Loading

மறுநாள், மருத்துவமனையில் வீட்டினர் அனைவரும் முன்பும் உட்சபட்ச கோபத்தில் அர்ஜுனிடம் கத்திக்கொண்டிருந்தாள் உத்ரா.

“என்னடா ஹாஸ்பிடல் நடத்துற? எவனோ உள்ள வந்து கொலை பண்ண பாத்துருக்கான். ஒரு செக்கியூரிட்டி கூட இல்லையா.”

அர்ஜுன், “அவன் வந்த பக்கம் ஹாஸ்பிடல் செட் – அப் வேலை நடந்துகிட்டு இருக்கு உதி. அதுவும் இல்லாமல், சிசிடிவிய ஹேக் பண்ணிட்டு வந்துருக்கான்.

அவன் உள்ள வந்ததையும் வெளிய போனதையும் யாருமே பார்க்கலைனு சொல்றாங்க” என்று சொல்ல,

“அப்போ நான் நேத்து பார்த்தது என்ன ஆவியா. சும்மா காரணம் சொல்லாத. நான் துருவை வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். நீயும் உன் ஹாஸ்பிடலும்” என்று முணுமுணுக்க,

அவனோ கோபமாக, “நான் என்ன பண்ணுவேன். செக்கியூரிட்டிலாம்  எக்ஸ்டராவா போட்டு தான் வச்சுருக்கேன். அது போக, துருவோட கார்ட்ஸும் இங்க தான இருந்தாங்க. இதுக்கு மேல வேற என்ன பண்ண முடியும்… இப்போ அவன் மெடிகேஷன்ல இருக்கணும். ட்ரிப்ஸ் ஏத்தணும். இப்போ வீட்டுக்கு எல்லாம் கூட்டிட்டு போக முடியாது.” என்று கத்த, இவளும் சேர்ந்து கத்த என்று இருவரும் அடிதடி சண்டை மட்டும் தான் போடவில்லை.

மீரா தான் அஜயிடம், “அஜய் நீங்க போய் ரெண்டு பேரையும் அமைதியா இருக்க சொல்லுங்க. பெரிய சண்டை ஆகிட போகுது.” என்று பதட்டத்துடன் கூற,

அவன் “அட நீங்க வேற அண்ணி… இப்போ இதுங்களுக்கு இடைல நம்ம போனா நம்மளை வச்சு டார்ச்சர் பண்ணுங்க.” என்று அசட்டையாக சொன்னதும்,

அவளே போய் அர்ஜுனிடம், “அர்ஜுன் ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா இருங்க.” என்று அவனை அமைதிபடுத்தினாள்.

“என்ன பொறுமையா இருக்க… இவளுக்கு தான் ரொம்ப அக்கறை இருக்குற மாதிரி பேசுறா. நான் என்ன ஹாஸ்பிடல்ல சேஃப்டி இல்லாமையா வச்சுருக்கேன்.” என்று பொரிய..

உத்ரா, “ஆமா… சேஃப்டி இருந்தா, எப்படி அவன் உள்ள வந்துருக்க முடியும். சரி அப்படி வந்தவனை எப்படி யாருமே பார்க்காமல் இருந்தாங்க…” என்று மேலும் சண்டைக்கு எண்ணெய் ஊற்ற,

மீரா, “நீயாவது அமைதியா இருவேன் உதி…” என்று கெஞ்ச, இருவரின் சண்டையும் பெரியதாக தான் போனது.

இதில் கடுப்பான துருவ் தான், “கொஞ்சம் நிறுத்தறீங்களா.” என்று கடுமையாக சொல்லிவிட்டு,

அஜய் விதுவிடம், “நேத்து நைட் இங்க இருந்த எல்லா செக்கியூரிட்டிஸ்கிட்டயும் மறுபடியும் விசாரிங்க. அண்ட் எப்படியும் பக்கத்துல ஏதாவது கேமரா இருக்கும். அதுல ஏதாவது க்ளூ கிடைக்குதான்னு போலீஸ் பார்க்குறேனு சொல்லிருக்காங்க அதையும் என்னன்னு விசாரிங்க.” என்று அவர்களை அனுப்பி விட்டு,

அர்ஜுனிடம், “நீ போய் வேலைய பாரு” என்று அனுப்ப,

அவன் “துருவ் நான்…” என்று பேச வந்ததில், “உன்னை போன்னு சொன்னேன்…” என்று அதட்டவும், உத்ராவை முறைத்து விட்டு வெளியில் சென்றான்.

பின், உத்ராவிடம், “நீ ஆஃபிஸ்க்கு போ…” என்றதும்,

அவள் “நான் எங்கயும் போகல” என்று சொல்லி முடிப்பதற்குள், அவன் பல்லைக்கடித்து கொண்டு, “ஐ டோல்ட் யூ டு கோ டு தி ஆஃபீஸ்…” என்று கடுமையாக கூறவும், முகத்தை சுருக்கிக் கொண்டு அவளும் வெளியில் சென்று விட்டாள்.

பெரியவர்கள் நால்வர் தான் இதனை ஆச்சர்யத்துடன் பார்த்தனர். என்ன தான் எல்லாரும் அன்பும், நட்புமாக இருந்தாலும் அனைவருக்கும் பிடிவாதம் அதிகம்.

இதில் அவர்களுக்கு சண்டை வந்தால், அந்த இடமே ரணகளம் ஆகி விடும். அவர்களை அடக்குவது என்பது வீட்டில் இருப்பவர்களுக்கே முடியாத காரியம்.

கருணாவிற்கு மட்டும் தான் பயப்படுவார்கள் என்றாலும், அவர் சொல்வதையும் எதிர்மறையாக தான் செய்வார்கள் இந்த வானர கூட்டம்.

ஆனால், துருவின் ஒற்றை வார்த்தையில் நால்வரும் அவனுக்கு அடங்கியது பெரும் அதிசயமாக தான் இருந்தது அக்குடும்பத்தினருக்கு.

ஆனால் அவர்களுக்கு தெரியாத இன்னொரு விஷயமும் இருக்கிறது.

இவர்களுக்குள் சண்டை வந்தாலும், அதற்கு ஒரு பெரிய காரணம் இருக்கும்…

அதாவது ஒரு தப்பை மறைக்க, சண்டை போடுவது போல் போட்டு, அனைவரையும் குழப்பி அவர்கள் செய்த தவறை அவர்களை மறக்க வைத்துவிடுவார்கள்.

இப்பொழுதும், இந்த சண்டை நாடகம். ‘நைட் நேரத்தில் நீ எப்படி எதுக்கு இங்க வந்த’ என்று வீட்டினர் கேட்டால் தான் செத்தோம் என்று தான் அவர்களை கேள்வி கேட்க முடியாத படி இருவரும் சண்டை இட்டு கொண்டனர்.

இதில் மீரா தான் பாவம். இவர்களின் திருவிளையாடல்களை அறியாமல், துருவிடம், “பாவம் அண்ணா ரெண்டும் பேரும் சண்டை போட்டுக்கிட்டாங்க…” என்று பாவமாய் சொல்ல,

அவனுக்கு தான் இவர்களின் அனைத்து செயலும் அத்துப்படியாய் தெரியுமே.

‘இவள் எப்படி தான் இதுங்களோட காலம் தள்ள போறாளோ…’ என்று பாவம் பார்த்தவன், தனக்கும் அதே நிலைமை தான் என்று சிரித்து கொண்டான்.

விதுவும் அஜயும் மருத்துவமனை முழுதும் விசாரித்து, ஏதாவது க்ளூ கிடைக்கிறதா என்று பார்க்க, அப்பொழுது ஒரு சிறு பையனுக்கு ப்ரெஸ்ஸர் செக் செய்து கொண்டு நர்ஸிடம் சில மருந்து பெயர்களை சொல்லிக்கொண்டிருந்தாள் அனு.

அஜயிடம் “நீ அந்த பக்கம் போய் விசாரி நான் இந்த பக்கம் போறேன்” என்று அனுவை பார்த்து கொண்டு சொல்ல, அவனும் சென்று விட்டான்.

அனு அருகில் சென்ற விது, “ஹே போலி டாக்டர். என்ன இந்த சின்ன பையன் வாழ்க்கையில விளையாடிகிட்டு இருக்க…” என்று சத்தமாக கேட்க, அங்கிருந்த அனைவரும் ஒரு முறை இவளை திரும்பி பார்த்து விட்டு சென்றனர்.

அனு கோபமாக “சார். நான் போலி டாக்டர்லாம் இல்லை” என்று முறுக்கி கொண்டு அவனை கண்டுகொள்ளாமல், நர்ஸிடம் அந்த பையனுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகளை சொல்ல, அவள் ஒவ்வொரு மருந்து பெயர் சொல்லும்போதும், விது “இது எதுக்கு இது எதுக்கு” என்று கேட்டு கொண்டே இருந்தான்.

ஒரு கட்டத்தில் கடுப்பானவள், “என்ன சார் நீங்க சும்மா சும்மா கேள்வி கேட்டுகிட்டே இருக்கீங்க. அப்பறம் எனக்கு மறந்துரும்” என்று விழிகளை உருட்டிக்கொண்டு சொல்ல,

அவன் தான் “என்னாது மறந்துருமா… அப்போ நீ எதையும் தெரிஞ்சு சொல்லல. எல்லாத்தையும் மனப்பாடம் பண்ணிட்டு வந்து ஒப்பிச்சுகிட்டு இருக்கியா. நீ கன்ஃபார்ம் ஆ போலி டாக்டர் தான்” என்று நக்கலடிக்க,

அவள் “சார். எனக்கு தெரியும் சார்.” என்று கத்தி சொல்லி விட்டு, அவன் அருகில் மெதுவாக, “இந்த மருந்துங்க பேரு தான் சார் வாயிலேயே நுழைய மாட்டேங்குது. அதை மட்டும் தான் சார் மனப்பாடம் பண்ணுனேன். அர்ஜுன் சார் கிட்ட சொல்லிடாதீங்க சார்.” என்று கெஞ்சினாள்.

‘பட்சி தானா வந்து மாட்டுதே..’ என்று நினைத்துக் கொண்டு,

“ஓ அப்போ இது அர்ஜுனுக்கு தெரிஞ்சா உன்னை திட்டுவானா” என்று குதூகலமாய் கேட்க, அவள் தான் அய்யோயோ நம்மளா தான் உளறிட்டோமா என்று திருதிருவென முழித்தாள்.

விது, “நீ என்ன பண்ற… இங்க இருக்குற செக்கியூரிட்டிஸ் அப்பறம் நேத்து நைட் இங்க இருந்தவங்க எல்லார்கிட்டயும், சந்தேகப்படற மாதிரி யாரும் வந்தங்களானு கேட்டுடுவா” என்று விவரம் சொல்லி அனுப்ப,

“சார் நான் எதுக்கு சார் போய் கேட்கணும்”

“சரி நான் போய் அர்ஜுன் கிட்ட உன்னை பத்தி சொல்றேன்”

“சார் சார் எதுக்கு கோபப்படறீங்க. இவ்ளோ கோபம் உடம்புக்கு ஆகாது சார்… பிளட் ப்ரெஸ்ஸர் வரும், அப்பறம் சுகர் வரும். அப்புறம் இதுனால ஹார்ட் அட்டேக் வந்தா கூட தெரியாதாம் சார்” என்று அவனை பயமுறுத்த,

அவன் மிரண்டு “இவள் நம்மள கொலை பண்ணாமல் விட மாட்டாள் போலயே. சரி தாயே நான் கோபப்படல நீ போய் சொன்னதை செய்” என்று அனுப்பினான்.

அவள் மீண்டும் வந்து, “நீங்க போலீஸ் – ஆ சார். ரகசியமா விசாரணை பண்றீங்களா.” என்று ரகசியமாக கேட்க, அவன் முறைத்த முறைப்பில் அங்கிருந்து ஓடி விட்டாள்.

வெளியில் நின்று விசாரித்து கொண்டிருந்த அஜய், அங்கு சுஜி வரவும், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் இவனை கண்டு கொள்ளாமல் உள்ளே செல்ல போக, அஜய், “சுஜி” என்று அழைத்து,

“சாரி சுஜி. நான் வேணும்னு உன்னை ஹார்ட் பண்ணல. நிஜமாவே நான் நீ சொன்னதை சீரியஸ் – ஆ எடுத்துக்கல. இங்க வேற நிறைய பிரச்சனை நடந்துக்கிட்டே இருந்துச்சா அதான் எனக்கு எதையும் உணர முடியல. சாரி பஜ்ஜி. என்னால நீ இல்லாமல் இருக்க முடியாது பஜ்ஜி. ஏதோ மாதிரி மனசுலாம் வலிக்குது. என்னை மண்ணுச்சுரு பஜ்ஜி” என்று உருக்கமாக கேட்க,

அவள் “டூ லேட்… இப்போ வந்து சொல்ற, அன்னைக்கு நீ தான என்னை கல்யாணம் பண்ணிக்க சொன்ன. அப்போ கூட உனக்கு என் மேல லவ் இல்லைல. என்னால நீ இல்லாம மட்டும் எப்படி இருக்க முடியும்.

ஆனால்.. இப்போ எல்லாமே ஃபிக்ஸ் ஆகிருச்சு. வீட்டுல போய் இதை மாத்தியும் சொல்ல முடியாது. என்னால உன்னை மன்னிக்கவும் முடியாது. சரியான நேரத்துல எடுக்காத முடிவுகளினாலே தான் நிறைய பேரோட வாழ்க்கையே கேள்வி குறி ஆகி இருக்கு. இப்போ அந்த லிஸ்ட்ல நீயும் இருக்க..” என்று கண்ணீர் மல்க பேசி விட்டு உள்ளே சென்றாள்.

அவள் சென்ற திசையவே உணர்ச்சியற்று பார்த்து கொண்டிருந்தான் அஜய்.

முன்ன போல என்கூட நீ சிரிப்பாயா..
என்னை போல நீயும் என்னை நினைப்பாயா
தேடி வந்து நீ தான் என்னை மன்னிப்பாயா
ஆயுசுக்கும் இல்ல என்னை தண்டிப்பாயா

அந்த ஆத்தாங்கரையில நுரையா நானும் இருப்பேன் டி
நீ காப்பாத்தலைன்னா காத்தா மறைஞ்சு போவேண்டி
இது எப்போ உனக்கு புரியுமாடி எனக்கு தெரியல

அடி எதுக்கு புள்ள பொணக்கு என் மேல
நான் உனக்குன்னு தான் பிறந்த ஆம்பள..
அடி எதுக்கு புள்ள பொணக்கு என் மேல..

உள்ளே, துருவ் லேப்டாப்பில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டு, மீராவையும் வேலை வாங்கி கொண்டிருந்தான்.

அப்பொழுது உள்ளே வந்த சுஜி, துருவை முறைத்து, “உங்க ஒரு கால மட்டும் இல்லை ரெண்டு காலையும் உடைச்சுருக்கணும் ப்ரோ” என்று கோபத்துடன் பேச,

துருவ் புருவத்தை உயர்த்தி அவளை பார்த்து விட்டு லேப்டாப்பில் மூழ்கினான்.

மீரா ‘இப்போ இவளுக்கு என்ன ஆச்சு’ என்று குழம்பி “என்ன சுஜி பேசுற” என்று அதட்ட,

“என்ன உன் அண்ணனை பேசவும் உனக்கு கோபம் வருதா. உன் அண்ணன் என்ன பண்ணுனாரு தெரியுமா… என்க,

மீரா, என்னவென்று கேட்டாள்.

“என் கல்யாணத்தை நிறுத்திட்டாரு.” என்று சொல்ல, அவள் அதிர்ந்து விட்டாள்..

“என்னது கல்யாணம் நின்னுடுச்சா” என்று அதிர்ச்சியாய் கேட்க, அவள் “ஆமா” என்று முகத்தை சுருக்கி துருவைப் பார்க்க,

அவன், “கல்யாணம் நின்னதுனால தான இங்க வந்துருக்க.அதுவும் சந்தோசமா. அப்பறம் எதுக்கு இந்த கோபம் டிராமா” என்று கேட்டதும்,

“ப்ரோ நீங்க கல்யாணத்தை மட்டும் நிறுத்தி இருந்தாலும், பரவாயில்லை. எனக்கும் அஜய்க்கும் தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு எங்க அப்பாவையே மிரட்டிருக்கீங்க. சும்மாவே அவருக்கு அவனை கண்டாலே பிடிக்காது. இதுல நீங்க வேற இப்படி பேசுனதுல அவரு நீ கல்யாணமே பண்ணிக்கலைனாலும் பரவாயில்லை. ஆனால் அஜய மட்டும் கல்யாணம் பண்ணிக்க கூடாதுனு ஒத்த கால்ல நிக்கிறாரு..” என்று பாவமாய் சொல்ல,

மீரா “என்னது அஜய்கும் உனக்கும் கல்யாணமா?” என்று ஆச்சர்யமாய் கேட்டாள்.

சுஜி தான் “ஏன் ப்ரோ மீரா ஒரு ஆச்சர்யக்குறியாவே இருக்காள்…” என்று கேட்க, அவன் “அவள் அப்படிதான்” என்று புன்னகைக்க 

“இந்த கதையில இவள் மட்டும் தான் தனியா ஒரு ட்ரேக்ல போறாள். இவள் எப்போ மிங்கில் ஆகி, அர்ஜுன் கல்யாணம் நடந்து, அப்பறம் வீட்ல சொல்லி, எங்க அப்பாவை சரி பண்ணி, கல்யாணம் பண்ணி ஷப்பா இப்போவே கண்ணை கட்டுது…” என்று தலையை சுற்றி சோபாவில் அமர்ந்தாள்.

மீரா அவளை முறைக்க, துருவ் சிரித்துக் கொண்டு, “இந்த வானர கூட்டத்தை சமாளிக்க நீ தான் சரியான ஆளுன்னு நினைச்சா நீ இதுக்கே டயர்ட் ஆகுற…” என்று கேட்க,

அவள் “அட நீங்க வேற ப்ரோ… இந்த பிசாசுகளை சமாளிக்கலாம் நம்மளால முடியாது. பெட்டெர் அதுங்க என்ன பண்ணுதுங்களோ அதை அப்படியே நம்மளும் ஃபாலோ பண்ணிட்டா நம்ம தலை தப்பிக்கும். அப்படித்தான் இத்தனை வருஷமா ஓட்டிக்கிட்டு இருக்கேன்.” என்று சலித்து விட்டு,

பின், “ஆமா ப்ரோ அந்த சந்துரு கிட்ட என்ன சொன்னீங்க… அவன் உடனே கல்யாணம் வேணாம்னு ஜெனிவா போய்ட்டானாம்.” என்று கேட்க,

துருவ் “தெரியல, உதி தான் பேசுறேன்னு சொன்னாள். என்ன பேசுனான்னு நான் இன்னும் கேட்கல. உங்க அப்பாகிட்ட மட்டும் தான் நான் பேசுனேன்” என்றதும்,

அவள் “அடப்பாவிகளா அப்போ ரெண்டு பேரும் சேர்ந்து தான் இந்த வேலைய பார்த்தீங்களா…” என்று வாயை  பிளந்தாள்.

வாசலில் அஜய், “இல்லை 5 பேரும்…” என்று ஸ்டைலாக நின்று கொண்டிருந்தான்.

இது அனைத்தும், இவர்களின் வேலை தான். இரவோடு இரவாக திருமணத்தை நிறுத்தி, சந்துருவை வெளிநாட்டிற்கு அனுப்பி விட்டு, சுஜி அப்பாவிடம் பேசினார்கள்.

அவனைப் பார்த்தவள் திரு திரு வென முழித்து விட்டு, ‘இப்போ தான் வெளிய சோக பாட்டு போட்டு நின்னுகிட்டு இருந்தான். அப்போ அதெல்லாம் பொய்யா கோபால்’ என்ற ரீதியில் அவனைப் பார்க்க, அவன் சுஜியைவே பார்த்து கொண்டிருந்தான்.

பின் சட்டென்று திரும்பியவள், துருவிடம், “ப்ரோ. எங்க அப்பவே ஒத்துக்கிட்டாலும் இவனை கல்யாணம் பண்ணிக்க நான் ஒத்துக்க மாட்டேன்” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே,

உத்ரா ‘துருவ் சாப்பிட்டானா இல்லையா’ என்று பார்க்க மருத்துவமனை வர, அவன் கையில் லேப்டாப் வைத்திருப்பதை பார்த்து விட்டு,

“எனக்கு தெரியும் நீ ஒழுங்கா ரெஸ்ட் எடுக்க மாட்டன்னு… எதுக்கு இப்போ லேப்டாப்ப மடியில் வச்சுருக்க உனக்கு வேலை இருந்தா அதை மீராகிட்ட குடுக்க வேண்டியது தான. குடு அதை” என்று அதனை வெடுக்கென்று பிடுங்கி, அணைத்து வைத்தாள்.

“இந்த டைம் பெயின் இன்ஜெக்ஷ்ன் போட்ருக்கணுமே போட்டாச்சா “என்று கேட்க, துருவ் அவளின் ஆர்ப்பாட்டத்தை ரசித்து கொண்டு இல்ல என்று தலையாட்டினான்.

அதில் கடுப்பானவள் “இந்த ஹாஸ்பிடல்ல யாருக்குமே பொறுப்பு இல்ல…” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அர்ஜுனும் விதுவும் வர,

அர்ஜுனிடம், “என்ன தாண்டா ஹாஸ்பிடல் நடத்துற நீ. ஒரு ஊசி கூட கரெக்ட் டைம்க்கு போட மாட்டிங்களா.” என்று கத்த, எங்கே இவர்கள் மறுபடியும் சண்டையை தொடங்கி விடுவார்களோ என்று மிரண்டு மீரா,

“இப்போ என்ன ஊசி தான நான் போய் நர்ஸை வரச்சொல்றேன்” என்று தலை தெறிக்க வெளியே ஓடினாள்.

சுஜி தான், ஐயோ பாவம் இந்த அடிமை. என்று நினைத்து விட்டு, “உதி இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல…” என்று கேட்க,

அவள் “ஆமா… இந்நேரம் நீ அஜய்யை லவ் பண்றது தெரிஞ்சு உங்க அப்பா உன்னை தூக்கி போட்டு மிதிச்சுருக்கணுமே இன்னும் நீ உயிரோடையா இருக்க” என்று கேட்க, அவளுக்கு தான் புரை ஏறியது.

“பாவிகளா கல்யாணத்தை நிறுத்துனதும் இல்லாமல், என்னை கொலை பண்ண வேற பிளான் பண்றீங்களா” என்று பாவமாய் கேட்டு விட்டு, “அப்படி என்னதாண்டி பேசுன அந்த சந்துருகிட்ட, அப்பாவுக்கு வேற தெரிஞ்சு செம்ம கோபத்துல இருக்காரு” என்று வினவ,

“அதை நீ அஜய் கிட்ட கேட்டுக்கோ” என்று சொல்லவும், அஜய் அவளை பார்த்து உதட்டைக் கடித்து சிரித்தான்.

பின், துருவ்க்கு ஊசியை போட்டு விட்டு, மீண்டும் அனைவரும் உள்ளே ஆஜர் ஆக, துருவ், அஜய் விதுவிடம், “இங்க விசாரிச்சதுல ஏதாவது, க்ளூ கிடைச்சுதா” என்று கேட்டான்.

அஜய் “எல்லாரும் தெரியலன்னு தான் சொல்றாங்க” என்று சொல்ல, துருவ் விதுவை பார்க்க,

அவன் “ஒரு அடிமை ஒன்னு எனக்காக வேலை பார்க்க போயிருக்கு. இப்போ வந்துடும் வெய்ட் பண்ணுங்க” என்று கெத்தாக சொல்ல,

அஜய் தான் “நீயே ஒரு அடிமை… உனக்கு ஒரு அடிமையா” என்று நக்கலாக கேட்டதில், அவனை முறைத்தான்.

சிறிது நேரத்தில் அனு துருவின் அறைக்குள் நுழைய, அங்கு நிறைய பேர் இருப்பதை பார்த்து விட்டு பேந்த பேந்த முழித்தாள்.

அர்ஜுன் இவள் ஏன் இங்க வர்றா என்று யோசிக்க, விது.. “ஹே அடிமை… விசாரிச்சியா” என்று கேட்க, அவள் அர்ஜுனை பார்த்து ம்ம் என்று தலையாட்டினாள்.

மற்றவர்கள் இவள் தான் அந்த அடிமையா என்று பார்க்க, அவள் அர்ஜுன் திட்டுவானோ என்று அவனை பாவமாக பார்த்தாள்.

 அர்ஜுன் “என்ன விசாரிச்ச?” என்று கேட்டதும், அவள் ஒரு பெரிய சார்ட் பேப்பரை எடுத்து, அனைவர் முன்பும் விரித்தாள்.

எல்லாரும் இவள் ஏதோ முக்கியமாக சொல்ல போகிறாள் என்று கூர்மையாய் கவனிக்க, அவள் அந்த சார்ட் பேப்பரில் கையை வைத்து, அர்ஜுனிடம் “இங்க தான சார் அந்த மிஸ்டர் எக்ஸ் குதிச்சுருக்கான்…” என்று காட்ட, அவன் ஆமா என்றான்.

பின் விதுனிடம் திரும்பி, “இங்க தான நின்னுகிட்டு இருந்த செக்கியூரிட்டிஸ் டியூட்டில இருந்த ஸ்டாஃப் எல்லார்கிட்டயும் விசாரிக்க சொன்னீங்க. அது போக அங்க இருந்து அப்படியே வந்தா, இந்த ரூம் வந்துடும். கரெக்ட் தான சார்” என்று கேட்க, அவனும் “ம்ம் ஆமா ஆமா கரெக்ட் தான் நீ மேல சொல்லு…” என்று ஆர்வமாக கேட்டான்.

உத்ரா ஆர்வத்தை அடக்க முடியாமல், “யாரவது பார்த்தாங்களா அவனை” என்று கேட்க,

அவள் “பொறுங்க மேடம் இப்படி எல்லாம் இடைல கேள்வி கேட்டா எனக்கு மறந்துரும்” என்று மீண்டும் அந்த சார்ட் பேப்பரை பார்த்தாள்.

உத்ரா தான், “இவனோட அடிமை இவனை மாதிரியே இருக்கு…” துருவிடம் முணுமுணுக்க,

அவன், “எனக்கு என்னமோ இவள் எதுவும் சொல்லுவாள்னு தோணவே இல்லை…” என்று சொன்னதும்,

“நான் இதை விது அவனோட அடிமைன்னு சொன்னதுமே கண்டுபிடிச்சுட்டேன் துருவ்” என்றதில், இருவரும், சிரித்து கொண்டனர்.

அவர்களை பார்த்த அனு, விதுவிடம் “சார் இங்க எவ்ளோ முக்கியமான விஷயம் போய்கிட்டு இருக்கு. இவங்க என்னன்னா இப்படி காமெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க. என்ன சார் இது…” என்று நெற்றியில் கை வைக்க,

அவன் “ப்ச் ரெண்டு பேரும் சும்மா இருங்க” என்று அதட்டிவிட்டு, “நீ சொல்லு” என்றான்.

அவள் மேலும், “அங்க இருந்த செக்கியூரிட்டிஸ்கிட்ட கேட்டேன். யாருமே பார்க்கலையாம்” என்றதும் அவளை அனைவரும் முறைக்க அவள் மேலும், “ஆனால் இங்க இருந்த ஸ்டாஃப் கிட்ட கேட்டேன்” என்று சொல்லி நிறுத்தவும் . அனைவரும் ஏதோ சொல்ல போகிறாள் என்று அவளையே பார்க்க, அவள் கிளுக் என சிரித்து விட்டு, “பட் அவங்களுக்கும் எதுவும் தெரியல…” என்று சொன்னதும் தான் தாமதம், சுஜி அவள் கையை பிடித்து வளைத்தாள்.

உத்ராவிடம் “பங்கு இவளை என்ன பண்ணலாம்” என்று கேட்க,

உதி, “நீ என்ன பண்ற, இவள் கையை சிக்ஸ்டி ஃபைவ் போட்டுடு. காலை, கொழம்பு வச்சுட்டு… இவள் மூளை இருக்குல்ல அதை அப்படியே ஃப்ரை பண்ணி” என்று சொல்ல சொல்ல,

அனு மிரண்டு “யக்கா யக்கா அப்படி எதுவும் பண்ணிடாதீங்கக்கா…” என்று கெஞ்சி விட்டு, விதுவை பார்க்க, அவன் ‘இதுங்ககிட்ட போய் உன் வாய் ஜாலத்தை காட்டுனீல. நல்லா வாங்கு’ என்று முறைத்தான்.

பின் அவள் அர்ஜுனிடம் “சார் சார்… என்னை விட சொல்லுங்க சார். உண்மையாவே ஒரு க்ளூ இருக்கு” என்றதும்,

அர்ஜுன், அவர்களிடம் இருந்து அவளை காப்பாத்தி “சொல்லு,” என்றான்.

அவள் மறுபடியும் சார்ட் பேப்பரை பார்த்து, “அதாவது இந்த பில்டிங்க்கு பின்னாடி” என்று பேச வர, அஜய், அந்த சார்ட் பேப்பரை எடுத்து சுக்கு நூறாய் கிழித்து, “இப்போ மட்டும் நீ எதுவும் சொல்லல. இங்க கொலையே விழும்” என்று மிரட்டவும் தான்,

அவள் “சார் எதுக்கு சார் அதை கிழிச்சீங்க. அதுல தான் சார் க்ளூவே இருக்கு…” என்று விழி விரித்து சொல்ல,

விது “என்ன கலாய்க்கிறியா” என்று கேட்டதும்,

அனு “ஐயோ இல்ல சார்… நிஜமாவே நான் அதுல ஒரு வண்டி நம்பர் எழுதி இருந்தேன். அதான் நேத்து வந்தவனோட வண்டி நம்பர்ன்னு எதிர்த்த பில்டிங்ல ஒரு தாத்தா சொன்னாரு.

அவர்கிட்ட நான் எப்பவும் பேசுவேன். அவருக்கு நைட்லாம் தூக்கம் வராது அதுனால வெளியில தான் உட்காந்துருப்பார அதான் அவர்கிட்ட கேட்டப்போ… அவரு தான் இந்த நம்பர் குடுத்தாரு.” என்று சொல்ல, மற்றவர்கள் அஜயை முறைத்தனர்.

துருவ் அனுவிடம் “அதெப்படி வண்டி நம்பர் இவ்ளோ கரெக்ட் ஆ சொல்ல முடியும்” என்று வினவ,

அவள் “நான் அதையும் தாத்தாகிட்ட கேட்டேன் சார். அவன் வண்டியில இருந்து இறங்கும் போது அவன் டிரஸ்ல இருந்து கத்தி கீழ விழுந்துச்சாம். அதுனால, அவர் ரொம்ப உன்னிப்பா பார்த்ததுல தான் வண்டி நம்பர் மனசுல பதிஞ்சுருன்னு சொன்னாரு.

அப்பறம் கொஞ்ச நேரத்திலேயே அவன் வண்டி எடுத்துட்டு கிளம்பிட்டான் அப்டின்னு சொன்னாரு” என்று வெகுளியாய் அவர்களுக்கு பிரச்சனையின் ஒரு முடிச்சை அவிழ்க்க,

மறுபடியும் அஜயும் விதுவும் அந்த சார்ட் பேப்பரை சேகரித்து, ஒரு வழியாய் அந்த  வண்டி என்னை கண்டறிந்து,  போலீசிடமும் கூறினர்.

 உத்ரா அர்ஜுனிடம் கண்ணை காட்ட, அர்ஜுன், அனு கையை பிடித்து கொண்டு, “தேங்க்ஸ் யூ சோ மச் அனு. எங்களுக்கு எவ்ளோ பெரிய ஹெல்ப் பண்ணிருக்க தெரியுமா” என்று அவளிடம் கொஞ்சும் குரலில் மீராவை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டு பேச, மீராவின் முகம் சுண்டியது.

இங்கு விது அர்ஜுன் கையை பார்த்து விட்டு, “இப்போ ஏன் இவன் இவள்கிட்ட இப்படி பேசிகிட்டு இருக்கான்” என்று மீராவை பார்க்க, அவன் நடப்பதை புரிந்து கொண்டு, “என்னாது… இவளை தான் இவன் கரெக்ட் பண்ண போறானா” என்று பேந்த பேந்த முழித்து கொண்டு நின்றான். 

அஜய் சுஜியை இழுத்துக் கொண்டு வெளியில் செல்ல, அவள்” விடுடா” என்று கத்துவதை எல்லாம் காதில் வாங்காமல் காரில் சென்று அமரவைத்து, வண்டியை கிளப்பினான்.

சுஜி, “இப்போ விட போறியா இல்லையா… காரை நிறுத்து” என்று கத்த, காரை நிறுத்தியவன், அவளை பார்த்து கொண்டே, மெல்ல அவள் அருகில் நெருங்க, அவனின் இந்த புது பார்வையைக் கண்டு சுஜிக்கு தான் உடலெல்லாம் நடுங்கியது.

அவளை நெருங்கியவன், அவன் இதழ்களால் அவள் கன்னத்தை உரச, அதில் மொத்தமாய் கரைந்தாள்.

பின், அஜய், அவள் காதருகில் சென்று அவளை ரொமான்டிக் ஆக ஒரு பார்வை பார்த்து கொண்டு, “ஊஹிபுக்கி” என்று சொல்ல, அவள் கடுப்பாகி, “இப்போகூட உனக்கு கிண்டலா தான் இருக்குல்ல” என்று அவனை மொத்து மொத்து என மொத்தினாள்.
 
இங்கு, அனுவிடமே பேசிக்கொண்டிருந்த, அர்ஜுனை கண்டு மீராவுக்கு ஏதேதோ உணர்வுகள். உத்ராவிடம் பேசும்போது அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் மற்ற பெண்களிடம் பேசும்போது, அவளே அறியாமல் கோபமும் அழுகையும் வந்தது.

அதில் அவள் விருட்டென்று வெளியில் செல்ல, விது வலுக்கட்டாயமாக, அர்ஜுன் கையை அனுவின் கையில் இருந்து எடுத்து, “அதான் அவள் போய்ட்டால்ல. போய் மீராவை பாருடா” என்று கடுப்பாக சொல்லிவிட்டு, அனுவை முறைத்து விட்டு அவன் வெளியில் சென்றான்.

பின், அனுவும் என்ன இவனுங்களா வந்து பேசுனாங்க இப்ப ஆளாளுக்கு கிளம்பிட்டானுங்க… என்று முழித்து விட்டு, அவளும் கிளம்பினாள்.

துருவ் ஏதோ யோசனையில் இருப்பதை கண்ட உத்ரா, “என்ன துருவ் யோசனை” என்று கேட்க,

“உதி… எனக்கு என்னம்மோ இது சின்ன பிரச்சனையா முடியும்னு தோணல. எதுக்கும் எல்லாருமே ரொம்ப கேர்ஃபுல் ஆ இருங்க…” என்றதும்,

அவள், அவனை புரியாமல் பார்க்க, அவன், “கண்டிப்பா அன்னைக்கு வந்தவன் உனக்கு தெரிஞ்சவனா தான் இருக்கணும். இல்லைன்னா உன்னை பார்த்ததும் ஓடிருக்க மாட்டான்” என்று சொல்ல, உத்ரா, “அப்படியும் இருக்குமோ” என்று யோசித்தாள்.

பின், “யாரா இருக்கும் துருவ். அதுவும் எனக்கு தெரிஞ்சவன் மூலமா உங்களை கொலை பண்ணனும்னு நினைக்கிறவன்” என்று கேட்க, அவன் தீர்க்கமாய் யோசித்து விட்டு,

என் கெஸ் கரெக்ட் னா… இதுக்குலாம் காரணம் அவனா தான் இருக்கனும். கரண் பிரகாஷ்…” என்று சொல்ல, அவள் சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்து,

“சாவடிச்சுருவேன் உன்னை. இன்னும் நீ பிளாஷ்பேக் முடிக்கலையா… ஒரு ஆறு மாசத்தை மறந்ததுக்குள்ள இத்தனை ஃபிளாஸ் பேக்க  உடம்பு தாங்காதுடா…” என்று பாவமாக சொல்ல, துருவ் வாய் விட்டு சிரித்து விட்டான்.

 உத்ரா அவனை முறைத்து, “இன்னும் என்ன என்ன என்கிட்டே சொல்லாம இருக்க” என்று கேட்க, அவன் அவளை இழுத்து மடியில் போட்டு கொண்டு,

“உன்கிட்ட ஒரு விஷயத்தை மறைச்சுட்டேன் ஹனி” என்றான் கிசுகிசுப்பாக.

“எ எ என்னது…”

துருவ் அவள் கன்னத்தில் கோலம் போட்டுக்கொண்டே,

“அது… என்னன்னா… அன்னைக்கு ஷிப்ல.” என்று இடைவெளி விட,

அவள் மிரண்டு, “ஷிப் ல” என்று கேட்டாள்.

“உனக்கு தாலி செயின் போட்டு விடவும், எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சா… சோ…” என்று இழுக்க..

அவள் எச்சிலை விழுங்கி கொண்டு, “சோ” என்றதும்,

  “ஐயோ அதை போய் நான் எப்படி சொல்லுவேன்… வெட்க வெட்கமா வருது.” என்று அவளின் தோளில் முகத்தைப் புதைத்தான்.

 அவள் கோபமாக, “இப்போ என்ன நடந்துச்சுன்னு சொல்ல போறியா இல்லையா…” என்று கேட்க,

“என்ன நடக்கலை அதான் அன்னைக்கே எல்லாம் நடந்து முடிஞ்சுருச்சே” என்று சற்று அசட்டையாக சொல்ல,

அவள் விழி விரித்து “எல்லாமேன்னா ?” என்று கேள்வியாய் கேட்க,

அவன் குறும்புடன் “எல்லாமே தான்” என்று கண்ணடித்ததில் அவள் அரண்டு போய் அவனை பார்த்தாள்.

உறைதல் தொடரும்…
-மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
59
+1
5
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல்