3,375 views

28.11.22 அழகிய ரகுவரனே…! கதை வரும் உறவுகளே. ரகுவரன் கதைக்கு பிறகு தான் பலபேருக்கு தெரியவே செஞ்சேன் 😍. இப்பவும் வாசகர்கள் கேக்குறது ரகுவரனை தான். வாராயோ நன்னிலவே இப்போதைக்கு வராதுங்க. அதனால உங்களுக்காக அழகிய ரகுவரனே வரான். 

அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் ❤️❤️

மனைவி சென்ற பின் தனக்குள் புழுங்கிக் கொண்டவன் தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடினான் மாமியார் வீட்டிற்கு. கூடவே வால் போல் தொற்றிக் கொண்டது ஜீபூம்பாவும். கணவன் வரும் விஷயத்தை மாமியார் சொல்லி கேட்டவள், “எதுக்கு இந்த வெட்டி பந்தா.” என்று புன்னகைத்தாள்.

தவறுகள் நடந்த பின் நீ தவறு நான் தவறு என்று குற்றம் சாற்றுவதற்கு பதில் நடந்ததை ஒதுக்கி தள்ளி வரும் காலத்தில் நடக்காமல் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவோடு தான்… தான் பேசிய அனைத்தையும் தனக்குள் வைத்து வருத்திக் கொண்டவள் அவன் மனதில் இருக்கும் வருத்தத்தையும் போக்க நடவடிக்கை எடுக்கிறாள்.

வீட்டிற்கு வந்தவன் மனைவியின் முகத்தை பார்க்க சங்கடப்பட்டு கொண்டு, “அத்தை!” என குரல் கொடுத்தான். அறைக்குள் இருந்தவள் அப்படியே கண்டுகொள்ளாமல் இருக்க, ஜீபூம்பா ஓடியது அவளிடம்.

“செல்லக்குட்டி இங்க வாங்க. என்னை பார்க்க வந்தீங்களா அழகு செல்லம் . எங்க உங்களோட பொண்டாட்டி பட்டுவ காணோம்.” என்றவள் அதை மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சினாள்.

வந்த தன்னை கண்டு கொள்ளாமல் ஜீபூம்பாவை கொஞ்சும் மனைவியை முறைத்துக் கொண்டே சோபாவில் அமர்ந்தான் தரணி. அண்ணனின் கோபம் புரியாமல் ஜீபூம்பா அகல்யாவின் முகத்தை நாக்கால் நக்கி அன்பை பொழிந்தது.

“சரிடா போதும் பாப்பா உதைக்குது.” என்றவள் வார்த்தையில் பதறியவன் ஜீபூம்பா குழந்தையை தொந்தரவு செய்வதாக எண்ணி அறை வாசலுக்கு நகர்ந்தான்.

“யார் காலாது என் ரூமுக்குள்ள வந்துச்சு அவ்ளோ தான்.” என்ற மிரட்டலில் அவன் உம்மென்ற முகத்தை வைத்துக்கொண்டு வாசலில் நிற்க, “வாங்க மாப்ள” என்று வரவேற்றார் சுகன்யா.

“போம்மா போய் உன் வேலைய பாரு. அவர் ஒன்னும் உன் மருமகன் இல்லை.”

“என்னடி உளறிட்டு இருக்க?”

“நான் ஒன்னும் உளறல. உன் பொண்ணோட வாழ விரும்பலன்னு விவாகரத்து கொடுக்க போறாரு. அப்படி இருக்க உனக்கு எப்படி மருமகன் ஆவாரு.” என்ற மகளின் வார்த்தையில் பதறிய சுகன்யா அவசரமாக மருமகனிடம் விசாரிக்க, அவன் பதில் சொல்லாமல் முறைக்கும் வேலையில் இறங்கினான்.

“நீ எவ்ளோ கேட்டாலும் பதில் வராது உன் பொண்ணுக்கு விவாகரத்து நோட்டீஸ் தான் வரும்.” என்று அன்னையை உசுப்பி விட்டாள் நன்றாக.

“அவ என்னப்பா சொல்றா?” மனம் நொந்து பேசும் மாமியாரை அதற்கு மேல் வருத்தம் கொல்ல வைக்க விரும்பாதவன், “உங்க பொண்ணுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு அத்தை வேற ஒன்னும் இல்ல.” என்று சமாதானப்படுத்தினான்.

இருவரையும் கண்டு வேதனைக்கு உள்ளான சுகன்யா மருமகனின் வார்த்தைக்கு மதிப்பளித்து இரவு உணவை தயார் செய்ய சமையலறை சென்று விட்டார். அவள் சொல்லிய வார்த்தையில் ரோஷம் கொண்டவன் அறைக்குள் செல்லாமல் அவளைப் பார்த்தபடி சோபாவில் அமர்ந்தான்.

“ஜீபூம்பா இந்த மாதிரி ஒண்டிக்கட்டையா யார் கூடயும் ஜோடி போட்டுட்டு சுத்தாத. உன் பொண்டாட்டி குடும்பம்னு ஒழுங்கா வாழ பாரு. மத்தவங்களுக்கெல்லாம் ஒண்டிக்கட்ட வாழ்க்கை ரொம்ப பிடிக்கும். நீயும் அவங்களோட சேர்ந்து கெட்டுப் போய்டாத.” என்றவள் ஓரக்கண்ணால் கணவனை நோட்டமிட்டாள்.

முறைப்பின் வீரியம் அதிகமாவதை உணர்ந்து ஜீபூம்பா முகத்தை பற்றி தன்னை பார்க்குமாறு செய்தவள், “இனிமே அங்க உக்காந்துட்டு இருக்காரு பாரு நம்ம எனிமி அவர் கூட நீ பேசவே கூடாது. உன்ன வேணாம்னு விட்டுட்டு போனவங்க  பின்னாடி ரொம்ப அலையாத. அப்புறம் என்னை கழட்டி விட்ட மாதிரி உன்னையும் கழட்டி விட்டுடுவாங்க.” என்றதும் ஜீபூம்பா தரணியை பார்த்து குரைத்தது.

தன் செல்லப்பிராணி தனக்கு எதிராக மாறியதை எண்ணி அவன் உள்ளுக்குள் குமைந்து கொண்டிருக்க, “பட்டு தான் உனக்காக இருக்குற உண்மையான ஜீவன். பட்டுவ மட்டும் தான் நீ முதல் இடத்துல வைக்கணும். ஒருவேள உனக்கும் பட்டுக்கும் சண்டை வந்து பட்டு ஏதாச்சும் அவசரத்துல வார்த்தைய விட்டா கூட என் பொண்டாட்டி தான பேசுனான்னு விட்டுக் கொடுத்து போகனும். மத்தவங்க மாதிரி இதுதான் சாக்குனு கழட்டி விட பார்க்க கூடாது.” அகல்யாவின் வார்த்தையில் சமத்தாக அமர்ந்துக் கொண்டது ஜீபூம்பா.

“அம்ம்ம்மாமா!” கணவனை இன்னும் சோதிக்க எண்ணியவள் வயிற்றில் இருக்கும் உதைக்காத குழந்தையை துணைக்கு அழைத்தாள் உதைப்பது போல்.

தரணி பயத்தோடு எழுந்து நிற்க, “இப்ப என்னத்துக்கு நீ உதைக்கிற. ஐயோ நம்ம பிள்ளை கஷ்டப்படுதுன்னு உன் அப்பா வந்து உன்ன பார்க்க போறாரா.” என்றவள் அவனை எதிர்ச்சியாக பார்ப்பது போல் பார்த்து, “சாரி! நீ பொறந்ததும் ஒரே ஒரு தடவை மட்டும் உன்ன வந்து பார்த்துட்டு போயிடுவாரு.” என்று நக்கல் அடிக்க, அதை புரிந்து கொண்டவன் மீண்டும் அமர்ந்தான் சோபாவில்.

“நீயும் நானும் இந்த வீட்ல தனிமரமா வாழ வேண்டியதுதான். அப்பானு கூப்பிட உனக்கும் புருஷன்னு சொல்லிக்க எனக்கும் யாரும் இல்லை.” என்று வருத்தப்படுவது போல் நடித்து அவன் மனதை வலிக்க செய்தாள்.

“அம்மா என்னென்னவோ கனவு கண்டு வச்சேன். நீ பிறக்கிற நொடி உன் அப்பா உன் கூட இருக்கணும்னு ஆசைப்பட்டேன். மயக்கத்துல நான் இருக்கும்போது பக்கத்துல என் கை புடிச்சு ஆறுதல் சொல்லணும்னு நினைச்சேன். கண் முழிச்சு பார்க்கும்போது என்ன குழந்தை பிறந்து இருக்குன்னு ஆசையா சொல்லனும்னு எதிர்பார்த்தேன்.” என்றவள் இந்த முறை நேராக அவனைப் பார்த்து,

“குழந்தை பிறந்ததும் பொண்டாட்டி மேல பாசம் அதிகமாகும்னு சொல்லுவாங்க. எப்பவுமே என் மேல பாசமா இருக்க உன் அப்பா நீ பிறந்ததும் எவ்ளோ பாசத்தை காட்டப் போறாருன்னு எதிர்பார்ப்போட அந்த நாளை எதிர்பார்த்தேன். இது எதுவும் எனக்கு நடக்காதுல.” இந்த முறை நக்கல் செய்வதற்கு பதில் வருத்தத்தோடு பேசினாள்.

அதற்கு மேல் பொறுமை காக்க முடியாதவன் வேகமாக அவளிடம் வந்து சேர, “ஜீபூம்பா என் மேல சத்தியம்.” என்ற ஒரே வார்த்தையில் அவனை நடைக்கு தடை போட்டாள்.

“லயா” ஏக்கமாக அழைக்கும் கணவனை திரும்பி பார்க்காது, “ரொம்ப நேரம் ஆயிடுச்சு ஜீபூம்பா உங்க அண்ணனை கூப்டுட்டு கிளம்பு.” என்ற வார்த்தையில் நொந்து போனான்.

மகள் பேசி அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சுகன்யா, “இந்த நேரத்துல எங்கடி போக சொல்ற இன்னைக்கு மாப்பிள்ளை இங்கயே படுத்துக்கட்டும்.” என்றிட, “விவாகரத்து பண்ண போற பொண்டாட்டி கூட யாராது இருப்பாங்களா?” வார்த்தையால் நோகடித்தாள்.

சுகன்யா எவ்வளவு சமாதானங்கள் சொல்லியும் கேட்கவில்லை அகல்யா. முடிவாக அங்கிருந்து போக சொல்லிவிட்டாள் கணவனை. அழும் குழந்தை போல் முகத்தை வைத்தவன் அங்கிருந்து நகராமல் அவளை பார்த்துக் கொண்டிருக்க, “நான் பேசுனதுக்கு தண்டனையா உண்மைய நிரூபிச்சு என்னை பழிவாங்குனிங்கல இப்போ என்னோட முறை. நான் சொல்ற வரைக்கும் என்கிட்ட நீங்க வரக்கூடாது கிளம்புங்க.” என்றவள் கதவையும் அடைத்து கொண்டாள்.

ஆசைப்பட்டு எதுவும் அவன் செய்யவில்லை என்பதை இருவருமே அறிவார்கள். ஒன்றுமில்லாத நேரத்தில் ஒற்றுமையாக இருந்தவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரத்தில் வீம்பு பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். மனைவியின் வார்த்தையை மீறி எதுவும் செய்ய முடியாமல் கனத்த மனதோடு வீடு வந்து சேர்ந்தான்.

***

நள்ளிரவு நேரம் பிரசவ வலி உண்டானது அகல்யாவிற்கு. இன்னும் இரண்டு வாரங்கள் இருப்பதால் முதலில் அதைக் கண்டு கொள்ளாதவள் வலி வேகம் எடுக்க அன்னையை அழைத்தாள். அவர்கள் வீட்டில் வாகனம் எதுவும் இல்லாததால் வேறு ஏற்பாட்டை  செய்தார் சுகன்யா. பக்கத்தில் அவசரத்திற்கு எதுவும் கிடைக்காமல் போக, மருமகனை அழைத்தார்.

அன்னை கணவனை அழைப்பது தெரியாமல் அவளே ஆம்புலன்ஸை வரவழைத்து இருந்தாள். மாமியாரின் ஒற்றை வார்த்தையில் பதறியவன் அன்னையிடம் விஷயத்தை சொல்லி புறப்பட்டான். அதற்குள் ஆம்புலன்ஸ் வந்துவிட, வலியோடு ஏறி படுத்தாள். அவளோடு சுகன்யாவும் புறப்பட, கைபேசி ஒலித்தது.

“இப்பதான் மாப்பிள்ளை ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு போறோம்.” என்ற வார்த்தையில் அதிர்ந்தாள் அகல்யா.

அந்த வலியிலும் அன்னை காதில் இருந்த கைபேசியை பறித்தவள், “எதுக்கு ம்மா அவருக்கு சொன்ன? பயந்து அவசரத்துல வேகமாக கார் ஓட்டிட்டு வருவாருன்னு தான நான் அவருக்கு போன் பண்ணாம ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணேன்.” என்று கோபம் கொண்டவள்,

“என்னங்க” என்றாள் வலியை பொறுத்துக் கொண்டு. பதட்டத்தில் அவள் சொன்னது போல் காரை இயக்கிக் கொண்டிருந்தவன் மனைவியின் வார்த்தையில் உடைந்தான் முற்றிலும். பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறவி என்பதை அறிந்தவன் அந்த நிலையிலும் தன்னை யோசிக்கும் மனைவியின் அன்பில் உலகை மறந்தான்.

“லைன்ல இருக்கீங்களா?”

“இருக்கேன்டா”

“எனக்கு ரொம்ப எல்லாம் வலி இல்லைங்க சாதாரண வலி தான். இப்போ ஆம்புலன்ஸ்ல போயிட்டு இருக்கேன். நீங்க அவசரப்படாம நிதானமா கார ஓட்டிட்டு வாங்க.”   என்ற மனைவியின் வார்த்தைக்கு எதிராக அவன் வேகமாக காரை இயக்கிக் கொண்டிருந்தான்.

“இப்ப நான் நிதானமா வரதாடி முக்கியம். இதுக்குதான் ராத்திரி உன் கூட இருக்கலாம்னு கிளம்பி வந்தேன்.” என்றவன் தன்னை தானே நிதானித்துக் கொண்டு, “என்னை சொல்லணும் உன்ன தனியா விட்டது என்னோட தப்பு.” என்றான்.

“கார வேகமாக ஓட்டிட்டு வரீங்களா.”

“முடியாத நேரத்துல என்னடி பேசிட்டு இருக்க. நீ போன வை இன்னும் கொஞ்ச நேரத்துல நான் அங்க வந்துடுவேன். என்னை நினைச்சு கவலைப்படாத  தைரியமா இரு.” என்ற கணவனின் வார்த்தையில் இருக்கும் பதட்டத்தை உணர்ந்து அன்னையை முறைத்தவள்,

“காரை ஓரமா நிறுத்துங்க.” என்றாள் முடியாமல்.

தரணி கேட்காமல் வேகமாக இயக்கிக் கொண்டிருக்க, “என்னால ரொம்ப பேச முடியல சொன்னா புரிஞ்சுக்கோங்க கார ஓரமா நிறுத்துங்க.” என்றாள்.

ஏற்கனவே வலியில் இருப்பவளை இன்னும் அவஸ்தைப்படுத்த வைக்க விரும்பாதவன், “நிறுத்திட்டேன் லயா.” என்றான் கண்ணீரோடு.

அழைப்பை துண்டித்தவள் வீடியோ கால் செய்தாள். ஆம்புலன்ஸில் இருக்கும் மனைவியின் நிலையை பார்த்தவன் கலவரம் செய்து விட்டான் அழுது. அவன் அழுகையில் அகல்யாவிற்கும் லேசாக அழுகை வர,

“ஈஷ்வா” என்றாள்.

அழுகையோடு அவன் பார்க்க, “உங்க கிட்ட பேசுற அளவுக்கு நல்லா இருக்கேன். நான் ஹாஸ்பிடல் போறதுக்குள்ள நீங்க ஹாஸ்பிடல் வந்துடுவீங்க. அவ்ளோ பக்கத்துல ஹாஸ்பிடல வச்சிட்டு எதுக்காக வேகமா வரீங்க. நான் அங்க வரும்போது நீங்க இந்த மாதிரி இருக்க கூடாது. இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம அப்பா அம்மா ஆக போறோம். என் குழந்தை அழுகாச்சி அப்பாவ பார்க்க கூடாது.” என்றவள் வார்த்தைக்கு பின் காரை இயக்கியவன் அவள் அறியா வண்ணம் சற்று வேகத்தோடு புறப்பட்டான்.

அவன் நிதானத்தை அடைந்து விட்டான் என்ற நம்பிக்கையில் கைபேசியை அன்னையிடம் கொடுத்தவள் பிள்ளையோடு போராடினாள். ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு வர, மனைவியை தாங்க ஓடி வந்தான் தரணீஸ்வரன். கைகள் இறுக்கமாக மனைவியைப் பிடித்துக் கொள்ள, “சாரி!” என்ற வார்த்தையோடு கைகளைப் பறித்துக் கொண்டு அவசர அறைக்குள் மறைந்தாள்.

****

நடுக்கத்தோடு நடந்து கொண்டிருந்தவன் அப்படியே நின்றான் குழந்தையின் ஓசையில். வீட்டின் பெரியவர்கள் மனமகிழ்ச்சியோடு கடவுளுக்கு நன்றி தெரிவிக்க, தரணீஸ்வரன் கையில் மழலை.

பலமுறை நடுக்கம் கொண்ட கைகள் இந்த முறை நடுங்கியது மகளை தாங்கிப் பிடிக்க. தரணி ஆசை போல் மகளே பிறந்து விட்டாள். கண்களில் நீர் குலமாகி குழந்தையின் உடம்பில் பட்டதும் துடித்துப் போனான்.

“சாரி குட்டி” என்று ஒரு துளி கண்ணீரை துடைத்து விட்டவன் நெற்றியில் முத்தமிட்டான். சில மாதங்களுக்கு முன் தரணியின் வாழ்வில் இல்லாத ஆனந்தம்… இதோ அவன் கையில்!

மனைவியை பார்க்கும் தருணத்திற்காக காத்துக் கொண்டிருந்தவன் நேரம் கிடைத்ததும் ஓடினான். லேசான மயக்கத்தில் உணர்வுகளோடு படுத்துக் கொண்டிருந்தவள் நெற்றியில் முத்தமிட்டவன், “லவ் யூ லயா” என்றான் கண்ணீரோடு.

விழி திறக்காமல் இருந்தவள் விழி ஓரத்தில் நீர் கசிந்தது. அதைத் துடைத்தான் முத்தம் கொடுத்து மனைவியின் காதில், “பெண் குழந்தை” என்றிட, உணர்வுகள் கொடுத்த உந்துதலில் விழி திறந்தாள்.

வாய்க்கொள்ள புன்னகையுடன் வளம் வந்தான் தரணீஸ்வரன். மகள் அப்படியே அவன் சாயலில் இருக்க பெருமை தாங்கவில்லை பூரிப்பில். மனைவியை விட்டு ஒரு நொடி கூட விலகாமல் ஆடை போல் ஒட்டிக் கொண்டிருந்தான். மகள் அழுகும் சத்தத்தில் உள்ளம் என்னவோ செய்ய, பெற்றவள் பாலூறும் மார்பை மழலையோடு சேர்ப்பதற்குள் ஒரு வழி ஆகி விடுகிறான்.

இரண்டு நாட்கள் ஆகிவிட்டது தரணியின் மகள் பூமியில் அவதரித்து. மனைவியின் கைகளை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவன் பார்வை மகள் மீது இருந்தது. என்னவோ அடைய கூடாத ஒன்றை அடைந்து விட்டது போல் பிரம்மை. தூக்கத்தில் மகள் சினுங்கும் அசைவை சாகும் வரை மறக்காத அளவிற்கு சேகரித்தான் மனதில்.

விழி திறந்து மகள் பார்க்கும் நொடிக்காக காத்துக் கொண்டிருந்தவன் ஏமாந்து போனான் அன்னையை மட்டுமே குழந்தை அறிவதால். மூன்றாம் நாள் மருத்துவமனையில் இருந்து கிளம்பி விட்டாள் அகல்யா. மனைவி பின்னே சுற்றிக் கொண்டிருந்தவன் காரில் பந்தாவாக அமர்ந்திருந்தான் மனைவி மகளை அழைத்துச் செல்ல.

பிறந்த குழந்தை போல் ஆறடி ஆண் மகன் ஆசையோடு அவளை வரவேற்க காத்துக் கொண்டிருக்க, காரில் ஏறாமல் அவள் வரவைத்த வண்டியில் ஏறினாள். ஒரு நொடி ஒன்றும் புரியவில்லை தரணிக்கு. அதன்பின்னே மனைவி பழிவாங்குகிறாள் என்பதை உணர்ந்து வேகமாக வண்டியை பின்தொடர்ந்தான். நல்ல வேலையாக அது அவன் வீட்டிற்கு சென்றது.

மனைவிக்கு முன் வீட்டு வாசலில் நின்றவன் முறைத்துக் கொண்டு வரவேற்றான். மருமகளை அன்போடு வரவேற்றார் ஆரத்தி எடுத்து ஆதிலட்சுமி. பேத்தியை கண்டு உள்ளம் பூரித்து போனார் தயாளன். பேத்திக்கு தேவையான அனைத்தையும்  வாங்கி குவித்து விட்டார். வீட்டில் இருக்கும் அனைவரும் இளவரசியை நடுவில் வைத்துக் கொண்டு ரசித்துக் கொண்டிருக்க, ஒருவன் மட்டும் முறைத்துக் கொண்டு இருந்தான் மனைவியை.

கண்டு கொண்டதாக தெரியவில்லை அகல்யா. பிள்ளையின் அழுகையில் முறைப்பை விட்டவன் அவள் தூக்குவதற்கு முன்னால் மகளை தூக்கிக் கொள்ள ஓடினான். அவன் எண்ணத்தை அறிந்து மகளை தூக்கிக் கொண்ட அகல்யா கண்டுகொள்ளாமல் தன் அறைக்கு சென்று விட்டாள்.

உள்ளே செல்லலாம் என்றவன் எண்ணமும் பலிக்காமல் போனது அவள் பூட்டி வைத்ததால். கதவை உடைக்க முடியாத பாவமான நிலையில் காத்துக் கொண்டிருந்தான் திறக்கும் நொடிக்காக. வேண்டுமென்றே தாமதமாக திறந்தவள், “ஜீபூம்பா” சத்தமாக அழைத்தாள்.

வீட்டிற்கு புதிதாக வந்த பொம்மை குட்டியை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்த ஜீபூம்பா அப்போதுதான் பட்டுவோடு விளையாட சென்றது. அகல்யாவின் குரலில் பட்டுவை அனாதையாக விட்டுவிட்டு அவள் முன்பு நின்றது. பின்னால் பட்டுவும் ஓடி வர,

“நம்ம பாப்பா” ஜீபூம்பாவிற்கு அழுத்தமாக புரிய வைத்தாள்.

தரணீஸ்வரன் அவளை முறைத்துக் கொண்டு நிற்க, “நம்ம பாப்பா பக்கத்துல இந்த எனிமி வரக்கூடாது. வந்தா நானும் பாப்பாவும் தூரமா போய்டுவோம். அப்புறம் நீ எங்கள பார்க்கவே முடியாது.” என்றவள் கணவனை பார்த்துவிட்டு,

“நான் குளிச்சிட்டு வர வரைக்கும் பாப்பா கிட்ட யாரையும் வரவிடாத.” என்று கொனட்டிக்கொண்டு குளியலறை சென்றாள்.

இவள் என்ன தன் பிள்ளையை தன்னிடமிருந்து பிரிப்பது என்ற கோபத்தோடு மகளை தரணி நெருங்க, குரைத்து அவனை தடுத்து நிறுத்தியது ஜீபூம்பா. தன் செல்லப்பிராணி தலையில் அடித்தவன் மகளை தூக்க முயல, மீண்டும் சத்தமாக குரைத்தது.

ஜீபூம்பாவின் ஓசையில் குழந்தை முழித்துக் கொண்டு அழுக, பிள்ளையின் அழுகையில் மனம் துடித்தவன் ஓடு சென்று கட்டிக் கொண்டான். ஜீபூம்பாவிற்கு பயங்கர கோபம் வந்துவிட்டது அண்ணனின் செயலில். பல் பதியாமல் கடிக்க ஆரம்பித்தது.

மகளின் அழுகையில் செல்லப்பிராணி மீது கோபம் கொண்டவன் ஒரு கையால் அதன் காதை பிடித்து வளைத்து வெளியே துரத்தி விட்டான். விட்ட வேகத்தில் மீண்டும் ஜீபூம்பா அவனிடம் சண்டைக்கு பாய,

“அவ கூட சேர்ந்துட்டு ஓவரா ஆட்டம் போடுறியா நீ. என் பொண்ணு இன்னொரு தடவ உன் சத்தத்தை கேட்டு அழுதா குரலை கட் பண்ணிடுவேன். போடா வெளிய…” என்று இரக்கம் பார்க்காமல் செல்லபிராணியை கடித்து குதறினான்.

பிள்ளையின் சத்தத்தில் அவசரமாக வெளியில் வந்த அகல்யா கணவனை முறைத்துக் கொண்டே குழந்தைக்கு பசியாற்றினாள். “என்னடி முறைக்கிற? அப்படியே ஒன்னு வச்சேன்னா மூஞ்சி காணாம போயிடும். என் பிள்ளைய நான் தூக்கக்கூடாதா இது எந்த ஒரு சட்டம்?” என்று கொந்தளித்தான்.

அவனைக் கண்டு கொள்ளாமல் பிள்ளையை மெத்தையில் படுக்க வைத்தவள், “யாரைக் கேட்டு இந்த ரூமுக்குள்ள வந்தீங்க?” கேட்டாள்.

“லயா” என்று பற்களை கடிக்க, “வெளிய போங்க.” என்றாள்.

“என் ரூம்டி இது. நான் எதுக்கு வெளிய போகணும்.”

“இத்தனை நாள் இது உங்க ரூம்முன்னு தெரியலையா.” கேட்டதற்கு பதில் கொடுக்காமல் முறைத்தான் தரணி.

“அது என்ன பொண்ணு மேல அவ்ளோ பாசம். மூணு நாளா வால் மாதிரி ஒட்டிக்கிட்டு இருக்கீங்க. நான் இல்லாம பிள்ள வந்துடுச்சா உங்களுக்கு.”

“இப்ப எதுக்குடி இப்படி பேசிட்டு இருக்க. என் கூட கார்ல வராம  தனியா வந்ததுலயே செம கோவம் எனக்கு. வீணா நமக்குள்ள சண்டை வேணாம்.”

“ஓஹோ!” என அகல்யா அவனை ஒரு மாதிரியாக பார்க்க, “என்னத்துக்கு இந்த லுக்கு விடுற?” என கேட்டான்.

“சார் எனக்கு விவாகரத்து தர போறன்னு சொன்னீங்க அப்புறம் எப்படி உங்க கூட கார்ல வர முடியும்.”

“இன்னும் எத்தனை நாள் அதை பிடிச்சு தொங்க போற”

“மறக்குற அளவுக்கு ஐயா சாதாரண விஷயத்தை சொல்லலையே.”

“நீ தானடி முதல்ல கேட்ட.”

“நான் கேட்டா கொடுத்துடுவிங்க அப்படித்தான.” என்றவள் இடைவெளி விட்டு, “எனக்கு விவாகரத்து வேணும் கொடுங்க.” என்றாள்.

வேண்டுமென்றே தன்னிடம் வம்பு இழுக்கிறாள் என்பதை உணர்ந்தவன் முறைத்துக் கொண்டே நிற்க, “என்ன முறைப்பு? இப்ப நினைச்சா கூட எனக்கு கோபம் கோபமா வருதுங்க. நான் கேட்டனாம் இவரு கொடுக்கிறன்னு சொன்னாராம். என் முன்னாடியே அவள முன்னாள் மனைவின்னு அறிமுகப்படுத்தி வைக்கிறீங்க. அப்படியே எனக்கு வந்து கோபத்துக்கு கழுத்தை நெறுச்சி கொன்னு இருப்பேன்.” என்று கையை வேகமாக அவன் கழுத்தை நோக்கி எடுத்துச் சென்றாள்.

மனைவியின் வேகத்தில் பயந்தவன் பின்னால் நகர, “பிள்ளை பிறந்ததும் எட்டி பார்த்துட்டு போவேன்னு சொன்ன ஆளு மூணு நாளா வெட்கம் இல்லாம சுத்திட்டு இருக்கீங்க. என் கோபம் போற வரைக்கும் எங்க ரெண்டு பேர்கிட்டயும் நீங்க வரவே கூடாது. முக்கியமா இந்த ரூமுக்குள்ள உங்களுக்கு இடம் இல்லை.” என்று விட்டாள் முடிவாக.

அவள் வார்த்தையை சிறிதும் மதிக்காதவன் குழந்தையிடம் செல்ல, கோபம் கொண்டவள் சட்டை கலரை பிடித்து கதவு வரை இழுத்து வந்தாள். ஆட்டி வைக்கும் பொம்மை போல் அவள் இழுத்த எழுப்பிற்கு வந்தவன் வெளியில் தள்ள போகும் நேரம் கதவை சாற்றினான்.

“எதுக்கு….” பேச ஆரம்பித்த மனைவியின் உதட்டை ருசிக்க துவங்க, கோபம் இல்லை என்றாலும் அடித்துக் கொண்டிருந்தாள் அவனை. மனைவியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு காற்றைப் போல் முத்தமிட்டவன் விலகினான்.

கண்மூடி கண்ணில் நீர் வலிய நிற்கும் மனைவியை தன்னோடு சேர்த்துக் கொண்டு, “சாரிடி!’ கெஞ்சிட, விலகப் பார்த்தாள் அகல்யா.

“ஆசைப்பட்டு உன்னை விவாகரத்து பண்றன்னு சொல்லல லயா. என்னால நீ அழுகுறதை பார்க்க முடியல. உன்ன பிரிஞ்சி நான் மட்டும் சந்தோஷமாவாடி வாழ்வேன். ஒரு நாள் கூட அப்படி இருக்க முடியாம தான் உன் பின்னாடியே வந்துட்டு இருக்கேன். அதுவும் என் பிள்ளைய பார்த்ததுல இருந்து காதலோட மரியாதையும் அதிகமாயிடுச்சு உன் மேல.” என்று நெற்றியில் முத்தமிட்டவன்,

“அழியப் போற வாழ்க்கைக்கு உயிர் கொடுத்ததோடு இல்லாம என் குழந்தையும் சேர்த்து கொடுத்து ரொம்ப அழகாக்கிட்ட லயா. என்னென்னமோ ஆசை வருது உள்ளுக்குள்ள. அது எல்லாத்தையும் நிறைவேத்திக்க நீ என் கூடவே இருக்கணும். என்னை தள்ளி வைக்காதடி தாங்கிக்க முடியல.” என்றவன் அவளை பதமாக அணைத்தான்.

“சாரி” என்றவள் வார்த்தையில் அவன் முகம் பார்க்க, “உங்கள எந்த நொடி விரும்ப ஆரம்பிச்சன்னு தெரியலங்க. என் புருஷனுக்கு நான் மட்டும்தான் எல்லாம இருக்கனும்னு கனவு கண்டுட்டு இருக்கும்போது அதை பாதில கலைக்க பார்த்தா எனக்கு கோபம் வராதா. அதுலதான் உங்க மனச தெரிஞ்சே காயப்படுத்திட்டேன்.

உங்களை திட்டிட்டு நான் சந்தோஷமா இல்ல ஈஷ்வா. எங்கடா நான் கேட்ட மாதிரி விவாகரத்து கொடுத்துடுவிங்களோன்னு ஒவ்வொரு நாளும் பயந்துட்டு இருந்தேன். உங்க பிள்ளைய கேட்டு பாருங்க அம்மா இவ்ளோ பயந்துச்சுன்னு சொல்லும். நானே போறன்னு சொன்னாலும் போகாதடின்னு சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன். நீங்க என்னடான்னா…” பேச விடாமல் முத்த மருந்திட, சில நாட்களாக இருவருக்குள்ளும் இருந்த மனக்கசப்பு தீரா ஆரம்பித்தது.

“சாரி” என்ற வார்த்தையை மாற்றி மாற்றி கேட்டு தண்டனையாக முத்தத்தை கொடுத்துக் கொள்ள, பல நாள் கழித்து அவர்களாக அவர்கள் உறவு துளிர்ந்தது.

“இனி இந்த மாதிரி நடந்துக்க மாட்டேன்.” என்றவன் நெற்றியில் ஆரம்பித்து முகம் முழுவதும் ஒவ்வொரு இடத்திலும் முத்தம் தர, “லவ் யூ ஈஷ்வா” என்றவள் விரதம் இருந்த இதழின் தவத்தை கலைத்தாள்.

பேச்சுவார்த்தைகள் குறைந்து காதல் பாஷைகள் குறியேற, குழந்தையின் வரவை மறந்து கொஞ்சிக் கொண்டார்கள். காதலின் அளவு சற்று அதிகரிக்க… ஆனந்தத்தோடு இருந்த கணவன் மனைவியை தடுத்தான் ஜீபூம்பா.

பட்டுவோடு விளையாடிக் கொண்டிருந்தவனுக்கு என்ன ஆனதோ தெரியவில்லை சத்தமிட்டு குலைத்தது. அவனின் அசுர சத்தத்தில் தூங்கிக் கொண்டிருந்த வீட்டின் இளவரசி எழுந்து கொள்ள, பிள்ளையின் அழுகை சத்தத்தில் வீட்டில் இருந்த பெரியவர்கள் அறைக்கு வந்து விட்டார்கள்.

மழலையின் அழுகை சத்தத்தை கேட்ட ஜீபூம்பா பட்டுவோடு வேகமாக அறைக்கு ஓடி வந்தது. இப்பொழுதுதான் பசியாற்றியதால் பெரியவர்கள் வீட்டின் இளவரசியை சமாதானம் செய்து கொண்டிருக்க, அவர்களையெல்லாம் ஓரம் தள்ளிய ஜீபூம்பா அண்ணனின் வாரிசோடு ஒட்டி அமர்ந்தது.

வீட்டில் இருந்த அனைவரும் செல்லப்பிராணியின் பாசத்தைக் கண்டு அன்போடு தட்டிக் கொடுக்க, பெருமை தாங்காத ஜீபூம்பா கர்வத்தோடு அண்ணனை பார்த்தது. அவனோ வழக்கமாக முறைப்பதை விட ஆயிரம் மடங்கு அதிக முறைப்போடு பார்க்க, பதமாக எழுந்த ஜீபூம்பா ஆள் அரவம் தெரியாமல் நகர ஆரம்பித்தது.

கேடியின் எண்ணத்தை அறிந்து கொண்டவன் வேகமாக அதை துரத்திச் செல்ல, சிரிப்போடு கணவனை பின்தொடர்ந்தாள் அகல்யா. தோட்டத்தில் சிக்கிக் கொண்டான் ஜீபூம்பா. பாவம் பச்ச குழந்தையை போட்டு கடிக்க ஆரம்பித்தான் தரணீஸ்வரன். ஜீபூம்பாவின் ஆர்ப்பாட்டத்தை கண்ட பட்டு சத்தம் இல்லாமல் அவர்கள் கூண்டிற்கு சென்று விட, காப்பாத்த ஆளில்லாமல் தவித்துப் போனது.

கோபம் குறையாது தரணி அதை சித்திரவதை செய்ய, வழக்கம்போல் தன் பல்லை கொண்டு காப்பாற்றியது உயிரை. கடித்த ஜீபூம்பாவை ஆக்ரோஷமாக தரணி தாக்க, அவனிடம் இருந்து தப்பித்தால் போதும் என்ற எண்ணத்தில் ஓடிய ஜீபூம்பா அவன் காலை தட்டி விட, பக்கத்தில் இருந்த மனைவியை அணைத்துக் கொண்டு தரையில் விழுந்தான்.

விழுந்த வேகத்தில் அலறியவன் மனைவியை கண்டு அமைதியானான். பார்வை மொழிகள் இருவரையும் கட்டி போட, விரல் கொண்டு தீண்டினான் மனைவியின் முகத்தை. காதலில் திளைத்து… இருக்கும் இடத்தை மறந்தவர்கள் முத்தம் கொடுக்க நெருங்கி வர,

“லொள்!” என்ற ஓசையில் அலறி அடித்து எழுந்து நின்றார்கள்.

முற்றும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
23
+1
78
+1
1
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *