1,043 views

அக்னியின் வீடு நான்கு சக்கர காராக, குளிக்கும் இடம் கம்பெனி என்றானது . கணவன் மீது ஏற்பட்ட அதீத பாசத்தில் இரண்டு வேளை உணவை கொடுத்து அனுப்பி விடுவாள் யாரிடமாவது. கணவன் மனைவிக்கு நடுவில் வீட்டில் இருந்தவர்கள் தான் தூது அஞ்சல் ஆனார்கள். அதிலும் பெரும்பாலும் மாட்டிக் கொள்வது திவ்யா தான்.

மூன்றாண்டு பட்டப்படிப்பை முடித்தவள் அடுத்து என்ன படிப்பது என்பதை கூட யோசிக்க முடியவில்லை. வீட்டின் ஞாபகம் வாட்டி எடுக்க இந்த பிரிவு பெரும் பாடமாக அமைந்துவிட்டது அக்னிக்கு. குடும்பத்தின் மீது அலாதி பிரியம் கொண்டவனுக்கு இந்த பிரிவை எதிர் கொள்ள துணிவில்லை.

இரவு நேரம் வாசலில் நின்று பார்ப்பவன் இரவெல்லாம் காரில் தூங்க ஆரம்பித்தான். வீட்டில் இருக்கும் மற்ற மூவரை கூட நேரில் பார்க்கும் யோகம் கிடைக்கும் அக்னிக்கு. ஆனால் அவனின் தர்மபத்தினி அன்று இரவு அவனோடு உணவு சாப்பிட்டதோடு சரி அதன் பின் நேரில் காட்சியளிக்கவில்லை நெருக்கமாக. இரவெல்லாம் அவனுக்காக பால்கனியில் அமர்ந்து இருப்பவள் அப்படியே தூங்கவும் பழகிப் போயிருந்தாள்.

தூரமாக பேசும் சைகை பாஷைகள், அலைபேசி குறுஞ்செய்திகள் என்று அவனின் நாட்கள் ஓடி இரண்டு வாரம் ஆகிவிட்டது. வீட்டிற்குள் செல்ல ஒரு நொடி ஆகாது என்றாலும் அவளின் மனதில் செல்லவே பொறுமை காத்துக் கொண்டிருக்கிறான்.

வழக்கம்போல் திவ்யா அலுவலகம் வர, “குண்டம்மா இன்னைக்கு என்ன லேட்.” என்றான் அக்னி.

“பேசாத செம கடுப்புல இருக்கேன். உங்க பிரச்சனை என்னைக்கு முடியுறது நான் என்னைக்கு நிம்மதியா இருக்கிறது. தினமும் இப்படி அலையவிட்டு என் உடம்ப குறைச்சிடுவீங்க போல.” என்று மூச்சு வாங்க அமர்ந்தாள்.

சிரித்தவன் அவளுக்கு தண்ணீர் கொடுத்து, “நாளைல இருந்து சாப்பாடு எடுத்துட்டு வராத நான் ஹோட்டல்ல சாப்டுக்கிறேன்.” என்றான் அக்கறையாக.

அலைச்சல் என்றாலும் அண்ணனை பார்க்க இது ஒரு வாய்ப்பு அல்லவா அவளுக்கு!. அதுவும் இல்லாமல் அக்னியை பிரிந்து இத்தனை வருடங்கள் திவ்யா இருந்ததே இல்லை. சிறியவள் போல் பெரியவர்கள் உடனே அவனை பார்க்க வந்துவிட்டால் அன்பினியின் மனம் சங்கடப்படும் என்பதால் மனதை கல்லாக்கி கொண்டு மறைந்து இருக்கிறார்கள். மருமகள் மனம் அவர்களை யோசிக்காமல் இருக்குமா! வாரத்தில் மூன்று நாட்கள் எப்படியாது அவர்களை அனுப்பி வைத்து விடுவாள்.

தங்களுக்காக உழைத்தவன் தினமும் இரவு வாசலில் உட்கார்ந்து சாப்பிடுவது முள் மேல் அமர்ந்திருப்பது போல் வலிக்கும் அனைவருக்கும். அன்பினிக்காக பொறுத்துக் கொண்டு அவர்கள் இருக்க இன்றாவது மனைவியின் மனம் இறங்குமா என்று தவம் கிடக்கிறான் அக்னி.

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். நீ எப்படியாது அண்ணிய சமாதானப்படுத்தி வீட்டுக்கு வா.” என்றாள் கஷ்டத்தை மறைத்துக் கொண்டு.

“எங்க குண்டம்மா நானும் விதவிதமா மன்னிப்பு கேட்டு பார்த்துட்டேன் உன் அண்ணி மனம் இறங்க மாட்டேங்குது.” என்று பாவமாக கூற,

“பின்ன நீ பண்ண வேலைக்கு அவ்ளோ சீக்கிரம் இறங்குமா என்ன.” என்றாள்.

“நக்கலா!” என்றவனுக்கு தொலைபேசி வர, எடுத்துப் பேசினான்.

அதில் அரசாங்க ஒப்பந்தம் தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்திருக்க, கட்டிடம் கட்டும் நாள் நெருங்கியது. அதைப் பற்றி பேசி முடித்தவன் சாப்பிட அமர்ந்தான். அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த திவ்யா,

“அண்ணா இப்போ அண்ணியோட அப்பா எந்த பிரச்சனையும் பண்றது இல்லையா.” கேட்டாள்.

“எதுவும் பண்றது இல்ல. அன்னைக்கு அந்த ஆள் மட்டும் சும்மா இருந்திருந்தா எங்களுக்குள்ள இவ்ளோ பெரிய பிரிவு வந்திருக்காது. என்னையும் என் பொண்டாட்டியையும் பிரிச்சிட்டான்.” தடைகளை கடித்தான் கோபத்தில்.

சிறிது இடைவெளி விட்டு, “பேசாம இந்த கட்டட பூஜை அன்னைக்கு அண்ணி கையால பண்ணா என்ன.” என்ற அவளின் ஐடியாவில் கண்ணில் மின்சார விளக்கு பட்டென்று எறிந்தது அக்னிக்கு.

தங்கையை அணைத்து குதித்தவன், “குண்டம்மா உனக்குள்ள இப்படி ஒரு அறிவா” என்று பாராட்டினான்.

உடனே அன்பினிக்கு அழைத்தவன் காத்திருக்க அவள் எடுக்கவே இல்லை. மனம் கசங்கி போனான் பலமுறை அழைத்துப் பார்த்து. அவள் விலகல் எவ்வளவு தூரம் நீள்கிறதோ  அக்னியின் மனம் அவ்வளவு தூரம் பரிதவித்தது அவளுக்காக. ஒரு பக்கம் மனைவி மீது கட்டுக்கடங்காத கோபமும் கூட. இவ்வளவு நாட்கள் தன்னிடம் இருந்து ஒதுங்கி இருப்பதால்.

அக்னியின் அழைப்பை பார்த்துக் கொண்டுதான் இருந்தாள் அன்பினி. எடுக்க மனம் துருதுருத்தாலும்  பிடிவாதம் தடுத்தது. இந்தப் பிரிவுக்குப் பின் இனி ஒரு பிரிவு தங்கள் வாழ்க்கைக்குள் வராமல் இருக்க கடினப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறாள். இரண்டு வார காலங்களில் பெண்ணின் உள்ளத்தில் பல மாற்றங்கள். வெளியில் வந்து அக்னியை பார்க்க மாட்டாளே தவிர அவன் குரலை கேட்கவே இரவு நேரத்திற்காக காத்திருப்பாள்.

***

கடந்த நாட்களில் செல்வகுமார் தனிமையில் வாட ஆரம்பித்தார். அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு விக்ரம் அவரிடம் முகம் கொடுத்து பேசவில்லை. அவர் செய்து கொண்டிருந்த மற்ற தொழில்களை தானே கவனிப்பதாக கையில் எடுத்துக் கொண்டான். நந்தினி கடமைக்காக அவருக்கு சமைத்துக் கொடுக்க, வேலையில்லாமல் பேசவும் ஆளில்லாமல் ஏதோ ஒரு நோய் தாக்கியது அவரை.

நந்தினி மகனை பலமுறை அழைத்து விட்டார் அன்பினி வீட்டிற்கு. அன்று கோபத்தில் பேசியதை நினைத்து அவர்களை பார்க்க  மறுத்துக் கொண்டிருக்கிறான். அதிலும் திவ்யாவை கடுமையாக பேசியதை நினைத்து வலித்தது. நந்தினி மட்டும் மகளை பார்க்க சென்று வருவார். இன்றும் அதுபோல கிளம்ப,

“விக்ரம் நீ பண்றது சரி இல்ல. என்ன இருந்தாலும் பெரியவங்களை மரியாதை இல்லாம பேசுனது தப்பு  அதுக்காகவாது வந்து மன்னிப்பு கேளு.”என்று அழைத்தார்.

ஒரு வழியாக சம்மதித்தவன் அவரோடு புறப்பட்டான். அன்னபூரணி பேரனை பார்த்து மனம் மகிழ, பரமேஸ்வரி எதுவும் நடக்காதது போல் நடந்து கொண்டார். அதுதான் அவனுக்கு பெரும் சங்கடமாகி போனது.

“சாரி அத்தை! அன்னிக்கு கோபத்துல பேசிட்டேன்.” மன்னிப்பு வேண்ட,

“எதுக்கு அதெல்லாம். ஒரு அண்ணனா உன்னோட கோபத்தை தப்பு சொல்ல முடியாது. அதே மாதிரி ஓரளவுக்கு மேல புருஷன் பொண்டாட்டி பிரச்சினை குள்ள போக கூடாது விக்ரம்.  மனசுல அளவு கடந்த கோபம் இருந்தும் அவனுக்கான தண்டனையை அவ மட்டும் தான் கொடுக்கணும்னு நினைச்சா அதை தான் நாங்களும் நினைச்சு ஒதுங்கி நின்னோம்.” என்று விளக்கம் கொடுத்த பின் ஓரளவுக்கு சகஜமாக பேச ஆரம்பித்தார்கள்.

அத்தையோடு பேசியவன் கண்கள் திவ்யாவை தேட சிக்கவில்லை பெண் மான். பேரன் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்த அன்னபூரணி, “அம்மாடி எங்கம்மா சாப்பாடு கொடுக்க போன திவ்யாவை இன்னும் காணோம்.”என்றதும் கண்கள் விரிந்தது விக்ரமிற்கு.

‘ஆத்தாடி பேரன் அடுத்த ஆட்டத்தை ரெடி பண்றான் போலயே!’என்று நினைத்தவர் கடவுளிடம் வேண்டிக் கொண்டார் சுமுகமாக முடிய வேண்டும் என்று.

திவ்யா இங்கு இல்லை என்பதை அறிந்து கொண்டவன் வேக வேகமாக புறப்பட்டான் எப்படியாவது அவளைப் பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று. அவனுக்கு தோதாக நடுரோட்டில் வெயிலோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தாள் திவ்யா.

“ஒரு ஐம்பது கிலோ தாஜ்மஹால் மேல வெயில  அடிக்கிற அளவுக்கு எங்கிருந்து உனக்கு தைரியம் வந்துச்சு. இப்பவே எங்க அண்ணன் கிட்ட சொல்லி உன்ன ஆப்பிரிக்காக்கு நாடு கடத்தல.” என்று நெற்றியில் வழியும் வியர்வைகளை துடைத்துக் கொண்டு தன் போக்கில் புலம்பி கொண்டிருக்க,

“உங்க அண்ணன் அவ்ளோ பெரிய ஆளா என்ன!” பின்னால் நின்று குரல் கொடுத்தான் விக்ரம்.

திரும்பிப் பார்த்தவள் எதுவும் பேசாமல் அமைதி காக்க,”எதுக்கு நடுரோட்டல நின்னுட்டு இருக்க எவனாது பஞ்சு மிட்டாய் தரேன்னு சொன்னானா.” அவள் இருக்கும் காரணத்தை தெரிந்து கொள்ள கேட்க, பதில் சொல்லவில்லை திவ்யா.

“திவி உன்கிட்ட தான் கேட்கிறேன்.” என்றதும் அவனைப் பார்க்காமல்,

“அண்ணனுக்கு சாப்பாடு கொடுக்க வந்தேன். ஆட்டோ ரிப்பேர் ஆகி பாதி வழியில விட்டுட்டு போய்ட்டான்.”என்றாள்.

“எதுக்கு ஆட்டோல எல்லாம் வர என்கிட்ட சொல்லி இருந்தா நான் கூட்டிட்டு வந்து இருப்பேன்ல.”

அவன் வார்த்தைக்கு எந்த பதிலும் உதிர்க்காமல் அமைதி காத்தவள் முகம் வேர்வையில் நொந்து போனது.
“சரி வா போகலாம்.” என்றதும்,

“எங்க?” என்றவள் இன்னும் அவன் முகம் பார்க்கவில்லை.

“நான் என்ன தரைலயா இருக்கேன் ரொம்ப நேரமா தரைய பார்த்து பேசிட்டு இருக்க இங்க பாரு.” என்ற பின்னும் அவள் திரும்பவில்லை.

” வீட்டுல விட்டுட்டு போறேன் வா.”

“வேணாம் வேற ஆட்டோ புக் பண்ணி இருக்கேன் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும்.”

“அதெல்லாம் வேணாம் திவி நானே உன்ன வீட்டுல விட்டுட்டு போறேன்.”

“எதுக்கு உங்களுக்கு சிரமம் .எப்படி வந்தனோ அப்படியே போறேன்.”

“என் மேல கோபமாக இருக்கியா திவி” என்ற விக்ரம் அவள் முகத்தை  நோக்கினான்.

“எனக்கு என்ன உரிமை இருக்கு உங்க மேல கோபப்பட.” என்றவள் எதுவும் பேசாமல் நடக்க ஆரம்பித்தாள்.

தான் சொல்லும்போது வலிக்காத வார்த்தை அவள் சொல்லி கேட்கும்பொழுது அதிகம் வலித்தது. பின்னால் சென்றவன், “ஏதோ டென்ஷன்ல பேசிட்டேன். அதுக்கு எதுக்கு மூஞ்சிய கூட காட்டாம போற.”  என்று யாருக்கும் கேட்டு விடாத வண்ணம் அமைதியாக பேசினான்.

அதற்கு பதில் சொல்லாதவள் தனக்கான ஆட்டோவில் ஏறிக்கொள்ள தோல்வியோடு அவளை பின் தொடர்தான். வீட்டு வாசலில் இறங்கியவள் உள்ளே செல்லும் முன் விக்ரம் சென்றான்.

“என்னடா வேலை இருக்குனு அவசரமா போன.” நந்தினி.

“போற வழியில திவ்யா ஆட்டோ கிடைக்காம நின்னுட்டு இருந்தா ம்மா அதான் கூட்டிட்டு வந்தேன்.” என வாய் கூசாமல் பொய் பேசிய விக்ரம் அத்தையிடம்,

“எதுக்கு அத்த வயசு பொண்ண இப்படி தனியா அனுப்பி வைக்கிறீங்க. சொல்லி இருந்தா நான் கூட்டிட்டு போயிருப்பேன்ல.” நல்ல பிள்ளையாக பேசினான்.

பேரன் நடிப்பை கண்டும் காணாமல் அன்னபூரணி இருந்துவிட, “எதுக்கு அங்கயும் வந்து என் அண்ணன் கூட மல்லு கட்டவா.” அவன் பேசியதற்கு மறுப்பு சொல்ல முடியாத கடுப்பில் சொன்னாள் திவ்யா.

“அப்படியே உங்க அண்ணன் நான் அடிக்கிற அடியை வாங்கிட்டு சும்மாதான் இருப்பான்.”

“திருப்பி அடிக்கும்போதே அப்படி பாஞ்சிட்டு வரீங்க. சும்மா இருந்தா என் அண்ணனை கொலை பண்ணிடுவீங்க.”

“விட்டா நீயே கொலை கேஸ்ல என்னை உள்ள வச்சுருவ போல.”

“ஒரு வாய்ப்பு கிடைச்சா என் அண்ணன் மேல கைய வச்சதுக்கு உங்கள உள்ள வைப்பேன்.”

“பக்கத்து செல்லுல உங்க அண்ணன வைக்க வேண்டியதா  இருக்கும் என் தங்கச்சி மேல கை வச்சதுக்கு.”

“அதுக்கு பக்கத்து செல்லுல உங்க தங்கச்சி இருப்பாங்க எங்க அண்ணனை வீட்டை விட்டு துரத்துனதுக்கு.”

“அதுக்கு அடுத்த செல்லுல நீ இருப்ப என் தங்கச்சியை உள்ள வச்சதுக்கு.”

“எல்லாத்துக்கும் காரணமான உங்க வீட்டு ஆளுங்க எல்லாரையும் ஜெயில்ல பிடிச்சு போடணும்.”

“மறந்துடாத எங்க வீட்டு ஆளுங்கள்ல அத்தையும் மாமாவும் வருவாங்க.”

“அப்போ என் அம்மாவையும் அப்பாவையும் ஜெயில்ல போட சொல்றீங்களா.”

“என் அம்மாவையும் அப்பாவையும் போட்டா அவங்களையும் போடணும்.”

“அவங்க என்ன தப்பு பண்ணாங்க ஜெயிலுக்கு போக.”

“நான் என்ன தப்பு பண்ண ஜெயிலுக்கு போக.”

“என் அண்ணன அடிச்சது தப்பு இல்லையா!”

“என் தங்கச்சிய அவன் கஷ்டப்படுத்துனது தப்பு இல்லையா!”

“அது புருஷன் பொண்டாட்டி பிரச்சினை.”

“சபைக்கு வராத வரைக்கும்”

“உங்ககிட்ட அண்ணி வந்து கம்ப்ளைன்ட் பண்ணாங்களா.”

“கேட்காம வந்து நிப்பான் அவன் தான் அண்ணன்.”

“பிரச்சனை என்னன்னு கேட்டுட்டு பேசணும் அவன்தான் மனுஷன்.”

இருவரும் நிறுத்தாமல் வாதங்களை தொடர்ந்து கொண்டிருக்க, “இப்ப வாய மூடிக்கிட்டு இருக்கல வாயில சாணி அடிச்சிடுவேன்.” என்றபடி வந்தாள் அக்னியின் மனைவி.

தங்கையைப் பார்த்தவன் புரிந்து கொண்டான் இளைத்து போய் இருக்கிறாள் என்று. காரணம் அக்னி என்று தெரிந்தாலும் தன்னால் தான் இந்த நிலைமை என்று வருந்தினான். அக்னி சாப்பிட்டானா என்று விசாரித்தவள் தனக்கான உணவை எடுத்துக் கொண்டு அறைக்கு சென்று விட,

“என்னைக்கு தான் இவங்க பிரச்சனை முடியும்னு தெரியல. என் பேத்திய இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு.” புலம்பித் தள்ளினார் அன்னபூரணி.

“எனக்கும் அந்த கவலை தான் ம்மா. அவன் முகத்தை கூட பார்க்க மாட்றா. ஆனா எந்நேரமும் அவன பத்தியே யோசிச்சிட்டு இருக்கா. தினமும் தூங்காம இரண்டு பேரும் பண்ற கூத்த பார்த்துட்டு தான இருக்கேன்.” என்ற அத்தையின் பேச்சில் என்னவென்று விக்ரம் விசாரித்தான்.

விக்ரமுக்கு அக்னி நிலை நினைத்து பாவமாக இருந்தாலும் தங்கையின் தண்டனையை நினைத்து சிரிப்பு தான் வந்தது. இருவரும் செய்யும் லூட்டியை நேரில் பார்க்க வேண்டும் என்று மனம் ஆசைப்பட, “அத்தை ராத்திரி வரைக்கும் நான் இங்க இருக்கலாமா” உத்தரவு கேட்டான்.

“இது என்ன கேள்வி விக்ரம் இன்னைக்கு ராத்திரி நீ எங்கயே தங்கிட்டு காலையில போ.” என்றிட, நந்தினியும் தங்க முடிவெடுத்தார்.

***

ஏழு மணி ஆனதும் பால்கனியில் நின்றாள் அன்பினி. அவசர அவசரமாக தன் அனைத்து வேலைகளையும் முடித்தவன் சரியான நேரத்தில் வந்து நின்றான் மனைவி முன்பு. பார்த்ததும் அன்பினி திரும்பிக் கொள்ள, விசில் அடித்து அழைத்தான் அக்னி.

“இன்னைக்கு என்னம்மா ரொம்ப சீக்கிரமா ஸ்டார்ட் பண்ணிட்டாங்க.” என்ற திவ்யாவின் வார்த்தையில் ஆர்வம் பொங்கியது விக்ரமிற்கு.

வெளியில் செல்ல முயல, அவன் பின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சென்றார்கள். இருவருக்கும் தெரியாதபடி மறைந்து அமர்ந்து பிடித்தமான நடிகன் படத்தை முதல் நாள்  பார்ப்பது போல் பார்த்தார்கள்.

“மிஸ் யூ அன்பு.” கத்தினான் தெருவே திரும்பிப் பார்க்க.

‘நடிக்காத’ அன்பினி சைகைக்கு,

நெஞ்சில் கை வைத்து தள்ளாடிய அக்னி, ‘நீயா சொன்ன இருக்காது. என் அன்பு என்னை நம்பலையா… நம்பலையா…’ என்று சுற்றினான்.

“உங்க அண்ணன் நடிப்புக்கு ஆஸ்கார் ஃபேக்டரியே வைச்சு கொடுக்கலாம்.” நடப்பதை பார்த்த விக்ரம் திவ்யாவின் காதில் சொல்ல, கேவலமாக முறைத்தாள் அவனை.

‘உன்ன பத்தி எனக்கு தெரியும்.’  அவன் நடிப்பை கண்டித்தவள், ‘சாப்பிட போ!’ என்றாள்.

‘ப்ச்! வேணா நீ சாப்பாடு எடுத்துட்டு கீழ வா.’

‘எதுக்கு’ நான்கு விரல்களை மடக்கி கட்டை விரலால் சைகை செய்ய,

நிலவை கைகாட்டி சொன்னான் ‘நிலா சோறு சாப்பிட.’ என்று.

‘வேணாம்’

‘யாரு நானா? நிலாவா?’

அவன் கேள்விக்கு பதில் சொல்லாதவள், ‘சாப்பிட போடா’ என விரட்டினாள்.

‘பதில் சொல்லு போறேன்’

‘சொல்ல முடியாது என்ன பண்ணுவ.’

‘சாப்பிடாம பட்டினி இருப்பேன்.’

‘இரு’ என்றவளை கண்டு முறைத்தவன்,

‘அந்த குண்டம்மா…’ என கைகளை பெருசாக்கி திவ்யாவை குறிப்பிட, அன்பினிக்கு புரியவில்லை.

மீண்டும் இரு கைகளை பெருசாகி, ‘குண்டம்மா சாப்பாடு எடுத்துட்டு வந்து அவளே சாப்பிட்டுட்டா’ என்றான் நீண்ட சைகைகளை காட்டி.

அன்பினிக்கு ஒன்றும் புரியவில்லை. கைகளை உதறி ‘புரியல அக்னி.’என்றாள்.

பெருமூச்சுவிட்டு இடுப்பில் கை வைத்தவன், “அந்த குண்டம்மா சாப்பாடு எடுத்துட்டு வந்து அவளே சாப்பிட்டுட்டா. உன் புருஷன் மதியம் சாப்பிடல இப்பயும் சாப்பிடாம இருந்தா செத்துப் போயிருவான்.” என்று சத்தமாக கூற,

“அம்மா இவனை பாருங்க.” என்று சிணுங்கினாள் திவ்யா.

பக்கத்தில் இருந்த விக்ரம் வாயில் கைவைத்து வெகு நேரமாக குலுங்கி கொண்டிருக்க, அருகில் இருந்த தோட்ட கோடாரியை எடுத்தாள் தூக்கி அடிக்க.

“சும்மா சொல்லக்கூடாது என் மச்சான் செமையா பேரு வச்சிருக்கான்.” என்றதும்,

“என்ன மச்சான் மேல புது பாசம்.” அவன் அழைப்பில் சந்தேகம் கேட்டாள் .

“பழைய பாசம் எல்லாம் வேஷமா மாறிடுச்சு என்ன பண்ண.” என கண்களை அவளிடம் தூதுவிட, உடனே திரும்பி கொண்டாள்.

‘நீ சாப்பிடாம என்ன பண்ண அக்னி’ என்று அன்பினி கோபத்தோடு கேட்க,

‘உன்ன நினைச்சிட்டு இருந்தேன்.’ என சிரித்தான்.

‘ஏன்?’

‘லவ் ஓவர் ஆகிடுச்சு அன்பு.’ என்று இதயத்தை அவளிடம் நீட்ட,

‘நம்பிட்டேன்’என்றாள்.

‘பசிக்குது அன்பு’ என்றதும் பதறியவள் திவ்யாவை அழைக்க கீழே செல்ல மொத்த குடும்பமும் ஷோ பார்த்துக் கொண்டிருந்தது.

பற்களை கடித்தவள், “என்ன இதெல்லாம்.” என்று சத்தம் போட்டாள்.

குடும்பமே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு பல்லை இளிக்க, அமைதியாக சாப்பாட்டை எடுத்து வெளியில் வைத்தவள், “உங்க அண்ணன சாப்பிட வர சொல்லு.” என பச்ச குழந்தை திவ்யாவை அனுப்பி வைத்தாள்.

அக்னியை அழைக்க, “உங்க அண்ணி இன்னைக்கு என் பக்கத்துல உக்கார்ந்து சாப்பிடுறன்னு சொன்னா  நான் வருவேன்.” என்று திருப்பி அனுப்பினான்.

“ஒழுங்கா வந்து சாப்பிட சொல்லு திவ்யா.” என்று அப்பாவியை அனுப்பி வைக்க, நொடிப் பொழுதில் திரும்பி வந்தவள்,

“அண்ணி நீங்க சரின்னு சொன்னா தான் சாப்பிட வருவானாம்.” என்றாள் கண்களை சிமிட்டி பாவமாக.

“இப்ப வந்து சாப்பிடலன்னா நான் பேச மாட்டேன்னு சொல்லு.” என்றிட, நொந்து கொண்டே வெளியில் சென்றாள் திவ்யா.

“அவ பேசுற வரைக்கும் நானும் சாப்பிட மாட்டேன்.”  சுற்றறிக்கையை மனைவியிடம் சேர்க்க தங்கையை அனுப்பி வைத்தான்.

திவ்யாவின் நிலையைப் பார்த்து விக்ரமிற்கு அடக்க முடியாத சிரிப்பு. கமுக்கமாக தங்கையின் பின்னால் நின்று சிரிக்க, கண்டு கொண்ட திவ்யா முறைத்து பஸ்பம் ஆக்கினாள்.

“அன்பினி போதும் பசியோட நிக்கிற பிள்ளைய கஷ்டப் படுத்தாத.” என்ற அன்னபூரணியின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து தானே அழைத்து வர சென்றாள்.

வெகு நாட்கள் கழித்து அவளை நெருக்கத்தில் பார்த்த அக்னியின் மனம் துள்ளி குதித்தது. முட்டிக்கொண்டு பூக்க தயாராக இருக்கும் பூக்கள் போல் அவன் ஆசையோடு நெருங்கி வர, விலகி நின்று பிரிவை சுட்டிக்காட்டினாள். முகம் சோர்ந்து விட்டது அவனுக்கு. “அன்பு” என ஏக்கமாக அழைக்க,

“சாப்பிட வா அக்னி”  உள்ளே சென்றாள்.

மனைவியின் பின்னே சோகத்தோடு வந்தவன் எண்ணையில் இட்ட கடுகாய் படபடவென்று வெடித்தான் விக்ரமைப் பார்த்து. அவன் முறைப்பதை பார்த்து விக்ரமும் பதிலுக்கு முறைக்க, அன்னபூரணி அடக்கினார்.

இப்போது ஏதாவது பேசினால் அன்பினி  கோபம் அதிகரிக்கும் என்பதால் அமைதியாக சாப்பிட அமர்ந்தான்.  இருந்தாலும் விக்ரம் முன்பு இப்படி இருப்பது அவனுக்கு கடுப்பை கொடுக்க, அன்பினி அருகில் அமர்ந்ததில் குளிர்ந்தது. முட்டி உரசும் அளவிற்கு நெருங்கி அமர்ந்தவன் யாரையும் கண்டுகொள்ளாமல் அவளை மட்டுமே ரசித்தான்.

அன்பினி மனம் அவனை அணைத்துக் கொள்ள துடிக்க, கையறு நிலையில் கட்டுப்படுத்தினாள். மகனோடு சாப்பிட பரமேஸ்வரி, மணிவண்ணன் அமர்ந்துவிட திவ்யா அவர்களை முந்திக்கொண்டு அமர்ந்தாள். அன்னபூரணி முதியவர் என்பதால் இருக்கையில் அமர்ந்து சாப்பிட, மீதம் இருந்த விக்ரம், நந்தினியை அழைத்தார் சாப்பிட மணிவண்ணன்.

விக்ரம் மறுத்து விட, “நம்ம வீட்டுல எல்லாம் அவங்க சாப்பிட மாட்டாங்க  ப்பா.” என்ற திவ்யாவின் வார்த்தையில் அமைதியாக அமர்ந்தான்.

ஒரு வாய் சாப்பிடாமல் வயிறு நிறைந்தது அக்னிக்கு.  இருந்த துக்கம் எல்லாம் காணாமல் போனதாய் உணர்ந்தவன்  வைத்த கண் வாங்காமல் பார்த்தான் மனைவியை. அதை அவள் உணர்ந்தாலும் தலையை நிமிர்த்தாமல்,

“சாப்பிடு அக்னி.” என்றாள்.

அவன் காதில் வாங்கிக் கொள்ளாமல் ரசிக்கும் வேளையில் இறங்க,
“இவ்ளோ பெரிய வீட்டை
வச்சிக்கிட்டு இப்படி ரோட்ல உட்கார்ந்து சாப்பிட வச்சுட்டாங்களே.” புலம்பினாள் பரமேஸ்வரியின் புதல்வி.

விக்ரம் “இது ரோடு இல்ல வராண்டா.” திருத்துவதாய் நினைத்து அவளிடம் பேச்சுக் கொடுத்தான்.

“உங்க தங்கச்சி பண்ற கொடுமைக்கு அடுத்து அங்க தான் போகணும்.” என்றவள் சாப்பிட ஆரம்பித்தாள்.

“கஷ்டமா இருந்தா உள்ள உட்கார்ந்து சாப்பிடு.”  அக்கறையாக அவன் கூற, மறுப்பாக தலையசைத்தாள்.

இவர்களைப் போல் பேச்சுவார்த்தை நடத்தாமல் அந்த ஜோடி கண்களால் கதை அளக்க, “அக்னி சாப்பாட்டுல கைய வச்சிட்டு என்ன வேடிக்கை பார்க்குற சாப்பிடு.” என்றார் வெகு நேரமாக அவன் சாப்பிடாமல் இருப்பதை பார்த்த பரமேஸ்வரி.

இரண்டு வாய் எடுத்து வைத்தவன் ஓரக்கண்ணால் அவளை ரசித்தான். மனம் இல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள் என்பது தெளிவாக தெரிந்தது. மிதமாக சிரித்தவன் சாதத்தை பிசைந்து அவளுக்கு ஊட்ட, வாங்கவில்லை அன்பினி.

பெருசாக கண்டுகொள்ளாதவன் மீண்டும் கண்களால் கெஞ்சி ஊட்ட, “வேணாம்” என்றாள்.

கேட்காதவன் அவளுக்கு ஊட்ட ஆசையோடு முயன்று கொண்டிருந்தான். நான்கு ஐந்து முறை கடந்து விட ஒரு மாதிரியாகியது அவனுக்கு. யாரும் நேரடியாக கவனிக்கவில்லை என்றாலும் கண்டும் காணாமல் இருப்பதை உணர்ந்தான். அதுவும் விக்ரம் முன்னால் அன்பினி இப்படி செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாமல், “ஒரு வாய் மட்டும் சாப்பிடு அன்பு.” என்றான்.

அவள் அமைதியாக இருந்தாள். ஊட்ட அக்னி நெருங்க, “வேணாம் அக்னி சாப்பிடுற வேலையை பாரு.” என்றாள் கோபமாக.

நிராகரிக்கப்பட்ட வேதனை  கோபத்தை கிளறி விட சாதத்தை தட்டில் அடித்தவன் சென்று விட்டான் வெளியில். அவன் சென்றதும் அன்பினி முகம் அழுகையில் சுருங்க, தன் அறைக்கு ஓடினாள்.

வெளியில் கோபத்தோடு  நடந்து கொண்டிருந்தான் அக்னி. அன்பினி செயல் அவன் மனதை காயப்படுத்திட அவளிடம் காட்ட வழி அறியாது கிளம்ப தயாரானான். கார் நகரம் முன் பால்கனியை பார்க்க மனம் வற்புறுத்தியது. அவள் மனம் வலிக்க அவனையே பார்த்துக் கொண்டிருக்க, வேகமாக காரை விட்டு இறங்கியவன்…

‘என்ன அன்பு உனக்கு பிரச்சனை. நான் உனக்கு ஊட்ட கூடாதா. அதுக்கு கூட உரிமை இல்லையா எனக்கு. உன்ன தொடக்கூடாது, சாப்பாடு ஊட்டக்கூடாது, எதுவும் பண்ண கூடாது அப்புறம் எதுக்கு நான். கடைசி வரைக்கும் இப்படி தான் இருக்க போறியா. இதுக்கு தானடி ஒதுங்கி ஒதுங்கி போனேன். இனிமே உன் முன்னாடி வந்து உன்னை கஷ்டப்படுத்த மாட்டேன். நான் போறேன் நிம்மதியா இரு.’ கோபத்தில் அவசரமாக சைகை செய்தவன் திரும்பிப் பார்க்காமல் சென்று விட்டான்.

****

இருவரின் செயலில் நொந்து போனார்கள் பெரியவர்கள். யாரை குறை சொல்லி திருத்துவது என்று தெரியாமல் தட்டில் இருந்த சாப்பாட்டை கடமைக்கு என்று சாப்பிட்டு விட்டு நகர, ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் திவ்யா.

“இவ்ளோ பெரிய கலவரத்துக்கு நடுவுல எப்படி சாப்பிட தோணுது.” என்றவனை ஒரு நொடி நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் சாப்பிட ஆரம்பித்தாள்.

“குண்டம்மா!” என்று அவள் பேசாத கடுப்பில் வம்பு இழுக்க,தட்டில் இருந்த இட்லி அவன் முகத்தை பதம் பார்த்தது.

கண்ணில் காரம் பட்டு எரிச்சல் கொடுக்க கத்தினான். அதில் கலவரமானது திவ்யாவின் முகம். உள்ளே சென்றவர்கள் வரும் முன் அவன் வாயை அடைத்தவள்,

“கத்தாதீங்க.” என்றதோடு கண்ணை ஊதி விட்டாள். போட்ட நாடகம் வெற்றி பெற்ற களிப்பில் அவன் மகிழ்ந்து கொண்டிருந்தான்.

***

அக்னி கைபேசி பலமுறை அடித்து ஓய்ந்தது. முன்பு இருந்தவன் கொதித்து சாம்பலாக்கி விடுவான். இப்போது உள்ளவன் அன்பினி மாற வேண்டும் என்று தன்னைத் தானே கட்டுப்படுத்த பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றான். அவன் எடுக்க மாட்டான் என்பதை அறிந்து காண முடிவெடுத்து  வெளியில் வந்தாள்.

சாப்பிடாமல் சென்றது ஞாபகத்திற்கு வர அவனுக்கான இரவு உணவோடு புறப்பட்டாள். வெளியில் காத்து வாங்க அமர்ந்திருந்த விக்ரம் அவளை பார்த்து, “அன்பினி எங்க போற.” என்றான்.

அதற்கு பதில் சொல்லாதவள் வேகமாக கிளம்ப, இவனும் கேட் வரை ஓடினான். அப்போதுதான் வெளியில் வந்த திவ்யா  பார்த்துவிட்டு, “அண்ணி அண்ணனை பார்க்க போவாங்க விடுங்க.” என்றாள் சாதாரணமாக.

அவன் அமைதியாக அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொள்ள, திவ்யா உள்ளே சென்று விட்டாள். தொலைக்காட்சி மெகா தொடர்களை கண்டு களித்த பெரியவர்கள் தூங்க செல்ல, வெளியில் இருக்கும் விக்ரமை அழைக்க வந்தாள் திவ்யா.

கண்மூடிய நிலையில் கைகளை இருக்கையின் மேல் பகுதியில் நீட்டியவாறு அமர்ந்திருக்க, “தூங்க போகலையா.” அவன் முன்னால் நின்றாள்.

விழித்திறந்தவன், “அன்பினிக்காக வெயிட்டிங்.” என்றான்.

“அண்ணி இப்போதைக்கு வர மாட்டாங்க. அப்படியே வந்தாலும் அண்ணன் கூட தான் வருவாங்க.” அவ்விருவரையும் கணித்து அவள் கூற,

“அது எப்படி சொல்ற” வினா எழுப்பினான்.

“இங்க வந்த நாள்ல இருந்து ரெண்டு பேரும் தனி உலகத்துல இருக்காங்க. நடுவுல யாரு வந்தாலும் கண்டுக்க மாட்டாங்க.  அண்ணன் முன்ன மாதிரி எங்க கிட்ட பேசுறது இல்ல. என்னதான் அண்ணி எங்க கிட்ட சிரிச்சு பேசினாலும் பார்வை முழுக்க அண்ணன் மேல மட்டும் தான் இருக்கும்.”

“அண்ணன் பேசலன்னு ரொம்ப வருத்தமோ!”

“அப்படி இல்ல ஆனா சின்னதா ஒரு ஏக்கம்.”

“கல்யாணம் ஆகிவிட்டா நீயும் அப்படித்தான்.”

“உண்மை தான் ஆனா அண்ணி மாதிரி எனக்கு ஒரு லைப் பார்ட்னர் கிடைச்சா.” என்றதும் ஆர்வத்தோடு தள்ளி அமர்ந்தவன்,

“எப்படிப்பட்ட பையன் வேணும்.” என்று அவளை அமரும்படி சைகை செய்தான்.

வேண்டாம் என்று மறுத்தவள், “முன்னாடி குழந்தைத்தனமான ஆசை நிறைய இருந்துச்சு. ஆனா இவங்கள பார்த்ததுக்கு அப்புறம் காதலிக்கணும்னு தோணுது.”  என்றாள்.

“காதலிக்க வேண்டியது தான “

“அப்படி யாரும் வரலையே.”

“இன்னுமா!” என்று அவள் முகத்தை ஆராய, ‘இல்லை’ என தலை அசைத்தாள்.

“ஒன்னு கேட்கட்டுமா!” அவன் உத்தரவு கேட்க,  தலையசைத்து சம்மதம் சொன்னாள்.

“நானும் பார்க்கிறேன் வந்ததுல இருந்து ஒரு தடவை கூட மாமான்னு சொல்லலையே ஏன்?” அவள் கோபத்தில் தான் கூப்பிடாமல் இருக்கிறாள் என்பதை உணர்ந்தே கேட்டான்.

“மாமான்னு கூப்பிடாத அதுக்கு உனக்கு உரிமை இல்லைன்னு சொல்லிட்டீங்கன்னா.” என்றவள் அவனை பார்ப்பதை தவிர்த்தாள்.

“சாரி!”

…..

“திவி “

…..

அவள் கண்டு கொள்ளாமல் இருக்க, “என்னவோ அந்த வார்த்தைய  கேட்டதுல இருந்து எனக்குள் நிறைய மாற்றம். இதுவரைக்கும் யாரும் அப்படி கூப்பிட்டது இல்ல. வாழ்க்கை முழுக்க நீ மட்டும் தான் கூப்பிடணும்னு ஆசைப்படுறேன்.” என்றதும் அவனை திரும்பி பார்த்தாள்.

மேற்கொண்டு எதுவும் பேசாதவன் அவ்வழிகளை தொடர்ந்து ஊடுருவ, தலை கவிழ்ந்தாள் திவ்யா.

“நீ ஆசைப்படற அளவுக்கு காதலிக்க முடியுமான்னு தெரியல. ஆனா எனக்குள்ள புதுசா வந்திருக்க அந்த உணர்வை உன்னோட பகிர்ந்துக்கணும்னு தோணுது. பஞ்சு மிட்டாய் மாதிரி என்னை பார்க்கும் போதெல்லாம் உன் கண்ணு விரியனும். யாருக்கும் தெரியாம கள்ளத்தனமா அந்த சுவை மாதிரி உனக்குள்ள நான் இருக்கணும். எச்சில் பட்டதும் கரையிற பஞ்சு மிட்டாய் மாதிரி வர சண்டை காணாம போயிடனும். நாக்குல ‌ஒட்டிக்கிற சாயம் மாதிரி காதல் தொடர்ந்துட்டே இருக்கணும். முடிஞ்சா பஞ்சு மிட்டாய் மாதிரி இனிப்பா, கலரா இரண்டு குழந்தைகளை பெத்துக்கலாம். பல்லு இல்லாத வயசுலயும் உனக்காக பஞ்சுமிட்டாய் வாங்கி குவிக்கணும்.” என்றவன் சற்று இடைவெளி விட்டு…

“பஞ்சு மிட்டாய் வேணும்னா சொல்லு வாழ்க்கை முழுக்க வாங்கி தர தயார்.” என்றான்.

விழி அகலவில்லை அவனை விட்டு. என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறும் விழிகளில் விழுந்தான் விக்ரம். அவள் கையை பற்றி நெஞ்சில் வைத்தவன், “கட்டாயப்படுத்தல ஆனா சீக்கிரம் சொல்லிடு. உன் மாமா வெயிட் பண்றேன்.”  அந்த கைகளுக்கு முத்தம் கொடுக்க நெருங்கியவன் அதை செய்யாமல், திவ்யாவின் கன்னத்தைப் பிடித்து கிள்ளினான்.

“பஞ்சு மிட்டாய விட இது டேஸ்டா இருக்கும் போலையே.” என்றதும் அவள் கன்னங்கள் கலர் மாறுவதை கண்டு கொண்டான்.

“காத்துல உட்காராத பஞ்சுமிட்டாய் கரைஞ்சிட போற. மாமா தான் கஷ்டப்படனும் அப்புறம்.” இருவர் விழிகளும் கலந்து கதை பேச, தாங்கிக் கொள்ள முடியாத திவ்யா ஓடி விட்டாள்.

அம்மு இளையாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
30
+1
3
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *