திக்குற அளவுக்கு பிரச்சினயெல்லாம் சமாளிக்க இன்னும் வயசு இருக்கு, பார்த்துக்கலாம்” என்க.

“சரிப்பா, நீங்க இப்படியே எனக்கு கூட இருங்க, வேற யாருமில்லன்ற கவலையே எனக்கிருக்காது. இன்னைக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க. நா இன்னும் யூனிபார்ம் கூட மாத்தல. என் நல்ல நேரம் மேக்ஸ் மிஸ் இன்னும் வீட்டுக்கு வரல. மாத்திட்டு வரேன்ப்பா” என ௭ழுந்தவள் வேகமாக அவள் அறையில் நுழைய போக, 

பின்னையே எழுந்தவர், “அப்பா ஒன்னு கேட்கட்டுமாமா?” என நிறுத்தினார். 

“கேளுங்கப்பா” என மீண்டும் அருகில் வந்தாள்.

“அந்தப் பையன் பேரு என்னம்மா?” லேசாக சிரித்து கொண்டே கேக்க.

சிறிது யோசித்தவள், பின் தெளிவாக “ப்ரகலத்தன், ௭ங்க ஸ்கூல் பிரசிடென்ட், 10A” என்று விட்டு, அவர் முகத்தை பார்க்க, அவர் அமைதியாக யோசிக்கவும், பசி அவள் வயிற்றை பிராண்ட ஆரம்பிக்கவும், “ட்ரஸ் சேன்ஞ் பண்றேன் ப்பா” ௭ன்றவள் அறையினுள் நுழைந்து கொண்டாள். 

“சரி ம்மா” ௭ன்றவரும் வாசல் பக்கம் திரும்ப, ஜெயந்தி அதிசயமாய் இருவரையும் கண்டவாறு நின்றார்.

குணசீலன் அவர் அறை புகுந்து விட, வேகமாய் ஜெயந்தி அவரும், மகளும் பகிர்ந்துகொள்ளும் அறையை நோக்கி சென்றார். பாத்ரூமிலிருந்து மகள் வரும் வரை கூட பொறுமை இல்லாமல் நடைபயில.

“என்னம்மா, ரூம்குள்ள வாக்கிங் போற?” என்றவாறு வந்த மகளை அவசரமாய் நெருங்கி, 

“உங்க அப்பா என்னத்தடி சிரிச்சு பேசிட்டு இருந்தாரு?”.

“ம்மா அப்பா இன்னைக்கு எவ்வளவு ஸ்வீட்டா பேசினாங்க தெரியுமா, அதான் நா பார் யூனிபார்ம் கூட மாத்தலன்னா பாத்துக்கோயேன்” என்க. 

“பொய் சொல்லாதடி” என்றார் ஜெயந்தி.

“எத பொய்யின்ற, அப்பா ஸ்வீட்டா பேசுனாங்கன்றதயா? இல்ல அதனால நா யூனிஃபார்ம் மாத்தலன்றதயா?” என்றாள் ஆறெழில்.

“அப்ப நீ இவ்வளவு நேரம் யூனிஃபார்ம் மாத்தாததுக்கு வேற ரீசனும் இருக்கு அப்டித்தான?”.

“என் வாய் தான்மா எனக்கு எமன்”.

“தெரிஞ்சா சரி, முதல்ல அப்பா என்ன பேசுனாங்க அத சொல்லு” அம்மாவின் ஆர்வம் அவளுக்கு  விளையாட்டாய் தெரிய, அவரை பீ.பி ஏற்றிக்  கொண்டிருப்பதை அறியாமல் அது, இது என கதையளந்து கொண்டிருந்தாள்.

அவருக்கு பட படவென வந்து விட்டிருந்தது, அப்படியே அமர்ந்து விட்டு தண்ணி கேட்க, பின்பே பயம் வந்தது ஆறெழிலுக்கு வேகமாய் சென்று தண்ணீர் எடுத்து வந்து தர, வாங்கி அருந்தி விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “அப்பா நல்லா பேசினாங்களாடி, இனிமே நம்ம ரெண்டு பேர்ட்டயும் பாசமா இருப்பாங்களா? என்ட்டயும் 2 வார்த்தை  சிரிச்சு பேச சொல்லுடி” என்றார் கண்ணில் நீர் வடிய.

ஆறெழிலுக்கும் தாய் அழுகவும் அழுகை வந்து விட்டிருந்தது. “அப்பாவுக்கு நம்ம மேல பாசம் இருக்குன்னு சொன்னாங்கம்மா. இனி நல்லா பேசுவாங்க. நீ அழாதம்மா. உனக்கு ஒரு மாதிரி வருது பாரு” என்றாள் அவளும் அழுது கொண்டே.

வெளியே நின்று இருவர் உரையாடலையும் கேட்டுக் கொண்டிருந்த குணசீலனின் கண்ணும் நிறைந்து விட்டிருந்தது கண்ணீரால். மனம் நிறைய பாசம் இருந்தாலும் வெளிக்காட்ட முடியாமல் போராடிக்கொண்டிருக்கிறது அச்சிறியக் குடும்பம்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 41

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
41
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்