Loading

 

கவினை முறைத்தபடி தன்னறைக்கு சென்று விட்ட வான்மதியின் முதுகையே வெறித்த ஆரவ், மொத்த சினத்தையும் உள்ளங்கையில் அடக்கி இறுக்கி மூடியபடி விருட்டென வெளியில் சென்றான்.

அதில் அவன் பின்னே மற்றவர்களும் செல்ல, இங்கோ விக்ராந்த் ஆத்திரத்தின் எல்லையில் இருந்தான்.

சௌமியா அவன் தோளை தொட்டு “விக்ராந்த்” என அழைக்க, சட்டென அவர் கையை தட்டி விட்டவன், “உங்க பையன் என்னையவே கடத்திட்டு போய் அடிச்சான். நீங்க எதுவுமே பண்ணலைல?” என்று நெருப்பாய் காய,

சரவணனும் அதே கோபத்துடன், “உன்ன காணோம்ன்னு நாங்களும் எல்லா இடமும் தேடுனோம் விக்ராந்த். நேத்து வான்மதியை ஆரவோட பார்த்ததும் தான், அவன் தான் ஏதோ பண்ணிருக்கான்னு புருஞ்சு, உன்ன கண்டுபிடிச்சோம். நீ மட்டும் ஒரு கம்பளைண்ட் குடு. அவனை உள்ள தள்ளி உண்டு இல்லைன்னு ஆக்குறேன். இல்ல வேணாம்ன்னா, வெளில வச்சே அவன் குடலை உருவுறேன்.” என்றார்.

அந்நேரம், நடந்த நிகழ்வு கேள்விப்பட்டு பரணியும், ரோகிணியும் அங்கு வந்தனர்.

ஏற்கனவே, கஜேந்திரன் மூலம் வான்மதிக்கு திருமணம் ஆனதை அறிந்திருந்தனர். அதிலும், நான்கு நாட்களுக்கு முன்பு, சுதாகர் வீட்டிற்கு வந்து, தன் தங்கையின் வாழ்க்கையை கெடுத்து விட்டதாக குடும்பத்தினரை திட்டி தீர்த்தவன், அப்போதும் கூட அவர்கள் வான்மதியை தவறாக பேசியதை பொறுத்துக் கொள்ள இயலாமல், இனிமேல் எனக்கும் இந்த குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென வீட்டை விட்டும், அவர்களின் மற்ற வியாபாரத்தை விட்டும் முற்றிலும் வெளியேறி இருந்தான்,

‘கடைசி வர, என் தங்கச்சிக்கு சேவகனாவே நான் இருந்துக்குறேன். நீங்க உங்க மரியாதையையும், கவுரவத்தையுமே கட்டிக்கிட்டு அழுங்க…’ என்று.

அதில் அவர்கள் சுதாகர் மீதும் கடும் கோபத்தில் இருக்க, இப்போதோ சரவணன் கிளம்பி வர சொன்னதில் பதறி அடித்து அங்கு வந்தனர். இன்னும் நம் பெண்ணால் என்ன என்ன அவமானங்களை சந்திக்கப்போகிறோமோ என்ற விரக்தியுடன்.

அவர்களைக் கண்டதும் சரவணன், “பார்த்தீங்களா உங்க பொண்ணை. நாங்க வேணாம்ன்னு தலைமுழுகுனவனையே கட்டிக்கிட்டு, அவனை வச்சே இவனை அடிக்க வைச்சு இருக்கா” என்று ஏற்றி விட, அவர்களோ அதிர்ந்தனர்.

சௌமியா தான் ஏதோ யோசனையில் இருக்க, விக்ராந்த் “என்னமா அமைதியா இருக்கீங்க. உங்க பையன்னு யோசிக்கிறீங்களோ?” என நக்கலாக கேட்க,

“என்ன பேசுற விக்ராந்த். நீயும் என் பையன் தான். என்னைக்கு என்னை அவமதிச்சு இங்க இருந்து போனானோ அப்போவே அவன் என் பையன் இல்லைன்னு முடிவு பண்ணிட்டேன்” என்று தீர்மானமாக கூற,

சரவணன், “இப்போ கூட உனக்காக தான் நான் பொறுமையா இருக்கேன் சௌமியா. இல்லைன்னா, இந்நேரம் அவன் உயிரோடயே இருக்க மாட்டான்.” என்று அவர் வாயை பிடுங்க, “எனக்கு விக்ராந்த் மட்டும் தான் பையன்” என்று அவரும் அழுத்தமாகவே உரைத்தார்.

விக்ராந்த்தோ, “அப்போ அவன் செத்தா அழுக மாட்டீங்க தான…?” என வக்கிரமாய் கேட்க, “மாட்டேன்” என்றார் தோளைக் குலுக்கி.

ஆரவின் தந்தை கதிரவன், கிட்டத்தட்ட ஆரவைப் போல தான். நீதி, நேர்மை, உண்மை உறவுகள் என வாழ்ந்தவர். அவர் செய்த பூர்வ ஜென்மத்தின் பாவத்தின் பலனாக சௌமியாவைத் திருமணம் செய்தார்.

வீட்டினர் செய்து வைத்த திருமணம் தான். கதிரவனுக்கு ஈரோடு தான் சொந்த ஊர். அங்கு தான் சூப்பர் மார்க்கெட் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். இருவருமே கல்லூரி முடித்தவர்கள் தான். சௌமியாவிற்கு அப்போதிருந்தே, வீட்டையும், பணத்தையும் கட்டி ஆள வேண்டும் என்ற ஆசை அதிகம். அதனை அறிந்த கதிரவனும், வீட்டையும், வியாபாரத்தின் கணக்கு வழக்குகளையும் அவரையே பார்க்க வைத்தார்.

அந்த சுதந்திரம் சௌமியாவிற்கு தலைக்கணத்தை கொடுக்க, வயதான மாமியார் மாமியாரையும், ஒரே நாத்தனாரான வனிதாவை உதாசீனப்படுத்தினார்.

வனிதாவுக்கு ஆரம்பித்தில் இருந்தே சௌமியாவைப் பிடிக்காது. இருந்தும் கதிரவனுக்காக பொறுத்துக்கொள்ள, வனிதாவின் திருமணத்திலும் அவருக்கென செலவு செய்யக்கூடாது என கதிரவனிடம் சண்டை இட, அப்போது தான் மனைவியின் உண்மை குணம் அறிந்தவருக்கு,

“என் தங்கச்சிக்கு நான் கல்யாணம் பண்ணி வைக்காம வேற யாரு செய்வாங்க.” என சண்டையிட்டு, அவரிடம் கொடுத்த பொறுப்புகளை மீண்டும் திருப்பி வாங்கி, அவரே தங்கைக்கும் நல்லவிதமாக திருமணம் செய்து வைத்தார்.

ஆனால், சௌமியா எப்போதும் வனிதாவின் புகுந்த வீட்டு ஆட்களை ஏளனமாக தரக்குறைவாக பேசி சண்டை இழுக்க, அதில் தான் இப்போது வரை, வனிதாவின் குடும்பத்தை அவரின் கணவனுக்கு மொத்தமாக பிடிக்காமல் போனது.

அத்துடன் வனிதாவின் உறவும் முறிந்து விட, வருடங்கள் கடக்க, கடக்க சௌமியாவின் விஷ வார்த்தைகள் அதிகமானதே தவிர குறையவில்லை. அது சில கால இடைவெளியில் கதிரவனின் தாய் தந்தை உயிரையும் பறித்து விட, ஆரவ்க்காக மட்டுமே அவர் சௌமியாவை பல்லைக்கடித்துப் பொறுத்துக் கொண்டார்.

தந்தை மீது எந்த அளவு பாசம் வைத்திருப்பானோ, அதற்கு சற்றும் சளைக்காமல், தாயின் கை பிடித்தபடியே வலம் வருபவனின் நிம்மதியை கெடுக்க மனம் வராது அவ்வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளப் பழகியவருக்கு, சோதனை முடிந்தபாடில்லை.

‘ஈரோட்டில் இருக்க எனக்கு பிடிக்கவில்லை, சென்னை செல்லலாம்’ என்று கதிரவனை அரித்து எடுத்தார்.

கதிரவனோ “என் சொந்த ஊரை விட்டு வரமுடியாது” என்று மறுக்க, இறுதியில் ஆரவின் படிப்பிற்கும் எதிர்காலத்திற்கும் சென்னையில் தான் நல்ல எதிர்காலம் இருக்கிறது என அவரை நம்ப வைத்திட, ஆரவின் பெயரைக் கூறியதும், அவருக்கு மறுக்க முடியவில்லை.

   அவர் ஈரோட்டில் செய்து கொண்டிருக்கும் வியாபாரம் ஏற்கனவே நலுங்கி இருக்க, அதில் சென்னை சென்று புதிதாக வியாபாரத்தைத் தொடங்கினார். சௌமியாவிற்கும் சென்னையின் ஆடம்பரம் எல்லாம் பிடித்துப் போக, கதிரவனுக்கோ இங்கும் வியாபாரம் சரிவர போகவில்லை.

அதில், சௌமியாவின் கோபம் இன்னும் அதிகமானது. “நான் கணக்கு வழக்கு பாக்குற வரைக்கும், எல்லாம் சரியா தான் இருந்துச்சு. தங்கச்சிக்கு செலவு பண்றேன், ஊருக்கு செலவு பண்றேன்னு எல்லாத்தையும் அழிச்சுட்டா, நானும் என் மகனும் நடுத்தெருவுலயா நிக்கிறது.” என்று சண்டை பிடிக்க,

“இப்போ நான் உன்னை ஒன்னும் நடுத்தெருவில நிறுத்தல. கொஞ்ச நாள்ல சூடு பிடிச்சுடும்” என்றார் எரிச்சலாக.

அப்போது பத்து வயதேயான, ஆரவ் பள்ளியில் இருந்து வீடு திரும்பி இருக்க, “அப்பா, இன்னைக்கு ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் வச்சாங்களா… நான் தான் செகண்ட் ப்ரைஸ் வாங்குனேன்.” என்று வேகமாக வாங்கி வந்த பரிசை தந்தையிடம் கொடுக்க, அவரும் மலர்ந்த முகத்துடன் மகனை கட்டிக்கொண்டார்.

அவனே, “அப்பா அடுத்த வாரத்துல இருந்து ஸ்கூல்லயே கம்பியூட்டர் கோச்சிங் வைக்கிறாங்க. நானும் அதுல சேர்ந்து படிக்கவா?” என ஆர்வமாகக் கேட்க, “உனக்கு பிடிச்சுருக்குன்னா படிடா. அப்பாவும் உனக்கு வீட்ல கம்பியூட்டர் வாங்கி வைக்கிறேன். ஆனா, ரொம்ப நேரம் பார்க்கக் கூடாது. அதுக்கு சரின்னா நான் வாங்கி தரேன்” என்றதும் அவனின் சிறிய விழிகள் விரிந்தது.

“ஐ… பிராமிசாவாப்பா” என துள்ளியவன், “அம்மா… அப்பா எனக்கு கம்பியூட்டர் வாங்கி தரேன்னு சொல்லிருக்காங்க” என்று பெருமையாக சௌமியாவிடம் திரும்ப

அவரோ, “என்னமோ மராத்தான்ல ஓடி ப்ரைஸ் வாங்குன மாதிரி, வெறும் செகண்ட் ப்ரைஸ்க்கு எதுக்கு இப்படி துள்ளுற? கம்பியூட்டர் எல்லாம் படிக்க வேணாம்ன்னு நான் ஏற்கனவே சொன்னேன்ல. ஒழுங்கா, நான் சொல்ற சப்ஜக்ட்டை மட்டும் படி. இல்லைன்னா உன் அப்பா மாதிரி நீயும் ஒண்ணுத்துக்கும் உதவாம தான் இருப்ப…” என்று வார்த்தை தடிக்க, ஆரவை கத்தி விட்டு செல்ல, அவனின் பூ முகம் சுருங்கி விட்டது.

நாட்கள் அழுத்தத்துடனே நகர்ந்ததுனாலோ என்னவோ, ஒருநாள் திடீரென நெஞ்சைப் பிடித்து சரிந்த கதிரவன் அதன் பிறகு எழவே இல்லை.

ஒரு வாரம் முன்பு தான், “உனக்கு பிடிச்சதை படி தம்பி. அம்மா சொல்றாங்கன்னு, உனக்கு பிடிச்சதை, உனக்கு சரின்னு தோணுறதை செய்யாம விட்டுறாத. அதே நேரம், உன் மனசுக்கு பிடிக்காத எந்த விஷயத்தையும் செய்யாத… உன் மனசு தான் உனக்கு வழிகாட்டி.” என்று அவனை மடியில் படுக்க வைத்து கதை பேசிய தந்தை இன்று இல்லை என்றதையே ஏற்றுக்கொள்ள இயலவில்லை அவனால்.

சௌமியாவிற்கும் கையறுந்த நிலை தான். சொன்னது போன்றே, வியாபாரமும் சூடு பிடிக்காமல், தங்களை நடுத்தெருவில் விட்டு விட்டாரே என்று ஆதங்கமாக இருந்தது. அந்நிலையில் தான், அவர்களின் சூப்பர் மார்க்கெட் இருக்கும் இடத்தை வாங்குவதற்காக விக்ராந்தின் தந்தை சரவணன் அவரை அணுக, அப்போது தான் அவருக்கும் விவாகரத்து ஆகி இருந்தது.

அதில், இருவரும் பேசி பிடித்தம் ஏற்பட, அடுத்த இரு மாதத்திலேயே ஆரவ் கதிரவன், ஆரவ் சரவணன் ஆனான்.

அவன் பெயர் மட்டுமல்ல, தலையெழுத்தும் அங்கேயே மாறி விட்டதை அறியாத சிறுவனுக்கு ஏனோ விக்ராந்தையும் பிடிக்கவில்லை. அவன் தந்தையையும் பிடிக்கவில்லை.

தந்தை சொல்லே வேதவாக்காக தன் மனது சொல்லும் பாதையிலேயே சென்றவனைக் கண்டு சௌமியாவிற்கும் எரிச்சல் மூண்டது.

“உன் அப்பா மாதிரியே இருக்காத ஆரவ். நான் சொல்றதை கேட்டா, உன் ஃபியூச்சரும் நல்லா இருக்கும்” என்று அவனை வழி நடத்த நினைக்க, அவனோ “இப்போவும் நீங்க சொல்றதை கேட்டு தான எனக்கு பிடிக்கலைன்னாலும் இங்க இருக்கேன்” என்றான் முகத்தை சுருக்கி.

அதிலும், விக்ராந்த் சௌமியா என்ன சொன்னாலும் கேட்பான். கிட்டத்தட்ட இருவரின் ரசனையும் ஒரே மாதிரியாக இருக்க, சௌமியாவிற்கும் விக்ராந்த் தன் பேச்சை கேட்டு நடப்பதில் அத்தனை கர்வம். கணக்கு வழக்குகளையும் சௌமியா விரல் நுனியில் வழிநடத்த சரவணனும் அவர் சொல்வதையே கேட்க தொடங்கினார்.

இதில் தனித்து விடப்பட்டது என்னவோ ஆரவ் தான். விக்ராந்துடன் ஒப்பிட்டு ஆரவை சரவணன் பல நேரம் அவமானப்படுத்த, விக்ராந்திற்கு அப்போதிருந்தே ஆணவமும், அனைத்து கெட்ட பழக்கங்களும் அத்துப்படி ஆனது.

சில நேரம், தேவையற்று ஆரவை அவன் வம்பிழுக்க, அவனோ கோபத்தை அடக்க இயலாமல் விக்ராந்தை அடித்து விடுவான். அதில், சரவணன் கோபமாகிட, சௌமியா தான் என்ன நடந்தது என்று கூட அறியாமல் ஆரவை அதட்டுவார். ஒரு கட்டத்தில், அவனை சமாளிக்க இயலாமல் விடுதியில் சேர்த்து விட, இன்னும் தனித்து விடப்பட்டவனை மீட்டது என்னவோ தோழமை தான். 

பழைய நினைவில் மூழ்கியபடி காரை ஓட்டிய ஆரவை, நண்பர்களின் குரல் தான் வெளிக்கொண்டு வந்தது.

“இப்ப எங்கடா போற நீ? இந்த பக்கம் ஏன் வந்த?” என்று லயா பதற, அப்போது தான், விக்ராந்த் வீட்டின் திசையில் காரை ஓட்டிக் கொண்டிருக்கிறோம் என்றே உணர்ந்தவன், ஒரு நொடி காரை ஸ்லோ செய்து விட்டு, மீண்டும் அதி வேகத்தில் செலுத்தினான்.

கவின், “மச்சி… இங்க ஏண்டா போற. வேணாம் மச்சி. முதல்ல கார திருப்பு.” என்று கண்டிக்க, அவன் நேராக விக்ராந்த் வீட்டில் தான் காரை நிறுத்தி, திமிருடனே இறங்கினான்.

சுதாகர் திகைத்து, “ஆரவ் வேணாம்டா ப்ளீஸ். அவசரப்படாத…” என்று அவனின் கையை பிடிக்க, நின்று கையையும் அவனையும் தீப்பார்வை பார்த்ததில் தன்னிச்சையாக அவன் கையை விட்டு விட்டான்.

தன்விக்கோ வேகமாக, மோனிஷாவிற்கு போன் செய்து, “மோனி… உன் புருசனுக்கு முன் ஜாமீன் வாங்கி வைடி. அப்படியே எங்க நாலு பேருக்கும் சேர்த்தே வாங்கிடு.” என்றவன் சுத்தி முத்தி பார்க்க, அங்கு விக்ராந்தின் ஆட்கள் நிற்பதைக் கண்டு, “அப்படியே கொஞ்சம் டிஞ்சரும் வாங்கி வை. தேவைப்படும் போல” என சொல்லி விட்டு போனை வைக்க, அவளோ ‘என்ன இவன் உளறுறான்?’ என்று தலையை சொரிந்தாள்.

முன்னெற்றியில் பரவிய கேசத்தை, இரு விரல் கொண்டு பின்னால் கோதியபடி, அவனைத் தடுக்க வந்த ஆட்களை கண்களாலேயே வதம் செய்து தள்ளி நிறுத்தி விட்டு, உள்ளே சென்றவன், குடும்பத்தினரின் கோபப் பார்வையை அலட்சியப்படுத்தியடி கம்பீரத்துடன் சோபாவில் அமர்ந்தான் கால் மேல் கால் போட்டு.

“என்ன குடும்பமா சேர்ந்து என்னை எப்படி போட்டு தள்ளலாம்ன்னு பிளான் பண்ணிட்டு இருக்கீங்களா?” கேலி தொணியில் வெளிவந்தது ஆரவின் குரல்.

அவனின் திமிர் கண்டு விக்ராந்திற்கு சினம் எழ, வேண்டுமென்றே, “ச்சு… ச்சு. தனியாவா வந்த? எங்க என் பொண்டாட்டி…?” என்றான் இடக்காக.

அதற்கு நக்கல் நகையொன்றை கொடுத்தவன், “பொண்டாட்டியா? அப்படின்னா, இந்த மணமேடைல வைச்சு தாலி கட்டி, லீகலா ரேப் பண்ணி… அதுவா? பட், நீ தான் இதை தாலி கட்டாமலேயே நிறைய பொண்ணுங்க கூட பண்றியே. அப்போ, அவங்கள்லாம் யாரு…?” என தாடையை தடவியபடி கேட்டவனோ,

அவனே பதிலாக, “ஸ்ஸ்ஸ்… ஓ! அவங்கள்லாம் உன் ஃபிஸிக்கல் பார்ட்னர்… ரைட்? அப்போ நீ தாலி கட்டுனவ மட்டும் எப்படி உன் பொண்டாட்டி ஆவா?

அவளுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காதுன்னு தெரியுமா உனக்கு? ஹேப்பியா இருக்கும்போது என்ன பண்ணுவா, கோபப்படும் போது எப்படி ரியாக்ட் பண்ணுவா. மனசுல வலி இருக்கும் போது, கலங்குற கண்ணை எப்படி கண்ட்ரோல் பண்ணுவா?

என்ன சாப்பிடுவா? எதுக்கு அழுவா? எதுக்கு சிரிப்பா? அவளுக்கு என்ன வேணும்? இதுல ஏதாவது ஒன்னு தெரியுமா உனக்கு? ஏன், என்னைக்காவது ஒரு நாள் உன்னை தேடி இருக்காளா? உனக்கு ஒண்ணுன்னா பதறி இருக்காளா?” என அடுக்கடுக்காய் மிடுக்காய் கேள்வியெழுப்பியவன்,

வெற்றி மிதப்புடன், சிறு புன்னகையை உதித்து, அழுத்தம் திருத்தமாக, “இல்லைல? பண்ண மாட்டா! யூ நோ பிகாஸ் ஷீ இஸ் மை கர்ள். மை வைஃப்… அண்ட் ஷீ இஸ் டோட்டலி மைன். அவளை உரிமை கொண்டாட, உலகத்துல என் பையனை தவிர வேற எந்த ஆம்பளைக்கும், ஏன் அவள் அப்பாக்கு கூட உரிமை இல்லை. 
    
பொண்டாட்டின்னு எவனாவது சொல்லிட்டு வந்தான், சொன்ன நிமிஷத்துல அவன் பல்லு தெறிச்சுரும்.” என வார்த்தைகளில் தீப்பொறி தெறிக்க, பரணியையும் பார்வையால் எரித்த படி பேசியவன், இறுதி வரியில் இருக்கையில் இருந்து எழுந்து அவனருகில் வந்து, அவன் கண்ணசரும் நேரம் வாயிலேயே குத்தி, உண்மையிலேயே பற்களை உடைத்தான். ஏற்கனவே ஒரு வாரமாக கடத்தி வைத்து, அவனின் கண்ணை கட்டி அடி பின்னி எடுத்திருந்தான்.

கவினும் லயாவும் தான் இந்த திட்டத்தை அமல்படுத்தியது. உண்மை தெரிந்து, வீட்டிற்கே சென்று கொலை செய்யப் போகிறேன் என்றவனை இருவரும் தான் தடுத்து நிறுத்தினர்.

லயா, “கோபத்துல ஏதாவது பண்ணிடாத ஆரவ். அவனை உனக்கு அடிக்கணும் அவ்ளோ தான. யாருக்கும் தெரியாம கடத்திடலாம். அவனை கடத்துறது அவனுக்கே தெரியக் கூடாது” என்றதில், ஆரவ் முறைத்தான்.

கவினோ, “அவள் சொல்றது கரெக்ட் தான் மச்சான். இப்போ போய் நீ அவனை அடிச்சாலும், அவன் மதியை தான் ஹர்ட் பண்ண நினைப்பான். இது தேவையா.” என வான்மதியை உள்ளே இழுத்து, அவனை சற்று யோசிக்க வைக்க, இறுதியில் லயா சொன்ன திட்டத்தையே அமல்படுத்தினர்.

ஆனால், கோபம் வரும் போதெல்லாம், கவினும் சுதாகரும் அவன் முகத்திலேயே குத்திட, அதில் தான் அவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இப்போதோ கண்ணை கட்டி, டெம்போ வைச்சு கடத்தியது எல்லாம் வீண் போல, அவன் நேராகவே வந்து ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்க, சுதாகர் தவிர மற்றவர்களுக்கு வயிறு கலங்கியது.

ஏற்கனவே ஒரு முறை, சரவணன் ஆட்களை வைத்து, ஆரவை கொலை செய்ய திட்டமிட்டு இருந்தார். அதில் அவன் தப்பி இருக்க, அதன்பிறகு அவன் அதனை அப்படியே விட்டுவிட, இப்போது மீண்டும் பாம்பு புத்துக்குள் கையை விட்டு இருக்கிறான்.

இத்தனை நாள் வாங்கிய அடிக்கே இன்று தான் மருந்திட்டவன், மீண்டுமொரு அடியிலேயே கீழே விழுந்திருக்க, சரவணன் சீறலுடன் ஆரவை நோக்கி பாய, “ஏய்…” என விரல் நீட்டி விழியில் வன்மை வழிய கர்ஜித்தவன்,

“இது எனக்கும் உன் பையனுக்கும் உள்ள பிரச்சனை. நீ உள்ள வந்த, பொணமா தான் போவ!” என்னும் போதே, சௌமியா “ஆரவ்” என அதட்ட,

அவனோ அவனின் வாயில் ஒரு விரலை வைத்து “உஷ்ஷ்….! சத்தம்… சத்தம் வெளிய வந்துச்சு… தொண்டையில ஏறி மிதிச்சுடுவேன். அப்பறம் உங்க பாவ கணக்கு வழக்கை எல்லாம் மண்ணுக்குள்ள போய் தான் பாக்கணும். மைண்ட் இட்!” என்று எச்சரித்தவனின் அவதாரம் கண்டு அனைவரும் சிலையாகி நின்றனர்.

பரணிக்கும் அப்போது தான், அவனை வான்மதிக்காக பேசியது நினைவு வந்தது.

கீழே சரிந்திருந்த விக்ராந்தின் சட்டைக் காலரைப் பற்றி தூக்கி இருந்த ஆரவ், “ஹியரிங்க்கு வரமாட்டியா? கோர்ட்ல என்ன உனக்கு தண்டனை கொடுக்குறது. இங்க நான் கொடுக்குறேன் தண்டனை…” என்று பல்லைக்கடித்து பேசியவன், அவனின் அடி வயிற்றிலேயே நங்கென்று ஒரு அடி அடிக்க, வலியில் சுருண்டவன், “உன்னை சாவடிப்பேண்டா.” என்று கோபத்தில் பொங்கினான்.

சரவணன் அவரின் ஆட்களை விட்டு ஆரவை தடுக்க வைக்க, அவனோ அருகில் யார் வந்தாலும் இரும்பென அடித்து துவைத்தான். உள்ளுக்குள் இருந்த ஆற்றாமையும், சீறலும் சிறிதும் குறையவில்லை அவனுக்கு.

அந்நேரம், “ஆரவ்” என்ற வான்மதியின் குரல் கேட்டது. சுதாகர் கொடுத்த செய்தியில் இஷாந்தை தூக்கிக் கொண்டு அங்கு வந்திருந்தாள்.

“இங்க ஏன் வந்தீங்க?” என்றவள், தன் தாய் தந்தையரையும், முகம் முழுதும் இரத்தத்துடன் தன்னை வெறித்திருந்த விக்ராந்தையும் ஒரு நொடி ஏறிட, அவனோ “நீ ஏன் வந்த?” என்று கேட்டபடி பின்னால் நின்ற நண்பர்களை முறைக்க, அவர்களோ வேகமாக சுதாகரை கை காட்டினர்.

அவனை அனலாக சுட்ட ஆரவை புரியாமல் பார்த்தவன் பின்னால் திரும்பிட, மூவரும் தன்னை கை காட்டி இருப்பதைக் கண்டு “அட அப்பரசண்டிகளா” என்று இடுப்பில் கை வைத்து அவர்களை முறைத்தான்.

“பிரச்சனை எதுவும் வேணாம் ஆரவ். கிளம்பலாம்” அவள் ஆரவைப் பாராமல் கூற,

சௌமியாவோ “எல்லாம் உன்னால…” என்று ஏதோ பேச வரும் போதே, ஆரவ் சினத்தில் அங்கிருந்த கண்ணாடி பொருள் ஒன்றை எடுத்து விக்ராந்தின் தலையில் ஓங்கி அடித்திருந்தான். அதில் சௌமியா அதிர்ந்து வாயை பொத்த, வான்மதி சிலையானாள்.

“இது உங்களுக்கு குடுக்க வேண்டிய அடி தான்…” என பலமாக உறுமியவன்,

அசட்டையாக கையை தட்டிக்கொண்டு,

“நீ போ. நான் வரேன்.” என்று வான்மதியிடம் மட்டும் குரலை தணித்து பேச,

“ஆரவ்… ப்ளீஸ் வீட்டுக்கு போகலாம். இவனை கொலை பண்ணிட்டு நீங்க ஜெயிலுக்கு போக போறீங்களா?” வான்மதி பதற்றத்துடன் கேட்க, அவளை ஆழ்ந்து பார்த்த ஆரவ்,

“நான் ஏன் போகணும்? உணர்வுகளை கொலை பண்ணுன இவனே வெளிய சுத்தும் போது நான் ஏன் ஜெயிலுக்கு போகணும். உன் நம்பிக்கையை கொன்ன உன் அப்பா, அம்மாவே வெளிய சுத்தும் போது நான் ஏன் ஜெயிலுக்கு போகணும். பெத்த பையனை உதாசீனப்படுத்தி, இப்போ வரை சாகடிக்கிற என் அம்மாவே ஜாலியா வெளிய சுத்தும் போது நான் ஏன்டி ஜெயிலுக்கு போகணும். எப்பவுமே எந்த தப்பும் பண்ணாதவங்களுக்கு தான் தண்டனை கிடைக்கும்ல?”
என்று விழி இடுங்க கேட்க, அவள் கண்ணை சிமிட்டி கண்ணீரை உள்ளிழுத்தாள்.

“ஆமா, எந்த தப்பும் பண்ணாதவங்களுக்கு தான் இங்க தண்டனை கிடைக்கும் ஆரவ். தப்பு பண்றவனை என் அப்பா, அம்மா மாதிரி ஆளுங்க தலையில தூக்கி வைச்சு ஆடுற வரைக்கும், இங்க எதுவுமே மாற போறது இல்லை.

கல்யாணம்ன்ற பேர்ல பொண்ணை கூட்டிக்கொடுக்குறது கூட தெரியாம, அதை கௌரவம்ன்னு நினைச்சு இப்போ வரை பெருமைப்பட்டுக்கிற இவங்களுக்கு மத்தியில, தண்டனை தப்பு செய்யாதவங்களுக்கு தான் கிடைக்கும் ஆரவ். நம்ம எதையும் மாத்த முடியாது. தண்டனையை அனுபவிச்சிட்டு போய்டணும்.” என்றவளின் குரல் கம்மியது.

இத்தனை நாட்கள் தோன்றாத ஒரு வலி அப்போது தான் ரோகிணிக்கும் பரணிக்கும் சுருக்கென வந்து போக, ஏதோ தவறு செய்து விட்டது போன்று இதயம் குடைந்தது.

அவளை மீண்டும் கண்கள் இடுங்க ஒரு நொடி ஊடுருவியவனின், பார்வையை தாள இயலாமல் அவள் விழி தாழ்த்திட, அப்போது தான் அவனின் கையைக் கண்டு, “ஆரவ்… கையில காயமா இருக்கு. ஏன் இப்படி உங்களை நீங்களே காயப்படுத்திக்கிறீங்க…?” என தன்னை மறந்து அவனின் கையை பற்றிக் கேட்க, கவின் “என்ன அடிபட்டுருக்கு” என்று எட்டிப் பார்த்தான்.

அவன் அடித்ததால், புறங்கையில் லேசாக கீறி இருந்தது. “ப்பா. பெரிய காயம் தான்” என அவன் முணுமுணுக்க,

லயாவோ, “ஏண்டா, லவ் பண்ணுனா இப்படி எல்லாமா தோணும்?” என அதிமுக்கிய கேள்வியை கேட்க, அவனோ “ஆமா ஆமா” என்றான் நக்கலாக.

“அப்போ, போன வாரம், தக்காளி கட் பண்ணும் போது, விரல்ல கத்தி கீறிடுச்சுன்னு சொன்னேன். நீ கண்டுக்கவே இல்ல…” என்று அவனை முறைக்க, கவினோ பாவமாக விழித்து, “நீ காலேஜ் படிக்கைல இருந்து பல தடவை இதை சொல்லிட்டியேடி. புதுசா என்ன பதற?” எனக் கேட்டு விட்டு நொந்து போக,

“அப்போ நீ என்னை லவ் பண்ணல. சும்மா தான சொன்ன?” என்று மூச்சிரைத்தாள்.

“ஐயோ… லவ்வ புரியவைக்க சொன்னா பரவாயில்ல. நான் லவ் பண்றேன்றதையே இவளுக்கு புரிய வைக்கிறதுக்குள்ள நாக்கு தள்ளிடும் போல. படுத்தி எடுக்குறா!” என தனக்குள் புலம்பியவன், மேலும் பேசும் முன் சிலுப்பிக்கொண்டு தன்விக் பக்கம் சென்று நின்றாள்.

விக்ராந்த் தான் தலையில் இருந்து வழிந்த ரத்தத்துடன் இருக்கும் தன்னை, தன்னை சிறிதும் ஏறெடுத்துப் பாராமல், அவள் ஆரவிற்காக பதறியதில் கோபத்திலும் எரிச்சலிலும் இருக்க, ஆரவோ, அவளிடம் இருந்து கையை உருவிக்கொண்டு, விக்ராந்தின் முடியை கொத்தாக பற்றியவன்,

“எப்படி எப்படி… நீ என் பொண்டாட்டியை உன் கால்ல விழ வைப்பியா?” என ரௌத்திரத்துடன் கேட்டவன், அவனை ஓங்கி மிதித்து வான்மதியின் காலடியில் போட்டிட, அத்துடன் அவன் மயங்கியே விட்டான்.

சரவணனுக்கோ ஒன்றுமே செய்ய முடியாத நிலை. ஆரவ் அங்கிருந்த நால்வரையும் நெருப்பை கக்கி ஒரு பார்வை பார்த்து, “என் பொண்டாட்டி பக்கத்துல கூட யாரும் வர கூடாது. உங்க நிழல் அவளை தொட்டுச்சுன்னு தெரிஞ்சாலே, சாம்பலாகிடுவீங்க.” என்றவனின் விழிகள் ஒரு கணம் அழுத்தமாக சரவணனை மேய்ந்து எச்சரிக்க, அவருக்கு பயப்பந்து உருண்டது.

விக்ராந்தின் உதிரம், வான்மதியின் கால் விரல்களை நனைக்க, வெடுக்கென பின்னால் நகர்ந்தாள்.

இஷாந்தோ, தன் தந்தை ஏதோ விளையாட்டு காட்டுவது போல, விக்ராந்தை அடிக்கும் போது குலுங்கி சிரித்து வைக்க, இப்போதோ, “ப் ஆ… டிஷ்…” என்று அடிப்பது போல பாவனை செய்து மீண்டும் செய்ய சொன்னான்.

அதில் இறுக்கம் முற்றிலும் தளர்ந்து ஆரவ் புன்னகைத்து விட, இஷாந்தின் கண்ணை மூடிய வான்மதி, ஆரவை முறைத்து விட்டு வெளியில் செல்ல, அவள் பின் வந்த ஆரவ் இஷாந்தை வாங்கிக் கொண்டான்.

அவளோ, “பேபி முன்னாடி இப்படி ரூடா நடந்துக்காதீங்க ஆரவ்…” என புருவம் சுருக்கி அதட்டிட, “நான் ஒன்னும் உன்ன இங்க வர சொல்லல. அதும் இஷுவ தூக்கிக்கிட்டு…” என அவன் பங்கிற்கு முறைத்து வைத்தவன், காரில் சென்று அமர,

அவளும் உடன் சென்று அமர்ந்தவள், “பேபிய குடுங்க” என்றாள்.

அவன் அதனை காதில் வாங்காமல், மகனை மடியில் வைத்தே சீட் பெல்ட்டை போட்டு விட்டு, காரை ஸ்டார்ட் செய்ய, “ப்ச்… பேபியை வச்சுகிட்டே எப்படி ட்ரைவ் பண்ணுவீங்க. குடுங்க.” என கேட்க,

அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன், “நீ வர்றதுக்கு முன்னாடி நாங்க இப்படி தான் இருந்தோம். இனிமேலும் இப்படியே பழகிக்கிறோம். உனக்கு எதுக்கு நாங்க தண்டனையா இருக்கணும்?” என்று சுள்ளென உரைத்திட, அவள் தான் அதிர்ந்தாள்.

“என் பேபியை நான் எப்படி தண்டனையா நினைப்பேன்…” கலங்கிய கண்களுடன் வான்மதி கூற, “அப்போ நான் மட்டும் தான் உனக்கு தண்டனையா இருக்கேன்ல?” எனக் கேட்டான் விழி இடுங்க.

அதற்கு ஏதோ பதில் கூற வந்து விட்டு, அதனைக் கூற தெம்பற்றவளாய், அவனின் சீட் பெல்டை எடுத்து விட்டு, இஷுவை தூக்கி தன் மடியில் இருத்திக் கொண்டு, அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்து கொண்டாள்.

அவளின் மௌனம் அவனுக்கு மேலும் கோபத்தீயையும், ஆற்றாமையையும் அதிகரிக்க, அவளைப் பிடித்து திருப்பி தன் முகம் பார்க்க வைத்தவன்,

“ஓகே ஃபைன்… உனக்கு பிடிக்காத நீ வெறுக்குற தண்டனையாவே நான் இருந்துட்டு போறேன். அப்போ நான் குடுக்குற பனிஷ்மெண்ட்டயும் வாங்கிக்க” என்றபடி, அவளின் இதழ் நோக்கி குனிய, அவள் திகைத்து கண்ணை மூடி அமர்ந்திருந்தாள்.

சில நொடிகள் சென்ற பின்னும், இன்னும் அவன் தீண்டாமல் இருக்க மெல்ல கண்ணை பிரித்து பார்த்தவள், அவனின் சலனமற்ற பார்வை கண்டு விழிக்க,

அவனோ அவளை எகத்தாளமாக பார்த்தபடி, இஷாந்தை அள்ளி முத்தமிட்டு விட்டு அவளை கண்டுகொள்ளாமல் நகர்ந்ததில், ஒரு நொடி அவனின் விலகலை நம்ப இயலாமல் அவன் முகத்தையே வெறித்திருந்தாள்.

தேன் தூவும்…
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
56
+1
243
+1
7
+1
6

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.