Loading

      வளைந்து நெளிந்து சென்ற மலை பாதையில் மகிழுந்து ஊர்ந்துக் கொண்டிருந்தது. கீழ் திசையில் எழுந்த ஆதவனின் கிரணங்கள் படர்ந்திருந்த பனி மூட்டத்தினுள் நுழைய முற்பட்டுக் கொண்டிருந்தன. எதிரே நிற்கும் ஆள் தெரியாதபடி பனி மூடியிருந்தது. நிரஞ்சன் அந்த பனியில் மகிழுந்தை மெதுவாகச் செலுத்திக் கொண்டிருந்தான். அதிரன் சாலையையும் ஜன்னல் புறமும் மாற்றி மாற்றி பார்த்தவன் திரும்பி பின் இருக்கையில் அமர்ந்திருந்த அழகியை பார்த்தான்.

 

       ஜன்னல் வழியே முகத்தில் அறைந்த பனி காற்றில் கண்கள் மூடி இலயித்திருந்த அகவழகியை “அழகி!”, அதிரனின் குரல் கலைக்க, இன்முகமாய் விழி திறந்தாள்.

 

    “அதி குட்டிக்கு என்ன வேணும்?”, புன்னகையோடு வினவினாள்.

 

    “நாம எந்த கோவிலுக்கு போறோம்?”, ஆர்வமாய் கேட்டான்.

 

     “அதி குட்டி கவி பாப்பாவோட விளையாடனும்னு சொன்னிங்கல்ல. அதனால பக்கத்துல இருக்கிற அம்மன் கோவிலுக்கு போய்ட்டு அப்பறம் பள்ளங்கி பால்ஸ் போய்ட்டு அப்பறம் கவி பாப்பாவ பார்க்க போகலாம். ஓகே வா?”, அகவழகி கேட்கவும் குட்டி கண்களை விரித்து விழித்து முழியை உருட்டி தன் மகிழ்ச்சியை வெளிக்காட்டினான் அதிரன்.

 

    “ஹை ஜாலி ஜாலி! அருவில குளிச்சுட்டு கவியோட விளையாட போறேனே!”, கன்னக்குழி விழ சிரித்தவனின் அழகில் மனம் மயங்கிய அகவழகி, “என் அழகு தங்கம்.” தன் கண்ணே பட்டு விடுமோ என நெட்டி வழித்தாள்.

 

    “யூ ஆர் தி பெஸ்ட் அழகி.”, என முன்னிருக்கையிலிருந்து எக்கி அவள் கன்னத்தில் இதழ் பதிக்க, அகமகிழ்ந்த அழகி அவனது கன்னக்குழியில் முத்தம் தந்து சிரித்தாள்.

 

     மீண்டும் அழகியின் கன்னத்தில் முத்தம் பதித்து திரும்பிய அதிரன், இருவரையும் கண்ணாடி வழியே இரசித்து புன்னகைத்த வண்ணம் மகிழுந்தை இயக்கிய நிரஞ்சனை பார்த்து சிரித்து, “டார்லிங்! நாம கவி பாப்பாவ பார்க்க போறோமே!”, குதூகலமாய் கூறினான்.

 

       “டார்லிங்! இன்னைக்கு உன்னை நாங்க எப்பவும் போற பால்ஸ்க்கு கூட்டிட்கு போக முடில. இன்னொரு நாள் கண்டிப்பா கூட்டிட்டு போறேன். ஓகே வா.”, பெரிய மனிதத் தோரணையோடு சற்றே வருத்தமாய் பேசிய அதிரனை அள்ளிக் கொஞ்ச வேண்டும் போல் இருந்தது நிரஞ்சனுக்கு. 

 

      “ஓகே டார்லிங்! இன்னொரு நாள் கூட்டிட்டு போ. ஆனா அம்மாக்கிட்ட முன்னாடியே பர்மிஷன் வாங்கிடனும். டன்.”, கட்டை விரல் உயர்த்த, உருட்டி விழித்து வேகமாக தலையாட்டி அழகாய் சிரித்து, “டன் டார்லிங்!”, கட்டை விரல் உயர்த்திய அதிரனை பார்த்து நிரஞ்சனுக்கு மட்டுமல்ல அழகிக்குமே புன்னகைத் துளிர்த்தது.

 

       மூடு பனியாக இருந்ததினால் பள்ளங்கி கிராமத்தின் வெளியே உள்ள அம்மன் கோவிலுக்கு அரை மணி நேரத்தில் வந்து சேர்ந்தனர். காலை ஒன்பது மணியிலும் ஆறு மணி போல் பனி விலகாது எங்கும் நிறைந்திருந்தது. சிறிய கோவிலானாலும் மிகவும் அழகாக நேர்த்தியாக இருந்தது. அகவழகிக்கு ஊரின் ஒதுக்குபுறமாய் அமைந்திருக்கும் அக்கோவிலுக்கு செல்வது என்றுமே அலாதி விருப்பம் தான். பள்ளங்கியே அமைதியான ஊர் தான். இருந்தும் அவளுக்கு அக்கோவிலில் மேலும் அமைதி நிறைந்திருப்பது போல் தோன்றும். கோவிலுக்கு வந்த மூவரும் அம்மனை தரிசித்தனர்.

 

      அதிரன் கோவிலைச் சுற்றி ஓட, “அதி பார்த்து விழுந்துராம.”, என்ற அகவழகி நிரஞ்சனோடு நடையிட்டுக் கொண்டே பேசினாள்.

 

    “நிரஞ்சன் நீங்க இந்த கோவிலுக்கு வந்துருக்கீங்களா?”

 

    “ம்ம் ஒரு இரண்டு தடவை வந்துருக்கேன். ஆனா அதுவும் இரண்டு வருஷத்துக்கு முன்னாடி தான். சாமி கும்பிடுவேன். ஆனா அடிக்கடி எனக்கு பெருசா கோவில் போறது பழக்கமில்லை.”

 

    “ம்ம். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விருப்பம் ஒவ்வொரு நம்பிக்கை. நானும் பெருசா கோவிலுக்கு போக மாட்டேன். ஆனா இங்க வந்தா மனசு அமைதியா லேசாயிடுது அதான் இந்த கோவில் மட்டும் பிடிச்சிருச்சு.”, மெலிதாய் சிரித்தாள்.

 

    “சரி தான் அழகி.” என்றவன் அவள் முகத்தை சில நொடிகள் கூர்ந்து பார்த்து “அழகி நான் ஒன்னு கேட்டா கோவிச்சுக்க மாட்டியே?”, என்றதும் அவள் சிரிப்பு மறைந்தது.

 

    “நிரஞ்சன் ப்ளீஸ். இத பத்தி நாம ஏற்கனவே பேசிட்டோம். நான் என் முடிவுல உறுதியா இருக்கேன்.”, உணர்வற்ற முகமாய் உரைத்தாலும் அவள் கண்களில் தெரிந்த வேதனையை அவனால் ஆற்றாமையோடு தான் பார்க்க முடிந்தது.

 

     “அழுத்தக்காரி! இவ்ளோ பிடிவாதமா இருக்காளே!”, என்றே சிறு கோபம் அவள் மீது எழுந்தாலும் அதனை அவளிடம் காட்டினால் இன்னும் வீம்பு பிடிப்பாளென்று அறிந்தவன் பல்லைக் கடித்து கோபத்தை விழுங்கினான். முகம் திருப்பி இறுக்கமாய் அமர்ந்திருந்தவளை வருத்தமாய் நோக்கியவன் தலையைச் சிலுப்பி பிடதி கோதி “நான் அதிய பார்த்துட்டு வரேன். நீ வா.” என்றுவிட்டு எழுந்துச் சென்றான்.

 

     அவன் செல்லும் வரை இறுக்கமாய் அமர்ந்திருந்தவள் உடல் தளர்ந்தாள். அவள் நினைவுகளில் கடந்தக்கால காட்சிகள் நிழலாட அவளுள்ளத்தின் வேதனை மேலெழுந்து அழுத்தியது. இதயத்தில் இரும்பை தூக்கி வைத்தாற்போல கணமாய் உணர்ந்தாள். கண்ணோரம் திரண்டிருந்த கண்ணீரை வைராக்கியம் கொண்டு துடைத்தவள் மூச்சை நன்கு உள்ளிழுத்து தன்னை சமன் செய்து எழுந்து மீண்டும் போய் நின்றது அம்மன் சன்னிதியின் முன்னே! சில நொடிகள் விழி மூடி நின்றவள் மெல்ல விழி திறக்கையில் அவள் மனதில் அமைதி குடியேறி இருந்தது. கோவிலிலிருந்து வெளியில் வர, நிரஞ்சன் அதிரனை மகிழுந்தின் மேல் ஏற்றி அமர வைத்து கதைப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டவளின் இதழ்களில் மெல்லிய வளைவு.

 

     “அதி குட்டி போலாமா?”, என்றவள் அருகில் வரவும் பெருமூச்சோடு ஏறிட்ட நிரஞ்சன்,

 

     “வாங்க டார்லிங் கிளம்பலாம்.”, அதிரனை கீழே இறக்கி விட்டான்.

 

    “ஐ ஜாலி அருவிக்கு போறோமே.”, என்று கத்தியபடி கதவைத் திறந்து அமர்ந்த அதிரனை கண்டு நிரஞ்சனும் அழகியும் புன்னகைத்தனர்.

 

    மகிழுந்து பள்ளங்கி அருவியை நோக்கிச் சென்றது. பனி இப்பொழுது அவ்வளவாக இல்லை‌. விலகிக் கொண்டிருந்தது. ஆதவனை வானில் காண முடிந்தது. நிரஞ்சன் சாலையில் கவனம் பதிக்க, அதிரன் வழியில் தென்படும் காட்டு மாடுகளையும் பன்றிகளையும் கண்டு குதூகலமாய் கூச்சலிட்ட படி வந்தான். அழகி வழிநெடுகிலும் தென்பட்ட இயற்கைக் காட்சிகளில் இலயித்தாள்.

 

     இவ்வியற்கை புரியும் மாயம் தான் என்ன! இங்கு வந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனை மாற்றங்கள். அதிரனை ஆறே மாதங்களில் தேற்றி தானும் துக்கம் தொலைத்து இருவருக்கும் நிம்மதியான அமைதியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டாள். இயற்கை சூழல் மட்டுமில்லையெனில் இரண்டு ஆண்டுகளில் கடந்த காலத்தினை கடந்து வந்திருக்க மாட்டாள். இங்கு வந்திருக்காவிடில் காலம் தந்த காயம் தான் சிறிதேனும் ஆறியிருக்குமா? மனதின் எண்ணங்களில் உழன்றவளுக்கு இறுதியாய் தோன்றிய எண்ணம் மெல்லிய நடுக்கத்தை தந்திட, விழிநீராய் வெளியேறத் துடித்த வேதனையை அப்படியே உள்ளிழுத்தாள். அப்படி ஏதும் நடக்கவில்லையே என்று அவள் மனமே அவளுக்கு ஆறுதல் கூறிடவும் சற்றே ஆசுவாசம் அடைந்தாள். கண்முன் விரிந்திருந்த இயற்கை எழிலில் தானாய் அவளுதடுகள் மென்னகையைச் சூடிக் கொண்டன.

 

    கண்ணாடி வழியே அழகியை கவனித்த நிரஞ்சனால் பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது. ஆற்றாமையும் இயலாமையும் அவனை ஆட்க்கொள்ள, அவள் உதட்டினில் படர்ந்திருந்த மென்னகை சற்றே நிம்மதி அளித்தது. அவளது முகத்தில் படர்ந்திருந்த நிம்மதியை குலைக்க மனமில்லாததால் அமைதியாக வந்தான். 

 

     அருவிக்கு குறிப்பிட்ட தூரமே மகிழுந்து செல்லும் என்பதனால் அவ்விடத்தில் மகிழுந்தை நிறுத்தி இறங்கிய மூவரும் அருவி நோக்கி நடந்தனர். சுற்றுலா பயணிகளின் வரவு இங்கு மிகவும் குறைவு தான் என்பதனால் அங்கு நிறைந்திருக்கும் அமைதி அலாதி இன்பம் தந்தது. அதிரன் அருவியை நெருங்கிய மகிழ்வில் அவ்வொற்றையடி பாதையில் ஓட, 

 

    “டார்லிங்! பார்த்து.”, பதறி அவனை பிடிக்க போன நிரஞ்சனை தடுத்து சிரித்த அழகி,

 

    “நிரஞ்சன் விடுங்க. நாங்க அடிக்கடி வருவோம். அவனுக்கு வழி தெரியும் போய்டுவான்.” என்றாள்.

 

    “அப்ப சரி. நானும் இங்க அடிக்கடி வருவேன். ஆனா சீக்கிரம் போகணும் ஏதாவது வேலை இருக்குன்னா மட்டும் தான் இந்த பால்ஸ். உனக்கு தெரியுமானு தெரில. இன்னும் கொஞ்சம் தூரம் போய் மேல ஏறுனோம்னா இதே பால்ஸ் இன்னும் மேல மலைலலேர்ந்து கொட்ற இடம் வரும். அங்க டூரிஸ்ட் கூட ரொம்ப ரேரா தான் வருவாங்க. நான் அங்க தான் போவேன். இங்க விட ரொம்ப அமைதியா இருக்கும். எந்த டிஸ்டர்பன்ஸூம் இல்லாம கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்கலாம். அந்த இடம் இரம்மியமா இருக்கும்.”, மெல்லிய சிரிப்போடு அனுபவித்து கூறியவனை தான் அவளும் மென்னகையோடு பார்த்திருந்தாள்.

 

    “தெரியும் நிரஞ்சன். எனக்கும் அதான் பேவேரைட் ஸ்பாட். பட் அதியை கூட்டிட்டு அங்க அடிக்கடி போக முடியாதில்லயா. அதான் இன்னைக்கு இங்க.”, என்றவளுக்கு மெல்லிய புன்னகையை பதிலாகத் தந்தான்.

 

     “பேச்சுவாக்குல அதிய மறந்துட போறோம்.”, நிரஞ்சன்.

 

      “அவன் எங்கயும் போக மாட்டான். இந்நேரம் அருவிக்கிட்ட போயிருப்பான். நாம போகும் போது அருவில ஆட்டம் போட்டுட்டு இருப்பான் பாருங்க.”

 

    “சரி வா சீக்கிரம் போகலாம். நானும் டார்லிங்கோட சேர்ந்து ஆட்டம் போடணும்.”, என்ற நிரஞ்சன் முன்னே விரைய, அகவழகி மென் சிரிப்போடு வேக எட்டுகள் வைத்தாள்.

 

    ஓஓஓ வென்று அருவியின் சத்தம் கேட்டதும் அவள் நடையின் வேகம் அதிகமானது. அருவி அவள் கண்ணில் விழுந்த நேரம் அதிரன் அருவி விழும் இடத்தில் ஆழம் இல்லாத பகுதியில் ஆட்டம் போட்டுக் கொண்டிருப்பது தென்பட, அவள் உதட்டில் தானாக புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

 

     உருக்கிய வெள்ளி கரும்பாறைகளில் ஊர்ந்து வந்து ஓஓவென்ற இரைச்சலுடன் மேலிருந்து விழும் அழகில் சொக்கித்தான் போனாள். அருவியிலிருந்து தெறித்த நீர்துளிகள் மூடுபனியின் அடர்த்தியை உயர்த்துவது போலொரு காட்சிப்பிழை. அகவழகி அருவியை நெருங்குகையில் நிரஞ்சனும் அதிரனோடு நீராட தயாராவது தெரிந்தது. மெல்லியச் சிரிப்போடு நிரஞ்சன் நின்றிருந்த பாறையில் ஏறியவள்,

     

   “ரெண்டு வானரமும் ஒன்னா சேர்றீங்க. பார்த்து! தண்ணிய கலக்கி குழப்பி விட்றாதீங்க.”, நக்கலாய் சிரித்து வைத்தாள்.

 

   “அடிப்பாவி! வானரமா நாங்க. வானரம் என்ன பண்ணும்னு காட்றோம் பாரு நாங்க. அப்ப என்ன செய்றனு பார்க்கலாம். என்ன டார்லிங்?!”, குளித்துக் கொண்டிருந்த அதிரனை நோக்கி கையாட்டி கேட்ட நிரஞ்சனுக்கு ஒன்றும் விளங்கவில்லை என்றாலும் “ஆமா டார்லிங்.” என்று கத்திய அதிரனை கண்டு நிரஞ்சன் சிரிக்க, அகவழகி இருவரையும் பொய் கோபம் கொண்டு முறைத்தாள்.

 

    “ரொம்ப முறைக்காத. மிச்சம் வை. தேவைப்படும். இந்தா நாங்க வர்ற வரைக்கும் எங்க ட்ரஸை பத்ரமா பார்த்துக்குறது தான் உன் வேலை.”, என்றவன் அவள் பதிலுக்கு காத்திருக்காது நீருக்குள் குதித்து அதிரனிடம் நீந்திச் சென்றிருந்தான்.

 

    அகவழகி சிரிப்போடு அப்பாறையில் அப்படியே அமர்ந்து சற்று நேரம் நீரில் விளையாடும் நிரஞ்சனையும் அதிரனையும் பார்த்திருந்தாள்‌. குழந்தையோடு குழந்தையாக அதிரனோடு விளையாடும் நிரஞ்சனை கண்டபொழுது அவளிடம் பெருமூச்சு வெளிப்பட்டது. அதிரனுக்கு நீச்சல் தெரியும் என்றாலும் அவன் நீச்சலில் நேர்த்தியை கற்றுத் தந்துக் கொண்டிருந்த நிரஞ்சனை கண்டதும் அவள் விழிகளில் நீர் திரண்டது. அதிரன் அவன் தந்தையோடு இருந்த நாட்கள் கண்முன் நிழலாட, கண்ணீர் கன்னத்தில் வழிந்தது. எத்தனை மகிழ்வாக அதிரன் இருந்த நாட்களவை என்று எண்ணியபோது அவள் நெஞ்சில் வேதனை பரவியது. கண் மூடி கண்ணீரை கட்டுப்படுத்தியவள் கன்னத்திலிருந்த கண்ணீர் கோடுகளை துடைத்தெறிந்து பார்வையை மேலிருந்து விழும் அருவியின் புறம் திருப்பினாள். அருவியிலிருந்து தெறித்த நீர் துளிகள் அவள் முகத்தில் பட்டு சில்லென்ற உணர்வை தர, மன வேதனைகள் மெல்லக் கரைந்தன. மனம் இலகாகும் வரை விழி மூடி அமர்ந்திருந்தவள் மீண்டும் விழித் திறந்தபோது நிரஞ்சன் பாறை நோக்கி நீந்தி வந்துக் கொண்டிருந்தான்.

 

      “அழகி! என் சட்டைய குடேன்.”, அவன் கேட்கவும் இவள் பாறை ஓரம் சென்று சட்டையை நீட்ட, ஒருகையால் சட்டையை வாங்கி பாறையில் எறிந்தவன் மறுகையால் அவளை நீருக்குள் இழுத்து விட, திடீரென்று நீருக்குள் விழுந்ததில் அதிர்ந்து மூச்சுமுட்டி மூழ்கி எழுந்தவள் 

 

    “நிரஞ்சன்!” என பல்லைக் கடிக்க,

 

     “வானரம் என்ன பண்ணும்னு இப்ப தெரிஞ்சுதா அழகி!” என்றபடி அதிரனை நோக்கி நீந்திச் சென்றவனை பார்த்து முறைக்கவும் முடியாது சிரிக்கவும் முடியாது நின்றாள்.

 

    “ஹே! சூப்பர் டார்லிங்! அழகி எத்தனை வாட்டி கூப்ட்ருப்பேன் நாம தண்ணில விளையாடலாம் வானு. நீ வந்தியா? இன்னைக்கு டார்லிங் உன்னை தண்ணில தள்ளி விட்டாரே!”, கைத்தட்டி சிரித்த அதிரனை பார்த்ததும் அழகிக்கும் சிரிப்பு வந்தது.

 

     “உங்களை.. இரு வரேன்!” என்றவள் அவர்களிடம் நீந்திச் சென்று இருவரின் மீதும் நீரை வாரி இரைக்க, அதிரன் “ஹே!” என்று சிரித்து அவனும் அவள் மேல் நீரை வாரி இரைக்க, நிரஞ்சனும் அவர்கள் விளையாட்டில் கலந்துக் கொண்டான்.

 

      சிறிது நேரம் அனைத்தும் மறந்து குழந்தையாகி அவர்களோடு விளையாடிய அழகியை கண்டு நிரஞ்சனுக்கு அத்தனை நிம்மதி. சிறிது அவர்களோடு விளையாடியவள் கரையேறி விட, நிரஞ்சனும் அதிரனும் தங்கள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

 

      தன் ஆடையை உலர்த்த வெயில் படும் இடத்தில் நின்ற அழகிக்கு அருவி நீர் புத்துணர்வு அளித்திருந்தது. அங்கிருந்தபடியே அதிரனின் முகத்தில் நிறைந்திருக்கும் மகிழ்ச்சியை புன்னகையோடு பார்த்திருந்தாள். இருவரும் ஒரு வழியாய் நீரிலிருந்து மேலே வந்து உடையணிய, மகிழுந்து இருக்கும் இடத்திற்கு மூவரும் நடந்தனர்.

 

     தண்ணீரில் வெகு நேரம் ஆட்டம் போட்டது மூவருக்கும் நல்லப் பசியை ஏற்படுத்தியிருந்தது.

 

     “அழகி! பசிக்குது. சீக்கிரம் காருக்கு போலாம் வா!”, அதிரன் முன்னே வேகமாக ஓட, அதிரன் பசிப் பொறுக்க மாட்டானென்று அவளும் அவன் பின்னே ஓட்டமும் நடையுமாக ஓடினாள். நிரஞ்சனும் வேகமாக அவர்களைப் பின் தொடர்ந்தான்.

 

     மகிழுந்தை நெருங்கியதும் உள்ளிருந்த பையில் வைத்திருந்த ரொட்டி துண்டுகளை அகவழகி எடுத்துக் கொடுக்க, அதிரன் வேகமாக வேகமாக உண்டான். அவன் உண்ணும் விதமே அவன் பசியின் அளவை கூறியது. அவன் உண்டு முடித்ததும் தண்ணீரை தந்த அகவழகி, தானும் சிறிது நீர் அருந்தி நிரஞ்சனுக்கு தர, மறுக்காது வாங்கி அருந்தினான். பின் மூவரும் கிளம்பி கவியின் இல்லத்திற்கு வந்தனர்.

 

      இறங்கியதுமே “கவி பாப்பா!” என்ற கூவலோடு அதிரன் மாளிகைப் போன்ற அவ்வீட்டினுள் ஓட, மற்ற இருவரும் சிரிப்போடு அவனைத் தொடர்ந்தனர். அனைத்து வசதிகளையும் கொண்ட பெரிய வீடு அது. வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் அலங்கார பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. 

 

     தன் தாத்தாவின் மடியில் அமர்ந்து கதைக் கேட்டுக் கொண்டிருந்த கவி பாப்பா அதிரனின் குரல் கேட்டதும், “ஐ அதி அண்ணா.”, என குண்டு விழிகள் விரிய சிரித்தபடி அதிரனிடம் ஓடி வந்தாள். அதிரன் அவளை கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் வைக்க, அவளும் அவன் கன்னத்தில் முத்தமிட, குழந்தைகளின் கொஞ்சலை கண்டு சிரித்தபடி உள்நுழைந்த நிரஞ்சனையும் அகவழகியையும் கவியின் தாத்தா வரவேற்றார்.

 

    “அடடே! ரெண்டு பேரும் சேர்ந்து வந்துருக்கீங்களா?! உள்ள வாங்க!” அழைத்து பெரும் கூடத்தில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர வைத்து தானும் அமர்ந்தார்.

 

    “அழகி! எப்படி மா இருக்க?”

 

     “நல்லார்க்கேன் அப்பா? நீங்க எப்படி இருக்கீங்க? ஒழுங்கா வாக்கிங்லாம் போறீங்களா?”

 

     “இப்பவும் மலைமேல ஏறி இறங்குற தெம்போட இருக்கேன் டா. வாக்கிங் போகலனா மிருதுளா சும்மா விடுவாளா என்ன?”, சிரித்தவரை பார்த்து அழகியும் சிரித்தாள்.

 

    “என்ன நிரஞ்சா வீட்டு பக்கம் வந்தாலே வேலையோட வருவியே! இப்ப என்ன வேலை?”

 

     “சார் ஏன் சார்?”, பாவமாய் பார்த்தவனை பார்த்து சிரித்தவர்,

 

     “பின்ன என்ன டா? நீயும் உன் முதலாளியும் எப்ப பாரு வேலை வேலைனு வேலைய கட்டிட்டே அழுவரீங்க. கொஞ்சமாச்சும் என்ஜாய் பண்ணுங்கடா லைஃப?” என்றார்.

 

    “அப்பா! நாங்க லைஃப என்ஜாய் பண்ணா பிஸ்னஸ் என்னாகுறது?”, கேட்டபடியே வந்தான் ராம்குமார்.

 

    “பிஸ்னஸ கவனிக்க வேண்டியது தான்டா. அதுக்குனு இருபத்தி நாலு மணி நேரமும் ஒரு மனுஷன் அதையே கட்டிக்கிட்டு கிடக்கக் கூடாது. அப்பப்ப குடும்பத்தோட சந்தோஷமா வெளிய போய்ட்டு வரணும். சின்ன சின்ன விஷயங்கள கூட கொண்டாட பழகணும். எப்ப பாரு சீரியஸ் மோட்லயே சுத்த கூடாது. நல்ல ஞாபகங்கள சேர்க்க இது தான்டா உங்களுக்கு சரியான வயசு.”

 

    “நல்லா சொல்லுங்க மாமா! மாசத்துல ஒரு தடவையாவது பிக்னிக் மாதிரி போய்ட்டு வரலாம்னா நம்ம எஸ்டேட்டுக்கு போலாமானு கேக்கறாரு.” என்றபடி வந்தாள் மிருதுளா.

 

     “டேய்…”, பெரியவர் சக்கரவர்த்தி ஆரம்பிக்கும் முன்னேயே இடையிட்டு ராம்குமார் தடுத்தான்.

 

     “அப்பா ப்ளீஸ். மறுபடியும் ஆரமிச்சுராதீங்க. ஏன் டி நீ கேக்கறப்பலாம் வெளில கூட்டிட்டு போறேன்ல அப்பறம் என்னடி இன்னும் கம்ப்ளைன்ட் பண்ணிட்ருக்க.” தந்தையிடம் தொடங்கி மனைவியிடம் முடித்தான்.

 

     “எது கோவிலுக்கும் ஷாப்பிங்கும் போறதா?”, இடுப்பில் கை வைத்து முறைத்தாள் மிருதுளா.

 

     மென்முறுவலோடு இவர்களின் உரையாடல்களை கேட்டிருந்த அகவழகி, “சார்..” என்கவும் ராம்குமார் பார்த்த பார்வையில் சிரித்து, “சரி சரி அண்ணா. அண்ணா அண்ணி சொல்றது உங்களுக்கு புரியல. அவங்க அவங்க சந்தோஷத்துக்காக பிக்னிக் போலாம்னு சொல்லல. மாசம் ஃபுல்லா வொர்க் பண்ற உங்களுக்கு ஒரு சின்ன ப்ரேக் கிடைச்சா ஸ்ட்ரெஸில்லாம இருக்குமேனு சொல்றாங்க. பிக்னிக் ப்ளானே நீங்க சந்தோஷமா இருக்க தான்.” என வாய் திறந்தாள்.

 

     “ஓஓ‌. சாரி டி மிருது. நீ எனக்காக நம்ம சந்தோஷத்துக்காக யோசிச்சுருக்க. அது புரியாம நான் உன்னை கிண்டல் பண்ணிட்டேன். அடுத்த மாசத்துலேர்ந்து நாம பிக்னிக் போலாம் ஓகே வா.”, தன் மனைவியின் கைப்பிடித்து மன்னிப்பு வேண்டினான்.

 

     “நமக்குள்ள என்னங்க சாரி. அதான் இப்ப புரிஞ்சுக்கிட்டீங்களே. அதுவே போதும்.”, புன்னகைத்த மிருதுளாவை பார்த்து அவனும் புன்னகைத்தான்.

 

    “நான் சொல்லி நீ சொல்லி புரியாதவனுக்கு தங்கச்சி சொன்னதும் புரிஞ்சுடுச்சு பாரு. இதுக்கு தான் அழகிய இங்கயே இருக்க சொல்றேன்.”, சக்கரவர்த்தி அகவழகியை பார்த்தார்.

 

    “அப்பா நான் எங்க இருந்தாலும் என்னையும் இந்த குடும்பத்துல ஒருத்தியா தானே பார்க்கறீங்க. அது போதும் ப்பா.”

 

    “இல்லமா…”, இழுத்த சக்கரவர்த்தியை “மாமா! அழகிக்கு எங்க இருக்க விருப்பமோ அவ அங்கயே இருக்கட்டும். அவளுக்கா எப்ப இங்க இருக்கணும்னு தோனுதோ அப்ப இங்க வரட்டும்.” மிருதுளா குறுக்கிட்டாள்.

 

    “ம்ம் சரி மா. அவ விருப்பப்படி இருக்கட்டும்.”, பெருமூச்சு விட்ட சக்கரவர்த்தி, “என் பேரன் எங்க அழகி?” என கேட்டார்.

 

    “அப்பவே கவி அவனை அவ ரூம்க்கு விளையாட கூட்டிட்டு போய்ட்டா மாமா.” மிருதுளா பதிலளிக்கவும் “நீங்க பேசிட்ருங்க. நான் என் பேர புள்ளைங்கள பார்த்துட்டு வரேன்.” என எழுந்துச் சென்ற சக்கரவர்த்தியை சங்கடமாக பார்த்தாள் அகவழகி.

 

    “மாமாவ பத்தி உனக்கு தெரியும் தானே அழகி. ஃப்ரீயா விடு.”, மிருதுளா அகவழிகியின் கைப்பிடித்து கூறவும் மென்னகைத்து தலையசைத்த அழகி சக்கரவர்த்தி சென்ற திசையை பார்த்து பெருமூச்சு விட்டாள்.

 

     அகவழகியும் நிரஞ்சனும் ராம்குமாரிடம் பணி புரிபவர்கள். ராம்குமாருக்கு பல தொழில்கள் உண்டு. தேயிலை தோட்டம், சாக்லேட் பேக்ட்ரி, போக தங்களது பண்ணையில் விளையும் கேரட், பீட்ரூட், அவக்கேடோ போன்றவைகளை மார்க்கெட்டுகளுக்கும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் விநியோகிக்கும் தொழிலோடு, காபி தோட்டம், கொடைக்கானலில் மூன்று இடங்களில் ரிசார்ட்டும் நடத்தி வருகிறான். நிரஞ்சன் ராம்குமாருக்கு தனிப்பட்ட செயலாளராய் பணி புரிகிறான். ஆறு ஆண்டுகளாக பணிபுரிவதால் நிரஞ்சனும் அவர்கள் குடும்பத்தில் ஒருவனாகி விட்டான். அகவழகி ராம்குமாரின் பண்ணைக்கும் சாக்லேட் பேக்ட்ரிக்கும் மேலாளராக பணி புரிகிறாள். யாருமின்றி எவரையும் அறியாத கொடைக்கானலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதிரனோடு அகவழகி வந்த போது அவளுக்கு வேலை தந்து அவளுக்கு உறவாகிப் போயினர் ராம்குமாரும் அவனது குடும்பத்தாரும். இன்று அதிரனும் அகவழகியும் நிம்மதியான வாழ்வை வாழ்வதற்கு காரணம் ராம்குமார் குடும்பத்தார் தான். என்ன தான் உரிமையோடு உறவாகப் பழகினாலும் அகவழகியிடம் தன் முதலாளி குடும்பம் என்ற மரியாதையும் சிறிது தயக்கமும் உண்டு. அதனால் தான் அவர்கள் தங்கள் இல்லத்தில் வசிக்க கூறியும் பண்ணையில் உள்ள சிறிய வீட்டினில் வசத்து வருகிறாள்.

 

    “நீ தான் நிரஞ்சன கூப்ட்டு வந்தியா அழகி?”, மிருதுளா.

 

    “அண்ணி! இல்லனா நான் வீட்டுக்கு வந்ததேயில்லையா?”, செல்லமாய் முறைத்தான் நிரஞ்சன்.

 

    “இல்லப்பா நீ வந்தா வேலையோட தானே வருவ. இன்னைக்கு வேலையில்லாம வந்தா டவுட்டு வரத் தானே செய்யும்.”

 

    “சார் நீங்க என்னனு கேக்க மாட்டீங்களா அண்ணிய?”, ராம்குமார் பக்கம் திரும்பினான்.

 

    “டேய் இன்னைக்கு லீவு தான் டா. அண்ணானு கூப்ட்டு தொலை. எப்ப பாரு சாரு மோருனு. அவள அண்ணினு கூப்பிடுவாராம் என்னை சாருனு கூப்பிடுவாராம். ஆள பாரு.” உரிமையாய் ராம்குமார் கடிந்துக் கொள்ள, ஈஈஈ என்று பல்லைக்காட்டி, “சாரி அண்ணா. பழக்கதோஷத்துல…”, தலை சொரிந்தவனை பார்த்து தலையில் அடித்துக் கொண்டான் ராம்குமார்.

 

     பெண்கள் இருவரும் ஆண்கள் இருவரையும் பார்த்து சிரித்து வைத்தனர்.

 

     “அழகி பிக்னிக்கு நீயும் அதிரனும் வரணும். நிரஞ்சன் நீயும் வரணும்.”, மிருதுளா கூறவும் அழகி தயங்கி ஏதோ கூற வர,

 

    “பிக்னிக்கா? என்ன பிக்னிக்? எப்போ போறோம்?” கேட்டபடி வீட்டிற்குள் நுழைந்த கதிரவனை கண்டதும் அகவழகி முகத்தைத் திருப்பிக் கொள்ள,

 

    “சாப்பாடு எடுத்து வைக்கிறேன். சாப்பிட வாங்க எல்லாரும்.”, என்ற மிருதுளா கதிரவனை திரும்பியும் பாராது உள்ளேச் சென்றுவிட, “அண்ணி! நானும் ஹெல்ப் பண்றேன்.”, அகவழகியும் அவளைத் தொடர்ந்து எழுந்துச் சென்றாள்.

 

    “வாடா வா! வீட்டுக்கு வழி தெறிஞ்சுடுச்சா உனக்கு? எங்க தான்டா போன? உங்க அக்கா உனக்கு ரெண்டு நாளா ஃபோன் பண்ணி பண்ணி அலுத்துட்டா. நீ லாம் எதுக்குடா ஃபோன் வச்சுருக்க தலையை சுத்தி தூக்கிப் போட்ரு.”, கதிரவனை ராம்குமார் பிடி பிடியென பிடிக்க, நிரஞ்சன் நமட்டு சிரிப்போடு கதிரவனை பார்க்க, அவனோ அவனை முறைத்துக் கொண்டிருந்தான்.

 

    “மாமா! நான் வேலை விஷயமா கேரளா போயிருந்தேன். ஃபோன் அட்டன் பண்ணா அக்கா கேள்வியா கேட்டுக் கொல்லும் அதான் அட்டன் பண்ணல.”, கதிரவன்.

 

    “சரி சரி. என்னவோ சொல்ற நம்பறேன். உங்கக்கா ரொம்ப கோவமா இருக்கா. சமாளிக்க வேண்டியது உன் சாமர்த்தியம் என்கிட்ட ஹெல்ப் கேக்கக் கூடாது.”, கதிரவனை பற்றி நன்கறிந்த ராம்குமார் கூறவும்,

 

   “சரி மாமா நான் பார்த்துக்குறேன். அத விடுங்க. நான் வரும்போது பிக்னிக்னு ஏதோ பேசிட்ருந்தீங்களே என்ன?” என்றவன் கேட்கவும் ராம்குமார் அனைத்தும் கூறினான்.

 

    “பார்றா. சூப்பர். அழகியும் வெல்லக்கட்டியும் வராங்களா! அப்போ மாசாமாசம் எந்த டேட்ல பிக்னிக்னு மட்டும் முன்னாடியே சொல்லிடுங்க நான் டான்னு ப்ரஸ்ன்ட் ஆகிடுவேன்.” என்று சிரித்தவனை பார்த்து “திருத்த முடியாது உன்னல்லாம். சாப்பிட வந்து சேரு.” என்றுவிட்டு ராம்குமார் எழுந்துச் சென்றான்.

 

    “எவ்வளோ அசிங்கப்பட்டாலும் கேவலப்பட்டாலும் திருந்த மாட்டல்ல.”, நிரஞ்சன் கேட்கவும் இடவலமாய் தலையசைத்த கதிரவன் புன்னகைத்து “ம்ஹூம் அழகி கிட்ட வெ மா சூ சு லாம் சுத்தமா கிடையாது டா எனக்கு.” என்றான்.

 

    நிரஞ்சன் தூவென்று துப்ப, “தேங்க் யூ டா மச்சான்.”, சிரித்துக் கொண்டே சொன்னவனை பார்த்து நிரஞ்சனால் தலையில் அடித்துக் கொள்ள தான் முடிந்தது.

 

     வேலையாட்கள் சமைத்து வைத்திருந்த உணவினை மிருதுளாவும் அழகியும் சாப்பாட்டு மேசை மீது எடுத்து வைத்து அனைவரும் சாப்பிட அழைத்து வந்தனர். கவியும் அதியும் அருகருகே அமர்ந்துக் கொள்ள சக்கரவர்த்தி அவர்களோடு அமர்ந்துக் கொண்டார். தன்னை பார்க்கும் கதிரவன் புறம் விழித் திருப்பாது உணவு பரிமாறுவதில் கவனமானாள் அழகி. 

 

    “எப்போடா வந்த கதிரவா?”, சக்கரவர்த்தி.

 

    “இப்ப தான் மாமா.”, கதிரவன்.

 

    “போன வேலை முடிஞ்சதா?”

 

     “நல்லபடியா முடிஞ்சது மாமா. பாஸிட்டிவ் ரிசல்ட் தான் வரும்.”

     சக்கரவர்த்திக்கும் கதிரவனுக்கும் என்ன பந்தமென்று ராம்குமார் மிருதுளாவால் இன்று வரை அவதாணிக்க முடிந்ததில்லை. அனைவரிடமும் சற்றே திமிராக, கேலியும் கிண்டலுமாய் பழகும் கதிரவன் சக்கரவர்த்தியிடம் பழகும் விதம் மட்டும் தனித்திருக்கும். தான் செய்யும் எதையும் யாரிடமும் கூறாதவுன் சக்கரவர்த்தியிடம் எதனையும் மறைத்ததேயில்லை.

     

   உணவை சிந்தி உண்ட குழந்தைகளுக்கு மிருதுளாவும் அழகியும் ஊட்டி விட, மற்றவர்கள் பேசிக் கொண்டே உண்டனர். என்ன பேசிக் கொண்டிருந்தாலும் கதிரவனின் பார்வை அழகியிடம் இருப்பதை அவளைத் தவிர மற்ற அனைவரும் அறிந்திருந்தாலும் கண்டும் காணாதவாறு உண்டனர். அனைவருக்கும் அழகி வாழ்வில் நல்லது நடந்து விடாதா என்ற ஏக்கம் தான் அவர்களை கண்டும் காணாதவாறு இருக்க வைக்கிறது. உணவு உண்டு முடித்ததும் ஆண்கள் அனைவரும் தோட்டத்துப் பக்கம் சென்றுவிட, பெண்கள் இருவரும் உண்டுவிட்டு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை கவனித்தவாறு பேசிக் கொண்டிருந்தனர்.

 

    “அழகி நீயும் அதியும் எங்களோட பிக்னிக் வருவீங்க தானே?”, மிருதுளா ஆர்வமாய் வினவ,

    

    இல்லை என்று கூற விழைந்தாலும் மிருதுளாவின் கண்களில் இருந்த ஆர்வமும் கவி பாப்பாவோடு விளையாடிய அதிரனின் முகத்திலிருந்த மகிழ்வும் அழகியை சரி என்று கூற வைத்தது.

    

    “சரி அண்ணி வரோம்.”

    

    “அப்பாடா இப்போ தான் நிம்மதியா இருக்கு. எங்க நீ மாட்டேன்னு சொல்வனு பயந்துட்டேன். சரி எங்க போலாம் ஃபர்ஸ்ட்.”, மிருதுளா மகிழ்ச்சியானாள்.

    

     “அண்ணனுக்காக தானே அண்ணி இந்த ஏற்பாடு சோ அண்ணன் சாய்ஸ்ல விட்றலாம்.”, அகவழகி கூறியது மிருதுளாவுக்கு சரியென்று பட்டது.

 

    பின் பேச்சு திசை மாறிட, விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் அப்படியே உறங்கிடவும் தான் இருவரும் எழுந்தனர். குழந்தைகளை படுக்கையில் கிடத்தி விட்டு இருவரும் மாலை சிற்றுண்டி செய்ய முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கினர்.

 

     மாலை சிற்றுண்டி உண்டு அதிரன் எழுந்ததும் சிறிது நேரம் அவனை கவி பாப்பாவோடு விளையாட விட்டாள் அகவழகி. இருட்டும் முன் வீட்டிற்கு செல்ல வேண்டுமென அகவழகியும் நிரஞ்சனும் கிளம்பினர். அப்பொழுது ராம்குமாருக்கு ரிசார்ட்டில் ஏதோ பிரச்சனை என்று அழைப்பு வரவும் ராம்குமாரோடு நிரஞ்சனும் செல்ல வேண்டிய கட்டாயமானது. ஆதலால் அகவழகியையும் அதிரனையும் சக்கரவர்த்தி கதிரவனை வீட்டிற்கு அழைத்துப் போகக் கூறினார். அகவழகி தனியாக சென்றுவிடுவேன் என்று எவ்வளவோ வாதாடியும் சக்கரவர்த்தியும் ராம்குமாரும் அது பாதுகாப்பில்லையென கதிரவனோடு செல்ல கூறினர்.

 

    “அழகி! அதான் இவ்ளோ சொல்றாங்கல்ல. கதிரவனோட போ. நாங்க எப்ப திரும்பி வருவோம்னு தெரியாது. அதுவரைக்கும் இங்க இருந்தனா இருட்டிடும் அப்பறம் வீட்டுக்கு போறது கஷ்டம். இல்லனா நீ இங்கயே தங்கிடேன் காலைல வீட்டுக்கு போ.”, என்ற நிரஞ்சனை முறைத்து தள்ளினாள் அகவழகி.

 

     “இப்ப தான்டா உனக்கு மூளை வேலை செஞ்சுருக்கு. ஆமா அழகி! மச்சான் சொல்றதும் சரி தான் பேசாம நீ நைட்டு இங்கயே இரேன்.”, கதிரவன் முகம் பிரகாசமாக புன்னகையோடு கூற, மிருதுளா, சக்கரவர்த்தி, ராம்குமார் என மூவரும் கூட அதயே கூறினர்.

 

     அகவழகிக்கோ கோபம் புசு புசுவென்று எழுந்தது. அனைவர் முன்பு வெளிக்காட்டவியலாது நிரஞ்சனையும் கதிரவனையும் மாறி மாறி முறைத்துத் தள்ளினாள்.

 

     “பரவால்ல அண்ணா. நான் கிளம்புறேன். நீங்க அவரயே கொண்டு வந்து விடச் சொல்லுங்க.”, என்றவள் கதிரவனை முறைக்க, அவனோ கண்ணடித்து சிரிக்க, தன்னுடைய வண்டியில் வந்திருந்தால் இப்பொழுது கதிரவனோடு செல்ல நேர்ந்திருக்காதே என்ற எண்ணம் தோன்றிய மறுகணம் அவள் கோபம் முழுவதும் நிரஞ்சன் புறம் திரும்பியது. அவனை கொலை வெறியோடு முறைத்தவள் அவனுக்கு மட்டும் கேட்கும் வண்ணம், “பிராடு ப்ளான் பண்ணியா? இரு உனக்கு இருக்கு.” என்று பல்லைக் கடித்தவள் அதிரனை தூக்கிக் கொண்டு அனைவரிடமும் விடைபெற்று வீட்டை விட்டு வெளியே வந்தாள். 

 

     பின்னே வந்த கதிரவன், “என்ன செல்லம் மாமாவோட போக போறோம்னு சந்தோஷமா இருக்க போல.”, என அவளது கோபத்தை கிளறி விடும்படி பேசினான்.

 

     “இங்க பாரு எல்லாரும் சொன்னாங்கன்றதுக்காக உன்கூடலாம் என்னால வர முடியாது‌. அப்படி நான் உன்கூட வரணும்னா வீடு போய் சேர்ற வரைக்கும் பேசாம வாய மூடிட்டு வா. எதாச்சும் பேசுனனா பாதி வழில இறங்கி போய்டுவேன். இதுக்கு ஓகேனா போலாம். இல்லன்னா வீட்டுக்கு எப்படி போகணும்னு எனக்கு தெரியும்.”, அவனை முறைத்தவாறே கூறினாள்.

 

    “நீ என் கூட வந்தாலே போதும் அழகி செல்லம். மாமா அந்த சான்ஸ எப்படி ஸ்பாயில் பண்ணி மிஸ் பண்ணுவேன்? நீ சொன்ன மாறி வரேன் ஓகே வா டி அழகி செல்லம்.”, மீண்டும் கண்ணடித்து தோள் குலுக்கியவனை கண்டு சிவுசிவென்று உச்சிக்கு ஏறியது அவளுக்கு.

 

     “வண்டி எடுக்கறியா? சீக்கிரம் வீட்ல கொண்டு போய் விட்ரு.”, என்றவள் கோபத்தில் வார்த்தைகளை கடித்துத் துப்பினாள்.

 

     “இதோ அழகி குட்டி! போலாம்.” என்றவன் தன் ஜீப்பை எடுத்து வந்து நிறுத்த, அதிரனோடு ஏறி அமர்ந்தாள். அவளது இல்லம் நோக்கி ஜீப் வேகமெடுக்க, கதிரவனின் பேச்சால் நிரஞ்சன் மீதான அவளது கோபமும் அதிகரிக்க தொடங்கியிருந்தது. வீடு செல்லும் வரை அவன் பேசாது தான் வந்தான். ஆனால் அவளை பார்ப்பதும் சிரிப்பதுமாக வர, அழகிக்கு எரிச்சலும் கோபமும் மண்டிக் கொண்டு வந்தது. எழுந்த அத்தனை கோபமும் காலையில் தன் மகிழுந்தில் செல்லலாமென்று கூறி அழைத்து வந்த நிரஞ்சன் புறம் திரும்பியது. 

 

     முதல் நாள் நினைவில் அமர்ந்திருந்த அகவழகிக்கு சிறிது நேரத்திற்கு முன்பு வந்துச் சென்ற கதிரவனை எண்ணி மீண்டும் சினம் சிரத்திலேறியது. அவளது சினத்தை “அழகி! அம்மா!” என்ற அதிரனின் குரல் கலைத்தது.

 

தொடரும்….

 

  

 

 

    

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்