397 views

உயிர் நாடி நின்றுவிட்டது ரகுவரனுக்கு. நடந்த நிகழ்வை எண்ண முடியாமல் அவன் அப்படியே சிலையாக, பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் பதறினார்கள். மகிழினி தூக்கச் சென்ற பிள்ளையை காப்பாற்ற ஓடி தரையில் விழ, தம்பிகள் இருவரும் காரை பின் தொடர்ந்தார்கள். 

அதற்குள் மான்விழியை தூக்கிச் சென்ற கார் வேகம் எடுக்க, சில நொடிகள் தேவைப்பட்டது நடந்ததை உணர்ந்து கொள்ள. கத்திக் கூச்சலிட்டதால் அங்கிருந்த அனைவரும் கூடிவிட்டனர் இவர்களை சுற்றி. தன் பிள்ளையை நினைத்து மகிழினி கதறி அழ, மயங்கி சரிந்தார் சாந்தி.

யாருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. குடும்பத்தை அங்கேயே விட்ட ஆகாஷ் வேகமாக அந்த காரை பின் தொடர, சதீஷ் அக்காவிற்கு துணையாக நின்றான். பெரியவர் அழுகையில் குழந்தைகளும் அழ, 

“ரகு…” கதறலோடு கணவனை உசுப்பினாள்.

உடல் மரத்துப் போய் நிற்பவன் செவி சாய்க்காமல் மகள் சென்ற இடத்தின் மீது பார்வையை பதிக்க, “ரகு என் பொண்ண…” அதற்கு மேல் பேச முடியாமல் அவன் மார்பின் மீது சாய்ந்தாள்.

“ரகு என் பொண்ண யாரோ தூக்கிட்டு போறாங்கடா. கூட்டிட்டு வா ரகு… எனக்கு என்னோட பொண்ணு வேணும்.” கதறி அழுதும் உணர்வு பெறாத கணவனை உசுப்பினாள்.

வீராதி வீரன் என்று சொல்லிக் கொண்டவன் கண்முன் நடந்த நிகழ்வில் ஸ்தம்பித்து போனான். உடல் அசைவில் கருவிழிகள் மனைவியிடம் மாற, அவள் விழி மன்றாடியது கணவனிடம். 

“தங்கம்…” மகள் போன வழி நோக்கி கை நீட்டினான்.

கணவனின் செய்கையில் அழுகை இன்னும் அதிகமாக, அவனை உணர்வு பெற செய்தாள் அடித்து. மூளை வேகமாக கட்டளையிட்டது மகளைக் காப்பாற்றுமாறு. அதற்குள் தேடிச் சென்ற ஆகாஷ் வந்துவிட, மகள் தான் வந்து விட்டாள் என  ஓடினான் ரகுவரன். 

அவன் எதிர்பார்ப்பு பொய்யானது கலங்கிய விழிகளோடு ஆகாஷ் மட்டும் இறங்கியதில். ஓட்டம் பிடித்த கால்கள் அசையாமல் நிற்க, “எந்த பக்கம் போச்சுன்னு தெரியல. வண்டி நம்பர் மட்டும் தான் நோட் பண்ணி வச்சேன். இங்கதான் எங்கயாவது இருப்பானுங்க கண்டுபிடிச்சிடலாம்.” என்றான் தன்னுள் உதறும் மனதை கட்டுப்படுத்திக் கொண்டு. 

அழுகையை நிறுத்திய மகிழினி மகளை தேட முயற்சித்தாள். மற்ற பெண்கள் அனைவரும் வீட்டில் இருந்து கொள்ள, அவர்களின் ஆனந்தத்தை தேடி ஆண்கள் மூவரும் மூன்று திசைக்கு ஓடினார்கள். 

ரகுவரன் உணர்வுகளை படம் போட்டு காட்டுவதற்கு கூட தயாராக இல்லை அவன் உணர்வுகள். கல்லை உயிர் பெறச் செய்து காரை இயக்குவது போல் இருந்தது அவன் அசைவுகள். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தவர்கள் தனக்குத் தெரிந்த அத்தனை ஆட்களையும் தொடர்பு கொண்டார்கள். தனக்கும் மனைவிக்கும் இருக்கும் எதிரிகளை பிடித்து விட்டான் ஒரு மணி நேரத்தில். இரக்கம் பார்க்காமல் கொடூரமாக விசாரித்தான்.

மாமன் ஆகாஷ் தன் எதிரிகள் முதற்கொண்டு சுற்றி வளைத்தான். பொறுமைக்கும் பேச்சுக்கும் இடமில்லாமல் அவன் செயல் இருக்க, தெளிவான மனதோடு துருப்புச்சீட்டுக்காக காத்துக் கொண்டிருந்தான் சதீஷ்.

மகிழினி கோவிலில் இருக்கும் சிசிடிவி கேமராக்கள் அனைத்தையும் ஆராய்ந்தாள். தன் மகளை ஏற்றிச் சென்ற காரை கண்டுபிடித்தவள் அடுத்தடுத்து இருக்கும் அனைத்து தார் சாலைகளில் இருக்கும் கேமராக்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தாள்.

மான்விழி அவர்களை விட்டுப் பிரிந்து இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. இன்னும் எந்த தகவல்களும் அவர்களிடம் வரவில்லை. ரகுவரன் வெறிபிடித்து பார்க்கும் அனைவரையும் கடித்து வைத்தான். நிதானம் அவன் உயிரை விட்டு மொத்தமாக சிதறி விட, என் மகள் வேண்டும் என்ற ஒரே பிடிவாதம் மட்டுமே அவனிடம். தூக்கிச் சென்றவன் முகம் மட்டும் ரகுவரனின் நினைவில் ஆழமாக பதிந்து விட்டது.

அந்த முகத்தை தனக்குள் வெறித்தனமாக பதிய வைத்தவன் தேடிக் கொண்டிருக்கிறான் தன் கையால் மரணத்தை கொடுக்க. தன் நிலைமை இன்னும் சில மணி நேரங்களில் மோசமாக போகிறது என்பதை அறியாத அவன் மான்விழியை ஒரு இருட்டு அறைக்குள் அடைத்து வைத்தான்.

காரில் ஏற்றியதும் கதறி துடித்த மான்விழிக்கு மயக்க மருந்து செலுத்தி இருக்க, ஆழ்ந்த நித்திரையில் இருந்தது குழந்தை. கடத்தி வந்த நால்வரும் ஒருவன் முன்பு நிற்க, “நான் சொல்ற வரைக்கும் அந்த பொண்ணுக்கு மயக்கம் மருந்து கொடுத்துட்டே இருங்க. எங்கிட்ட வாலாட்ட நினைச்ச அவ கதறி துடிக்கிறதை பார்க்கணும். இனிமே நானே சொன்னாலும் என் பக்கம் வரக்கூடாது அவ.” கண்ணில் குரோதத்தோடு பேசினான் அன்று மகிழினி சாலையில் பார்த்த வாடகைத்தாய் ஏஜென்ட் நவநீதன்.

வாடகத்தாய் ஏஜென்ட் ஆக இருந்தவன் சில நாட்கள் சிறையில் இறந்து விட்டு வெளி வந்தான். வந்தவனின் செல்வாக்கு அதிகமானது பல பேரை காட்டிக் கொடுக்காததால். சட்டமும் காவல்துறையும் அந்த வழக்கை சாதாரணமாக கையாள, சட்டத்தில் இருக்கும் ஓட்டையை குடைந்து குளிர் காய ஆரம்பித்தார்கள் அனைவரும்.

நவநீதனின் பொறுப்பு அதிகமாகி அவன் செல்வாக்கும் விரிந்தது. தனக்கு கீழ் பல ஏஜென்ட்களை வைக்கும் அளவிற்கு வளர்ந்தான். நீரோடையாக சென்று கொண்டிருந்த வாழ்வில் மகிழினி எனும் புயல் மீண்டும் அடிக்க, இந்த முறை அவளை முந்தவிடாமல் முளையிலேயே கிள்ளி எறிய முடிவெடுத்தான். 

ரகுவரனிடம் அந்த வழக்கை எடுக்க மாட்டேன் என்றவள் மனசாட்சி தூங்கவிடாமல் கேள்வி கேட்டது. மகளா மனசாட்சியா என்ற போட்டிக்கு நடுவில் மனசாட்சி வெல்ல, அந்த வழக்கை ரகுவரன் அறியாமல் கையில் எடுத்து விட்டாள். நவநீதன் மீது புகார் கொடுத்தவள் விசாரிக்கவும் அவசரப்படுத்தினாள். 

காவல்துறையும் நவநீதன் கட்டுப்பாட்டில் இருக்க, விஷயம் அவன் காதிற்கு வந்தது. தைரியமாக மகிழினி முன்பு நின்றவன் இந்த வழக்கில் இருந்து ஒதுங்கிக் கொள்ளுமாறு மிரட்டினான். அதையும் பதிவு செய்து கொண்ட மகிழினி இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளிடம் ஒப்படைத்தாள்.

விசாரணை வளையம் அவனை சுற்றி வளைக்க, இதை எதிர்பார்த்தவன் அழகாக மீண்டும் வெளிவந்தான். வந்தவன் மகிழினி முன்பு தோரணையாக நிற்க, அவளும் சலிக்காமல் சிக்க வைக்கும் அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டாள்.

குடைச்சலுக்கு மேல் குடைச்சல் கொடுக்கும் மகிழினியை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடிப் போனான் நவநீதன். புத்திசாலித்தனமாக அவன் எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் செக் வைத்தாள். ராஜாவாக இருந்தவன் தடைக்கல்லை சந்திக்க,  குரோதத்தை வளர்த்துக் கொண்டான் மகிழினி மீது.

இரண்டு நாட்கள் முன்னர் கூட அவன் ஏற்படுத்திய வாடகை தாயை கண்டுபிடித்தவள் தக்க அறிவுரைகளைச் சொல்லி பின்வாங்க வைத்தாள். அதை அறிந்து கொண்ட நவநீதன் இனியும் விட்டு வைக்கக் கூடாது என்று மான்விழியை கடத்தி விட்டான்.

இவன் மீது சந்தேகம் கொள்ளாதவள் ஊர் முழுக்க சுற்றி அலைந்தாள். ஆகாஷ், சதீஷ் இருவரும் தனக்குத் தெரிந்த அத்தனை ஆட்களையும் தூது விட்டார்கள் மருமகளை தேடி. எங்கு தேடியும் கிடைக்காத மகளை எண்ணி கார் சீட்டில் கண்மூடியவன் விழிகள் கலங்கியது.

நினைவுகள் முதன்முதலாக சந்தித்த தருணம் முதல் கண்முன்னே தூக்கிச் சென்ற நொடி வரை வலியோடு நினைவு படுத்தியது. அதன் தாக்கத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் விழித்திறந்தவன் விழிகள் செந்தனலாக காட்சியளித்தது.

மகளை இன்னும் ஒரு மணி நேரத்தில் கண்டுபிடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு படையெடுத்தான். தன் அலுவலகம் வந்தவன் கடந்த இரு மாதங்களாக தான் கையாண்ட அனைத்து வழக்குகளையும் எடுத்தான். ஒன்றும் பெரிய அளவில் இல்லாமல் போக, யோசனை மனைவி பக்கம் திரும்பியது. 

இரண்டு மாதமாக அவள் எங்கெல்லாம் சென்றால் என்பதை நுணுக்கமாக ஆராய்ந்தான். நம்பகமான ஆட்களின் உதவியோடு மனைவியின் கைப்பேசி தொடர்புகளை ஆராய்ந்தான். அவன் நேரம் பார்த்து தான் சிக்கினான் நவநீதன். 

மகிழினியை தொடர்பு கொண்டவன், “என் பக்கம் வராதன்னு எத்தனை தடவை சொன்னேன். இப்ப பாரு உன் பொண்ணு என் கையில இருக்கா. இத்தோட என் வழிக்கு வர மாட்டன்னு சரண் அடைஞ்சா உன் பொண்ணு உன் வீட்டுக்கு பத்திரமா வருவா. இல்லையா இங்க இருக்க நாலு பேருக்கும் அவதான் இன்னைக்கு இரை.” என்றவன் மகிழினி கத்துவதை கூட காதில் வாங்கிக் கொள்ளாமல் வைத்து விட்டான். கேட்டுக் கொண்டிருந்த ரகுவரன் பற்கள் வெடித்தது. மகள் எங்கே இருக்கிறாள் என்பதை அறிந்து கொண்ட மகிழினி அவனை சுற்றி வளைக்கும் வேளையில் இறங்கினாள். 

ஆகாஷை அழைத்தவன், “தங்கம் எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சிட்டேன். நான் சொல்ற இடத்துக்கு சதீஷோட வந்து சேரு.” போதுமான தகவல்களை சொல்லியவன் கிளம்பினான்.

எப்படி கண்டுபிடித்தானோ அதை அவன் மட்டுமே அறிவான். ஆகாஷ் வருவதற்கு முன்னர் நவநீதன் முன்பு நின்றான். மகிழினியை நன்கு அறிந்தவன் அவளின் கணவனையும் அறிவான் ஆயிற்றே! 

“என்னடா உன் பொண்டாட்டி கால்ல விழ சொல்லி அனுப்பி விட்டாளா. அவ கிட்ட எத்தனையோ தடவை சொன்னேன் என் பக்கம் வராதன்னு. கேட்க மாட்டன்னு அடம் பிடிச்சா. அதனால தான் பல வருஷமா நிறுத்தி வச்சிருந்த தொழில எடுக்க வேண்டியதா போச்சு.” 

“என் பொண்ணு எங்க?”

“உன் பொண்ண கடத்திட்டு வந்தாங்களே அந்த நாலு பசங்க கூட பத்திரமா இருக்கா.”

“எங்கடா இருக்கா என் பொண்ணு?”

“டேய் என்ன…” என்றவன் தரையில் விழுந்தான். இரக்கம் என்ற வார்த்தையை அகராதியில் இருந்து எடுத்து விட்டான். இறந்த மிருகத்தின் மாமிசத்தை தனி ஒரு ஆளாக கிழித்து தின்னும் சிங்கம் போல் வேட்டையாடினான் அவன் உடலை.

தாக்குதல் நடத்த முடியாமல் நவநீதன் கத்த, அவன் சத்தம் கேட்டு அடியாட்கள் நால்வர் வந்தனர். ரகுவரனின் கை இரண்டையும் பிடித்து தனியாக பிரிக்க முயற்சிக்க, அந்த நால்வரையும் சேர்த்து கிழிக்க ஆரம்பித்தான் நார் நாராக.

யாருக்கும் அடங்காத ஆழி சீற்றம்போல் அடித்து துவைத்தான் தன் வெறி அடங்கும் வரை. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள போராடிய நவநீதன், “டேய் என்னை ஏதாச்சும் பண்ண உன் பொண்ணு உயிரோட இருக்க மாட்டா.”  என மிரட்ட, அவன் வாயை ஷூ கால் ஒன்று பதம் பார்த்தது.

ரகுவரனின் கைகளுக்கு ஓய்வு கொடுக்கவே அங்கு வந்து சேர்ந்தான் ஆகாஷ். யார் நவநீதன் என்றெல்லாம் விசாரிக்காமல் இருந்த ஐவரையும் புரட்டி எடுத்தான். என்றும் ஆகாஷை அடக்கும் சதீஷ் கூட இந்த முறை தான் யார் என்பதை காட்டி விட்டான்.

அடித்து ஓய்ந்தவர்கள் மான்விழியை கேட்க, “என் மேல கைய வச்சிட்டீங்கல…. இனி உங்க வீட்டு பொண்ணு உங்களுக்கு இல்ல. ஏற்கனவே அவளை சிதைச்சு சின்னா பின்னம் ஆக்க சொல்லிட்டேன். பொணமா தான் உங்க கிட்ட கொடுப்பேன்.” என்றவன் மூளை அங்கிருக்கும் சுவற்றில் எக்ஸ்பிரஸ் வேகத்தில் முட்டி கலங்கியது.

ரகுவரன் அடித்த அடியில் ஆகாஷ், சதீஷ் மட்டுமில்லாமல் அடி வாங்கிய நால்வரும் அரண்டு விட்டனர். வெறி அடங்காதவன் கோபம் தீரும் வரை சுவற்றில் முட்டிக் கொண்டிருக்க, உயிர் இருந்தும் பிணம் ஆனான் நவநீதன்.

ரகுவரனின் செயலில் ஸ்தம்பித்தனர் அங்கிருந்து அனைவரும். ஆகாஷ் கூட அஞ்சு நடுங்கினான் தன் முன் நிற்கும் ரகுவரனை பார்க்க முடியாமல். பயத்தில் எச்சிலை விழுங்கிய அடியாட்கள் நவநீதனை திரும்பிப் பார்க்க, தலையில் ரத்தம் வழிந்தபடி அகோரமாக படுத்து கிடந்தான்.

“என்ன இப்படி பண்ணிட்டீங்க? இப்ப குட்டிமா எங்க இருக்கான்னு எப்படி கண்டு பிடிக்கிறது?” என்றவனுக்கு பதில் சொல்லாதவன் மீதமிருந்த நால்வரையும் அக்னிப் பிழம்பாக பார்க்க,

“சத்தியமா எங்களுக்கு தெரியாது சார்.” என்றார்கள் முந்திக்கொண்டு.

“தெரியாதுனா என்னடா அர்த்தம்… அவன் அடியாட்கள் தான நீங்க எல்லாரும். எங்களுக்கு எங்க குட்டிமா வேணும். மரியாதையா உண்மைய சொல்லிட்டீங்கன்னா உங்க உயிர் மிஞ்சும்.” ஆகாஷ்.

“சாமி சத்தியமா உங்க பொண்ணு எங்க இருக்குன்னு எங்க நாலு பேருக்கும் தெரியாது சார். எங்க கூட மணிகண்டன்’னு ஒருத்தன் இருப்பான், அவனை தான் இந்த வேலைய முடிக்க சொல்லி அனுப்புனாரு. அதைத் தவிர வேற எதுவும் எங்களுக்கு தெரியாது.” 

“இவனுங்க சரிப்பட்டு வர மாட்டானுங்க.” என்றவாறு ஆகாஷ் சட்டை கலரை மடக்கி விட, நால்வரும் பதறி காலில் விழுந்தார்கள்.

விடாமல் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்க, பாவம் பார்க்காமல் ஆகாஷ் அவர்களை வெளுத்து விட்டான். நால்வரின் சத்தம் காதை கழித்தாலும் தன் பார்வையை மாற்றிக் கொள்ளாமல் நின்றிருந்தான் ரகுவரன். 

உயிரை மட்டும் மிச்சம் வைத்த ஆகாஷ், “நேரமாகுது சொல்லுங்கடா என் குட்டிமா என்ன கஷ்டப்பட்டுட்டு இருக்காளோ…”  அடித்த இடத்தில் அடித்து காயப்படுத்தினான்.

நால்வரில் ஒருவன் மயங்கி சரிந்து விட்டான் ஆகாஷ் அடித்ததில். “பாஸ் இவ்ளோ நடந்ததுக்கப்புறமும் இவனுங்க மறைக்க மாட்டானுங்க. உண்மையாவே இவனுங்களுக்கு தெரியலன்னு நினைக்கிறேன்.” என்றிட, ஆகாஷ் அக்காவின் கணவனை பார்த்தான்.

அவன் தன் நிலையை மாற்றிக் கொள்ளாமல், “அவன் நம்பருக்கு கால் பண்ணி பாருங்க.” என்றான்.

மீதமிருந்த அடியாட்களில் ஒருவனிடம் மணிகண்டனை அழைக்கச் சொல்ல, “போன் சுவிட்ச் ஆப்னு வருது சார்.” என பயந்து பதில் அளித்தான்.

ரகுவரன் சபதம் எடுத்த ஒரு மணி நேரமும் முடிந்திருக்க மகளின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியாமல் தனக்குள் குரோதத்தை வளர்த்துக் கொண்டான். அவனின் தொலைபேசி எண்ணை தனக்குத் தெரிந்த ஆட்களிடம் கொடுத்து இருப்பிடத்தை கண்டு கொண்டான்.

“கடைசியா இங்கதான் சுவிட்ச் ஆஃப் ஆகி இருக்கு. அவன் தங்கத்தை இங்கதான் வச்சிருக்கணும். கூட யார் யார் இருக்காங்கன்னு எந்த தகவலும் தெரியல.” 

“எனக்கு தெரிஞ்ச ஆளுங்களை வச்சு அந்த இடத்தை ரவுண்டு அப் பண்ண சொல்றேன்.”

“அவசரப்படாத நம்ம அங்க போற வரைக்கும் அவனுக்கு எந்த சந்தேகமும் வரக்கூடாது.”

“அவசரப்படாம எப்படி இருக்க முடியும். இந்த விஷயத்துல பொறுமை காக்குற அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை.”

“பொறுமையா தான் இருந்தாகணும் என் பொண்ணு அவன் கிட்ட இருக்கா.”

நவநீதனைப் போல் மணிகண்டனை நெருங்க தடுமாறினான் ரகுவரன். காரணம் செல்ல மகள் அவனிடம் இருப்பதால்.

அந்த இடத்தைப் பற்றி விசாரிக்க, நவநீதனுக்கு சொந்தமான வீடு என்பதை கண்டுகொண்டான். மகள் சம்பந்தப்பட்டிருப்பதால் இதுவரை அவனுக்கு உதவி செய்த அனைவரையும் அழைத்து மகள் கிடைத்துவிட்டதாக செய்தி உரைத்தான். அவன் நடவடிக்கைகளை பார்த்த ஆண்கள் இருவரும் குழப்பமாக,

“இந்த விஷயம் நமக்குள்ள முடியனும். போலீஸ்ன்னு மட்டும் இல்ல வேற யாருக்கு தெரிஞ்சாலும் நாளைக்கு இதனால திரும்பவும் பிரச்சனை வரலாம். இதுதான் முதலும் கடைசியுமா இருக்கணும் என் பொண்ணு விஷயத்துல.” 

மகளைக் காப்பாற்றுவது மட்டுமில்லாமல் அதன் பின்னான வாழ்க்கையிலும் அவளுக்கு எந்த தீங்கும் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவன் யார் உதவியையும் நாடாமல் அங்கு விரைந்தான். 

அந்த வீட்டைச் சுற்றி ஆள் நடமாட்டம் மிகவும் குறைவாக இருந்தது. உள்ளே எத்தனை நபர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியாததால், “ஆகாஷ் முதல்ல நீ உள்ள போ. எந்த காரணத்தைக் கொண்டும் உன் கூட நான் இருக்கிறது அவனுக்கு தெரியவே கூடாது. எத்தனை பேர் இருக்காங்கன்னு மட்டும் எனக்கு தகவல் சொல்லிடு. முடிஞ்ச வரைக்கும் அவன் கிட்ட பேச்சுவார்த்தை மட்டும் நடத்து செயல்ல இறங்காத. 

தங்கம் அங்க தான் இருக்காளான்னு உறுதிப்படுத்து. தங்கத்துக்கு எந்த விஷயமும் காதுல விழுந்திடக்கூடாது. கண்டிப்பா உன்ன பார்த்தா ஏதாச்சும் ஸ்டெப் எடுக்கும். எப்படியாவது நான் இங்க இருக்க விஷயத்தை  சொல்லிடு, அமைதியாகிடும்.” தன் திட்டத்தை முழுவதுமாக விவரித்தவன் அனுப்பி வைத்தான்.

கடத்தல் விஷயம் என்பதால் அதிக நபர்கள் அங்கு இல்லை. மான்குட்டியை கடத்திச் சென்ற நால்வர் மட்டுமே அங்கு இருந்தார்கள். ஆகாஷை பார்த்ததும் அடுத்து விரட்ட எண்ணியவர்கள் அதை செயல்படுத்த, “பிரச்சனை வேணாம் ப்ளீஸ். என் குட்டிமாவ  கொடுத்துடுங்க. உங்க மேல எந்த கம்ப்ளைன்ட்டும் கொடுக்க மாட்டேன்.” என்று பேச்சு கொடுத்துக்கொண்டே மான்குட்டியை தேடினான்.

“என்னடா வேவு பார்க்க வந்திருக்கியா.” என்றவாறு அவன் முன்பு நின்றான் மணிகண்டன்.

பார்த்ததும் கண்டு கொண்டவன் தன் கோபத்தை உள்ளுக்குள் அடக்கி வைத்தான் மருமகளை காப்பாற்றுவதற்காக. அதற்குள் மணிகண்டன் ஆகாஷை அடிக்க வேறு செய்து விட்டான். திருப்பி தாக்க முடியாமல் அடங்கிப் போனவன் மருமகளை கேட்டான் கெஞ்சி.

இதையெல்லாம்  ஊடலை (ப்ளூடூத்) வழியாக கேட்டுக் கொண்டிருந்தவன், “தங்கத்தை பார்த்திட்டியா?” கேட்டான்.

எதிரியிடம் பேசுவது போல், “இல்ல இல்ல உங்க மேல எந்த ஆக்ஷனும் எடுக்கல. என் குட்டிமாவ மட்டும் கொடுத்துடுங்க.” என்றான்.

புரிந்து கொண்ட ரகு மொத்தம் எத்தனை நபர்கள் என்று கேட்க, “உங்க நாலு பேரையும் கெஞ்சி கேட்டுக்குறேன் ப்ளீஸ்.” என்றான்.

“வீட்ல இன்னும் வேற யாராவது இருக்காங்களான்னு நல்லா பாரு. முக்கியமா தங்கத்தை கண்டுபிடி.” நெஞ்சு படபடக்க காத்துக் கொண்டிருந்தான் ஆகாஷின் பதிலுக்காக.

அவர்கள் ஓரளவிற்கு நம்பும்படி தொடர்ந்து கெஞ்சியவன் தன் மருமகளுக்காக மணிகண்டன் காலிலும் விழுந்தான். தன் காலில் ஒருவன் விழுந்ததும் கொக்களித்து சிரித்தவன், “நீயும் உன் அக்காவும் என்னென்னமோ வேலை பார்த்ததா சார் சொன்னாரு. என்னடா பொசுக்குன்னு கால்ல வந்து விழுற. எங்க சார் நினைச்ச காரியம் இவ்ளோ சீக்கிரம் முடியும்னு நான் நினைக்கவே இல்லை. அந்த குட்டி மேல தான் மயக்கத்துல படுத்திருக்கு.” என்ற வார்த்தையில் போன உயிர் திரும்ப வந்தது ரகுவரனிடம்.

உள்ளுக்குள் கண்ணீர் வடித்து தன் ஆனந்தத்தை கொண்டாடிய ஆகாஷ், “நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறோம் தயவு செஞ்சு குழந்தைய விட்டுடுங்க.” கெஞ்சினான்.

“என்னடா குழந்தையா? அந்த குட்டிய பார்த்தா உனக்கு குழந்தை மாதிரியா தெரியுது. இன்னும் ரெண்டு மூணு வருஷம் போனா செம சிக்கா இருக்கும் போல. தூக்கிட்டு வரும்போது நல்லா கொழு கொழுன்னு இருந்துச்சு.” 

ரகுவரன் சொன்னதால் தன் உணர்வுகளை கட்டுப்படுத்திய ஆகாஷ் கண் மூட, அதிர்ந்து விழித்திறந்தான் மணிகண்டன் அலறும் ஓசையில். தகப்பன் தன் பிள்ளை பாதுகாப்பிற்காக பதுங்கி நிற்க, தான் கேட்க வர்ணிக்கும் வார்த்தையில் அனைத்து சாதுரியங்களும் தளர்ந்து விட்டது. 

என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவோடு உள்ளே வந்தவன் மனதில் பதிந்த மணிகண்டனை பார்த்து இன்னும் வெறியாகி தன்னால் முடிந்தவரை ரணமாக்கினான் உடலை. விழித்திரையில் மகளை தூக்கிச் சென்ற கள்வனின் முகம் மட்டுமே இருக்க, அந்த முகத்தை சிதைத்தான் கையில் இருக்கும் காப்பை கழட்டி குத்தி. 

அவனை சுற்றி இருந்த மூன்று அடியாட்கள் ரகுவரனை தாக்க வர, துணையாக நின்ற ஆகாஷ் கட்டுப்படுத்தி வைத்திருந்த அனைத்து கோபத்தையும் வெளி காட்டினான். சதீஷ் ரகுவரன் அடித்துக் கொண்டிருக்கும் பொழுதே மணிகண்டனின் வாயில் எட்டி உதைத்தான். தன் மருமகளை கேலி செய்த வாயில் இருந்து இரண்டு பல் கழண்டு விழுந்ததும் தான் அடிப்பதை நிறுத்தினான்.

“இந்த கை தானடா என் பொண்ண தொட்டுச்சு.” பிடிப்பட்ட இரண்டு கையையும் தன்னால் முடிந்தவரை வளைத்தவன், “என்னை மீறி என் தங்கத்து கிட்ட எதுவும் நெருங்காதுன்னு மார் தட்டிட்டு இருந்தனேடா…. அதை என் கண்ணு முன்னாடியே பொய்யாக்கிட்டியே.” என்று உடைத்தான்.

அலறி துடித்த மணிகண்டனின் ஓசையில் அடியாட்கள் மூவருக்கும் உள்ளுக்குள் கிளி பறந்தது. “என் பொண்ணு என்னை எத்தனை தடவை ஹீரோன்னு சொல்லி இருக்கா தெரியுமாடா… பெத்த பிள்ளைய கூட காப்பாத்த முடியாது கையாளாகாதவனா நிக்க வச்சுட்டியேடா. நாளைக்கு என் பொண்ணு எதுக்குப்பா நீங்க என்னை காப்பாத்தலன்னு கேட்டா என்னடா பதில் சொல்லுவேன்? 

என் தங்கத்துக்கு நான் நல்ல அப்பா’னு இதுவரைக்கும் சந்தோஷப்பட்டுட்டு இருந்தேன். அதை எல்லாம் நாசம் ஆகிட்டியே… என் பொண்ண தூக்குற அளவுக்கு உனக்கு எங்க இருந்துடா தைரியம் வந்துச்சு? வாழ்க்கை முழுக்க என் பொண்ண தொட்ட நீ நிம்மதியா வாழவே கூடாதுடா…” கைகளை உடைத்தது போல் வலது காலையும் உடைத்தான் ஈவு இரக்கம் இல்லாமல்.

வலியில் அலறி துடிக்கும் மணிகண்டனை சிறிதும் கண்டு கொள்ளாதவன் படிக்கட்டில் அமர்ந்தான் மூச்சு வாங்க. ரகுவரனின் நிலை உணர்ந்தவர்கள் எதையும் பேசாமல் மருமகளை காணச் செல்ல, நகரவில்லை அவன். நடக்கும் கலவரங்களை அறியாத மான்குட்டி ஆழ்ந்த நித்திரையில் இருந்தது. 

மருமகளை பார்த்ததும் ஆகாஷின் கண்ணில் இருந்து நிற்காமல் உவர் நீர் வழிந்து கொண்டே இருக்க, அருகில் செல்லும் ஒரு நொடியில் ஈரக்குலை நடுங்கி விட்டது. நிதானமாக கையாண்ட சதீஷ் மருமகளின் உயிர் மூச்சை சோதித்து நிம்மதி அடைந்தான். சதீஷின் செய்கையில் பதறிய ஆகாஷ் உடனே மருமகளை தன் மடிமீது சாய்த்துக் கொண்டு,

“குட்டிமா உனக்கு என்னடா எந்திரி, மாமாவ பாரு.” என்றான் பதட்டத்தோடு.

“பாஸ் குட்டிமா நல்லா இருக்கா. மயக்க மருந்து கொடுத்திருக்கிறதா சொன்னாங்கல அதான் எழுந்துக்காம படுத்திருக்கு. இதுக்கு மேலயும் விட்டு வச்சிருக்கறது நல்லது இல்ல பாஸ். தூங்குங்க ஹாஸ்பிடல் போகலாம்.”  காலை எப்படி எல்லாம் கனவு கண்டானோ அதற்கு மாறாக அள்ளிச் சென்றான்.

ஆகாஷின் அழுகையை உணர்ந்த ரகுவரன், “வெளிய ஆம்புலன்ஸ் நிக்குது தங்கத்தை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க.” என்றான் மகளை பார்க்காது.

அவன் நடவடிக்கைகளை கவனிக்கும் பொறுமை இருவருக்கும் இல்லாததால் உடனே விரைந்தார்கள் மருத்துவமனைக்கு. அவர்கள் அங்கிருந்து கிளம்பவும் மகிழினி வரவும் சரியாக இருந்தது. வந்தவள் மகளைத் தேடி உள்ளே வர, கணவன் இருப்பதைக் கண்டு அதிர்ந்தாள். அங்கிருக்கும் கோலங்களை வைத்து நடந்ததை உறுதிப்படுத்திக் கொண்டு,

“மானு எங்க?” அன்னையாக பதறினாள்.

மனைவியை பார்க்க விரும்பாதவன் அங்கிருந்து புறப்பட்டான் மருத்துவமனைக்கு. பின்னால் கேட்டுக்கொண்டே ஓடியவளும் மருத்துவமனையில் நிற்க, மகளுக்குத்தான் என்னவோ ஆகிவிட்டது என்று அலறினாள். வரும் வழியில் விஷயம் அனைவருக்கும் பகிரப்பட்டதால் அவளை தாங்கினார்கள் குடும்ப உறுப்பினர்கள். 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
17
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்