2,363 views

(veetla vela athigam athanala innaiku post poda late aagiduchi sry nga. Last 3 post ku sariya rly panna mudiyala mannichidunga. Nalaiyoda story mudiyuthu. அடுத்த கதை
அழகிய ரகுவரனே…!
 
நிறைய வாசகர்கள் எதிர்பார்த்த ரகுவரன் வரப்போறான். உங்களோட அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்❤️❤️❤️❤️❤️
 

“ஹாய் சிவானி!” என்ற அர்ச்சனாவை இன்னும் பார்க்கவில்லை சிவானி. சூர்யாவும் வருங்கால மனைவியின் வார்த்தையை உணரவில்லை. அவனை அசைத்து நடப்புக்கு கொண்டு வந்தவள், “என்ன சூர்யா அவங்களை வச்ச கண்ணு வாங்காம பார்க்கறீங்க. என்னமோ உங்களோட பொண்டாட்டி மாதிரி.” என்றதும் வேர்த்து கொட்டும் முகத்தை அவசரமாக துடைத்தான்.

“என்ன அர்ச்சனா இந்த மாதிரி எல்லாம் பேசுற. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான சொன்ன பொண்ணுங்கள பார்த்தாலே தலை நிமிராதுன்னு. நீயே இந்த மாதிரி பேசுனா அவர் மனசு சங்கடப்படாது.”

“சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் தரணி.” என்றவள் சிவானியிடம், “இவர் தான் நான் கல்யாணம் பண்ணிக்க போற ஆள். வர டிசம்பர் மாசம் கல்யாணம். நீங்க கண்டிப்பா வரணும்.” என்றாள்.

சிவானியின் முகத்தில் அப்படி ஒரு கோபம், ஆத்திரம், அளவு கடந்த வெறுப்பு. சூர்யா அவளை பார்ப்பதை தவிர்த்தான் சாமர்த்தியமாக. “ஃப்ரெண்ட் என்னை இன்வைட் பண்ணாம என் முன்னாள் மனைவிய மட்டும் இன்வைட் பண்றது நல்லா இல்ல அர்ச்சனா.”

“நீங்க எனக்கு ஃப்ரெண்டு மட்டும் தான். ஆனா சிவானி அப்படி இல்லையே!.” என்றவள் அவளை நெருங்கி நின்று, “நான் கல்யாணம் பண்ணிக்க போறவரோட கிட்டத்தட்ட நாலு வருஷம் வாழ்ந்து இருக்காங்க. இன்பம் துன்பம் ரெண்டுத்துலையும் சரிசமமா பங்கு பெற்றிருக்காங்க. அவங்கள கூப்பிடாம எப்படி என் கல்யாணம் நடக்கும்.” என்று சூர்யாவின் மனதை சம்பட்டியால் அடித்தாள்.

பேச்சிழந்தவன் அசையாமல் இருக்க, சிவானி உடல் அதிர்ந்து பார்த்தாள். வீட்டில் இருக்கும் மற்ற மூவருக்கும் திகைப்புதான் என்றாலும் அமைதியாக இருந்தார்கள்.

“அதுவும் சரிதான். தாலி கட்டுன புருஷன் கிட்ட இல்லாத எதுவோ ஒன்னு நீ கல்யாணம் பண்ணிக்க போறவன் கிட்ட இருந்ததால தான் என் முன்னாள் மனைவி அவன் கூட ஊர் ஊரா சுத்திட்டு இருந்தா.” என்று மீண்டும் ஒருமுறை அவமானப்படுத்தினான் இருவரையும்.

“என்ன தரணி சொல்றீங்க!” என ஆச்சரியம் கொண்டவள் சூர்யாவிடம், “ஊர் ஊரா வா…போனீங்க.” கேட்டாள்.

“அங்க என்ன கேக்குற என்ன கேளு.” என நக்கலாக இருவரையும் பார்த்தவன்,

“பொண்டாட்டிய காணோம்னு தேடி போனா இதோ இவன் கூட கசமுசா பண்ணிட்டு இருக்கா. என் கண்ணையே என்னால நம்ப முடியல. அப்புறம் தான் ஒன்னு புரிஞ்சுது அர்ச்சனா.” என்று பேசியதை முடிக்காமல் இழுத்தான்.

“அப்படி என்ன புரிஞ்சுது தரணி.” அவளும் புதிதாக கேட்பது போல் கேட்க,

“என் முன்னாள் மனைவி மாதிரி ஒரு சுத்தமான பொண்ணுக்கு உன் பின்னால் கணவன் மாதிரி சுத்தமான ஆண் தான் பொருத்தம்னு.”

“அட ஆமா!” என பேசிக் கொண்டே தரணி பக்கத்தில் நின்றவள்,  “என்ன பொருத்தம்ல இரண்டு பேருக்கும்.” என்று புன்னகைத்தாள்.

சூர்யா அங்கிருந்து நகர பார்த்தான். பிடித்து வைத்தவள் சிரித்ததற்கு மாறாக முறைத்து, “நாலு வருஷமா இந்த பொறுக்கி நாய் அப்பா அம்மாக்கு தெரியாம இவளோட ஊர் மேஞ்சிட்டு இருந்திருக்கான். இதோ இந்த நாய் இருக்கு பாருங்க உங்கள விவாகரத்து பண்ணது கூட பெத்தவங்க கிட்ட சொல்லல. ரெண்டு வருஷம் கழிச்சு தான் அவங்களுக்கு விஷயமே தெரிஞ்சு இருக்கு. இந்த நாய் அவங்களையும் மதிக்காம இவனை நம்பி போயி நாலு வருஷம் தாலி கட்டாத வப்பாட்டியா வாழ்ந்திருக்கா.

காதல் இல்லாத காமம் எத்தனை நாளைக்கு. ரெண்டும் முட்டிக்கிட்டு அது அது வழிய பார்க்க கிளம்பிடுச்சுங்க. நான் செஞ்ச புண்ணியம் நீங்க வந்ததால எல்லா உண்மையும் தெரிஞ்சுது. நான் சாகுற வரைக்கும் உங்களை மறக்க மாட்டேன் தரணி.” என்று பேசி முடித்த அர்ச்சனா சூர்யாவின் கன்னத்தில் அசுர வேகமாக ஒரு அறை விட்டாள்.

விவாகரத்து வாங்கிக் கொண்ட சிவானி சூர்யாவோடு சுதந்திரப் பறவையாக வாழ ஆரம்பித்தாள். அவனின் பெற்றோர்கள் வெளிநாட்டில் இருந்து வரும் செய்தி தெரியவர தனியாக வீடு எடுத்து தாலிக்கட்டாமல் வாழ்ந்தார்கள். சிவானி திருமணம் செய்து கொள்ள வற்புறுத்த, நழுவிக் கொண்டே நான்கு வருடங்களை கடத்தி விட்டான். நல்ல தாம்பத்தியமே சில நேரம் கசந்து போக… இவர்களின் வாழ்வு சலிப்பை எதிர்கொண்டது.

வீட்டில் தனக்கு பெண் பார்க்கும் மோகத்தில் சிவானி அழுக்காக தெரிந்தாள் அவனுக்கு. அவை கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் பிரதிபலிக்க, எடுத்த எடுப்பில் ஆத்திரமாக கையாண்டவள் அவனின் உதாசினத்திற்கு பின் வலுவிழந்து நடுத்தெருவில் நின்றாள்.

சூர்யாவின் திருமண பேச்சை கேள்விப்பட்டவள் அவனிடம் நியாயம் கேட்க வரும் பொழுது தான் அன்று தரணியை ரோட்டில் பார்த்தது. அர்ச்சனா மீதி ஏற்பட்ட ஈர்ப்பில் விரட்டி அடித்தான்.

வீட்டிற்கும் செல்ல முடியாத நிலையில் திருமணத்தை நிறுத்தி சூர்யாவை திருமணம் செய்து கொள்ளும் நடவடிக்கையை மேற்கொண்டாள். எதுவும் பலனளிக்காமல் போனபோதுதான் ஒரு முறை தரணீஸ்வரன் அகல்யாவை ஜோடியாக பார்த்தாள் துணிக்கடையில்.

புத்தி தவறு செய்ததை சுட்டிக்காட்டியது. அகல்யாவிடம் அவன் காட்டும் அன்பு பொறாமையை கொடுத்தது. கூடவே சூர்யாவின் ஒதுக்கம் தப்பான வழிகளை யோசிக்க வைத்தது. சூர்யாவின் திருமணத்தை நிறுத்த நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருந்தவள் தன்னுடைய பாதுகாப்பிற்காக மீண்டும் தரணியிடம் வந்தாள்.

“பொண்ணுங்க நீ செலவு பண்ற காசாடா வேணும்னா செலவு பண்ணிக்க. எவ்ளோ தைரியம் இருந்தா இன்னொருத்தியோட வாழ்ந்துட்டு என்னை கல்யாணம் பண்ண பார்த்திருப்ப. நல்லவேளை கல்யாணத்துக்கு முன்னாடியே உன் லட்சணம் தெரிஞ்சிருச்சு. கல்யாணத்துக்கு அப்புறம் தெரிஞ்சு இருந்தா என் கையாலயே கொன்னு இருப்பேன் டா உன்ன. தரணி மாதிரி விட்டுட்டு அமைதியா இருந்திருக்க மாட்டேன்.” என்றவள் முன்பு எதுவும் பேச முடியாமல் நின்றான் சூர்யா.

“உனக்கு எல்லாம் அசிங்கமா இல்ல. என்ன பொண்ணு நீயெல்லாம். நல்லவேளை உன்கிட்ட இருந்து தரணி தப்பிச்சிட்டாரு.  ராத்திரி தூங்கும்போது கல்லை போட்டு கொல்ல கூட தயங்கி இருக்க மாட்ட போல. உங்க ரெண்டு பேரையும் இனி என் வாழ்க்கையில நான் பார்க்க கூடாது. பார்த்தா அந்த இடத்துலயே வெட்டி போட்டுடுவேன்.” அடக்கி வைத்திருந்த ஆத்திரம் மொத்தத்தையும் கொட்டிய அர்ச்சனா தரணிக்கு நன்றி தெரிவித்தாள்.

“நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் அர்ச்சனா. நான் சொன்னதும் கோபப்படாம உண்மை என்னன்னு அலசி ஆராய்ஞ்சதுக்கு. இந்த ரெண்டு ஈனப்பிறவிங்கள பத்தி எனக்கு எந்த கவலையும் இல்லை. உங்களை நினைச்சும் அதோ அவ கையில இருக்க அந்த குழந்தைய நினைச்சும் தான் நான் இதுல இறங்குனது.” என்றான்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே சிவானியின் குடும்பம் வந்தது. கூடவே அழுது கொண்டு ஒரு பெண்ணும் வந்தாள். கௌஷிக்கை பார்த்து கதறி அழுத அந்தப் பெண் ஓடிவந்து தன் மகனை அணைத்து கொண்டாள். தரணி வீட்டிற்கு வந்த நாளிலிருந்து அமைதியாக இருந்த குழந்தை தாயைப் பார்த்ததும் கட்டிக்கொண்டு அழுதது.

“நல்லா பாரு இதுதான் அம்மா குழந்தைக்கு நடுவுல இருக்க பந்தம். நம்ம பையன்னு நீ ஆயிரம் தடவை சொன்னாலும் உன் பார்வையும்  அந்த குழந்தை பார்வையும்  ஒரு நிமிஷம் கூட இந்த அன்ப காட்டல. அதுல தான் உறுதியா நம்பினேன் இது என்னோட குழந்தையா இருக்காதுன்னு.” என்றவன் அனைவருக்கும் விவரித்தான் நடந்ததை.

அன்று விழா நடக்கும் போது வந்த சிவானி மீது சந்தேகம் கொண்டவன் விசாரிக்க ஆரம்பித்தான்.  மருத்துவமனையில் இருந்து வந்தவள் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்ட்க்கு செல்ல, அவள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி மகனோடு வந்திருந்தார்.  கௌஷிக் வாய் பேச முடியாத குழந்தை. வறுமையின் காரணமாக வீட்டு வேலை செய்து தன் பிள்ளையை வளர்த்து வந்தார் அப்பெண்மணி.

வேலைகளை முடித்தவர் பிள்ளையின் மருத்துவ செலவிற்காக பணம் கேட்டார் சிவானியிடம். இருந்த கடுப்பை எல்லாம் கொட்டினாள் அவரிடம். மனம் நொந்து கிளம்பும் நேரம் குழந்தையைப் பார்த்த அரக்கிக்கு ஒரு யோசனை வந்தது. உடனே சிரித்த முகமாக அழைத்தவள் கை நிறைய பணம் கொடுத்து அனுப்பினாள்.

எஜமானி உதவியில் உள்ளம் பூரித்து போனவர் மனமார நன்றி சொன்னார். மறுநாள் வேலைக்கு வந்த அப்பெண்ணிடம் நைசாக பேச்சு கொடுத்தாள் சிவானி.

“அக்கா எனக்கு தெரிஞ்ச ஆஸ்பிட்டல் ஒன்னு இருக்கு. அங்க ட்ரீட்மென்ட் பார்த்தா ஒரு மாசத்துல உங்க மகன் பேசிடுவான்.” என்றதும் கண்ணீர் வடித்து மன்றாடினார் அங்கு அழைத்துச் செல்ல.

“அங்க உங்கள மாதிரி ஆளுங்கள விட மாட்டாங்க அக்கா.” என்றதும் அவர் தவிக்க, “குழந்தைய வேணா என்கூட அனுப்பி வையுங்க. ஒரு மாசத்துல குணமாக்கி உங்ககிட்ட தரேன்.” என்று தூபம் போட்டாள்.

முதலில் மறுத்த அப்பெண் யோசித்து பார்த்தாள். குடிகார கணவனும் உதவி செய்ய மாட்டான் என்பதை உணர்ந்து மனதை தைரியப்படுத்திக் கொண்டு அனுப்பி வைத்தார் சிவானியோடு. இதையெல்லாம் முன்பு அவளை கண்டுபிடித்து கொடுத்த உளவாளியை வைத்து தெரிந்து கொண்டான் தரணீஸ்வரன்.

ஆளாளுக்கு சிவானியை தகாத வார்த்தையில் பேசினார்கள். அதிலும் ஆதிலட்சுமி வரைமுறை தாண்டி வார்த்தையை விட, கூனி குறுகாமல் முறைத்து நின்றாள் அனைவரையும். அதைப் பார்த்து அவளின் பெற்றோர்கள் தன்னுடைய பெண் என்பதையும் மறந்து உச்சகட்ட கடுப்பில் பேசிக் கொண்டிருக்க,

“அவள திட்டுறதுல எந்த பிரயோஜனமும் இல்லை. சாதாரண மனநிலைல இவ்ளோ வேலையும் யாராலையும் செய்ய முடியாது. எனக்கு தெரிஞ்சு உங்க பொண்ணு மனநிலை சிதைஞ்சி இருக்கா. ட்ரீட்மென்ட் பார்க்காம விட்டா அவளை மனுஷியா பார்க்க முடியாது.” என்றாள் அகல்யா.

“என்னை பைத்தியம்னு சொல்றியா?” என அவளிடம் சண்டைக்கு பாயும்  சிவானியை அடித்தார்கள் பெற்றோர்கள். வெறி பிடித்த மிருகம் போல்,

“ஆமா நான் தான் இதெல்லாம் பண்ணேன். என் வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும் எப்பவும். அதுக்காக யார வேணா என்ன வேணா பண்ணவும் தயங்க மாட்டேன். ” கத்தி கலாட்டா செய்துவிட்டாள்.

“உங்க பொண்ண அடிச்சு திருத்த முடியாது. திருத்துறதுக்கு தகுதியான ஆளும் இவ கிடையாது. லயா சொன்ன மாதிரி நல்ல ஹாஸ்பிடலா பார்த்து சேருங்க.” என்றான் தரணி.

பிள்ளை கிடைத்த மகிழ்வில் தரணிக்கு நன்றி சொன்ன கௌஷிக் அம்மா அங்கிருந்து வேகமாக சென்று விட, சிவானியை அழைத்துச் செல்ல முயன்றார்கள் பெற்றோர்கள்.

“நான் எங்கயும் வரமாட்டேன் இங்கதான் இருப்பேன். இது என்னோட வீடு.” சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தாள் பைத்தியம் பிடித்தது போல்.

அசிங்கத்தோடு நின்றிருந்த சூர்யாவிடம், “உன் வீட்ல இருக்க எல்லாருக்கும் இந்த விஷயம் தெரியும். பெத்தவங்களையும் கூடப்பிறந்த அக்காவையும் பார்க்க முடியாம கூனி குறுகி நிற்கிறது தான் உனக்கான தண்டனை.” என்ற தரணியின் வார்த்தையில்   அவமானம் தாங்காமல் கனத்த சிந்தனையோடு வெளியேறினான்.

வீட்டை பிடித்த பீடை விட்டால் போதும் என்று நினைத்த ஆதிலட்சுமி வலுக்கட்டாயமாக இழுத்து தள்ளினார் வெளியே. வீட்டிற்குள் வர அவள் முயல, தரதரவென்று இழுத்துச் சென்றார்கள் பெற்றோர்கள். அகல்யா சொன்னது போல் நடு ரோட்டில் முடியை பிடித்துக் கொண்டு பைத்தியக்காரி போல் கத்தி கொண்டு இருந்தாள் சிவானி. 

***

வீடு மயான அமைதியில் காட்சியளித்தது. வார்த்தைகள் எதற்கும் வேலை இன்றி நால்வரும் அமைதியாக அமர்ந்திருக்க, “அந்த குழந்தை என்னோடது இல்லன்னு நிரூபிச்சிட்டேன் லயா. இப்ப சொல்லு என் குழந்தைக்கு நான் எந்த துரோகமும் பண்ணல தான.” மனதில் இருக்கும் ஆதங்கத்தை கேட்டு விட்டான் மனைவியிடம்.

பதில் சொல்லாமல் அவள் அழுத்தமாக கணவனை பார்க்க, “நான் மட்டும்தான் அசிங்கமானவன். உன்னையும் நம்ம குழந்தையையும் என்னைக்கும் அந்த நிலைமைக்கு தள்ளிட மாட்டேன்.” என்றவன் இனி அவள் எடுக்கப் போகும் முடிவை பார்க்க முடியாமல் தன் அறைக்கு சென்றுவிட்டான்.

“நடந்ததை மறந்துட்டு ரெண்டு பேரும் ஒத்துமையா இருக்க பாருங்க. இனி அவளால உங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் வராது. திருஷ்டி கழிஞ்சதா நினைச்சு சந்தோஷமா இருங்க.” அதற்கு மேல் பேச உரிமை இல்லாததால் வீட்டின் பெரியவர்கள் நகர்ந்து விட்டார்கள்.

***

இரண்டு நாட்கள் ஆகிவிட்டது சிவானியின் சம்பவம் முடிந்து. நேரடியாக இன்னும் பேசவில்லை மனைவியிடம் தரணி. அவளும் பேசவில்லை மௌனம் காத்தாள். இருவருக்கும் நடுவில் நடக்கும் பனிப்போர் புரிந்தாலும் தலையிடாமல் பெற்றோர்கள் ஒதுங்கி நிற்க, பிள்ளை பிறக்கும் நாளும் எட்டியது. நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் அகல்யா தாய் வீட்டிற்கு செல்ல விரும்பினாள்.

அதை ஆதிலட்சுமியிடம் சொல்ல, விஷயம் தரணியின் காதிற்கு பகிரப்பட்டது. தன்னை விட்டு சென்று விடுவாள் என்ற பயத்தில் தான் இரண்டு நாளும் அவன் ஓடி ஒளிந்து கொண்டிருப்பது. இன்று செல்ல இருப்பது தெரியவர… தன்னோடு சேர்ந்து வாழ மனைவிக்கு விருப்பம் இல்லை என்று நினைத்துக் கொண்டான் உறுதியாக.

“பத்திரமா போக சொல்லுங்க மாம். நீங்க சொன்ன மாதிரி என் பக்கம் இருந்து எந்த தொந்தரவும் அவளுக்கு வராது. குழந்தை பிறந்தா மட்டும் சொல்ல சொல்லுங்க ஒரே ஒரு முறை பார்த்துட்டு வந்துடுறேன்.” என்றவன் வார்த்தையை கேட்டுக் கொண்டு அவன் அறையில் நின்றாள் அகல்.

மருமகளை பார்த்ததும் மாமியார், “குழந்தைய பத்தின எண்ணம் உங்க ரெண்டு பேருக்கும் இல்லையா?  நல்லா ஞாபகம் வெச்சுக்கோங்க நீங்க ரெண்டு பேரும் பேசுற எல்லாத்தையும் உங்க குழந்தை கேட்டுட்டு இருக்கும். அதோட எதிர்காலத்தை நாசமாக்கிடாதீங்க.” என்றார் கோபத்தை காட்ட முடியாமல்.

“அப்போ என் குழந்தை என்னை பத்தி பேசுன எல்லாத்தையும் கேட்டு இருக்கும் இல்லம்மா. அதுவும் என்னை அசிங்கமா நினைக்கும்ல” என்ற மகனை வருத்தத்தோடு ஆதிலட்சுமி பார்த்துக் கொண்டிருக்க,

“இப்படி ஒரு அப்பாக்கு பிள்ளையா பிறந்துட்டோம்னு வருத்தப்படும். நீ எல்லாம் நல்ல அப்பனே இல்லன்னு சொல்லும்ல…”

“ஈஷ்வா!” குரல் உயர்த்தினாள் அகல்யா.

மனைவி புறம் திரும்பாமல் அவன் வானத்தை பார்த்தவாறு பால்கனியில் நின்று கொண்டிருக்க, “கோபத்தை என்கிட்ட காட்டுங்க. ஏற்கனவே சொல்லி இருக்கேன் உங்கள நீங்களே தண்டிக்க கூடாதுன்னு.” என்றிட, அமைதி காத்தான்.

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. ரெண்டு பேரும் பேசி தீர்க்க வேண்டிய விஷயத்தை பெருசு பண்றீங்கன்னு மட்டும் புரியுது. ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க.” என்று ஆதிலட்சுமி வெளியேறிவிட, இருவரும் அறையில் இருந்தார்கள்.

தரணீஸ்வரன் பேச்சு கொடுக்காமல் அமைதி காக்க, அவனே பேசட்டும் என்று அகல்யாவும் பொறுமை காத்தாள். நொடிகள் கடந்ததே தவிர இருவரிடமும் மாற்றமில்லை. வயிற்றில் இருக்கும் பிள்ளை அசைவை காட்ட முயல மெத்தையில் அமர்ந்தாள். மனைவியின் நிலையை கவனிக்காது தரணீஸ்வரன் எங்கோ பார்த்துக் கொண்டிருக்க,

“என்னங்க!” அவசரமாக குரல் கொடுத்தாள்.

திரும்பியவன் பதற்றத்தோடு, “லயா!” என்று அருகில் சென்றான். வயிற்றில் இருக்கும் சிசு பலமாக உதைத்து கொண்டிருந்தது. மூச்சு விட சிரமப்பட்டவள் முடியாமல் கண் மூட, அன்னையை அழைக்கச் சென்றான் தரணீஸ்வரன்.

செல்ல விடாமல் தடுத்து தன் பக்கத்தில் உட்கார வைத்தவள், “குழந்தை உதைக்குதுங்க வேற ஒன்னும் இல்ல.” என்று மூச்சை இழுத்து விட்டாள்.

வயிற்றில் கை வைக்க சென்ற தரணீஷ்வரன் அதை பாதியில் நிறுத்த, அந்த வலியிலும் கண்டு கொண்டவள் கலங்கினாள்.

நீர் கோர்க்க அவனிடம் கண் அசைவை கொடுத்து கணவனின் கையை நிறைமாத வயிற்றில் வைத்தாள். எப்பொழுதும் சிலிர்ப்பது போல் இந்த முறையும் தரணீஸ்வரன் உடல் சிலிர்த்தது.

வயிற்றை தடவிக் கொண்டு, “ரொம்ப சேட்டை பண்ணக்கூடாது குட்டி, அம்மாக்கு வலிக்கும்.” என்று குழந்தையுடன் பேச்சு வார்த்தை நடத்தினான்.

வலியிலும் காதலோடு கணவனை ஏறிட, “ரொம்ப முடியலன்னா ஹாஸ்பிடல் போகலாம் லயா.” என்றான்.

“அதெல்லாம் வேணாங்க கால மட்டும் கொஞ்ச நேரம் பிடிச்சு விடுங்க.” என்றதும் கீழே அமர்ந்து இரு கால்களையும் பிடித்து விட்டான்.

மூச்சை நன்றாக இழுத்து வெளியிட்டவள் ஒரு வழியாக தன்னை நிலைப்படுத்தினாள். பிள்ளையின் ஆட்டம் சிறிது அடங்க, “கொஞ்ச நேரத்துல என்ன வேலை காட்டிட்ட. வெளிய வருவல அப்ப இருக்கு உனக்கு.” செல்லமாக கோபித்துக் கொண்டாள்.

“குட்டிய திட்டாத லயா.” என்று மனைவியின் செல்ல முறைப்பை வாங்கிக் கொண்டவன் எதுவும் பேசாமல் பாதங்களை பற்றினான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் கைநீட்டி அழைக்க, என்னவென்று விசாரித்தான் பார்வையால்.

கண்மூடி சைகை செய்து கைநீட்டி அழைக்க மனைவியின் கால் முட்டி இருக்கும் இடத்தில் அமர்ந்தான். அகல்யா எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, இருவருக்குள்ளும் இருக்கும் பிரிவு மனதை ஒட்ட வைக்காமல் சதி செய்தது.

“என்னை மாதிரி கீழ உட்காருங்க.” என்றது அவனுக்கு புரியவில்லை. புருவங்கள் முடிச்சிட மனைவியை கேள்வியோடு பார்த்தான்.

அவளுடைய இரு கால்களுக்கும் நடுவில் அமர வைத்தாள். அமர்ந்தவன் தலைய உயர்த்தி மனைவியை பார்க்க அவளும் தலை குனிந்து பார்த்தாள். புன்னகையோடு தன்னுடைய இரு கால்களையும் அவன் தோள் மீது போட்டுக் கொள்ள, அப்போதுதான் புரிந்தது தரணீஸ்வரனுக்கு.

வெகு நேரமாக மனைவியின் கால் பிடித்துக் கொண்டிருந்தவன் முதுகு வலியில் முகத்தை சுழிக்க, அதை அறிந்து கொண்டவள் அவன் முதுகு நோகாதவாறு கட்டிலில் சாய்த்து அமர வைத்து தன்னுடைய இரு கால்களையும் தோள் மேல் போட்டுக் கொண்டாள் சுமை கொடுக்காமல். இந்த அன்பு இன்னும் எத்தனை மணி நேரங்கள் என்று உள்ளுக்குள் நொந்து கொண்டவன் கால் விரல்களை பிடித்து கொண்டிருந்தான்.

பேச்சுக்களை வளர்க்காமல் கணவனின் தலைமுடியை வருடி விட்டுக் கொண்டிருந்தாள். நிசப்தமான அமைதி இருவருக்கும் உருவெடுக்க, கணவனின் தலையை உயர்த்தி தன்னை பார்க்குமாறு வைத்தவள் முத்தமிட்டாள் நெற்றியில்.

கொடுத்தவள் விலக, கண்மூடிய நிலையில் நிறைமாத வயிற்றை இடிக்காதவாறு மடியில் தலை சாய்ந்து கிடந்தான் தரணீஸ்வரன். இப்படியே இருந்தால் கழுத்து வலிக்கும் என்று அவள் எடுத்து விட, விழி உயர்த்தி பார்த்தான்.

மனைவியின் விழி எப்போதும் கொடுக்கும் அதே காதலை அதிகளவு கொடுப்பதாக உணர்ந்தவன் திரும்பி அமர்ந்து அவள் மடியில் தலை சாய்த்து கொண்டான். விழிகள் ஈரமாகிறது என்பதை இருவருமே அறிவார்கள். தலை வருடிக் கொண்டிருந்தவள்,

“நான் பேசுன வார்த்தை தப்பு. ஆனா, என்னோட கோபம் ரொம்ப நியாயமானது ஈஷ்வா. நீங்க ஆயிரம் முறை நீ மட்டும் தான் எனக்கு பொண்டாட்டினு சொன்னாலும் வேற ஒருத்தி என் கண்ணு முன்னாடி உங்க மனைவியின் உரிமை கொண்டாடுறதை பார்க்குற தைரியம் எனக்கு இல்லை. என் இடத்துல நீங்க இருந்தா என் உணர்வுகள் புரிஞ்சி இருக்கும்.

நான் கோபத்துல பேசுனா சரிதான் போடின்னு விட்ருவீங்களா. உங்க லயா தான உங்களை கஷ்டப்படுத்துனேன். கொஞ்சம் பொறுத்துக்க கூடாதா. வீம்புக்கு பண்றன்னு நான் இருக்க இடத்துல அவள வச்சிருக்கீங்க. ஒவ்வொரு நாளும் செத்துட்டு இருந்தேன் ஈஷ்வா. அந்த குழந்தை உங்களோடது இல்லன்னு எனக்கும் தெரியும். ஆனா ஏதாச்சும் நடந்து நீங்க என்னை விட்டு போயிடுவீங்கன்னு பயத்துல பேசிட்டேன்.” மடியில் படுத்துக் கொண்டிருந்தவன் எழாமல் மனைவியின் வாயை மூடினான்.

அவள் எடுக்க முயற்சிக்க, “அழாம பேசுறதா இருந்தா கேட்பேன் லயா.” பேச ஆரம்பித்ததில் இருந்து அவள் விழியில் வடியும் கண்ணீர் கன்னத்தைத் தாண்டி மடியில் படுத்து கொண்டிருப்பவன் மீது விழுந்ததால் பேச்சுக்கு தடை போட்டான்.

சிறிது நேரம் பேசாமல் அகல்யா மௌனம் காக்க, தலை உயர்த்தி பார்த்தவன் கைகளை எடுத்தான். முட்டி போட்டு அமர்ந்து மனைவியின் கண்ணீரை துடைத்து விட்டவன், “என்ன பண்ணா நீ சந்தோஷமா இருப்பன்னு சத்தியமா தெரியல லயா. அதனால தான் நீயே முடிவெடுன்னு உன்கிட்ட விட்டுட்டேன்.” என்றவனை முறைத்தாள்.

“உண்மை என்னன்னு நீங்க நிரூபிச்சு தான் நான் தெரிஞ்சுக்கணுமா.” கேட்டாள் கன்னத்தில் அடித்து.

“உனக்காக இல்லனாலும் என் குழந்தைக்காக அதை பண்ண வேண்டிய கட்டாயம். இத்தனை வருஷம் கழிச்சு வந்தவ நாளைக்கு என் குழந்தை வளர்ந்து விவரம் தெரியுற வயசுல இதே மாதிரி ஏதாச்சும் ஒண்ண சொல்லி வந்தா என்ன பண்ணுவேன்.” என்றவன் பேச்சு நின்றது அவள் மீண்டும் அடித்ததில்.

கோபம் தீரும் வரை அடித்துக் கொண்டிருந்தாள். இன்னமும் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை தன்னிடம் ரோசம் கொண்டு தரணி செய்ததை. அப்படி என்ன தான் அன்னியமாய் போய் விட்டோம் என்ற ஆதங்கம் அவளுக்குள்.

அன்னிய தன்மை ஒரு நாளும் தன் மனைவியிடம் அவனுக்கு ஏற்படாது. உடைந்து அழுத அவளின் கண்ணீரை இதை செய்தாவது நிறுத்த மாட்டோமா என்ற பரபரப்பில் நடந்தேறி தான் அனைத்தும்.

வெகு நேரங்களாக ஒருவர் மாற்றி ஒருவர் பேசிக் கொண்டிருக்க அறை இருட்டில் மூழ்க ஆரம்பித்தது. பேசி ஓய்ந்தவளுக்கு ஓய்வு தேவைப்பட சற்று நேரம் படுத்தாள். தொந்தரவு செய்யக்கூடாது என்று வெளியேற நினைத்தவன் முடியாமல் அவளோடு தூங்கி விட்டான். தாய் தந்தையின் செயலிலும் பேச்சிலும் தலையில் அடித்துக் கொண்டு உறங்க ஆரம்பித்தது குழந்தை.

***

அகல்யா எழும்போது அவளை கட்டிப்பிடித்தவாறு தூங்கிக் கொண்டிருந்தான் தரணீஸ்வரன். எழ மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள், “விவாகரத்து பண்ற மூஞ்சிய பாரு.” என்று செல்லமாக கோபித்துக் கொண்டு முத்தமிட்டாள் நெற்றியில்.

“நீதான கேட்ட?”

“பிராடு!” என்றதும் விழி திறக்காமல் புன்னகைத்தவன் அவள் மடியில் படுக்க, “என் லயா என்ன கேட்டாலும் உடனே செஞ்சிடுவேன்.” என்றான்.

“இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. இவரே வேணான்னு விலகி போவாராம் திரும்ப ஓடிவந்து கட்டிப்பிடிச்சி கொஞ்சுவாராம்.”

“அந்த அளவுக்கு என்னை மயக்கி வச்சிருக்க.”

“நீங்கதான் என்னை மயக்கிட்டீங்க. அதுல மயங்கி தான் இந்தா…  உள்ள ஒண்ணு இருக்கு” என்றாள் வயிற்றை சுட்டிக் காட்டி.

விழித்திருந்து புன்னகைத்தவன் வயிற்றில் முத்தமிட்டு, “எப்போ குழந்தை பிறக்கும் லயா.” என்று ஆசையாக கேட்க, அவனை மடியில் இருந்து தள்ளி விட்டாள் அகல்யா.

எழுந்து முறைத்தவன் மீண்டும் படுக்க முயல, பாவம் பார்க்காமல் விரட்டி அடித்தாள். “இவ்ளோ நேரம் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிட்டு இப்ப என்னமோ அக்கறையா கேக்குறீங்க. சார் தான் என்னை விவாகரத்து பண்றன்னு சொல்லிட்டீங்கல நான் என் அம்மா வீட்டுக்கு போறேன்.”

“போறவ அப்படியே போக வேண்டியது தான எதுக்காக இவ்ளோ நேரம் என் கூட ரொமான்ஸ் பண்ண.”

“ஓஹோ! இப்ப நம்ம பண்ணதுக்கு பேரு ரொமான்ஸா?” என்றவள் வலிக்காமல் அடிக்க, புன்னகையோடு வாங்கிக் கொண்டான்.

இருவருக்குள்ளும் மனஸ்தாபங்கள் ஒளிந்து கொண்டிருக்க இருக்கும் தருணத்தை அனுபவித்தார்கள். நேரமாவதை உணர்ந்த அகல்யா தன் தாய் வீட்டிற்கு கிளம்ப, அதுவரை இருந்த ஆனந்தம் அவனை விட்டு மறைந்தது.

தடுக்க மனமில்லாமல் கிளம்பி கொண்டிருப்பவளை பார்த்துக் கொண்டிருந்தான் வேதனையோடு. அகல்யா அதை உணர்ந்தாலும் கண்டுகொள்ளாமல் கிளம்பினாள். தனக்கு தேவையான அனைத்தையும் எடுத்து வைத்தவள், “நான் கிளம்புறங்க. நேரத்துக்கு சாப்பிடுங்க. ஒழுங்கா கம்பெனி போங்க. அத்தை மாமாவ நல்லா பார்த்துக்கோங்க.” என்றவள் அவன் பதிலை கூட கேட்காமல் சென்று விட்டாள்.

மனைவி அறையை விட்டு நகர்ந்த பின் சிலையாக நின்று விட்டான் தரணீஸ்வரன். கண்ணீர் கூட வரவில்லை இந்த முறை. இனி அவள் வரமாட்டாள் என்பதை நினைத்து கல்லானவன் உதட்டோடு உதடு வைத்தாள் அகல்யா.

அதிர்ந்து சுதாரிப்பதற்குள் கணவனின் இதழ்களை மொத்தமாக தனக்கு விருந்தாக்கி கொண்டாள். சிலைக்கு உயிர் வந்து விட அதுவும் ஆக்கிரமிக்க ஆரம்பித்தது துணைவியின் இதழ்களை. இருவரும் பேசி தீர்க்க முடியாத வழக்கை தீர்த்து வைத்தது எச்சில் பரிமாற்றம்.

போக தடை சொல்ல வாய் வராத ஆடவனுக்கு விலக மட்டும் மனம் வரவில்லை. வார்த்தையில் காட்ட முடியாத உரிமையை முத்தத்தில் காட்டினான். இருவர் நடத்தும் அக்கப்போரில் உயிர்பிழைக்க நினைத்த குழந்தை எட்டி தாயின் வயிற்றை உதைக்க, “அம்ம்ம்மா..” என்ற அதிவோடு விலகி நின்றாள்.

அதன்பின்னே தந்தையாக போகும் தரணியின் புத்தி செய்தி உரைக்க, அக்கறையாக அவளை அமர வைத்தான். சலித்துக் கொண்டு அவன் கைகளை தட்டி விட்டவள் எழுந்து நின்றாள்.

முறைப்போடு அவன் பார்க்க, “இப்ப கூட போகாதன்னு ஒரு வார்த்தை உங்களால சொல்ல முடியாதுல. இது என்னோட வீடு நான் எங்கயும் போக மாட்டேன். எங்க அம்மா ஆசைப்பட்டாங்கன்னு ரெண்டு நாள் எங்க வீட்டுக்கு போயிட்டு வருவேன். அதுக்குள்ள மண்டையில இருக்க எல்லா அழுக்கையும் கழுவிட்டு சுத்தமா இருக்கணும். இல்லனா நானும் உங்க புள்ளையும் இந்த ரூம்லயும் நீங்க அந்த ரூம்லயும் இருக்க வேண்டியது தான்.” என்று முறைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்.

வாசலை தாண்டும் அகல்யாவின் செவியில் கணவனின் சிரிப்பு சத்தம் கேட்க, திரும்பிப் பார்த்து முறைத்தாள். வாயை மூடிக்கொண்டு பதமாக தரணி நிற்க,
“உங்க குழந்தை நான் பேசுனதை மட்டும் கேட்டு இருக்காது. நீங்க என்னை வீட்டை விட்டு போக சொன்னது, விவாகரத்து கொடுக்கிறன்னு சொன்னது, யாரோ ஒருத்தர் மாதிரி வந்து பார்த்துட்டு போறன்னு சொன்னது, முக்கியமா நாங்க ரெண்டு பேரும் கிளம்பறதை பார்த்தும் கல்லு மாதிரி நிக்கிற இது முதல் கொண்டு எல்லாத்தையும் உணர்ந்து இருக்கும்.” என்று முறைத்து விட்டு வெளியேறினாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
22
+1
70
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *