594 views

முதல் நாள் வேலை புதுவித அனுபவத்தை கொடுத்தது பரமேஸ்வரிக்கு. இத்தனை வருடங்களாக அவருக்குள் மறைந்து போன அடையாளம் தலைக்கு மேல் அமர்ந்ததை போல் உணர்ந்தவர் மகனை நினைத்து உள்ளம் மகிழ்ந்தார். யாருக்கு அவன் எப்படியோ தாய்க்கு சிறந்த மகன்.

பேரன் பேத்தி எடுக்கும் வயதில் அரக்க பறக்க ஓடி வந்தார் வீட்டிற்கு பிள்ளைகளை நினைத்து. வந்தவரை குளிர்விக்க மருமகள் அழகாக அனைத்தையும் முடித்திருக்க, “என்னை வெளிய அனுப்பிட்டு நீ வீட்டுக்குள்ள இருக்க என்ன கணக்கு இது.” என்றார் அக்கறையாக.

இருவருக்கும் நடுவில் வந்து நின்ற அக்னி, “அது ஒன்னும் இல்லம்மா நாங்க ஆறு குழந்தைங்க பெத்துக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம். அவங்க பிறந்து வளர்ந்ததுக்கு அப்புறம் தான் அன்பு வேலைக்கு போவா.” என்று அவளைப் பார்த்து குறும்பாக வெட்கப்பட, அன்பினின் முகம் வாந்தி எடுக்காத குறையாக இருந்தது.

“உங்களை மாதிரி குடும்பத்துக்காக வீட்டுலயே இருந்திட மாட்டேன் அத்தை. இப்பதான கல்யாணம் ஆகி இருக்கு கொஞ்ச நாள் இப்படி இருந்துட்டு நானும் என் ப்ரொபஷனல பார்க்க போயிடுவேன்.” என்றவள் அவருக்கு தேநீர் கொடுத்தாள்.

விக்ரமோடு பொழுதை கழித்த திவ்யா அண்ணனை நினைத்து சங்கடத்தோடு வர, “குண்டம்மா பீஸ் கட்டிட்டியா.” வந்ததும் வராததுமாக அவளை விசாரித்தான்.

அன்பினி இரவு சமைப்பதற்காக கிச்சன் சென்று விட, “கட்டிடேன் அண்ணா.” என்றாள் தயக்கமாக.

அவள் பேச்சு அக்னிக்கு சந்தேகத்தை கொடுக்க, விசாரித்தான். அவளோ பயத்தில் ஒப்பித்து விட,  “அவன் யாரு உனக்கு பீஸ் கட்ட. எவ்ளோ தைரியம் இருந்தா அவன் கூட நீ போய் இருப்ப.” எகிறி  குதித்தான்.

பரமேஸ்வரி நானே அழைத்துச் செல்ல சொன்னதாக கூறி சமாதானப்படுத்த, அடங்கவில்லை அவன்.

திவ்யாவை கடுமையாக சாடினான். உள்ளே இருந்த அன்பினி எதையும் கண்டுகொள்ளாமல் அமைதியாக தன் வேலைகளை கவனிக்க,
“இப்பவே அவனை இங்க வர சொல்லு காசை மூஞ்சில தூக்கி வீசுறேன்.” என்ற சத்தத்தை கேட்டுக்கொண்டு தான் மணிவண்ணன் இல்லம் புகுந்தார்.

அவரும் மகனை சமாதானப்படுத்த, “திவ்யா இப்ப அவன் இங்க வரல இனி ஜென்மத்துக்கும் நான் உன் கூட பேச மாட்டேன்.” என்று விட்டான் கராராக.

பயத்தில் கை கால்கள் நடுங்க விக்ரமை அழைத்து, வர சொன்னாள். அவன் வர அரை மணி நேரங்கள் ஆனது. அதுவரை வீட்டை கலவரம் ஆக்கி விட்டான் அக்னி. ஆளாளுக்கு அவனை சமாதானப்படுத்த அன்பினி மட்டும் தான் கண்டுகொள்ளாமல் வேலைகளை கவனித்தாள்.

மருமகளை கவனித்த பரமேஸ்வரி அவன் அறியா வண்ணம் உள்ளே வந்து, “மருமகளே! உன் புருஷனை கொஞ்சம் அடக்க கூடாதா.” என்றார்.

“டைம் இல்ல அத்தை இன்னும் ஒன் ஹவர்ல பசிக்குதுன்னு வந்துடுவான். ” என்றவள் கண்ணும் கருத்துமாக சமையலை கவனித்தாள்.

உள்ளே வந்த விக்ரம், “என்ன திவி அவசரமா வர சொல்லி இருந்த.” என்றான் எதுவும் தெரியாதது போல்.

“அவளை என்னடா கேக்குற என்னை கேளு.” அக்னி துள்ளிக் கொண்டு அவனிடம் செல்ல,

“சரி நீயே சொல்லு” என்றான் கூலாக.

” யாரை கேட்டு என் தங்கச்சிக்கு பீஸ் கட்டுன.” என அவன் சட்டையை பிடிக்க,

“யாரைக் கேட்டு நான் கட்டணும்.” என்றான்.

“என்ன கேட்கணும். அவளோட அண்ணன் நான் இருக்கும் போது நீ எப்படி கட்டுவ. அவ என்ன அனாதையா? ஒழுங்கு மரியாதையா நான் கொடுக்குற காசை வாங்கிட்டு பேசாம போயிடு. இன்னொரு தடவை என் தங்கச்சிய எங்கயாது கூட்டிட்டு போறதை பார்த்தேன் மனுசனா இருக்க மாட்டேன்.” என்று விக்ரமின் சட்டையை விட்டான்.

கசங்கி இருந்த சட்டையை சரி செய்தவன்,  “நான் அவளுக்கு தாய் மாமன் செலவு பண்ண எல்லா உரிமையும் இருக்கு. அதை தடுக்குற உரிமை உனக்கு இல்ல.” என்றான். விக்ரம் பதிலை கேட்டு  அடித்து விட்டான் அக்னி.

அடித்த ரோஷத்தில்  அவன் சட்டையை பிடிக்க, “விக்ரம் கைய எடு” என்றாள் அன்பினி.

அனைவரும் திரும்பி அவளை பார்க்க, யாரையும் கவனிக்காமல் தன் வேலைகளை செய்து கொண்டிருந்தாள். அன்னபூரணி ‘பேத்தி களம் இறங்கிட்டா.’ என்று ஆரவாரம் செய்ய,

‘மருமக சமாளிப்பா.’ என்ற நம்பிக்கையில் ஒரு சேர பார்த்துக் கொண்டார்கள் பரமேஸ்வரி, மணிவண்ணன் தம்பதிகள்.

திவ்யாவிற்கு நினைக்க கூட நிதானம் இல்லை. நடப்பதை பார்த்து முழுவதும் பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்க, விக்ரம் சட்டையில் இருந்து கை எடுத்தான்.

‘ஆத்தி இவள மறந்து இவ அண்ணனை அடிச்சிட்டோமே! இன்னைக்கு அவ போவாளா இல்ல திரும்பவும் என்னை அனுப்புவாளா  தெரியலையே.’ அண்ணனாக யோசித்தவன் இப்போது  கணவனாக யோசித்தான்.

இவர்கள் எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட அன்பினிசித்திரை யாரையும் திரும்பி பார்க்காமல் தோசை சுட்டுக் கொண்டிருந்தாள். விக்ரம் அக்னி இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் அவளை பார்த்துக் கொண்டிருக்க,

“எல்லாரும் சாப்பிட வாங்க” என்று அழைத்தாள்.

முதல் ஆளாக மணிவண்ணன் அமர்ந்தார் உணவு மேஜையில். கணவனின் செய்கைகளை கண்ட பரமேஸ்வரி சிரிப்போடு அமர்ந்தார். நடப்புக்கு வந்து விக்ரம்,

“என் தங்கச்சிக்காக உன்ன சும்மா விடுறேன் இன்னொரு தடவை என் மேல கைய வெச்ச கை இருக்காது.” என்றான்.

உடனே அவன் சட்டையில் கை வைத்து, “வச்சுட்டேன் என்னடா பண்ணுவ.”திமிராக கேட்டான் அக்னி.

இருவரும் தோரணையாக நிற்க மாமனாருக்கு தோசை வைக்க வெளியில் வந்தாள் அன்பினி. அவளைப் பார்த்ததும் மச்சான் சட்டையிலிருந்து கையெடுத்த அக்னி,
“என் பொண்டாட்டிக்காக உன்ன சும்மா விடுறேன்.”என்றான் பெருந்தன்மையோடு.

அக்னியை கண்டுகொள்ளாத அன்பினி தோசையை மணிவண்ணன் தட்டில் வைத்து விட்டு மறைய, “நீ கொடுத்த காசு உன்ன தேடி வரும் வாங்கிட்டு ஓடிரு.” என்று மீண்டும் சட்டையை பிடித்தான்.

விக்ரம் மூக்கு புடைத்தது கோபத்தில். கோபத்தோடு அக்னியின் சட்டையில் கை வைத்து, “காலேஜ் பீஸ் மட்டும் இல்ல இனி திவ்யாக்கு என்ன தேவைப்பட்டாலும் அதை நான் தான் செய்வேன் உன்னால முடிஞ்சத பண்ணிக்க போடா.” என்று முழுதாக முடிப்பதற்குள் அன்பினி மீண்டும் பரமேஸ்வரிக்கு தோசை எடுத்துக் கொண்டு வர,

“என் தங்கச்சி புருஷன் வார்த்தைய மீற எனக்கு மனசு வரல. இனிமே உன் தங்கச்சிக்கு இந்த செலவும் பண்ண மாட்டேன். இப்ப பண்ணதுக்காக மன்னிச்சிடுங்க தங்கச்சி புருஷன்.” என்றான்.

அவனையும் கண்டுகொள்ளாத அன்பினி உள்ளே சென்று தோசை ஊற்றிக் கொண்டிருக்க, ” என் பொண்டாட்டி முன்னாடி நல்ல பேரு வாங்க பார்க்கிறியா. இனிமே என் தங்கச்சிக்கு ஏதாச்சும் செலவு பண்ண உயிரோடு இருக்க மாட்ட. ஒழுங்கு மரியாதையா இந்த வீட்டை விட்டு வெளிய போயிடு.” என்றவன் வார்த்தை மாறியது…

“அண்ணன் நீயே விட்டுக் கொடுத்துப் போகும் போது புருஷன் நான் விட்டுக்கொடுத்து போக மாட்டேனா. இந்த தடவை உன் காசுலயே என் தங்கச்சி படிக்கட்டும்.. “அன்பின் வெளியில் வந்ததாள்.

அவள் தலை மறையும் வரை பொறுமை காத்த விக்ரம், “உன் கண்ணு முன்னாடியே உன் தங்கச்சிக்கு எல்லாத்தையும் பண்ணுவேன் பார்த்து உன்னை நீயே கொன்னுக்கடா.” என்றவன் அலறி நின்றான்….

“விக்ரம் சாப்பிட வா” என்ற அன்பினி அழைப்பில்.

பதட்டமாக, “இது மட்டும் இல்ல என் தங்கச்சி புருஷனுக்காக இனி என்ன வேணாலும் செய்ய நான் தயார்.” என்று விட்டு,

“வரேன் அன்பினி.” என்றவாறு நகர பார்த்தான்.

செல்ல விடாமல் தடுத்த அக்னி சட்டையை பிடித்து, “அதையும் பார்க்கலாம்டா. நான் நினைச்சா உனக்கு செலவு பண்ணவே காசு இல்லாம நடுத்தெருவுக்கு கொண்டு வந்துடுவேன். “என்றவன் அன்பினி வருவதை அறிந்து,

“என் பொண்டாட்டி சாப்பிட கூப்பிட்டு அரை மணி நேரம் ஆச்சு இன்னும் இங்க என்ன பண்ணிட்டு இருக்க மச்சான்.” என வேண்டுமென்றே கத்தினான் அவள் கேட்க.

“இதோ போறேன் மச்சான்.”  என்று அக்னியை பார்த்து குழைவாக சிரித்தவன் தங்கை மறைந்த பின்,

“எங்க அப்பா மாதிரி நான் ஏமாளி இல்லடா. எங்கிட்ட மோதி உன்னை நீயே அசிங்கப்படுத்திக்காத.” என்றிட,
திமிரோடு ஏறிட்டன அக்னியின் கண்கள்.

அதை பார்த்த விக்ரம், “என்னடா” என்றான்.

“உன் அப்பனை விட நீ தான்டா பெரிய ஏமாளி. அதனால தான் கூட இருக்க தங்கச்சி கல்யாணம் பண்ண போறது கூட உனக்கு தெரியல.” என்று உசுப்பி விட,

“என்னை விட நீ தான்டா பெரிய ஏமாளி உன் தங்கச்சி என்னை காதலிக்கிறது கூட தெரியாம அவளுக்கு செலவு பண்ணதை பெரிய விஷயமா பேசிட்டு இருக்க.”என்று அவன் காதலை போட்டு உடைக்க கொதித்து விட்டான் அக்னி.

இருவரும் மல்லுக்கட்டும் தோரணையோடு ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்துக் கொண்டு நின்றார்கள். சத்தம் வராமல் அன்பினிக்கு பயந்து இருவரும் மாற்றி மாற்றி ரகசியமாக வார்த்தைகளை வெடிக்க செய்திருக்க , “ரெண்டு பேரும் சாப்பிட வாங்க” என்ற அன்பினியின் குரலில் கைகளை விடுவித்துக் கொண்டு,

“சாப்பிட வாங்க மச்சான்” என்று‌ விக்ரமும்,

“நீங்க போங்க மச்சான் நான் குளிச்சிட்டு வந்துடுறேன்.” என்று அக்னியும்
தனித்தனியாக நின்றார்கள்.

இளம் ரத்தத்தின்  கலவரங்களை கவனித்துக் கொண்டிருந்த அனைவருக்கும் சிரிப்பு வந்தாலும் அன்பினிக்காக அடக்கிக் கொண்டிருந்தார்கள். திவ்யா இன்னும் தெளியாத மனநிலையில்  நின்றிருந்தாள். அவளை கவனித்த அன்பினி நடப்பை உணர வைத்து சாப்பிட அழைத்தாள்.

தங்கை மீது கடும் கோபம் அக்னிக்கு. இருந்தும் அதை வெளிக்காட்டாமல்  அன்பினிக்காக இறங்கி செல்ல, “சாப்பிட வா அக்னி” என்றழைத்தார் பரமேஸ்வரி.

“நீங்க சாப்பிடுங்க ம்மா நான் அன்பு கூட சாப்பிடுறேன்.” என்றவனை எதிர்த்துப் பேச வந்த அன்பினியை கையெடுத்து கும்பிட்டவன்,

“நீ என்ன சொல்ல வரேன்னு தெரியும் அன்பு. நான் அவங்க குடும்பத்துல இருந்து பிரிஞ்சி நம்ம குடும்பத்துல சேர்ந்து மூனு மாசம் ஆகப்போகுது.” என்றவாறு நடையை கட்டினான்.

அக்னியின் பதிலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த விக்ரம் சிரித்து விட, அவனை முறைத்து அடக்கினாள் அன்பினி. அக்னி ஒருவன் மட்டும் அங்கு இல்லாமல் இருக்க மற்ற அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

திவ்யாவிற்கு பணம் செலுத்திய காரணத்தை விக்ரம் கூற வர, “இதுல என்னப்பா இருக்கு விடு.” என்றார் மணிவண்ணன்.

அவர் பதிலை சிரித்து ஏற்றுக் கொண்டவன் தங்கையிடம்,”உன் புருஷன் என்னை அவ்ளோ கேள்வி கேட்கிறான் நீ  அவனுக்கு சப்போர்ட் பண்ணற. அண்ணன் பக்கம் ஒரு வார்த்தை பேசணும்னு தோணலல.” என்றான் ஆதங்கமாக.

அவன் தட்டில் சாம்பாரை ஊற்றியவள், “எதுக்காக பேசணும் விக்ரம். உனக்கு எல்லா உரிமையும் இருக்கு அதை யாரும் மறுக்கல. அதுக்காக அவ அண்ணனை கேட்காம செய்வியா. தலையெடுத்து குடும்பத்தை பார்த்துக்க ஆரம்பிச்சதுல இருந்து அக்னி தான எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்கான். அவனை இது அவமானப் படுத்துற மாதிரி இல்லையா. அவன் கிட்ட இல்லனாலும் அத்த மாமா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு செஞ்சிருக்கலாம்.” என்றவள் திவ்யாவை பார்த்து,

“விக்ரம் உனக்கு எந்த உரிமையில காசு கொடுத்தான்னு தெரிஞ்சிக்கலாமா.” என்றதும்  புரையேறியது  அவளுக்கு.

திருத்திருவென முழிக்கும் திவ்யாவை பார்த்து பெற்றோர்கள் சந்தேகிக்க, அன்னபூரணி பேரனை மெச்சிக்கொண்டார்.

அன்பினி எண்ணங்கள் உறுதியாகி விட, “என்னை மாதிரி முட்டாள் தனமா இருக்காத இப்பவே இவன திருத்த பாரு. அன்னைக்கு எனக்கு சப்போர்ட் பண்றன்னு உனக்கு சாபம் விட்டான். நாளைக்கு எனக்கும் அக்னிக்கும் நடக்கிற பிரச்சனையில உன்னை கஷ்டப்படுத்த மாட்டான்னு என்ன நிச்சயம். “என்று நீரோடையாக இருந்த திவ்யாவின் மனதில் கல் எறிந்தாள்.

அவள் யோசனைக்கு ஆளாக, மாட்டிக்கொண்ட பயத்தில் அத்தை மாமாவை பார்த்தான் விக்ரம். அவர்கள் இவ்விஷயத்தை எப்படி கையாள்வது என்று தெரியாமல் சங்கடப்பட்டுக் கொண்டிருக்க,

“சாரி அத்தை எனக்கு திவ்யாவை பிடிச்சிருந்துச்சு. அவளுக்கும் என்னை பிடிக்கும்னு தெரிஞ்சுகிட்டேன். அவளை என்னைக்கும் கஷ்டப்படுத்தாம பார்த்துப்பேன். உங்களுக்கு நம்பிக்கை இருந்தா கல்யாணம் பண்ணி கொடுங்க.” என்றவன் பதிலுக்காக அவர்களைப் பார்த்தான்.

“இதுல அவங்க சம்மதத்தை விட அக்னி சம்மதம் ரொம்ப முக்கியம் விக்ரம். அப்பா அத்தை கூட அமைதியா ஒதுங்கி நின்னுட்டாங்க.  நீங்க ரெண்டு பேரும் தான் முட்டிக்கிட்டு நிக்கிறீங்க. உங்களால திரும்ப இந்த குடும்பமும், கூட வாழ போற நாங்களும் கஷ்டப்பட்டுட கூடாது.” என்று அவர்களின் மனதையும் கலைத்து விட்டாள்.

“என்னம்மா நீ  அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணாம பேசுற.” என்ற பாட்டியை பார்த்தவள்,

“எனக்கு ஒரு பிரச்சனைன்னா விக்ரம் வந்து நிக்கிற மாதிரி நாளைக்கு திவ்யாக்கு ஒரு பிரச்சனைன்னா அக்னி வந்து நிற்பான். அப்ப இருக்கிற பிரச்சனை இன்னும் பெருசாகிட கூடாதுல பாட்டி.”என்றாள் நிதானமாக.

“நாங்க ஒன்னும் அவன மாதிரி நடந்துக்க மாட்டோம்.” ரோஷமாக விக்ரம் வார்த்தையை விட,

“இவன் பேச்சை நம்பாத திவ்யா. உனக்கு நாளைக்கு ஏதாச்சும் அந்த வீட்டுல பிரச்சனை வந்தா முதல் ஆளா அக்னி தான் நிப்பான். அதனால அக்னி சம்மதம் கண்டிப்பா வேணும். அதுமட்டுமில்ல எங்க அப்பாவ சமாளிக்க கூடிய ஒரே ஆள் அவன் தான்.” என்று அப்பாவி குழந்தை மனதில் கலவரம் செய்தாள்.

தங்கையை பற்கள் கடிக்க முறைத்தவன், “போதும் அண்ணனுக்கு நீ செஞ்ச நல்லது இதுவே போதும். தயவு செஞ்சு உன் புருஷனை பார்க்க போறியா.” என்றதும் அங்கிருந்த பெரியவர்கள் சிரித்தார்கள்.

அவர்களுக்கும் விக்ரம் மருமகனாய் வருவதில் விருப்பம் தான். இரண்டு காரணங்கள் தான் சங்கடப்படுத்தியது. ஒன்று தன் மகன் மற்றொன்று செல்வகுமார். திவ்யா வாழப்போகும் வீட்டில் அவர் இருக்கப் போவதால் வந்த பயம் இது. அந்த யோசனையோடு சாப்பிட்டு முடித்தவர்கள் விக்ரமை தவிர்த்து அறைக்கு சென்று விட, அன்னபூரணி இதில் தலையிட விரும்பாமல் சென்று விட்டார்.

இவையெல்லாம் மாடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த அக்னி பெருமைப்பட்டுக் கொண்டான் தன்னைத்தானே நினைத்து. எதுவும் கேட்காதது போல் கீழ் இறங்கியவனிடம், “இதான் உனக்கு கடைசி அக்னி இனி ஒரு தடவை என் அண்ணன் மேல கை வைக்க கூடாது.” என்று அவனின் செயலையும் எச்சரித்தாள்.

பெரிதாக அலட்டிக் கொள்ளாமல்
கிண்ணத்தில் நான்கு தோசைகளை திணித்தான். அவன் நடவடிக்கைகளை கவனித்த அன்பினி நைசாக நகர பார்க்க, “எங்க ஓடுற வா” என்று தூக்கிக்கொண்டு நடந்தான் நிலாச்சோறு சாப்பிட.

 

இருவர் மட்டுமே தனித்து உணவு மேஜையில் அமர்ந்திருக்க அண்ணியின் வார்த்தைகளைக் கேட்டவள், “நம்ம கல்யாணம் நடக்கணும்னா என் அண்ணன் சம்மதம் முக்கியம்.” என்று நகர்ந்து விட்டாள்.

யாரும் இல்லாமல் தனித்துவிடப்பட்ட விக்ரம்  மாபெரும் உலக சாதனை நிகழ்த்த தயாரானான்.

***

அன்பினி அறையை சுத்தம் செய்து கொண்டிருக்க, அவள் பின்னே சுற்றிக் கொண்டிருந்தான் அக்னி. கண்டுகொள்ளாமல் தன் வேலைகளை கவனித்தவள் தலையணை எடுத்துக்கொண்டு நகர,

“அன்பு இன்னைக்காது உள்ள படு ப்ளீஸ்” என்றவனை முறைத்தவள் அமைதியாக பால்கனிக்கு சென்றாள்.

பால்கனி ஸ்கிரீனை விலக்கியவள்  திரும்பி அவனை  கடுமையாக முறைக்க, காலரை தூக்கி விட்டான். பால்கனியில் மெத்தை அமைத்து திரைசீலை திரையிட்டு அழகாக வடிவமைத்து இருந்தான்.

மௌனத்தை கடைப்பிடித்தவள் அமைதியாக அங்கு படுத்துக்கொண்டு கதவை சாற்றி விட, பெருமூச்சு விட்ட அக்னி வழக்கம் போல் அவளைப் பார்த்தவாறு கதவிற்கு உட்புறம் படுத்துக்கொண்டான்.

தூக்கம் வராமல் அவன் நினைவில் அன்பினி சுழன்று கொண்டிருக்க கதவை இருமுறை தட்டினான். திரும்பிப் படித்து ‘என்னவென்று’ புருவத்தை உயர்த்தினாள்.

சிகப்பு கலர் மார்க்கர் பேனாவை எடுத்தவன் கண்ணாடியில், ‘ஐ லவ் யூ அன்பு.’ என எழுதி அதில் உதடு குவித்து ஒட்டி எடுத்தான்.

அவன் கிறுக்கலில் காதல் ஓவியம்  மின்னிக் கொண்டிருக்க… பக்கத்தில் இருந்த உதடு அச்சு கிரீடமாய் அழகு சேர்த்தது. தொட்டு ரசித்தவள்,

‘லவ் யூ அக்னி’ என்றாள் உதடுகளை அசைத்து.

கண்கள் வானவில் போல் விரிந்து ஜொலித்தது அக்னிக்கு. தலைக்கால் புரியாமல் கதவை திறந்தவன், “அன்புபூபூ” என சேர்த்தணைக்க செல்ல வேகமாக சாத்தினாள் கண்ணாடி கதவை.

லேசாக சிக்கிய மூக்கை நன்கு துடைத்தவன், ‘சைக்கோ பொண்டாட்டி.’ என்றான்.

ஐந்து நிமிடங்கள் அமைதியில் கழிய எழுதியதை துடைத்து, ‘அன்பு உன் கோபம் போக எவ்ளோ நாள் ஆகும் ‘ என எழுதி முடிக்க,

‘மார்க்கர் கொடு’ சைகை செய்தாள்.

அறிவாளி போல் கர்வமாக சிரித்தவன் இன்னொரு மார்கரை கதவை திறந்து கொடுக்க, “இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.” என்று அவன் கர்வத்தை அடக்கினாள் அன்பினி.

‘நீ பண்ண வேலைக்கு என்னைக்கும் போகாது.’ என எழுதியவள் பக்கத்தில் கோபம் தெறிக்கும் பொம்மையை வரைய,

‘அப்படி என்னடி பண்ணேன்.’ சோகமான பொம்மையை வரைந்தான்.

‘என்னடா பண்ணல.’ என்று எழுதியவள் கதவைத் திறந்து அவன் தலையில் கொட்டி விட்டு மீண்டும் சாத்திக் கொண்டாள்.

‘இனிமே யாரு முன்னாடியும் உன்னை அசிங்கப்படுத்த மாட்டேன் அன்பு சத்தியமா. ‘ என்றவனுக்கு பதில் சொன்னாள்,

‘சரி அந்த விஷயத்துல உன்னை மன்னிச்சிட்டேன்.’ என்று.

மீண்டும் ஆர்வம் பொங்கி கதவை திறக்க, முறைத்து அதை நிறுத்தினாள் அன்பினி. ‘ஏண்டி இப்படி பண்ற மன்னிச்சிட்டேன்னு சொன்னதுக்கு அப்புறமும் பனிஷ்மென்ட் தரியே. காரணமாது சொல்லுடி. ‘ கதவில் தலை சாய்த்துக் கொண்டு பாவமாக பார்த்தான்.

‘அந்த நிஷா கூட சேர்ந்து கூத்தடிச்சியே அதுக்கு யாரு பனிஷ்மென்ட் வாங்குவா.’என்றதும் அரக்கப்பறக்க எழுந்து அமர்ந்தவன் கதவை திறந்து,

“அடிப்பாவி பொண்டாட்டி அவ கூட சேர்ந்து நான் என்ன கூத்தடிச்சேன். அன்னைக்கு நல்லவ மாதிரி பேசிட்டு இன்னைக்கு என்னை குறை சொல்ற. அப்போ அதெல்லாம் பொய்யா பொண்டாட்டி.” என்று வாதம் செய்தான்.

அவனுக்கு தோதாக எழுந்து அமர்ந்தவள்  சட்டையைப் பிடித்து, “நான் உன் கிட்ட வந்தா மட்டும்  கேவலமா பேசுவ கண்டமேனிக்கு தள்ளி விடுவ. ஆனா அவ உன் இடுப்ப புடிச்சுட்டு கத்திக்கிட்டு இருக்கா நீ பேசாம நின்னுட்டு இருக்க. எவ்ளோ தைரியம் இருக்கும். நான் மட்டும் சரியான நேரத்துக்கு வராம இருந்திருந்தா வேற என்னெல்லாம் அவ பண்ணி இருப்பாளோ நீ வாங்கி இருப்பியோ. ” என்று அவன் கன்னத்தில் வலிக்காதவாறு தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்க,

“அடியே! அவ பண்ணதை பார்த்து நான் சாக்குல சிலையாகிட்டேன்.” என்றான் சுடச்சுட.

“ஆவடா ஆவ. என்னை பார்த்தா உனக்கு கேன கிறுக்கி மாதிரி இருக்கா. இவ்ளோ பிரச்சனைக்கு நடுவுலயும் நீ கோவிச்சுக்கிட்டு போனேன்னு சமாதானப்படுத்த வந்தா என் கண்ணு முன்னாடி ஒருத்தி உன்னை உரசிக்கிட்டு நிக்கிறா கைய கால ஒடச்சி ஓரமா உட்கார வைக்காம சிலையாகிட்டேன்னு சாதாரணமா சொல்ற. நாளைக்கு வேற எவளாவது வருவா அப்பவும் சிலையாவ அப்படித்தான.” என அடித்து துடைத்தவள் மூச்சு வாங்க படித்தாள்.

வாங்கிய அடியை  தூசி தட்டி அக்னி, ‘அதான் அடிச்சிட்டியே அன்பு பனிஷ்மென்ட் ஓவர் உள்ள வா டி’ என எழுத,

‘யாரு சொன்னா பனிஷ்மென்ட் முடிஞ்சதுன்னு.’

‘அப்போ முடியலையா’ என்று சோக பொம்மையை வரைந்து வைத்தவன்,

‘அன்பு முடியல டி. நீ பேச வேணாம் கிட்ட கூட வர வேணாம் உள்ள மட்டும் வா. ரெண்டு பேருக்கும் நடுவுல இந்த கதவு எதுக்கு டி கோபமா வருது.’ என எழுதி முடித்தவன் கோபத்தை கண்ணாடியில் காட்டினான் அடித்து.

‘பேசாம தூங்கு அக்னி.’

‘சரி டி ஒரு கிஸ் மட்டும் கொடு தூங்குற.’

அவனை முறைத்தவள் வேகமாக எழுதினாள், ‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கிட்ட கூட வர வேணான்னு  ரொம்ப யோக்கியன் மாதிரி பேசுன இப்ப கிஸ் கேக்குற. நேரத்துக்கு ஏத்த மாதிரி குட்டி கரணம் அடிக்கிறதுல நீ கெட்டிக்காரன். ‘ என்றவள் திரும்பி படுத்தாள்.

கதவைத் திறந்தவன் திரும்பியவளை தன் முகம் பார்க்க வைத்து, “ஏற்கனவே சொல்லிட்டேன் அன்பு இந்த மாதிரி பேசாதன்னு. அதையே பேசிட்டு இருக்க நான் என்ன பொம்பளை பொறுக்கியா. என் பொண்டாட்டி கிட்ட கேக்காம அடுத்தவன் பொண்டாட்டி கிட்டயா கேக்க முடியும். தப்பு பண்ணிட்டேன்னு அமைதியா போனா அதையே உன் அட்வான்டேஜா எடுத்துக்காத. ”  சீறினான்.

“அடுத்தவன் பொண்டாட்டி கிட்ட கேட்ட வேண்டிய அவசியம் உனக்கு இல்லை அக்னி. அதான் தானாவே வந்து கொடுக்குறாங்களே. சிலையா நின்னு என்ஜாய் பண்ணு.” என்ற மனைவியின் கழுத்தை பிடித்து  வளைத்தவன்,

“கொன்றுவேன் டி உன்ன இன்னொரு தடவை இப்படி பேசுனா. அக்னி அன்பினிக்கு சொந்தமாகி முழுசா மூனு மாசம் ஆகுது. இனி எத்தனை வருஷம் ஆனாலும் உனக்கு மட்டும் தான் இருக்கும்.” வேகமாக அவளை தள்ளி விட்டவன் சாந்தம் ஆவதற்குள்…

“நான் மட்டும் கல்யாணத்தை நிறுத்தலைன்னா இந்நேரம் வேற ஒருத்திக்கு சொந்தமாகி மூனு மாசம் ஆகி இருக்கும். என் கூட மாதிரி கெஞ்சிட்டு இல்லாம அவ கூட சேர்ந்து நல்லா சிலையாகி இருப்ப. நடுவுல நான் வந்து உன் சந்தோஷத்தை கெடுத்துட்டேன். ” என்ற அன்பினி கண்கள் கலங்கி விட்டது அக்னி அடித்ததில்.

இமை சிமிட்டாமல் அவனைப் பார்க்க, “இனி உன் பக்கம் வந்தா செருப்பால அடி அன்பு ” என சொல்ல வந்தவன் அவள் பெயரை சொல்லாமல் …

“அன்பினி” என்றுவிட்டு வேகமாக சென்று மெத்தையில் படுத்துக் கொண்டான்.

***

நேரம் என்னவென்று தெரியாமல் தூக்கம் கலைந்தது அக்னிக்கு. எழுந்தவன் நினைவில் அவனவள் வர விரைந்தான் பால்கனிக்கு. அதன் பக்கம் செல்லும் போது உணர்ந்தவன் அவசரமாக கதவை திறந்து,

“அன்பு மழை வருது என்ன  பண்ற”  என பதறி அவளைப் பார்த்தான்.

வெளியில் அவன் போட்ட  திரைச்சீலை ஓரளவிற்கு மழையை கட்டுப்படுத்த, லேசான சாரல் அவளை நனைத்தது.  அன்பினியை பார்த்து கோபம் கொண்டவன்,

“என்னடி இது பைத்தியக்காரத்தனம் மழை வருதுன்னு தெரியுதுல உள்ள வந்து படுக்க வேண்டியது தான.” என்று கத்த, எந்த பதிலும் சொல்லவில்லை அன்பினி சித்திரை.

சிறு நுனி அளவுக்கு கூட அவள் செய்யும் செயலை ஏற்றுக் கொள்ள முடியாமல் கோபம் மழையை தாண்டியும் நெருப்பு மூட்ட, “எதுக்குலாம் பிடிவாதம் பிடிக்கணும் இல்லையா உனக்கு  எழுந்திடு டி” என அவளை உள் இழுத்தான்.

எதுவும் பேசாமல் கைகளை உதறிக் கொண்டவள் அவனை பார்க்காமல் திரும்பி படுத்துக் கொள்ள, கோபம் முழுவதையும் அங்கிருந்து திரைசீலையில் காட்டினான். அக்னி இழுத்த வேகத்தில் அனைத்தும் அறுந்து அன்பினி மீதே விழ, “ஒழுங்கா எந்திரிச்சு உள்ள போயிடு இல்ல மனுஷனா இருக்க மாட்டேன்.” என்று மிரட்டிய பின்பும் அவளிடம் மாற்றமில்லை.

திரைசீலை தடை தகர்த்தெறியப்பட்டு இருக்க மழைநீர் வேகமாக அவளை சூழ ஆரம்பித்தது.
அந்த கோபத்திலும் அதை பார்த்த அக்னி உள்ளே இழுக்க முயற்சிக்க, விட்டுக் கொடுக்காமல் மழையில் நனைந்தாள். தன்னால் முடிந்த வரை சத்தமாக கத்தியவன் கோபம் முழுவதையும் கண்ணாடி கதவில் காட்ட அதுவோ நொறுங்கி விழுந்தது.

எதையும் கண்டுகொள்ளாமல் அவள் திரும்பிப் படுத்திருக்க, அவள் மீது படுத்து மழை நீர் மனைவியை தொடாமல் தடுத்தான்.

“எழுந்திடு அக்னி”என்றதும் தான் தாமதம் வேகமாக அவள் கைகளை தட்டி விட்டவன் அன்பினியை உசராமல் கை ஊன்றி படுத்திருந்தான்.

இருவரும் பிடிவாதமாக இருக்க மழை அதைவிட பிடிவாதமாக பேய் ஆட்டம் போட்டது. அக்னியின் முதுகு புறம் முழுவதும் நனைந்து நீர் கொட்ட ஆரம்பித்தது அன்பினி மேல். அவன் முகத்தை துடைக்க அன்பினி முயல, முறைத்த முறைப்பில் கையை மடக்கி கொண்டாள்.

“அக்னி மழை ரொம்ப வருது எந்திரிடா” மெதுவாக அவள் கூற, இந்த முறை பதில் சொல்லாமல் சோதிப்பது அக்னியின் முறை.

வெகு நேரமாக தன் மேல் சாயாமல் கைகளை ஊன்றி மழையில் நனைந்து கொண்டிருப்பவனை பார்க்க சங்கடமானது அவனின் அன்புக்கு.

“அக்னி” என்றவள் தொட,

“தொட்டா இங்க இருந்து குதிச்சு செத்துருவேன்.” என்றான் நடுங்கிய குரலில்.

“தொடல உள்ள போ”

“நீ சொல்றத கேட்கணும்னு எந்த அவசியமும் எனக்கு இல்லை. உன் வேலைய பாரு.” என்றவன் முழுவதுமாக நனைந்து அன்பினியையும் நனைய ஆரம்பித்தான்.

அதற்கு மேல் விட்டால் நாளை எழ முடியாது என்று உணர்ந்து, “அக்னி நீ உள்ள போனா நானும் போவேன்.” என்றாள் அன்பினி.

நடுங்கிய உடலோடு அக்னி பிடிவாதம்  பிடிக்க, அவனை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றாள். தலை துவட்ட துண்டை கொடுத்து விட்டு உடை மாற்ற குளியலறை சென்றாள். அவள் வந்த பின் அக்னி உடைமாற்ற உள்ளே சென்று வர, அன்பினி படுக்க தரையில் போர்வை விரித்தாள்.
நடுங்கிய உடல் உருக்கி எடுக்கும் அணு உலை போல தூக்கி போட, போர்வையை தூரம் எறிந்தான் கோபத்தை வெளிப்படுத்தி.

“என்னடி உன் பிரச்சனை மேல படுத்தா உன்னை தொட்டுடுவேன் அதான. சத்தியமா இனி வாழ்க்கை முழுக்க உன் பக்கம்  வரமாட்டேன். நானும் பார்த்துட்டே இருக்கேன் எல்லை மீறி பண்ணிக்கிட்டு இருக்க. மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்ற உன்ன லவ் பண்றன்னு. உண்மையா காதல் இருக்க மனசு இவ்ளோ வெறுப்பை கொட்டுமா என்ன. அன்னைக்கு அப்புறம் பேசிக்கலாம் அன்புன்னு எத்தனை தடவை சொன்ன கேட்டியா நீ. என் முகத்தை பார்த்து எப்படி இருக்கன்னு புரிஞ்சிக்க முடியாது நீ எல்லாம் என்னடி பொண்டாட்டி.

என்ன கோபத்தை காட்டினாலும் அடுத்த நிமிஷம் அன்புன்னு உன் காலடியில  நிக்கிறேன். நீ அடிக்கறதை வாங்கிக்கிறேன். உன்ன கஷ்டப்படுத்திட்டன்னு தான்டி தினமும் வாசல்ல உட்கார்ந்து சாப்பிடுகிறேன் ரோட்ல  தூங்குறேன். உன்ன மாதிரி எல்லாத்தையும் மனசுல வச்சுக்கிட்டு மொத்தமா பழி வாங்கல.” என்றவன் பேச்சை நிறுத்திவிட்டு தன்னை கட்டுப்படுத்தினான்.

அது முடியாமல் போக, “சொல்றேன் கேட்டுக்கோ என்னால உன்னை திட்டாம இருக்க முடியாது. சாவோட விளிம்புல இருந்த எனக்கு உங்க அப்பன் பண்ணதை தாங்கிக்க முடியல. என்னையும் மீறி உன்கிட்ட அது வெளிப்படுது என்ன பண்ண சொல்ற. அதெல்லாம் சேர்ந்து தான் அக்னி. இவன் வேணாம்னா நீயே கொன்னுடு . அணு அணுவா நீ கொடுக்குற தண்டனைய ஏத்துக்க முடியாம துடிக்கிறதுக்கு  அது எவ்வளவோ மேல்.” என்றவன் வெளியில் சென்று விட்டான்.

அவள் திரும்பி கதவை பார்ப்பதற்குள் உள்ளே வந்தவன், “நான் திரும்பி வரும்போது நீ பெட்ல படுத்து இருக்கணும் இல்லன்னா அவ்ளோ தான்.” என்று  வெளியில் சென்று விட்டான்.

மௌனமாக அழுதாள் அன்பினி. அவன் சென்ற  வெகு நேரம் ஆகி இருக்க கால்கள் பால்கனியில் நின்றது. கார் வெளியில் நிற்பதை உணர்ந்து அவனை தேடினாள். அவன் இல்லாமல் போக கைபேசி எடுத்து தூது விட்டாள். காரினுள் அமர்ந்திருந்தவன் முதலில் அதை கட் செய்து இரண்டாம் முறை எடுத்து காதுக்கு கொடுத்தான்.

“உன்னை வெளிய அனுப்பிட்டு நான் மட்டும் சந்தோஷமா இருந்தனா அக்னி. வீட்டுக்குள்ள வந்ததும் என் கிட்ட பேசுவன்னு  பார்த்தா ரெண்டு நாள்ல திரும்ப போயிடுவேன் அட்ஜஸ்ட் பண்ணிக்கோன்னு சொல்ற. அதான் பேசாம பால்கனியில படுத்தேன்.” என்றவள் வார்த்தையில் காரில் இருந்து இறங்கியவன் அவளை பார்க்க,

“அவ்ளோ சாதாரணமா சொல்ற நீயே கொன்னுடுன்னு முடிஞ்சா பண்ண மாட்டனா. நீ எனக்கு சொந்தமானவன் அக்னி. உன்ன இன்னொருத்தியோட ஒரு பேச்சுக்கு கூட என்னால வைக்க முடியாது. நேர்ல பார்த்த கோபம் உன் கிட்ட காட்டிட்டேன். உன்ன கஷ்டப்படுத்துனதுக்காக  தான் மழையில நனைஞ்சி எனக்கு நானே பனிஷ்மென்ட் கொடுத்துக்கிட்டேன். முன்னாடி அடிச்ச மாதிரி ரெண்டு அடி கொடுத்து உள்ள கூட்டிட்டு போறத விட்டுட்டு இனி வாழ்க்கை முழுக்க கிட்ட வர மாட்டேன்னு சொல்ற. அவ்ளோ திமிராடா உனக்கு. இருந்துடுவியாடா நீ உன்னை இருக்க விட்ருவேனா நானு. இனி அன்புன்னு கிட்ட வா இருக்கு உனக்கு.” என்றவள் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

வேகமாக தன் அறைக்கு ஓடி வந்தான் அக்னி. அன்பினி விடாமல் அழுது கொண்டிருக்க, “அன்பு” என்றழைத்து அவளிடம் நன்றாக வாங்கிக் கொண்டான்.

கோபம் எல்லாம் கரைந்து வழக்கமான கணவனாக அவன் கெஞ்சிக் கொண்டிருக்க, கண்டுகொள்ளாமல் மெத்தையில் படுத்துக்கொண்டாள் அன்பினிசித்திரை. அவன்  நெருங்கினால் அடி வெளுக்க தொடங்கினாள். பொறுத்துப் பார்த்தவன் முடியாமல் போக வீண்போடு அவள் விரித்த போர்வையில் படுத்துக்கொண்டான்.

அழுது ஓய்ந்தவள் ஓரக்கண்ணால் பார்க்க, கண் மூடி அவள் இருந்த பக்கம் படுத்திருந்தான் அக்னிசந்திரன். முகமெல்லாம் சுருங்கி விட்டது அவன் சமாதானப்படுத்தாமல் தூங்குவதை பார்த்து. கண்டு கொள்ளாமல் படுத்திருக்கும் கணவன் மீது பொறாமை தீ  பற்ற ஆரம்பித்தது.

அவனைப் பார்க்காமல் தலையை வேறு புறம் திருப்பியவள் கைகளை நீட்டி சீண்டினாள். அக்னி கண்டுகொள்ளாமல் தூங்குவது போல் நடிக்க, திரும்பிப் பார்த்தவள் மெத்தையின் விளிம்பில் படுத்துக்கொண்டு அவன் சட்டையை பிடித்து இழுத்து தொந்தரவு செய்தாள். லேசாக அசைந்தவன் அவளை விட்டு தள்ளி படுக்க, முகம் கருகிய பிளாஸ்டிக் கவர் போல் மாறிவிட்டது விட்டது அன்பினிக்கு.

கை நீட்டும் தூரத்தில் அவன் இருக்க சீண்டும் வேலையை சரியாக செய்தாள். தலைகாணியை தூக்கி அடிக்க, அதை மீண்டும் தூக்கி அவள் மீதே எறிந்தான் அக்னி. கோபத்தில் மூச்சை வேகமாக இழுத்து விட்டவள் திரும்பி படுக்க வேகமாக இழுத்தான் தன் புறம்.

அக்னி சற்று தூரத்தில் படுத்திருந்ததால் கீழே விழுந்து விடுவோம் என்ற பயத்தில் அவள் கத்த, தன் மேல் விழ வைத்து பயத்தை போக்கினான். அவள் முறைத்துக் கொண்டிருக்க, “என்னை திட்டுனா நான் தான் பனிஷ்மென்ட் தரணும்.” என்று அவள் உதட்டை கடித்து இழுத்து முதல் தண்டனை கொடுத்தவன் அதை விடாமல் தன் இதழுக்குள் நுழைத்துக் கொண்டு அடுத்தடுத்த தண்டனைகளை பிறப்பித்தான்.

அன்பினி அடித்துக் கொண்டிருக்க, “இதுக்கும் சேர்த்து பனிஷ்மென்ட் கொடுத்திட வேண்டியது தான்.” என்றவன் அவளை கீழே தள்ளினான். போர்வை விலகி அவள் தரையில் இருக்க, “சில்லுனு இருக்கு” என்று குளிரை தாங்கிக் கொள்ள முடியாமல் துடித்தாள்.

அவள் துடிப்பதை பார்த்து தண்டனையை அதிகப்படுத்த நினைத்தவன் உதடும், கைகளும் ஆடையை கடன் வாங்க ஆரம்பித்தது. தர மறுத்து அவள் ஆர்ப்பாட்டம் செய்ய தண்டனை வன்மையாக மாறியது உடலை வருடி. அக்னியை உடையாக மாற்றிக் கொண்டவள் தண்டனையை ஏற்காமல் கொடுக்க ஆரம்பித்தாள் முத்தத்தால். இருவரின் கைகளும் மாறி கொண்டிருக்க, உதடுகள் பிரியாமல் ஒற்றுமையை காட்டியது.

“அக்னி” என்றழைக்கும் அவள் மோகம் பிடித்து போக, அதைக் கேட்கவே இன்னும் அவளுக்குள் புதைய ஆரம்பித்தான். ரோஷம், பிடிவாதம், சண்டை, வாக்குவாதம் எல்லாம் அவர்கள் சேட்டைகளை பார்க்க முடியாமல் தெறித்து ஓடிவிட, மெத்தை பாவமாக பார்த்தது எதற்காக தான் இருக்கிறோம் என்று.

இதற்குத்தான் இன்று பதில் அளித்தான்  அவனை ஆளும் எஜமானியை படுக்க வைத்து.  அவன் சொன்ன வார்த்தைக்கு ஏற்றார் போல் அவள் அவனை ஆள துவங்க, “லவ் யூ அன்பு.” என்ற பின் பேச்சுக்களுக்கு வார்த்தை இன்றி மெத்தை கதறிக் கொண்டிருந்தது.

அம்மு இளையாள்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
7
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *