170 views

அத்தியாயம் 29

ஹரீஷ் தங்கையின் கூந்தலைக் பற்றியிழுத்து வம்பு செய்து கொண்டு இருந்தான். 

 

அவனைக் கண்டிக்கும் நோக்கத்தில், 

“ஹரீஷ்! உங்களை அமைதியா இருக்க சொன்னா கேட்கவே மாட்டிங்களா?” என்று அவனது தந்தை பரதன் கேட்டார். 

 

அதில் திடுக்கிட்ட இருவரும், 

“சாரி அப்பா” என மன்னிப்புக் கேட்டு விட்டு, சமர்த்தாய் அமர்ந்து கொண்டனர். 

 

உணவு முடிந்ததும், சிறிது நேரம் இளந்தளிருடன் பேசி விட்டு, மிதுனா அங்கிருந்து கிளம்ப நினைத்தாள். 

 

“போய்ட்டு வர்றேன் இளா” அவளிடம் கூறிவிட்டு, மற்றவர்களிடமும் சொல்லி விட்டு தன் வீட்டிற்குக் கிளம்பி விட்டாள். 

 

கோவர்த்தனனும், இளந்தளிரும் இவர்களுடன் சுபாஷினியும், மைதிலியும் பேசிக் கொண்டு இருக்க, மற்ற பெண்மணிகள் அனைத்தையும் ஒதுங்க வைத்துக் கொண்டு இருந்தனர். 

 

தந்தையிடம் திட்டு வாங்கிய அண்ணனும், தங்கையும் இதற்கு மேல் சண்டையிட வேண்டாம் என்று முடிவெடுத்து, மைதிலி சுபாஷினியுடன் அமர்ந்திருந்தாள் என்றால், ஹரீஷோ நண்பனின் அருகில் சென்றமர்ந்தான். 

 

“டேய் இங்கயாவது அமைதியாக இருங்க. அப்பாவும் இப்போ திட்ட ஆரம்பிச்சுட்டாரு. அடுத்து அடி தான்னு நினைக்கிறேன். நீயும், மைதிலியும் இங்க அடி வாங்கிடாதீங்க. வீட்டுக்குப் போய் கூட அடியை வாங்கிக்கோங்க” என்று கோவர்த்தனன் இலவச ஆலோசனை வழங்கவும், அதைக் கேட்டு ஹரீஷ், மைதிலி தவிர மற்ற அனைவரும் சிரிக்கத் தொடங்கினர். 

 

வீடு சொந்தங்கள் நிறைந்து கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருப்பதைப் பார்த்தப் பெரியவர்கள் தங்கள் மன திருப்தியை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டனர். 

 

“கல்யாணத் தேதியைக் குறிச்சிடலாமா சிவசங்கரி?” என்று நாட்காட்டியில் தேதி பார்த்தனர். 

 

“அடுத்த மாதம் இருபத்தி எட்டாம் தேதியைப் பாருங்க அக்கா?” என்று ரோகிணி கூறவும்,

 

அந்த நாளில் நல்ல முகூர்த்தம் என்று இருந்தது.பிரத்தியேகமான நாளும் கூட. 

 

“இதே தேதியே முடிப்போம். நல்லா நாள், ரொம்பவே விசேஷ நாளும் கூட. எதுக்கும் ஐயரைப் பார்த்து ஒரு வார்த்தைக் கேட்ருவோம்” 

 

சுமதி அந்தத் தேதியில் கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று மற்ற இருவருடனும் கலந்து பேசி முடிவெடுத்து விட்டார். 

 

“சிஸ்டர் உங்களுக்கு என் மேல் கோபம் எதுவும் இல்லையே?” என்று எதிர்பாராமல் இளந்தளிரிடம் கேட்டான் ஹரீஷ். 

 

“ஏன் ப்ரதர்?” என்று அவன் பாணியிலேயே கேட்டாள் இளந்தளிர். 

 

கோவர்த்தனனும் மற்றவர்களும் இவர்களது பேச்சை மௌனமாகப் பார்த்துக் கொண்டு இருந்தனர். 

 

“இல்லை! எங்க ரெண்டு பேரையுமே போலீஸ்ல பிடிச்சுக் கொடுக்குற மாதிரி தான் பார்ப்பீங்க? இவனுக்கும், உங்களுக்கும் அண்டர்ஸ்டேண்டிங் ஆகி, மேரேஜ் ஆகப் போகுது.என் நிலைமை என்னன்னு தெரியலையே? அதுதான் கேட்டேன்” என்று பாவமாக கூறினான்.

 

அவனிடம் ஏற்கனவே இளந்தளிர் ஹரீஷை சிஸ்டர் என்றழைக்க சம்மதம் தெரிவித்து விட்டாள் என்பதைக் கோவர்த்தனன் கூறியிருந்தான். 

 

அது தெரிந்தாலுமே ஹரீஷ் இவ்வாறு கேட்பது இளந்தளிருக்கு ஆச்சரியத்தை வரவழைத்தது. 

 

“ஏற்கனவே உங்களை நான் சிஸ்டர்ன்னுக் கூப்பிட சொல்லி சொல்லிட்டேனே ஹரீஷ்! இப்போ ஏன் இப்படி கேட்கிறீங்க?” என்று அவனிடம் கேட்கவும் செய்தாள். 

 

“ஒரு தடவைக்கு இரண்டு தடவைக் கேட்டு கன்ஃபார்ம் பண்ணிக்கலாம்னு தான் சிஸ்டர்” என்று குறும்பாக கூறினான் ஹரீஷ். 

 

“இப்போ தெரியுது மைதிலி ஏன் உங்ககிட்ட கோபப்பட்டுட்டே இருக்கா-ன்னு!” காலை வாரி விடவும், 

 

“ஆமாம் அக்கா. இவன் பண்றதெல்லாம் பண்ணிட்டு, என்னைக் கோபப்படுத்தி,

நான் ரியாக்ட் பண்றப்போ கரெக்டா அப்பா, அம்மா கிட்ட மாட்டிப்போம்” என்று குமுறினாள் மைதிலி. 

 

“இதே வேலை தான் இவங்களுக்கு. அதனால் தான் ரோகிணி அம்மா இவங்களை ஒன்னாவே பேச விட மாட்டாங்க” என்று கோவர்த்தனனும் தகவல் சொன்னான். 

 

“ஆனா ப்ரதர், சிஸ்டர் ரிலேஷன்ஷிப் சூப்பரா இருக்கும். இந்த சண்டையெல்லாம் போடலன்னா தான் எதையோ மிஸ் பண்றா மாதிரி இருக்கும்” என்று இளந்தளிர் புன்னகையுடன் கூறினாள். 

 

🌸🌸🌸

 

அவர்கள் பேச்சும், கும்மாளமும் வீட்டை நிறைக்க, சிவசங்கரி இவர்களது அறைக்கு வந்தார். 

 

“எல்லாரும் இதே ட்ரஸ்ல இருந்தா ரொம்பவே கசகசன்னு இருக்கும். முதல்லப் போய் உடுப்பை மாத்திட்டு வாங்க”  

 

‘அதுவும் சரிதான்’ பேச்சு சுவாரஸ்யத்தில் உடை மாற்ற வேண்டும் என்பதை மறந்திருந்தவர்களுக்கு ஞாபகப்படுத்தினார். 

 

பெரிதாக நிறைய சொந்தங்களை அழைக்காத போதும், மன நிறைவுடன் நடந்தேறிய நிச்சயத்தைக் காண்கையிலும், நினைக்கையிலும் ஒருவர் மாற்றி மற்றொருவர் அவ்வப்போது சிலாகித்துப் பேசிக் கொண்டு தான் இருந்தனர். 

 

திருமணமும் இவ்வாறே நன்முறையில் நடக்க வேண்டும் என்ற பதட்டமும் கூட மனதின் ஓரத்தில் இருந்தது. அதையும் ஒரு கை பார்த்து விடலாம் என்று குடும்பத்தினர் தயாராகிக் கொண்டனர். 

 

சுடிதார் சகிதம் வந்தனர் இளந்தளிர், சுபாஷினி மற்றும் மைதிலி. 

 

வேட்டி, சட்டையை மாற்றி விட்டு, கண்ணுக்கு உறுத்தாத வகையில், ட்ராக் பேண்ட், பனியனை உடுத்தி வந்தனர் கோவர்த்தனன் மற்றும் ஹரீஷ். 

 

பழையபடி இருந்த அறையிலேயே உட்கார்ந்து கொண்டு கும்மாளமடித்துக் கொண்டிருந்தவர்களிடம், 

 

“நேரம் போனது தெரியாமல் பேசிக்கிட்டு இருக்கீங்களா? ஹாலுக்கு வாங்க எல்லாரும். ஹரீஷ் அப்பாவைப் கூப்பிட்டு வா. காஃபி, டீ, ஸ்நாக்ஸ் ரெடி பண்றோம்” என்ற ரோகிணி மீண்டும் சமையலறைக்குள் நுழைந்து கொண்டார். 

 

ஹரீஷூம் தந்தையை அழைத்து வந்து விட, இளந்தளிரை மட்டும் அடுப்படிக்குள் நுழையக் கூடாது என்று கூறிவிட்டு, இளையவர்கள் இருவரும் மாலைச் சிற்றுண்டியும், சூடான பானங்களையும் தயாரிப்பதற்கு உதவச் சென்றனர். 

 

“வேலையைப் பார்க்க விட மாட்டாங்க” என்று புலம்பியவாறே ஹாலில் அமர்ந்தாள் இளந்தளிர். 

 

அவளைப் பார்த்துப் புன்னகைத்தப் பரதன், 

“இன்னும் கொஞ்ச நாள் தான்மா. அதுக்கப்புறம் உனக்குப் பிடிச்சா மாதிரி எபஅபே வேணும்னாலும் சமையல் செய்யலாம்” என்றார். 

 

வந்ததிலிருந்து அவரிடம் அவ்வளவாகப் பேசியதில்லை, ஆனாலும் தேவையில்லாமல் எந்த விஷயத்திலும் தலையிடாமல், தன் உதவி தேவைப்படும் பொழுது மட்டும் வேலைகளில் தலையிட்ட பரதனின் மீது மதிப்பு இருந்தது இளந்தளிருக்கு. 

 

“சரிங்க” என்று இவளும் புன்னகைத்தாள். 

 

காஃபிக் கோப்பைகளும், தேநீர்க் கோப்பைகளும் உடன் சிற்றுண்டிச் தட்டுகளும் வழக்கம் போல காலை நிறைத்திருந்தது. 

 

தாங்கள் மூவரே அதிகம் என்று எவ்வளவு எடுத்துச் சொல்லியும், சுபாஷினியும், மைதிலியும் ஆளுக்கொரு வேலையைப் பார்த்து விட, துரித கதியில் அத்தனையும் தயாராகி விட்டது. 

 

பரதனிடம், “என்னங்க இருபத்தி எட்டாம் தேதி கல்யாணத்துக்கு ஏற்ற நாளா இருக்கு? நீங்க என்ன சொல்றீங்க?” என்று அவரது கையில் நாட்காட்டியைத் திணித்தார் ரோகிணி. 

 

“உங்களுக்கும் சம்மதம் தான?” 

 

மணமக்கள் இருவரையும் பார்த்துக் கேட்டார் சுமதி. 

 

“சம்மதம் தான்” என்று ஒப்புக் கொண்டனர். 

 

“நல்ல நாளா இருக்கே ரோகிணி.இதுலயே முடிச்சிடலாம்” என்று அவரும் அதை ஏற்றுக் கொண்டார். 

 

சிவசங்கரி, “உருளைக்கிழங்கு பஜ்ஜியும் போடலாம்ன்னு நினைக்கிறேன். நீங்கப் பேசிட்டு இருங்க. நான் போட்டு எடுத்துட்டு வர்றேன்” என்று உள்ளே சென்றார். 

 

உளுந்த வடை, பருப்பு வடை என்று அமர்க்களமாக மாலைச் சிற்றுண்டி அமைந்திருக்க, காஃபி மற்றும் இஞ்சி, ஏலக்காய் என்று தனித்தனியாக மணம் பரப்பிக் கொண்டிருந்த பானங்களையும் ரசித்து அருந்தினர். 

 

அவற்றின் சுவையா? அல்லது குடும்பமாக அமர்ந்து, வளவளத்துக் கொண்டே சுவைத்ததா? என்று நினைத்துக் கொண்டே எல்லாரும் மனம் நெகிழ ஒவ்வொன்றையும் சுகமாக ரசித்தனர். 

 

“ஹரீஷ்! கல்யாணத்துக்குத் தேவையானதை அவங்க கிட்ட கேட்டு லிஸ்ட் போட்டுக்கோ.நாம தான் வெளியே போய் வாங்கிட்டு வர்றதெல்லாம் செய்யனும்.மைதிலி! நீயும், சுபாஷினியும் கூட வாங்கம்மா” என்று அவர்களிடமும் கூறினார்.

 

ஆண், பெண் பேதம் பார்க்காமல், அவர்களையும் ஒவ்வொரு வேலையிலும் உடன் சேர்த்துக் கொள்ள நினைத்தார் பரதன். 

 

உருளைக்கிழங்கு பஜ்ஜிகளைப் பொறித்து எடுத்துக் கொண்டு வந்ததும், அனைவரும் உண்டு முடித்தனர். 

 

விடைபெறும் நேரத்தைப் பார்த்தவர்கள், 

ரோகிணி வீட்டாரின் உதவி நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பெரும் உதவியாக இருந்தது என்பது அங்கிருப்போர் அனைவருக்கும் தெரிந்தது. 

 

அதற்குத் தனியாக சுமதியும், சிவசங்கரியும் நன்றி தெரிவித்தனர். 

 

“மறுபடியும், மறுபடியும் சொல்ல வைக்காதீங்க அக்கா. நம்ம வீட்டு விசேஷத்தை நான் சேர்ந்து நடத்தாமல், வேற யாரை வர விடுவேன்” என்று செல்லமாக கடிந்து விட்டே சென்றனர். 

 

சுமதியும், “சிவா போய்ட்டு வர்றோம்மா.இளா, சுபா! போய்ட்டு வர்றோம்” 

 

 கோவர்த்தனனும், 

“போய்ட்டு வர்றேன்மா. ஹெல்த்தைப் பார்த்துக்கோ” என்று இளந்தளிரிடம் கூறிவிட்டு, 

 

சிவசங்கரி மற்றும் சுபாஷினியிடமும் விடை பெற்றுக் கொண்டான். 

 

அவர்கள் சென்றதும், இளந்தளிர் அலங்காரத்தை முழுமையாக கலைத்து விட்டு, முகத்தை நன்கு கழுவித் துடைத்து விட்டு வந்தாள். 

 

“இவங்க எல்லாரும் இங்கேயே இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்” என்று சுபாஷினி ஆசையும், ஆவலும் நிறைந்த குரலில் கூறினாள். 

 

அதைக் கேட்ட இளந்தளிரோ தங்கை அறியாமல் , மர்மப் புன்னகைப் புரிந்தாள். 

 

அவர்களுடன் சிவசங்கரி வந்து அமர்ந்து கொண்டு, 

“இளா! கோவர்த்தனனோட அக்கவுண்ட்டுக்கு இந்தப் பணத்தை அனுப்பி விட்ரு” என்று தன் அக்கவுண்ட்டில் இருந்தப் பணத்தை அவளுக்கு அனுப்பினார். 

 

நிச்சயச் செலவிற்கானப் பாதிப் பணம் தான் அது. 

 

இளந்தளிரும் அன்னைச் சொன்னது போல் அனுப்பியும் விட்டாள். 

 

🌸🌸🌸

 

“இங்க பாருங்க அம்மா. இப்போ தான் வீட்டுக்கு வந்தோம். அதுக்குள்ளப் பணத்தை அனுப்பி விட்ருக்காங்க” என்று சுமதியிடம் குறை கூறினான் கோவர்த்தனன். 

 

அதைப் பார்த்த சுமதி, 

“சிவா ஏற்கனவே என்கிட்ட இத்தனை மணிக்குப் பணத்தைப் போட்டு விட்ருவேன்னு சொல்லிட்டா கோவர்த்தனா. சொன்னதையும் செஞ்சிட்டா பாரு” என்று கூறினார். 

 

🌸🌸🌸

 

சமூக வலைதளங்களில் தங்களது நிச்சயதார்த்தப் புகைப்படங்களைப் போட வேண்டாம் என்று இருவருமே கலந்து பேசி இருந்ததால், அதை ரகசியமாக ரசித்துப் பார்த்துக் கொண்டனர் மணமக்கள். 

 

கல்யாணம் தேதிக் குறித்ததில் இருந்து, இரவு வரை தங்கையைக் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாள் அக்கா. 

 

தன்னைப் பிரிவது இவளை அந்தளவிற்குப் பாதிக்கிறதா? என்ற அழுத்தம் இளந்தளிருக்கும் தோன்றியது. 

 

அவளும், கோவர்த்தனனும் எடுத்த முடிவை இப்போதே சொல்லி விடலாமா? என்று கூட நினைத்தாள். ஆனால் அவனுடன் சேர்ந்து சொல்ல வேண்டும் என்பதாலேயே வாய்க்குப் பூட்டுப் போட்டுக் கொண்டாள். 

 

ஆனாலும், வார இறுதியில் உணவை வரவழைத்து உண்ண வேண்டும், குடும்பமாக இன்னும் அதிகமான நேரத்தைச் செலவழிக்க வேண்டும் என்றெல்லாம் திட்டம் வகுத்துக் கொண்டாள் சுபாஷினி. 

 

அதைச் சிவசங்கரியுமே புரிந்து கொண்டார்.

 

கல்யாணம் முடிந்ததும் வேறு வீட்டிற்குத் தமக்கைச் செல்லப் போகிறாள் என்று நினைத்துக் கொண்டு, இங்கிருக்கும் வரை அவளுடன் சந்தோஷமாக நேரத்தைச் செலவழிக்க வேண்டும்  என்பது சுபாஷினியின் எண்ணம்!! 

 

அதற்கான ஆயத்தங்களும் பின்வரும் நாட்களில் நடந்தேறியது. 

  • தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *