Loading

 

 

 

இறைவ சேவை செய்பவன் மகான்!

மனித சேவை செய்பவன் தலைவன்!

மன சேவை புரிபவன் மனிதன்!

 

மனிதன் தலைவனாக உயரலாம். தலைவன் மகானாக உயரலாம். அதற்கு முதலில் மனச்சேவை புரிய வேண்டும். 

 

மைத்ரேயனின் அந்த வினா நேத்ரனை உலுக்கியது. தன்னிடம் சிக்கிய பின்னும் இவன் இவ்வளவு தைரியமாக இருக்க என்ன காரணம். உண்மையில் என்னதான் செய்தான் நற்பவியை. அதை இவனால் மட்டும்தான் சரி செய்திட முடியுமோ. அப்படியன்றால் என்ன செய்வது என்று தீவிர சிந்தனையில் இருந்தான் நேத்ரன்.

 

“என்ன நேத்ரன்.. ரொம்ப யோசிக்கிறீங்க. இப்போ புரியிதா என் தைரியத்தின் அளவு என்னனு?” என்றவனை முறைத்தான் நேத்ரன்.

 

“இன்னொரு விஷயமும் சொல்றேன் கேளு.. இந்த நொடி, நான் உன் முன்னாடி இருக்கேன்னா அதுக்குக் காரணம் நீ இல்லை. நான்” என்று கூறி, அதிர வைத்தான் நேத்ரனை.

 

“என்ன அதிர்ச்சியா இருக்கா.. என்னைப் பத்தி முழுசா தெரிஞ்சா இன்னும் அதிர்ச்சியா இருக்கும்.”

 

“என்ன பெருசா தெரியணும். நீயும் என்னை மாதிரி ஒரு மனிஷன். ரத்தமும் சதையும் உள்ள மனிஷன். ஒன்றரை கிலோ மூளை உள்ள மனிஷன். அவ்ளோதானே..” என்றான் அலட்சியத்துடன்.

 

இதைக் கேட்ட மைத்ரேயன் உதடுகள் ஏளனமாய் விரிந்தது.

 

“சாரி மிஸ்டர் நேத்ரன். நீங்க நினைக்கிற மாதிரி நான் இல்லை. ஒரு காலத்தில் இருந்தேன். ஆனா இப்போ என் நினைவுகளை வேட்டையாடி வாழ்ந்திட்டு இருக்கேன்” என்று அவனைப் பார்க்க, மைத்ரேயன் முகத்தில் ஏளனம் வழிந்து கொண்டிருந்தது.

 

“ஒரு க்ளூ தரேன். முடிஞ்சா கண்டுபிடிங்க. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அரசு நான் செத்துட்டதா குடுத்த இறப்புச் சான்றிதழ் உண்மை”  என்று மைத்ரேயன் கூற, நேத்ரன் வியப்பின் விளிம்பில் இருந்தான். இது என்ன இலங்கையை எரித்த அனுமானின் வால் போல் வழக்கு நீண்டு கொண்டே செல்கிறது. ஆச்சர்யங்களும் அதிர்ச்சிகளும் மட்டுமே மிச்சம். அடுத்த அடி எடுத்து வைக்கவே நேத்ரனுக்கு பயமாக இருந்தது. 

 

“உங்கிட்டேருந்து எப்படி உண்மையை வாங்குறதுன்னு எனக்குத் தெரியும்.”

 

“என்ன தேவாவ கைது செஞ்சாச்சா? இதை நான் எதிர்பார்த்தேன்னு சொன்னா நீ அதிர்ச்சியாவியா?” என்று இடைவெளி விட்டவன், “அப்படின்னா அதிர்ச்சியாகிக்கோ” என்று மீண்டும் அதிர வைத்தான் அவனை.

 

‘என்ன இவன் அதை எதிர்பார்த்தானா’ என்று குழம்பியவன், அவனை அடித்துவிட்டான் நேத்ரன். அடி வாங்கிய பின்னும் நகைத்தான் மைத்ரேயன்.

 

“நீ கொன்னாலும் எனக்கு சாவு கிடையாது. முடிஞ்சா நீ தப்பிச்சுக்கோ. இது உனக்கு எச்சரிக்கை. “

 

“என்னை அடிக்க ஆள் செட் பண்ணிருக்கியா?”

 

“ஆமா… ஆனா காசு கொடுத்து இல்லை. என்னோட விசுவாசி உன்னை கொலை செய்யவும் வாய்ப்பு இருக்கு. இப்பவும் உனக்கு நான் உதவிதான் செய்யணும்னு நினைக்கறேன். என் மனசு நினைக்கிறதை செய்யும்” என்று அவன் கூற, அவனை அடித்துத் துவைத்துவிட்டு சென்றான் நேத்ரன்.

 

அடி வாங்கியது என்னவோ மைத்ரேயன். ஆனால் வலித்தது நேத்ரனுக்கு. அவன் மேல் மண்ணெண்ணெய் ஊற்றி கொல்லிக்கட்டையால் நெருப்பு வைத்தது போல் எரிந்தது உடலெங்கும். 

 

இவ்வளவு அடித்தும் அவன் அசராமல் இருக்கக் காரணம் என்ன. தன்னைக் கொல்ல யார் இருக்கிறார்கள். தேவாவும் அவர்களின் வளையத்திற்குள் வந்தாயிற்று. வேறு யாரின் உதவி இவனுக்கு இருக்கிறது என்று இவ்வாறு துள்ளுகிறான் என்று மண்டையை அலசி ஆராய்ந்துவிட்டான். அவனுடைய அலைபேசியில் ஏதோ தகவல் வந்ததற்கான ஒலி வந்து அடங்கியது. சத்தம் கேட்டு அதை எடுத்துப் பார்த்தான்.

 

அலைபேசியின் முகப்புப் படத்தில் நற்பவி சிரித்துக் கொண்டிருந்தாள். சட்டென்று நற்பவியின் நினைவு வந்தது அவனுக்கு. அத்துடன் நற்பவி அடிக்கடி கூறும் வாக்கியமும். “என்னைவிட்டு விலகியிரு. இல்லையென்றால் அதற்கான விலை உன் உயிராக இருக்கும்” என்று அடிக்கடி கூறுவாளே. அசந்தர்ப்பவதமாக மைத்ரேயன் கூறியது இதனுடன் பொறுந்திப் போக, அவன் நேத்திரங்கள் அர்த்தத்துடன் சுருங்கியது.

 

வேகமாக வீட்டிற்கு கிளம்பினான். அவனுக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. அதை உண்மையா என்று ஆராயவே நற்பவியைக் காண சென்றது. நிரண்யா மொழியை தாங்கியிருக்கிறாள். மைத்ரேயன் கூறுவது மெய்யென்றால் நற்பவி மைத்ரேயனின் உணர்வுகளைத் தாங்கியிருக்க வேண்டும். அதன் வெளிபாடே அவனின் மேல் வெறுப்பாய் மாறியிருக்க வேண்டும். இன்று அவளிடம் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று முடிவுகட்டிவிட்டான். கீதனையும் அழைத்திருந்தான். நிரண்யாவிடம் பேசி சமாளிக்கும் அனுபவம் அவனுக்கு இருக்கிறதே. 

 

விஷயம் கேள்விப்பட்ட கீதன் அதிர்ந்துவிட்டான்.

 

“என்ன சார் சொல்றீங்க. எனக்கு ஒண்ணும் புரியலை.”

 

“எனக்கும் ஒண்ணும் புரியலை. இதை எப்படி செஞ்சாங்க. ஏன் செஞ்சாங்கன்னு எனக்கு தெரியலை. ஆனா இதுதான் நடந்திருக்கு.”

 

வீட்டுக்குள் சென்றதும் நற்பவியிடம் இருவரும் உரையாட, அவள் ஒருநிலையில் இல்லை.

 

அங்கிருந்த பொருளையெல்லாம் உடைக்க ஆரம்பித்தாள். நேத்ரனின் சட்டையைப் பிடித்து அவனையும் அடித்தாள். 

 

“போடா.. இங்கேருந்து போ. ஒரு நிமிஷம் கூட நிக்காத. கொன்னுடுவேன்” என்று வெறி வந்து கத்தினாள். அவர்கள் இருவராலும் அவளை சமாளிக்க முடியவில்லை. அப்படி ஒரு வெறி. நிரண்யாவை சமாளித்த கீதனுக்கே நற்பவி பெரும் சவாலாய் மாறிப் போனாள். அவர்களைத் தாக்கியதில் அவளின் கைகளில் அடிபட்டு உதிரம் வடிந்து கொண்டிருந்தது. ஆனாலும் அதில் சிறு முக சுனக்கம் இல்லை அவளிடம். நேத்ரனை அடித்துக் கொள்வதிலே குறியாய் இருந்தாள். அவளின் துப்பாக்கி அவளிடம் இல்லை. அவள் மனம் சரியில்லை என்று நேத்ரன் உணர்ந்த உடனே அதை அவளிடம் இருந்து விலக்கி வைத்தான் அவன். இறுதியில் நேத்ரனின் கழுத்தைப் பிடித்து நெறிக்க, அவன் திணறிப் போனான்.

 

கீதன் எப்படியோ போராடி நேத்ரனை விடுவித்தான். பின் கயிறு எடுத்து வந்து, அவளின் இரு கைகளையும் கட்டினான்.

 

கீதன் அவளுக்கு மாத்திரைகளை எடுத்து வந்து கொடுக்க, அதை அவளுக்குப் புகட்டினர். அதை அவள் உட்கொள்வதற்குள் இவர்கள் இருவரும் படாத பாடு பட்டுவிட்டனர். கைகளைக் கடித்து வைத்துவிட்டாள் அவள். மாத்திரையை உட்கொண்ட சற்று நேரத்தில் அவள் கண்கள் சொறுக ஆரம்பித்தது.

 

கீதனும் நேத்ரனும் மூச்சு வாங்க தரையில் அமர்ந்திருந்தனர். அவர்கள் உடலெங்கும் காயம். இருவருமே அமைதியைக் கலைக்க விரும்பவில்லை‌. 

 

“கீதன்‌‌.. என்ன இது. நிரண்யா இப்படித்தான் இருப்பாளா.. ஒவ்வொரு முறையும் அவளை இப்படித்தான் சமாளிக்கிறியா?”

 

“இல்லை சார்.. இப்போலாம் அவ ஓகேதான். அவ என்னை நம்புறா. அதனால் நான் என்ன சொன்னாலும் கேப்பா.”

 

“அப்போ நற்பவி நம்மை நம்பலை. அதுதான் பிரச்சனை. சரியா..”

 

“ஆமா.. அப்படித்தான் இருக்கணும்.”

 

தலை வலித்தது நேத்ரனுக்கு. 

 

“உண்மைதான். அவ என்னை நம்பலை. என்னைக் கொலை செஞ்சிருவேன்னு சொன்னா. அவனும் அதைத்தான் சொல்றான்.”

 

“யாரு சார்..”

 

“மைத்ரேயன்..”

 

“அவன் யாரு சார்..”

 

“அவன்தான் இந்த தப்புக்கெல்லாம் காரணம். நிரண்யா இப்படி இருக்கதுக்கு. நற்பவி இப்படி இருக்கதுக்கு. எல்லாத்துக்கும் அவன்தான் காரணம். அடுத்து என்ன செய்றதுன்னு தெரியலை” என்று எழுந்தவன் நற்பவியின் அருகில் சென்றான். அவளின் தலை கோதினான். அவளின் அருகில் ஒரு நாட்குறிப்பு இருந்தது. 

 

அதை எடுத்தவன் பிரித்துப் பார்த்தான். அவளுக்கு நாட்குறிப்பு எழுதும் வழமையெல்லாம் இல்லை. அதில் உள்ள பக்கங்களைப் பிரிக்க, அவன் புருவங்கள் சுருங்கியது. மூடிப் பட்ட கதவின் பின்னால் நிகழும் நிகழ்வுகளை உரிக்கச் சொல்லியது. கீதனும் அவன் அருகில் சென்று அதில் இருந்ததை வாசித்தான்.

 

அதில் எழுதியிருந்ததைப் படிக்க படிக்க பிரமிப்பாக இருந்தது. இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்ன?

 

ஆனால் நிகழ்ந்திருக்கிறதே. அவள் மனதின்  பிரதியாய் அந்த நாட்குறிப்பு இருந்தது. அதில் எழுதப்பட்டிருந்த தகவல்களிலும் ஒரு கோர்வை இல்லை. அதைப் படிக்கும்போது நன்றாக விளங்கியது அவள் இருந்த நிலை. நிரண்யா சொல்ல முடியாமல் தவித்த நிலை. நற்பவியும் வெளியே சொல்ல முடியாது தவித்த நிலை. 

 

முயன்று அனைத்தையும் எழுதியிருந்தாள். தேவா, மைத்ரேயன் பற்றி அனைத்தும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. தன் எதிரிகளைக் கொல்ல வேண்டும் என்ற ஒரு வாசகம். இந்த உலகில் யாரும் சாதிக்காத ஒன்றை சாதித்து விட்ட பெருமை வேறு. திடீரென நற்பவியின் மனக்குவியல்கள். அவளின் கனவுகள். நேத்ரனின் மேல் அவள் வைத்திருக்கும் நேசம் என்று அனைத்தையும் எழுதி வைத்திருந்தாள்.

 

அதைப் படித்தவர்களுக்கே பித்துப் பிடிப்பதுபோல் இருந்தது. நற்பவியை நேத்ரன் பெருமையுடன் பார்த்தான். இப்பொழுது அவளின் சண்டைக்கான காரணங்கள் நன்றாகவே விளங்கியது நேத்ரனுக்கு. அவள் மனதின் திடம் இந்த காரியத்தில் விளங்குகிறதே. அவள் இந்த வேலையை எவ்வளவு விரும்புகிறாள் என்றும் விளங்கியது.

 

“சார்.. இதெல்லாம் உண்மையா? என்னால் நம்பவே முடியலை.”

 

“என்னாலயும்தான்… ஆனா உண்மையா இருக்க வாய்ப்பு இருக்கே. அதுக்கு ஆதாரமா நம்மகிட்ட உயிரோட ரெண்டு பேர் இருக்காங்களே.”

 

“நற்பவி மேம் கிரேட் சார்.. அவுங்க இந்த விஷயத்தை செய்யலேனா இதை நாம கண்டே பிடிச்சிருக்க முடியாது” என்று சிலாகித்தான் கீதன்.

 

திகையாதே மனமே!

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்