Loading

மனையாளை சமாதானம் செய்து உண்ண வைத்த இந்திரஜித், அடுத்ததாக தோழியைக் காண சென்றான்.

பின்பக்கத்தில் மலர்ந்திருந்த ரோஜா மலர்களை விரக்தியாக பார்த்துக் கொண்டிருந்தாள் வைஷாலி.

தாமரைக்கு செடி வளர்ப்பதில் அலாதி பிரியம். விடிந்ததும், முதலில் பூத்துக் குலுங்கும் மலர்களை பார்த்து விட்டு தான், அடுத்த வேலையை ஆரம்பிப்பார்.

அவரைப் பின்பற்றி அவளுக்கும் பூக்கள் மீது ஆசை. விடுமுறை நாட்களில், ஊருக்கு வரும் போதெல்லாம், அவளும் காலையிலேயே எழுந்து தாயுடன் பூக்களை ரசிக்கத் தொடங்கி விடுவாள்.

பல நாட்கள் ஏங்கி இருக்கிறாள், படிப்பை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு, தாய், தங்கையுடனே இருந்து கொள்ளலாமென.

குடும்பத்தை உயர்த்த தன் படிப்பு மிகவும் அவசியம் என்றுணர்ந்தவள், மனதை கடினப்படுத்தி தான், அவர்களைப் பிரிந்து இருந்தாள்.

எழிலை திருமணம் செய்த பிறகாவது அவரை அருகில் இருந்து பார்த்துக்கொள்ள பேராசைப்பட்டவளுக்கு, வாழ்க்கையே வெறுமையாகி போனது. விரும்பி செய்த திருமணத்தில் காதலும் இல்லை. அன்பைப் பொழிய தாயும் இல்லை. அருகிலிருந்தும் கூட, அவரது இறுதி நேரத்தில் உடன் இல்லாது போனதில், அத்தனை வேதனை நெஞ்சை அடைத்தது.

எல்லாம் தனது முட்டாள்தனத்தினால் தானே! கைக்கு எட்டாத காதலை நம்பியதும், புகுந்த வீட்டினரை எதிர்த்து பேச தைரியமற்றுப் போனதும் தானே அனைத்திற்கும் காரணம் என நெக்குருகி போனாள்.

“க்கும்…” தொண்டையை கனைத்தபடி அவளருகில் அமர்ந்தான் இந்திரஜித்.

“பயங்கர பனியா இருக்கு வைஷுமா. இங்க ஏன் உட்காந்து இருக்க… சரி சாப்பிடு.” என்று தட்டை நீட்டினான்.

பெருமூச்சு விட்டவள், “பசிக்கல இந்தர்…” என்றாள் மெதுவாக.

“பசிக்காது தான். ஆனா, சாப்பிட்டு தான் ஆகணும். பிடி.” என்று வலுக்கட்டாயமாக தட்டை அவள் கையில் திணித்தான்.

“ஒழுங்கா சாப்டு வைஷு. சென்னைக்கு ட்ராவல் பண்ணனும், வேலைல சேரணும்… இதுக்குலாம் தெம்பு வேணாமா?” சற்றே நக்கல் தொனியுடன் கூறினான்.

அதில் அவனைப் புரியாமல் பார்த்த வைஷாலி, “உனக்கு எப்படி தெரியும்” எனக் கேட்டாள்.

“எழில் சொன்னான்.” என்றதும், அமைதி காத்தவள்,

“உனக்கு தெரியுமா?” என்றாள் மொட்டையாக. எழில் சத்யாவின் காதல் விவகாரத்தைப் பற்றி பேசுகிறாள் என்று புரிந்திட,

“தெரியும்” என்று அவனும் பதில் அளித்ததில், “கஷ்டமா இல்லையா.” என நண்பனை ஆதூரமாக பார்த்தாள்.

“அது லவ்வா இருந்தா தான கஷ்டப்பட. அப்படியே இருந்தாலும், அது முடிஞ்சு போன விஷயம் வைஷுமா.” என்றவனின் பேச்சைக் காதில் வாங்காமல்,

“ஆமா, எல்லாமே முடிஞ்சு போச்சு.” என்றாள் இறுகளாக.

அவளை அமைதியாகப் பார்த்தவன், “நீ ரொம்ப டிப்ரெஸ்ட்டா இருக்க வைஷுமா. இப்போ என்ன பேசுனாலும், உன்னால அதை அக்செப்ட் பண்ணிக்க முடியாது. எல்லாத்தையும் விடு. மறுபடியும் வேலைல ஜாயின் பண்ணி, கவனத்தை உன் கேரியர்ல காட்டு…
ஆனா ஒரு கண்டிஷன்…” என்று நிறுத்தினான்.

அதில் அவள் என்னவெனப் பார்க்க, “நீ என் வீட்ல தான் இருக்கணும்.” என்றான் முடிவாக.

“விளையாடாத இந்தர். நான் எப்படி அங்க வந்து இருக்க முடியும். நான் தனியா இருந்துக்குவேன். ஆயாவை என்கூட கூட்டிட்டு தான் போறேன்.” என்று மறுத்திட,

“அவங்களையும் சேர்த்து தான் சொல்றேன். உன்னை ஒண்ணும் நீ எழில் கூட தான் வாழணும்ன்னு நான் கட்டாயப்படுத்தல வைஷுமா. உன் விருப்பப்படி என்ன முடிவு வேணும்ன்னாலும் எடு. ஆனா, எந்த முடிவா இருந்தாலும் நீ எங்க கூட தான் இருக்கணும்.” என்று திட்டவட்டமாக உரைத்தான்.

“ப்ச்… முதல்ல இதை என் தங்கச்சியே விரும்ப மாட்டா. அப்பறம், பானும்மா… ஏற்கனவே என்மேல கோபமா இருப்பாங்க. நான் அங்க வர்றது சரியா வராது இந்தர். ப்ளீஸ்” என்று தயங்கிட,

“என்ன சரியா வராது…” என அழுத்தக் குரலில் கேட்டபடி அங்கு வந்தார் பானுரேகா.

அவரைக் கண்டதும், வைஷாலி எழுந்து நிற்க, பானுரேகாவோ இந்திரஜித்திடம், “உன் ஆருயிர் தோழியை ஒண்ணு புருஷன் கூட வாழ சொல்லு. இல்லன்னா, நம்ம கூட இருக்க சொல்லு. வயசு பொண்ணை தனியா விடுறது நம்ம குடும்பத்துல பழக்கம் இல்லை.” என்று கண்டிப்பாய் கூறினார்.

சிறிது நேரத்திற்கு முன்பு தான், எழிலழகன் அவள் எடுத்த முடிவை இந்திரஜித்திடம் கூறினான்.

அதனைக் கேட்ட பானுரேகா, “என் குடும்பத்தோட சம்பந்தப்பட்ட பொண்ணை தனியா விட முடியாது எழில். உன் வீட்டு பிரச்சனையை தீர்த்துட்டு, அவளை சரி பண்ணி, உன் கூட கூட்டிட்டு போறது உன் சாமர்த்தியம். அது வரை, அவள் எங்க வீட்ல இருக்கட்டும்.” என்று விட, எழில் விழித்தான்.

அவளுடன் தனி வீட்டில் சென்று விட்டு, சமாதானம் செய்யலாம் என்றெண்ணி இருந்தவனின் எண்ணத்தில் மண் விழுந்து விட்டது.

அவன் முகம் போன போக்கில், சிரிப்பு முட்டினாலும் தாயின் முடிவை இந்திரஜித் தடுக்கவில்லை.

“அம்மா சொல்றது சரி தான் எழில்…” என்று சீண்டிட,

“என்ன சரி…” என்று பல்லைக்கடித்தான் எழிலழகன்.

ஆனாலும், பானுரேகாவின் கூற்றை மறுக்க இயலாமல், சரியென தலையசைத்தவன், சற்று சிந்தித்து விட்டு, “வைஷு உங்களுக்கு என்ன முறை வேணும்?” எனக் கேட்டான் யோசனையாக.

பானுரேகா புரியாமல், “என் மருமகளோட அக்கா. அப்போ எனக்கும் மருமகள் முறை தான. இது என்ன கேள்வி” என முறைத்திட,

“”கரெக்ட் மா. அப்போ உங்க மருமகளோட புருஷன் நான் யாரு. உங்களுக்கு பையன் மாதிரி தான. அதனால, நானும் வேலையை கூடிய சீக்கிரம் டிரான்ஸ்பர் பண்ணிட்டு, அங்க வந்துடுறேன். உங்க புள்ளையையும் மருமகளையும் நல்லா கவனிச்சுக்கோங்க.” என்று சாமர்த்தியமாக பேசிட,

அவனை மேலும் கீழும் பார்த்த பானுரேகா, “இந்த உறவு முறையை எல்லாம் அவளை கூட்டிட்டு ஓடுறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்.” என்று கடிந்ததில்,

இந்திரஜித், “சாரி ஃபார் தி இன்டெரப்ஷன்… அவன் ஓடவே இல்ல. பைக்ல தான் போனான்.” என்று சரி செய்தான்.

மகனையும் பார்வையால் எரித்தவர், “உன்னை உதைச்சா… எல்லாம் சரி ஆகிடும். இன்னொரு தடவை இந்த மாதிரி சீரியஸான விஷயத்துல விளையாடாத இந்தர்.” என்று விரல் நீட்டி எச்சரிக்க,

“இன்னொரு தடவை கல்யாணம் பண்ற ஐடியா எனக்கு இல்லம்மா…” எனக் கண் சிமிட்டி, அவரது பிபியை எகிற வைத்தான்.

இந்திரஜித்தை கடுமையாக முறைத்து விட்டு பானுரேகா நகர, எழில் யோசனையில் ஆழ்ந்தான்.

அவனைப் பார்த்த இந்திரஜித், “அதெல்லாம் சரி… உன் பேரண்ட்ஸை எப்படி சமாளிக்க போற…?” எனக் கேட்டதில்,

அவன் முகத்தில் ஒரு வேதனை வந்து போனது. பெற்றவர்கள் சரி இல்லை என்றால், எந்த பிள்ளையால் தான் தாங்க முடியும்.

“நான் சமாளிச்சுக்குறேன்…” என்றவன் அன்று வீட்டிற்கு சென்றான்.

அவன் வரவிற்காக ஆத்திரத்துடன் காத்திருந்தார் ஐயப்பன்.

உள்ளே நுழைந்ததும் தான் தாமதம், “உன் பொண்டாட்டி குடும்பத்துக்கு செய்ய வேண்டிய சேவை எல்லாம் முடிஞ்சுதா இல்லை இன்னும் இருக்கா?” என்று கர்ஜித்தார்.

அவரை நிதானமாக பார்த்தவன், “என்னோட கடைசி நிமிஷம் வரைக்கும், என் சேவை தொடர்ந்து கிட்டே தான் இருக்கும்ப்பா. என் பொண்டாட்டியாச்சே.” என்று நக்கலுடன் கூறிட,

“கல்யாணத்தை நிறுத்திட்டு, ஓடி வந்த ஓடுகாலி நாய், அவள் என் வீட்டு மருமகளா? ஏதோ போனா போகுதுன்னு, இவ்ளோ நாள் சோறு போட்டுட்டு இருந்தேன். அவளுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா, உன் அம்மாவை அடிச்சு இருப்பா.” என்றார் அகங்காரத்துடன்.

தந்தையின் பேச்சைக் கேட்டு அதிர்ந்த எழிலுக்கும், சினம் பிறந்தது.

“வைஷு என் பொண்டாட்டிப்பா. அவளை நாய் அது இதுன்னு பேசாதீங்க. அப்பறம் நான் அமைதியா இருக்க மாட்டேன். அவளை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டது நான்.” என்று கோபப்பார்வையுடன் தந்தையை எச்சரித்தவன்,

“அத்தையோட கடைசி நேரத்துல கூட, உதவி பண்ணாம செத்தா சாகட்டும்ன்னு சொல்லிருக்காங்க அம்மா. அவ இடத்துல நானா இருந்துருந்தாலும் அதே தான் செஞ்சுருப்பேன்.” என்று ஆனந்தியை கடுமையாக முறைத்தான்.

ஆனந்தியோ, “உன்னை பெத்த அம்மாவை, அக்காக்காரியும் தங்கச்சிக்காரியும் அடிச்சு அனுப்பி இருக்காளுக. ஒரு வார்த்தை கூட நீ அவளுகளை கேட்காம, இப்படி மனசாட்சியே இல்லாம பேசுறியேப்பா.” என வாயை பொத்திக் கொண்டு போலிக்கண்ணீர் வடித்தார். அவனிடம் கோபப்பட்டால், வேலைக்கு ஆகாது என்று அறிந்தவர் ஆகிற்றே.

அவனோ, “சரிம்மா கேட்குறேன். அதுக்கு முன்னாடி, நான் கேக்குறதுக்கு நீங்க பதில் சொல்லுங்க. என் பொண்டாட்டியை ஏன் அடிச்சீங்க?” என்றான் கூர்மையாக.

அதில் திகைத்தவர், “நானா? நான் எதுக்குப்பா அவளை அடிக்க போறேன். இப்படி பொய் சொல்லி அவள் உன்னை எங்ககிட்ட இருந்து பிரிக்க பாக்குறா எழிலு.” என மகனிடம் பொய்யுரைத்தார்.

“பொய் சொல்லாதீங்கம்மா. உங்க ரெண்டு பேர் மேலையும் நான் ரொம்ப மரியாதை வச்சு இருந்தேன். இப்படி அசிங்கமா நடிச்சும் பேசியும் என் மனசை நோகடிக்காதீங்க. ஏற்கனவே, ரொம்ப அழகா பிளான் பண்ணி என்னையும் சத்யாவையும் மொத்தமா பிரிச்சு விட்டுடீங்க. ஒரு ப்ரெண்டா கூட அவள் முகத்தை என்னால பார்க்க முடியலம்மா.

இப்போ, என்னை நம்பி வந்த பொண்ணை, உங்களால எவ்ளோ முடியுமோ அவ்ளோ கஷ்டப்படுத்தி இருக்கீங்க. உங்களை நம்பி தான விட்டுட்டு போனேன். அத்தையை கூட கடைசியா பார்க்க விடாம பண்ணிட்டீங்களேம்மா.

அவள் என்ன பாவம் பண்ணுனா. நான் தான் என்ன பாவம் பண்ணுனேன். அத்தையும் இல்ல… சத்யாவோட உறவும் இல்ல. என்னை ஆசைப்பட்டு கட்டிக்கிட்ட பொண்டாட்டியோட அன்பும் இல்ல. பெத்த அப்பா அம்மாவும் உண்மையா இல்ல. எனக்கு ஏன்மா இவ்ளோ பெரிய தண்டனை…” என முட்டி நின்ற வேதனையுடன் தேய்ந்த குரலில் கேட்டான்.

“என்னடா ரொம்ப தான் பொண்டாட்டி புராணம் பாடுற… உன்னை நாங்க வளர்த்து ஆளாக்கி படிக்க வைச்சு, எல்லாம் புடுங்குவோமாம். இவரு உருப்படாதவன் வீட்ல இருந்து பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு வருவாராம். ஒழுங்கா அவளை அத்து விட்டுட்டு வந்து நாங்க சொல்ற பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு அடங்கி இரு… இல்லன்னா புள்ளைன்னு கூட பார்க்க மாட்டேன். வெட்டி வீசிடுவேன்…” என்று வஞ்சத்தைக் கக்கினார் ஐயப்பன்.

“என்னங்க… கொஞ்சம் பொறுமையா பேசுங்க. என் புள்ளை புருஞ்சுப்பான்” என ஆனந்தி கணவனை அடக்கினார்.

அவருக்கோ, மகன் கோபம் கொண்டு சென்று விடுவானோ என்று பயம்…

“அட சும்மா இருடி. நாசூக்கா இவனை உன் அண்ணன் குடும்பத்துல இருந்து பிரிச்சு விடணும்ன்னு, அவன் கல்யாணம் பண்ணிட்டு வந்த அப்பறமும் அவளை அடிச்சு துரத்தாம பொறுமையா இருந்ததுனால தான் இத்தனையும்…” என்று மனைவியை கடிந்தவர், எழிலிடம் திரும்பி, “இங்க பாரு எழிலு… புள்ளையாச்சேன்னு பொறுமையா பேசுறேன். என்னை பத்தி உனக்கு தெரியாது. மரியாதையா, நான் சொல்றதை கேட்டு நட.” என்று கண் சிவக்க எச்சரித்தார்.

தந்தையின் முழு குணத்தையும் கண் கொண்டு பார்த்தவனுக்கு, மனம் வெறுத்துப் போனது.

“நானும் அப்பா, அம்மான்றனால தான் பொறுமையா இருக்கேன்ப்பா. இல்லன்னா, நடக்குறதே வேற… எனக்கு அப்பாவா இருக்கணுமா, இல்ல வெட்டி கவுரவம் பாக்குற வெறிப்பிடிச்சவரா இருக்கணுமான்னு நீங்களே முடிவு எடுங்க.” என அடக்கப்பட்ட கோபத்துடன் மொழிந்தவன்,

“இன்னொரு தடவை என் வைஷு மேல உங்க விரல் பட்டுச்சு…” என்று தாயையும் பார்வையால் எரித்து விட்டு, அவனது பொருட்களை கையோடு எடுத்துச் சென்று விட்டான்.

இந்திரஜித் குடும்பத்தினர் மேலும் ஒரு வாரம் அங்கேயே இருந்து, செய்ய வேண்டிய காரியத்தை எல்லாம் செய்தனர்.

அதுவரை, இறுகிய நிலையில் இருந்த வைஷாலியிடமும் யாரும் பேச முனையவில்லை. அழுகையில் கரைந்த சத்யாவையும் சரி செய்ய இயலவில்லை.

அவர்களாகவே தெளிவு பெறட்டும் என்றெண்ணி, இந்திரஜித்தும் அமைதி காத்தான்.

எத்தனை நாட்களுக்கு தான், அங்கேயே இருந்து விட முடியும் பானுரேகாவிற்கும் பாலகிருஷ்ணனுக்கும் கார்மெண்ட்ஸ் வேலையே தலைக்கு மேல் இருந்தது. தாமரையை நல்லடக்கம் செய்த இரண்டாம் நாளே, சிரஞ்சீவி மட்டும் சென்னைக்கு சென்று வேலைகளை பார்த்துக்கொண்டான்.

நீரஜா வைஷாலியுடன் இருந்து கொள்ள, இந்திரஜித்தும் ஒரு வாரம் விடுமுறை எடுத்திருந்தான். அதற்கு மேல் அவன் சென்றே ஆக வேண்டிய நிர்பந்தம்.

“தியா… ரொம்ப முக்கியமான வேலை. ஆபிஸ்ல வர சொல்றாங்க. நான் மட்டும் போயிட்டு வரவா.” என்றவனுக்கு, அவளை அழைக்க மனம் வரவில்லை.

அவன் கூற்றில் சிவந்திருந்த விழிகளுடன் புரியாமல் பார்த்தவள், அதன் பிறகே, ஒரு வார காலமாக அனைவரும் தன்னுடனே இருப்பது உறைத்தது.

பானுரேகாவும் வேலையை ஓரம் கட்டி விட்டு தன்னுடன் இருந்தது தான் அவளுக்கு பெரும் அதிசயமாக இருந்தது.

அதற்கு மேல், அவர்களை அலைக்கழிக்க விரும்பாதவளாக, “நான் இங்க இருந்து என்ன பண்ண போறேன் இந்தர். எல்லாரும் கிளம்பலாம். என்னால, உங்க எல்லாரோட வேலையும் கெட்டு போகுது.” என்றவுடன்,

“ப்ச்… அப்படினு யாரு சொன்னா? லூசு மாதிரி பேசாத தியாக்குட்டி. இங்க முப்பது நாள் வரை ஏதோ ஃபார்மாலிட்டி இருக்குறதா வைஷு சொன்னா.” என்றான் யோசனையாக.

“இருக்கும் போது, குப்பை மாதிரி தூக்கி போடுறது. செத்ததுக்கு அப்பறம், பார்த்து பார்த்து காரியம் பண்ண வேண்டியது. இங்க ப்ரோகிதர்க்கிட்ட சொல்லி, பண்ண சொல்லிக்கலாம். அதான் அவள் இருக்காளே…” என்று சற்று சினத்துடன் கூற,

அவளை அழுத்தமாக ஏறிட்டவன், “இது உனக்கும் பொருந்தும் தான?” என நெற்றியை நீவியபடி கேட்டான்.

அதில் அவனை முறைத்தவளிடம், “வைஷுவும் நம்ம கூட தான் வர்றா” என்று விவரத்தைக் கூறினான்.

அவளோ புரியாமல், “இல்ல எனக்கு புரியல… அவள் ஏன் நம்ம கூட வர்றா? மாமா கூட தஞ்சாவூருக்கு போக வேண்டியது தான?” என்றவள் குழப்பத்துடன் பார்த்தாள்.

“அவள், எழில் மேல கோபமா இருக்கா.” என்று அவளை ஊடுருவியபடி கூற,

“எதுக்கு?” எனக் கேட்டாள் கண்ணை சுருக்கி.

‘உனக்கு ஏன்னு தெரியலையா?” கையைக்கட்டிக்கொண்டு இந்திரஜித் கேட்க,

“தெரியாததுனால தான கேட்குறேன்” என்றாள் முறைப்பாக.

சில நொடிகள் அமைதி காத்தவன், “நீயும்… க்கும்…” அதனை கூற பிடிக்காமல், குரலை சரி செய்து கொண்டவன், “எழில் உன்னை விரும்புனது தெரிஞ்சு கோபமா இருக்கா போல.” என்றான் அவளைப் பாராமல்.

அவளும் ஒரு கணம் திகைத்து விட்டு, மௌனமானாள். அவளுக்கும் தர்ம சங்கட நிலை தான்.

பின், “முடிஞ்சு போன விஷயத்துக்கு இப்ப எதுக்கு தேவை இல்லாம ரியாக்ட் பண்ணிட்டு இருக்கா…? அவன் கூட ஓடிப்போறப்பயாவது, எனக்கும் அவனுக்கும் என்ன பிரச்சனைன்னு என்கிட்ட கேட்டு இருக்கலாம்.” என அழுத்தத்துடன் கூறியவளிடம், அதே அழுத்தத்துடன்,

“உனக்கும் அவனுக்கும் நடந்த பிரச்சனையை நீயும் வீட்ல சொல்லி இருக்கலாம் சத்யா.” என இந்திரஜித் கூறியதில், அவள் கடுகடுத்தாள்.

“நான் ஏற்கனவே சொல்லிட்டேன். உன் மேலயும் தப்பு இருக்குன்னு… எழிலையும் வைஷுவையும் மட்டும் தப்பு சொல்றதுல நியாயம் இல்லை” என்றவனுக்கு, வைஷாலியை குறை கூறுவது பிடிக்கவில்லை.

“ஆமா தப்பு தான். தப்பு என் மேல தான். முட்டாள்தனமா மாமாவை கல்யாணம் பண்ணிக்க முடிவு எடுத்துருக்கவும் கூடாது. உன் அண்ணன் மண்டபத்துல இருந்து ஓடி போனதும், உன்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டுருக்கவும் கூடாது. அப்டின்னா நம்ம கல்யாணமும் நடந்துருக்காது. நானும் என் அம்மா கூட இருந்துருப்பேன். அட்லீஸ்ட், அவங்களை கரெக்ட் டைம்க்கு ஆஸ்பத்திரிக்காவது கூட்டிட்டு போயிருப்பேன்.” என்றவள் ஆதங்கத்தில் தான் கூறினாள்.

தன் மீது தவறென்று கூறியதில் எழுந்த சிறு ஆதங்கத்தில் அவள் பேசி விட்டு கண் கலங்க, அவளை சலனமின்றி பார்த்தவன், பேச்சின்றி வெளியில் சென்று விட்டான்.

முகம் மட்டும் அளவுக்கு அதிகமாக சினத்தை தாங்கிக் கொண்டிருந்தது. நேராக பானுரேகாவிடம் சென்றவன்,

“நான் ஊருக்கு கிளம்புறேன்மா. நீங்க இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு வாங்க.” என்றதில், அப்போது தான் அங்கு வந்த எழில், “என்ன திடீர்ன்னு கிளம்புற?” என்றான் கவலையுடன்.

ஏனோ அவனது மன பாரத்திற்கு மருந்தாக இந்திரஜித்தின் அருகாமை சிறு தைரியம் தந்தது அவனுக்கு. அதனை வெளிக்காட்டிக்கொள்ள, ஈகோ இடம் கொடுக்கவில்லை.

“நீ இருந்தா வைஷு பெட்டரா பீல் பண்ணுவா.” என மாற்றிக் கூறியவன், “கையோட சதுவையும் கூட்டிட்டு போயிடேன்.” என்றான்.

அவனோ அதற்கு பதில் கூறாமல், “எனக்கு வேலை இருக்கு. வைஷுவையும் பாட்டியையும் நாங்க கூட்டிட்டு போறோம். நீ முடிஞ்ச அளவு சீக்கிரம் டிரான்ஸ்பர் வாங்க பாரு.” என்றவன் சத்யாவின் பேச்சை தவிர்த்து விட்டு கிளம்பியே விட்டான், சத்யாவிடம் சொல்லாமல்.

கணவன் பேசாமல் சென்றதில், நேரம் செல்ல செல்ல சத்யாவிற்கு தான் நெஞ்சம் குறுகுறுத்தது.

அவன் முகத்தில் கண்ட கோபத்தை எண்ணி, தன் மீதே கோபம் எழுந்தது.

‘உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல சத்யா… எல்லாம் கை மீறி நடக்கும் போது அவரு என்ன பண்ணுவாரு. காதல்ன்ற பேர்ல, என்னை ஆரம்பிச்சு, வைஷுக்கா வரை பண்ணுன தப்புக்கு, அவரை கல்யாணம் பண்றதை குறை சொல்றதுல நியாயமே இல்லை தான். அவருக்கு என்ன வைஷுக்கா கல்யாணம் வேணாம்ன்னு போவான்னு தெரியுமா…

அவரே மேடை வரை வந்துட்டு அவரு கல்யாணம் நிக்க கூடாதுன்னு என்னை கல்யாணம் பண்ணிகிட்டாரு. இருந்தும், என் மேல கேரிங்கா தான இருக்காரு… என்ன அப்போ அப்போ காண்டாமிருகத்துக்கு சேட்டை மட்டும் அதிகமாகிடும்…’ என அவன் செய்யும் குறும்புகளை எண்ணி மெல்ல புன்னகைத்துக் கொண்டாள்.

காலை நேரம் ஏற்பட்ட ஊடலுக்கு பிறகு, கணவனை கண்ணில் பார்க்காததில், ஒரு வித தவிப்பு குடியேறியது பாவைக்கு.

“எங்க இருக்கீங்க ஜித்து?” என அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிட, அதனை அவன் பார்த்த அறிகுறியே இல்லை.

மேலும் பொறுக்க இயலாமல், அவன் எண்ணிற்கு அழைக்க அதுவோ ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

‘கோபமா இருந்தாலும் கொஞ்ச நேரத்துல வந்து பேசுவாரே…’ என சிந்தித்தவளுக்கு, புரியவில்லை… அவள் ஏற்படுத்தியது கோபமல்ல, காதல் வலி என்று.

அறையை விட்டு வெளியில் வந்தவளுக்கு, அன்னையின் நினைவும் தானாக வந்ததில், குமுறி வந்த அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

கண்கள் தானாக மன்னவனைத் தேட, அவளது விரல்கள் கூட அவன் ஆறுதலை எதிர்பார்த்து ஏங்கி நின்றது.

பானுரேகாவும் பாலகிருஷ்ணனும் வெளியில் சென்றிருக்க, வைஷாலியும் நீரஜாவும் அறைக்குள் இருந்தனர்.

அப்போது தான் வீட்டினுள் நுழைந்த எழிலழகன், சத்யாவைக் கண்டதும் அவள் பேசிய வார்த்தைகளில் தோய்ந்து, வேதனையுற்று, வெளியில் சென்று விட எண்ணினான்.

அவள் எதையோ தேடுவதைக் கண்டு சற்று நின்றவன், “என்ன தேடுற?” எனக் கேட்டான் எங்கயோ பார்த்தபடி.

சத்யா ஒரு நொடி தேடுவதை நிறுத்தி விட்டு, பதில் பேசாமல், பின் பக்கம் சென்று விட்டு, மீண்டும் வாசலுக்கு சென்றாள்.

கடந்த கால் மணி நேரமாக, எழிலும் அவளை கவனித்துக் கொண்டிருக்க, அவள் விழிகள் தேடலை மட்டும் நிறுத்தவில்லை.

“என்ன தேடுறன்னு சொன்னா, நானாவது எடுத்து தருவேன்ல…” இம்முறை எழில் அழுத்தமாகவே கேட்க, அவனை ஒரு முறை முறைத்தவள், “அவர தான் தேடுறேன்” என்றாள்.

“அவருன்னா எவரு?” சற்றே நக்கலாக கேட்டவன், பின் புருவம் சுருக்கி, “அவன் தான் காலைலயே சென்னைக்கு கிளம்பிட்டானே. ஊருக்கு போனவனை இங்க தேடிட்டு இருக்க.” என்றான் குழப்பமாக.

அதுவரையிலும் விழிகளால் வீட்டினுள் அலசியவள், திகைத்தாள்.

“ஊ… ஊருக்கு போய்ட்டாரா?” சட்டென நெஞ்சில் யாரோ கல்லை வைத்தது போல பாரமாக இருந்தது.

“தெரியாம பேசாத மாமா. அவரு என்கிட்ட சொல்லாம போக மாட்டாரு. இங்க தான் இருப்பாரு” என்று எழில் சொன்னதை நம்பாமல், அவள் இந்திரஜித்திற்கு போன் செய்ய எத்தனிக்க,

“உங்கிட்ட அவன் சொல்லிட்டு போகலையா? நான் தான அவன திருச்சிக்கு பஸ் ஏத்தி விட்டுட்டு வந்தேன். அங்க இருந்து பிளைட்ல இன்னேரம் அவன் சென்னைக்கு போய் ஆபிஸ்க்கே போயிருப்பான்.” என்றதும், அவள் கண்கள் கலங்கிப் போனது.

‘உண்மையாகவே சென்று விட்டானா?’ அதிர்வை அப்பட்டமாகக் காட்டியவள், கன்னத்தில் வழிந்த கண்ணீரை கூட துடைக்க மறந்து அப்படியே நின்றாள்.

அலைபாயும்
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
48
+1
167
+1
7
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.