738 views

ரகுவரன் 3

1st part https://pratilipi.page.link/vcbNFBw2QoRzHUgL8

2nd parthttps://pratilipi.page.link/Bn7HTVuWXEkGVZHr5

“பாப்பா அதுக்குள்ள எந்திரிச்சாச்சா” குதூகலத்தோடு தம்பியை நெருங்கிய மான்விழி அவன் சோக முகத்தை கண்டு, “தம்பி பாப்பா ஏன்’டா சோகமா இருக்க.” என விசாரித்தாள்.

 

மகிழ்வரன் அக்காவை பார்த்து வெதும்ப ஆரம்பித்தான் உதட்டை பிதுக்கிக் கொண்டு. தம்பியின் அழுகையை சகித்துக் கொள்ள முடியாதவள் அவசரமாக தூக்கி, “பாப்பா அக்கா கூட இல்லன்னதும் பயந்துட்டியா?” என அக்கறையாக கண்ணீர் கண்களை விட்டு வெளியேறும் முன் துடைத்து விட்டாள்.

 

 

சின்னஞ்சிறு இடுப்பில் மகிழ்வரன் அமர்ந்திருக்க, ஒரு பக்கமாக சாய்ந்தவாறு நின்று கொண்டிருந்த மகளை பார்த்துக் கொண்டே உள்ளே வந்த ரகுவரன், “தங்கம் இவனை இப்படி தூக்காதன்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது, கீழ இறக்கி விடு.” என்றான்.

 

தந்தையின் பேச்சை புரிந்து கொண்ட குட்டி ரகுவரன் மூக்கை சுருக்கி ரோஷம் கொண்டது முறைத்து. மகனை கண்டு கொள்ளாமல் அலட்சியம் செய்தவன், “மணி ஆச்சுடா தங்கம் குளிச்சிட்டு ஸ்கூலுக்கு கிளம்புங்க.” என்றவாறு அவனை இறக்கி விட முயன்றான்.

 

 

தன்னை இறக்கி விட துடிக்கும் ரகுவரனை அடித்துக் கொண்டே அடம் பிடித்தான் மகிழ்வரன். தம்பியின் பிடிவாதத்தில் தந்தையிடம், “அப்பா பாப்பாவ விடுங்க. அவனே அம்மா இல்லன்னு வருத்தத்துல இருக்கான்.” என்றதும் மனைவியின் ஞாபகம் புயலாக தாக்கியது அவன் நெஞ்சை.

 

ஒரு நிமிடம் பேச்சை மறந்தவன், ‘என் பிள்ளைங்க ரெண்டும் இவ்ளோ தூரம் ஏங்கிப் போனதுக்கு நீதான்டி காரணம். என் கையில சிக்கிடாத… நேசிச்ச நானே கொலை பண்ணிடுவேன்.’ என்று கருகிக் கொண்டான் உள்ளுக்குள்.

 

தான் சொன்ன வார்த்தை தந்தையை காயப்படுத்தி விட்டதாக உணர்ந்த மான்விழி, “அப்பா பாப்பா பாவம் ப்பா அதனால தான் சொன்னேன்.” என்று வார்த்தையில் வருத்தத்தை காட்டினாள்.

 

செல்ல மகளின் குரலில் நினைவு திரும்பியவன், “தங்கம் இவன் இப்படித்தான் அடம் பிடிச்சுட்டு இருப்பான் அவங்க அம்மா மாதிரி. நீ ஸ்கூலுக்கு கிளம்பி போங்கடா அப்பா பார்த்துக்குறேன்.” என்று மீண்டும் மகனை வாங்க,

 

“அக்கா….” என கத்தினான் மகிழ்வரன்.

 

“டேய்! உன்னால தான் என் தங்கம் தினமும் ஸ்கூலுக்கு லேட்டா போகுது. தினமும் பண்ற மாதிரி இன்னைக்கும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணலாம்னு நினைச்ச உங்க அம்மா மாதிரி எங்கயாது விரட்டி விட்டுடுவேன்.”

 

“அம்மா வரட்டும் சொல்ற” என்றதும் மகனின் தலையில் கொட்டு ஒன்றை வலிக்காதவாறு கொடுத்த ரகுவரன், “உங்க அம்மா வந்தா தானடா சொல்லுவ. போனவ உன்னையும் தூக்கிட்டு போயிருக்கலாம் தொல்ல விட்டு இருக்கும்.” என்றான்.

 

தந்தை முறைத்த மகிழ்வரன் அக்காவின் காதில் எதையோ கூறினான். கேட்டுக் கொண்டிருந்த மான்விழி தந்தையை பார்த்துக்கொண்டு சத்தமாக சிரிக்க, “தங்கம் என்னடா சொன்னா அவன்?” தந்தை கேட்டதும் இன்னும் கேலி சிரிப்பு சிரித்தாள்.

 

 

மகளின் சிரிப்பில் மகனை முறைத்தவன், “குரங்கு மண்டையா என் பொண்ணு கிட்ட என்னடா சொன்ன என்னை பத்தி” கேட்டிட, தந்தையை பார்க்காது வேறு பக்கம் முகத்தை வைத்தான் மகிழ்வரன்.

 

தன்னை விட சிறியவன் அதுவும் தன்மகன் தன்னை அலட்சியம் செய்வதை தாங்கிக் கொள்ள முடியாத ரகுவரன், “உங்க அம்மா கொழுப்புடா உனக்கு‌.” இந்த முறை வலிக்குமாறு கொட்டினான்.

 

 

“ஞே…ஞே…ஞே” சத்தமாக அழத் தொடங்கினான் குட்டி மகன்.

 

“அம்மா மாதிரி நடிக்கிறான் பாரு.” என்று அழுத்துக் கொண்ட ரகுவரன் கட்டாயப்படுத்தி மகனை தன் கைக்கு மாற்றினான். தந்தை போல வீம்பில் உச்சகட்டத்தில் இருக்கும் மகிழ்வரன், “அக்கா….அக்கா…” அவனிடம் செல்லாமல் அக்காவின் ஆடையை பிடித்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தான். 

 

தம்பியின் அழுகையில் மனம் நொந்தவள் தந்தையையும் மீறி தன் கைக்கு மாற்றிக் கொண்டாள். நியாயமாக மகள் மீது கோபம் கொள்ள வேண்டியவன் மகனை இஷ்டத்துக்கும் முறைத்தான். அவனோ அக்காவின் கைக்கு மாறிவிட்டதால் அழுகையை சற்று நிறுத்தி விசும்ப மட்டும் செய்ய,

 

“பாப்பாவ திட்டிகிட்டே இருக்காதீங்க அப்பா. மான்குட்டிக்கு பாப்பாவ ரொம்ப பிடிக்கும். என் தம்பி பாப்பா அழுதா எனக்கும் அழுகையா வரும்.” என்று லேசாக முகத்தை அழுவது போல் வைக்க, பதறிவிட்டான் ரகுவரன்.

 

மகள் உயரத்திற்கு குனிந்தவன், “தங்கம் இதுக்கு எதுக்குடா அழுற. அப்பா உனக்கு மணி ஆகுதுன்னு தான இவனை வாங்கினேன். இந்த குரங்கு மண்டையன் அழுதா எப்படி உனக்கு அழுக வருமோ அதே மாதிரி தான் அப்பாக்கு நீ அழுதாலும் வரும். இனிமே இந்த மாதிரி எல்லாம் முகத்தை வைக்காத.” சிரிப்பது போல் கன்னம் இரண்டையும் இழுத்தான்.

 

“ப்போ அக்காவ தொடாட” என்று இளையவன் கைகளை தட்டி விட, “என் பொண்ண நான் தொடுறேன் உனக்கு என்னடா வந்துச்சு குரங்கு” செல்லமாக கோபித்துக் கொண்டான் மகனிடம். 

 

“என் அக்கா” என்ற மகிழ்வரன் அக்காவை கழுத்தோடு கட்டிக் கொள்ள, “எனக்கு முதல்ல பொண்ணு அப்புறம் தான் உனக்கு அக்கா.” கட்டி இருக்கும் கைகளை வெடுக்கென்று பிடுங்கி விட்டான் தந்தையானவன்.

 

 

தந்தையிடம் தோற்க விரும்பாத மகிழ்வரன் மீண்டும் கைகளை கழுத்தோடு சுற்றிக்கொள்ள, “நீ வந்ததுல இருந்தே என் பொண்ணு ரெஸ்ட் எடுக்கிறது இல்லடா. என் தங்கத்துக்கு துணையா இருக்கட்டும்னு உன்ன உருவாக்கினா நீ எனக்கே போட்டியா நிக்கிற.” லேசாக மழலையின் தலையில் அடித்தான்.

 

 

தலையில் இருக்கும் சிறு முடிக்கு கூட வலித்திருக்காது அவன் அடித்த அடிக்கு. ஆனால் ரகுவரன் ரத்தமோ, “ங்ஞே…ஞே…அக்கா வலிக்குது.” என்று அவள் இடுப்பிலேயே துள்ளி குதித்து தந்தைக்கு எதிராக திருப்பி விட்டான்.

 

 

என்றும் தந்தை மட்டுமே உலகமாக இருக்கும் மான்குட்டி தந்தையானவனை மிஞ்சி நின்றாள் முறைத்து. மகளின் முறைப்பில் சிரிப்பு வந்தாலும் தங்களுக்கு நடுவில் சண்டையை மூட்டும் மகனால் கடுப்பும் வந்தது. 

 

அந்த கடுப்போடு வேகமாக தூக்கிக் கொண்டான். “அக்கா….” அடித் தொண்டை அதிரும் அளவிற்கு கத்தும் இளையவனின் வாயை மூடியவன், “தங்கம் ஸ்கூலுக்கு மணியாகுது இதுக்கு மேல கொஞ்சாம  கிளம்புங்க, இவனை நான் பார்த்துக்கிறேன்.” என்று மறுக்கும் மகளை ஒரு வழியாக சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான்.

 

மகள் தலை மறையும் வரை வாயை பொத்திக் கொண்டிருந்த ரகுவரன் குளியலறைக்கு தூக்கி சென்றான் மகனை. அவனும் தந்தை செய்யப்போகும் காரியத்தை அறிந்து தப்பிக்க முயற்சிக்க, “எங்கடா ஓடுற… இந்த ரகுவரன் கிட்டையே உன் வேலைய காட்டுறியா. உங்க அம்மா வரதுக்குள்ள என்னை அடிக்கடி முறைக்கிற இந்த கண்ணையும், திமிரா பேசுற இந்த வாயையும் உடைக்காம விட மாட்டேன்டா‌.” வாளியில் உட்கார வைத்தவன் தண்ணீரை திறந்து விட்டான். 

 

வாய்க்கு வாய் வக்கனை செய்யும் குட்டி ரகுவரனுக்கு குளியல் மட்டும் ஆகாத ஒன்று. தினமும் குளிக்க வைப்பதற்குள் பல போராட்டங்களை சந்திப்பார்கள் குளிக்க வைக்க வருபவர்கள். ரகுவரனிடம்  அடம் பிடிப்பவன் சரண் அடைந்து விடுவான் கடைசியில். அவனைத் தவிர வேறு யார் குளிக்க வைக்க முயன்றாலும் பலன் பூஜ்ஜியமாக தான் இருக்கும். 

 

“அப்பா குளுது” 

 

“குளுதா” என்றவாறு தண்ணீரை விட்டு இறங்க முயலும் மகனை கட்டி போடாத குறையாக வாளியில் அமர வைத்தான்.

 

“ஒழுங்கா பேச கூட தெரியல நீ எல்லாம் என்னை முறைக்கிற.” 

 

“நா நல்லா பேசுவேன்”

 

“அப்படியே வாயில ஒன்னு வச்சேன்னா… குளிடா முதல்ல”

 

“மாட்ட, அம்மாவ வர சொல்லு.”

 

“அவளை பத்தி பேசின தண்ணில முக்கி விட்டுடுவேன்.”

 

“எங்க அம்மாவ பத்தி நா பேசுவேன்.”

 

பதில் பேசாத ரகுவரன் அவனை வாளிக்குள் முழுவதும் முக்கி விட்டான். கதறிக் கொண்டிருந்த மகிழ்வரன் தன்னை காப்பாற்றிக் கொள்ள கைக்கு சிக்கிய தந்தையின் கையை நறுக்கு என்று கடித்தான். 

 

“அம்மாஆஆ”

 

 

“அம்மா வரட்டும் சொல்ற” சிறு சிப்பிக்குள் இருக்கும் முத்து கண்கள் முறைப்பை படையெடுக்க, பெரிய விழியோடு முறைத்து நின்றான் மகனை ரகுவரன்.

 

தந்தை மகன் இருவரும் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டு குளியலை முடித்தார்கள். மகன் கையில் விளையாட்டு பொம்மையை கொடுத்தவன் மகள் குளிக்கும் வரை குளியலறை வாசலில் நின்றிருந்து தேவையானதை கொடுத்தான்.

 

“தங்கம் டிரஸ் மாத்திட்டு வாங்க‌, தம்பிய ரெடி பண்ணிட்டு இருக்கேன்.” 

 

தயாராகி வந்த செல்ல மகளுக்கு தலை துவட்டி விட்டவன் முழுவதுமாக தயார் செய்து அழகு பார்த்தான்.

 

 

தம்பிக்கு உடை மாற்றி விடும் நேரம் மான்விழி அங்கு வந்துவிட, தாவிக் கொண்டான் அக்காவிடம். அதைக் கண்ட தந்தை அதட்டி அனைத்தையும் செய்து முடித்தான். சின்னவன் அக்காவை பார்த்துக் கொண்டே ஏதோ முணுமுணுப்பு கொடுக்க, பெரியவள் தந்தை அறியா வண்ணம் ஏதோ சைகை செய்து கொண்டிருந்தாள்.

 

 

தாமதமாக அதை உணர்ந்தவன் மகளிடம் கேட்காமல், “என்னடா உனக்குள்ள பேசிக்கிற.” விசாரிக்க, வழக்கம்போல் மதிக்கவில்லை மகிழ்.

 

சட்டை காலர் இருக்கும் இடத்தில் பட்டன் போட கை வைத்த ரகுவரன் கழுத்தை இறுக்கமாக பிடித்து, “சொல்லல அப்படியே இறுக்கிடுவ” என்று மிரட்டி முடிப்பதற்குள் அவசரமாக ஓடி வந்து தந்தையின் செயலை நிறுத்தினாள் மான்விழி.

 

“தங்கம் நீயாது சொல்லுடா இவன் என்ன சொன்னான்.”

 

“தம்பி ஒன்னும் சொல்லல அப்பா.” இளையவனை காப்பாற்றியவள் தன்னை தயார்படுத்திக் கொண்டு முன்னே செல்ல, மகனை அழைத்துக் கொண்டு பதமாக பின்னே சென்றவன் மகள் அறியாது வாயை பொத்தி ஓரமாக அழைத்து சென்றான்.

 

 

“அக்..அக்..அக்” அக்காவை அழைக்க முடியாமல் கதறியவன் வசமாக சிக்கிக் கொள்ள, “என்னடா சொன்ன” மீண்டும் கேட்டான்.

 

ரகுவரன் மகிழினி ரத்தம் எப்படி தோல்வியை ஒப்புக் கொள்ளும். 

ஒப்புக் கொண்டதை போல் நடித்து தந்தையிடமிருந்து நகர்ந்து நின்றவன், 

 

“அம்மா போனதுக்கு பதிலா உன்ன அனுப்பி இருக்கலாம். நாங்க மூணு பேரும் உன் தொல்லை இல்லாம நிம்மதியா இருந்திருப்போம்னு சொன்னேன்.” என்றவன் தந்தை கைக்கு சிக்காமல் ஓடினான்.

 

“டேய்! அப்பான்னு மதிக்கிறியாடா” தடுத்து நிறுத்தியது ரகுவரனின் கோப குரல்.

 

 

திரும்பி நின்று தந்தையை பார்த்து சிரித்தவன், “ரொம்ப சத்தம் போடாத எங்க மாமா கிட்ட சொல்லி விரட்டி விட்டுடுவேன்.” என்று வசனம் பேசியவன் தந்தை கைக்கு சிக்கவில்லை அதன் பின்.

 

 

***

 

கீழ்வீட்டில் அனைவரும் அமர்ந்திருந்தார்கள் உணவு உண்ண. சாந்தி, லட்சுமி இருவரும் காலை உணவை சேர்ந்து தயாரித்தார்கள் தங்கள் வீட்டின் பிள்ளைகளுக்காக. காலையில் நடந்தேறிய மாமன் மச்சான் சண்டையில் இன்றைய சமையல் அதிக சுவையில்லாமல் போனது. 

 

 

அக்காவை தொந்தரவு செய்யாத மகிழ்வரன் தானே தட்டு தடுமாறி படிக்கட்டு இறங்கி வந்துவிட்டான். இவனும் ஆதவ்ஸ்ரீயும் முன்பின் பிறந்த ஒத்த வயதுடையவர்கள் என்பதால் வீட்டில் விளையாட்டிற்கும் சண்டைக்கும் பஞ்சம் இல்லாமல் போகும். ஆகாஷின் புதல்வி மணாலி ஒரு வயது நிரம்பிய சுட்டி என்பதால் இவர்களுடன் ஐக்கியமாகி விட்டாள்.

 

 

 

“பாட்டி” என்ற பேரனின் குரலில் திரும்பிய சாந்தி, “மகிழு” என்று அழைத்து ஆசையோடு மடியில் வைத்துக் கொண்டார்.

 

நண்பனின் குரலை கேட்டதும் ஆதவ்ஸ்ரீ வேகமாக ஓடி வர, அவனோடு விளையாட துவங்கினான் அவர்கள் உலகில். மணாலி சமத்து பிள்ளை தூங்கிக் கொண்டிருப்பதை மறந்து இருவரும் கூச்சலிட, தூக்கம் கலைந்து தன் இருப்பைக் காட்டியது.

 

 

மகளை எழுப்பி விட்ட இரு வாண்டுகளையும் முறைத்த இனியா அவர்களிடமே சேர்த்து விட்டாள் பார்த்துக் கொள்ள. மூவரும் ஆளுக்கு ஒன்றை செய்து ரசிக்க வைக்க,

 

“மான்குட்டியாது பரவால்ல புரிஞ்சிக்கிற வயசு. மகிழ் தான் ரொம்ப கஷ்டப்படுறான் மகி இல்லாம. இவன மனசுல வச்சாது இந்த ஒரு முடிவை எடுக்காம இருந்திருக்கலாம்.” மருமகளின் முடிவை விமர்சித்தார் லட்சுமி.

 

“உண்மை அம்மா அவங்க இப்படி பண்ணுவாங்கன்னு நானே எதிர்பார்க்கல. எங்க போய் இந்த பிரச்சனை முடிய போகுதுன்னு பயமா இருக்கு.” இனன்யா.

 

“எங்க போய் முடிஞ்சாலும் நடுவுல மாட்டிக்கிட்டு முழிக்க போறது நம்ம தான்.” இனியா.

 

“ரெண்டு பேருக்கும் இவ்ளோ வீம்பு இருக்கக் கூடாது. சந்தோஷத்த எந்த அளவுக்கு காட்றாங்களோ அதே அளவுக்கு கோபத்தையும் காட்டுறாங்க. ஒன்னுக்கு ரெண்டு குழந்தைங்க ஆகிட்டாங்க இன்னமும் குணம் மாறல.” சாந்தி.

 

“இவங்க ரெண்டு பேரும் இரண்டு குழந்தைங்களுக்கு அம்மா அப்பாவா இருக்கிறதே பெரிய அதிசயம் தான்.” சதீஷ்.

 

“இவன் தான முதல்ல வார்த்தைய விட்டது. அவ மனசு எவ்ளோ காயப்பட்டுச்சுன்னு கூட இருந்து பார்த்தீங்கல. மகி இடத்துல வேற யாராயிருந்தாலும் அப்பவே கிளம்பி இருப்பாங்க. அவளா இருக்கவும் மன்னிச்சி இவன் கூட திரும்பவும் வாழ்ந்தா. அதை கூட புரிஞ்சுக்காம திரும்பவும் அவளை நோகடிச்சு இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டான்.”

 

 

“எந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டேன்.” என்ற கணீர் குரலோடு உள்ளே நுழைந்தான் ரகுவரன்.

 

 

அண்ணனைப் பார்த்ததும் பதறிய இனியா வேகமாக ஓடினாள் கணவனிடம். ஏதாவது வார்த்தையை வெளியிட்டு மீண்டும் இருவருக்குள்ளும் முட்டிக்கொள்ளும் என்ற பயத்தில் அவள் உடனே கணவனின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.

 

 

அதை உணர்ந்த ஆகாஷ் மனைவியை சீற்றத்துடன் ஏறிட, “கொஞ்சம் பொறுமையா இருங்க.” எனக் கூறி இன்னும் முறைப்பை வாங்கிக் கொண்டாள்.

 

“அப்படி என்ன உங்க அக்காவை நான் கொடுமை பண்ணிட்டேன் வீட்டை விட்டு போற அளவுக்கு. அவளுக்கு உடம்பு முழுக்க திமிரு. அந்த திமிரு தான் இந்த மாதிரி எல்லாம் பண்ண வைக்குது.” என்ற வார்த்தையை கேட்டதும் மனைவியின் வார்த்தையை மறந்த ஆகாஷ்,

 

“திமிரு அவளுக்கு இல்ல உனக்கு” என்று விட்டான்.

 

“ஆமாடா இந்த ரகுவரனுக்கு திமிர் அதிகம் தான். இப்படின்னு தெரிஞ்சு தான உங்க அக்கா என் கூட வாழ ஆரம்பிச்சா.” 

 

“என்னமோ ஆசப்பட்டு உன் கூட வாழ்ந்த மாதிரி பேசுற. கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிட்டு பேச்ச பாரு என்னமோ அவளே கால்ல வந்து விழுந்து கெஞ்சின மாதிரி.”

 

கோபம் முட்டிக்கொண்டு நின்றது அவன் முகத்தில். மகள் அங்கிருக்கிறாள் என்பதை மறந்தவன், “ஆமாடா கட்டாயப்படுத்தி தான் தாலி கட்டினேன் அதுக்கு என்ன இப்போ? உங்க அக்கா புத்தி எங்க போச்சு. கட்டின தாலிய கழட்டி எறிஞ்சிட்டு போக வேண்டியது தான.” என்று கத்தினான் நடுக்கூடத்தில்.

 

 

தந்தையின் குரலைக் கேட்ட மான்விழி பயத்தோடு அவனை ஏறிட, “ரகு உன் பொண்ணு உன்ன பார்த்துட்டு இருக்கா ‌” என்ற அன்னையின் வார்த்தையில் அப்படியே பனித்துளியாய் உருகியவன் திரும்பிப் பார்த்தான்.

 

மான்விழி பயத்தோடு அழுகும் நிலையில் இருக்க, ஓடி சென்றான். தந்தையை தன்னருகில் பார்த்ததும், “அப்பா” என அவள் பயத்தோடு விசும்ப,

 

“ஒன்னும் இல்லடா தங்கம் அப்பா சும்மா கத்தி பேசி பார்த்தேன் எப்படி இருக்குன்னு.” என தன்னோடு அணைத்துக் கொண்டான்.

 

மான்விழி விசும்பலில் ஆகாஷ் அவள் அருகில் வந்துவிட்டான். மருமகளின் சிறு விழி நீருக்கே பதறியவன், “குட்டிமா அப்பா சும்மா என்னை மிரட்டுறதுக்காக சத்தம் போட்டாங்க. என் குட்டிமா தைரியமான பொண்ணாச்சே எதுக்கு அழுகுறீங்க.” என்று சமாதானப்படுத்த அவளின் கன்னத்தில் கை வைக்க, தட்டி விட்டான் ரகுவரன்.

 

 

தந்தையின் செயலை பார்த்த மான்விழி மீண்டும் பயத்தோடு ஏறிட, “என் பொண்ணுக்கு நான் ஆறுதல் சொன்னா தான் ரொம்ப பிடிக்கும்.” என்று புன்னகைத்தவன் மகளின் நெற்றியில் முட்டி,

 

“தங்கம் எப்பவும் எதுக்கும் அழக்கூடாது. உன் அம்மாவ பார்த்து இருக்கல… அவ உனக்கு முடியாம இருந்த அப்போ கூட அழாம தைரியமா இருந்தா. என் பொண்ணு அப்படியே அவ அம்மா மாதிரி ரொம்ப தைரியமா இருக்கணும். அப்பா மாமா’னு யார் கூட இருந்தாலும் இல்லனாலும் என் தங்கம் இருக்கிற பிரச்சனையை சமாளிக்கனும்.” என்று முட்டிய நெற்றியில் முத்தமிட்டான். 

 

அழுகை கலந்த பயத்தில் மான்விழி சம்மதமாக தலையசைக்க, “என் பொண்ணு கூட எப்பவும் அப்பா இருப்பேன்.” என்று தூக்கிக் கொண்டான் தன் உயரத்திற்கு. மகளின் அழுகைக்கு காரணமானதால் அவள் சிரிக்கும் வரை எங்கும் நகரவில்லை. சாப்பாடு ஊட்டி பள்ளி வரை விட்டவன் யோசனையோடு தன் அலுவலகம் வந்து சேர்ந்தான்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
20
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்