Loading

“இது சரியா வராது மாமா. ஒருவேளை உங்க விளையாட்டுப்பிள்ளை அன்னைக்கு ஏதாவது விளையாடி வச்சாருன்னா, எல்லாமே கெட்டுடும்.” என்று மறுத்த சத்யா, பானுரேகாவிடம், “கேட்டரிங்க்கு பசங்களை சொல்றேன் அத்தை. அவங்க சரியா வேலை பாக்குறாங்களான்னு நானே நின்னு பாத்துக்குறேன்.” என்றாள் உறுதியாக.

அதில் அவருக்கு அதிருப்தி இருந்தாலும், மறுக்கவில்லை.

மேலும், மண்டபத்தின் அலங்காரத்தில் ஆரம்பித்து, மறுவீடு வரைக்கும், அவள் ஒரு யோசனை கூற, பானுரேகாவோ வேறு கூறினார்.

சிலதை ஒப்புக்கொண்டவள், சிலவற்றில் அது சரியாக வராது என்று விவாதம் செய்தாள்.

அவள் கிளம்பியதும், சத்யரூபாவை பாவமாக பார்த்து வைத்த பாலகிருஷ்ணன், “ஏன் பானு, அந்த பொண்ணை அலைக்கழிக்கிற. பாவம் தனியாளா நின்னு அத்தனை வேலையும் பார்க்குது. அதான் இந்தரே, கல்யாண வேலையை அவனே பாத்துக்குறதா சொல்லிட்டான்ல. அப்பறமும் ஏன் சத்யாவை அலைய வைக்கிற.” என்றார்.

“நானும் முதல்ல இதை யோசிச்சேன் தான். ஆனா, கல்யாண வேலையை பார்க்க முடியலன்னு அவள் சொல்லவே இல்லையே. பரிமாற கூட, இந்தர் உதவி வேணாம் நானே பாத்துக்குறேன்னு சொல்லிட்டா. அதுக்கு மேல, நீ எதுவும் பண்ண வேணாம்மா. காலாட்டிட்டு மண்டபத்துக்கு வந்தா போதும்ன்னு ஏன் சொல்லணும். இந்த வயசுல பொறுப்பை எடுத்துக்குறது நல்லது தான். அவளே பார்க்கட்டும்!” என்று விட்டு அறைக்குள் சென்று விட்டார்.

தமைக்கையின் அறை இருக்கும் இடத்திற்கும், பானுரேகா குறிப்பிட்ட கேட்டரிங் சர்விஸ் நிறுவனத்திற்குமாக தூரம் அதிகமாக இருக்க, அவள் உபயோகப்படுத்திக் கொண்டிருந்த வைஷாலியின் வண்டியை வீட்டில் நிறுத்தி விட்டு, மெட்ரோவில் பயணித்தாள்.

அந்நிறுவனத்திற்குள் நுழைந்து, உரிமையாளரிடம் திருமண தேதியைக் கூற, அவரோ எடுத்த எடுப்பிலேயே அந்த தேதிக்கு ஏற்கனவே வேறு இடத்தில் புக் ஆகி விட்டதாகக் கூறியதில் அவள் நொந்து விட்டாள்.

‘கொஞ்சம் முன்னாடியே வந்து இருக்கணுமோ… இதை அத்தைகிட்ட சொன்னா, அவங்க ஒத்துக்கவும் மாட்டாங்க. இப்ப என்ன செய்றது?’ என யோசித்தவள், அவரிடம் பேசிப்பார்க்க, அவரோ முடியவே முடியாது என்று விட்டார்.

மேலும், “நீ சொன்ன தேதில புக் பண்ணிருக்குறது இவரு தான்மா. அந்த நாள் ரொம்ப கஷ்டம்” என்று பின்னால் நின்ற ஒருவனைக் காட்டி கூற, அவள் திரும்பி பார்த்து திகைத்தாள்.

கையில் ஹெல்மெட் சகிதம், நமுட்டு புன்னகையுடன் அங்கு வந்து நின்றான் இந்திரஜித்.

“ஏற்கனவே கேட்டரிங்க்கு சொல்லிட்டீங்களா? என்கிட்ட சொல்றதுக்கு என்ன…” என்று கடிந்து கொண்டாள்.

“நீ கேட்கவே இல்லையே.” அசட்டையாகக் கூறியவன், அவளது முறைப்பு தொடர்வதைக் கண்டதும்,  “நம்ம ஃபிக்ஸ் பண்ணி இருக்குற அன்னைக்கு நிறைய கல்யாணம் இருக்கு ரூப்ஸ். அதான், முன்னாடியே நான் சொல்லி வச்சு அட்வான்ஸ் குடுத்தேன்.” என்றான் நல்லபையனாக.

அப்போது தான் சற்று மனம் நிம்மதியடைய, “ரூப்ஸா?” என்று சத்யா விழித்தாள்.

“ம்ம். சத்யரூபான்னு நீட்டி முழக்கி கூப்புடுறதுக்குள்ள உனக்கு கல்யாணம் ஆகி குழந்தையே பிறந்துடும் ரூப்ஸ். ஆமா எனக்கு ஒரு டவுட்டு” என்று அவளது அனலடிக்கும் பார்வையை கருத்தில் கொள்ளாமல் தீவிரத்துடன் கேட்டிட, “என்ன?” என்றாள் எரிச்சலுடன்.

“நீ வெறும் ரூபாவா…? இல்ல நூறு ரூபா…ஆயிரம் ரூபான்னு அடைமொழி ஏதாவது இருக்கா?” எனக் கேட்டு, அவளது முறைப்பை பரிசாக வாங்கி கொண்டான்.

“இந்த அரேஞ்ச்மென்ட் எல்லாம் பொண்ணு வீட்ல தான பாக்கணும். நீங்க ஏன் அட்வான்ஸ் குடுத்தீங்க…” என்று அவள் பேச்சை மாற்ற,

“ஜஸ்ட் புக் பண்ண தான் குடுத்தேன். எனக்கு பணத்தை ‘ஜிபே’ பண்ணிடு ரூப்ஸ். அப்பறம், பொண்ணு வீட்ல என்னை ஏமாத்திட்டாங்கன்னு கல்யாணத்து அன்னைக்கு பிரச்சனை பண்ணுவேன்.” என்றவனின் முகத்தில் இருந்த குறும்பு வார்த்தைகளிலும் தெறித்தது.

அதற்கும் அவனை முறைத்தவள், மறக்காமல் அவனது ஜிபே எண்ணையும் வாங்கி விட்டே நகர்ந்தாள்.

அவள் பின்னே சென்றவன், பார்க் செய்திருந்த தனது வண்டியையும் எடுத்து அவள் முன் நிறுத்தினான்.

“வா ரூப்ஸ். நான் ட்ராப் பண்றேன்.” அவன் வண்டியை உறுமியபடி கூற,

“ஒண்ணும் தேவை இல்ல.” என்றாள் வெடுக்கென.

“உஷ்… இப்ப ஏன் இப்டி கத்துற? மெதுவா பேச முடியாதா உன்னால…” என்றவனுக்கு அனாவசியமாக சத்தம் போட்டு பேசுவது சுத்தமாக பிடிக்காது.

அவனுக்கே கோபம் வந்தால் கூட வார்த்தைகளில் அழுத்தத்தை அதிகப்படுத்துவானே தவிர, சத்தமிட மாட்டான்.

“பேச முடியாது.” அவளும் வீம்பாக மீண்டும் சத்தமிட, அவன் சட்டென வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தி அவளைத் தாண்டி சென்று விட்டான்.

அதில் சிறிதான கோபமும் வெளிப்பட்டதோ, என்ற ஐயத்துடன் சில நொடிகள் அங்கேயே நின்றவள், ‘நான் எப்படி பேசுனா இவனுக்கு என்னவாம்? வந்துட்டான்…’ என்று கருவிக்கொண்டாள்.

முதல் பத்திரிக்கையை சம்பந்தி வீட்டில் வைத்து விட்டு, மற்றவர்களுக்கு கொடுப்பதற்காக அலைந்தனர் தாமரையும் சத்யரூபாவும்.

ஊருக்கு சென்று முதல் வேலையாக, தனது கணவனின் உடன்பிறந்த தங்கையான ஆனந்திக்கு பத்திரிகை கொடுக்க அவரது வீட்டிற்கு சென்றனர். வசதி மிக்கவர்கள் தான். அந்த கர்வம் எப்போதும் ஆனந்திக்கும், அவரது கணவனான ஐயப்பனுக்கு நிறையவே உண்டு.

“வாங்க அண்ணி. ஒருவழியா மாப்பிள்ளை பாத்துட்டீங்க போலயே. எவ்ளோ நகை போட போறீங்க?” எனக் கேட்டிட,

“சம்பந்தியம்மா அதெல்லாம் நம்ம இஷ்டம்ன்னு சொல்லிட்டாங்க ஆனந்தி.” எனப் பெருமையாகவே கூறினார் தாமரை.

“இப்ப அப்டி தான் சொல்லுவாங்க அண்ணி. அதுக்காக வெறுமனே கட்டிக்கொடுக்க முடியுமா? நம்ம தூரத்து சொந்தத்துல இப்படி தான், ஒரு பொண்ணுக்கு வரதட்சணை எல்லாம் வேணாம்ன்னு பெருமையா சொல்லிக்கிட்ட மாப்பிள வீட்டாளுங்க, கல்யாணத்து அன்னைக்கு, நகை கம்மியா இருக்கு, பணம் வச்சு குடுக்கலன்னு ஒரே தகராறு ஆகிடுச்சு. அப்படி எதுவும் ஆகிடாம பாத்துக்கங்க. உங்க நிலைமைக்கு ஒரு பொண்ணோட கல்யாணத்தை எடுத்து நடத்துறதே பெரிய விஷயம். அதுலயும் சிக்கல் ஆகிட்டா, அடுத்தவ கல்யாணம் நடத்த கஷ்டமாகிடும். சும்மாவே இவ பேசுற வாய்க்கும் திமிருக்கும் ஒருத்தன் வர்றதே குதிரை கொம்பு தான்.” என்று தன் போக்கில் தாமரையை வருத்தினார்.

தாமரைக்கோ பக்கென்று இருந்தது. திருமணத்தன்று எந்த பிரச்சனையும் நேரக்கூடாது என்று கடவுளுக்கு அவசரமாக ஒரு மனுவைப் போட்டு வைக்க, சத்யரூபா அவரை வெறுப்பாகப் பார்த்தாள்.

“அப்படி எந்த பிரச்சனையும் வராது அத்தை” எனத் திட்ட வட்டமாக உரைத்தவளின் விழிகள் எழிலழகனைத் தேடியது.

அதற்கேற்றாற் போல, “எழில் வீட்ல இல்லையா ஆனந்தி” என தாமரைக் கேட்க,

“அவனுக்கு என்ன கவர்மெண்ட் உத்தியோகம். நினைச்ச நேரத்துக்கு வீட்ல இருக்க முடியுமா அண்ணி.” என அதற்கும் எகத்தாளம் புரிந்தார். எழிலலகன், அரசு வங்கியில் மேலாளராக இருக்கிறான். தஞ்சாவூரில் வேலை என்பதால், கிராமத்திற்கும் வங்கிக்கும் அலைய முடியாதென்று தஞ்சாவூரிலேயே இருந்து கொண்டான்.

ஊருக்கு வராமல் இருப்பதற்கு அவளும் ஒரு காரணம் தான் என்று புரிந்ததும், வலித்தது சத்யாவிற்கு.

இதோ அதோவென கல்யாண நாளும் நெருங்கியது. திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு, அனைவரும் மண்டபத்தில் கூடி இருந்தனர்.

நலுங்கு வைக்க, பெண்ணை அழைத்து சம்பிரதாயத்தை முடித்தவர்கள், மணமகனைத் தேடிட, சிரஞ்சீவி தான் அறையில் இல்லை.

பாலகிருஷ்ணனோ, “இந்தர், உன் அண்ணன் எங்கடா போனான்?” எனக் கேட்டிட,

“என்னை கேட்டா? ரூம்ல தான் இருப்பான்” என்றதில், “இல்லடா நான் மண்டபம் முழுக்க தேடிட்டேன். அவனை காணோம். ப்ரெண்ட்ஸ்க்கு பேச்சுலர் பார்ட்டி கொடுக்க எதுவும் போயிருக்கானா? ஆனா, உன் அம்மா பெர்மிஷன் இல்லாம போயிருக்க மாட்டானே, அந்த நல்லவன்” எனக் குழம்பினார்.

பானுரேகாவும், “நானும் அவனை தாங்க ரொம்ப நேரமா தேடுறேன். இந்தர் கூட இருப்பான்னு நினைச்சேன்.” என்றவருக்கு ஏனோ படபடத்தது.

“அடடடா! அவன் ரூம்ல தான் இருப்பான்.” என்று சிரஞ்சீவியின் அறைக்குள் சென்று தேட, அங்கு தலையணைக்கு அடியில் ஒரு கடிதமே கண்ணில் பட்டது.

தான் வேறு ஒரு பெண்ணை விரும்புவதாகவும், அதைக் கூற தைரியம் இல்லாமல் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும், தற்போது அவளை மறக்க இயலாமல், அவளைத் தேடி சென்று விட்டதாகவும் எழுதி இருந்தவன், தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று தெள்ளத்தெளிவாகக் கூறி இருக்க, குடும்பத்தினர் அதிர்ந்து விட்டனர்.

பானுரேகாவிற்கு கோபம் கொப்பளித்தது. ‘என்ன காரியம் செய்து விட்டான்?’ அவருக்கு ஏமாற்றமாக இருந்தது.

இதனை அறிந்த தாமரையும் சாவித்ரியும் உடைந்து விட்டனர்.

சத்யரூபா தான் பேயாட்டம் ஆடினாள். “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? திடீர்ன்னு மாப்பிள்ளை ஓடிப்போய்ட்டான்னு ஈஸியா சொல்றீங்க? என் அக்காவோட கல்யாணம் என்ன ஆகுறது…” என்று கத்தி தீர்த்தாள்.

வைஷாலி தான், “சத்யா பொறுமையா இரு.” என்று அவளை அமைதி படுத்த முயல, “நீ சும்மா இருக்கா. உனக்கு ஒண்ணும் தெரியாது” என்று தமைக்கையை அதட்டியவள், “பதில் சொல்லுங்க அத்தை. இப்ப எல்லார் முன்னாடியும் நாங்க அசிங்கப்பட்டு நிக்கணுமா?” என்றாள் கோபத்துடன்.

பானுரேகாவும் அதிர்வில் இருந்ததில், அவளுக்கு பதில் அளிக்க கூட இயலவில்லை.

இந்திரஜித் தான், “உன் சவுண்ட் சிஸ்டம ஆன் பண்ணாத ரூப்ஸ். ஏதோ ஒரு லெட்டரை வச்சு, ஜீவி ஓடிப்போய்ட்டான்னு சொல்ல முடியாது. ஒருவேளை ஏதாவது பிரச்சனைல கூட மாட்டி இருக்கலாம்” என தமையனுக்கு ஆதரவாகப் பேச,

“ஓ… பிரச்சனைல மாட்டுறவரு. தெளிவா கடுதாசி எழுதி வச்சுட்டு போறாரா” அவள் நக்கலாக கேட்டாள்.

“யாராவது அவனை கடத்தி இருந்தா?” விழிகளை உருட்டி இந்திரஜித் கேட்டதில், “உங்க அண்ணன் என்ன, டாடா பிர்லாவோட பேரனா, இல்ல ஆணழகனா? ஏதோ சின்ன பையனை கடத்தி வச்ச மாதிரி சொல்றீங்க.” என்று எகிறினாள்.

“அமைதியா பேசு சத்யா. நம்ம பிரச்சனை நமக்கு மட்டும் தெரிஞ்சா போதும் ஊருக்கே தெரிய வேண்டியது இல்ல.” இம்முறை அவன் குரலில் ஒரு அழுத்தம் மிகுந்தது.

“நாளைக்கே எல்லாருக்கும் எங்க குடும்பம் மானம் பேசு பொருளாகுமே அப்ப என்ன செய்வீங்க. எல்லார்க்கிட்டயும் போய் பேசாதன்னு சொல்லுவீங்களா…” என்றே எரிச்சலானாள்.

“விடியிறதுக்குள்ள அவனை கண்டுபிடிக்கலாம்…” என்றவனிடம்,

“என்ன பேசுறீங்க. வேற ஒரு பொண்ணோட போக போறேன்னு எழுதி வச்சுட்டு போன உங்க அண்ணன், விடிஞ்சதும் மனசு மாறிடுவாரா? எனக்கு இப்பவே ஒரு முடிவு தெரியணும். மணமேடை வரைக்கும் வந்துட்டு கல்யாணம் நின்னு போனா, எவ்ளோ கஷ்டம் தெரியுமா?” என்றாள் கலக்கத்துடன்.

“இன்னும் மணமேடைக்கு வரவே இல்லையே ரூப்ஸ். காலைல வரைக்கும் டைம் இருக்கே.” என கேலி புரிந்தவனை, தீயாக சுட்டவளை யாராலும் அடக்கத்தான் இயலவில்லை.

தாமரைக்கும் மகளின் வாழ்வை எண்ணி நெஞ்சே வலிக்கும் போல இருந்தது. இறுதியில், “இப்ப என்ன தாண்டி பண்ண சொல்ற?” என்று கடுப்புடன் இந்திரஜித் கேட்டதில், “என் அக்காவை நீ கல்யாணம் பண்ணிக்கோ” என்றாள் அழுத்தமாக.

இந்த திருப்பத்தை எதிர்பாராமல் அவன் தான் ஒரு கணம் திகைத்தான்.

“ஹே… என்ன ரூப்ஸ் உளறுற? அண்ணன் போனா தம்பி கல்யாணம் பண்ணிக்கிறதுலாம் சீரியல்ல தான் நடக்கும். நிஜத்துல…” என்று பேசி முடிக்கும் முன்னே,

“நிஜத்துலயும் நடக்கும் இந்தர். என் அக்காவை நீங்க கல்யாணம் பண்ணி தான் ஆகணும்.” என்று பிடிவாதம் பிடித்திட,

‘ஓ… காட். இந்த பைத்தியத்துகிட்ட இருந்து என்னை காப்பாத்து’ என்று மானசீகமாக நொந்தான் இந்திரஜித்.

சில நிமிடங்களில் நிதானத்திற்கு வந்த பானுரேகா, “போதும் சத்யா… இப்படி அவன் எங்க கழுத்தை அறுத்துட்டு போவான்னு நாங்களும் எதிர்பார்க்கல. நடந்த தப்ப நான் சரி பண்றேன். நாளைக்கு காலைல உன் அக்கா கல்யாணம் நடக்கும். இந்தர் தாலி காட்டுவான்.” என்று முடிவாகக் கூறி விட,

“ஹலோ அம்மா. என்ன விளையாடுறீங்களா? ஏதோ உங்க பிசினஸை பாத்துக்காம வெளில வேலைக்கு போறேன்ற கோபத்துல என்னை அப்போ அப்போ முறைச்சு பாக்குறீங்கன்னு சும்மா விட்டா, இப்ப என்னை சிக்கல்ல மாட்டி விட பாக்குறீங்க. அதெல்லாம் முடியாது” என்று மறுத்திட, சத்யரூபா விடவில்லை.

“என் அக்காவோட கல்யாணம் நடந்தே தீரணும் இந்தர். அதான் உங்க அம்மாவே சொல்லிட்டாங்கள்ல.” என்று திமிராய் நின்றவளை, மேலிருந்து கீழ் வரை அழுத்தமாக பார்த்தவன், “சரி பண்ணிக்கிறேன்” என்று அமைதியாகக் கூறிட, அதன் பிறகே அங்கு ஒரு நிம்மதி பரவியது.

மறுநாள், உறங்கி எழுந்து முகூர்த்தத்திற்கு கிளம்ப சொல்லும் பொருட்டு, வைஷாலியின் அறைக்குள் செல்ல, ட்ரெஸிங் டேபிளில் ஒரு கடிதம் கிட்டியது சத்யாவிற்கு.

“வைஷுக்கா” என குளியறை நோக்கி சத்தம் கொடுத்தபடி, அக்காகிதத்தைப் பிரித்தவளுக்கு, கை நடுங்கி, கண்கள் கலங்கிப் போயிற்று.

அலைபாயும்…
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
16
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்