Loading

அத்தியாயம் 27

தஷ்வந்தின் கூற்றில் திகைத்த மஞ்சுளா, அவனது தோள்பட்டையில் சட்டென அடித்தாள்.

“என்னடா பேசுற? அவ மாசமா இருக்கும் போது சாக போறேன் அது இதுன்னு… முதல்ல உள்ள போ!” என்றவளுக்கு குரல் நடுங்கியது.

தமக்கை கொடுத்த அடிகளை உணர்வற்று வாங்கிக் கொண்டவன், “நான் நடக்க போறதை தான் சொல்றேன் மஞ்சு. பேபி பிறக்கும் போது அவள் இல்லைன்னா, நானும் இருக்க மாட்டேன். அந்த நேரத்துல என் குழந்தையோட முகம் என்னை வாழ வைக்கத் தூண்ட கூடாது. இப்ப இருந்தே உங்க மனசுல பதிச்சுக்கோங்க. அது உங்க குழந்தைன்னு…” என்றதில், இன்னும் சரமாரியாகக் கன்னத்தில் அடித்து வைத்தாள் மஞ்சுளா.

வசீகரன் அவளைத் தடுக்க, தஷ்வந்த் எந்த எதிர்வினையும் காட்டவில்லை. அத்தனை இறுகிப் போயிருந்தான்.

“விடு மஞ்சுமா. அவன் தான் ஏதோ குழப்பத்துல பேசுறான்னா நீயும் கையை நீட்டிக்கிட்டு இருக்க…” என்று மனைவியை சமாதானம் செய்ய,

“நான் எந்த குழப்பத்துலயும் பேசல. தெள்ளந்தெளிவா சுயநினைவோட தான் பேசுறேன். உங்களுக்கு தான் எதுவும் புரியல. புரியலைன்னா, இதோ இங்க நிக்கிறாள்ல… என் சந்தோஷத்தை கெடுக்குறதுக்குன்னே பொறந்தவ, அவள்கிட்ட கேளுங்க. அவள் சாக போறதை தெளிவா சொல்லுவா.” என மஹாபத்ரா நிற்கும் திசையைக் கை காட்டி கூறி விட்டு, உள்ளே சென்றவன், அப்போதும் அவள் முகத்தை நிமிர்ந்தும் பார்த்தானில்லை.

மஹாபத்ரா தான், அதிர்ச்சியில் திளைத்திருந்தாள். என்ன பேசுகிறான் இவன்… தன் மீது அவனுக்கு அளப்பரிய காதல் என்று தெரியும் தான்… ஆனால், சாகும் அளவிற்கா? என்று எண்ணுகையில் உள்ளுக்குள் வலித்தது.

முதல் முறை தவறிழைத்து விட்டோமோ என்றே நடுங்கிய நெஞ்சத்தை முயன்று அடக்கியவள், மஞ்சுவின் அரண்ட முகத்தைக் கண்டு, “நீ வொரி பண்ணாத மஞ்சு. பேபி வந்ததும் அவனே மாறிடுவான்.” என அசட்டையாகக் கூறி சமாதானம் செய்ய முயன்றாலும் முடியவில்லை.

“பேபி பிறந்தா நீ சாக போறன்னு சொல்லிட்டு இருக்கான்… என்ன தான் நடக்குது மஹா?” மஞ்சுளா பதற்றமாக வினவ, “நத்திங்…” என உதட்டை சுளித்து விட்டு, வெளியில் சென்று விட்டாள்.

அமிஷ் தான் இன்னும் திகைப்பில் இருந்து வெளிவரவில்லை. அவள் செத்தால், தானும் சாவேன் என்றவனின் வார்த்தைகள் அவனை அசைத்தது. மொழி முழுதாய் புரியவில்லை என்றாலும், நிகழ்ந்ததை உள்வாங்கிக் கொண்டவனுக்கு, மனம் கனத்தது.

இப்போது தான் ஒருவள் படுக்கையில் இருந்து மீண்டாள். இப்போது மற்றொருவள் தெரிந்தே மொத்தமாக செல்ல முயல்கிறாளே… என நொந்து போனவனுக்கு, ஆற்றாமை தாளவில்லை.

இப்போதோ, தஷ்வந்தின் கூற்று அவனை இன்னும் கூறு போட்டது. ‘எல்லாரும் சாகவா இத்தனை வருஷமா யார் முகத்தையும் பார்க்காமல், யாரு கூடவும் பேசாம கஷ்டப்பட்டோம்…!’ என்று கோபமும் எழுந்தது.

அதே கோபத்துடன் தஷ்வந்த் சென்ற அறைக்குள் நுழைய, அங்கோ அவன் கட்டிலில் தலையைத் தாங்கியபடி அமர்ந்திருந்தான்.

சொட்டு சொட்டாய் கண்ணீர்த் துளிகள் நேராக தரையில் விழுந்திருந்தது. ஏனோ அவனது கண்ணீர் அமிஷை என்னவோ செய்ததில், அவன் தோள் மீது வைக்க, தஷ்வந்த் அவன் நிலையிலிருந்து விலகாமலேயே, “எங்கடா போய் தொலஞ்சீங்க அவளை விட்டுட்டு. இன்ஜியூரி ஆகுற அளவுக்கு… ஏன்…” என ஏதேதோ பேச எண்ணியும் வார்த்தைகள் வரவில்லை.

“இன்னும் என்னை எவ்ளோ தாண்டா சாகடிக்கணும்ன்னு முடிவு பண்ணிருக்கா. மொத்தமா செத்துட்டா அட்லீஸ்ட் இந்த லவ் பெயின் ஆவது இல்லாம இருக்கும்…” கூறும் போதே அவனுக்கு குரல் கம்மியது.

அமிஷிற்கு அவனது வேதனையைக் கண்டு மனம் வருந்தியது. “தஷு… பேசாம அபார்ஷன் கூட…” என்னும் போதே, “வேணாம்” என்று தஷ்வந்த் கூறிட, பின்னால் இருந்து “முடியாது” என்ற மஹாபத்ராவின் குரல் அழுத்தமாகக் கேட்டது.

அக்குரலில், தஷ்வந்த் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு, “எங்களோட ஈகோவுக்கு, அந்த சின்ன உயிர் என்ன பண்ணுச்சு. அவங்க அவங்க திமிருக்கு, இதெல்லாம் அனுபவிக்க வேண்டியது தான். அனுபவிக்கட்டும்!” என்று பல்லைக்கடித்து கூறியதில்,

“அவள் முட்டாள்தனமா செஞ்ச காரியத்துக்கு, அவள் சஃபர் ஆகுறதும் இல்லாம நீயும் சாக போறேன்னு சொல்லிட்டு இருக்கியேடா” அமிஷ் ஆதங்கத்துடன் கேட்டான்.

“என்ன செய்றது… லவ் பண்ணியாச்சு. செத்து தான ஆகணும்.” என்றவனின் வார்த்தைகளில் வலி அளவுக்கதிகமாகவே வழிந்தது.

அது அவளையும் தாக்கிட, இதழ்களை அழுந்தக் கடித்துக் கொண்டாள்.

தற்போது தான் மதன் போன் செய்து, ஆஷா கண் விழித்த செய்தியைக் கூறினான். அதனைக் கேட்டதுமே, மஹாபத்ராவின் மனம் மகிழ்வில் துள்ளியது. அதில் தான் வெளியில் சென்றவள், மீண்டும் உள்ளே வந்தாள்.

“அமி… ஆஷாவுக்கு இப்ப ஓகே தான?” என அவள் கேட்டிட, “ஓகே இல்லன்னா, என்ன செய்ய போற?” என்றான் சுள்ளென.

“எப்படியோ போங்க…!” என்று சலித்தவன், ஆஷாவைக் காண மருத்துவமனைக்கு சென்று விட்டான்.

அதன் பிறகு இரு நாட்கள் அவ்வீட்டில் யாரும் யார் முகத்தையும் பார்த்துக்கொள்ளாமல் நகன்றது. நிதினே, “எல்லாரும் ஏன் இவ்ளோ அமைதியாவே இருக்கீங்க” எனக் கேட்கும் அளவு வந்துவிட, அவனுக்காகவாவது அவன் இருக்கும் நேரத்தில் அனைவரும் இயல்பாக இருக்க முயன்றனர்.

தஷ்வந்த், அதன் பிறகு மீண்டும் இயல்பாகி விட்டான். நிதினிடம் நடிக்காமல், சிரித்து விளையாடுவது அவன் ஒருவனே என்று ஆகி விட்டது.

மஞ்சுளாவோ தம்பியின் பரிணாமத்தில் மண்டையை பிய்த்துக் கொள்ள, மஹாபத்ராவிற்கோ முற்றிலும் அவன் அவளைத் தவிர்ப்பதில் வேதனை மிஞ்சியது.

முதலில் எப்படியோ, இப்போதோ சில நாட்களாக, அவனது அரவணைப்பில் உறங்கியே பழகி விட்டவளுக்கு, அவனது தீண்டல்களும், வெப்ப மூச்சுக்காற்றும் இல்லாமல், சுவாசிக்கவே கடினமாக இருந்தது.

இதனிடையில், அவளுக்கு தெரிய வந்த செய்திகள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியது.

சொன்னது போன்றே, தஷ்வந்த் மருத்துவமனையில் நோயாளிகளை சந்திக்கும் முன்னேற்பாடுகளை குறைத்துக் கொண்டான். எந்த சர்ஜரியாக இருந்தாலும், மஹாபத்ராவின் டெலிவரி நேரத்தை கணக்கிட்டு, அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே வைத்துக் கொண்டான். அதற்கு மேல், வரும் எந்த சர்ஜரியிலும் தலையை நுழைத்துக் கொள்ளவில்லை. எதற்கு தேவையற்று மற்றவர்களுக்கு ஃபால்ஸ் ஹோப் தர வேண்டும் என்ற எண்ணத்தில், அனைத்தையும் நேர்த்தியாக ஸ்கெடியூல் செய்தான்.

அவனது மொத்த சேமிப்பையும், தன் குழந்தைக்காக வங்கியில் கணக்கு வைத்தவன், பதினெட்டு வயதானதும் குழந்தைக்கு பணம் சேரும் படி செய்தான். கூடவே, இன்சூரன்ஸ் பாலிசி என எடுத்துக்கொண்டவன், அவன் இறப்பிற்கு பிறகு தாய் தந்தைக்கு பணம் சேருமாறு செய்தான்.

அவனோ ப்ராக்டிகலாவே இறப்பிற்கு தயாராகி விட, மஹாபத்ராவிற்கு நெஞ்சம் நடுங்கியது. அவனது செய்கைகள் எல்லாம் அவளுக்கு பயத்தைக் கொடுக்க, அதற்கு மேலும் முடியாமல், “தஷ்வா… என்ன இதெல்லாம். நீ என்ன செஞ்சுட்டு இருக்க…?” கேட்கும் போதே குரலில் நடுக்கம்.

அவனோ புருவம் சுருக்கி, “ம்ம்ம் ஆஃப்டர் டெத் பிளானிங். என் குடும்பத்துக்கும் நான் ஏதாவது நியாயம் செய்யணும்ல. என் அப்பாவும் அம்மாவும் என்ன பாவம் பண்ணுனாங்க. அட்லீஸ்ட், என் பணமாச்சு அவங்க கூட இருக்கட்டும்.” என்றவனின் குரலில் வருத்தம் இருந்தாலும், சாவதை எண்ணி பயம் துளியும் இருக்கவில்லை.

மஹாவால் ஆபத்து வந்து விடுமோ என்று பயந்து தானே, அவளுடன் ஒரே வீட்டில் தங்க சம்மதித்தான். இப்போதோ எந்த பயமும் அற்று, உணர்ச்சிகளை முற்றிலும் துறந்தவனைக் காண சகிக்கவில்லை அவளுக்கு.

“ப்ளீஸ் அமுலு… இப்டிலாம் பேசாத. முதல்ல நீ இப்படி பிளான் பண்றதை நிறுத்து… எனக்கு… எனக்கு… ஏதோ மாதிரி இருக்கு…” கண்ணெல்லாம் கலங்கி விட்டது அவளுக்கு.

“வாழும் போது கேட்க நினைச்ச வார்த்தையை, சாக போறப்ப சொல்ற. ஹ்ம்ம்!” எனக் கேலியில் வேதனை கலந்து கூறியவனைக் கண்டு தவித்தாள் மஹாபத்ரா.

அவளது தவிப்பை ஆசை தீர கண்டு ரசித்தவன், “உனக்கு எப்பவுமே என் உணர்வுகள் முக்கியமே இல்லைலடி. உன்னை பொறுத்தவரைக்கும் நான் வெறும் ஜடம் அப்பவும் இப்பவும்.

என் உணர்வுகளை புருஞ்சுக்காம, லிவ் இன் ரிலேஷன்ஷிப்க்குள்ள வர வச்ச. உன்மேல காதல் வந்து, அதை சொன்னப்ப, அந்த உணர்வையும் புருஞ்சுக்காம என்னை உதாசீனப்படுத்துன. இப்போ, இவ்ளோ வருஷத்துக்கு அப்பறம், கிடைச்ச உன்னை மிஸ் பண்ணக்கூடாதுன்னு கல்யாணம் பண்ணி, உன் கூட வாழ்ந்த உறவையும் அது குடுத்த காதல் உணர்வையும் புருஞ்சுக்காம, இப்படி ஒரு முட்டாள்தனம் பண்ணி வச்சுருக்க. ஏண்டி? ஏண்டி என்னை இப்படி சித்தரவதை பண்ணுற.” என குரல் தேயக் கேட்டவனை வெறித்தாள்.

“ஏன்னா, எனக்கு அப்போ உன் உணர்வுகளை விட உன் உயிர் தான் முக்கியம்ன்னு தோணுச்சுடா. நீ வேணும். எனக்கு உயிரோட வேணும்…” என்று அவனது சட்டையைப் பிடித்து உலுக்கியவள், “ஐ நீட் யூ அட் எனி காஸ்ட்” என்றாள். இம்முறை அக்கண்களில் பிடிவாதம் தெரியவில்லை, நேசமே தெரிந்தது. காலம் கடந்த நேசமாகிப் போகிற்றே!

அவளையே துளைக்கும் பார்வை பார்த்தவனின், விழி வீச்சில் சட்டென விழிகளைத் திருப்பிக் கொண்டவள், “என் அம்மாவும் உன் அப்பாவும் அண்ணன் தங்கச்சி. நான்… நான் உன் அத்தை பொண்ணு.” என்றாள் அவன் சட்டையைப் பார்த்தே.

“அரிய கண்டுபிடிப்பு!” என்றவனது அசட்டைத் தன்மையில் விழி விரித்தாள். “உனக்கு தெரியுமா அமுலு?” எனக் கேட்டவளின் குரல் தழுதழுத்தது.

தன்னவளை ஆழ்ந்து நோக்கியவன், “நான் உன் கசின்னு உனக்கு எப்போ தெரியும்?” எனக் கேட்க, அவளோ புரியாமல், “நீ செகண்ட் இயர் படிக்கும் போது.” என்றாள்.

இதழோர நகை புரிந்தவன், “எனக்கு உன்னை பார்த்த ‘ஃபர்ஸ்ட் டே’ அன்னைக்கே தெரியும். நீ என் அத்தை பொண்ணுன்ற உரிமைல தான் விளையாட்டா ப்ரொபோஸ் பண்ணுனேன். ஒருவேளை நீ சீரியஸா எடுத்துட்டு என்னை போட்டு தள்ள நினைச்சா, உண்மையை சொல்லலாம்ன்னு நினைச்சேன். ஆனா, என்னை அன்னைக்கு விட்டுட்டியே?” என்றான் கண்ணில் ரசனையுடன்.

கன்னக்கதுப்புகள் காரணமின்றி சிவந்து போனது மஹாபத்ராவிற்கு. “உனக்கு எப்படி தெரியும்?” கேட்கும் போதே ஒரு வித வெட்கம் சூழ்ந்தது.

“சின்ன வயசுல நீயும் அத்தையும் ஒரு தடவை சென்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்தீங்க ஞாபகம் இருக்கா?” அவன் கேட்டதில்,

“ம்ம்… இருக்கு. ஆனா, அப்போ நீ ஸ்கூலுக்கு போயிட்டன்னு தான சொன்னாங்க. அன்னைக்கு மாமாவும் அத்தையும் மட்டும் தான் இருந்தாங்க. மஞ்சு கூட இல்லயே.” குழப்பமாகக் கேட்டவள்,

“அதுவும் இல்லாம, அன்னைக்கு உன் நானாக்கும் என் நானாக்கும் பிரச்சனை வேற ஆகிடுச்சு. என் அம்மாவை மாமா தான் வலுக்கட்டாயமா கூப்பிட்டதா நினைச்சு நானா சண்டை போட்டாரு. இன்ஃபாக்ட், அதுக்கு அப்பறம் நானாவுக்கும் அம்மாவுக்கும் ரொம்ப பிரச்சனை ஆகிதான், அம்மா சொல்லாம கொள்ளாம கிளம்பிட்டாங்க.” எனக் கூறினாள் இடுங்கிய புருவத்துடன்.

கட்டை விரல் கொண்டு, நெளிந்திருந்த பாவையின் புருவங்களை நீவி விட்ட தஷ்வந்த், “அம்மா சொன்னாங்க பிரச்சனை ஆகிடுச்சுன்னு. அத்தையை அப்பா தான் ரொம்ப பாசமா வளர்த்தாங்க. ஆனா, ஒரு ரௌடியை விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டதுல அப்பாவுக்கு ரொம்பவே கோபம். அதுனால தான் மஞ்சுவோட காதலை கூட அவரு குருட்டாம்போக்கா அக்செப்ட் பண்ணாமயே இருந்தாரு.

அத்தை வீட்டுக்கு வந்துட்டு போன கொஞ்ச நாள்ல இருந்தே, அப்பா சரியே இல்ல. நான் ஹைதராபாத்க்கு படிக்க போறேன்னு சொன்னப்ப கூட, என்னை அவ்ளோ சீக்கிரமா அனுப்ப ஒத்துக்கவே இல்ல. நான் தான் அடம்பிடிச்சு வந்தேன். அங்க அட்மிஷன்க்கு வரும் போதே, உன்னை பார்த்தேன். அதுவும் ஒருத்தன் கையை அசால்ட்டா உடைச்சுட்டு இருந்த. ஊருக்கு வந்த நேரத்துல இப்படி ஒரு சம்பவத்தை பாக்கணுமான்னு முதல்ல பயமா தான் இருந்துச்சு. அப்பறம் என்கூட அட்மிஷன் போட வந்த பசங்க மூலமா தான் தெரிஞ்சுது, உன் அப்பா யாருன்னு. எனக்கு உன் அப்பா பேர் தெரியும். அவரு ரௌடின்னும் தெரியும். ஆனா ஹைதராபாத்ல இருக்கீங்கன்னு எனக்கு தெரியவே தெரியாது…” என்னும் போதே,

அவள் குறும்பாக, “தெரிஞ்சுருந்தா வந்துருக்கவே மாட்டில?” என்று கேட்டதில்,

அவனும் சிறு புன்னகையுடன், “அந்த ஊரை க்ராஸ் பண்ணி கூட போயிருக்க மாட்டேனாக்கும்” என்றதும் அங்கு சிறிய சிரிப்பொலி கேட்டது.

“சரி சொல்லு! நான் உன் அத்தை பொண்ணுன்னு தெரிஞ்சதும் என்ன நினைச்ச?” என்று அவள் கதை கேட்க ஆயத்தமாக, அவனும் தொடர்ந்தான்.

மென்னகையுடன், “நமக்கு இவ்ளோ அழகா ஒரு அத்தை பொண்ணு இருக்காள்ன்னு தெரியாம போச்சேன்னு ஒரே வருத்தமா போச்சு. அதோட அந்த அழகான அத்தை பொண்ணு என்னை விட ஒரு வருஷம் சீனியரா போய்ட்டாளேன்னு ஒரே சோகம்.” என உதட்டைப் பிதுக்கியவனை, அள்ளி அணைத்துக் கொண்டாள்.

அவனும் அவளைக் கட்டியபடி, கழுத்தினுள் வாசம் பிடித்தவாறு, “ஆனால், நீயும் ஒரு பேட்டை ரௌடின்னு தெரிஞ்சதும் அந்த நினைப்பை ஆசிட் ஊத்தி அழிச்சுட்டேன்டி.” என்று கிண்டலுடன் கூற, அவனை விலக்கியவள், இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.

அதில் கீழுதட்டைக் கடித்து சிரித்தவன், “முறைச்சா, உண்மையை மறைச்சு பொய் சொல்ல முடியுமா டாலு. உண்மையா அங்க படிக்கிற வரை உன் கண்ணுல கூட படாம படிச்சுட்டு ஓடிடணும்ன்னு தான் நினைச்சுருந்தேன். ஆனா, முதல் நாளே, உன்னை பார்த்து ஐயா ஃபிளாட்டு. இருந்தாலும் சீனியர் பொண்ணை டாவு விடுறியேன்னு என் உள்மனசு என்னை காறி துப்புச்சு.

பட் லவ் எல்லாம் இல்ல அப்போ. ஒரு உரிமை. என் சொந்தக்கார பொண்ணுன்ற ஒட்டுதல் இருந்துச்சு. அப்போ அப்போ உன்னை சைட் அடிச்சுப்பேன். என்ன… இதெல்லாம் வெளில சொன்னா, நீ என்னை அப்பவே போட்டு தள்ளிடுவன்னு அப்படியே நல்ல பையன் மாதிரி இருந்துட்டேன்” என்று கூறி முடிக்க, அவன் காதை திருகினாள் மஹாபத்ரா.

“அடப்பாவி… அப்பிராணி மாதிரி இருந்துகிட்டு என்ன என்ன வேலை பாத்துருக்க?” என்று முடியை பிடித்து ஆட்டினாள். ஆனாலும் உள்ளுக்குள் ஜில்லென இருந்தது.

“நான் ஏதோ அத்தை பொண்ணு, நமக்கு இல்லாத உரிமையான்னு நினைச்சு சைட் அடிக்க மட்டும் தான் செஞ்சேன். உனக்கும் எனக்கும் இருந்த ஏஜ் டிஃபரென்ஸ் என்னை அதுக்கு மேல யோசிக்க விடல. ஆனா, என்னை லிவ் – இன் க்கு நீ கூப்பிட்டப்ப, ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.

உன்னை சைட் அடிச்சதையும் அதுக்கு அப்பறம் சுத்தமா நிறுத்திட்டேன். சில நேரம் இவள் ஏன் தான் எனக்கு அத்தை பொண்ணா இருக்காளோன்னு தோணும். ஆனாலும் உன்னை தப்பா நினைக்க முடியல. மந்த்ரா உன்னை தப்பா பேசுனப்ப கூட என்னால அதை அக்செப்ட் பண்ணிக்க முடியல. உன் இடத்துல வேற யாராவது இருந்திருந்தா, ஊரை காலி பண்ணிட்டு போயிருப்பேன். நீ என் கசின்ற ஒரே காரணத்துனால தான், உன் கூட ஒரே வீட்ல இருந்தேன். பட் எனக்கு கெஸ் இருந்துச்சு, என்னை பத்தி எல்லாமே தெரிஞ்சு வச்சுருக்குற உனக்கு, நமக்குள்ள இருக்குற உறவை பத்தியும் தெரிஞ்சுருக்கும்ன்னு. கடைசி வரை நீ அதை பத்தி பேசுவன்னு வெய்ட் பண்ணுனேன். பட்…” என்று கூறிக்கொண்டே வந்தவனுக்கு, கடந்த காலம் மீண்டுமொரு இறுக்கத்தைக் கொடுத்தது.

விரல்கள் கொண்டு, அழுத்தம் படிந்த தன்னவனின் முகத்தைத் தடவி சீராக்கியவளின் முகம் இப்போது கசங்கி இருந்தது.

அத்தியாயம் 28

அவ்விரல்களுக்கு முத்தம் வைத்தவன், “ரொம்ப நேரமா நிக்கிற. டயர்ட் ஆகிடும் டாலு. ரெஸ்ட் எடு.” என்று படுக்கையில் படுக்க வைத்து விட்டு, நகர எத்தனிக்க, அவள் விடவில்லை. அவனையும் அருகில் படுக்க வைத்தவள், அவன் மார்பின் மீது தலையை பதித்துக் கொண்டாள்.

அந்நிலை இருவருக்குமே கண்ணீரைக் கொடுத்தது.

சில நிமிடங்கள் அமைதிக்குப் பிறகு அவளே பேசினாள்.

“ஒரு தடவை, நம்ம காலேஜ்ல ஒரு கலவரம் நடந்துச்சே. நான் மந்த்ராவை ஹர்ட் பண்றதுக்கு முந்தின நாள்… ஞாபகம் இருக்கா அமுலு…” எனக் கேட்டு அவன் முகம் பார்த்தாள்.

கண்களை சிமிட்டி, கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவன், “ம்ம்… இருக்கு.” என்றதில், “அன்னைக்கு உண்மையாவே என்ன பிரச்சனை நடந்துச்சுன்னு தெரியுமா?” எனக் கேட்டாள் அவன் கன்னத்தை வருடியபடி.

தஷ்வந்த் புரியாமல் தலையாட்ட, “அப்போ நடந்த கலவரமே உனக்காக தான்.” என்றதில் அவன் குழம்பினான்.

“எனக்காகவா? என்ன சொல்ற?” என அவன் கேட்ட கேள்வியில், “என் நானா உன்னை கொல்ல தான் ஆள் அனுப்பி இருந்தாரு. அவனுங்களை தான் என் ஆளுங்க அடிச்சதுல அங்க பிரச்சனை…” என்றதில் தஷ்வந்த் சன்னமாக அதிர்ந்தான்.

“எனக்கு புரியல டாலு. அப்போ உனக்கும் எனக்கும் இடைல எதுவுமே இல்லையே. அப்பறம் ஏன் என்னை கொல்ல வரணும்?” என சிந்தித்தான்.

அவனது கேசத்தை மென்மையாக கோதி விட்டவள், “அவர் உன்னை கொல்ல நினைச்சதுக்கும், நம்ம ரிலேஷன்ஷிப்க்கும் சம்பந்தம் இல்ல அமுலு. உன் நானாக்கும் என் நானாக்கும் இருந்த வாய் சண்டை கைகலப்பாகி, என் நானா பத்தி தெரியாம மாமா விட்ட சில வார்த்தைகள் தான், இவ்ளோ பிரச்னைக்குமே காரணம்” என்று பெருமூச்சு விட்டாள்.

அப்போதும் அவனுக்கு புரியவில்லை. “அப்பா என்ன சொன்னாருடி? எனக்கும் முழுசா என்ன ஆச்சுன்னு தெரியல” என மஹாபத்ராவின் முகத்தைப் பார்த்தான். அவளும் அந்நிகழ்வுகளுக்குள் பயணிக்க தொடங்கினாள்.

காதல் திருமணம் செய்து கொண்ட மணிமேகலைக்கு மகளும் கை விட்டு சென்று விடுவாளோ என்ற அச்சம் மேலோங்கியது.

சொல்லிக்கொள்ள உறவென்று யாரும் இல்லாததோடு, மகளுக்கும் தன்னுறவுகளைப் பற்றிக் கூற வேண்டும் என்ற எண்ணத்தில், அண்ணனின் வீட்டிற்கு வருகை தந்தாள்.

சகுந்தலா, கணவனின் தங்கையை அன்புடன் வரவேற்க, கதிரேசனுக்கும் என்ன தான் கோபம் இருந்தாலும், பெண்ணுடன் வந்த தங்கையைக் கண்டு அத்தனை மகிழ்ச்சி.

அவர்களின் அன்பு கண்டு மணிமேகலைக்கு கண்கள் பனித்தது. “என்னை வாசலோட அனுப்பிடுவீங்களோன்னு நினைச்சேண்ணா…” என்றவளை வாஞ்சையுடன் பார்த்தவர், “நீ என்னை தேடியே வர மாட்டன்னு நினைச்சேன்” என்று விழி கலங்கினார்.

சில பல நல விசாரிப்புகளுக்குப் பிறகு, “உன் புருஷன் இன்னும் அப்படியே தான் இருக்காரா மணி” எனக் கேட்டார் சகுந்தலா.

‘அதை விட மோசமா…’ என்று சொல்லப் பிடிக்காமல், சிறு புன்னகையுடன் முடித்துக் கொண்டதில், அவருக்கு ஆயாசமாக இருந்தது.

ஹர்மேந்திரன் பற்றி கதிரேசனும் கேட்டுக்கொள்ளவில்லை. ஏனோ, அவரை சுத்தமாகவே பிடிக்காது. அவனை நம்பி தங்களை விட்டு சென்று விட்டாளே, என்ற தாங்கலை மறைத்துக் கொண்டவர், அன்று முழுதும் தங்கையையும் தங்கை பெண்ணான மஹாபத்ராவையும் நன்றாகவே பார்த்துக் கொண்டார்.

மஹாபத்ராவும், அவர்களுடன் நன்றாகவே பழக, அன்று இரவு அவர்கள் ரயில் ஏற எத்தனிக்கும் நேரம், ஹர்மேந்திரன் மணிமேகலையைத் தேடி அங்கு வந்து விட்டார். முகத்தில் கோபத்தீ ஜொலித்தது.

வந்தவர், என்ன ஏதென்று விசாரியாமல், மணிமேகலையை சப்பென அடித்திருக்க, தம்பதியர்கள் அதிர்ந்து விட்டனர்.

“என் பொண்ணை கண்டவன் வீட்டுக்கு கூட்டிட்டு போற உரிமையை உனக்கு யாருடி குடுத்தது. வீட்டை விட்டு சொல்லாம வர்ற அளவு உனக்கு தைரியம் வந்துடுச்சா?” என்று மீண்டும் அறைந்தார்.

மணிமேகலை கன்னத்தைப் பற்றிக்கொண்டு கண்ணீருடன் நிற்க, கதிரேசனுக்கு மனம் பதறியது. கோபத்துடன், “டேய்… என் தங்கச்சி மேல கை வச்ச, உன்னை இங்கயே கொன்னு போட்டுடுவேன்.” என்றதில் அவர் முகத்தில் இளக்கார நகை.

“என்னை இவரு கொன்றுவாராம்…” என கேலி சிரிப்புடன் பார்த்தவரைக் கண்டு, மணிமேகலைக்கு அச்சம் உண்டானது.

“தப்பு என் மேல தான். வாங்க போலாம்.” என்ற மணிமேகலையின் சமாதானத்தை காதில் வாங்காமல்,

“என்னடா… உன் தங்கச்சி பெரிய இடத்துல இருக்கா, அவளை சரிகட்டி அப்படியே ஒட்டிடலாம்ன்னு பாக்குறியா? உன் தங்கச்சிட்ட வேணும்ன்னா, உன் சென்டிமென்டை காட்டி மயக்கு. ஆனா, என் பொண்ணை நெருங்குன பொணமாகிடுவ…” என கர்ஜித்தவர், அப்போது வரை, தந்தையைக் கண்டு விழித்தபடி தன் மாமாவின் கரம் பற்றி நின்ற மஹாபத்ராவை தூக்கிக்கொண்டார்.

“பொம்பளைப்பிள்ளையை வச்சுருக்கோம்ன்னு கொஞ்சம் கூட பயம் இல்லாம இருக்க ஹர்மா. நீ செய்ற பாவம்லாம் உன்னை மட்டும் சுத்தாது… ஞாபகம் வச்சுக்கோ…” கதிரேசன் எரிச்சலாக மொழிய,

“ஹா… என் பொண்ணு தான் எனக்கு அடுத்து என் சாம்ராஜ்யத்தையே பார்க்க போறா. அவளை நினைச்சு நான் ஏன் பயப்படணும்.” என்றவர்,

“நீ என் கூட தான இருப்ப மஹாம்மா?” என சிறுமியிடம் கேட்க, அவளோ காலையில் இருந்து தந்தையை காணாத வருத்தத்துடன், தாயுடனும் சண்டையிட்டதில் சற்று திகைத்திருந்தாள்.

இருந்தும் தன்னிச்சையாக, “ஆமா நானா. நான் எப்பவும் உங்க கூட தான் இருப்பேன். இன்னைக்கு கராத்தே க்ளாஸ் மிஸ் ஆகிடுச்சு” என்று குறைபடக் கூறி தந்தையின் கழுத்தைக் கட்டிக்கொண்டதில், அவருக்கு மெத்த பெருமை.

அவளுக்கு தற்காப்பு கலைகளை கற்றுக்கொடுப்பதே மற்றவர்களை காயப்படுத்த தானே! இதனை மணிமேகலையும் தமையனிடம் கூறி வருந்தினார்.

அதனை மனதில் வைத்து, “என்ன இருந்தாலும், அவள் பொண்ணு ஹர்மா. தைரியமா இருக்க சொல்லிக்கொடுக்கலாமே தவிர, உன்ன மாதிரி ஆக்க முயற்சி பண்ணாத…” என்றவரின் அறிவுரைகளை ஒதுக்கி தள்ளி,

“உனக்கு பையன் இருக்கான்ற திணக்கத்துல என் பொண்ணை மட்டம் தட்டுறியா?” என்று வாதத்தையே திசை திருப்பி இருக்க, கதிரேசனுக்கு ஐயோ என்றிருந்தது.

அவ்வாதம் அப்டியே தொடர, அதனை கேட்க விரும்பாத மணிமேகலை கணவனை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றார்.

அதன் பிறகு, அவர் வீட்டை விட்டு வெளியேறிட, வருடங்கள் கடந்தும் எங்கெங்கோ தேடியும் கிடைக்காததால், இறுதியில் கதிரேசன் மறைத்து வைத்திருப்பதாக எண்ணி, அவரிடம் வந்து சண்டையிட்டார் ஹர்மேந்திரன்.

“என் தங்கச்சியை என்னடா பண்ணுன?” என கதிரேசனும் சண்டையிட, இறுதியில் மீண்டும் தேவையற்ற வாக்குவாதத்தில் வந்து முடித்தனர்.

“இப்படியே போனா, உன் பொண்ணும் இல்லாம போய்டுவா ஹர்மா” என்ற கதிரேசனின் கூற்றில் அவரது கோபம் எல்லை மீறி வளர்ந்தது.

‘நீ செய்ற தப்பு என் தங்கச்சியை மட்டும் இல்லாம உன் பொண்ணையும் பாதிக்க கூடாது’ என்ற அக்கறையில் தான் கூற விழைந்தார். ஆனால், அதனை தவறாக புரிந்து கொண்ட, ஹர்மேந்திரன் கதிரேசனை அடித்து விட்டுப் போக, அவரோ காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார், தங்கையை அவர் கொலை செய்து விட்டதாக.

அதற்கு மேலும் தன்னை எதிர்ப்பவரை உயிருடன் வைத்திருப்பது ஹர்மேந்திரனின் பழக்கம் இல்லையே. ஆனால், அப்படியே கொல்ல மனம் வரவில்லை அவருக்கு. தன் தங்கையை அவருக்கு தர மறுத்தபோதே, கதிரேசன் மீது வன்மம் வளர்ந்திருந்தது. அது இப்போது விருட்சமாகி, கதிரேசனை துடிக்க வைக்க எண்ணியவர், முதலில் அவருக்கு உயிரான மகனைக் கொன்று, அந்த வேதனையில் துவள விட்டு, பின் வீட்டில் இருந்த மற்றவர்களை கொல்ல எண்ணி, முதலில் தஷ்வந்தின் மீது குறி வைத்தார்.

அவன், ஹைதராபாத்தில் படிப்பது தெரிந்ததும், அவரின் வன்மத்திற்கு வசதியாகப் போயிற்று.

“அந்த பயலை இங்கயே முடிச்சு விடு கேசவா. தான் பையன் ஏன் செத்தான், எதுக்கு செத்தான்னு எதுவுமே தெரியக்கூடாது அந்த நாய்க்கு. என் முன்னாடி நின்னு பேசவே அவனுக்கு அதிகாரம் கிடையாது. என் பேர்லயே போலீஸ் கம்பளைண்ட் குடுக்குறான். அவனும் அவன் பேச்சும்… எப்பவோ அவனை குத்தி போட்டு இருக்கணும். மேகலைக்காக விட்டு வச்சுருந்தேன். இனிமே என் பொண்டாட்டிக்கு சொந்தம்ன்னு சொல்ல அங்க யாரும் இருக்க கூடாது. என் பொண்டாட்டியோட சொந்தம்ன்னு சொல்லி எவனும் வரக்கூடாது. ஓடுகாலி… அவளை தேடுறதே, கண்டுபிடிச்சு அவளை என்ன பண்றேன்னு பாரு. இவளால, கண்ட நாயெல்லாம் பேசுது…” என்ற ஹர்மேந்திரனுக்கு கோபம் அடங்கவே இல்லை.  

“அந்த பையன் இங்க தான இருக்கான். செஞ்சுடலாம் ஹர்மா. நீ பொறுமையா இரு.” என்று கேசவன் அமைதி படுத்தினார்.

தந்தையிடம் ஏதோ பேச வந்த மஹாபத்ரா தான், அவரது கோபத்தில் வாசலிலேயே நின்று புருவம் சுளித்தாள்.

‘என் அம்மாவோட சொந்தம், அவங்களோட அண்ணன் வீடு மட்டும் தான்… அவங்க மேல இன்னுமா கோபமா இருக்காரு?’ என பெருமூச்சு விட்டவள், அதன் பிறகு அதில் தலையிடவில்லை. அப்படி தலையிடுவதும் அவருக்கு சுத்தமாக பிடிக்காத ஒன்று.

ஆனால், அந்த மாமா மகன் கல்லூரியில் தன்னைக் கவரும் தஷ்வந்த் என்று அவள் எண்ணியதே இல்லை.

அன்று, கல்லூரிக்குள் நுழைந்த மஹாபத்ரா, தன் வகுப்பு நோக்கி மந்த்ராவுடன் பேசியபடி சென்ற தஷ்வந்தை ரசித்தாள்.

‘இவன் மட்டும் சீனியரா இருந்தா, அப்படியே அள்ளிட்டு போயிருக்கலாம்.’ என உதட்டை சுளித்துக் கொண்டவள், அவனுக்கு சற்று தூரத்தில் ஒருவன் தஷ்வந்தை பின்தொடர்வதைக் கண்டாள்.

அவனது கைகளில் கையடக்க கத்தி. மேலும் சிலர் அங்கு சுற்றி இருப்பதை உணர்ந்தவள், சட்டென சுதாரித்து, அவனைப் பிடித்து விட்டாள்.

இது எதையும் அறியாமல் தஷ்வந்த் வகுப்பிற்கு சென்று விட,  மஹாபத்ராவின் உத்தரவில் மதனும் திருவும் மேலும் மற்ற அடியாட்களும், புதிதாய் வந்த ரௌடிகளை அடித்து துவம்சம் செய்தனர்.

அவர்களைப் பிடித்து விசாரித்தபோது தான் தெரிந்தது, தஷ்வந்தை கொலை செய்ய தந்தையே ஆள் அனுப்பியதும், அவன் தனது மாமன் மகன் என்றும்.

‘அட, நம்ம ஆளா இவன்… அதான், அவனை பார்த்தாலே சம்திங் டிஃபரென்ட் ஃபீலிங்கா இருந்துச்சா?’ என தனக்குள் புன்னகைத்துக் கொண்டிருக்கும் போது தான், தஷ்வந்த், மந்த்ராவின் கரம் பிடித்து அழைத்துச் சென்று கொண்டிருந்தான்.

அதனைக் கண்டு காய்ந்தவள், அந்த நொடியில் இருந்தே அவன் மீது வெறித்தனமான உரிமையை வளர்த்துக்கொண்டாள்.

மந்த்ராவை காயப்படுத்தியதும் அப்படி ஒரு நிலையில் தான். அதன் பிறகே, சற்று நிதானத்திற்கு வந்தாள். தந்தை அவனைக் கொலை செய்ய முயல்கிறார் என்றால், அவன் சாகும் வரை நிச்சயம் விடமாட்டார் என்று சரியாக கணித்தவள், செய்வதறியாமல் இருந்தாள்.

அவனைக் கொலை செய்ய வேண்டாம் என்று தந்தையிடம் காரணமும் கூற இயலாது. சொன்னாலும் அவர் கேட்கப்போவதில்லை. அவன் தனது மாமன் மகன் என்று தந்தையிடமும் தெரிந்தது போல காட்டிக்கொள்ளவில்லை. அதே நேரம், தஷ்வந்த் பற்றி அவரும் மூச்சு விடவில்லை.

இருவருமே கண்ணாமூச்சி விளையாட, தஷ்வந்தை தந்தையிடம் இருந்து காப்பாற்றும் வழி தெரியாமல் குழம்பினாள் மஹாபத்ரா.

காதல் என்று கூறினாலும் கொலை நிச்சயம் என்றுணர்ந்தவளுக்கு, தான் அவன் கூடவே இருந்தாலொழிய தந்தை அவனை நெருங்க இயலாது எனக் கணக்கிட்டவளுக்குள் உதித்தது லிவ் இன் ரிலேஷன்ஷிப் திட்டம்.

இதனைக் கேட்டு படக்கென எழுந்து அமர்ந்த தஷ்வந்த், “அப்போ நீ நிஜமாவே லிவ் இன் ரிலேஷன்ஷிப்புக்காக என்னை கூப்பிடலையா?” என்று விழிகளை அகல விரித்துக் கேட்க,

அவளும் எழுந்து அமர்ந்து, “முதல்ல அதுக்காக கூப்பிடல. ஆனா, போக போக, அப்படி ரிலேஷன்ஷிப்ல இருந்தா தான் என்ன தப்புன்னு தோணுச்சு…” என்று ரசனைப் புன்னகைப் பூக்க, அவன் முறைத்தான்.

அதில் மேலும் புன்னகைத்தவள், “24 மணி நேரமும் மதனையும் திருவையும் காவலுக்கு போட்டது நீ என்கிட்ட இருந்து தப்பிச்சு போய்டுவன்னு இல்ல அமுலு. சின்ன கேப் கிடைச்சாலும், நானா கண்டிப்பா அவர் நினைச்சதை சாதிச்சுடுவாரு. எனக்கு அம்மாவோட ஃபேமிலி மேல ஒரு சாப்ட் கார்னர் இருக்குன்னு நானாவுக்கு நல்லாவே தெரியும். எனக்கு உன்னை பத்தி தெரியக்கூடாதுன்னு அவர் அப்போதைக்கு அமைதியா இருந்தது தான், அப்போ நடந்த ஒரே நல்ல விஷயம்.

அதான், நீ வெளில போனா கூட மதனோ இல்ல நானோ உன் கூடவே இருந்தோம். நீ லீவ்க்கு சென்னை வர்றதுக்கு கூட அதுக்காக தான் நான் ஒத்துக்கல. மதனையும் உன் கூட அனுப்பி வச்சேன். இதெல்லாம் எவ்ளோ நாளைக்குன்னு யோசிக்கிற அளவு எனக்கு பொறுமை இல்லை. அப்போ அந்த நிமிஷம் உனக்கு எதுவும் ஆக கூடாதுன்றது மட்டும் தான் என் மொத்த எண்ணமா இருந்துச்சு. அதுக்கு இடைல, உன் மேல வந்த உணர்வு…” என்று ஆரம்பிக்கும் போதே தொண்டை அடைக்க, கண்கள் கலங்க தயாரானது.

என்னவோ உன்கூடவே இருக்கணும்ன்னு தோணுச்சு…! உன்னை உரசிக்கிட்டே, குட்டி குட்டி முத்தம் கொடுத்துக்கிட்டு… அப்படியே லைஃப் புல்லா இருக்கணும்ன்னு…” என ஆற்றாமையை அடக்கியபடி பேசியவள்,

“உன்மேல ஒரு வெறித்தனமான அன்பு… சரி காதல்ன்னே வச்சுக்கோ. அது தான், உனக்கு ஒன்னுன்னாலும் என்னை எந்த எல்லைக்கும் போக வச்சுச்சு. பொறுமையா அமைதியா பேச தெரியாத என்னையும், உங்கிட்ட அடங்கி போக வச்சுச்சு. நீ ஒன்னு கேட்டுட்டா அதை அடுத்த செகண்ட் செஞ்சு முடிக்க வச்சுச்சு. உனக்கு என்னை மொத்தமா தரவும் அது தான் காரணமா இருந்துச்சு அமுலு. யூ ஆர் டாமின் டெவில். எனக்குள்ள வந்து என்னை ஆட்டிப்படைக்கிற இப்ப வரை.” என பொறுமை இழந்து தன் மனதை கூறியவளின் இதழ்கள் சிறைசெய்யப்பட்டது.

அதிக நேரம் பேசி விட்டாள் என்றோ, அல்லது தனக்கு வேண்டிய வார்த்தை அவள் வாய் வழியே வந்து விட்ட உணர்வுப்பெருக்கிலோ அவன் மொத்தமாக உடைந்திருந்தான்.

சுவைத்த இதழ்களின் ஈரம், அவனுக்கு சாகும் வரை வேண்டுமென்ற ஏக்கத்தைக் கொடுத்தது. அவளது காதல், அவனை உறைய உருக வைக்க, மேலும் பேசிடத் தோன்றவில்லை. இந்த இனிய மௌனத்திலேயே உயிர் பிரிந்திடாதா என்றிருந்தது.

அவளுக்கோ அம்முத்தம் சிலிர்ப்பைத் தந்ததோடு தவிப்பையும் தந்தது. மெல்ல விலகியவள்,

கண்ணில் நின்ற நீருடன், “என் அமுல் பேபி தான நீ. என் பேபிக்கு நீ வேணும்டா. என் நானா என்னை வளர்த்த மாதிரி வேணாம். உன்னை மாதிரி வளரனும் நம்ம பொண்ணு. ப்ச்… பொண்ணா தான் இருக்கணும்ன்னு ஆசையா இருக்கு. ஏன்னு தெரியல. ஆனா, அது உன்னை மாதிரி இருக்கணும்டா. என் அமுலு மாதிரி கோபப்பட தெரியாம, கோபம் வந்தாலும் காட்ட தெரியாம… ப்ளீஸ் அமுலு. உன் முடிவை மாத்திக்கோடா.” என்றாள் உணர்ச்சிப் பெருக.

அவளது நெற்றியில் மென்மையாக முட்டியவன், “என் அக்கா என்னை விட நல்லா வளர்ப்பா.” என்று அவன் பிடியில் அழுத்தமாக இருக்க, “ஏண்டா இப்படி பண்ற?” என்றாள் ஆதங்கமாக.

“அதை நான் கேட்கணும்! நீ ஏண்டி இப்படி செஞ்ச?” அவனும் ஆதங்கத்துடன் பார்க்க,

அவளோ சில நொடி மௌனத்திற்கு பிறகு, “நீ தான கேட்ட.” என்றாள் மொட்டையாக.

“நான் என்ன கேட்டேன்…?” அவனுக்கு மொத்தமாக குழம்பியது.

நிமிர்ந்து அவன் கண்களுக்குள் தன் கண்களை புதைத்தவள், “அன்னைக்கு… நீ கேட்டியே… நம்ம ஸ்ட்ரைட்டா பேபி பெத்துக்கலாமான்னு!” என்றதில், அவனுக்கும் அப்போது தான் முதல் கூடலின் போது ஏதோ உளறியதே நினைவில் வந்தது.

இதயம் உச்சகட்ட வேகத்தில் துடிக்க, “ஏய்… அது ஏதோ நான்… டாலு… நீ லவ்வை ஒத்துக்க மாட்டுறியேன்னு, உன்னை லாக் பண்ண வேற வழி இல்லாம, அப்படி கேட்டேன். அதுக்காக இப்படி ஒரு நிலமைல இடியட் மாதிரி நடந்துப்பியா?” அவன் தடுமாற்றத்தில் ஆரம்பித்து ஆக்ரோஷத்துடன் முடித்தான்.

தலையை லேசாக சரித்தவள், “கேட்டது நீயாச்சே…!” என்றதில், அவன் மலைத்திருந்தான்.

காயம் ஆறும்!

மேகா…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
20
+1
51
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்