Loading

அந்த வயலில் அப்படி என்னதான் நிகழ்கிறது என்று, அன்று இரவு எப்படியும் சோதித்து விடுவது என்று கணியும் அதியும் முடிவுக்கு வந்தனர்.

 

“என்ன நீங்க..? இது விபரீத முடிவு இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்..?” கீர்த்தி.

 

“உன்னை யாரு கேட்டா..” அதி.

 

“டேய் என்ன எப்பவுமே நான் சொல்றத கேக்க மாட்டீங்களா.. இது நல்ல ஐடியா இல்லை. அந்த இடத்தில் காத்து கருப்பு இருக்கோ இல்லையோ.. ஆனா ஏதோ நடக்குதுல.. அது நமக்கும் நடந்துச்சுன்னா என்ன ஆகுறது.. நேரா போகாம வேற ஏதாச்சும் ஆப்ஷன் இருக்கான்னு பாக்கலாம்..”

 

“ஆமா அதி.. கீர்த்தி சொல்றதும் சரிதான். நாம நேர்ல போக வேண்டாம். மணிய ஒரு கேமரா ஃபிக்ஸ் பண்ண சொல்றேன். என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுட்டு அப்பறம் போகலாம் அங்க. அதுல ஏதாவது துப்பு கிடைக்க கூட வாய்ப்பிருக்கு..”

 

“சார்… காணாம போனவுங்க ஏழு‌ பேர் சொன்னீங்க இல்லையா.. அதுல இந்த ஊரை சேர்ந்தது யாரு.. அவரைப் பத்தி விசாரிச்சீங்களா..?”அதி.

 

கணி யோசனையுடன் அந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அதியின் வினா கணியின் செவியை சென்றடைந்ததாக தெரியவில்லை.

 

“சார்… உங்களதான்…”

 

“என்ன கேட்ட…”

 

“இந்த ஊர்ல காணாம போனது யாரு… அவுங்களைப் பத்தி விசாரிச்சீங்களா..?”

 

“ம்ம்ம்… திருநல்லன்.. இவரும் விவசாயிதான். இதுவரைக்கும் ரசாயன உரைங்களைப் பயன்படுத்தாத விவசாயி..”

 

“கிரேட் சார்… அப்பறம் வேற ஏதாச்சும் தகவல்..”

 

“டேய் அதி… வழக்கமா அவருதான கேள்வி மேல கேள்வி கேட்டு சாவடிப்பாரு.. இப்ப நீ கேக்குற.. அவரு அமைதியா பதில் சொல்றாரு..” கீர்த்தி.

 

“சும்மா இருடா நீ… சார் நீங்க சொல்லுங்க அவரைப் பத்தி…”

 

“இந்த ஊர்ல உள்ள நிறைய பேரை வழிநடத்திருக்காரு ரசாயன உரங்கள் வேண்டாம்னு. அதனால அவர் மேல சில பொய்‌ குற்றச்சாட்டு வழக்குகள் கூட இருக்கு. அப்பறம் மீத்தேனுக்கு எதிரா போராட்டம் செய்ததில் இவரும் ரொம்ப முக்கியமான ஆள்.. வேதாந்தா குரூப், ஓ. என். ஜீ. சி பேர்ல பூமில பைப் போட்டப்போ நிறைய ஊர்ல‌ கிளர்ச்சியைத்‌ துண்டிருக்காரு.. நெடுவாசல், நன்னிலம் போன்ற கிராமங்களில் நடந்த கலவரங்களை முன்னாடி நின்னு வழி நடத்திருக்காரு. உச்சகட்டமா பூமியைத் தோண்டி போட்ட பைப்பை பிடுங்கி எரிஞ்சுருக்காங்க..”

 

“சார் என்ன‌ சார் அடுக்கிட்டே போறீங்க..”

 

“இன்னும் முடியலடா.. இவர் சித்த மருத்துவம் படிச்சவரு.. ஊர்ல உள்ளவுங்களுக்கு அப்பப்போ வைத்தியம் பாத்திருக்காரு..” கணி.

 

“சார் ஒரு வேளை மீத்தேன் திட்டத்தை நடைமுறைப் படுத்த‌ எந்த இடையூரும் இருக்கக் கூடாதுன்னு இந்த மாதிரி செஞ்சிருப்பாங்களா..” அதி.

 

“ஆமா சார்…‌ எனக்கும் என்னமோ மீத்தேன் பிரச்சனையாத்தான் இருக்கும்னு தோணுது…” கீர்த்தி.

 

“ப்ப்ஸ்ஸ்… ஆனா அவரைத் தவிற வேற யாரும் அந்த பிரச்சினையோட சம்மந்தப்பட்டவுங்க இல்லை…  எனக்கு என்னமோ அப்படி தோணல..” கணி.

 

“ஏன் சார் போன தடவ மாதிரி இருக்க கூடாது. நம்மள திசை திருப்ப இப்படி செஞ்சிருக்கலாம்ல… அந்த லாக்கர் கொள்ளை ஞாபகம் இருக்கா.. அதே மாதிரி நம்ம கணிக்கக் கூடாதுன்னு இப்படி செஞ்சிருந்தா..” அதி.

 

“அவுங்க எல்லாருக்கும் ஏதோ ஒரு ஒற்றுமை இருக்கு… அது என்னனு கண்டுபிடிக்கணும்.. எனக்கு இதுல வேற ஏதோ ஒன்னு இருக்க மாதிரி தோணுது..”கணி.

 

“சார்… நீங்க அவுங்க எல்லாரையும் பத்தி சேகரிச்ச தகவல் எல்லாத்தையும் நாம இன்னோரு தடவ சரி பாக்கலாம். மதுவ காணும்கிறதால உங்களுக்கு கொஞ்சம் பதட்டமா இருந்திருக்கலாம். உங்க கண்ணுக்கு தெரியாத எதாவது எங்க கண்ணுக்கு தெரிய வாய்ப்பிருக்கு..” அதி.

 

“சரி… நான் எல்லா டீடெயிலையும் அனுப்ப சொல்றேன்..”

 

“அதெல்லாம் சரி.. கண்டுபடிக்கலாம்… ஆனா இந்த விவசாய நிலம்.. இதைப் பத்தி என்ன முடிவு செய்றதுன்னே தெரியலையே..” கீர்த்தி.

 

சிறுதி நேர அமைதி. மூவருமே யோசனையில் ஆழ்ந்தனர். இது எப்படி சாத்தியம். ஆறு மாதம்‌ முன்பு அறுவடை செய்யப்பட வேண்டிய நிலம் அதே நிலையில் இன்றளவும் இருக்கிறது என்றால், அது  ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றா என்ன.

 

“சார் எனக்கு ஒன்னு தோணுது..” அதி.

 

“என்ன..?” கணி.

 

“இது ஏன் நனியிதழோட வேலையா இருக்கக்கூடாது..” 

 

“வாட்..?”

 

“ஏன் சார் இருக்கக்கூடாது. எனக்கு தெரிஞ்சு அவளால மட்டும்தான் இதை பண்ண முடியும்..” அதி.

 

“நான் இந்த கோணத்துல யோசிக்கல அதி.‌.”

 

“சார்… வர வர உங்க மூளை மலுங்கிட்டே வருது… இது சரியில்ல.. வந்ததுலேந்து அவன் பல ஹிண்ட் குடுத்து ஸ்கோர் பண்ண பாக்குறான்.. நீங்க உங்க லீட விட்றாதீங்க.. சொல்லிட்டேன்..” என்று கீர்த்தி கூற, மெல்லிய நகைப்பொன்றை உதிர்த்த கணி, அவனின் முதுகில் ஒரு தட்டு தட்டினான்.

 

“சார்.. நீங்க கேள்வியா கேட்டு கொலையா கொன்னாலும் பரவாயில்லை.. இந்த மாதிரி தட்டுற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க..” கீர்த்தி.

 

“டேய் செல்லமா தட்டுனேன்..”

 

“உங்களுக்கு செல்லமா இல்லைனாலும் பரவாயில்ல. அதுக்காக இப்படி அடி வாங்க முடியாது.. வலிக்கிது சார்.. செல்லமா தட்டுனதே இப்படினா நீங்க லாடம் கட்ற குற்றவாளோட நிலைமைய நினைச்சா ஈரக்கொல நடுங்குது..” என்று கீர்த்தி கூற மூவரும் நகைத்தனர்.

 

“சரி‌ வாங்க போய் சாப்பிடலாம்” என்று அந்த ஊரில் இருந்த ஒரு ஹோட்டலுக்கு சென்றனர்.

 

ஹோட்டல் சிறியதாகதான் இருந்தது. ஆனால் உணவின் தரமும் சுவையும் நட்சத்திர ஹோட்டலுக்கு குறைச்சலில்லை. அப்படி ஒரு ருசி. மூவருமே களைத்திருந்ததால் நன்றாக உண்டனர். உண்டு முடித்து, கடையின்‌‌ கல்லாவில் இருந்தவரிடம் எவ்வளவு என்று கேட்க, “தம்பிக எல்லாம் வெளியூரா…” என்றார் அவர்.

 

“ஆமா.. எப்படி கண்டுபிடிச்சீங்க..” கீர்த்தி.

 

“இத கண்டுக்கிட அமேரிக்காவுலையா படிக்கோணும். மொகரய பாத்தேலே கண்டுக்கிடுவோம்ல..”

 

“அது சரி…‌ இந்த ஊர்ல உள்ளவைங்க எல்லாம் திமிரு  புடிச்சவங்க போல..” கீர்த்தி.

 

“சோழன்‌ ஆண்ட மண்ணுல.. 2000 வருஷமா நெல்லு விளஞ்ச பூமி எங்க ஊரு.. நாலு எலுத்த படிச்சுப்போட்டா துமுரு வருது பட்டணத்துல.. நாப்பது ஏக்கராவ உலுது விதவிதமா விளைய வக்கிறோம். நாங்கதேன் துமுரா திரியோணும்.. ராசராசன் எங்க பாட்டன். அவன் துமுரு இன்னும் இந்த மண்ணுலையும் ஒட்டிக்கிட்டு கிடக்கு.. எங்க நெஞ்சுலையும் விளைஞ்சு கிடக்கு.. எம்சுட்டு காலஞ்செண்டாலும் மாத்தமுடியாது…”

 

“டேய் கீர்த்தி… வாயக் குடுத்து வம்ப வாங்காதடா.. அண்ணே சாப்டதுக்கு எவ்ளோ ஆச்சுன்னு சொல்லுங்க.. ஆனா சும்மா சொல்லக் கூடாது. சாப்பாடு ரொம்ப அருமை. நான் இதுவரை இப்படி ஒரு இட்லிய சாப்பிட்டதில்ல..” கணி.

 

“ஆமா… எங்க வயிரும் மனசும் நிறைஞ்சிருச்சு..” அதி.

 

“காசு வாங்குறது இல்ல தம்பி.. உங்க வயிரும் மனசும் நிறைஞ்சா போதும்ங்க.. இது இந்த ஊரு வளக்கம்..”

 

“என்ன காசு வாங்குறதில்லையா..? என் காது சரியா கேக்குதா.. இல்லை ஈ.என். டிய பாக்கணுமா..?” கீர்த்தி.

 

“இன்னும் ஒம்ம செவிப்பறை‌ கிளியல.. அது ஜோரா இருக்கு…இந்தூர்ல சாப்பாடுக்கு காசு கிடையாது..”

 

“ஏன்..?” கணி.

 

இந்தாங்க என்று ஒரு நெல்மணியை எடுத்து கணியின் கையில் கொடுத்தார்.

 

“இது என்ன..?” 

 

“நெல்லு..” கணி.

 

“ஆமா… 2000 வருஷம் நெல்லு விளைஞ்ச பூமின்னு சொன்னீங்க.. இது நெல்லுன்னு தெரியலையா..” என்ற‌ கீர்த்தியை முறைத்தார் அந்த ஹோட்டல் உரிமையாளர்.

 

“இது போட்டா பூமில என்ன விளையும்..”

 

“நெல்லு போட்டா நெல்லுதான் விளையும். புல்லா விளையும்..” கீர்த்தி.

 

“மொத பூமிலேந்து புல்லுதேன் துளுத்து வரும்.. இது தெரியாம இத்தன வருசமா சோறுண்ணுருக்கீக.. பால் சௌத்தாள் பைல இருக்கும்.. அரிசி மூட்டைலேந்து வரும்னு உம்ம புள்ளைக சொல்லையில விசனப்படாம பல்லிளிக்கிற பட்டணத்துக்காரவுகள கொமட்டுலே இடிக்கோணும் மொத. அப்பதேன் சரியா வரும்..”

 

“ஆத்தி… இந்த ஊரு காரங்க எல்லாம் கொலைக்காரங்களா இருப்பாங்க‌ போல..” கீர்த்தி.

 

“வாயத் தொற்க்காதனா கேக்கணும்..”அதி.

 

“சரி… நாங்க பட்டணத்து காரங்க… எங்களுக்கு உங்க அருமை பெருமை தெரியாது. இப்ப நீங்க கேட்ட கேள்விக்கும் இங்க காசு வாங்காததுக்கும் ஏதாச்சும் சம்மந்தம் இருக்கா..” கணி.

 

அவர் ஏதோ பெரிதாக காரணம் கூறக்கூடும் என்று மூவரும் ஆர்வமாய் அவரைப் பார்க்க, “நெல்லுலேந்து நெல்லு விளையுது. அதுக்கு காரணம் இருக்கா… அதே மாதிரி இதுக்கும் காரணமில்ல..” என்றார் நக்கலுடன்.

 

“உடம்பு முழுக்க குசும்பு..” என்று முணுமுணுத்தான் கீர்த்தி.

 

“உடம்பு முழுக்க காதும் இருக்கு தம்பி… மெல்லமா முணுமுணுத்தாலும், என்னைய ஏசுனீகளா இல்ல பேசுறீங்களான்னு சரியா‌ கண்டுக்கிடுவோம்..”

 

“அது சரி..‌அப்ப தினம் வந்து ஓசில இங்க சாப்டா என்ன செய்வீங்க..” கீர்த்தி.

 

“விருந்தும் மருந்தும் மூணூ நாளைக்குதேன்.. விளங்குணவனுக்கு விருந்து. விளங்காம கொலுத்து போய் திரியிற வெட்டி பயலுக்கு தொறட்டி கம்பு..”

 

“டேய் கீர்த்தி பேசாம இருக்க மாட்ட.. இதுவரை என்‌ வாழ்க்கையில் இப்படி ஒரு ஊரைப் பாத்தது இல்லை. கொஞ்சம் சொல்லுங்க உங்க ஊரைப் பத்தி..” கணி.

 

“அட…‌ கதை‌ கேக்குறீகளா..? சரி அங்கன ஒக்காருங்க… இந்தா சோலிய முடிச்சுப்போட்டு வாரேன்..” என்றார் அவர். அப்பொழுது அந்த பக்கம் ஒருவன் சென்றான்.

 

“ஏல வெள்ள சாமி.. முத்தழகு புள்ளைக்கு காதுக்குத்தாமுல.. அங்காளி பங்காளி ஒருத்தனையும் வுடலையாமே… அம்புட்டு பயலுவலையும் வர சொல்லி பத்திரிக்கை வச்சிருக்கானாமே… திருளா கணக்கா காதுக்குத்தா… ஆமா எத்தனை கெடா வெட்றாகளாம்… ஒப்பாரு, ஒங்கக்கா அல்லாரும் கூடுறீகன்னு சேதி வந்திச்சி.. நெசாமா..”

 

“எம்புட்டு கேள்வி.. கொஞ்சம் மூச்சு வுடுணே… திருப்பாச்சி வீச்சருவால தீட்டுவீயளோ ஒம்ம காத.. சேதி அம்புட்டும் காத்தோட கரஞ்சு உம்ம காதுக்கு வந்திருச்சு..  நிசம்தேன் அம்புட்டும்… நான் புள்ளைக்கு ரெட்ட வட சங்கிலி போடலாம்னு இருக்கேன்..”

 

“என்ன… வீச்சருவா‌ வச்சு காத தீட்டுவாங்களா… முடியலடா இவைங்க பில்டப்பு… உண்மையிலே பொலப்பாங்களா இல்ல கைப்புள்ள மாதிரி சுத்துறாங்களான்னே தெரியலையே…” கணி.

 

“டேய் கீர்த்தி… இங்க இருக்க வரைக்கும் நீ  எதுவுமே நினைக்காம இருக்கதுதான் நல்லது. இல்ல சேதாரம் அதிகமா போயிரும்..” கணி.

 

“என்ன சார் இப்படி சொல்றீங்க… நீங்க காப்பாத்த மாட்டீங்ளா..?”

 

“டேய் ஏற்கனவே எனக்கு தலைக்கு மேல வேலையிருக்கு. நீ வாய்ல இழுத்துட்டு வர பஞ்சாயத்துக்குலாம் நான் வந்து நிக்க முடியாது..” கணி.

 

“ஆமா… ரத்த பூமில ரத்தம் சிந்திறாத..” அதி.

 

அந்த ஹோட்டல் உரிமையாளர் இவர்களை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு, அவனுக்கு பதிலளித்தார்.

 

“பாத்துல.. நாங்க வீச்சருவா வச்சு சீவுறது இருக்கட்டும்… கெடாவுக்கு பதிலா ஒம்ம தலைய வெட்டிப்புடாம.. அவேன் கொஞ்சம் நய்யாண்டி புடிச்சவணுல.. பாத்து‌ பதுசா இருந்துப்புட்டு ஊரு வந்து சேரு… அப்புடியே நாஞ் சொன்னேனு‌ சொல்லிபுடு‌ அந்த காலிப் பயலுட்ட.. இந்தூர்லேந்து பொம்பள புள்ளய கட்டிக்கிட்டு போனதோட நிறுத்திக்கோணும்.. தேவையில்லாம நம்ம ஊரு விசயத்துல மூக்க மறுக்க  நுளச்சா… அம்புட்டுதேன் சோலி.. மூக்கு இருந்தாதானே நுளைக்க முடியும்.. மூக்க வளிச்சு அறுத்துப்புடுவோம்னு சொல்லி வை.. நம்ம ஊர கட்டுசெட்டா கொண்டார ஐயா எம்புட்டு சிரமப்பட்டாவ. பொறம்போக்கு நிலத்துல நேத்து முளச்ச புல்லு, ஐயாவுக்கு முன்னால சரிக்கிசரி ஒக்காந்து நாட்டம பண்ணா உட்டுப்புடுவோமா என்ன… எம்புட்டு கொலுப்பு இருக்கோணும் அவனுக்கு.. இனி ஒருக்கா இந்தூர்ல அவன்‌ கால வச்சான், கால வெட்டி பாயா வச்சிட்டுதான் அடுத்த சோலி…”

 

“என்ன மனிஷன் காலுல பாயாவா..” என்று வாயைப் பிளந்தான் கீர்த்தி.

 

“சரி..‌ சரி.. நம்மள கொஞ்சம் இளப்பமா நினச்சு வால ஆட்டிப்புட்டான். வுடுண்ணே… உறவ உட்டுக்குடுக்க மனசு இல்ல.. பொறந்த வீட்டு சனம் போவலைனா அந்த புள்ள முத்தழகு மனசு நோகும்ணே… அதேன் போய் ஒரு எட்டு பாத்துப்போட்டு கைய நனச்சிட்டு வரோம்.. மித்தபடி அவன் மீசைய‌ முறுக்கிக்கின்னு நம்மூருக்கு வந்துர முடியாமா என்ன.. அந்த வளக்கம் கெட்ட பயலுக்கு அங்காளி பங்காளின்னு எவன் வந்து நின்னாலும் பொலந்துருவோம்…” என்று கூறிவிட்டு வெள்ளைச்சாமி சென்றுவிட்டான்.

 

“வணக்கம் தம்பிகளா.. ஒங்களுக்கு யென்ன தெரியோணும்..” என்று அவர்கள் அருகில் வந்து அமர்ந்தார்.

 

கணி அதியைக் கேள்வி கேக்குமாறு வினவ, அவன்‌ கேட்க ஆரம்பித்தான். 

 

“உங்க ஐயா யாரு… அவுங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்க… இந்த ஊர்ல வேற என்னலாம் விசித்திரமா இருக்குன்னு சொல்லுங்க..”

 

“இந்த ஊரு தெய்வம்தேன் எங்க ஐயா சோழரு. இந்த ஊருல விளயிற பயிர் எல்லாம் அவுக வீட்டுக்குதேன் போகும். ஊருக்கு தேவையானத அவுகதேன் பிரிச்சு கொடுப்பாக. மித்த ஊரு மாதிரி உழுத நெல் அம்புட்டயும் தார வாத்துட்டு , நாங்க குருண கஞ்சி குடிக்க மாட்டோம். எங்களுக்கு தேவையானது போகத்தேன் வெளியூருக்கு அனுப்புவோம்‌.  காய்கறி, பழம் எல்லாமே அப்பிடிதான். எங்க ஊர்ல கடைசியா செத்த விவசாயி காத்தவராயனா இருக்கோணும்ங்கிறது ஐயா ஆசை. அதனால சோத்துக்கு எங்கூர்ல காசில்லை. சேத்துல காலூணுனவனுக்கு சோறு இல்லாம போகவுமில்ல. கிட்டத்தட்ட பண்டத்த மாத்திகிட்டு பொழப்ப நடத்துறோம். எங்க புள்ளைக எல்லாம் விவசாயம்தேன் படிக்கும்னு ஐயா மேல சத்தியம் பண்ணிருக்கோம்.. அப்பறம் நிதம் ஓசில திங்க ஒருதனும் வரமாட்டான். ஏனா‌ காவயிறு கஞ்சி குடிச்சவுங்களுக்கு மூணு வேலையும் சாப்பாடு கிடைக்கிது. அதனால வேலை செய்யாம எவனும்‌ சோம்பவும் மாட்டான். ஏமாத்தவும் மாட்டான்” என்றார் அவர் சற்றே கர்வத்துடன்.

 

மூவருமே வாயைப் பிளந்தனர். இது என்ன இப்படி விசித்திரமான ஊராக இருக்கிறது என்று.

 

“வேற ஏதாச்சும் வேணுங்களா தம்பி..”

 

“இல்ல வேற ஒன்னும் வேணாம்.. ரொம்ப நன்றி ஐயா.. நாங்க வரோம்.. வாங்கடா போகலாம்..” என்று கூறி விடைபெற்றான் கணி. அவரைக் கடந்து‌ ஒரு அடி சென்றிருப்பான்.

 

“தம்பி.. அப்புடியே ரெக்கார்ட் பண்ணத அழிச்சிட்டு போயிருங்க… அப்பத்தேன் வம்பு இல்லாம ஊரு போய் சேர முடியும்…” என்றார் அவர்.

 

“என்ன‌ சொல்றீங்க..”கணி.

 

“உம்ம வயசு எனக்கு அனுபவம். கண்ணசவுல களவாணித்தனத்தை கண்டுக்கிடுவோம்..” என்று கூற, கணி அவரை அடிக்க போக, மற்ற இருவரும் அவனைத் தடுத்தனர்.

 

“நான் யாருன்னு தெரியாம பேசுறீங்க…  அழிக்க முடியாதுன்னா என்ன செய்வீங்க..” கணி…

 

“ஊரு எல்லை தாண்ட முடியாது தம்பி.. நைச்சியமா சொல்லுதேன்.. பேச்சாயிருக்கையிலே கேட்டுக்கிட்டா நல்லது.. பட்டணத்துலேந்து கஞ்சி போட்ட சட்டையும், கணுக்கால் வர கால் சட்டையும் மாட்டிக்கிட்டு, எங்க பூமில குழாய் சொறுவ வந்தவன் ஒருத்தனும் முழுசா ஊர் போய் சேரல.. புரிஞ்சா உம்ம தலை தப்பும்.. எங்களுக்கு கட்டுசெட்டா இருக்கவும் தெரியும்.. கத்தி தூக்கவும் தெரியும்.. பாத்துக்கிடுங்க..”

 

“ஆமா… நான் என்ன தப்பு பண்ண மாதிரி மிரட்டுறீங்க.. ஒரு ஊரே கவர்மெண்டை எதிர்த்து வேலை பாத்துக்கிட்டு இருக்கீங்க… உங்க எல்லாரையும் தூக்கி உள்ள வைக்கணும் முத…” என்று கை முஷ்டியை‌ முறுக்கினான் கணி.

 

“ஐயோ… சார் டென்ஷனாகாதீங்க.. ஊரோட அத்தன பேரும் கொலகாரங்களா இருப்பாங்க போல.. நீங்க அங்க உக்காருங்க.. நாங்க பேசிக்கிறோம்..” என்று அவனை அங்கு இருந்த இருக்கையில் அமர வைத்தான் கீர்த்தி.

 

“ஐயா.. அவரு ஏ.சி.பிங்க.. உங்க ஊர்ல திருநல்லன்னு ஒருத்தர் காணாம போனாரு இல்லையா.. அவரைப்‌ பத்தி விசாரிக்க வந்தோம். அவரைக் கண்டுபிடிக்கணும்னா நீங்க எங்களுக்கு ஒத்துழைக்கணும். வேற எந்த தப்பான நோக்கத்துலையும் நாங்க இங்க வரல..” அதி.

 

“ஆத்தி.. திருநல்லன் ஐயாவ கண்டுபுடிக்க வந்தீயளா.. சரி.. சரி… வாங்க.. நான் பேசுனதயெல்லாம் மனசுல வச்சுக்காதீக.. உங்கள ஐயா பாத்தா ரொம்ப சந்தோஷப் படுவாரு.. வாங்க நானே ஐயாட்ட கூட்டிட்டு போறேன்..” என்று‌ அவர்களை அழைத்துச் சென்றான்.

 

அதன் பிறகு ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டனர். ஏனோ திராவிடன் இவர்களுடனே வந்து தங்கிவிட்டான். அதி கூறியது போல் அவனை விட்டுப் பிடிக்க முடிவு செய்தான்‌ கணி. கணியோ திராவிடனைக் கண்காணிக்க அவனை அருகில் வைத்துக் கொள்ள நினைத்தான். ஆனால் திராவிடன் இவர்களைக் கண்காணிக்க இவர்களுடன் இருந்தான். ‌அதையும்‌ கணி சரியாகவே கணித்துவிட்டான். 

 

சோழர் ஐயா எங்கோ வெளியூர் சென்றிருப்பதால் வர இரு நாட்கள் ஆகும் என்று கூறி ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டனர் மூவரும்.

 

மறுநாள் வெளியில் கிளம்பினர் நால்வரும். கணி திராவிடனிடம் ஊரைச் சுற்றிக் காட்டுமாறு கூற அவனும் உடன் வந்தான்.

 

ஊருக்கு சற்று ஒதுக்குப்புறமாக ஓரிடத்தில் புதர்கள் மண்டிப்போய் காடு போல் கிடந்தது.

 

“இங்க உள்ள‌ போகலாமா..” கணி..

 

“இது வெறும்‌ புதர்தான் சார். உள்ள போறது கொஞ்சம் ஆபத்து.. இதுக்கு பின்னாடி மூங்கில் காடு இருக்கு.. அங்க வேணா போகலாம் வாங்க..” திராவிடன். 

 

நால்வரும் இணைந்து நடக்க ஆரம்பித்தனர். அந்த புதருக்குள் சிறிய பாதைப் போல் இருந்தது. செடிகளை விளக்கி உள்ளே சென்றனர். உள்ளே அழகிய மூங்கில் காடு. அன்னாந்து பார்த்தால் விண்ணை முட்டும் மூங்கில் கழிகள்‌. விண்ணை முத்தமிடும் பச்சைத் தங்கம் என்றும் கூறலாம்.

 

மிதமான இடைவெளியில் கூட்டம் கூட்டமாக மூங்கில் தாவரங்கள் வளர்க்கப்பட்டு சாகுபடிக்கு தயாராக இருந்தது. அங்கு ஒரிடத்தில் தண்ணீர் தேங்கியிருந்தது. திராவிடன் வேகமாக சென்று பக்கத்தில் இருந்த கூர் மரத்துண்டை எடுத்து மண்ணைத் தோண்ட ஆரம்பித்தான். கால்வாய் போல் தோண்டியவன், அங்கு தேங்கியிருந்த நீரை அதில் வடியவிட்டான்.

 

“மூங்கிலுக்கு தண்ணி தேங்கியிருக்க கூடாது சார். சொட்டு நீர் பாசனம் தான் சரியா‌ வரும். நீர் தேக்கம் இருந்தா மூங்கில் வளர்ச்சி பாதிப்படையும்..” என்றான் யாரும் வினா எழுப்பாமலே.

 

அவன் இதுவரை இருந்த திராவிடன் இல்லை. காடுகளையும் செடிகளையும் பார்த்தவுடன் அவன் முகமே மாறிவிட்டது.

 

“இது யாரோட காடு..” கணி.

 

“இது சோழர் ஐயா‌ காடு சார்… இரண்டு வருசத்துக்கு ஒருக்கா அறுவடை செய்வோம்… இது முள் மூங்கில். எங்க ஊரு ஈரப்பதம் அதிகம் இருக்கதால இந்த மூங்கில் நல்லா வளரும். இன்னொரு வகை இருக்கு… கல் மூங்கில்… அது தண்ணி அதிகம் இல்லாத இடத்தில் வளரும்..”

 

“எப்படி இவ்ளோ‌ நேர்த்தியா வளர்ந்திருக்கு..” என்று‌ அதி கேட்க, திராவிடன் நகைத்தான்.

 

“சாரே… அதுவாலாம் வளராது… அது வளர வளர, பக்கக் கிளை, நேரா வளராத கழி, முடமான கழி எல்லாத்தையும் வெட்டி எடுத்து பராமரிப்போம். மண்ணுக்குள்ளையும் பக்கக்கிளை வராம பாத்துப்போம். மண்புழு உரம், மக்கிய தொழு உரம், பாஸ்போ பேக்டீரியா இதெல்லாம் குறிப்பிட்ட கலவையில் சேர்த்து உரமிட்டு பாதுக்காக்கணும் சார்… இதெல்லாம் சரியா செஞ்சா ரெண்டு வருஷத்துக்கு ஒருக்கா, ஏக்கருக்கு 50000 வருமானம் வரும். ஊடு பயிரா மஞ்சள், இஞ்சி போடுறது வழக்கம் சார். முந்திரி, மா கூட போடலாம். காகிதம் தயாரிக்க இந்த வகை மூங்கிலுக்கு ரொம்பவே கிராக்கி..” என்று திராவிடன் கூற மற்ற மூவரும் வாயைப் பிளந்தனர். 

 

அவன் பேச்சிலேயே தெரிந்தது அவன் விவசாயத்தை உயிர் மூச்சாக கருதுகிறான் என்று. அவனின் பதிலை அசைப்போட்ட படியே பச்சை மூங்கிலின் நறுமணத்தை நுரையீரலில் நிரப்ப, கணீரென ஒரு குரல் ஒலித்தது. திராவிடனுக்கு அறிமுகம் இல்லாத குரல். மற்ற மூவருக்கும் பரிட்சியமான குரல்‌. 

 

“ஓ… இயற்கையான இயற்கைக்கு தானாக வளரும் ஆற்றல் இல்லையோ.. மனிதன் இல்லையேல் மரங்களும் இல்லையோ.. இன்றுவரை உலகை ஆளப் பிறந்தவன் என்று மமதையுடன் சிரசில் மணிமகுடம் சூட்டியிருந்தீர்கள். ஆறாம் அறிவு இருந்தும் அறியாமல் இழைத்த தவறு என்று பொருமையாய் இருந்துவிட்டேன். ஆனால் இப்பொழுது உலகைப் படைத்தவன், காப்பவன் என்று எண்ணங்கள் புலன் பெயர்ந்துவிட்டதா இல்லை பதவி உயர்வு பெற்றுவிட்டதா.. உலகில் உங்களிடம் மட்டுமே பிரத்யேகமாக இருக்கும் ஆறாம் அறிவு தான்தோன்றித்தனமாக தரிக்கெட்டு திக்கெட்டும் அலைகிறது போல..”என்று அந்த காடு மூழுவதும் எதிரொலிக்க, அனைவரும் திரும்பி திரும்பி பார்த்தனர்.

 

பச்சை வண்ண ஆடையில் எழிலின் மறு உருவமாய் தோன்றினாள் அந்தப் பெண்… நமக்கு நனியிதழ்.  தலையிலிருந்து கால் வரை வன்னப்பூக்களால் அலங்கரித்திருந்தாள்.

பால் வண்ணத் தும்பைப் பூவால் தலையணி அணிந்து, மஞ்சள் ஞாழல் மலர்களால் மேகலையணிந்து, முல்லைப் பூக்கள் கொண்டு கழுத்தில் சரம் அணிந்திருந்தாள்… விழிகள் இரண்டும் கோவைப்பழமாய் சிவந்து கிடக்க, கன்னக்கதுப்புகளும் சீற்றம் தாளாமல் மிளகாய் பழமாய் காந்தியது. இம்முறை கரங்களில் ஆயுதமாக கல்லிச்செடி ஒன்றை வைத்திருந்தாள்.

 

மற்ற மூவருக்கும் அவளைப் பார்த்ததில் மற்றற்ற மகிழ்ச்சி. இனி இந்த வழக்கை அவள் பார்த்துக் கொள்வாள் என்று மனம் நிம்மதி அடைந்தது. தாயின் மடி சேர்ந்த கன்று போல் மனம் உவகை கொண்டது. ஆனால் அவள் பார்வையில் இருந்த கலவையான எதிர்மறை உணர்வுகள் சற்றே அச்சத்தைக் கொடுத்தது என்னவோ உண்மை. மூவருமே அது என்னவாக இருக்கும் என்ற ஆராய்ச்சியில் இறங்கினர்.

 

“ஆமா யாரு இந்த பொண்ணு.. லூசு மாதிரி ட்ரெஸ் பண்ணிருக்கா..” என்றான் திராவிடன்.

 

“நனியிதழ்..” என்று ஆச்சர்யத்துடன் வெளிவந்தன வார்த்தை. மூவரின் அதரங்களும் அச்சி பிறழாமல் கணம் தவறாமல் ஒன்றாக உரைத்தனர்.

 

அவர்கள் மூவரும் மகிழ்ச்சியில் திளைக்க, அவளின் முகத்திலோ பிரளயம் வெடித்துக் கொண்டிருந்தது. முன்பு சந்தித்த பொழுதாவது சீற்றம் குடிகொண்டிருந்தது அவளது மலர் வதனத்தில். ஆனால் இப்பொழுது  விவரிக்க முடியாத ஒன்று அவள் வதனத்தில் வழிந்தது. அது வெறுப்பை உமிழும் பார்வையா இல்லை பட்சனத்திற்கு காத்திருக்கும் வேங்கையின் வேட்கையா என்றுதான் விளங்கவில்லை.

 

“உங்களுக்கு இந்த பொண்ண தெரியுமா..” என்று அமைதியை கலைத்தான் திராவிடன்.

 

பதில் இல்லை மூவரிடமும். இம்முறை மனித குலம் என்ன முறைக்கேட்டில் ஈடுபட்டதோ என்று ஊர்வலம் சென்றுவிட்டனர். ஒன்றா இரண்டா குறிப்பிட்டு கூற. 

 

“ஏம்மா யாரு நீ..” திராவிடன்.

 

“ஐயோ போச்சு… போன தடவ மாதிரி பெருசா ஏதோ பதில் சொல்ல போறா..” கீர்த்தி.

 

“யார் நீ என்றால் எதை உரைக்க வேண்டும்?, சிலருக்கு பெயர் அடையாளம், சிலருக்கு பதவி அடையாளம், சிலருக்கு பணம், சிலருக்கு குணம், சிலருக்கு மனம் என இவ்வினாவிற்கு பல பரிமாணங்கள் இருக்கிறது… இதில் எதை அறிய ஆவல் உமக்கு…” என்று முன்பு அவள் அவர்களிடம்‌ கூறிய பதிலை அதி கூறினான் அவளிடம் நேசக்கரம் நீட்டும் வகையில். ஏனோ அவளிடம் பேச்சு கொடுத்தால் அவள் பேசக் கூடுமோ என்று எண்ணினாள். ஆனால் அவளோ அவனை அசட்டையாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, “யாரென்று கூறிவிட்டால் என்ன செய்வதாக உத்தேசம். உன் உயிரை எழுதி தருவாயா..?” என்றாள் இன்னும் அசட்டையாக.

 

வழக்கம் போல் கணி அமைதியாகிவிட்டான். அவளைப் படித்துக் கொண்டிருந்தான். ஏனெனில் அவளிடம் படிப்பினைகளே அதிகம் அவனுக்கு.

 

“அதானே… ஊருக்கெல்லாம் சோறு போடுற விவசாய குடும்பத்தோட உயிர் துச்சம்தான். அதான் போறவுங்க வரவுங்கலாம் பிச்சை போடுங்கிற மாதிரி கேக்குறாங்க.”

 

“அடேய்… யாருகிட்ட என்ன பேசுற.. வாய மூடுடா..” கீர்த்தி.

 

“உன் இனத்திற்குதானே படியளக்கிறாய். பின் ஏன் இந்த சலிப்பு. உன்னுடைய இந்த நிலைக்கு யார் காரணம். உனக்கிருக்கும் நிலத்தைக் கொண்டு உழுது நீ உண்டு வாழ்வதுதானே. ஏன் அடுத்தவனுக்கு அதை அளித்துவிட்டு தூக்கில் தொங்குகிறாய்..” நனி.

 

“ஆமா… நீ சொல்றது சரிதான். சில இழப்புகளுக்கு பிறகுதான் எங்களுக்கு புத்தி வரணும்னு இருக்கு. இப்போலாம் தனக்கு போகதான் தானமும் தர்மமும்..”

 

“அதையே இந்த இயற்கையும் நினைத்தால்..” நனி.

 

“என்ன சொல்ல வர நீ..” திராவிடன்.

 

“மடிந்து‌ போன மரத்தை கூறு போட்டு வெட்டி தச்சு வேலை செய்து மரசட்டம் உருவாக்கி, அதில் மரக்கூழாலான காகிதத்தில்…………. மரங்களை வெட்டாதே என்ற பொன் மொழிகளைப் பொறிக்கும் மூடர் கூட்டம்தானே நீங்கள்…” நனி.

 

“என்ன அறிவாளித்தனமா பேசுறதா நினைப்பா.. மொத யார் நீ.. இதெல்லாம் பேச உனக்கு என்ன உரிமை இருக்கு..”திராவிடன்.

 

“யாரென்று கேட்டால் என்ன பதில் சொல்வது. உமக்கு விளங்குவது போல் சொல்லவது தானே உத்தமம்… நீ நல்விதைகளை விதைக்கும் புனிதன் என்றால் நான் உனக்கு புகழாரம் சூட்டும் புண்ணியவாதி. நீ நல்வினைகளை விதைப்பதாய் நினைக்கும் மனிதன் என்றால் உன்னை தழிலிலிட்டு பொசுக்கி பசுபமாக்க பிறந்திருக்கும் மருச்சகன்(அக்கினி) நான்… நீ கண்டதெல்லாம் அழிக்கப் பிறந்த அரக்கன் என்றால் நான் உன்னை புசிக்கப் பிறந்த தேவன்..” நனி.

 

மற்ற மூவருக்கும்தான்  அவளைப் பற்றி தெரியுமே.. அதனால் அமைதி காத்தனர். அவள் உள்ளக் கிடங்கை கொட்டி முடித்தால் அச்சிரப்பதுமையாய் காட்சியளிக்கும் வாய்ப்பிருக்கிறதே…

 

“நீ என்ன லூசா.. நாடகத்துல நடிக்க போறியா.. நான் புனிதனா, மனிதனா இல்லை அரக்கனானு நான் முடிவு பண்ணிக்கிறேன்… நீ கிளம்பு மொத..

இந்த பக்கம் பொண்ணுங்க வரது அவ்வளவு நல்லதில்ல..”திராவிடன்.

 

“உன் இனத்தின் உரு கொண்டதால் வந்த கருனையா.. என்னின் வளமையை தின்று வலிமை பெற்ற உனக்கு மண்ணுருவின் மேல் துளியும் கருணையில்லை. பெண்ணுருவின் மேல் புரையோடும் கருணையின் முகாந்திரம் ஆணாதிக்கம்.. ஏன் இங்கு நான் வந்தால், மனிதனுள் இருக்கும் ஆசை என்னும் அரக்கன் என்னை கூறுப்போட்டு விற்றுவிடுவானா..” என்றாள் பெரும் சீற்றத்துடன்.

 

அந்த காடே‌ அதிர்ந்தது. மூங்கில் கழிகள் ஒவ்வொன்றும் எதாரொலி செய்தது அவளின் காரசாரமான மொழியினை. திராவிடன் சற்று அதிர்ந்தான் இப்பொழுது.

 

“அம்மா தாயி… உனக்கு என்ன வேணும்..”

 

“என்ன வரம் வேண்டினாலும் கொடுப்பாயா..”

 

“உன் பேச்சைக் கேக்க முடியல. அதுக்காக என்ன வேணாலும் கொடுக்கலாம்..”

 

“சற்றுமுன் பிடிங்கி எரிந்தாயே ஒரு செடி. அதற்கு மீண்டும் உயிர் கொடு” என்று நனி கூற அவன் திடுக்கிட்டான். தேங்கியிருந்த நீரின் அருகில் முளைத்திருந்த களையை பரித்தெரிந்திருந்தான் அவன்.

 

“அது எப்படி முடியும். ஒரு சின்ன செடிக்கா இவ்ளோ கோபம்..”

 

“சரி உன்னால் முடிந்த வேறு ஒன்றைக் கேட்கிறேன். கொடுப்பாயா..”

 

“சரி.. கேளு..”

 

“உன் விந்துவில் உருவாகப் போகும் முதல் குழந்தையின் உயிரைக் கொடு..”

 

“என்ன..!” என்று அனைவரும் அதிர்ந்தனர். அவளிடம் இப்படி ஒரு பதிலை யாரும் எதிர்பார்க்கவில்லை.

 

“நீ இழைத்த பாவத்தின் சுவடு கலைய இது ஒன்றுதான் வழியாயின் என்ன செய்வதாக உத்தேசம்..”

 

“நான் என்ன பாவம் செஞ்சேன்… இந்த செடியைப் பிச்சு எரிஞ்சது தப்பா..? அது தேவையில்லாத செடி.. மூங்கிலின் வளர்ச்சியைப் பாதிக்கும்..”

 

“பின் தவறில்லையா.. அது இந்த உலகில் வாழ தகுதியற்ற உயிர் என்று எங்கனம் நீ முடிவு செய்யலாம்… உன்னளவில் உன் நன்செயிலும் புன்செயிலும் விளையும் நெற்பயிர்தான் உயிரோ. மற்றவையெல்லாம் துச்சமோ.. உமது கூற்றுதான். விவசாயி என்று பிதற்றிக் கொண்டாய். ஒரு உயிரின் அருமையறியாதவன் எப்படி உலகிற்கு படியளப்பவனாக இருக்க முடியும். சிறு உயிரை பானகத் துரும்பாக போற்றும் நீ புனிதனாக முடியாது. சுயநலத்தின் மொத்த உருவமாய் இருக்கும் மனிதன் என்று‌ கூட விளிக்க இயலாது. புனிதமும் மனிதமும் உருவி எடுக்கப்பட்ட வெற்று கூடு நீ. அதனால்தான் அதிக மகசூல் வேண்டும் என்று கார்ப்பரேட் காரனின் பரிந்துரையில் மண்ணில் நஞ்சு கலந்தாய். அவனின் பொருளை உழுது அவனிடம் என்றோ உன் மண்ணின் வளத்திற்கு விலை பேசியாயிற்று. பின் இப்பொழுது எதற்காக மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போர் கொடி பிடிக்கிறாய் என்பதுதான் எனக்கு விளங்கவில்லை. உனக்கு வேண்டும் என்றால் தளர்த்திக் கொள்ளவும் வேண்டாம் என்றால் பிடித்து இழுத்துக் கொண்டும் பகடி ஆடுவதற்கு இயற்கையை உன் கைப்பாவை என்றா எண்ணுகிறாய்..”

 

மற்ற மூவரும் அவளைத் திடுக்கிட்டு பார்த்துக் கொண்டிருந்தனர். முன்பு வந்த போது மனித குலத்தின் இறுதி சொட்டு உதிரம் கேட்டாள். அப்பொழுது இவள் என்ன பைத்தியமா என்று தோன்றியது.  ஆனால் இப்பொழுது பிறக்காத பிஞ்சின் உயிரை கேட்கிறாள். அவளுக்கு ஈவிறக்கம் இல்லையா என்று நினைக்க முடியவில்லை மற்ற மூவரால். ஏனெனில் அவளின் நிலைப்பாடுதான் அவர்கள் அறிந்த ஒன்றாயிற்றே. திராவிடன் அவளை பைத்தியம் என்று எண்ணிக் கொண்டான். 

 

கணியின் மனம் ரணமாய் கீறப்பட்டது நனியின் பதிலில். ஏனெனில் அவனும் அவனுடைய குழந்தையின் வரவை எதிர்நோக்கி காத்திருப்பவன். கருணையின் இலக்கணமாய் திகழ்பவள், உலகில் மிக கொடூரமான ஒரு பரிசை வேண்டுகிறாள் என்றால், அதன் பின்புலம் மிக கொடூரமாக இருக்க வேண்டும் என்று சரியாக கணித்தான்.

 

ஆரல் தொடரும்…

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்