1,004 views

பரமேஸ்வரி டெக்னாலஜிஸ் முன்பு ஆட்டோ நிற்க, இறங்கினாள் அன்பினி. காவலாளியிடம் அக்னியை பற்றி விசாரித்தவள் மின்தூக்கியின் உதவியோடு அவன் இருக்கும் தளத்தை அடைந்தாள். அக்னியை தேடியவாறு அலைந்தவள் அக்னி அறை முன்பு நிற்க, அவை வெறுமையாக காட்சியளித்தது. ‘எங்கே அவன்’ என தேடியவாறு கைபேசி எடுத்தவள் அழைப்பு விடுத்தாள்.
 
இந்த முறை அழைப்பு ஏற்கப்பட்டது. அன்பினி பேச வருவதற்குள்…”சார் ப்ளீஸ் என்னை விட்ருங்க. நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு நான் இல்ல. நேத்தே உங்க கிட்ட இதை தெளிவா சொல்லிட்டேன். ப்ளீஸ் சார் கிட்ட வராதீங்க.” என்று ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டது.
 
அழைப்பை துண்டிக்காமல் அக்னியை தேடியவள் கடைசியாக ஆறாம் தளத்திற்கு சென்றாள். அவளால் உருவாக்கப்பட்ட புதிய உணவு அறை அழகாக காட்சியளிக்க, கண்கள் கூர்மையாக்கி அக்னியை தேடியது.  
 
“ப்ளீஸ் என்னை எதுவும் பண்ணிடாதீங்க விட்டுடுங்க சார்.” அழுதவாறு அக்னியிடம் இருந்து விடுபட போராடிக் கொண்டிருந்தாள் நிஷா.
 
 
பார்த்தவள் கண்கள் பூமிக்குள் புதைந்து போனது. கால்கள் பலம் இல்லாமல் உதற ஆரம்பிக்க தாங்க ஆள் இல்லாமல் தனித்து நின்றாள். காண்பது நிஜம் என்று நிஷாவின் அழுகுரல் சொல்ல என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறினாள். 
 
அவள் நிற்பதை பார்த்து விட்ட நிஷா, “மேடம்!” என ஓடிக்கொண்டு,  “என்னை காப்பாத்துங்க மேடம் உங்க ஹஸ்பண்ட் என்கிட்ட தப்பா பிஹேவ் பண்றாரு.” என்றாள் அழுகையோடு.
 
அன்பினியை அங்கு பார்த்தவன் அதிர்ந்தான். என்ன நடக்கிறது என்று தெரியாமல் அவன் முழிப்பதற்குள் நிஷா அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, அங்கிருந்து நடையை கட்டினாள் அன்பினி. மனைவி  பின்னால் ஓடினான் அக்னிசந்திரன்.
 
 
“அன்பு!” என அவளின் கைபிடிக்க, வேகமாக தட்டி விட்டாள்.
 
“அன்பு இங்க என்ன நடக்குதுன்னு எனக்கே சத்தியமா தெரியாதுடி. பார்த்தத வச்சு என்னை சந்தேகப்படாத.”  கெஞ்சி கொண்டே பின்னால் செல்ல, அவளோ துளி கூட மதிக்கவில்லை அவன் வார்த்தையை. 
 
நடந்த சம்பவத்தால் அக்னியின்  மூளை வேலை செய்யாமல் போக தட்டு தடுமாறி நடந்தான் அவள் பின். படிக்கட்டில்  இறங்கியவள் மின் தூக்கி முன்பு நிற்க, அவள் முன்பு நின்றான் அக்னி.
 
“அன்பு என்னை நம்புடி நான் சத்தியமா அந்த பொண்ணு கிட்ட தப்பா நடந்துக்கல.” 
 
….
 
“உன் அக்னி அப்படிப்பட்டவனா அன்பு.”
 
…..
 
“அமைதியா இருக்காத அன்பு ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னை யார் சந்தேகப்பட்டாலும் எனக்கு கவலை இல்ல. ஆனா நீ நம்பலன்னு நினைக்கும் போதே ரொம்ப வலிக்குதுடி. “அக்னிக்கு கண்ணில் இருந்து கண்ணீர் வந்துவிட்டது அன்பினியின் மௌனத்தில்.
 
பிடித்திருந்த கையை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டவள் மின்தூக்கியில் சென்று மறைந்தாள்.
இதுவரை இப்படி ஒரு சூழ்நிலையை கையாண்டதில்லை அக்னி. மனைவி கண் முன் வேறொரு பெண்ணுடன் காட்சியளித்ததை நினைத்து வெட்கி போனான். அதிலும் அன்பினி நம்பியதை நினைத்து மனம் தளர்ந்தது. பெற்றோர்களுக்காக வேறொரு பெண்ணை மணக்க முடிவு செய்தானே ஒழிய அன்பினியை தவிர வேறு எந்த பெண்ணிடமும் நெருங்கி பழகாதவன். 
 
 
நிர்வாகம் செய்ய வந்தவளிடம் வம்பு இழுத்தது அனைத்தும் அவள் மேல் உள்ள ஈர்ப்பில் தான். அன்பினியை இப்படி ஒரு நிலையில் பார்த்திருந்தால் பக்கத்தில் நின்றிருந்தவனை அடித்து நொறுக்கி இருப்பானே தவிர ஒரு நொடி கூட அவளை சந்தேகத்திற்கு மாட்டான். அக்னி ஆழ்மனதில் அன்பினியின் இடம் பெரிது.
 
தன்னைப் போல் அவள் இல்லையே என்ற எண்ணம் மனதில் தோன்றும் பொழுதே கண்ணில்  கசிய ஆரம்பித்தது ரத்தம். கண் மூடி தன்னை கட்டுப்படுத்தியவன் விழித்திறந்தான் மின்தூக்கி திறக்கும் ஓசையில்.‌
 
 
அவன் முன்பு நிற்பவளை அக்னி வலியோடு பார்க்க,  அறைந்தாள் வேகமாக. ஒரு அடி என்றாலும்  உரைத்தது கன்னம். அவள் கொடுத்த அடியை விட தன்னை நம்பாதது அவன் மனதை குத்தி கிழித்திருக்க அடிக்கு ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை. அவனைப் பார்த்தவள் மீண்டும் மின்தூக்கியில் செல்ல பட்டனை அழுத்தினாள்.
 
 
அடுத்த அரை நொடியில் மின்தூக்கி கதவு திறக்கப்பட, அதில் கால் வைக்க சென்றவள் திரும்பி அக்னியை பார்த்தாள். அவன் அமைதியாக நின்று கொண்டிருக்க… அருகில் நின்றவள் மீண்டும்  அறைந்து,
 
“வேலைக்கு வைக்கும் போது யார் என்னன்னு விசாரிச்சு வைக்க மாட்டியா. இந்த மாதிரி பைத்தியத்தை எல்லாம் வேலைக்கு வைச்சிட்டு  என் உசுர வாங்குற. அவ கணக்க முடிச்சுட்டு வீடு வந்து சேரு.” என்றவள் இந்த முறையும் மின்னலென மறைந்தாள். 
 
 
அக்னியின் உடல் குலுங்கியது. அழுகிறானா என்றால் இல்லை! சிரிக்கிறான். தலை கவிழுந்து குலுங்கி… குலுங்கி சிரிக்கிறான். உடல் முழுவதும் அசையாமல் இருக்க உதடுகள் மட்டும் குதித்துக் கொண்டிருந்தது அன்பினியின் செயலில். உடலை விட்டு பிரிந்து சென்ற ஆவி மீண்டும் அசுர வேகத்தில்  அடைந்தது போல் உணர்ந்தான். என்றும் அன்பினி தனிப்பட்டவள் என்ற கருத்து அவனுள் ஆயிரம் முறை எழுந்து இருக்கிறது. மீண்டும் ஒரு முறை நிரூபித்து காட்டி விட்டாள் அவனின் அன்பு.
 
வெளியில் வந்த அன்பினி விக்ரமை அழைத்தாள். இங்க நடந்த அனைத்தையும் தெரிவித்தவள், “எனக்கு என்னமோ இது அப்பா வேலையா இருக்கும்னு தோணுது விக்ரம். இதை பத்தி அவர் கிட்ட பேச எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு. கடைசியா   சொல்லிடு இனி ஒரு தடவை இந்த மாதிரி நடந்துக்கிட்டா செத்தாலும் அவர் முகத்துல முழிக்க மாட்டேன்னு.” என்றாள்.
 
 
திவ்யாவை அழைத்தவன் கதவை திறக்கும் படி கேட்க, எதற்கு என்று விசாரித்தவள் அனுப்பி வைத்தாள். செல்வகுமார் முன்பு நின்றவன் தந்தை என்ற மரியாதைக்காக நாசுக்காக திட்டி விட்டான். அவரோ நான் ஒன்றும் செய்யவில்லை என்று ஆயிரம் முறை கூறிவிட்டார். நம்ப மட்டும் மனம் வரவில்லை விக்ரமிற்கு. அங்கிருந்து கிளம்பியவன் அனைத்தையும் அவளிடம் சொல்ல, “நான் காந்தி நகர்ல இருக்கேன் வந்து பிக்கப் பண்ணிக்க.” என்றாள்.
 
 
அவ்விடம் சென்றவன் தங்கையை அழைத்துக் கொண்டு அவள் வீட்டிற்கு புறப்பட பேச்சுக்கள் நடந்த சம்பவங்களை பின்தொடர்ந்தது.  இருவரும் இதுவரை மூவர் கூட்டணி பற்றி பேசிக் கொள்ளவில்லை . பாட்டி சொல்லி அன்பினி செய்த அனைத்தும் தெரியும் என்றாலும் அவனும் பேசவில்லை. இருவரும் இன்று அனைத்தையும் பேசிவிட, “இது கண்டிப்பா மகேஷ் வேலைய தான் இருக்கும்.” என்றாள் உறுதியோடு.
 
 
அன்பினி கண்டுபிடிக்கும் முன் அனைத்தையும் தெரிந்து கொண்டான் அக்னிசந்திரன். அவள் சென்ற பின் சிறு பதட்டம் கூட இல்லாமல் நின்ற நிஷாவை மிரட்டி விசாரிக்க, முதலில் வீம்பு பிடித்து மறுத்தவள் அக்னியின் கோர முகத்தில் ஒப்புவித்தாள்.
 
அன்று கம்பெனியில் ஒரு பெண்ணை விட்டு அடித்த கோபத்தில் அக்னியையும் அதேபோல் தவறான கண்ணோட்டத்தில் நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்தான் மகேஷ். அன்பினிக்கு தெரியாத ஒரு தோழியை இங்கு அனுப்பி வைத்தவன் சரியான நேரத்திற்காக காத்திருந்தான்.
 
செல்வகுமாரோடு பழகி அங்கு நடக்கும் கலவரங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டான். வீட்டை விட்டு வெளியில் வந்த அக்னி இங்கு தங்குவான் நிஷாவை வைத்து இரு குடும்பத்தின் முன்பும் அவமானப்படுத்தி அக்னியோடு சேர்த்து அன்பினியையும் பழி வாங்கலாம் என்று திட்டம் போட்டான். அந்த வாய்ப்பு இரண்டு வாரங்கள் கழித்து இன்று தான் கிடைத்தது. 
 
அக்னி கோபமாக கம்பெனிக்கு வந்த விபரத்தை நிஷா அவனிடம் சொல்ல, அனைவரையும் எப்படி இங்கு வர வைப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்தான் அவன். அதற்குள் அன்பினி வந்துவிட,  கவனித்த நிஷா தெரிவித்தாள் அவனிடம். இந்த வாய்ப்பை விடக்கூடாது என்று தனியாக இருக்கும் அக்னியிடம் பேச்சுக் கொடுக்க சென்றவள் அவன் அசந்த நேரம் அன்பினி அழைத்த அழைப்பை அட்டென்ட் செய்தாள். 
 
அன்பினியின் வரவை உணர்ந்து தானாகவே அவன் மேல் விழுந்து ஆர்ப்பாட்டம் செய்தாள். நிஷாவை அழைத்துக் கொண்டு  நின்றான் மகேஷ் முன்பு . 
 
 
அவன் நினைத்தது நடக்காமல் போன கடுப்பில்,  ” நாகராஜ் கூட கூட்டணி வச்சேன் வேலைக்கு ஆகல. உன் மாமனார் அந்த கிழட்டு பையனும் வேலைக்கு ஆகல. என்ன பண்ணாலும் உன்னையும் அவளையும் ஒண்ணுமே பண்ண முடியல.” என உளறிக் கொண்டிருக்க, நிஷாவின் காலனிகளை கழட்டியவன் அவள் முன்பே அடி வெளுத்து கட்டினான். 
 
 
அதில் அரண்டு விழித்திருந்த நிஷாவிடம், “உன்னோட நல்ல நேரம் என் பொண்டாட்டி கையால அடி வாங்கல. தப்பி தவறி கூட அவ கண்ணுல பட்டுடாத. உயிருக்கு உத்தரவாதம் இல்லை.” என்றவன் அவளுக்கும் சேர்த்து  
ஆறு மாதத்திற்கு எழ முடியாதவாறு மகேஷின் கால் கைகளை உடைத்து விட்டான் .
 
***
திவ்யா விஷயத்தை சொல்ல, வீட்டில் இருந்த அனைவரும் பதற ஆரம்பித்தனர். நடு ஹாலில் அமர்ந்து ஆளுக்கு ஒரு பக்கம் புலம்பிக்கொண்டிருக்க உள்ளே வந்த அன்பினி பதில் சொல்லாமல் தன் அறைக்கு சென்று விட்டாள். விக்ரம்   நடந்ததை அனைவருக்கும் விவரிக்க,
 
“இதுக்கு மேலயும் இவங்க ரெண்டு பேரையும் இப்படியே விடக்கூடாது.”என்றார் பரமேஸ்வரி.
 
“ஆமா அத்தை எனக்கும் அது சரியா படல.” என்றான் யோசனையாக.
 
“எல்லாம் உங்களால தான் வந்துச்சு.  ரெண்டு பேரும் சண்டை போட்டாலும் ஒன்னா தான் இருந்தாங்க. தட்டி கேட்கிறேன்னு பிரிச்சு விட்டுட்டீங்க.” என திவ்யா சாதாரணமாக கூற, கலங்கிவிட்டான் விக்ரம்.
 
 
அவை முகத்தில் பிரதிபலிக்க மற்றவர்கள் திட்டினார்கள். “விடுங்க அத்தை அவ சொல்றது உண்மைதான். இதை நானே சரி பண்றேன்.” தீவிரமான யோசனைக்கு சென்றான்.
 
 
அரை மணி நேரம் கழிந்திருக்க, “அத்தை நீங்க நாளைல இருந்து பரமேஸ்வரி டெக்னாலஜிஸ் எம் டி ஆகிடுங்க. அக்னி கொஞ்ச நாள் வீட்டுல இருக்கட்டும். மாமா பேசுனா கண்டிப்பா அக்னிய வீட்டுக்கு கூப்பிடுவா. ரெண்டு பேரும் பண்ற காதலுக்கு ஒரு வரம் கூட தாக்கு பிடிக்க மாட்டாங்க, சேர்ந்திடுவாங்க. அதுவும் இல்லாம நீங்க நிர்வாகம் பண்ண ஆரம்பிச்சா தான் அக்னி மனசு நிம்மதியாகும். குடும்பத்துக்குள்ள மேற்கொண்டு எந்த பிரச்சனையும் வராம இருக்கும்.” என்று தன் எண்ணத்தை சபையில் முன்வைக்க அதுதான் சரி என்று பட்டது  அனைவருக்கும்.
 
 
***
 
கரும் இருட்டில் நன்றாக கேட்டது அக்னியின் கார் சத்தம். அவனுக்காக காத்திருந்தவள் வேகமாக எழுந்து நிற்க, கண்ணாடியை இறக்கி பார்த்தான் அவளை. இருவரும் மௌன மொழிகளை கையில் எடுக்காமல் இருட்டில் கண்களை அலை மோதி கொண்டிருக்க, உள்ளே சென்று விட்டாள் அன்பினி. பெருமூச்சு விட்டவன் இருக்கையை பின்னுக்கு தள்ளி தூங்க முயன்றான். கதவு திறக்கும் ஓசை அவன் விழிகளை திறந்தது. 
 
 
தன்னை நோக்கி வரும் அன்பினியை கண்டு பழையபடி இருக்கையில் தலை சாய்ந்து கண் மூடினான். உள்ளே அமர்ந்தவள், “அக்னி” என்றழைக்க, அப்போதுதான் பார்ப்பது போல்,
 
“வாங்க மேடம் எப்ப வந்தீங்க? என்ன என் வீட்டுக்குலாம் வந்து இருக்கீங்க.” என்று நலம் விசாரிக்க, ஓரக்கண்ணால் முறைத்தாள் அவனை. அதையெல்லாம் கண்டு கொள்ளாதவன், “சாரி மேடம் இது பேச்சுலர் கார்.  வந்தவங்களுக்கு சாப்பிட கொடுக்க கூட ஒன்னுமே இல்ல. ” என்றான்.
 
 
“யார் அவ” இரு வார்த்தையில் அவள் நிறுத்த,
 
“உன் பிரண்டோட ஃப்ரெண்ட்.” என்றான். 
 
எந்த விளக்க உரையும் தேவைப்படாமல் போனது அந்த பதிலில். இருவரும் தங்களால் முடிந்த வரை அமைதியாக இருக்க, கார் கதவு தட்டப்பட்டது. சுயநினைவு பெற்று கதவை திறக்க மொத்த குடும்பமும் நின்றிருந்தார்கள்.
 
“வீட்டுக்குள்ள போ அக்னி” என்ற பரமேஸ்வரியின் விழிகள் மருமகள் மீது இருக்க, அவளோ தலை குனிந்து இருந்தாள்.
 
திரும்பி மனைவியை பார்த்தவன், “இல்லம்மா எனக்கு வேலை இருக்கு கிளம்புறேன்.” என்று விட்டு, “அன்பு இறங்கு.” என்றான்.
 
 
“சொன்னத செய்!” உரக்க உரைத்தார்.
 
அன்பினி மௌனம் காக்க, அக்னி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். “அக்னி அம்மா சொன்னா கேக்க மாட்டியா.” என்ற அன்னையின் வினாவிற்கு பதில் சொல்ல முடியாமல் முழித்தான்.
 
“இதுக்கு மேலயும் ரெண்டு பேரும் பிடிவாதம் பிடிச்சீங்கன்னா நாங்க எல்லாரும் கிளம்பிடுவோம்.” என்ற பேச்சுக்கு பின்  காரை விட்டு இறங்கினான் அக்னி. 
 
“உனக்கு தனியா சொல்லணுமா  வீட்டுக்குள்ள போ.” என்ற மாமியாரை ஒரு மாதிரியாக பார்த்தவள் உள்ளே சென்றாள்.
 
 
அவர்களுக்குப் பின் மொத்த குடும்பமும் போக, “நான் அப்பவே சொல்லல உங்க தங்கச்சி நடு தெருவுக்கு கூட்டிட்டு வந்துடுவாங்கன்னு.” என்று சின்னவள் சிரிக்க,
 
“என் தங்கச்சி மாதிரி ஒரு பொண்ணுக்கு ரோட்ல என்ன உலகத்துல எங்க வேணாலும் நிக்கலாம்.” விட்டுக் கொடுக்காமல் பேசினான் விக்ரம். 
 
“தங்கச்சி உருட்டு கூட கேட்க நல்லா இருக்கு.” என்றதும் கோபம் இல்லாத முறைப்பு அவனிடம்.
 
***
 
வீட்டில் கால் வைத்த அக்னியின் உடல் காற்றில் மிதப்பது போல் இருந்தது. அங்கிருந்த ஒவ்வொரு பொருளும் அவனிடம் பேசியது போன்ற பிரம்மை . உடைந்த கை இனி ஒட்டவே ஒட்டாது என்றிருந்த நிலை மாறி தன் கையில் பொருந்தி ரத்தம் ஊறும் விந்தை அவனுள். ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவன் மனம் லேசானது.
 
தன் அறைக்கு சென்றவன் மனம் படபடப்பானது. மனைவியின் ஞாபகம் பசை போல் ஒட்டிக்கொள்ள அவளுடன் சண்டை இட்ட நாட்களும், மோகங்களும் வரவேற்றது. எந்த மனிதனுக்கும் அவன் நேசிக்கும் உறவு அருகில் இல்லை என்றால் மரண வலி நிச்சயம் . அதைவிட கொடுமையானது கண் முன் இருந்தும் நெருங்காமல் இருப்பது. 
 
மெத்தையில் அமர்ந்தவன் அதை வருடி ரசிக்க அவன் மனைவியை வருடிய சுகம் கிடைத்தது. உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் எகிறி குதிக்க, கண்கள் அவளை வரவேற்றாலும் மனம் என்ன பேசுவாளோ என்று பரிதவித்தது. 
 
உள்ளே வந்த அன்பினி அவன் முகத்தை பார்க்க தடுமாறினாள். அதைக் கண்டு விரக்திக்கு ஆளானவன், “சாரி அன்பு அம்மா பேச்சை மீற முடியல. ஒரு ரெண்டு நாள் டைம் கொடு ஏதாவது சாக்கு சொல்லி கிளம்பிடுறேன்.” என்றவனை கடுமையாக முறைத்தாள்.
 
 
அந்தப் பார்வையில் மதி கலங்கியவன் காரணம் தெரியாமல் முழிக்க, தலையணையை எடுத்துக் கொண்டு பால்கனி சென்றவள் கதவை சாற்றிக் கொண்டாள். அக்னியின் பால்கனி அறை  கதவு கண்ணாடியால் செய்யப்பட்டது. தெளிவாக வெளியில் இருக்கும் காட்சிகள் விழும். 
 
 
சந்தோஷமான மனநிலை விலகி போய்விட்டது அவனை விட்டு. அன்பினியின் செயலில் தன்னை வெறுத்தவன் கட்டிலில் சரிந்தான். வருடும் பொழுது இருந்த ஆனந்தம் முள்ளாய் குத்தி வலிக்கச் செய்தது படுத்ததும். 
 
அவளை திரும்பி பார்ப்பதும் விழி மூடுவதும் என்று நேரங்களை கடத்திக் கொண்டிருந்தவன் முடிவெடுத்து நகர்ந்தான் அவளிடம். கண்ணாடி வழியே அவன் என்ன செய்கிறான் என்பதை கவனித்தவள் அருகில் நெருங்கியதும் விழிகளை மூடிக்கொண்டாள். 
 
 
தலையணையை தரையில் போட்டவன் அவளை பார்த்தவாறு படுத்துக் கொண்டான். இருவருக்கும் நடுவில் கண்ணாடி கதவு மட்டுமே தடையாக இருந்தது. உள்ளிருந்து மட்டுமே லாக் செய்ய முடியும் என்பதால் அவள் சாற்றிய கதவை லேசாக திறந்தவன், “அவ்ளோ தூரம் இருந்து பார்த்ததுக்கு இது பரவால்ல அன்பு. ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு தான் நிம்மதியா தூங்க போறேன். குட் நைட்… லவ் யூ அன்பு.” என முத்தம் கொடுக்க முயன்றவன் அவள் முறைப்பதை உணர்ந்து கண்ணாடி கதவை சாற்றி அதில் இதழ் பதித்தான்.
 
 
இதழ் தடம் கண்ணாடி கதவில் காட்சியளிக்க அவளைப் பார்த்தவாறு கண் அயர்ந்தான். அக்னி உறங்குவதை உறுதி செய்து கொண்டவள் அந்த முத்த தடத்தை வருடினாள். அவன் விழிக்காதவாறு லேசாக கதவை திறந்தவள்   நெருங்கி செல்ல, மனம் என்ன உரைத்ததோ கதவை சாற்றிக்கொண்டு திரும்பிப் படுத்தாள்.
 
***
 
தூக்கத்தில் இருந்த திவ்யாவின் கனவில் விக்ரம் பஞ்சுமிட்டாய் பாக்கெட்டுகளோடு நின்றான்.பதறி அடித்து எழுந்தவள் விக்ரமின் அறை கதவை அவன் திறக்கும் வரை தட்டிக் கொண்டிருந்தாள் . தூக்கத்தில் தடுமாறி கதவைத் திறந்தவன் தலையைப் பிடித்து நான்கு முறை சுழற்றியவள்,
 
“என்னை பார்த்தா சோத்து மூட்ட மாதிரியா இருக்கு. மனச டச் பண்ற மாதிரி ப்ரொபோஸ் பண்ணாம வயிற டச் பண்ற மாதிரி பண்ணி இருக்கீங்க. இந்த லட்சணத்துல வாழ்க்கை முழுக்க பஞ்சுமிட்டாய் வாங்கி தர தயாராம்.” என்று மீண்டும் அந்த முடியை பிடித்து சுழற்றினாள்.
 
தூக்கத்தில் ஒன்னும் விளங்காமல் கொட்டாவி விட்டவன், “பஞ்சு மிட்டாய் வாங்கி தரன்னு சொன்னது தப்பா.” என்றிட,
 
“பஞ்சு மிட்டாய் வாங்கி தந்தே காச கரைச்சிட்டா எனக்கு பொம்மை, சாக்லேட், குழிப்பணியாரம், ஐஸ்கிரீம் இதெல்லாம் வாங்கி தர எப்படி காசு இருக்கும்.” என்ற திவ்யாவின் பதிலில் இருந்த தூக்கம் தென்னாப்பிரிக்கா திசைப்பக்கம் ஓடிவிட்டது.
 
 
விழி இரண்டும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தது அவன் முழித்த முழியில். பார்க்க அழகான கரடி பொம்மை போல் தோன்ற, “கொஞ்சம் அழகா தான் இருக்கிங்க மாமா.” என்றாள்.
 
 
“எம்மா தெரியாம ப்ரொபோஸ் பண்ணிட்டேன். நீ கொடுக்கிற ஜர்க்க பார்த்தா நான் தினமும் ராத்திரி அல்லோல பட்டு நிக்கணும் போல. உங்க அண்ணன் அளவுக்கு ரோட்டுல தூங்குற தைரியம் எனக்கு இல்ல.” என்று சரணடைந்து விட, கலகலவென சிரிப்பு அவளிடத்தில்.
 
 
“சும்மா விளையாட்டுக்கு கேட்டேன் மாமா.”என்றாள்.
 
மாமா என்றதும் அவனுள் காதல் பிறப்பெடுக்க, “விளையாட்டுக்கு பொம்மை கேட்டாலும் சரி மாமன கேட்டாலும் சரி எப்பவும் எல்லாத்துக்கும் ரெடி.” என்ற கையோடு அவளை அறைக்குள் தள்ளினான்.
 
 
“அய்யோ மாமா!” என்ற கூச்சலோடு அவனுடன் ஒன்றி நின்று 
 
“என்னை எதனால பிடிச்சது.” என்று கேட்டாள்.
 
“எனக்கு நீ இன்னும் ஓகே சொல்லவே இல்லையே அப்புறம் எப்படி சொல்றது.” என்றான் ரசித்துக்கொண்டு.
 
“கண்டிஷனுக்கு ஓகே சொன்னா ஓகே.” கொக்கி போட்டாள் கண்ணால்.
 
விழியால் என்னவென்று விசாரிக்க, “எனக்கு டீச்சர் ஆகணும்னு ஆசை. முழுசா முடிக்க இன்னும் நாலு வருஷம் ஆகும். ஒருவேளை என்னை நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா அதுக்கு  தடை போடக்கூடாது. அதே மாதிரி உங்களுக்காக என் குடும்பத்தை எப்பவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். நீங்க என்னோடு சேர்த்து என் குடும்பத்தையும் ஏத்துக்கணும்.” என்றாள் தெளிவான உறுதியோடு.
 
“விளையாட்டு பொண்ணு நினைச்சேன்.” என்றவன் மேலிருந்து கீழாக அவளை ஸ்கேன் செய்து  ” பொறுப்பான பொண்டாட்டியா இருப்பன்னு நம்பிக்கை வந்துடுச்சு.” என்றான்.
 
 
“எனக்கு நம்பிக்கை வரணும்னா நான் சொன்னதுக்கு ஓகே சொல்லுங்க மாமா.” 
 
“எப்பவும் அன்பினிய அடக்கி வைக்கணும்னு ஒரு அண்ணனா நினைச்சதில்ல. வர உன்னை மட்டும் எப்படி வைப்பேன். வேணும்னா நீ முழுசா படிச்சு முடி. நம்ம அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம்.” என்றவன் விலகி நின்றான்.
 
“அதுக்கெல்லாம் அவசியம் இல்லை. நீங்க சரின்னு சொன்னா போதும். நாற்பது வயசுலயும் டீச்சர் ஆகலாம். அந்த வயசுல உங்களுக்கு பொண்டாட்டியா தான் ஆக முடியாது.” என்றதும் சிரிப்பு இருவருக்கும்.
 
***
 
மிதமான இருட்டு வெளியில் இருப்பதால் விடிந்தது போல் இருந்தது அன்பினிக்கு. தூக்கம் கலைந்தவள் சோம்பல் முறித்து திரும்ப, அவளையே வைத்த கண் வாங்காமல் ரசித்துக்  கொண்டிருந்தான் அக்னி.  
 
‘என்ன’ பார்வையால் அவள் கேள்வி எழுப்ப,
 
‘லவ் யூ டி’ என்றான்.
 
‘உன்னை நான் இன்னும் மன்னிக்கல’ என்றதும் லேசாக கண்ணாடி கதவை திறந்தவன்,
 
“மாமா வேணா கிஸ் பண்ணி சாரி கேக்கவா.” என்று உதட்டை அவளிடம் குவித்துக் கொண்டு நெருங்க, கதவை ஓங்கி சாத்தினாள்.
 
நல்ல வேலையாக சுதரித்துக் கொண்டவன் உதட்டை காப்பாற்றிக் கொண்டான். “அன்பு ஹனிமூன் போலாமா.” என ஏக்கமாக பார்க்க,
 
“ஏன்? அங்க என் மூஞ்சில கேக் அடிக்கவா.” என்ற வார்த்தையில் கண்களை மூடிக்கொண்டான் கலங்கி. 
 
 
விடியல் இருவருக்கும் நன்முறையில் துவங்காமல் இருக்க, அவளை சமாதானப்படுத்தும் வழியை தேட ஆரம்பித்தான். குளித்து முடித்து வந்தவன் ஈர தலையோடு அவள் முன்பு நிற்க, கண்டுகொள்ளாமல் வெளியில் சென்று விட்டாள். திரும்பி வருவாள் என்று எதிர்பார்த்து தோற்றவன் உடை மாற்றிக் கொண்டு வெளியில் சென்றான். 
 
 
வேலை இருப்பதாக விக்ரம் சீக்கிரமாக கிளம்பி விட மற்றவர்கள் மட்டும் இருந்தார்கள். மனைவியின் வார்த்தையில் சோர்ந்த மனம் குடும்பத்தை பார்த்து மாறிவிட்டது. நந்தினி பேச்சு கொடுக்க, மனைவி முன்பு நற்பெயர் வாங்க அவரோடு சகஜமாக பேசினான். 
 
பரமேஸ்வரி சாப்பிட அழைக்க, “அன்பு வா சாப்பிடலாம்.” என்றழைத்தான் மனைவியை.
 
“நான் உன் குடும்ப ஆள் இல்லை அக்னி ஒன்னா உட்கார்ந்து சாப்பிட.” என்ற சத்தத்தோடு அங்கிருந்து நகர, சாப்பாடு உள்ளே செல்ல மறுத்தது அக்னிக்கு.
 
எங்கு அவளிடம் கோபத்தை காட்டி விடுவோமோ என்ற பயத்தில் அவன் வேக வேகமாக கிளம்பி விட்டான். அங்கு அவனுக்கு முன்னால் பரமேஸ்வரி அமர்ந்திருந்தார் ராஜா தோரணையாக. அம்மாவை  பார்த்தவன் இன்பமாக அதிர, அவனை சுற்றி அனைவரும் நின்றிருந்தார்கள். நடப்பதைக் கண்டு பேச முடியாமல் நின்றிருந்தவனுக்கு,
 
“இனிமே உனக்கு இங்க வேலை இல்ல. சுயமா சம்பாதிப்பியோ இல்ல எங்கயாது வேலைக்கு போவியோ ஓடிரு.” என்றார் சிரித்த முகமாக.
 
 
துளியும் கோபம் இல்லை அந்த வார்த்தையில். அக்னியின் பல நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது. தன் கண்ணையே நம்ப முடியாமல் இமை சிமிட்டி உறுதி செய்தான் காணும் காட்சியை. 
 
நேற்று இரவு ஐடியா கொடுத்த விக்ரம் அவர் நிர்வாகிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டான். அன்பினியிடம் இதை தெரிவிக்காமல் இருவரும் அசந்த நேரம் கிளம்பி விட்டார்கள் அனைவரும். நினைத்த லட்சியம் நிறைவேறிய மகிழ்வோடு இல்லம் திரும்பினான். 
 
 
“தேங்க்ஸ் மாமா” ஏற்பாடு செய்ததற்காக வருங்கால ஆசிரியை நன்றி உரை ஆழ்த்த,
 
“என் மாமியாருக்கு நான் செஞ்சேன் உன் தேங்க்ஸ் தேவையில்லாதது.” என்றான் தோள்களை குலுக்கி.
 
“எனக்காக ஒன்னு செய்யணுமே…” என இழுத்து திவ்யா நெளிய,
 
“பஞ்சு மிட்டாய் வேணுமா.” என்றான் குறும்போடு.
 
“தெரியாம உங்க முன்னாடி சாப்பிட்டேன் மாமா எப்ப பாரு அதை சொல்லியே கேலி பண்றீங்க.” என்று சிணுங்கியவள், 
 
“அண்ணன் கிட்ட கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குங்க” என்ற பெரும் இடியை இறக்கினாள்.
 
 
விக்ரம் மனத்திரையில் ஆரம்பத்தில் இருந்து அக்னி உடனான சம்பவங்கள் வந்து அச்சுறுத்தியது. இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் அன்பினி போல் அவனும் எப்பவோ அடங்கியிருப்பான் அக்னியிடம். இப்போது சென்று உன் தங்கையை கொடு என்று கேட்டால் கேட்டதை தவிர மற்ற அனைத்தையும் கொடுத்து விடுவான் என்ற அபாய மணி அடித்தது. 
 
எச்சில் விழுங்கி கலவரமாக பார்த்தவன், “உனக்காக பரங்கி மலைய தூக்கிட்டு வர சொல்லு அசரமா தூக்கிட்டு வரேன். ஆனா உன் அண்ணன் கிட்ட பேச முடியாது சாரி.” என்று போட்டியிலிருந்து அவன் விலக பார்க்க,
 
 
“ஒரு வீரனுக்கு இதெல்லாம் அழகா மாமா.” என உசுப்பி விட்டாள்.
 
“நான் வீரனே இல்லடி.” கவிழ்ந்து கிடந்தவனை பார்த்து சிரித்தவள்,
 
 
“அதெல்லாம் எனக்கு தெரியாது அண்ணன் ஓகே சொன்னா தான் நம்ம கல்யாணம்.” என்றாள் முடிவாக.
 
 
“ஏண்டா விக்ரமே உனக்கு ஊர் உலகத்துல வேற பொண்ணே கிடைக்கலையா. போயும் போயும் அவன் தங்கச்சிய தான் இந்த மானங்கெட்ட மனசு ஆசைப்படணுமா.” தனக்குத்தானே காரி துப்பியவன் சம்பவத்தை நடத்த தயார் ஆனான்.
 
 
***
 
வீட்டிற்கு வந்த அக்னி விஷயத்தை அவளிடம் மகிழ்வாக கூற, அத்தையை அழைத்து வாழ்த்து சொல்லிய கையோடு தன்னிடம் சொல்லாததற்கு சேர்த்து திட்டி விட்டாள்.
 
“மருமகளே நான் உனக்கு மாமியார் ஞாபகத்துல இருக்கட்டும்.” என்று திட்டு வாங்கிய சோகத்தில் அவர் கூற,
 
“மருமகள விட்டுட்டு இவ்ளோ பெரிய விஷயம் பண்ணதுக்கு இன்னும் நல்லா திட்டனும் போனா போகுதுன்னு விடுறேன்.” என்றாள் பெரிய மனதோடு.
 
அத்தையிடம் பேசியவள் அழைப்பை துண்டிக்க, “அன்பு என் கிட்ட இப்படி சிரிச்சி பேச மாட்டியா ” என்றதும் குரலில் இருந்த சிரிப்பு மறைந்துவிட்டது.
 
 
“ஒட்டிக்கிட்டு வந்தவளுக்கு அவ்ளோ உரிமை இல்லையே அக்னி” என்று வெளியேற, கோபத்தோடு தடுத்தான்.
 
 
 
“எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு அன்பு.” என்றதும்,
 
“அதேதான் அக்னி எனக்கு இருக்க அளவோட நின்னுக்கிறேன்.” பதில் கொடுத்தாள். 
 
 
முடியை பிடித்து “வீம்பு பண்ணிட்டு இருக்காத டி வாய ஒடச்சிடுவேன்.” இனியும் விட்டால்  தலைக்கு மேல் அமர்ந்து விடுவாள் என்று உணர்ந்தவன் பழைய ரூட்டை பிடிக்க,
 
 
“விடு.!” 
 
“முடிவா என்னதான் நினைச்சிட்டு இருக்கன்னு சொல்லு விடுறேன்.” என்றவன் அவளை நெருங்கி நின்றான்.
 
“அதை உன்கிட்ட சொல்லணும்னு அவசியம் எனக்கு இல்லை.” என்றாள் விலக முயன்று .
 
 
“என்கிட்ட சொல்லாம வேற எவன் கிட்ட டி சொல்லுவ.” 
 
“ரோட்ல போற எவன் கிட்ட வேணா சொல்லுவேன் உன் கிட்ட சொல்ல மாட்டேன்.” என்றதும் இலகுத்தன்மை மறைந்தது அவனை விட்டு.
 
முடிக்குள் ஐ விரல்களை நுழைத்து இருக்க, “ஸ்ஸ்ஆஆ அக்னி “வலியில் முனங்கினாள்.
 
 
“புருஷன் இருக்கும் போது எவன் கிட்ட சொல்லுவ.” என்றவன் விரல்களில் அழுத்தம் கூட்ட கண்ணை மூடிக்கொண்டாள் வலியை பொறுக்க.
 
“புருஷனா இது எப்போல இருந்து.”
 
ஆடை உள் மறைந்து இருக்கும் அவன் கட்டிய தாலியை எடுத்தவன், “இதை கட்டினதுல இருந்து.” என்றான் கோபத்தை முடிந்த அளவு கட்டுப்படுத்திக் கொண்டு.
 
“இதுக்கு அவ்ளோ மதிப்பு இல்லை அக்னி வெறும் கயிறு தான். சந்தேகமா இருந்தா கழட்டி பாரு… உனக்குள்ள எந்த வலியும் வராது.” என்றவள் அவனை தீர்க்கமாக பார்க்க அக்னியின் முறைப்பு நொடிக்கு நொடி வீரியம் எடுத்தது.
 
 
பேசிக்கொள்ளாமல் அதே நிலையில் இருந்தவர்கள் முறைப்பை முன்னிறுத்திக் கொண்டு பொழுதை கழிக்க, மற்றொரு ஜோடி ஆயத்தமானது அடுத்த அத்தியாயத்திற்கு. 
 
 
பரமேஸ்வரி டெக்னாலஜிஸ் இருந்த  திவ்யா அனைத்தையும் ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கிருந்தவர்களிடம் பரமேஸ்வரியை அறிமுகப்படுத்திய கையோடு அடுத்து இவள் தான் என்று அறிமுகம் செய்ய கரகோஷ ஒலி உற்சாகப்படுத்தியது. 
 
 
மணிவண்ணன் வேலைக்கு  கிளம்பி விட, கம்பெனியின் அழகை கண்டு கழித்த திவ்யா தந்தையை தேடினாள்.
அவரை காணாமல் அன்னையிடம் விசாரித்தாள்.
 
“இன்னைக்கு  பி ஜிக்கு பீஸ் கட்ட போகணும்  ம்மா. அப்பா கூட போகலாம்னு இருந்தேன்.” என்றவள் அக்னியை அழைக்க, அன்பினியோடு மல்லு கட்டிக் கொண்டிருந்ததால் கவனிக்கவில்லை அவன்.
 
என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்க, “விக்ரம் இவளை கொஞ்சம் காலேஜ் வரைக்கும் கூட்டிட்டு போயிட்டு வாப்பா.” என்றார் பரமேஸ்வரி.
 
 
திவ்யாவை முறைத்துக் கொண்டிருந்தவன் அத்தையின் பேச்சில், “சரிங்க அத்தை” என்றான்.
 
அவன் முறைப்பைக் கண்டவள் யோசனையோடு பின் தொடர, கார் சாலையில் ஊர்ந்து சென்றது கல்லூரி நோக்கி. அரை மணி நேரம் கடந்த பின்பும் விக்ரம் எதுவும் பேசாமல் வர,
 
“மாமா கோவமா இருக்கீங்களா.” என கேட்டாள்.
 
அவன் பதில் சொல்லாமல் மௌனத்தை கடைபிடிக்க, “எதுக்குன்னு சொல்லிட்டு கோபமா இருங்க மாமா.” அவனைப் பார்த்தவாறு திரும்பி அமர்ந்தவள் விக்ரமின் சட்டை காலரை பிடித்து இழுத்தாள்.
 
அதை தடுத்தவன், ” காலேஜ் போகணும்னு சொன்னா நான் வர மாட்டேனா. என் ஞாபகம் கொஞ்சம் கூட இல்லாம அப்படி யோசிச்சிட்டு நிக்கிற.” என்று முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டான்.
 
அவனை மேலும் கடுப்பேற்றினாள் உரக்க சிரித்து. திரும்பி  முறைத்தவன் பற்களை கடிக்க, “அட என்ன மாமா நீங்க பச்ச பிள்ளையா இருக்கீங்க.” என்று அவன் கன்னத்தை  இடிக்க, இன்னும் முறைப்பு அதிகமானது அவனிடத்தில்.
 
 
“உங்க கூட போறன்னு ஓப்பனா சொல்ல முடியுமா. அம்மாவே சொல்லணும்னு தான் அப்பா போனதுக்கப்புறம் இந்த விஷயத்தை ஞாபகப்படுத்தினேன்.” என்று கண்ணடித்தாள். 
 
 
புருவம் இரண்டும் தூக்கிக் கொண்டது அவனுக்கு. கடுப்போடு இருந்தவன் காதல் வேஷத்தை முகமும் முழுவதும் அப்பிக்கொள்ள,
 
“என் பஞ்சு மிட்டாய் குள்ள எம்புட்டு அறிவு.”என்று திருஷ்டி கழித்தான். 
 
 
“காதல் வந்துட்டாலே நிறைய பொய் சொல்லணும் மாமா. இல்லனா இந்த உலகம் நம்ம காதலர்கள்னு நம்பாது.” என்றவளோடு கல்லூரியில் இறக்கியவன் தேவையான அனைத்தையும் செய்து முடிக்கும் வரை பின்னால் சுற்றிக் கொண்டிருந்தான். 
 
 
பணம் செலுத்தும் இடத்தில் திவ்யா பர்சைத் திறக்க, தடுத்தவன் தன்னிடம் இருந்ததை கொடுத்தான்.
 
“மாமா அண்ணாக்கு தெரிஞ்சா சத்தம் போடுவான்.” என்று அவள் தயங்க,
 
“அவன் கிடக்கிறான்”  முழு பணத்தையும் அவனே செலுத்தினான்.
 
வீட்டை நோக்கி காரில் இருவரும் வந்து கொண்டிருக்க திவ்யாவின் மனம் சரியில்லாமல் போனது. எதற்கு என்று தெரிந்தாலும் அவன் கேட்காமல் வர, “இப்ப அண்ணன் கேட்டா நான் என்ன சொல்லட்டும் மாமா.” சந்தேகம் கேட்டாள் அவனிடம்.
 
 
“என் வருங்கால புருஷன் கொடுத்தான்னு சொல்லு.” என்றதும் அவள் முறைக்க,
 
“சரி என் லவ்வர் கொடுத்தான்னு சொல்லு.” என்றான் சிரிப்போடு.
 
“விளையாடதிங்க மாமா. நீங்க எதுக்கு காசு கொடுத்தீங்கன்னு கேட்டு நிச்சயம் சண்டை போடுவான். என்ன பண்றதுன்னு தெரியாம பயத்துல வந்துட்டு இருக்கேன் காமெடி பண்றீங்க.” 
 
 
“இப்ப எதுக்கு திவி இவ்ளோ டென்ஷன் ஆகுற . நான் வேணான்னு சொல்லியும் மாமா தான் காசு கொடுத்தாங்கன்னு  சொல்லு . எங்கிட்ட வந்து கேட்டா நான் பதில் சொல்கிறேன்.” என்றான்.
 
ஓரளவிற்கு சமாதானம் அடைந்தவள், “மாமா உங்க அப்பா நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொல்லுவாங்களா.”  என சோகமாக முகத்தை வைக்க,
 
“அவர கேட்டு உன்ன விரும்பல திவி.” கார் ஓட்டிக்கொண்டே கூறினான்.
 
“பயமா இருக்கு மாமா. அண்ணனை கூட அண்ணி சமாளிப்பாங்க. எனக்கு பயம் எல்லாம் பெரிய மாமாவ நினைச்சு தான். என்னதான் ரெண்டு குடும்பமும் சகஜமா பேசிக்கிட்டாலும் அம்மா பட்ட கஷ்டத்தை ஏத்துக்க முடியல. என்னைக்காவது ஒரு நாள் நானே அவர்கிட்ட அதை பத்தி பேசி, நமக்குள் ஏதாவது பிரச்சனை வந்திடுமோன்னு பயமா இருக்கு. ” 
 
 
திவ்யாவிற்கு பதில் சொல்லாதவன் அழைத்துச் சென்றான் ஐஸ்கிரீம் பார்லருக்கு. நல்ல மனநிலையில் இல்லாததால்  அவளும் அவன் பின்னே செல்ல, அவளுக்கு பிடித்ததை ஆர்டர் செய்தான். சாப்பிடாமல் அதில் பூச்சி பிடித்துக் கொண்டிருக்க,
 
 
“எங்க அப்பா பண்ணதை மன்னிக்க வேணாம் மறந்திடு. அத்தைக்கு இல்லாத கோபமா உனக்கு. என்னைக்காவது ஒரு நாள் தங்கச்சி அண்ணன்ற பாசம் அவங்களை மாத்தும். எங்களை மாத்துன மாதிரி. பழசை பேசி மனச கஷ்டப்படுத்துறதுக்கு பதிலா இனி வர காலத்தை சந்தோஷமா வாழலாம். ” என்ற  உரையை கேட்ட பின்னும் அவள் மனம் தெளியாமல் இருந்தது.
 
 
அவள் உள்ளங்கையை வருடி, “என்ன பிரச்சனை நடந்தாலும் நம்ம உறவுல விரிசல் வராது. உன்ன விரும்ப ஆரம்பிச்சதுல இருந்து நீ என்னோட சொத்து. அதை யாருக்காகவும் விட்டுத்தர தயாரா இல்லை. சண்டையே போடாம சந்தோஷமா வச்சுப்பன்னு சொல்ல மாட்டேன் திவி. என்ன சண்டை வந்தாலும் விட்டு விலகாம இருப்பேன். இதுக்கு மேலயும் மேடம்க்கு சந்தேகம் இருந்தா சொல்லிடுங்க வெத்து பத்திரத்துல என்னைக்கும் பிரிய மாட்டேன்னு கையெழுத்து போட்டு கொடுக்கிறேன்.” என்று  சிரிப்பை நிறுத்த,
 
 
“என் மனசுல ஆல்ரெடி கையெழுத்து போட்டுட்டீங்க மாமா.” சோகம் மறந்து ஒன்றினாள் அவன் மனதோடு.
 
அம்மு இளையாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
14
+1
26
+1
1
+1
6

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *