28 – காற்றிலாடும் காதல்கள்
அடுத்த நாள் அதிகாலை மயில்கள் துயிலெழ, குயில்கள் கூவும் ஓசையில் மிருணாளினி மெல்லக் கண் திறந்தாள். கயல்விழி அவளது கைகளை இறுகப்பற்றிய படி அருகே படுத்திருந்தாள்.
மெத்தையில் அமர்ந்த நிலையிலேயே மயில்கள் மரத்திலிருந்து பறந்துத் தரையிறங்குவதைப் பார்த்தபடி அந்த காலைப் பொழுதை இரசித்தாள். புதிதாய் பிறந்தது போல ஓர் உணர்வும், மகிழ்வும் மனதில் பிறந்திருந்தது. இத்தனை மாதங்களாக மனதை அழுத்திய பாரம் காணாமல் போயிருந்தது. மனதில் அந்தக் குகையைத் திறந்துவிடும் உத்வேகம் நிமிடத்திற்கு நிமிடம் பெருகுவதை உணர்ந்தாள். அப்போது தான் இரவு நடந்தது அனைத்தும் நினைவில் வந்து தன் உடலைத் தொட்டுப் பார்த்துவிட்டு கயல் தன்னைப் பிடித்திருப்பதை உணர்ந்தாள்.
மெலிதாக ஓர் சிரிப்பு அவளின் இதழ்கடையில் பிறந்து அவளை ஆதூரமாகப் பார்த்தது. அவளைக் கண்டே 24 மணிநேரம் இன்னும் முழுதாக முடியவில்லை ஆனால் அவளுக்கு இவள் மீதும், இவளுக்கு அவளின் மீதும் அளப்பறியா அன்பு விரிந்திருந்தது. வெள்ளை மனது கொண்ட புத்திசாலி இவள். வெள்ளையென்றாள் அப்பாவி அல்ல, அழுக்கான எண்ணங்கள் அற்றவள், பொய் இல்லாதவள். மெய்யின் வலுபெற்றவள், மனதிற்கு நெருக்கமாகி விட்டாள் ஒரே நாளில் அத்தனை இன்னல்களிலும் பயணித்து…
அந்நேரம் யுகேந்தர் கயல்விழிக்கு அழைத்தான். “கயலு.. கயலு.. நான் பேசறது கேக்குதா?”என அவசரமாகக் கேட்டான்.
“அவ தூங்கிட்டு இருக்கா யுகேந்தர் அண்ணா.. அப்பறம் கூப்பிட சொல்றேன்.”
“மொத எந்திரிச்சி ரெண்டு பேரும் குளிச்சி தயாராகி எல்லைக் கோவில் வாங்க. சீக்கிரம்.” எனக் கூறிவிட்டு அழைப்பைத் தூண்டித்தான்.
“ஒரு நாலாவது நிம்மதியா இருக்க விடறாங்களா? காலங்காத்தால என்ன பஞ்சாயத்தோ?”எனத் தலையில் அடித்துக் கொண்டுக் குளிக்கச்சென்றாள்.
அரைமணி நேரத்தில் குளித்து வந்தவள் கயலைக் குளிக்க அனுப்பினாள். முடியை உளர்த்தும் நேரம் இருளாயி மேலே வந்து இருவருக்கும் சத்துமாவு கஞ்சிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
“என்ன அண்ணி அதுக்குள்ள ரெடியாகி நிக்கறீங்க?”
“உன் வருங்கால புருஷன் தான் சீக்கிரம் ரெடியாகி கோவிலுக்கு வர சொன்னாரு. இந்தா குடி. அப்றம் ரெடியாகு.” எனக் கூறிவிட்டு தனதுக் கைப்பையில் சிறிய காமிரா, கையேடு, பேனா எடுத்துக் கொண்டுத் தயாராக நின்றாள்.
இருவரும் கீழே வந்ததும் வெள்ளைச்சாமி தாத்தா மிருணாவை அழைத்தார். “அம்மாடி மிருணா.. நம்ம கோவில்ல திடீருன்னு ஒரு சுவரு திரும்பி இருக்குதாம். காலைல இருந்து அதே பேச்சா இருக்கு. நீ போய் என்னனு பாரு மா.” என அவளை உடனே அனுப்பிவைத்தார்.
“அவள எங்கப்பா அனுப்பறீங்க?”கேட்டபடி கனகவேலு அங்கே வந்தார்.
“நம்ம எல்லைகோவில்ல திடீர்ன்னு ஒரு சுவரு திரும்பி இருக்குதாம். அதான் பாக்க அனுப்பினேன்.”
“ஏன்ப்பா? மறுபடியும் இவ அதே வேலைக்கு போகணுமா?” எனச் சலித்தபடிக் கேட்டார்.
“நீ தனியா தொழில் பண்றேன்னு போனியே நான் தடுத்தேனா?”
“என்னால யாராவது செத்தாங்களா?”
“ஆமாடா உங்கம்மா உன்னால தான் செத்தா. உன் நெனைப்புல கெடந்தே ஒழுங்கா உங்காம உறங்காம செத்துபோனா. நீ உடனே உன் கடைய மூடிட்டு இங்க வந்து இருன்னு சொன்னா உன்னால முடியுமா?” என அவர் கேட்டதும் கனகவேல் துடித்துப் போனார்.
“அப்பா…”
“என்ன அப்பா? அந்த புள்ளைக்கும் அதே மாதிரி தான். அதுவே கூட பொறந்தவள பறிகொடுத்த வருத்தத்துல இருக்கு. அதுகிட்ட புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் நாடகமாடிட்டு இருக்கீங்க. அந்த புள்ள என்கிட்ட எல்லாமே சொல்லிட்டு தான் இங்க கெளம்பி வந்தது. அது போக்குல தான் நானும் அனுப்புவேன். அப்புடி அவ போகக்கூடாதுன்னா நீ என் பொண்டாட்டிய திருப்பி குடுத்துட்டு சொல்லு. வந்துட்டான் பெருசா தப்பு கண்டுபிடிச்சி பேச. நானும் நீயும் தானே அந்த பயலப்பத்தி விசாரிச்சோம். எங்கயாவது பிசிறு வந்துச்சா? நம்ம சொன்ன அப்றம் தானே மிருணா வேலை பாக்கற எடத்துல விசாரிச்சி சொன்னா.“
கனகவேலுவும், ஜெயந்தியும் அமைதியாக நின்றனர்.“இன்னொன்னு தெரிஞ்சிக்க, நம்ம விசாரிச்ச ஆளுங்க பூராவுமே நடிச்சவனுங்க. அந்த புள்ள விசாரிச்ச வேலைபாத்த எடம் மட்டும் தான் நெசம். நம்ம மூஞ்ச நம்ம எங்க கொண்டு வச்சிக்கறது? இப்பவும் அந்த கூட்டம் உங்கள பலியாக்க பாத்துச்சின்னுதான் இங்க வரவச்சேன். அவ சொல்றவரை ரெண்டு பேரும் அமைதியா இங்க இருங்க. என் பேத்தி வந்த நேரம் இந்த ஊருக்கு நல்லது நடக்கும்ன்னு தோணுது அத கெடுத்துறாதீங்க.” என உணர்ச்சிவசமாகப் பேசிவிட்டு வெளியே சென்றார்.
“என்னங்க இது? இன்னும் அந்த கூட்டம் அவள விடாம தொறத்ததுன்னா பிரச்சனை பெருசா வரும் போலயே அவள எப்டி காப்பாத்தறது?” ஜெயந்தி மனவருத்தம் கொண்டுக் கேட்டார்.
“இது விண்ணூர்காரப்பட்டினம் ஜெயந்தி. தேவருங்க இன்னும் இங்க வந்து போறதா சொல்றாங்க. அவங்க பாத்துக்கட்டும். நம்மளால அவளோ தான் பண்ண முடியும். அந்த கூட்டத்த எதிர்த்து போராட நமக்கு அதிகாரமும் இல்ல, தெம்பும் இல்ல மா..” எனக் கூறி சோர்வாக சோபாவில் அமர்ந்தார்.
மிருணாளினியும், கயல்விழியும் கோவில் வந்துச் சேர்ந்தனர். அங்கே மக்கள் கூட்டமாகக் கூடி நின்றிருந்தனர். இருவரும் முன்னே செல்ல முடியாமல் நிற்கையில், இந்திரன் கூட்டத்தை விளக்கி வந்து, இருவரையும் கோவிலின் உள்ளே அழைத்துச் சென்றான்.
“என்னாச்சி இந்திரண்ணா?”மிருணாளினி கேட்டாள்.
“நம்ம கருவறை பக்கம் ஒரு பக்கவாட்டு சுவரு சின்னதா இருக்கும். அது உள்பக்கமா திரும்பிருக்கு. எப்டின்னு புரியல. அதுல ஏதேதோ எழுத்து இருக்குன்னு தெரியவும் தான் கீதன் உன்ன வரச்சொன்னான்…“
மிருணாளினி ஆர்வமாக அங்கே சென்றுக் கல்வெட்டை நகலெடுக்கத் தேவையானப் பொருட்களைக் கொண்டு வரச்சொல்லிவிட்டு, அந்த ஐந்தடி சுவரில் இருந்தவற்றை உற்றுப் பார்த்தாள்.
“என்னம்மா என்ன போட்டிருக்கு?” எனக் கேட்டபடி ஊர்த்தலைவர் ராமசாமி அங்கே வந்தார்.
“கொஞ்ச நேரத்துல சொல்றேன் சித்தப்பா.” எனக் கூறியவள் மேலும் அங்கிருக்கும் கூட்டத்தைக் கலைத்துவிடவும் வேண்டுகோள் வைத்தாள்.
“என்ன தலைவரே திடீருன்னு எப்புடி செவுரு திரும்பும்? என்னால நம்பவே முடியல. யாராவது களவாணி பய வந்திருப்பானா?” எனக் கூட்டத்தில் ஒருவர் கேட்டார்.
“களவாணி செவுத்த உடைக்கத்தான் செய்வான். திருப்புவானா? நம்ம ஊருல தான் ஏதோ நடக்கப்போகுது. ஊருக்குள்ள புதுசா நெறைய பேர் சுத்திட்டு இருக்காங்க. மறுபடியும் அசம்பாவிதம் நடக்காம இருக்கணும். காவல நெருக்கணும் தலைவரே.” மற்றொருவர் கூறினார்.
“சரி என்ன பண்ணாலம்ன்னு சாயிந்தரம் கூட்டம் போட்டு பேசிக்கலாம். இப்ப எல்லாரும் கெளம்புங்க.” என ஒருவழியாக அனைவரையும் அனுப்பிவிட்டு நமது சகாக்கள் மட்டும் இருந்தனர்.
“என்ன இருக்கு மிரு?” கீதன் அவளருகே வந்துக் கேட்டான்.
“நம்ம தேடின பாட்டு தான் கீதன். எடுத்து எழுதிட்டு சொல்றேன்.” எனக் கூறிவிட்டு வேலையில் கவனமானாள்.
“ஆறு நாழிகையின் முன்னிரண்டு நாழிகையில் சுதர்சன திறவுக் கண்டுப் பொருத்திட…
நாச்சியிவள் சிம்மவாயில் வழிக்கொடுக்க..
மீதமிருக்கும் நான்கு நாழிகையில் நாச்சியைக் குளிர்வித்திட…
திறந்த சிம்மவாயிலும் மூடிடாது…
கற்பகநாச்சியிவள் நித்திய தரிசனமும் கொடுத்திடுவாள்…”
இப்படியாக பாடல் முடிந்தது கேட்டதும் வழக்கம் போலவே யுகேந்தரும், இந்திரனும் வாய் திறக்க முற்பட்டபோது அங்கே விஸ்வநாதன், மாலா முதற்கொண்டு கனகவேலுவும், ஜெயந்தியோடு அங்கே வந்துச் சேர்ந்தார்.
“என்ன கண்ணு போட்டிருக்கு?” என வெள்ளைச்சாமியும் அவர்கள் அருகே வந்துக் கேட்டார்.
மிருணாளினி அமைதியாக அந்தக் காகிதத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டு எதிரே இருந்தத் திட்டில் அமர்ந்து அவர்களின் முகங்களை ஆராய்ந்தாள்.
“தாழ்-னா பூட்டு தானே?”என விஸ்வநாதன் கேட்டார்.
“ஆமா தாத்தா” கீதன் பதில் கொடுத்துவிட்டு தாயின் அருகே வந்து நின்றான்.
“அம்மாடி இது நம்ம குகைத் திறப்பு சம்பந்தமான பாட்டா?” என வெள்ளைச்சாமிக் கேட்டார்.
“எனக்கு தெரியாது தாத்தா. போனமுறை குகை திறக்க முயற்சி பண்ணவங்க இல்லைன்னா கூட இருந்தவங்க சொன்னா தான் எனக்கு தெரியும். நான் இன்னிக்கி வந்தவ உடனே எல்லாத்தயும் கோர்த்து சொல்ல முடியாது.” என மாலாவைப் பார்த்தபடிக் கூறினாள்.
மாலா அந்த பாட்டின் வரிகளை மீண்டும் மீண்டும் படித்துவிட்டு ஏதோ தோன்ற உடனே இல்லம் சென்று வருவதாகக் கூறினார்.
“என்னாச்சி மாலா?” அனைவரும் அழைக்க, அழைக்க, நிற்காமல் இல்லம் சென்றுக் கயல்விழி நகைப்பெட்டிக்கு அடியில் எதையோ தேடினார்.
“என்னம்மா தேடறீங்க? இதுவா?” என கீதன் அந்த கையேடு பக்கங்களைப் புரட்டியபடிக் கேட்டான்.
“இத எப்ப எடுத்த கீதா?” மாலா கோபமாகக் கேட்டார்.
“நான் எடுக்கல. கயல் தான் எடுத்து குடுத்தா. அன்னிக்கி என்ன நடந்ததுன்னு இப்பவாது சொல்லுங்கம்மா. நீங்க சொல்றத வச்சி தான் இந்த ஊர்ல யாரெல்லாம் உயிரோட இருப்பாங்கன்னு கணிக்கமுடியும்.” எனக் கூறி மிருணாளினியை உள்ளே அழைத்தான்.
மாலா அவளது கைகளில் இருந்தப் படங்களை கண்டதும் உடல் தோய்ந்துப் பொத்தென கட்டிலில் அமர்ந்துத் தலையைக் குனிந்துக் கொண்டுக் குலுங்கிக் குலுங்கி அழத்துவங்கினார்.
“அம்மா…” என கீதனும், கயலும் பதறி அவர் பக்கம் சென்றவர்களை மிருணாளினி தடுத்து நிறுத்தி, “இப்பவாது மனசுல உள்ள பாரத்த எறக்கட்டும் விடுங்க.” எனக் கூறி அவரின் காலடியில் அமர்ந்தாள்.
கால் மணிநேரம் மாலாவின் அழுகைத் தொடர்ந்தது. அந்த சமயத்தில் பெரியவர்களும் அங்கே வந்துவிட்டிருந்தனர். விசாலாட்சி கணவனிடம் கண்களால் கேட்க, அவர் அமைதியாக இருக்கும்படிக் கூறினார்.
கனகவேலுவும், ஜெயந்தியும் ஒன்றும் புரியாமல் நிற்க, வெள்ளைச்சாமி நண்பனின் கரங்களைப் பற்றிக்கொண்டு நின்றார். பல ஆண்டுகளாக யாரும் அறியாத உண்மையை இன்று அவரிடம் வாங்கிவிட வேண்டுமென்ற உறுதி சிறியவர்களுக்கு திடமாயிருந்தது.
“அன்னிக்கி இந்த ஊருக்கு நானும், என் புருஷனும் தான் வந்திருக்கறதா நான் நெனைச்சிட்டு இருந்தேன். ஆனா எங்களுக்கு பின்னாடி அவரோட வேலை செஞ்ச அதிகாரி ஒருத்தரும், அவரோட ஆட்களும் எங்களுக்கு தெரியாம பின்தொடர்ந்து வந்து நம்ம கொட்டகைக்கு பின்னாடி நின்னு இவர கூப்பிட்டு இருக்காங்க. இவரும் என்கிட்ட இதோ வந்துடறேன்னுட்டு சாயிந்தரம் கிளம்பி போனாரு. இருட்டியும் வீட்டுக்கு வரல அப்பா, அன்னிக்கி பௌர்ணமி வெளிய இருக்கக்கூடாதுன்னு ஊர் கட்டுப்பாடு போட்டிருக்குன்னு சொல்லவும், நான் பசங்கள வீட்ல விட்டுட்டு அவர தேடி போனேன்.” என அன்றைய தினத்திற்குச் சென்றார்.
வடிவேலனை ஊருக்குள் தேடிக்காணவில்லை எனவும் எல்லைக்கோவில் நோக்கிச் சென்றார் மாலா. அங்கே கூட்டமாக சிலர் நின்றிப்பது போல தெரியவும் வேகமாக நடையை எட்டிப்போட்டார். அங்கே விஜயராகவன் சிலரோடு நின்று வடிவேலனிடம் பேசிக்கொண்டிருந்தார்.
“நான் என்ன பண்ணட்டும் ராகவன்? நான் எனக்கு கெடச்ச எல்லா குறிப்பும் வச்சி முயற்சி பண்ணி பாத்துட்டேன். என்னால அத தொறக்க முடியும்னு தோணல. குகை அடிவாரத்துல உனக்கு கெடச்ச கருப்பு கல் எங்க? அத கணக்குல கொண்டு வரணும்.” என வடிவேலன் கேட்டார்.
“அத எல்லாம் குடுக்க முடியாது வேலன். அந்த கல் அபூர்வமானதா இருக்கு. பல லட்சம் பெறுமானம் வரும்ன்னு சொல்றாங்க. உன்கூட இங்க இவ்ளோ நாள் சுத்தினதுக்கு எனக்கு இது தான் மிச்சம்.”
“அதுல ஏதாவது குறிப்பு இருக்கான்னு பாக்கலாம் ராகவா வடக்கு பக்கம் தானே இது கெடச்சது? இதே மாறி இன்னும் ரெண்டு இருக்க வாய்ப்பு இருக்கு. இது பாரு சின்ன சின்ன ஓட்டையும், நீளவாக்குல கல்லும் நீண்டிருக்கு. இது திறப்பா கூட இருக்கலாம்.”
“அதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல. இது வெறும் கல்லு, சிற்பி ஏதோ ஆரம்பிச்சி பாதில விட்டிருக்கான். நீ இங்கிருக்க சிலையாவது எடுத்து குடு.”
“என்ன பேசற நீ? நான் ஒண்ணும் திருடன் இல்ல. இத்தன வருஷம் பழகினவன்னு பாத்தா நீ அதிகமா பேசற. இது சரியில்ல. மேலிடத்துல உன்மேல புகார் குடுக்கவேண்டிவரும் பாத்துக்க. நீ இங்கிருந்து மொத கிளம்பு.”
“இன்னிக்கி பௌர்ணமி. நீ குகை திறக்க தான் இங்க வந்திருக்கன்னு எனக்கு தெரியும் வேலன். வீணா பேசி நேரத்த கடத்தாத. இந்த கோவிலுக்கு ஏன் வந்த அத சொல்லு. எங்ககிட்ட எதையும் மறைக்க நினைக்காத.” என விஜயராகவன் வடிவேலன் இடையே வாக்குவாதம் முற்றி கைக்கலப்புத் தொடங்கியது.
அந்நேரம் இந்திரனின் தந்தை வெளியே சத்தம் கேட்கவும் வந்துப் பார்த்தவர் வடிவேலனைக் காக்க ஓடிவந்து ஆட்களைப் பிடித்துத் தள்ளினார்.
“யாருடா நீங்கெல்லாம்? ஐயாவோட மருமவன்கிட்ட என்னடா பிரச்சனை பண்றீங்க?” என அவர் ஆட்களைப் பிடித்துத் தள்ளிவிட்டு வடிவேலன் முன்னே நிற்கவும் ராகவன் அவரைச் சுட்டான்.
அவரைத் தொடர்த்து வந்த அவரின் மனைவியையும் சுட்டுவிட்டு ஓரமாக அவ்வுடல்களை வீசச் சொன்னான். அதைக் கண்ட மாலா இருட்டில் பதுங்கி அங்கு நடப்பதைக் கவனித்தார்.
“ராகவன்.. என்ன பண்ற நீ? எதுக்கு இப்படி மிருகமா மாறி நிக்கற?” வடிவேலன் அதிர்ந்துக் கேட்டார்.
“நான் டீல் பேசிட்டேன் வேலன். இப்ப வெறுங்கையோட எப்படி போக முடியும்? எனக்கு உருப்படியா ஏதாவது இப்ப இங்க எடுத்துக் குடு.” என வெறிப்பிடித்தவன் போல கத்தினான்.
“நான் கண்டுபிடிச்சி தருவேனே தவிர திருடி தரமாட்டேன் ராகவன். என்னையும் கொல்றதா இருந்தா கொன்னுக்க. ஆனா உன் வழிக்கு நான் எப்பவும் வரமாட்டேன்.” என ராகவன் முடிவாகக் கூறியதும் போதையில் இருந்த ராகவன் அவரைச் சுட்டுவிட்டு அந்த கோவிலின் வாசலில் மூன்று பிணங்களையும் போட்டு எரிக்கக் கூறினான்.
அது சரியாக சந்திரன் உச்சியை அடைந்த நேரம். இருட்டினைக் கிழித்துக் கொண்டு அந்த வெளிச்சம் கோவிலின் உள்ளும், ஊருக்கு நடுவில் இருந்த மலையின் மேலும் விழுவதைக் கண்ட ராகவன் அவசரமாக குகை நோக்கி ஓடினான்.
அங்கே குகையின் முன்னே இருந்த பாறைகள் எல்லாம் சிறுசிறு கற்களாக மாறி மிதந்துக் கொண்டிருந்தது. அந்த கற்களின் இடையே சிறிய சக்கர வடிவில் கருப்பாக ஒரு கல் மின்னியது. அதைக் கண்ட ராகவன் அதை எடுக்க ஆட்களை அனுப்பினான். ஆனால் யாராலும் அருகே செல்ல முடியவில்லை. கால்வைக்க முடியாமல் அனைவரும் உருண்டு மலையின் மறுபக்கம் பள்ளத்தில் விழுந்தனர்.
அந்நேரம் ஜோதி ரூபமாக ஒரு சிறுமி வந்திறங்கி அந்த கல்லை கையில் எடுத்தாள். அதைக் கண்ட ராகவன் அந்த சிறுமியின் பின்னாலே சென்றான்.
அந்த சிறுமி சரியாக குகை வாயிலில் அதைப் பொருத்தும் சமயம், அவன் திருடி வந்திருந்த பழங்கால வாளினால் அந்த சிறுமியின் தலையை வெட்ட சட்டென ஜோதி ரூபமாக இருந்த சிறுமி சாதாரண பெண்ணைபோல் கீழே சாய்ந்தாள். அந்த சிறுமியின் கண்கள் வாயிலில் நிலைக்குத்தி நின்றது. பின் ஓடும் ராகவனைக் கண்டதும், அந்த கண்களில் இருந்து சென்ற ஒளிக்கதிர் அவனது முதுகில் ஆராத தீப்புண் ஏற்படுத்தியது.