Loading

அத்தியாயம் 29

“ஏஞ்சல் என்ன செய்ற?” எனக் கேட்டும் அவள் பிடித்திருந்த அவனது கையை விடவே இல்லை. டைனிங் ஹாலுக்குச் சென்று அங்கு ஒரு சுவரோரத்தில் அவனை ஒதுக்கியவள், “வாட் இஸ் ஹேப்பனிங் ஹியர்?” என்றாள் பற்களைக் கடித்து.

“மர்டர் தான் நடந்துச்சு! நான் இன்வெஸ்டிகேட் பண்ணனும் ஏஞ்சல். டோன்ட் வேஸ்ட் டைம்” என அவன் நகரப் போக, மீண்டும் அவனைச் சுவரோடு அழுத்தினாள்.

இரு கரத்தாலும் அவனை அணைக் கட்டி கண்ணைச் சுருக்கிப் பார்த்ததில் அவன் இதழ்கள் மென்னகை புரிந்தது.

“என்னடி எப்பவும் டெட் பாடியை பார்த்தா பயம் வரும் இன்னைக்கு ரொமான்ஸ் வருது” என அவளது அண்மை தந்த கிறக்கத்தில் கூற,

“டேய் என்னைப் பார்த்தா ரொமான்ஸ் பண்ற மாதிரி இருக்கா?” என வெப்ப மூச்சிரைத்தாள்.

“பின்ன, இதுக்கு பேர் என்ன” என இருவரும் நிற்கும் கோலத்தைக் காட்டிக் கேட்க, அதனை ஒதுக்கி விட்டு, “யாரு அந்தப் பொண்ணு? அவள் கையைப் பிடிச்சு என்னடா சீன் கிரியேட் பண்ணிட்டு இருக்க?” என்றாள் விழியுயர்த்தி.

உதட்டைக் குவித்து புருவம் நெறித்தவன், “பொஸசிவ் ஆகுறியா ஏஞ்சல்?” என மர்ம புன்னகையுடன் வினவ,

“ச்சே! நான் ஏன் பொஸசிவ் ஆகுறேன். என் கூட ரிலேஷன்ஷிப்ல இருக்கும்போது இன்னொரு பொண்ணுக்கும் ரூட்டு விடுறது எனக்குப் பிடிக்காது…” என்றாள் கட்டளையாக.

“டீப் ரிலேஷன்ஷிப்ல இருக்கணும்னு தான் என் ஆசையும்…” என்றவனை அவள் மேலும் முறைக்க, “ஓகே கூல்… குறிஞ்சி எனக்குத் தெரிஞ்ச பொண்ணு. நீ நினைக்கிற மாதிரி இல்ல” என்றவன் இலாவகமாக அவள் சிபிஐ என்பதை மறைத்து விட்டான்.

சில முக்கிய வழக்குகளை விசாரிப்பதால் குறிஞ்சி அண்டர் ஆபரேஷனில் மக்களோடு மக்களாகக் கலந்திருந்ததால் வீட்டினரையும் வெளியில் தனது வேலையைப் பற்றிக் கூற கூடாது என்று திட்டவட்டமாகக் கூறி இருந்தாள். இது தான் சாக்கென்று அவள் வீட்டினரும் மேட்ரிமோனியில் பதிந்து விட்டனர்.

“தெரியும்னா எப்படி தெரியும்?” வில்லாக வளைந்த புருவத்தை மேலும் வளைத்தாள் விஸ்வயுகா.

“க்கும்…” எனத் தொண்டையை செருமியவன், “என் ஸ்கூல் மேட்” என்று பொய்யுரைக்க, அவன் வயிற்றில் நங்கென குத்தியவள், “நீ படிச்சதே ஜென்ட்ஸ் ஸ்கூல்ல… அவள் ஆம்பளை வேஷம் போட்டுட்டு வந்து படிச்சாளா?” எனக் காய்ந்தாள்.

“அவுச்!” என வயிற்றைப் பிடித்தவன், “ஸ்கூலோ காலேஜு எனக்கு ஞாபகம் இல்லடி. நானே சேஃப்டிக்கு தான் வந்தேன்… வந்த இடத்துல தான் அவளை பார்த்தேன்” என்று அடித்து விட்டான்.

“எதுக்கு அவள் பியான்சை சாக விட்டு கட்டிப் பிடிச்சு ஆறுதல் சொல்ல தான் வந்தியா?” அவளுக்கோ சினம் அடங்க மறுத்தது.

“உண்மையை ஒத்துக்கோ உனக்கு பொஸசிவ் தான?” யுக்தா மீண்டும் கேட்க,

“நோ வே!” என்று அவள் மறுக்கும் போதே ஆடவனின் வாக்கி டாக்கி கத்தியது.

“சார் ஃபாரென்சிக்ல இருந்து வந்துட்டாங்க” என்றதும், “ஏஞ்சல் ஐ ஹேவ் டூ கோ!” என்று இடுப்பில் கை வைத்தான்.

“ம்ம்… போ! ஆனா மூடிட்டு வந்த வேலையை மட்டும் பாரு” என எச்சரித்து விட்டே நகன்றாள்.

என்னவோ அவன் இன்னொரு பெண்ணின் அருகில் நின்றதற்கே அவளுக்கு கோபம் அடங்கியபாடில்லை. சில நிமிடங்கள் கடந்த பிறகே தான் செய்தது அதிகபட்சம் எனப் புரிந்து கண்ணை இறுக்கி மூடித் திறந்தாள். தேவையற்று முணுக்கென்ற வலியொன்று தோன்றி மறைந்தது.

குறிஞ்சியோ கலங்கிப் போய் விக்ரமைப் பார்த்தாள். நல்லவன் தான். தன்னிடம் அதிகமாய் வழிந்ததில்லை. தனது வேலையைப் பற்றியும் புரிந்து கொண்டவன். அதிகம் பேசியதில்லை என்றாலும் “குட் சோல்” அவன். இப்படி நியாயமற்று இறந்து கிடந்ததில் அவளுக்கு வேதனை அப்பியது.

ஆகினும் தனக்குள் உறங்கி கொண்டிருந்த சிபிஐ முழித்துக் கொள்ள, அவனது பாடியை பார்வையாலேயே ஆராய்ந்தாள். எங்கும் அடிபட்டதற்கான தடம் இல்லை. எப்படி இது நடந்திருக்க முடியும்? அதிலும் இத்தனை பாதுகாப்பையும் மீறி… என சிந்தித்தாள்.

அவளை நோக்கி வந்த நந்தேஷிற்கும் வருத்தமாகத் தான் இருந்தது.

‘ஏன் என்கிட்ட பொய் சொன்ன?’ என்ற கேள்வியை இந்த நிலையில் கேட்க விருப்பமில்லாது, “சாரி ஃபார் யுவர் லாஸ் குறிஞ்சி” என்றான் மென்மையாக.

அவனை நிமிர்ந்து பாராமல் தலையைக் குனிந்து இதழ்களை அழுந்தக் கடித்தாள்.

அந்நேரம் ஃபாரென்சிக் ஆள்கள் உள்ளே நுழைந்து சோதனையைத் தொடங்கினர்.

மண்டபமே சோகத்துடன் காட்சியளித்தது. யுக்தா குறிஞ்சிக்கு கண்ணைக் காட்டி விட்டு விக்ரமின் உடலை ஆய்வுக்கு கொண்டு வர பணித்தவன், அருணை அழைத்துக் கொண்டு அலுவலகம் விரைந்தான்.

அவனோ “சார் இப்படியே போனா நிலைமை ரொம்ப மோசம் ஆகிடும் சார்” என்றான் நொந்து.

“இப்ப மட்டும் என்னவாம்… நான் ஒரு வேலையைப் பார்க்க இங்க வந்தா, எந்த பரதேசியோ என்னை டிஸ்ட்ராக்ட் பண்ணிக்கிட்டே இருக்கு. ஒரு சின்ன க்ளூ கூட கிடைக்கல. ஷிட்” என்றான் எரிச்சலாக.

“ம்ம்க்கும்… இப்ப டாக்டரும் இது கொலை மாதிரி தெரியல. நேச்சுரல் டெத்ன்னு உருட்டப் போறாரு. அதைக் கேட்டு இன்னும் கொஞ்சம் தான் டென்சன் ஆகுது சார். இதுக்கு மேல மீடியாகிட்டயும் மூடி மறைக்க முடியாது. ஆல்ரெடி நரேஷ் டெத்ல நம்ம மேல காண்டுல இருக்கானுங்க” எனப் புலம்பினான்.

—-

விஸ்வயுகா நந்தேஷை இழுத்துக் கொண்டு மருத்துவமனைக்கே சென்றாள். அங்கு நடந்ததை அறிந்து ஆளுக்கு ஒரு மூலையில் கையை கன்னத்தில் வைத்து அமர்ந்திருந்தனர் ஷைலேந்தரியும் மைத்ரேயனும்.

“என்னடா இது இப்படி காவு வாங்குது. பேசாம கம்பெனியை இழுத்து மூடிடலாமா?” எனப் பரிதாபமாகக் கேட்டவளை முறைத்தான்.

“டேய் நம்ம மூடலைன்னா தானாவே சீல் வச்சுடுவானுங்க போலடா”

“அட இருடி நீ வேற… எவ்ளோ ப்ரொபைல்ஸ், எவ்ளோ உழைப்பு போட்டிருக்கோம்… மூடிடலாம்னு அசால்ட்டா சொல்ற. அந்த சீரியல் கில்லர் எல்லா மேட்ரிமோனியையும் தான அட்டாக் பன்றான். அப்போ எல்லாருமே மூடிட்டு தான் போகணும்”

“எல்லா மேட்ரிமோனியையும் டார்கெட் பண்றான் தான்… ஆனா நம்ம சைட் தான் அதிக கொலை. பாரபட்சமில்லாம தட்டி தூக்குறான். எப்படிடா இவ்ளோ அலெர்ட்டா இருந்தும் எப்படிடா இதெல்லாம் நடக்குது. ஐ டோன்ட் அண்டர்ஸ்டான்ட்” என்று நகத்தைக் கடித்துத் துப்பினாள்.

“அதான்டி எனக்கும் ஒரு எழவும் புரிய மாட்டேங்குது. இந்தப் பிரச்சனை முடிஞ்சு அந்த யுக்தா கிளம்பிப் போயிடுவான் நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா, ஒன்னு மாத்தி ஒன்னு நடந்துக்கிட்டே இருக்கு. ஆல்ரெடி ப்ரொஃபைல் அப்டேட் செஞ்சவங்க எல்லாம் இன்ஆக்டிவ் ஆகிட்டாங்க ஷைலா. இந்தப் பிரச்சனை எல்லாம் முடிவுக்கு வந்தா கூட, நம்பி மேட்ரிமோனில ரெஜிஸ்டர் பண்றது குறைஞ்சுடும். ஆல்ரெடி எவ்ளோ லாஸ் தெரியுமா?” என்றான் கவலையாக.

“ம்ம் பேரும் போகுது… பணமும் போகுது… பிஸினஸும் போகுதுடா கண்ணு முன்னாடியே. ஆனா நம்மளால ஒண்ணுமே செய்ய முடியல. ப்ச்!” என நெற்றியைப் பிடித்தாள்.

மைத்ரேயனோ “ஒருவேளை மேட்ரிமோனியை எல்லாம் அழிக்கிறது தான் அந்த சீரியல் கில்லரோட பிளானா இருக்குமோ?” எனச் சந்தேகமாகக் கேட்க,

“பட் வை மைதா? இதனால அவனுக்கு என்ன லாபம்?” என்றாள் புரியாமல்.

நன்றாக சாய்ந்து அமர்ந்தவன் “ஹேய் எனக்கு ஒன்னு தோணுது. ஜஸ்ட் கெஸ்ஸிங் தான். இதெல்லாம் செய்றது ஏன் ஒரு ப்ரோக்கரா இருக்க கூடாது” என சிபிஐ ஆபிசராகவே மாறினான்.

“ப்ரோக்கரா?” ஷைலேந்தரி தலையைச் சொரிய,

“ஆமாடி, இந்த மேட்ரிமோனி பெருகுனதுல பிக் லாஸ் யாருக்கு… தரகருக்கு தான? அந்த மாதிரி பிசினஸை மொத்தமா இழந்த தரகர் யாராவது இதை செய்யலாம்ல. இந்த பாய்ண்ட் ஆஃப் வியூல இன்வெஸ்டிகேட் பண்ணுனா கண்டிப்பா கில்லரை கண்டுபிடிக்கலாம்” என எதையோ சாதித்த பெருமையுடன் கூறினான்.

“கரெக்ட்டா இருக்குற மாதிரி தான் இருக்கு. ஆனாலும் லட்சக்கணக்குல செலவு செஞ்சு ஆரம்பிச்ச பிஸினஸோட, வெறும் டேட்டாவை வச்சு அங்க இங்க அலைஞ்சு பொண்ணு மாப்பிள்ளையை சேர்த்து வைக்கிற தரகர் போட்டி போட்டு கொலை செய்றாருன்றது ஒரு மாறி ஆக்வார்டர் இல்ல?”

“இல்லையே! கண்டிப்பா ஏதோ ஒரு தரகர் தான் இதை செய்றாரு. ஐ ஆம் சியூர்” என்று திட்டவட்டமாக அவன் கூறியதில், “இதை வேணும்னா யுக்தா சார்கிட்ட சொல்லி வைக்கலாமா?” என்றாள்.

“சொல்லு. அவனுக்கு தான் கில்லரைப் பிடிக்க அறிவில்லை. நம்ம சொல்லியாவது செய்யட்டும்” என்று திமிராய் கூற, “இவன் வேற… எதையாவது பேசித் தொலைஞ்சு யுக்தாகிட்ட அடி வாங்காம இருக்கணும் பகவானே!” என மானசீகமாக வேண்டுதலை போட்டு விட்டு யுக்தாவிற்கு போன் செய்து விவரம் கூறினாள்.

அலுவலகத்திற்கு அப்போது தான் வந்த யுக்தா, “ஷைலு… நீ கொஞ்சம் பிரில்லியண்ட் பொண்ணு தான். சோ இந்த கேவலமான ஐடியா உனக்கு வந்துருக்காதுன்னு நம்புறேன். யார் சொன்னது இது?” என நக்கலாக அவன் கேட்க, அசடு வழிந்தவள் “என் ஆசை கணவர் தான் சார்” என்றாள் நெளிந்து.

“ம்ம்… ஏதோ கல்யாணம் ஆகிடுச்சேன்னு சும்மா விடுறேன். இல்ல நானே நாலு லாரியை விட்டு ஏத்திடுவேன். ஐடியா குடுக்குறாளாம் ஐடியா அடச்சீ போனை வை!” என்று அழைப்பைத் துண்டிக்க, பட்டென போனை காதில் இருந்து எடுத்தாள்.

மைத்ரேயன் ஆர்வமாக “என்ன ஆச்சு?” எனக் கேட்க,

“அவன் அங்க துப்புறது இங்க வரை தெறிக்குது!” எனக் முகத்தைத் துடைத்துக் கொண்டவள், “துப்புறான்டா அந்த சிபிஐ!” என்றாள் பாவமாக.

“அவனை எல்லாம் நம்பிட்டு இருக்க கூடாது ஷைலா. நம்ம தனியா இன்வெஸ்டிகேட் பண்ணலாம்…” எனத் தீவிரமாகக் கூற,

“ஐயோ இவன் ஒரு ஐடி எஞ்சினியர்னு நான் எப்படி புரிய வைப்பேன்” என நொந்து போனாள் ஷைலேந்தரி.

நல்லவேளையாக விஸ்வயுகா வந்து அவனது தேடுதல் பணிக்கு தீயூற்றி அணைத்தாள்.

“டேய்… இதுல நம்ம நேரடியா இன்டர்ஃபியர் ஆக வேணாம். அந்த யுக்தாவே முட்டிக்கிட்டு சாகட்டும். அஃப்கோர்ஸ் நமக்கு பிசினஸ்ல அடி தான். ஈவன் கொலையாளியைப் பிடிச்சாலும் டௌனா இருக்குமே தவிர, சில மாசத்துல மக்களெல்லாம் இதை மறந்தே போய்டுவாங்க. மறுபடியும் பூம் ஆகிடும். சோ இதுக்குள்ள நம்ம தலைய விட வேணாம். அனாவசியமா நம்ம மேல சந்தேகம் வரும்! இப்ப நம்ம மேல சந்தேகம் வர்றது சரி இல்ல கைஸ்…” என்று மூவருக்கும் கண்ணாலேயே செய்தி சொல்ல, அவர்களும் அதனை உணர்ந்து தங்களது இரத்த நாளத்தில் ஊறிப்போன இன்வெஸ்டிகேஷனை அடக்கிக்கொண்டனர் பாவம்.

மைத்ரேயனை டிஸ்சார்ஜ் செய்து விட்டு அலுவலகத்திற்கே சென்று விட்டனர். அவனை வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்க கூறியும் அதற்கு அவன் உடன்படவில்லை. இதனிடையில் யுக்தா நால்வரிடமும் என்கொயரி செய்ய வேண்டுமெனக் கூறியதில் நால்வரும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர்.

அத்தியாயம் 30

யுக்தா சாகித்யன் விஸ்வயுகாவின் அலுவலகத்திற்கே வந்தடைந்தான். கான்ஃபரன்ஸ் ஹாலில் அவன் முன்னே நால்வரும் அமர்ந்திருக்க,

“சோ நடந்துட்டு இருக்குற கொலையைப் பத்தி உங்க ஒபினியன் என்ன?” மேஜை மீது இரு விரல்களால் தாளமிட்டபடி வினவினான்.

“இவன் நம்ம வாய பிடுங்க பாக்குறானோ” நந்தேஷ் முணுமுணுக்க, “நீ மூஞ்ச சிரிச்ச மாறியே வச்சுக்க…” என்று மைத்ரேயனும் கண்டித்தான்.

“சார் மைதா சொன்ன மாதிரி தரகர் ஏன் இதுல இன்வால்வ் ஆகியிருக்க கூடாது!” என ஆரம்பித்ததில், “சென்னைல இருக்குற ஒரு தரகரை விடாம எல்லாரையும் பிடிச்சு விசாரிச்சாச்சு. தென், மேட்ரிமோனில ரெஜிஸ்டர் பண்ணி கல்யாணம் ஆகாதவங்களையும் பிடிச்சு விசாரிச்சாச்சு. உங்க மேட்ரிமோனி ஸ்டார்ட் பண்ணுன நாள்ல இருந்து அதுல வந்த ப்ரொபைல் எல்லாமே அலசி ஆராய்ஞ்சாச்சு. பட் ரிசல்ட் ஸீரோ. இதுல வேற எதையோ மிஸ் பண்றீங்க!” என்றான் கூர்மையாக.

நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பின் விஸ்வயுகாவே, “நாங்க சொல்ல வேற எதுவும் இல்ல யுக்தா” என்றதில், “இருக்கு யுகா. அபர்ணாவோட டெத் பத்தி இன்னும் டீப்பா எனக்குத் தெரியணும்” என அழுத்தத்துடன் வினவினான்.

“நான் ஆல்ரெடி எல்லாமே சொல்லிட்டேனே” அவளோ குழம்பியதில், “லிசன் கேர்புல்லி… இப்ப நடக்குற கொலைகளுக்கும் அபர்ணாவோட டெத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு” என்றவனின் கூற்றில் நால்வரும் அதிர்ந்தனர்.

கையில் ஒரு கோப்பை வைத்திருந்த யுக்தா, “நான் மறுபடியும் அபர்ணாவோட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை அனலைஸ் பண்ணுனேன். அண்ட், ஒன்ஸ் அகைன் போஸ்ட் மார்ட்டம்க்கு அனுப்பி இருந்தேன். அபர்ணாவுக்கு கார் ஆக்சிடெண்ட் ஆகியிருக்கு. தலைல பலத்த அடி. பட், அது தான் அவளோட இறப்புக்கு காரணமான்னு கேட்டா குவெஸ்ட்டின் மார்க் தான். பிகாஸ் அவள் ஹார்ட் அட்டாக் வந்து இறந்துருக்கா. இத்தனைக்கும் அவள் ஹார்ட் பேஷண்ட் இல்ல. ஆக்சிடென்ட் நடக்காம இருந்திருந்தா, மே பி இதுவும் ஒரு நேச்சுரல் டெத்தா இருந்துருக்கும்” எனக் கூறி முடித்ததில் அங்கு பலத்த அமைதி.

நந்தேஷ் தொண்டையை செருமிக் கொண்டு, “காண்ட் பிலீவ் திஸ். அப்போ இந்த கொலையோட ஆரம்பம் அபர்ணாவா?” எனப் பயத்துடன் கேட்க, “ம்ம் இருக்கலாம். இல்ல அதுக்கு முன்னாடியும் இருக்கலாம். வாட்எவர், இப்ப அந்தக் கொலைகாரனோட மோட்டிவ் நீங்க நாலு பேரும் தான்” என்றதில் ஷைலேந்தரி மிரண்டு மைத்ரேயனின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

அவனது உள்ளங்கையும் சில்லிட்டு தான் இருந்தது.

விஸ்வயுகா, “என்ன நீ விட்டா பயமுறுத்திக்கிட்டே போற. எங்களை எதுக்கு டார்கெட் பண்ணனும்?” என வினவினாள்.

“அதை கில்லர் தான் சொல்லணும் ஏஞ்சல். மைத்ரேயனைக் கொல்ல வந்தது, ஷைலேந்தரியை ஆக்சிடெண்ட் செய்ய வந்தது எல்லாமே பக்கா பிளான்” என்றதும் இரு ஆடவர்களும் பதறினர்.

“வாட் ஷைலாவைக் கொல்ல வந்தாங்களா?” என மைத்ரேயன் அவளைப் பார்க்க, அவளும் முகத்தைத் தொங்கப் போட்டு முந்தைய நாள் நிகழ்ந்ததைக் கூறினாள்.

நந்தேஷ், “இதை ஏன் நேத்தே சொல்லல ரெண்டு பேரும்” எனச் சண்டைப் பிடிக்க, யுக்தா, “ப்ச் ஷ்ஷ்… உங்க டிராமா எல்லாம் அப்பறம் வச்சுக்கோங்க. இப்ப உங்க உயிரைக் காப்பாத்தணுமா இல்ல நீங்களே உங்க இன்ஃப்ளூயன்ஸ் வச்சு சீரியல் கில்லரோட போராடிக்கிறீங்களா?” எனக் கேட்டான் எகத்தாளமாக.

விஸ்வயுகாவும் மைத்ரேயனும் அவனை முறைத்துப் பார்க்க, ஷைலேந்தரியோ “ஐயோ சார்… இதெல்லாம் போய் எங்க வீட்ல சொன்னா, அவங்களே எங்களை கவுரவக் கொலை பண்ணிடுவாங்க. நீங்களே பார்த்து காப்பாத்தி விடுங்க சார்” என சரணடைந்து விட்டாள்.

நந்தேஷ் அவள் கையைக் கிள்ளி, “விட்டா காலுலேயே விழுந்துடுவ போல” என முறைக்க, “பின்ன என்னடா… சீரியல் கில்லாரோட எல்லாம் நம்மளால போராட முடியாது. நானே இப்ப தான் கமிட் ஆகிருக்கேன். கொய்யால” என்று அவள் பங்கிற்கு முறைத்தாள்.

“ஷைலு!” விஸ்வயுகா அதட்டியதும் அவள் அமைதியாக, “இப்ப என்ன செய்யணும்னு சொல்ற?” எனக் கேட்டாள் யுக்தாவிடம்.

“ம்ம்ம்” என யோசிப்பது போல பாவனை செய்தவன்,

“எனக்கு உங்களைப் பத்தின எல்லா தகவலும் வேணும். உங்களைப் பத்தி மட்டும் இல்ல, உன் வீட்ல இருக்குற எல்லாரோட மொபைல் டீடெய்ல்ஸ், இதுக்கு முன்னாடி உங்க வீட்ல இருக்குற ஆளுங்களுக்கு நடந்த பிரச்னையைப் பத்தின டீடெய்ல்ஸ், பர்சனல் இன்ஃபர்மேஷன்… ம்ம் லைக்… உங்களை மாதிரி பெரிய ஆளுங்கள்லாம் வீட்டுக்குள்ளயே சீக்ரட் லாக்கர் வச்சுருப்பீங்களே… ஒட்டுமொத்தமா எல்லாமே எனக்குத் தெரியணும். அப்போ தான் சின்ன சின்ன விஷயத்தைக் கூட விடாம இன்வெஸ்டிகேட் செஞ்சு இதை யார் செய்றான்னு கண்டுபிடிக்க முடியும். தொடர்ந்து நடக்குற கொலையையும் தடுக்க முடியும். கண்டிப்பா உன் குடும்பத்தோட சம்பந்தப்பட்ட யாரோ தான் கில்லர்” என்று தனக்கு முன் இருந்த சிப்ஸை காலி செய்தபடி அதிகாரமாய் கூறியவனை நால்வரும் ‘பே’ வெனைப் பார்த்தனர்.

நந்தேஷ், “நீ என்ன இவ்ளோ அசால்ட்டா கேட்குற. என் அம்மாவுக்கு தெரிஞ்சா எங்களை தான் செருப்பை கழட்டி அடிப்பாங்க…” என மிரள,

ஷைலேந்தரியோ, “ஆமா ஆமா எல்லாமே பெரியம்மாவோட கஸ்டடில இருக்கு. எங்களுக்கே எந்த பாஸ்வோர்டும் தெரியாது. அதுவும் இல்லாம நீ நினைக்கிற மாதிரி அதுல ஒன்னும் இல்ல. போலீஸ் கேஸ் ஆகுற பிரச்சனையை எல்லாம் ஒரு காபி எடுத்து அவங்களும் பத்திரப்படுத்திப்பாங்க. அவ்ளோ தான். அது நீ போலீஸ் ஸ்டேஷன்ல கேட்டாலே இருக்கும்” என விளக்கமளித்தவள், ‘ஐயோ ஃப்ளோல மரியாதை இல்லாம பேசிட்டோமே… கவனிச்சுட்டானோ’ என லேசாய் மிரண்டு பார்த்தாள்.

அவன் தாடையைத் தடவியபடி, “எனக்கு எல்லா டீடெயிலும் குடுத்தா கில்லரை உடனே கண்டுபிடிக்கிறேன். இல்லன்னா, ஒவ்வொருத்தரா சாகுங்க. அப்பறம் பாத்துக்கலாம்…” எனக் குளிர்கண்ணாடியை மாட்டியபடி எழுந்தவன், விஸ்வயுகாவைத் தவிர்த்து மற்றவர்களைப் பார்த்து “கால் மீ சார்…” என்று எச்சரித்து விட்டு, “ஸீ யூ சூன் ஏஞ்சல்” என அவள் கன்னத்தை மெல்லமாகத் தட்டி விட்டு விறுவிறுவென வெளியில் சென்றான்.

அவன் சென்ற திசையை வெறித்தவளுக்கு எரிச்சல் மேலோங்கியது.

மைத்ரேயன், “என்ன விஸ்வூ இது. இதை எல்லாம் போய் ஆண்ட்டிகிட்ட கேட்க முடியுமா? அவங்க ஸ்ட்ரிக்ட்டா நோ சொல்லிட்டு, நம்ம பிசினஸ் இருந்தா தான பிரச்சனைன்னு மொத்தமா மூடிடுவாங்க. இதை ஸ்டார்ட் பண்றதுக்கே நம்ம எவ்ளோ போராடுனோம் அவங்க கிட்ட… இப்ப என்ன செய்றது” என்றான் புரியாமல்.

“நான் பேசுறேன்…” விஸ்வயுகா கூறியதில், “பெரியம்மாகிட்டயா?” என விழி விரித்துப் பார்த்த ஷைலேந்தரியிடம் “இல்ல யுக்தாகிட்ட” என்று விட்டு யோசனையில் ஆழ்ந்தாள்.

அந்நேரம் சிவகாமி நந்தேஷிற்கு போன் செய்ய, உடனே அழைப்பை ஏற்று “சொல்லுங்கம்மா” என்றான் பணிவாக.

“எங்க இருக்கீங்க?” சிவகாமி கம்பீரக்குரலில் கேட்டதில்,

“இங்க தான்மா ஆபிஸ்ல” என்றான்.

“ம்ம் எதுவும் பிரச்சனையா? மேட்ரிமோனி மூலமா மர்டர் நடக்குதுனு நியூஸ் வருது”

“ஐயோ இல்லம்மா. அவ்ளோ பெரிய விஷயம் இல்ல. யாரோ வேணும்னே பண்ணிருக்காங்க. சீக்கிரம் கண்டுபிடிச்சுடுவாங்கமா” என மழுப்பினான்.

“சரி சரி லன்சுக்கு வீட்டுக்கு வாங்க” என்று அழைப்பு விடுத்ததில், “ஓகே மா” என போனை வைத்தவன், “அம்மாவுக்கு வேற டவுட் வந்துருச்சு போல…” என்றதில் மற்ற மூவரும் திகிலடைந்தனர்.

“விஸ்வூ லஞ்சுக்கு வீட்டுக்குப் போய் கேஷுவலா இருந்து நம்ப வச்சுடலாம்” என நந்தேஷ் அழுத்திட,

“சரி தான்” என எழுந்தாள்.

மைத்ரேயன் “நீங்க போங்க. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு” என மறுக்க, அதே காரணத்தைக் கூறி ஷைலேந்தரியும் மறுத்தாள்.

அவர்களை விட்டு விட்டு நந்தேஷும் விஸ்வயுகாவும் மட்டும் வீட்டிற்குச் சென்றனர்.

அங்கு டைனிங் டேபிளிலேயே அவர்களுக்காக காத்திருந்தார் சிவகாமி.

“டூ மினிட்ஸ்மா ரெப்ரெஷ் ஆகிட்டு வரோம்” என்று இருவரும் தத்தம் அறைக்குள் நுழைய, விஸ்வயுகா முதல் வேலையாக அணிந்திருந்த மாங்கல்யம் ஆடைக்குள் சரியாக இருக்கிறதா என சோதித்து விட்டு, அணிந்திருந்த மற்றொரு செயினையும் உள்ளே தள்ளினாள்.

அது அஸ்வினி அவளுக்காக பார்த்து பார்த்து வாங்கிக் கொடுத்த முதல் தங்கச் செயின்.

சிவகாமி முன்பு அந்த செயின் தெரியும்படி நடமாடமாட்டாள். அஸ்வினி இறந்தபின்பு அவரைப் பற்றிய நினைவுகள் தாங்கும் எதுவும் வீட்டில் இருப்பதே அவருக்குப் பிடிப்பதில்லை. இந்த செயினைக் கண்டால் ஆயிரம் கேள்வி வருமென்று இத்தனை வருடங்களாக மறைத்து விட்டவள், இப்போதும் குர்தியினுள் மறைத்து வைத்தாள்.

பின் இருவரும் சிவகாமியுடன் உண்ண அமர, இரண்டாவது முறையாக சிவகாமி வினவினார், “பிரச்சனை எதுவும் இல்லையே?” என்று.

வாயில் சாதத்தை வைத்தபடி “ஒன்னும் இல்லமா” என்ற விஸ்வயுகாவைக் கூர்ந்து பார்த்தவர், “என்ன அது?” என அவள் கழுத்தைப் பார்த்து கேட்க, அவளுக்குத் திக்கென்று இருந்தது.

தாலியைப் பார்த்து விட்டாரோ?

“அது என்… என்னமா?” எனக் குனிந்து கழுத்தைப் பார்க்க, அவர் வெடுக்கென அவள் மறைத்து வைத்திருந்த செயினைப் பற்றி இழுத்தார். நல்லவேளையாக அவரிடம் தாலி மாட்டவில்லை எனப் பெருமூச்சு விட்டாலும், இந்த செயினிற்கும் பல விசாரணை வருமே என சலித்தவள், அதனைப் பிடித்துக் கொண்டு “அது சித்தி வாங்கித் தந்ததுமா இப்ப தான் பாக்குறீங்களா?” எனத் தெரியாதது போல கேட்டுக்கொண்டாள்.

“உன் சித்தி என்ன பணத்துலயா புரளுனா? ஏது அவளுக்கு தங்கம் வாங்குற அளவு பணம்?” எனச் சந்தேகமாகக் கேட்க, “இதென்னமா சின்னப்பிள்ளைத்தனமான கேள்வி. சித்தப்பாவும் சித்தியும் ஒரு பெரிய பப்ளிகேஷனே நடத்திட்டு இருந்தாங்க. உங்க அளவுக்கு இல்லைன்னாலும் அவங்க ஒன்னும் தரம் குறைஞ்சு போய்டல” எனச் சுள்ளென உரைத்தாள்.

உண்மை தான். மூன்று குடும்பமும் அவரவர் தொழிலில் காலூன்றி, அவர்களது சேமிப்பைப் பலப்படுத்திக் கொண்டது. இருப்பதும் உண்பதும் மட்டும் பொதுச் சொத்தில்.

ஆனால் சௌந்தருக்கும் அஸ்வினிக்கும் குழந்தையில்லாத காரணத்தால் சேமிப்பை பெருக்குவதற்கு பிரியமில்லை. வரும் பணத்தை பிறருக்கு உதவி செய்வதற்கே பயன்படுத்தினர். அதனை அறிந்த சிவகாமி அவர்களது பதிப்பகத்தை முடக்க நிறைய சதி செய்து, லாபமில்லா தொழிலாக மாற்றியது வேறு விஷயம். இன்றளவும் அது யாருக்கும் தெரியாது என்று தான் அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார் அஸ்வினியைத் தவிர.

அதனால், அவர்களிடம் சேமிப்பு என்றெல்லாம் எதுவும் இருந்ததில்லை. சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் பணக்கார வீட்டில் நடுத்தர வாழக்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர்.

ஏனோ அந்த மெல்லிய செயினைப் பார்க்க பார்க்க சிவகாமிக்கு கோபம் பெருக்கெடுத்தது. “அதைக் கழட்டி தூக்கி எறி!” என அதிகாரமாக உரைக்க, “நோ வே!” என்று அவளும் மறுத்தாள்.

“விஸ்வா… என் பொறுமையை சோதிக்காத. அதைக் கழட்டிடு”

“முடியாதும்மா. சித்தி ஞாபகமா இது எப்பவும் என் கழுத்துல இருக்கும்” அதீத அழுத்தம் அவள் குரலில்.

நந்தேஷிற்கோ யாரை சமன்செய்வதென்று தெரியவில்லை.

“ம்மா அவள் அப்பறமா கழட்டி வச்சுப்பாம்மா விடுங்க” என்க, “இப்ப இவள் இந்த செய்யினைக் கழட்டல… நானே அத்துருவேன்” என்றவரின் விழிகளில் நெருப்பு அலைபாய்ந்தது.

“முடிஞ்சா செஞ்சுக்கோங்க” என்ற திமிர்த்தனம் இளையவளின் முகத்தில் நர்த்தனம் ஆட, அதில் கோபமுற்ற சிவகாமி வெடுக்கென அந்தச் செயினைப் பற்றி இழுத்தார்.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு அந்த செயினில் ஒரு பகுதி விட்டுப் போயிருக்க, அதனை சரி செய்து தான் கழுத்தில் போட்டு இருந்தாள். ஆனாலும், எப்போது வேண்டுமானாலும் அறுந்து விடும் அளவு மெலிதாக இருந்த செயின், சிவகாமியின் அழுத்தம் தாளாமல் இரண்டாக பிய்ந்து வந்தது. அந்த அழுத்தம் தாளாமல் விஸ்வயுகாவின் இரு பக்க கழுத்திலும் கீறல் ஏற்பட்டு லேசாய் இரத்தமும் எட்டிப்பார்த்தது.

நந்தேஷ் வெகுவாய் அதிர்ந்து, “அம்மா என்னமா பண்றீங்க?” எனப் பதறி தங்கையைத் தாங்கிக் கொள்ள, அந்நேரம் டேபிள் மீதிருந்த விஸ்வயுகாவின் அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான அடையாளமாக விளக்கு ஒளிர்ந்தது.

“ஆர் யூ ஓகே ஏஞ்சல்?” என்ற யுக்தா சாகித்யனின் காரணமில்லா பதற்றத்தைத் தாங்கி இருந்தது அவளும் அவளது அலைபேசியும்.

மோகம் வலுக்கும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
14
+1
114
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. யுகா விஸ்யூ உணர்வு அழகு