Loading

சில நொடிகள் கணவனின் முகத்தை லேசான ஏமாற்றத்துடன் பார்த்த வான்மதி, சட்டென தலையை குனிந்து கொள்ள, ஆரவ் அவளை திரும்பியும் பாராமல் வீட்டை அடைந்தான்.

விக்ராந்த் வீட்டில் இருந்து வெளியான நால்வரில், சுதாகர் அவனின் சித்தப்பா, சித்தியை முறைத்து விட்டு கிளம்பி விட, லயாவோ, “என்னடா இவனை நம்பி வந்ததுக்கு, வீட்ல கூட டிராப் பண்ணாம குடும்பமா கிளம்பிட்டான்…” என்று சாலையைப் பார்த்து புலம்பினாள். 

கவின் தான், “வந்ததுக்கு எதிரி வீட்ல கோர்த்து விட்டுட்டு போய்ட்டான்.” என்று மூவரும் கால் வந்த போக்கில் சாலையில் நடக்க, தன்விக், “எனக்கு பிரச்சனை இல்லப்பா, பிக் அப் பண்றதுக்காவது ஒரு பொண்டாட்டி இருக்கா.” என்று நமுட்டு சிரிப்பு சிரிக்க,

லயா, “பாத்துடா ஸ்பீட் ப்ரேக்கர்ல மோதி, பிரேக் அப் ஆகிட போகுது…” என வாயை பொத்தி நகைக்க,

“ம்ம்க்கும். ஏற்கனவே அப்படி தான் இருக்கு…” என மறுபுறம் திரும்பி முணுமுணுத்தான்.

“அவளை தப்பு சொல்ல ஒன்னும் இல்ல. நீ தான், அவள்கிட்ட மனசு விட்டு பேசணும்… என்ன தான் திடீர் மேரேஜ்ன்னாலும், உனக்கு அவளை பிடிச்சு இருக்கு தான.” என்று லயா அவனுக்கு அறிவுரை கூற,

அவனோ, “அவள் கூட குடும்பம் நடத்தாம இருக்குறது கூட எனக்கு பெருசா தெரியலடி. ஆனா, நீ எல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ற பார்த்தியா? அதை தான் தாங்க முடியல” என நெஞ்சில் கை வைத்து சிவாஜி கணேஷன் ரீதியில் நடிக்க, “டேய்… உன்ன கொன்றுவேன்” என்று வெறியானவள், தன்விக்கை சரமாரியாக அடிக்க, கவின் தான் கடும் அமைதியுடன் வந்தான்.

தன்விக் அவளைத் தடுத்து, “நீ ஏண்டா அமைதியா வர? நீயும் உன் பங்குக்கு ஏதாவது சொல்லு” என்றிட,

அதில் மென்முறுவல் கொடுத்தவன், “உன் மனசுக்கு சரின்னு படுறதை பண்ணுடா. ஏற்கனவே ஒருத்தனை இப்படி ஏத்தி விட்டு, அவன் வாழ்க்கையை கேள்விக்குறியாக்குனது போதும். உனக்கு எப்ப லைஃப் ஸ்டார்ட் பண்ணனும்னு தோணுதோ அப்போ பண்ணு. ஆனா, அதுவரை உன் லவ்வை கண்டிப்பா எக்ஸ்போஸ் பண்ணிடு. லைஃப் எப்படி மாறும்ன்னே சொல்ல முடியாது…” என்றவனின் எண்ணம் முழுக்க ஆரவின் வாழ்வே வந்து உறுத்த, மூவரும் கலங்கிய முகத்துடன் மௌனமாகி விட்டனர்.

அந்நேரம், தன்விக் அனுப்பிய லொகேஷனை தொடர்ந்து, தன் ஸ்கூட்டியில் வந்த மோனிஷா, அவர்கள் முன் நிறுத்தி, “என்ன மாமா? எதுவும் பிரச்சனையா? இது அந்த விக்ராந்த் வீட்டு சைட் தான. இங்க ஏன் வந்தீங்க?” என்று அடுக்கடுக்காய் கேள்வி கேட்க,

“சொல்றேன். சொல்றேன். முதல்ல என்ன வீட்ல டிராப் பண்ணு…” என்று அவள் பின்னே ஏறி அமர்ந்து கொண்டவன், “டேய் ரெண்டு பேரும் இப்படியே நடக்காம, ஆட்டோ பிடிச்சு வீடு போய் சேருங்க.” என்று விட்டு மோனிஷாவுடன் செல்ல, செல்லும் வழியிலேயே நடந்ததை ஒப்பித்திருந்தான்.

“அவனை சும்மாவா விட்டுட்டு வந்தீங்க? அப்படியே போட்டு தள்ளிருக்க வேண்டியது தான. அவனை நினைச்சாலே இரிடேட்டிங்கா இருக்கு மாமா. என்ன மனுஷனோ?” என சரமாரியாகத் திட்டியவள், வீடு வந்ததில் வண்டியை நிறுத்த,

அதில் இருந்து இறங்கியவன், ஹேண்ட் பாரில் கையை வைத்து, “ம்ம். அவன்லாம் மனுஷனே கிடையாது. ஆனா, அதே நேரம், கல்யாணம்ன்னாலே அந்த மாதிரி தான் இருக்கும்ன்னு நினைக்கிறது முட்டாள்தனம். என்னை அவன் கூட கம்பேர் பண்ற அளவு, நான் உங்கிட்ட எந்த விதத்துல தப்பா நடந்தேன் மோனி. என்னை யாருன்னே உனக்கு தெரியலைன்னா பரவாயில்ல. இத்தனை வருஷம் என்கூட இருந்தும் கூட, என்னை எப்படி அப்படி நினைச்ச? ஆம் ஐ அ ரேப்பிஸ்ட்?” என தாங்கலுடன் கேட்டவனின் முகத்தில் இத்தனை வருத்தத்தையும் வேதனையையும் அவள் கண்டதே இல்லை.

அதுவே அவளை வெகுவாய் தாக்க, முணுக்கென கண்ணில் நீர் தேங்க, அவனையே அதிர்வாய் பார்த்திருந்தாள்.

“கேப் புக் பண்ணவா?” இத்தோடு நான்கு முறை கேட்டு விட்டான் கவின். அவளோ, “உனக்கு போகணும்ன்னா நீ கேப் பிடிச்சு போ. நான் நடந்து போய்க்கிறேன்.” என்று விட, “ப்ச், இப்பவே இருட்டிருச்சு லயா? விளையாடாத…” என்றான் அதட்டலாக.

“ஆமா, நீ ஃபுட்பால் பாரு எத்தி விளையாட…!” என அவள் காய, அதில் சற்றே கடுப்பானவன்,

“ஆமாடி ஃபுட் பால் மாதிரி தான என்னை அலைக்கழிக்கிற! என்னடி பிரச்சனை உனக்கு? லவ் பண்றன்னா பண்றேன்னு சொல்லு. இல்லன்னா இல்லன்னு சொல்லு, இவ்ளோ நாள் சொன்ன மாதிரி. அதை விட்டுட்டு, நீயும் நிம்மதியா இல்லாம என் நிம்மதியையும் கெடுக்காத…” என்று கோபத்தில் வார்த்தைகளை கொட்ட, அவள் தான் ஏனென்று அறியாத வலியுடன் நீர் திரள நின்றிருந்தாள்.

அப்போது தான், நண்பர்களை அப்படியே விட்டுவிட்டு வந்துவிட்டோம் என்றே உணர்ந்த ஆரவ், உடனடியாக மீண்டும் அங்கு செல்ல, போகும் வழியிலேயே சாலை ஓரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்த கவினையும் லயாவையும் கண்டு காரை ஓரம் கட்டினான்.

“ஏன் ரெண்டு பேரும், நடந்து போயிட்டு இருக்கீங்க?” என புருவம் சுருக்கி கார் கண்ணாடியை கீழே இறக்கி கேட்க, அவனை எதிர்பாராமல் திகைத்த கவின் “அது… சும்மா தான்…” என்று திணற, லயா கவினையே கண்ணீரை அடக்கிக்கொண்டு வெறித்து விட்டு, ஆரவின் அருகில் சென்று அமர்ந்தாள்.

இதுவரை அவள் அழுது என்ன, லேசாக முகம் சுருக்கி கூட அவன் பார்த்ததில்லை. எப்போதும் விளையாட்டும் திமிர் பேச்சும் தான் அவளிடம் வலம் வரும். இன்றோ செய்வதறியாமல் அப்படியே திகைத்திருந்த கவினிடம், “சார் எப்படி, கார்ல ஏறுறீங்களா? இல்ல… பாதயாத்திரை போக போறீங்களா?” எனக் கேட்டான் கேலியுடன்.

அதில் தான், இருவரையும் பாராமல், அவன் பின்னால் சென்று அமர்ந்திட, கவினின் வீட்டிற்கு செல்லும் வரையிலும் அங்கு பலத்த அமைதி தான்.

“முதல்ல, அவளை வீட்ல விடு” என்று கவின் முணுமுணுப்பாக கூற,

லயா “எனக்காக யாரும் அக்கறை பட தேவை இல்ல. அவனை முதல்ல விடு ஆரவ்.” என கண்டிப்பாக கூற, ஆரவ் அடக்கப்பட்ட சிரிப்புடன் கவினை வீட்டில் விட்டான்.

“மேடம்க்கு இப்போவாவது வீட்டுக்கு போற ஐடியா இருக்கா?” என பக்கவாட்டில் திரும்பி நக்கலாக வினவ, “வீட்ல யாரும் இல்ல. வெளியூர் போயிருக்காங்க. நான் ஹேமா வீட்டுக்கு தான் போக போறேன்.” என்றாள் அவனைப் பாராமல்.

அதில், நேராக அவனின் வீட்டை அடைந்தவனை புரியாமல் பார்த்தவள், “இங்க ஏன்டா வந்த?” எனக் கேட்க, “வா…” என்றவன் அவளையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான். 

ஹால் சோபாவில் அமர்ந்து இஷாந்திற்கு உணவை ஊட்டி விட்டுக் கொண்டிருந்த வான்மதிக்கு, ஒரே நாளில் வாழ்க்கை மீண்டும் தன்னைக் கீழே தள்ளியது போன்று மனம் வலித்தது.

இன்னும் இந்த வாழ்க்கை என்ன தான் வைத்திருக்கிறது என்ற கேள்விக்கு விடை புரியாதவளாய் நிமிர்ந்தவள், ஆரவுடன் லயா வருவதைக் கண்டு, “ஹாய் லயா!” என்றாள் சிறிதாய் முறுவலிக்க முயன்று.

“அதான் வரலைல. அப்பறம் ஏன் ட்ரை பண்ற? மூஞ்ச மூணு ஊருக்கு தூக்கியே வச்சுரு.” என்று சிலுப்பி விட்டு அவளருகில் அமர, அவளை முறைத்த வான்மதி, “இதை சொல்ல தான் வந்தீங்களா?” எனக் கேட்டாள்.

“இப்ப ஏன் நீ வந்தன்னு நேரடியாவே கேளு…” லயா நக்கலுடன் கூறியதில், பதறியவள் “இல்ல இல்ல. நான் அப்டி கேட்கல.” என்று விழிக்க, லயா தான் சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.
 
லயாவின் எதிரில் அமர்ந்த ஆரவ், “லயா?” என கண்டிப்புடன் அழைத்து, “டைரக்ட்டா கேட்குறேன். நீ கவியை லவ் பண்றியா இல்லையா?” எனக் கேட்டான்.

அவள் நிமிராமல் அழுத்தமாக அமர்ந்திருக்க, அவனுக்கு சற்றே சங்கடமாக இருந்தது.

என்னதான் விளையாட்டாய் பேசினாலும், ஒவ்வொரு முறை தவிர்க்கும் போதும் அவனுக்கு கஷ்டமாக தான் இருக்கும். தன்னால் தான், இப்போது கவினையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறாளோ என்று வருந்தியவன், “சாரி லயா. என்னால தான் நீ அவனை அக்செப்ட் பண்ண மாட்றியா?” என வினவ,

அவள் சட்டென, “ஆமா, இவன் பெரிய உலக அழகன். இவன் வேணாம்ன்னு சொன்னதும் நாங்க கன்னியாஸ்திரியா போகணும். மவனே, இந்த ஜென்மத்துல தப்பிச்சுட்ட. அடுத்த ஜென்மத்துல, இவளை போட்டு தள்ளிட்டு நான் சீட் போடுறேன்” என்று எப்போதும் போல் பேச்சை திசை திருப்ப, வான்மதி இன்னும் முறைத்தாள்.
 
ஆரவோ, “அடிச்சு மூஞ்சியை திருப்பிருவேன். கேட்டதுக்கு பதில் சொல்லு!” என்று அழுத்தமாகக் கேட்க, அவள் தான் பொங்கி வந்த நீரை அடக்க முடியாமல், உதட்டைக் கடித்து அமர்ந்திருந்தாள்.

“தெரியல!” என அவள் பதிலளிக்க, வான்மதி தான், “இதென்ன பதில்?” என்றாள் புரியாமல்.

அவளோ, “அதெப்படி திரும்ப திரும்ப லவ் வரும்…” என்று குரல் கம்ம கேட்க, ஆரவ் திகைத்தான்.

“ஏன் வந்தா என்ன பிரச்சனை?” வான்மதி எகத்தாளமாகவே கேட்க, “எனக்கு தெரியல! அவன்கிட்ட இருந்து நான் ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்றேனோன்னு தோணுது.” என மீண்டும் அதே பல்லவியை பாட, “சரி அதுல என்ன தப்பு?” என மீண்டும் வினவினாள்.

“நான் ஏன் அவன்கிட்ட எக்ஸ்பெக்ட் பண்ணனும்?” நிமிர்ந்து வான்மதியை பாவமாக பார்த்தபடி கேட்க, அவளோ மானசீகமாக தலையில் அடித்து, “நீங்க ஆரவை லவ் பண்ணீங்க தான. அப்போ அவருகிட்ட இருந்து என்ன எக்ஸ்பெக்ட் பண்ணீங்க?” என்று கேட்க,

அவளோ சடாரென, “நான் எதுவுமே எக்ஸ்பெக்ட் பண்ணலையே.” என்றாள் தோளைக் குலுக்கி.

ஆரவ் தான், “பைத்தியம்… பைத்தியம் மாதிரி உளறாத!” என்று தலையிலேயே நறுக்கென கொட்ட, லயா கடியாகி, “என்னடா ஆளாளுக்கு திட்டுறீங்க? அவன் லவ் பண்றேன்னு சொன்னான் தான். முதல்ல அவன் மேல எனக்கு எந்த பீலிங்ஸ்சும் வரல. அப்பறமும் வந்துச்சான்னு தெரியல. ஆனாலும்… ஏன் இப்படி கன்ஃபியூஸ் ஆகுறேன்னு எனக்கே தெரியல.” என்று தலையில் கை வைத்து அமர்ந்தவளை இருவருமே குழப்பமாக பார்த்தனர்.

ஆரவோ, “ஏன் அவன் உன் பின்னாடியே சுத்தணுமா?” என ஒரு மாதிரியாக கேட்க, அவளோ பேந்த பேந்த விழித்தாள்.

அவள் மனதும் அதை எண்ணியே ஆமோதிக்க, ஏனோ முழுக்க முழுக்க அவள் மீது அவன் காதலை பொழிய வேண்டும் என ஒவ்வொரு அணுவும் துடித்தது. அவளின் விழியிலேயே அவளை அறிந்து கொண்டவன்,

“பைத்தியமே. அதுக்கு முதல்ல நீ அவனை லவ் பண்றேன்னு சொல்லணும்!” என்று கடிந்தவனைக் கண்டு அசடு வழிந்தவள், “சொல்ல முடியாது போடா!” என்றாள் முகத்தை சுருக்கி.

“போடிங்…” என கையை நீட்டி திட்டியவனை, “சும்மா என்ன மட்டும் சொல்லாதீங்கடா. உங்க உங்க லவ்வ சொல்ல மட்டும் துப்பில்ல. என்ன திட்ட வந்துட்டானுங்க.” என்று அவனை முறைத்து விட்டு, இஷாந்தை தூக்கியபடி,

“எல்லாரும் ஒரே டியூப் லைட்டா இருக்கானுங்க இஷுகுட்டி. நீயாச்சு பெரியவனானதும், ஒழுங்கா லவ் பண்ணு சரியா?” என்று அவனுக்கு அறிவுரை கூற, வான்மதி தன்னை மறந்து மெல்ல புன்னகைத்தாள்.

ஆனால், மறந்தும் ஒரு முறை கூட இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை. அதன் பிறகு, லயா ஒரு அறையில் அடைந்துக் கொள்ள, ஆர்டர் செய்த உணவு வந்ததும், லயாவை அழைத்தவன், வான்மதியையும் அழைக்க, அவள் “எனக்கு பசிக்கல” என்றாள்.

“எனக்கும் பசிக்கல. ஆனா உயிரோட இருக்கணுமே. கம்!” என்று கூறி விட்டு செல்ல, அவள் தான் அதிர்ந்தாள்.

மறுக்க இயலாமல், டைனிங் டேபிளில் சென்று அமர்ந்தவள், அமைதியுடன் உண்ண, லயாவும் ஆரவும் தான் ஏதோ வளவளத்தபடி உண்டனர். லயா சீக்கிரமே உண்டு விட்டு, அறைக்கு சென்று விட, வான்மதி தட்டை சுரண்டியபடி “இன்னைக்கு பேபி என் கூட தூங்கட்டும்” என்றாள்.

அவளை பார்வையால் அளந்தவன், “நான் ஏற்கனவே சொன்னது தான். உனக்கு பேபி கூட தூங்கணும்ன்னா என் ரூம்க்கு தான் வரணும். அவனை அனுப்ப மாட்டேன்.” என்று கட் அண்ட் ரைட்டாக கூறி விட, அவளுக்கோ அழுகை வரும் போல் இருந்தது.

“என் பேபி மேல எனக்கு உரிமை இல்லையா? இல்ல… எனக்கு எதுக்கு உரிமை குடுக்கணும்ன்னு நினைக்கிறீங்களா?” அவள் கோபத்தில் கேட்டு விட, அவனிடம் பதில் இல்லை. அதில் பாதி சாப்பாட்டில் அவள் எழுந்து விட,

“சாப்பிடாம எங்க போற?” ஆரவ் அதட்டலுடன் வினவ, “போதும்” என்றாள் தரையை பார்த்தபடி.

“டேப்லட் போட்டுட்டு இருக்கறப்ப, இவ்ளோ கம்மியா சாப்ட்டா வயிறு புண்ணாகும். எல்லாத்தையும் சாப்பிடு.” என்றிட, “வேணாம்” என நகர எத்தனித்தாள் பிடிவாதமாக.

அவனோ கால்களை நீட்டி, மீண்டும் அவளின் புடவை கொசுவத்தில் வைத்து அழுத்த, அவள் படக்கென புடவையை பற்றிக்கொண்டு “ஆரவ் என்ன பண்றீங்க? விடுங்க” என்றாள் பதற்றமாக.

“உட்காரு. சாப்பிடாம இங்க இருந்து நகர்ந்த, நான் மனுஷனாவே இருக்க மாட்டேன். சிட்” என அவன் சீற.

பொங்கி வந்த அழுகையை அடக்கியபடி, அமர்ந்து விட்டவள், லேசான விசும்பலுடன் உண்டு முடித்து அறைக்குள் சென்று, கட்டிலில் காலை கட்டிக்கொண்டு தேம்பினாள்.

ஏற்கனவே உறங்கி இருந்த இஷாந்தையே வெறித்த ஆரவிற்கு, வான்மதியின் கண்ணீர் முகமே மனதை பிசைய, பின் இஷாந்தை தூக்கி கொண்டு வான்மதியின் அறைக்கு சென்றான்.

அவனைக் கண்டதும், முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டவளின் அருகில் இஷாந்தை கிடத்தியவன், அவனுக்கு அழுத்த முத்தத்தை பதித்து விட்டு, வெளியேறி விட, அவள் தான் அவன் சென்ற திசையையே ஏக்கத்துடன் பார்க்க, வாசலிலேயே ஒரு நொடி நின்றவன், திரும்பி அவளைப்  பார்க்க, அவள் சட்டென பார்வையை இஷு புறம் திருப்பினாள்.

இப்போது அதே ஏக்கம் அவன் விழிகளில் தெறித்தது.

நடுஜாமம் வரையிலும் உறக்கம் தொலைத்த வான்மதிக்கு, மூச்சு முட்டுவது போல இருக்க, பால்கனியில் சென்று நின்றாள்.

அதற்கு பக்கவாட்டில் தான், ஆரவின் அறையை ஒட்டிய பால்கனியும் இருக்க, அங்கே அவன் கையில் பீர் பாட்டிலுடன் வானத்தை வெறித்திருந்தான்.

அதைக் கண்டதும் அவளுக்கு உள்ளுக்குள் சுருக்கென வைக்க, விருட்டென இஷுவையும் தூக்கிக்கொண்டு அவனறைக்கு சென்றாள்.

இஷாந்தை தொட்டிலில் கிடத்தி விட்டு, ஆரவின் அருகில் சென்றவள், “இஷு தொட்டில்ல தான் இருக்கான்” என அதே வானத்தை பார்த்தபடி பேச, “ம்ம்…” என்றான்.

“மறுபடியும் குடிக்கிறீங்களா?” அவள் தவிப்புடன் கேட்க,

அவளை குனிந்து ஒரு முறை சலனமின்றி ஏறிட்டவன், “குடிக்க தான் எடுத்துட்டு வந்தேன். ஆனா முடியல.” என்று இன்னும் மூடி உடைக்காத பியர் பாட்டில் கீழே வைத்தவன்,

“என் கண்ணம்மாவுக்கு நான் குடிச்சா பிடிக்காது. அவளுக்கு குடுத்த வாக்க என்னால மீற முடியல. குடிச்சாலும், அவளைத் தவிர வேற எதையும் யோசிக்க முடியும்ன்னு தோணல.” என காற்றில் கலந்து அவனின் வார்த்தைகள் தேய்ந்தபடி வெளிவர, அவளுக்கும் கண்ணை கரித்தது.

“என்னால இன்னும் அந்த ஷாக்ல இருந்து வெளிய வரமுடியல ஆரவ். மனசு ஏத்துக்கவே மாட்டேங்குது. ரொம்ப பெய்னா இருக்கு.” என்றவளுக்கு குரல் நடுங்க, “ம்ம்” என்றவன் வேறு எதுவும் பேசவில்லை.

“ரொம்ப லேட் ஆச்சு. போய் தூங்கு.” என்று விட்டு உள்ளே வர, அவனின் ம்ம் – இல் நிலை கொள்ளாமல் உள்ளே வந்தவளுக்கு, மேற்கொண்டு பேச தோன்றாமல், அவளறைக்கு செல்ல எத்தனித்தவள், இஷாந்திற்கு அழுத்த முத்தமொன்றை குடுத்து விட்டு நகர்ந்தாள்.

அவனோ அவளையும் அவள் கொடுத்த முத்தத்தையும் ஆதங்கத்துடன் பார்த்திருக்க, வாசல் வரை சென்றவள், மனது கேளாமல் நின்று மெல்ல அவனை திரும்பிப் பார்க்க, அவன் படக்கென பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டான்.

தேன் தூவும்…!
மேகா!

ஹாய் டியர்ஸ்… Next ud Monday than varum. 2 days konjam bc. Max oru kutti ud poda try Panren🤩

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
54
+1
216
+1
7
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    5 Comments

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    2. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    3. eswaripechi7

      நட்பும் காதலும் கலந்த அழகான குடும்ப கதை . படித்தேன் ரசித்தேன்.

    4. விழுந்து விழுந்து சிரிக்கக் கூடிய கதைக்கரு. மனதிலிருக்கும் பாரம் இறங்குவது போன்றதொரு உணர்வை தரும் எழுத்தாளரின் எழுத்து நடையும், நகைச்சுவைத் திறனும் மிகவும் அசத்தல்.

    5. லயா கவின் paavam🤣🤣. ஆரவ் வான் பாப்பா ஒரே டைம்ல ரெண்டு பேரும் பாக்கணும். இப்டி தனி தனியா பாத்தா எப்ப சேருவீங்க