Loading

அத்தியாயம் 29

திடீரென ஏற்பட்ட நிகழ்வில் கார் ஓட்டிக்கொண்டிருந்த சஜித் நிலைகுலைந்துப் போனாலும், நொடி நேரத்தில் சுதாரித்து காரை கண்ட்ரோலுக்கு கொண்டு வர விழைய, அது முடியாமல் போஸ்ட் கம்பத்தின் மீது டொம்மென முட்டினான்.

நல்லவேளையாக காரில் ஏறியதுமே ஸ்வரூப் அவர்களை சீட் பெல்ட் போட வைத்ததால், அத்தனை பேரின் முன்பும் ஏர்பேக் வந்து காப்பாற்றியது.

“சீட்பெல்ட் போடலைன்னா, இந்நேரம் அப்பறம் மாதிரி நொறுங்கி இருப்போம்” என அந்நிலையிலும் அப்பளத்தை நினைவுக் கூர்ந்த அக்ஷிதா, உத்ஷவி மயங்கி இருப்பதைக் கண்டு, “ஷவி… டார்ல்ஸ்” என எழுப்பினாள்.

சட்டென ஏற்பட்ட நிகழ்விலும், கண்ணாடித் துண்டுகள் நெற்றியைப் பதம் பார்த்தத்திலும் மயங்கி விட்டாள் போலும்.

அனைவருக்குமே சிறு சிறு காயங்கள் ஏற்பட்டிருக்க, ஜோஷித்திற்கு ஏற்கனவே அடிபட்ட கையிலேயே மீண்டும் அடித்து விட்டது.

அதில் அவன் கையைப் பிடித்துக் கொண்டு வலியில் துடிக்க, ஸ்வரூப் அவனது கன்னத்தில் பதிந்த கண்ணாடித் துகள்களை வேகமாக எடுத்து விட்டு, அவனருகில் வந்து பதறினான்.

“ஆர் யூ ஆல்ரைட் ஜோ.” என்றதும், அவன் வலியைப் பொறுத்துக் கொண்டு “ம்ம்…” எனத் தலையாட்டினான்.

“ப்ளீடிங் ஆகுதுடா. இங்க காட்டு” என்றவன், அவனது உள்ளங்கையில் வழிந்த இரத்தத்தை பொருட்படுத்தாமல் ஜோஷித்தைக் கண்டு பதற,

“ப்ளீடிங் ஆனா தான் பேசுவியாடா?” எனக் கேட்டு கண் கலங்கினான் ஜோஷித்.

“முட்டாள்தனமாப் பேசி என் கோபத்தை அதிகப்படுத்தாத ஜோ. நீ தான் முதல்ல மூஞ்சியைத் திருப்பிட்டு போன. நான் இல்ல. என்னமோ நான் உன்னை ஒதுக்கி வச்ச மாதிரி பேச்சைப் பாரு” எனக் கடிந்தவனிடம், “சாரி சொல்றேன்ல.” என்றான் தலையை ஆட்டி.

“அடேய் நாசமா போனவனுங்களா… சாரி பூரியை எல்லாம் அப்பறம் சொல்லுங்க. முதல்ல எங்களை காப்பாத்துங்கடா” என விஹானா காட்டுக் கத்தாக கத்த, அவர்களின் சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டே, காலில் ஏற்பட்ட அடியுடன் மற்றவர்களை வெளியில் கொண்டு வர முயன்றான் சஜித்.

“வர வர நீயும் இந்த கேடி மாதிரி சாப்பாடு பத்தியே பேசுற…” என்று அவளைக் கிண்டலடித்தபடி வெளியில் இழுக்க, “ஐயோ அம்மா…” என தோள்பட்டையைப் பிடித்த படி இறங்கிய விஹானா,

“இந்தக் கலவரத்துல உனக்கு கமெண்ட் கேட்குதுல” என சஜித்தை முறைத்திட, அவன் அக்ஷிதாவை மெல்ல கையைப் பற்றி வெளியில் இழுத்தான்.

அவளது கைகளிலும் அடிபட்டு இரத்தம் வந்திருக்க, அதனைக் கண்டு அவன் மனதும் பதற்றம் கொண்டது.

“வேற எங்கயும் அடி இல்லைல.” அவன் கனிவுடன் கேட்டதில், “இல்ல காட்ஸில்லா. ஷவி தான் மயங்கிட்டா” எனப் பயத்துடன் இறங்க, அதற்குள் மற்ற இரு ஆடவர்களும் அவர்களை நெருங்கினர்.

சஜித் காலை ஊண்ட இயலாமல் தடுமாற, அவனைப் பிடித்துக் கொண்ட ஸ்வரூப், “கால்ல என்னடா ஆச்சு… நிக்க முடியுதா?” எனத் தவிப்புடன் கேட்டான்.

“முடியுதே. உனக்கு தான் ரொம்ப காயமா இருக்கு ஸ்வரா” என வருத்தத்துடன் கூறிட, “இல்ல லேசான காயம் தான்…” என்றவன், உத்ஷவியை காரில் இருந்து தூக்கினான்.

“ஏய் திருடி… விஷா இங்க பாரு. கண்ணைத் திற” என அவள் கன்னத்தில் தட்டியவன், தரையில் போட்டு, தலையில் எதுவும் அடிபட்டிருக்கிறதா என சோதித்துப் பின் நிம்மதி கொண்டான்.

“கார்ல தண்ணி பாட்டில் இருக்கு எடு!” என்று விஹானாவிடம் கூற, அவள் வேகமாக செயல்பட்டாள்.

அக்ஷிதாவிற்கு எப்போது வேண்டுமானாலும் அழுகை வெடிக்கும் நிலையில் இருந்தது. “இவள் ஏன் எந்திரிக்கவே இல்ல…” என அழுகுரலில் கேட்டதும், சஜித்திற்கு அவளது கண்ணீரை உடனடியாகத் துடைக்க வேண்டும் என கரங்கள் பரபரத்தது.

அதற்குள் ஜோஷித், “பயத்துல மயங்கி இருப்பா அக்ஷி. ரிலாக்ஸ்.” என அவளைச் சமன்படுத்த, முகத்தில் நீர் தெளித்ததும் கண்ணைச் சுருக்கி விழித்தாள் உத்ஷவி.

“ஷவி” என விஹானாவும் அக்ஷிதாவும் அவளைக் கட்டிக்கொள்ள, அவளுக்குத் தலை கிண்ணென வலித்ததோடு நடந்ததும் நினைவு வந்து அவர்களை அணைத்துக் கொண்டாள்.

“ரெண்டு பேரும் ஓகே தான?” என்றவளின் பார்வை அவர்களை அவசரமாக ஆராய, “எங்களுக்கு ஒண்ணும் இல்ல. நீ தான் மயங்கி எங்களை பயமுறுத்திட்ட” என விஹானாக் குறைபட்டதில், உத்ஷவி ஆடவர்களையும் ஒரு முறை பார்த்து விட்டு, ஸ்வரூப்பின் கன்னத்தின் ஓரத்தில் வழிந்த குருதியைக் கை காட்டினாள்.

“இரத்தம் வருது உனக்கு…” என்றவளை, மேலிருந்து கீழ் வரை ஒரு முறை தனது எக்ஸ்ரே பார்வையில் பதிய வைத்து, காயத்தை சோதித்தான்.

அவன் பார்வை அவளை எப்போதும் போல ஃப்ரீஸ் ஆக்கிட, சட்டென நினைவு வந்தவளாக “நிக்கி? நிக்கி எங்க?” எனப் பதற்றத்துடன் கேட்டாள்.

“அவன் இப்ப தான் கார்ல இருந்து இறங்குனான்” என ஸ்வரூப் நிமிரும் போதே, நிகிலன் அவர்களிடம் இருந்துத் தப்பித்து சாலை மாறிச் செல்வது தெரிந்தது.

நொடி நேரத்தில் அவனது விழிகள் ரௌத்திரத்தைக் கக்க, “டேய்… டேய் நில்லுடா…” என அவன் பின்னே செல்லப் போனான்.

உத்ஷவியும் அவனைத் தொடர, அவர்கள் எதிர்பாரா நேரம், எதிரில் வேகமாக வந்த வேன் ஒன்றில் மோதி தூக்கி எறியப்பட்டான் நிகிலன்.

“ஷிட்… ஷிட்… ஷிட்…” எனக் காலைத் தரையில் உதைத்தவன் வேகமாக அங்கு செல்ல, உத்ஷவி அதே இடத்திலேயே உறைந்து நின்று விட்டாள்.

இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவனைக் கையில் அள்ளிய ஸ்வரூப், “பைத்தியமாடா நீ. என்கிட்ட இருந்து தப்பிச்சுப் போய் என்னடா பண்ணப் போற.” எனக் கடிந்து கொண்டு, “சஜி ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணு” என்று எதிர்சாலையில் இருந்தே கத்தினான்.

அவன் ஏற்கனவே ஆம்புலன்சிற்கு போன் செய்திருந்ததில், “கொஞ்சம் பொறுத்துக்கோ. ஹாஸ்பிடல் போய்டலாம்” என நிகிலனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தான் ஸ்வரூப்.

அவனோ, “சா… ர்… ஷ… வி… என்… என்ன மா… றி… இ… ல்ல.” எனக் குழறலாக ஏதோ கூற, “ஸ்ட்ரெய்ன் பண்ணாத நிகிலன். ஹோல்டு பண்ணு. ப்ளீஸ்.” என்றவனுக்கு, உத்ஷவியின் தோழன் என்பதாலேயே அவனைக் காப்பாற்ற எண்ணினான்.

அவனுடன் சேர்ந்து உண்மைகளும் அல்லவா புதைந்து போகும்… ஆனால் இப்போது அனைத்தையும் விட அந்த இளைஞனின் உயிரே முக்கியமாகப் பட்டது.

அவனை விட நாலைந்து வருடம் சிறியவனாகத் தான் தெரிந்தான்.

நிகிலன் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு, “அவ… கேளுங்க. ஏன் ஜூ வனை ல்க்கு வந்தா… ன்னு… என் பிரெண்டு ஒருத்தி… எங்க கூட தான் இருந்தா… ஷ ஷவி விளக்கம் சொ… ன்னா.. கண்டு.. பிடி…” என விட்டு விட்டு ஏதேதோ பேசியவனின் வாசகங்களைக் கோர்த்து அர்த்தத்தை உணரும் முன்பே, நிகிலனின் உயிர்ப் பறவை விடுதலைப் பெற்றுச் சென்றது.

“நிகிலன்…? நிகிலன்… இங்க பாரு.” என அவனை உலுக்க, அவனிடம் அசைவே இல்லை என்றதும் ஸ்வரூப்பிறகு ஆதங்கம் பொத்துக் கொண்டு வந்தது.

வாகனங்கள் அதிகமாகவும் வேகமாகவும் வரும் சாலையாதலால், சஜித் சாலையைத் தாண்டி வந்து அவன் இறந்ததைக் கண்டு நொந்தான்.

அவர்களின் பாவனைகளை வைத்தே உத்ஷவி நடந்ததைப் புரிந்து கொள்ள, ஏனோ வற்றிப் போயிருந்த கண்களிலிருந்து கண்ணீர் உற்பத்தி ஆனது.

ஜோஷித்தும் சஜித்தின் பின்னே செல்ல எத்தனிக்க, அவனால் முடியத் தான் இல்லை. விஹானா தான் அவனது கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாளே!

நடந்த விபத்தை நேரில் கண்டு அவளுக்கு கை காலெல்லாம் உதறியது.

“நீ இரு ஜோஷ். எனக்குப் பயமா இருக்கு” என அப்பட்டமாகப் பயத்தைக் கட்டியவளைத் தனியே விட்டுச் செல்ல இயலாமல், அவள் கையை ஆதரவாகப் பற்றிக்கொண்டான்.

அக்ஷிதாவும் மிரண்டு உத்ஷவியைப் பார்க்க, அவளது கண்ணீரைக் கண்டதும், “டார்ல்ஸ்…” எனப் பக்கவாட்டில் இருந்து அணைத்துக் கொள்ள, ஆம்புலன்சும் வந்தது.

அதற்குள் நிகிலனைத் தூக்கி கொண்டு இருவரும் ஆம்புலன்சிற்கு வர, ஸ்வரூப் உத்ஷவியின் கலங்கியக் கண்களை சலனமற்றுப் பார்த்தான்.

உள்ளுக்குள் பெருஞ்சலனமே தாண்டவமாடியது. அதனை வெளிக்காட்டும் நிலையில் அவன் இல்லை.

நிரந்தரத் துயில் கொண்ட தோழனைப் பார்த்து இதழ்களைக் கடித்து கேவலை அடக்கியவள், “சாகுறதுக்காகத் தான் என்னைப் பார்க்க வந்தியாடா?” எனக் கேட்டாள் ஆயாசமாக.

கூடவே ஸ்வரூப்பின் மீதும் கடும் கோபம் வந்தது.

அவனது சட்டையைப் பிடித்தவள், “இப்ப உனக்கு நிம்மதியா? இப்படித் தான் எங்களையும் நீ சாகடிக்கப் போற. இவனை அப்பவே விட்டுருந்தா இப்ப செத்துருக்க மாட்டான்ல” என வெறிப்பிடித்தவள் போல கத்திட,

அவளை நிதானமாக ஏறிட்டவன், “விட்டுருந்தா மட்டும் உயிரோட இருந்து இருப்பானா? நம்மகிட்ட மாட்டுனது தெரிஞ்சு என் எதிரியே கொன்னுருப்பான். இப்பவும், நான் அவனை சேவ் பண்ண தான் நினைச்சேன். அவனா ஓடிப் போய் ஆக்சிடென்ட் ஆகி… ப்ச்…” எனக் கேசத்தை எரிச்சலுடன் கோதினான்.

“உனக்கு அவன்கிட்ட இருந்து உண்மை தெரியணும்ன்னு சேவ் பண்ண நினைச்சு இருப்ப. இல்லன்னா, அப்படியே அங்கேயே போட்டுட்டு வந்துருப்ப தான…” என அவள் நிதானத்தில் இல்லாமல் கத்த, அவனுக்கும் கோபம் வந்தது.

“பின்ன, இவன் என்ன எனக்கு மாமனா மச்சானா? கொலைகாரன் தான. கொலைகாரனைக் காப்பாத்தத் துடிக்க வேண்டிய அவசியம் இல்ல” என்று பல்லைக்கடித்தான்.

அவளோ சீறலுடன், “அவன் கொலை பண்ணுனதை நீ பார்த்தியா? அவன் அப்பாவை கத்தியாலக் குத்திட்டான். ஏன் தெரியுமா? அவனோட அம்மாவை அடிச்சே அந்த ஆளு கொல்லப் பார்த்துருக்கான். அவங்களைக் காப்பாத்த, அவரைத் தாக்க நினைக்கும் போது, கத்தியைக் காட்டி மிரட்டி, குத்தித் தள்ளி விட்டுருக்கான்.

அதால குத்துனா செத்துப் போவாங்கன்னு கூட தெரியாத வெறும் 9 வயசு அவனுக்கு. நடந்ததுப் புரியுறதுக்கு முன்னாடியே தண்டனை. இப்போ வரை அவன எல்லாரும் கொலைகாரனாத் தான் பார்க்குறாங்க. ஆனா என் கண்ணுக்கு அவன் கொலைகாரனாத் தெரியல. என் கண்ணுக்கு அவன் பயங்கரமானவனாத் தெரியலை. முதல் முதல்ல எல்லாத்தையும் இழந்து நான் ஜுவனைல்க்கு போகும் போது என்னை ஆர்வமாப் பார்த்து பேசுன 13 வயசு சின்னப் பையனா தான் இப்பவும் எனக்குத் தெரியுறான். அதை எல்லாம் உங்களை மாதிரி டாப் க்ளாஸ் பில்லினியர்ஸ்க்கு புரிஞ்சுக்க முடியாது. புருஞ்சுக்கவும் மாட்டீங்க.” என்று கொந்தளித்தாள்.

சினம் அளவுக்கு அதிகமாக மீறியதில், அதனை அடக்க முயன்றவளுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, மீண்டும் மயங்கிச் சரிந்து விட்டாள்.

அவளது பேச்சில் வாயடைத்துப் போன ஸ்வரூப் அவ்தேஷ், அவள் விழும் முன்னே இடையோடு அணைத்துப் பிடித்துக் கொண்டான்.

ஜோஷித் தான், “இவன் செத்துப்போவான்னு நம்ம என்ன கனவா கண்டோம்… இவள் இந்த குதி குதிக்கிறா…” எனப் பெருமூச்சு விட்டு நிகிலனைப் பார்க்க, இப்போது மற்றவர்களுக்கும் அவனைக் கொலைகாரனாகப் பார்க்க இயலவில்லை.

“எல்லாம் கை மீறி போகுது ஸ்வரா?” சஜித் குழப்ப முடிச்சுடன் கூற, ஸ்வரூப்போ தன் மீது சாய்ந்திருந்தப் பெண்ணவளின் அழுத்த முகத்திலேயே தஞ்சம் கொண்டிருந்தான்.

யார் இவள்…?
பார்க்கும் பொருட்களையெல்லாம்
பறித்துத் திருடும் சாக்கில்
பகலவனின் மனதையும் சேர்த்துத் திருடும்
பஞ்சுப்பொதி இவளோ!

அத்தியாயம் 30

சித்தூரில் அமைந்திருந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஆளுக்கொரு பெட்டில் அமர்ந்திருந்தனர்.

நிகிலனின் இறுதிச் சடங்கை அங்கேயே செய்ய வைத்திருந்தான் ஸ்வரூப் அவ்தேஷ்.

மற்றவர்களின் காயங்களுக்கும் கட்டிடப்பட்டிருக்க, உத்ஷவியின் முகம் தான் இத்தனை நாட்களில் இருந்த குறும்புத் தனத்தைத் தொலைத்திருந்தது.

“ஃபீல் பண்ணாத ஷவி…” அக்ஷிதா கட்டுப் போட்டிருந்த உள்ளங்கைக் கொண்டு அவள் தோள் மீது கை வைக்க, “நான் ஃபீல் பண்ணல…” என்றாள் தன்னை மறைத்துக் கொண்டு.

“அதான் உன் முகத்துல எழுதி ஒட்டி இருக்கே.” என்று விஹானா வருத்தத்துடன் கூற, உத்ஷவி ஒன்றும் சொல்லவில்லை. அவளது அமைதி அவர்களுக்கே புதிதாக இருக்க, ஆடவர்கள் தான் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“கேடி…. முதல்ல எல்லாரும் சாப்பிடுங்க. கடைசியா எப்போ சாப்பிட்டோம்ன்னு கூட ஞாபகம் இல்ல.” என சஜித் கூறியதும், அவள் தனது கையைப் பார்த்துக் கொண்டாள்.

பார்சலில் சப்பாத்தி மட்டும் இருக்க, “உங்க பாசத்தைக் கண்டு நான் வியக்கிறேன். ஆனா, உன் பாசமெல்லாம் செல்லாக்காசு காட்ஸில்லா. இந்த கையை வச்சு சப்பாத்தியைப் பிச்சு சாப்பிடுற அளவு எனக்குப் பொறுமை இல்ல.” என வராதக் கண்ணீரைத் துடைத்துக் கொள்ள, சஜித் இதழ் கடித்து முறுவலை அடக்கினான்.

விஹானா தான், “நான் ஊட்டி விடுறேன்டி. நீ முதல்ல சாப்பிடு.” என்று அவளுக்கு ஊட்டத் தொடங்க, ஜோஷித், “நீ அவளுக்கு ஊட்ட ஆரம்பிச்சா, இன்னைக்கு முழுக்க ஊட்டிக்கிட்டே இருக்க வேண்டியது தான்.” எனக் கிண்டல் செய்ததும், சஜித் “ஃபேக்டு” என்று அதனை ஆமோதித்தான்.

“பொறாமை புடிச்ச பாய்ஸ்டா நீங்க.” என சிணுங்கி முறைத்தாள் அக்ஷிதா.

“அவனுங்க கிடக்குறானுங்க இன்னும் நாலைஞ்சு ஆக்சிடெண்ட் பார்க்க உடம்புல தெம்பு வேணாம். நல்லா சாப்பிடு டார்ல்ஸ்” என விஹானாக் கூறியதும், அவளுக்கு சப்பாத்தித் தொண்டையில் சிக்கியது.

“அடி பாதகத்தி… ஒரு ஆக்சிடெண்ட்டுக்கே நான் உயிரோட தான் இருக்கேனா இல்ல ஆவியாகி உங்ககூட பேசிட்டு இருக்கேனான்னு இன்னும் டவுட்ல இருக்கேன். இதுல நாலஞ்சு வேறயா.” என மிரண்டவள்,

“ஷவி டார்லிங்… நம்ம எப்படியாச்சு இவனுங்ககிட்ட இருந்து ஓடிப் போய்டலாம்.” என்றாள் பாவமாக.

அவளது பேச்சு அனைவரையும் சற்று இயல்பாக்க, உத்ஷவியும் “முதல்ல அதை பண்ணலாம்” என்றதும், “பண்ணலாம் பண்ணலாம்… நீயும் சாப்பிடு” என்று விஹானா அவளுக்கும் ஊட்டி விட்டாள்.

விஹானாவை ரசனைப் பொங்க வருடிய ஜோஷித், “ஹ்ம்ம்…நமக்கும் தான் கையில அடிபட்டருக்கு. நமக்கு யாரும் ஊட்டி விட மாட்டுறாங்க” என சலித்துக்கொண்டு, பாக்கெட்டில் எதையோ தேட,

சஜித் “இதை தான தேடுற” என அவனது சிகரெட் பாக்கெட்டை எடுத்துக் காட்டினான்.

“அதை ஏண்டா எடுத்த” என அதனை வெடுக்கெனப் பிடுங்கி பற்ற வைக்க போனவனை, அத்தனை நேரமும் யோசனையில் எங்கோ வெறித்துக் கொண்டிருந்த ஸ்வரூப் அவ்தேஷ் திரும்பி முறைத்தான்.

‘இவன் வேற…’ எனப் புலம்பிக் கொண்டு “செம்ம டென்க்ஷனா இருக்குடா ப்ளீஸ்.” என்று அவசரமாக ஒன்றைப் பற்ற வைக்க விழைந்தவன், “சாப்பிடும் போது மூச்சு முட்டும் ஜோஷ்…” என்ற விஹானாவின் சிணுங்கிய குரலில் அதனைத் தூக்கி எறிந்து விட்டு, எரிச்சலுடன் முணுமுணுத்தான்.

ஸ்வரூப் அவனருகில் வந்து, சப்பாத்தியைப் பிய்த்து ஊட்டி விட, “நீ இனிமே என்கிட்ட பேசுவேன்னு சொல்லு. அப்ப தான் நான் சாப்பிடுவேன்” என்று முரண்டு பிடித்தான் ஜோஷித் அவ்தேஷ்.

“ஐயைய… இவனுங்க இம்சை தாங்க முடியல. அதான், அப்பப்ப நீங்களே பேசிக்கிறீங்களே. அப்பறம் ஏன்டா என்னமோ பல வருசமா பேசாம இருந்த மாதிரி பில்டப் தர்றீங்க.” என்று விஹானா சலித்துக் கொள்ள, அக்ஷிதா வாயில் வைத்த சப்பாத்தியுடன் “இதை தான் நானும் சொல்ல வந்தேன்” என்று குழறலுடன் கூறினாள்.

“நீ ஒன்னும் சொல்ல வேணாம் கேடி. மூடிக்கிட்டு முழுங்கு.” என்று அக்ஷிதாவை அடக்கிய சஜித், “பட் எனக்கு இந்த டீலிங் எல்லாம் இல்ல. செம்ம பசிடா. குடு” என வாயைத் திறக்க, ஸ்வரூப் இறுக்கம் மறைந்து மென் முறுவலுடன் அவனுக்கு ஊட்டினான்.

ஜோஷித்திற்குக் காதில் இருந்து புகை மட்டுமே வரவில்லை. புசுபுசுவென கோபம் வர, கடுப்பாக அமர்ந்திருந்தான்.

“கடுப்பாகுதா கடுப்பாகுதா… இப்படி தான் நீ தினமும் ஒரு போட்டோ உடைக்கும் போது எனக்கு இருக்கும்.” என்று ஸ்வரூப் வாரினான்.

“இருக்குற கோபத்துல உன் மண்டையை உடைக்காம இருந்தேன்னு சந்தோசப்படு” என ஜோஷித் முறுக்கிக் கொள்ள,

“ஆஹான் உடைச்சுத் தான் பாரேன்.” என்று செல்லமாக அவன் தலையில் தட்டியவன் கனிந்து, ஜோஷித்தின் முன் சாப்பாடை நீட்டி, “வாயைத் திற” என்றான் அதிகாரமாக.

அதில் அவசரமாக அதனை வாங்கிக் கொண்டவன், கலங்கியக் கண்களை சட்டையில் துடைத்துக் கொள்ள, சஜித்திற்கும் சந்தோஷத்தில் முகம் மலர்ந்தது. வெகு மாதங்கள் கழித்து மூவரும் ஒன்றாக உணவருந்தியதில், மனதிலும் சிறு நெகிழ்வு.

இனி, இப்படி ஒரு பிரிவினைத் தங்களுக்குள் உருவாக்கிக் கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்ட ஜோஷித், அதனைக் கடைபிடிக்க வெகுவாய் சஞ்சலப்படப் போவதை உணராமல் விட்டு விட்டான்.

உணவு உண்டு முடிக்கும் வரையிலும் உத்ஷவி யாரையும் நிமிர்ந்து பார்க்கவும் இல்லை. பேசவும் இல்லை.

சில நிமிடங்கள் கழித்து, ஜோஷித் தான் ஆரம்பித்தான்.

“நிகிலன் ஒரு பொண்ணோட பேர் சொன்னானே. அவள் யாருன்னு தெரியுமா உனக்கு?” என உத்ஷவியிடம் விசாரிக்க, அவனை நிமிர்ந்து முறைத்தவள்,

“இப்ப உங்களுக்கு என்கிட்ட இருந்து டீடெய்ல்ஸ் வேணும் அதான… அதுக்கு தான் இப்படி பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வந்து, சாப்பாடு வாங்கி குடுத்து கேர் பண்ணிக்கிற மாதிரி நடிக்கிறீங்க.” என்று பொங்கினாள்.

‘பைத்தியமா இவ…’ என்பது போல ஜோஷித் அவளைப் பார்த்து வைக்க, சஜித்தோ “ஆமா ஆமா நாங்க டிராமா ஆர்ட்டிஸ்ட் பாரு.” எனக் கடிந்தான்.

அங்கிருந்த சோஃபா ஒன்றில் கால் மேல் கால் போட்டு, இரு விரல்களை சோஃபா திண்டில் தட்டியபடி அவளையே ஊடுருவிக் கொண்டிருந்த ஸ்வரூப், அந்நிலையை மாற்றாமல் “நடிக்கிறோம்ன்னே வச்சுக்கோ விஷா. கடைசியா நிகிலன் சாகும் போது, உன்னை விசாரிச்சா உண்மை தெரியும்ன்ற மாதிரி சொன்னான். நீ ஒத்துழைச்சா, இந்தப் பிரச்னையை சீக்கிரம் முடிச்சுட்டு, உங்களையும் அனுப்பி விட்டுட்டு நாங்க நிம்மதியா எங்கக் கல்யாண வேலையைப் பார்ப்போம்.” என்று அழுத்திக் கூறினான்.

‘கல்யாணமா?’ என என்னும் போதே ஜோஷித்திற்கு கசந்தது. சஜித்தும் ஒரு நொடி ஆடிப்போன மனதை வெளிக்காட்டாமல் இயல்பாக இருக்க முற்பட, பெண்களிடம் எந்த சலனமும் இல்லை.

அக்ஷிதாவோ வெகு தீவிரமாக, “நீங்க எல்லாரும் ஆந்திரா சைட் இருக்கீங்களே… கல்யாணத்தை தமிழ் முறைப்படி வைப்பீங்களா இல்ல தெலுங்கு முறைப்படி வைப்பீங்களா” என சந்தேகம் கேட்க, ஸ்வரூப் அவளை முறைக்க முயன்று முடியாமல் மெல்லப் புன்னகைத்து விட்டான்.

“உங்களை கூட்டிட்டு சுத்துறதுக்கு எங்க வீட்ல செருப்படி வாங்காம வச்சாலே போதும்.” என்று ஸ்வரூப் கேலி செய்ததில் அவள் அசடு வழிந்தாள்.

விஹானா தான், “ஆந்திரா சைடா இருந்தாலும் இங்க எல்லாரும் நல்லா தமிழ் தானடி பேசுறாங்க. அப்போ தமிழ் முறைப்படி தான் வைப்பாங்களா இருக்கும்” என்று அக்ஷிதாவுடன் விவாதம் புரிய ஜோஷித்திற்கோ கோபம் அளவுக்கு மீறி வந்தது.

“எதுவா இருந்த என்னங்கடி. ரொம்ப முக்கியம் இது.” என அதட்டிட, ‘இப்போ ஏன் இவன் வெறிநாய் கடிச்ச மாதிரி கத்துறான்’ என விஹானா முணுமுணுத்துக் கொண்டாள்.

மீண்டும் உத்ஷவியின் மீது பார்வையைப் படர வைத்த ஸ்வரூப் அவ்தேஷ், அவளது சிவந்த வதனத்தைக் கண்டு கடுமையைக் குறைத்தான்.

“யூ நோ வாட்? என் சித்தப்பா ரெண்டு பேரும் சுயநினைவே இல்லாம இருக்காங்க. என் அப்பா உயிர் பிழைப்பாரா மாட்டாரான்னு கூட தெரியல…” என இறுக்கத்துடன் கூற வந்தவனுக்கு குரல் கம்மியது.

“அட்டாக் ஆனதுல இருந்து, என் அம்மாவுக்கோ, சித்திங்களுக்கோ ஆறுதல் சொல்லக் கூட நாங்கப் பக்கத்துல இல்லை. நீ சொன்ன டாப் க்ளாஸ் பில்லினியர் தான். ஆனால் எங்களுக்கும் எல்லா உணர்வும் வலியும் இருக்கு தான. 

எல்லாத்தையும் விட்டுட்டு, தொலைஞ்சுப் போன பசங்களைத் தேடி, எங்க மக்களுக்கு என்ன ஆபத்து நடக்குமோன்ற பதட்டத்தோட ஒவ்வொரு நிமிஷத்தையும் கடத்திட்டு இருக்கோம். கிடைக்குற க்ளூ கூட, டெட் எண்டா தான் இருக்கு.

இதுவே தொடர்ந்தா, சித்தூர் மொத்தமும் சுடுகாடா மாறிடும். என் குடும்பத்தை மட்டும் காப்பாத்திட்டு என்னால இந்த ஊரை விட்டுப் போய் இதே ராஜவாழ்க்கையை என்னால வாழ முடியும். ஆனா, இது என்னோட மண்ணு. என் முன்னோர்கள் வாழ்ந்தத் தெய்வீக இடமா தான் சித்தூரையும், அதை சுத்தி இருக்குற எங்க கிராமங்களையும் நான் பாக்குறேன். கிட்டதட்ட முன்னூறு வருஷமா பல தலைமுறைகளா இந்த அவ்தேஷ சாம்ராஜ்யம் அவங்களை நம்பி வர்ற மக்களுக்கு நல்லது மட்டுமே செஞ்சுருக்கு. இந்த சாம்ராஜ்யம் அழிஞ்சா கூட அதோட கடைசி செயல் மக்களுக்கு செஞ்ச நல்லதாத் தான் இருக்கணும்.” உணர்ச்சி பொங்க கண்கள் சிவக்க அவன் உறுமினான்.

அவனை உணர்வற்றுப் பார்த்த உத்ஷவி, நக்கல் நகையுடன், “உன் முன்னோர்கள் எல்லாருமே நல்லது மட்டும் தான் செஞ்சாங்கன்னு உனக்கு எப்படித் தெரியும் ஸ்வரூப்? பணம் இருக்குறவங்க நல்லது மட்டுமே செய்ய மாட்டாங்க. நீங்க மூணு பேரும் வேணும்ன்னா அதுல எக்செப்ஷன்னு வச்சுக்கலாம். அதுக்காக…” என யோசிக்கும் பாவனைக் கொடுத்தவள், “ம்ம்ஹும்… உங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்ன்னு நினைச்சதுக்கே ஒருத்தன் செத்துட்டான். இவளுங்களையும் பலி குடுக்க எனக்கு விருப்பம் இல்ல.” என்று தோழிகளை அழுத்தமாகப் பார்த்தாள்.

அவனோ அதே திமிர்ப் புன்னகையை இதழ்களில் தவழ விட்டு, “பலி குடுக்கக் கூடாதுன்னு ஒதுங்கிக் போக நினைக்கிறியா? நீங்க மூணு பேரும் எங்க நிழலைத் தாண்டி போனாலே, ப்ரீத்தன் உங்களை கொன்னுடுவான்.” என்றான் அசட்டையுடன்.

விஹானா தான், “ச்ச்சே இந்த நேரம் பார்த்து, ராகேஷ் வேற போய் சேர்ந்துட்டான்” எனக் கவலை கொள்ள, ஜோஷித் கண்ணைச் சுருக்கி “அவன் இருந்தா மட்டும் என்னை புடுங்கிடுவான்” என்று பல்லைக்கடித்தான்.

அதில் உதட்டைக் குவித்தவள், “என் அப்பா மேல இருக்குற மதிப்புக்காகவாவது ஏதாச்சு பண்ணிருப்பான்ல.” என்றதும்,

“ஆமா பண்ணிருப்பான். உன் தம்பிக்கு பண்ணுன மாதிரி…” என இழிவாய் கூறியவன், “ஸ்வரா அவ தம்பிக்கு வீடியோ கால் பண்ணு” என அமர்த்தலாகக் கூறிட, அவள் திகைத்தாள்.

ஸ்வரூப்பும் விஹானாவின் தம்பியான விமலிற்கு போன் செய்து அவளிடம் நீட்ட, அதனை வாங்கும் போதே அவளது கண்களில் வெள்ள அபாயம் அடித்தது.

“அக்கா” என விமல் ஆசையுடன் அழைக்க, “விமல் நீ இப்ப எங்க இருக்க?” எனக் கேட்டாள் அவசரமாக. அவனது பின் புறத்தில் மருத்துவமனை போல இல்லையே.

“நான் இங்க பத்திரமா இருக்கேன்க்கா. இங்க எனக்கு புது ப்ரெண்ட்ஸ் எல்லாம் கிடைச்சு இருக்காங்க.” எனக் கூறிய அந்த 17 வயது பாலகனின் முகத்தில் என்றுமில்லாதவொரு பரவசமும் அமைதியும் குடிகொண்டது.

விஹானாவிற்கு ஒன்றும் புரியவில்லை. ஜோஷித் போனை வாங்கி அணைத்து விட, “ஏண்டா போனை வாங்குன… என் தம்பிக்கு ப்ளட் கான்சர். ட்ரீட்மெண்ட்ல இருக்கணும். இப்ப அவன் எங்க இருக்கான்? என்னடா செஞ்சீங்க?” எனப் பயத்துடன் கேட்டாலும், தம்பியின் முகத்தில் ஏற்பட்ட பொலிவின் காரணம் புரியவில்லை.

“ஓங்கி விட்டேன்னா தெரியும்…” என அவளை நோக்கி கை ஓங்கிய ஜோஷித், அவளது முகத்தில் ஏற்பட்ட சுணக்கம் கண்டு தன்னை அடக்கிக்கொண்டு, “அவனுக்கு கான்சரே கிடையாதுடி மக்கு. ராகேஷ் மாதிரி ஆளுங்க எல்லாம், தனக்கு கீழ இருக்குற வேலையாட்களை மட்டுமில்ல அவங்களோட குடும்பத்தையே தன்னோட அடிமையா தான் வச்சு இருப்பாங்க.

அதே மாதிரி தான் உன்னையும் உன் தம்பியையும் வச்சிருக்கான். நீ படிச்சதுனால, அவனை மீறி போய்ட கூடாதுன்னு, தம்பி சென்டிமெண்ட்ல உன்னை அடக்கி வச்சிருக்கான். அது கூடப் புரியாம, அவன் கூட அஞ்சு வருசமா வேலை பார்த்திருக்க.” என்று அதட்டினான்.
விஹானாவிற்கோ அதிர்வில் தலையே சுற்றியது.

முதலும் முடிவும் நீ
மேகா

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
72
+1
3
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    5 Comments

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.