Loading

29 – காற்றிலாடும் காதல்கள் 

 

“அதுக்கப்பறம் இந்திரன் குடும்பம் மொத்தமும், அவரும் பல துண்டா கெடந்தாங்க. அன்னிக்கி ராத்திரி என் காதுல இந்த பாட்டு கேட்டது.  திரும்ப திரும்ப கேட்டுகிட்டே இருந்ததுன்னு தான் இதுல எழுதி வச்சேன்.  நான் மலைக்கோவில் படில கெடந்தேன்னு ஊரு ஜனங்க வந்து எழுப்பினாங்க. அவனுங்க வந்து போன தடமே தெரியல. எனக்கு அவர பல துண்டா கெடந்தது பார்த்துட்டு மூளையே ஸ்தம்பிச்சி போச்சி. சில மாசம் கழிச்சி இந்த கேஸ் விசாரிச்ச ஆபிசர் வந்து, கோவில கொள்ளையடிக்க வந்த அவனோட ஆளுங்க தான் இந்திரன் அப்பா அம்மா அரை உசுரா கெடந்தது பாத்து அந்த வீட்டுல ஆளுங்க இருந்தா ஆபத்துன்னு அங்கிருந்த பசங்களையும் கொன்னு போட்டிருக்காங்கன்னு சொன்னாரு. இந்திரன் இங்க இருந்ததால தப்பிச்சான். அவரு தான் இந்த கல்ல என்கிட்ட குடுத்தாரு.” என அவரின் தலைமாட்டில் இருந்த மண்டலா வரைபடத்தின் நடுவே இருந்த கல்லை எடுத்துக் கொடுத்தார். 

ஒர் கையளவு  இருந்ததை மிருணாளினி கையில் வாங்கியதும் சட்டென ஓர் மின்னல் உடலில் ஓடியது. அந்த கள்ளின் பின்னே சில குறிப்புகள் இருந்ததைக் கண்டு அந்த எழுத்துக்களைப் படிக்க முனைந்தாள். 

“இத்தன வருஷமா ஏன் எதுவும் சொல்லல கண்ணு? அவன அப்பவே கண்டுபிடிச்சு கண்டம் துண்டமா வெட்டி இருப்பேன்ல?“ விஸ்வநாதன் ஆவேசமாகக் கேட்டார். 

“அவன் இந்த மாநிலத்தே விட்டே ஓடிட்டான்ப்பா. தவிர இந்த கேஸ் விசாரிச்ச இன்ஸ்பெக்டர அப்போவே யாரோ ஆள் வச்சி கொன்னுட்டாங்க.. இன்னும் எத்தன உசுரு போகணும்ன்னு தான் அமைதியா இருந்துட்டேன். அதுக்கு அப்புறம்  வந்த போலீஸ்கிட்ட கூட அதனால தான் நான் எதுவும் சொல்லல. இப்ப அந்த புது பாட்டு என் மனச உலுக்குது. மறுபடியும் எத்தன உயிர் போகுமோன்னு பயமா இருக்கு.”

 

“இருவத்திரெண்டு வருஷம் முன்ன வந்த அதே நாள் இப்ப வருது அத்த. அன்னிக்கி திறந்திருக்க வேண்டிய குகை இப்ப திறக்கபோகுது. அந்த சின்ன பொண்ணு யாரு என்னனு எனக்கு தெரியாது. ஆனா இந்த பிரபஞ்சத்துல நமக்கு புரியாத தெரியாத பல சக்திகள் இருக்கு. அதுல ஏதோ ஒண்ணு அன்னிக்கி நீங்க பாத்திருக்கலாம். மறுபடியும் அதே சின்ன பொண்ணு வராது. ஆனா நாங்க திறக்க முயற்சி பண்ண தான் போறோம். இந்த பாட்டை படிங்க என மூன்றையும் ஒன்றிணைத்துக் கொடுத்தாள். 

“சந்திரனில்லா நள்ளிரவு ஏறியதும்,

குகையின் வடக்கும், தெற்கும் வைரவன் வாள் வீச,

மத்தியில் நாச்சியின் அபயக்கரத்தினைப் பற்றிட

உச்சியில் பாறை விலகிய நாளிலிருந்து வரும் …… 

 

…. வரும் நித்ய பௌர்ணமி தினத்தில், 

சந்திரன் முழுவீரியம் கொண்டுச் சுற்றும் வேளையில்,

எல்லைக்கோவில் தம்பக்கூடமதில் மூவாறு வரிசையின்,

அட்டக்கால் மீட்ட குகையின் முக்கிய தாழ்  திறக்கும்… 

 

ஆறு நாழிகையின் முன்னிரண்டு நாழிகையில் சுதர்சனத் திறவுக் கண்டு  பொருத்திட … 

நாச்சியிவள் சிம்மவாயில் வழிக்கொடுக்க .. 

மீதமிருக்கும் நான்கு நாழிகையில் நாச்சியைக் குளிர்வித்திட … 

திறந்த சிம்மவாயிலும் மூடிடாது… 

கற்பகநாச்சியிவள் நித்திய தரிசனமும் கொடுத்திடுவாள் …” 

 

“உங்களுக்கு இதுல என்ன புரியுது?”,என மிருணாளினி கேட்டாள். “அமாவாசை நடுராத்திரில வடக்க தெக்க இருக்க வைரவன் வாள் வீச, மத்தில நாச்சியோட அபய முத்திரை கைய பிடிச்சா உச்சில பாறை விலகும்.” என மாலா மெல்ல பொருளை உள்வாங்கிக் கூறினார். 

 

“சூப்பர் அத்த. மாமா கூட நெறைய படிச்சிருக்கீங்க போலயே? சரி அமாவாசைல இத பண்ணிடலாம். அடுத்து..” என மிருணாளினி கேட்கவும் ஜெயந்தி முன்னே வந்தார். 

“போதும் மிருணா நீ செஞ்சது வரைக்கும். இனிமே நீ இந்த வேலை பாக்க மாட்டேன்னு சொல்லிருக்க. அத மறந்துடாத.”

“நான் இத விடமுடியாது மா…  கிருபாவ இழந்த குற்றவுணர்ச்சி எனக்கு இங்க வந்தபறம் இல்லை. இங்க கிருபா என்கூடவே இருக்கா.” என உண்மையை கூற வந்து பாதியில் திணறி நிறுத்தி, “இருக்க மாதிரி தான் எனக்கு இருக்கு. யாரும் இத தடுக்க முடியாது. இத நான் திறந்தே தீருவேன். இன்னொரு விஷயம் எல்லாரும் கேட்டுக்கோங்க. அந்த விஜயராகவன் தான் இப்பவும் என்னை மிரட்டிட்டு இருக்கான். அவனோட ஆளுங்க தான் ஊருக்குள்ள சுத்திட்டு இருக்காங்க. இன்னிக்கி பல கோடிகளுக்கு அதிபதி, தொல்பொருள் துறைல பெரிய பதவின்னு நம்ம தொடமுடியாத எடத்துல இருக்கான். அவனுக்கு இந்த குகைல ஏதோ வேணும். அவன் முதுகுல அந்த தீக்காயம் இன்னமும் இருக்கு. அத நான் பாத்திருக்கேன். அவன் முதுகுல தான் நமக்கு வேண்டிய குறிப்பும் இருக்கலாம். இந்த கல்லு, இன்னொரு சின்ன கல்லும் தீக்காயமும் நமக்கு இன்னொரு சாவியை தேடி தரும்னு நெனைக்கறேன். எல்லாரும் ஜாக்கிரதையா இருக்கணும். எல்லாத்தயும் உங்ககிட்ட என்னால சொல்ல முடியாது. இந்த குகை திறக்கறவரை என்னை தொந்தரவு பண்ணாம இருங்க அது போதும்.” எனக் கையெடுத்து தாய் தந்தையைக் கும்பிட்டுக் கேட்டுக்கொண்டு கயலுடன் அந்த கோவிலுக்கு மீண்டும் சென்றாள். 

மிருணாவின் மனதில் பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. எப்படி இந்த குகையை அவனை வைத்துக்கொண்டே திறந்து அவனைத் தோற்கடிப்பது? பெரும் உயிர்பலி பரிட்சை. இதை நமது பக்கம் இழப்பில்லாமல் செய்து முடிக்க முடியுமா? கால்கள் தானாக செந்தூர விநாயகர் சன்னதி அருகே வந்து நின்றது. உள்ளே ஆறடியில் சுயம்பு சிலையென இருந்த விநாயகர் உடல் முழுக்க செந்தூரம் சாற்றி இருந்தனர். நீக்கவே முடியாத தடைகளை எல்லாம் நீக்கும் செந்தூர கணபதி இவளின் முயற்சிக்கு துணை வருவாரா? 

விஜயராகவன் முதுகில் இருந்த தீக்காயம் அவனின் எழும்பினை வெகுவாக சுட்டுக் கொண்டிருந்தது. நேற்று இரவில் இருந்து அந்தக் காயம் திடீரென மீண்டும் எரிச்சல் கொடுக்க ஆரம்பித்து, சதையைத் தீய்த்துக் கொண்டு எழும்பைச் சுட ஆரம்பித்தது. அவன் அந்த சூட்டினையும், வலியையும் தாங்கமுடியாமல் கதறத் தொடங்கினான்.   

“ஆதர்ஷ்.. நானும் வரேன்.  எல்லா ஏற்பாடும் பண்ணு. உமேஷ்கிட்ட பேசி நிலமைய தெரிஞ்சிக்க. இந்த காயம் என்னை உயிரோட எரிக்குது.  அங்க போனா தான் இதுக்கு தீர்வு கெடைக்கும்.” எனக் கூறி முழுதாகக் குளிரூட்டப்பட்ட வண்டியை தயார்செய்யச்சொன்னான். 

“சரி பாஸ்.  ஏன் இது திடீருன்னு இப்படி ஆகுது? இது எப்டி ஆச்சி?”எனக் கேட்டான். 

“நான் சொன்னத மட்டும் செய் டா இடியட்“ ராகவன் கத்தவும் ஆதர்ஷ் அதற்குமேல் எதுவும் பேசாமல் அன்றிரவே விண்ணூர்காரப்பட்டினம் வந்துச் சேர்ந்தான். 

அன்று பகலில் கோவிலில் இருந்தே மிருணா முதல் அன்வர் வரையிலும் அமர்ந்து அந்த பாடலின் விளக்கத்தை ஆராய்ந்து முடித்திருந்தனர். 

“தம்பம்னா தூண்… தம்பக்கூடம்னா தூண் மண்டபம். மூவாறு வரிசைன்னா 16 வது வரிசை.. அட்டம்னா 8.. 16வது வரிசைல 8வது தூண் எதுன்னு பாருங்க.” என ஒவ்வொரு வரிக்கும் மிருணாளினி விளக்கம் கூறிப் புரியவைத்து அவர்கள் செய்யவேண்டிய விஷயங்களைக் கூறிக்கொண்டிருந்தாள்.   

“இதுல சவுண்ட் வருமா மிருதங்கம்?” என இந்திரன் கேட்டான். 

“அப்டி தான் போட்டிருக்கு… இந்த தூண் மீட்ட இந்த ஊர்ல யாருக்காவது தெரியுமா?”

“சும்மா தட்டி பாக்கலாம்” என அனைவரும் விரல்களை வைத்துத் தட்டித் தட்டிப் பார்க்க ஒரு சத்தமும் எழவில்லை. அதில் சலித்துப்போனவர்கள், அங்கே கூட்டிப் பெருக்கும் ஒருவரை அழைத்து அந்தத் தூணை முழுதாக நீர் அடித்துச் சுத்தம் செய்யக் கூறினர். அவர் மலைச்சாமி, சிறுவயதில் இருந்தே இந்த கோவிலில் இருக்கிறார். குடும்பம் ஏதுமில்லை. இங்கேயே வேலைகள் செய்து மடப்பள்ளி கொடுக்கும் உணவினை உண்டுவிட்டு இங்கேயே இருப்பவர். 

அவர் நீர் கொண்டு வந்து அந்த பெரியத்தூணைத் துணிக் கொண்டுத் துடைத்து விட்டு மெல்லத் தட்டவும் இசை எழுந்தது. அதைக் கேட்டவர்கள் அவரின் கைவிரல்கள் தட்டும் விதத்தைக் கண்டு அவர் அருகே சென்றனர். 

 

“அண்ணே.. உனக்கு இத மீட்ட தெரியுமா?” என அவினாஷ் கேட்டான். 

“சும்மா ஒரு நாள் விரல் போன போக்குல தட்டினேன் தம்பி அன்னிக்கி சத்தம் வந்துச்சி. சும்மா இருக்கறப்ப அப்பப்ப இதுல சத்தம் எழுப்பிட்டு இருப்பேன்.” என அவர் அசிரத்தையாகக் கூறியதும் நம்மவர்கள் அதிர்ச்சியும், ஆனந்தமும் ஒருசேர அவரை அவர்களின் மத்தியில் அமரவைத்து பேச ஆரம்பித்தனர். 

“அண்ணே.. எங்களுக்கு ஒரு உதவி நீங்க பண்ணனும்.”என கீதன் அவரின் கைப்பிடித்துக் கூறினான். 

“என்ன தம்பி நீங்க? உதவின்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க? என்ன செய்யணும் சொல்லுங்க செய்யறேன். இது நீங்க எல்லாம் போட்ட சாப்பாட்டுல வளர்ந்த உடம்பு. உங்களுக்கு உழைக்காம வேற யாருக்கு உழைக்க போறேன்?” என அவர் கூறியதும் இந்திரன் அதட்டினான்,

“என்ன அண்ணே நீ இப்டி பேசற? உன்னால இந்த கோவில் எவ்ளோ சுத்தமா இருக்கு இந்த ஊரும் எவ்ளோ நல்லா இருக்குன்னு எங்களுக்கு தெரியும். இதுவும் சாமி காரியந்தான். நீ ஒரு நாள் இந்த தூண தட்டணும்.”

“தட்டணுமா? புரியல தம்பி.” எனக் கூறித் தலையைச் சொறிந்தார். 

“அண்ணா.  இப்ப நீங்க தூண தட்டினதும் சத்தம் வந்துச்சில்ல.  அதநாங்க சொல்ற அன்னிக்கி நீங்க இங்க செய்யணும். செய்வீங்களா?”,என மிருணாளினி அவருக்கு புரியும் விதத்தில் கூறினாள். 

“செய்யறேன் தாயி..  எப்ப?”

“அத நாங்க அப்பறம் சொல்றோம்.  ஆனா நாங்க சொல்ற அன்னிக்கி நீங்க இந்த தூண்ல எல்லா சத்தமும் வரவைக்கணும். புரியுதுங்களா?”

“தெரிஞ்சவரை சத்தம் எழுப்பறேன் தாயி. ரொம்ப நேரமா எல்லாரும் படிச்சிட்டு இருக்கீங்க.  உங்களுக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வரவா?”, என வாஞ்சையுடன் கேட்டார். 

“வேணாம் அண்ணா. எங்களுக்கு யாரும் தொந்தரவு தாராம மட்டும் பாத்துக்கோங்க போதும்.” எனக் கூறி அவரை அனுப்பிவைத்தனர். 

“சரி இசைதூண் மீட்ட ஆள் கெடச்சாச்சி. ‘வைரவன் வாள் வீச’-ன்னா என்ன அர்த்தம்?” என அன்வர் கேட்டான். 

“அங்க போய் ஏதாவது கெடைக்குதா பாக்கலாம் அன்வர் அண்ணா. எல்லாரும் சாப்ட்டு வந்துடுங்க நான் இங்கயே வெயிட் பண்றேன்.” என நேரத்தைப் பார்த்துவிட்டுக் கூறினாள். 

“நீ மட்டும் இங்கிருந்து என்ன செய்யப்போற? வா வீட்டுக்கு போய் சாப்ட்டு வருவியாம்.” இந்திரன் கூறினான். 

“நான் வரல இந்திரண்ணா.  மறுபடியும் எங்கப்பா அம்மாகிட்ட என்னால விளக்கம் சொல்லிட்டு இருக்கமுடியாது. நான் இங்கயே இருக்கேன். தவிர காலைல இருந்து கிருபா வரவே இல்ல. நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கேன். நீங்க போயிட்டு எனக்கு எடுத்துட்டு வந்துடுங்க.” எனக் கூறினாள். 

அவளின் வருத்தம் அவர்களுக்கு நன்கு புரிந்ததினால், யாரும் வற்புறுத்தவில்லை. கீதன் அவளுடன் இருப்பதாகக் கூறி மற்றவர்களை அனுப்பிவைத்தான். 

“நீங்க போகலியா கீதன்?” அவன் மட்டும் திரும்பி வருவதைப் பார்த்துக் கேட்டாள். 

“என் ஆள விட்டுட்டு நான் எப்டி போகமுடியும்?” என கீதன் கேட்டுக் கண்ணடித்துச் சிரித்தான். 

“இந்த நெனைப்பு வச்சிக்க வேணாம்ன்னு நான் முன்னயே உங்ககிட்ட சொல்லிட்டேன் கீதன். என்னை எரிச்சல் படுத்தாதீங்க..”

“என் முயற்சி எப்பவும் நிக்காது மிரு.. உன் மனசுல வேற யாராவது இருந்தா விலகிப் போலாம் அதான் யாருமே இல்லயே.”

“விருப்பம் இல்லைன்னு சொன்னா மரியாதையா விலகிப் போறதும் நல்ல குணம்தான் கீதன். வற்புறுத்தி காதல் வராது.“ இழுத்துவைத்தப் பொறுமையுடன் கூறினாள். 

“நான் சும்மா தான் இருந்தேன். நீ தான் ஆரம்பிச்ச. இப்ப என்னையே குத்தம் சொன்னா எப்படி? நான் அன்னிக்கி அப்பறம் உன்னை ஏதாவது சொன்னேனா? நான் என் வேலைய பாக்கறேன் நீ உன் வேலைய பாரு.” எனக் கூறிவிட்டு எழுந்து வேறுபக்கம் சென்றான்.  இருவருக்கும் இடையே அரூபமாக இரண்டு உருவங்கள் நின்றுப் பார்த்துக் கொண்டிருந்தன.. 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்