Loading

27 – விடா ரதி… 

 

அடுத்து இரண்டு நாட்கள் அங்கிருந்துவிட்டு மீண்டும் பெங்களூர் சென்றனர். 

 

“நீயும் ஏன்டா கூடவே அலையற? நான் பத்திரமா இருந்துப்பேன் … நீ கடைய போய்  பாரு …..”, அவளுடன் வந்தவன் அங்கேயே ஒரு வாரம் இருந்துக்கொண்டான், அவளது பிராஜக்ட் முடியும் தருவாயில் இருந்தது. 

 

“நீ சொன்ன சாப்ட்வேர் போட்டுட்டேன் டி…. இங்க இருந்தே எல்லாமே கவனிக்கறேன் இப்போ…. ஒன்னும் பிரச்சனை இல்ல… நீ உன் வேலைய பாரு.. நானும் என் வேலைய பாக்கறேன்…. உன் வேலை முடிஞ்சதும் அன்னிக்கி ஒரு ரிசார்ட் சொன்னியே அங்க நாலு நாள் இருக்கலாம்…. சரியா?”, எனக் கேட்டான். 

 

“நாலு நாள் தானா?”, என அவள் சிரிப்புடன் கேட்கவும், அவளை இடைவளைத்து அருகில் நிறுத்தி, “நானும் கூட சில எடத்த பாத்து வச்சிருக்கேன் டி.. அங்கயும் நாலு நாலு நாள் இருக்கலாம்….”, என கொஞ்சலாகக் கூறினான். 

 

“இப்படி எத்தன நாலு நாளு போய்கிட்டே இருக்கறதாம்?”, அவளும் அவன் கன்னத்தைக் கடித்தபடிக் கேட்டாள். 

 

“உங்கத்தைக்கு பேர பிள்ளை வந்தாச்சின்னு சொல்ற வரைக்கும் போலாம்…” , எனக் கிறக்கமாகக் கூறவும்,  அவள் அவனில் கரைந்துக் கொண்டிருந்தாள். 

 

“அதுக்கு அப்பறம் கூட்டிட்டு போகமாட்டியாடா செல்லம்?”, அவனை விட்டுத் தள்ளி அமர்ந்து வீம்பாக கேட்டாள். 

 

“பெத்து குடுத்துட்டு நாம மறுபடியும் இதே நாலு நாள் காலண்டர் போட்டுக்கலாம் பேபி… புள்ளைய அவங்க வளத்தட்டும்… நம்ம இப்ப இந்த வேலைய மட்டும் பாப்போம்…. சரியா?”, காதில் கிசுகிசுப்பாக அவன் கூறவும் அவள் உடல் சிலிர்த்து அவனிடமே ஒன்றிக் கொண்டாள். 

 

“ரொம்ப பேட் பாய் டா நீ…”

 

“உனக்கு மட்டும் தான்…. “, என அங்கே ஓர் காதல் சங்கமம் நிகழ்ந்தது. 

 

அடுத்த ஒரு வாரத்தில் அவளது பணி முடிந்து அவளும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்தாள். 

 

“ஏன்டி வேலைய விட்ட?”, கோபமாகக் கேட்டான் ரகு. 

 

“என் விருப்பம்ன்னு நீ தானே சொன்ன… இனிமே உன்கூட இருந்து பிஸினஸ் கத்துக்கறேன்…. “

 

“இது முடிஞ்சதும் உனக்கு மேனேஜர் அஹ் புரொமோஷன் தரதா சொல்லியிருக்காங்க டி… இந்த இடத்துக்காக நீ இவளோ வருஷம் உழைச்சிருக்க… அத இப்படியா தூக்கி போட்டுட்டு வருவ? உன் M.D வருத்தமா பேசறாரு…”, ஆதங்கமாகக் கூறினான். 

 

“இதோ பாரு ராக்கி.. இனிமே உன்னை விட்டுட்டு என்னால இருக்க முடியாது…. உன்கூட தான் நான் இருப்பேன். இந்த வேலை பாத்தா உன்னை தனியா விட்டுட்டு அடிக்கடி  இங்க வரணும்… அப்படி வரதுக்கு எனக்கு விருப்பம் இல்லை…”, என அவளும் கறாராகப் பேசினாள். 

 

“அதுக்காக உன் உழைப்ப நீ இழக்க கூடாது டி….”

 

“என்ன பண்ண சொல்ற நீ இப்ப என்னை?”, கோபத்துடன் கேட்டாள்.  

 

அவள் அவனோடு எப்போதும் இருக்கப் போகிறாள் என்கின்ற சந்தோசம் அவனுக்கு இல்லையே என்ற கோபம் அவளுக்கு…. அவளின் உழைப்பு வீணாக போய்விடக்கூடாது என்கிற ஆதங்கம் அவனுக்கு. அவள் தன்னோடு இருக்கத்தானே அவனும் விரும்புகிறான், ஆனாலும் இப்படி அவளுக்கு கிடைக்கும் உழைப்பின் பலனை உதறிவிட்டு, அவளை அழைத்துச் செல்ல அவனுக்கு விருப்பமில்லை. 

 

“சரி … உன் எம்.டிகிட்ட நாம பேசலாம்…. நீ வீட்ல இருந்து பாக்க அவரு சரின்னு சொன்னா நீ உனக்கு குடுக்கற புரொமோஷன் ஏத்துகிட்டு வேலை பாக்கணும்…”

 

“ராக்கி…”, அதிருப்தியோடு அவள் அவனைப் பார்க்கவும், அவன் அமைதியாக இரு என செய்கை செய்தான். 

 

அதன்பின் அவள் தனிப்பட்ட முறையில் இருந்தே புராஜக்ட் அவர்களுக்கு செய்து கொடுக்கலாம் எனவும், அவளின் ஊதியமாக பிராஜெக்ட்டில் இருந்து சம்பளத்தோடு, லாப பங்கும் கிடைக்கும்படி பேசி முடித்துவிட்டு அங்கிருந்து இருவரும் தேனிலவுப் பயணத்திற்குச் சென்றனர். 

 

“சரியான பிடிவாதம் டா உனக்கு.. நெனைச்சத முடிச்சே ஆகணும்ன்னு பண்ற நீ….”, அவளுக்கு இன்னமும் இந்த ஏற்பாடு பிடிக்கவில்லை. அவனோடு இருந்து அவனுடன் வேலையைப் பகிர்ந்து செய்யமுடியாது என்ற வருத்தம் இருந்தது.  

 

“இன்னும் 4-5 வருசம் அந்த வேலைய பாரு.. அப்பறம் நம்ம கடைல முழு நேர மொதலாளியா உக்காந்துக்க… இது நீ கஷ்டப்பட்ட பலன் கைக்கு கிடைக்கற சமயம் டி.. இத நீ இழக்க கூடாது… புரிஞ்சிக்க டி உன் மாமன…”, என  அவளை அருகே இழுத்தான். 

 

“போ.. இப்படி கொஞ்சி கொஞ்சியே நீ காரியத்த சாதிக்கற….”, அவளும் வீஞ்சியபடிக் கூறினாள்.

 

“நீயும் தான் கொஞ்சி கொஞ்சி இப்ப கடைக்கு என்னை லோன் எடுக்க வச்சிருக்க… இப்பவே பெருசு பண்ணனுமா என்ன?”, என அவள் கன்னத்தைக் கடித்தபடிக் கேட்டான். 

 

“இப்பவே பண்ணா தான் புள்ளைங்க வரதுக்கு முன்னாடி ஸ்டெடி ஆக முடியும்… கூடவே ஸ்லிப்பெர்ஸ், ஃபேஷன் அக்சஸ்சரிஸ் எல்லாம் வைக்கணும்…. அதுக்கு எல்லாம் டை-அப் பண்ணா போதும்… பக்கத்திலேயே இடம் வரப்ப வாங்கி பண்ணிடனும் … வேற எப்ப பண்ணுவீங்களாம்….?”, என அவன் சிகையைக் கலைத்து விளையாடி, அவன் மூக்கோடு மூக்குரசி மோக விளையாட்டை தொடங்க, அவன் தொடர்ந்துவிட்டான். 

 

10 நாட்களும் செல்ல கோபமும், சண்டையும், ஊடலும் கூடலுமாக இருந்தவர்கள், மதுரை வந்துச் சேர்ந்தனர். 

 

“என்னடா 10 நாள்ல வந்துட்ட?”, அவனின் தாய் கேட்டார். 

 

“போய் உங்க மருமகள கேளுங்க…”, எனக் கோபமாகக் கூறிவிட்டு அறைக்குச் சென்றான். 

 

“என்னடி ஆச்சு? மூஞ்சிய திருப்பிட்டு போறான்…”

 

“உங்க பையனுக்கு பொறாமை அதிகமாக இருக்கு அத்த… உங்கள பாத்து இருவது நாள் ஆச்சு மிஸ் பண்றேன்னு சொல்லிட்டேன்… அதுக்கு தான் இப்படி மூஞ்ச திருப்பிட்டு போறாரு .. என்ன தான் புள்ளைய வளத்து வச்சிருக்கீங்களோ? இவர சமாதானம் பண்ணியே எனக்கு நேரம் போகுது…. இந்தாங்க உங்களுக்கு புடவை எடுத்தேன். இந்த சால்வையும் எடுத்தேன். வயலுக்கு போறப்ப போட்டுக்கலாம்… சில்லுன்னு இருக்கும்.. இது பெரிய மாமாக்கு…. ”, என இருவருக்கும் வாங்கி வந்த பரிசுகளைக் கொடுத்துவிட்டு, மாமியாரின் கையால் டீயை ரசித்துக் குடித்தாள். 

 

“உங்க டீ போல யாருமே போடல அத்த… இத ரொம்ப மிஸ் பண்ணேன்.. உங்களையும்… மிஸ்டு யூ சோ மச் அத்த..”, என அவரைப் பின்னிருந்துக் கட்டிக்கொண்டாள். 

 

அந்நேரம் கீழே வந்தவன் மனைவி தன்னை தேடி இன்னும் வராமல் இங்கே அன்னையுடன் கொஞ்சிக்கொண்டிருப்பதுக் கண்டு இன்னமும் கோபம் கொண்டு வெளியே சென்றுவிட்டான். 

 

“மருமவளே .. என்புள்ளைய கோவமேத்தனும்-ன்னு கங்கணம் கட்டி இருக்கியா டி?”, என மகன் கோபமாக வெளியே செல்வதைப் பார்த்துக் கேட்டார். 

 

“ஆமா கட்டராங்க கங்கணம்… நான் சொல்றத ஒன்னு கூட கேக்கறது இல்ல… நான் வேலைய விட்டுட்டு வந்தா இவரு மறுபடியும் வேலைல சேத்து விடுறாரு.. அதான் அந்த கோவத்த அப்பப்ப இப்படி காட்டறேன்… என் அவஸ்தை அப்பவாது தெரியட்டும்….” , எனக் கூறிவிட்டு தன் அறைக்கு சென்றுக் குளித்துத் தயாராகி மாமியாருடன் வயலுக்குச் சென்றுவிட்டாள். 

 

“ரதி… அங்க கயித்து கட்டில்ல போய் உக்காரு.. கூலிக்கு எத்தன பேரு வந்திருக்காங்கன்னு கேட்டுட்டு வரேன்… “, எனக் கூறிவிட்டுச் சென்றார். 

 

“நானும் வரவா அத்த?”

 

“இல்லடி இந்த பைய வச்சிக்க.. வந்து கணக்கு போட்டு குடுக்கலாம்.. இங்க தான் கூலி குடுக்கணும்..”, எனக் கூறிச் சென்றவர் பத்து நிமிடத்தில் வேலையைக் கவனித்துவிட்டு, கொண்டு வந்திருந்த நோட் எடுத்து அவளுக்கு விவரம் கூறி அவளையே கூலியும் கொடுக்கச் செய்தார். 

 

“மருமவள வயல் வேலை பழக்க இப்ப தான் நேரம் வந்துச்சா ஆத்தா? முன்னையே இங்க வந்திருந்தா கண்ட சிறுக்கி பேச்சு எல்லாம் வந்திருக்குமா?”, என ஒருத்திக் கூறினாள். 

 

“இங்கேரு…. வந்தியா வேலைய பாத்தியா கூலிய வாங்கிட்டு போனியான்னு இருக்கணும்… தேவ இல்லாத பேச்செல்லாம் இங்க பேசக் கூடாது…. “, சாந்தம்மாதேவி ஒரு சத்தம் போடவும் அனைவரும் வாயை மூடிக் கொண்டு கூலியை வாங்கிக் கொண்டுச் சென்றனர். 

 

“இன்னமுமா அத்த அதையே பேசறாங்க?”

 

“ஊருன்னா வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் ஏசும் டி… நீ விட்டுத் தள்ளு…. வீட்ல இருந்தே வேலை பாக்கறமாதிரி தானே ஏற்பாடு பண்ணிருக்கு?”

 

“ஆமாங்க அத்த… “, சோகமாகக் கூறினாள். 

 

“இங்க பாரு டி… உனக்குன்னு இவளோ நாள் சம்பாத்தியம் இருந்திருக்கு… அத விட்டுட்டு ஏன் நீ அவன் கைய எதிர்பாக்கணும்? இன்னும் 5 வருஷமோ ஆறு வருஷமோ வேலைய பாரு… இப்ப வாங்கி போட்டு இருக்க நிலத்துக்கு நீயும் தானே காச குடுத்து இருக்க. அதுல கட்டற கடை வருமானம் உனக்குன்னு பண்ணிக்கலாம்…. அவன்கூட தொழிலும் கத்துக்க… அவன் தான் மதுரையில கடை ஆரம்பிக்கணும்ன்னு சொல்றான்ல.. பசங்க வந்து ஓரளவு உருப்படி ஆனதும் நீயும் வேலைய விட்டுட்டு இங்கேயே வந்திருங்க.. அங்க ஆள போட்டுட்டு அப்பப்ப போய் பாத்துக்கலாம்…. தொழில் எல்லாம் உடம்புல தெம்பு இருக்கறப்ப பெருக்கிடணும்… இது சம்பாதிக்கிற வயசு.. சம்பாதிச்சு உருப்படியா பண்ணிக்க …”, அவர் அவரின் அனுபவத்தை அவளுக்குப் பாடமாக எடுத்துக் கொண்டிருந்தார். 

 

“சரிங்கத்த….”, என அவளும் அவரோடு பேசியபடி இல்லம் வந்து சமைத்து அனைவரும் உண்டு எழுந்தனர். 

 

“ராக்கி… ராக்கி… இந்தா பால்…”, என அவனுக்கு கொடுத்துவிட்டுக் குளிக்கச் சென்றாள். 

 

“ராக்கி.. . துண்டு எடுக்க மறந்துட்டேன்… எடுத்து குடு  டா…”, என  உள்ளிருந்துக் கத்தினாள். 

 

அவனும் முறைத்தபடி அவனுக்கு பின்னால் இருந்த பீரோவில் இருந்து எடுத்து கொடுத்தான். கதவையும், ஜன்னலையும் மூடிவிட்டு இரவு விளக்கை போட்டுவிட்டு கட்டில் சுற்றிச் சென்று நின்றுக் கொண்டான்.  

 

அவள் வெளியே வரும்போதே பெரிய விளக்கெல்லம் அணைந்திருந்தது. அரை இருட்டாக இருந்தது, ஆனால் ஏசியின் குளிர் அவளது தேகத்தை ஊடுருவ, அவன் திட்டத்தை அறிந்துக் கொண்டவள் சத்தம் செய்யாமல் உடையை எடுக்கச் சென்றாள். 

 

கள்வன் அவள் பின்னிருந்து அவளைத் தூக்கி நிலைக்குலைய செய்திருந்தான். அந்தோ பரிதாபம் அவனும் நிலைக்குலைந்து தான் போய்விட்டான். அவனது கோபமும் ஓடிவிட்டது… 

 

“டேய் என்னடா பண்ற? விடு.. சார் தான் ரொம்ப கோவமா மூஞ்ச திருப்பிட்டு போனீங்களே… இப்ப மட்டும் எதுக்கு என் மூஞ்ச பாக்கற?”, எனக் கேட்டாள். 

 

“உன் மூஞ்ச நான் இப்பவும் பாக்கல தான் டி… உனக்கு என்னை விட எங்கம்மா தான் ரொம்ப முக்கியமோ? வந்ததுல இருந்து அவங்க கூடவே சுத்திக்கிட்டு இருக்க.. என்னை கண்டுகிட்டியா டி நீ?”, அவள் கழுத்து வளைவில் கடித்தான். 

 

அவள் தேகத்தின் வாசமும், குளித்த லோசன் வாசமும் அவனை வசம் இழக்கச் செய்துக் கொண்டிருந்தது. 

 

“ஆமா.. ஐ லவ் ஹெர் … அதுக்கு என்ன இப்போ? “, காற்றாக தான் குரலும் வந்தது. 

 

“என்னை லவ் பண்ணலியா நீ?”, வரைமுறையற்ற இடத்தில் கடித்து வைத்தான். 

 

“ஐ ப்ரீத் யூ (I Breath You)  டா மாமா…”, என அவள் கூறியதும் அவன் மொத்தமாகத் தன்னிலை இழந்து அவளையும் இழக்கவைத்தான். 

 

அதன்பின் அங்கே வாய்பேச்சுக்கு இடமேது? இரு உயிரும் கொஞ்சி, சிணுங்கி, தழுவி, மலர்ந்து, உடைந்து ஒன்றோடு ஒன்று கலந்து, காதலின் மகரந்தத்தை அறையில் நிரப்பிக் கொண்டிருந்தனர். 

 

அதன்பின் நாட்கள் வேகமாக  ஓட, அவன் கடையை விரிவுபடுத்தும் வேலையும் முடிந்தது. சாந்தமாதேவி வாய்ச்சொல்லாக இல்லாமல் மருமகளின் பெயரில் பாதி கடையை பதிவுசெய்து, அந்த வருமானமும் அவளுக்கே வரும்படி வங்கிக் கணக்கு தொடங்கிக் கொடுத்தார். 

 

அவளின் சம்பளத்தை அவளும் ரகுவிடம் கொடுத்து முறையாக முதலீடு செய்து பல வழிகளில் உபரி வருமானத்தை ஏற்படுத்திக் கொண்டனர் இருவரும். 

 

அன்று கடைத் திறப்பு விழா…. அவள் அன்னை தந்தை மற்றும் உடன் பிறந்தவனோடு, அத்தை மாமா கணவன் என அனைவருக்கும் புது உடை எடுத்துக் கொடுத்து அவர்களை முன்னிறுத்தி ஆசிர்வாதம் பெற்று, கடை ரிப்பனைக் கணவனும் மனைவியும் சேர்ந்தே வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி, மற்றவர்களையும் ஏற்ற வைத்து முதல் போனியை அவள் செய்தாள். 

 

மெல்ல மெல்ல இணையவழி விற்பனையும் தொடங்கி, அதுவும் லாபத்தை ஈட்ட ஆரம்பித்திருந்தது. 

 

இரண்டு மாதங்கள் கழித்து, அவனோடு அவளும் கடையில் தனக்கு என்று ஒரு அறையை தயார்செய்து அவனோடே கடை வந்து அமர்ந்து தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

 

அவ்வப்பொழுது கடை நிர்வாகத்தையும் அவன் வெளியூருக்கு செல்லும் போது பார்த்துக்கொள்ள ஆரம்பித்தாள். 

 

அன்று காலையில் இருந்து ஒன்றும் சாப்பிடமுடியாமல் குமட்டிக் கொண்டே இருந்தது. அவனும் வேலை அவசரத்தில் அவளது மாற்றத்தைக் கவனிக்காமல் கடைக்கு வந்ததும், துணிகளின் இருப்பைக் கணக்கெடுக்கச் சென்றுவிட்டான். 

 

கடையில் வேலை செய்யும் பையன் டீயுடன் வரும்போது அவள் எழமுடியாமல் தலைச்சுற்றிக் கீழ விழுந்தாள். 

 

கடைப் பையன் பயந்து ரகுவை அழைக்க ஓடினான். 

 

ரகு வந்து அவள் நிலைப்பார்த்துப் பதறி முகத்தில் தண்ணீர் தெளித்தும் அவள் எழவில்லை எனவும் அவசரமாக மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றான்.  

 

படபடப்புடன் அவன் காத்திருக்க மருத்துவர் அவனை அழைத்தார். 

 

“வாழ்த்துகள் ரகு… நீங்க அப்பாவாக போறீங்க…”

 

அவன் ஒரு நொடி உள்ளம் பொங்க அவரை பார்த்துவிட்டு, “ரதி…. அவ எப்பிடியிருக்கா? நான் பாக்கலாமா?”, எனக் கேட்டான். 

 

“கண்டிப்பா… லேசான மயக்கம் தான். இது சகஜம் தான்… 2 மாசம் முடிஞ்சி இருக்கு… கவனமா இருங்க… நல்ல சத்தான ஆகாரம் குடுங்க…. அவ்ளோ தான்,…“, எனக் கூறி அவனை அனுப்பிவைத்தார். 

 

அவன் வேகமாக அவளிடம் சென்று இறுக்கமாக அணைத்து , “நாம ப்ரக்நெண்ட் ஆகிட்டோம் டி..”, எனக் கூறி அவள் உச்சந்தலையில் முத்தம் வைத்தான். 

 

“ஆமா… நம்ம ப்ரக்நெண்ட் ஆகிட்டோம்… அத்தகிட்ட உடனே சொல்லணும்….”, என அவள் கூறவும் அவன் முறைக்க மீண்டும் அங்கே ஊடல் தொடங்கியது. 

 

அனைவருக்கும் விசயத்தைக் கூறவும் அவர்கள் அன்றே கொடைக்கானல் வந்துவிட்டனர். 

 

அதன்பின் அவள் வாழ்வின் பெரும் சந்தோஷமானப் பகுதியை அவள் அவனோடு அணு அணுவாக அனுபவித்துக் கொண்டிருந்தாள். 

 

தாய்மையின் காரணமாக ஏற்பட்ட சுரப்பிகளின் ஏற்றத்தாழ்வு அவளை வெகுவாகப் பாதிக்க, அவள் அவனைத் தான் வறுத்துக் கொண்டிருந்தாள். அவன் அனைத்தையும் புன்னகை முகமாகவே பொறுத்துக் கொண்டு அவளையும் நன்றாகவே கவனித்துக் கொண்டான். 

 

“நீ மட்டும் கவுந்து படுக்கற… என்னால முடியல.. நீயும் நேரா படு..”, எனத் தினமும் சண்டையிட்டு அவனது மார்பில் தான் படுத்துறங்குவாள். 

 

அவனோ கடையில் ஒரு கட்டிலை வாங்கி போட்டு, சிறிதாக அவன் அறைக்குள்ளேயே இன்னொரு அறை எடுத்து, பகலில் உறங்கியெழுந்தான். 

 

நாளொரு வண்ணமாக அவர்களின் கர்ப்ப காலம் கொண்டாட்டமாகச் சென்றுக் கொண்டிருந்தது. 

 

ஊரையே கூட்டி வளைகாப்பு நடத்தி அவளை அவளின் தந்தை வீட்டிற்கு அனுப்பியவன் அடுத்த நாளே தன் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான். 

 

“இங்க தான் புள்ள பொறக்கணும்… அவங்க இங்கேயே இருந்து உன்னை பாத்துக்கட்டும் ரதி…. உன்ன விட்டுட்டு என்னால இருக்க முடியாது…”

 

“புள்ள பொறந்து நான் அங்க போய் ரெஸ்ட் எடுப்பேன்… நீ அப்பவும் வந்து பிரச்சினை பண்ணக்கூடாது…”

 

“அதுலாம் அனுப்பமுடியாது…”

 

“பாருங்க அத்த அவர…”, அத்தையிடம் நியாயம் கேட்டாள் . 

 

“கம்முனு இருடா…. உனக்கு என்ன மாமனார் வீடு தூரமாவா இருக்கு? இங்க தானே ..தினம் போய் பாத்துட்டு வா… 3 மாசம் அங்க இருந்துட்டு வந்ததும் நான் மதுரை கூட்டி போயிருவேன்…. “

 

“நீங்க இங்கேயே இருங்க… நான் 3 மாசம் எல்லாம் விடமாட்டேன்…”

 

“வளர்ந்துட்ட டா நீ.. இல்ல பல்ல கழட்டி இருப்பேன்… கம்முன்னு போடா…. அந்த புள்ளைய பாடா படுத்தறான்…”, சாந்தம்மாதேவி சத்தம் கொடுக்கவும் அமைதியாகச் சென்றான். 

 

அவனின் அம்மாவும், அவளின் அம்மாவும் மாறி மாறி உடன் இருந்து உதவினர். 

 

சரியாக பத்தாவது மாதம் மகள் வந்து பிறந்தாள். 

 

அனைவரும் குழந்தையைப் பார்க்க அவன் முதலில் அவளைப் பார்க்க ஓடினான். அவள் பிரசவ வலியைக் கண்டு மிகவும் பயந்து இருந்தான். அடம் செய்து பிரசவத்தின் போதும் அவள் கைப்பிடித்தபடி அவன் தான் அழுதுக் கொண்டிருந்தான். 

 

“டேய் மாமா… அழாத டா…. சீக்கிரம் குழந்தை வெளிய வந்துரும்…. சின்ன புள்ள மாறி அழுதுட்டு.. கண்ண தொட.. பாரு நர்ஸ் எல்லாம் கிண்டல் பண்றாங்க…”, என அவனை சமாதானம் செய்தாள். 

 

“இவளோ வலிக்கும்ன்னு எனக்கு தெரியாது டி… கஷ்டமா இருக்கு…. பல்ல கடிச்சிட்டு அழாம இருக்காத டி… அழுதுடு…”

 

“உன்கூட நானும் அழணுமா டா? மாட்டேன்… அழமாட்டேன்.. உன்னமாதிரி உன் புள்ளையும் மொத வலிய குடுத்தாலும் என்னை நல்லா பாத்துப்பாங்க…. பொண்ணு வேணுமா பையன் வேணுமா?”, என இத்தனை நாட்களாகக் கேட்காத கேள்வியைக் கேட்டாள். 

 

“உன்னமாதிரி ஒரு பொண்ணு….”

 

“ஹூஹும்… உன்ன மாதிரி பொண்ணோ பையனோ வரட்டும்….. அடுத்து என்னை மாதிரி…”, எனக் கூறினாள். 

 

“இதுவே போதும் டி… இன்னொரு  தடவ உன்னை இப்படி துடிக்கவிட்டு பாக்க முடியாது..”

 

“அதுலாம் நான் ஒத்துக்க மாட்டேன்… இந்த புள்ளைய நம்ம அம்மாங்க கைல குடுத்துட்டு, நீ சொன்னமாதிரி நாலு நாள் காலண்டர் இன்னொன்னு போட்டுட்டு நம்ம போலாம்…. டீல்?”, என அவன் இதழில் இதழ் பதித்தாள். 

 

“டீல்..”, அவனும் இதழ் பதிக்க, அவளுக்கு இடுப்பில் வலி அதீதமாக ஆரம்பிக்க சில நிமிடங்களில் குழந்தை கையில் வந்தது.

 

“பொண்ணு டா.. உன்னமாதிரி இருக்கா பாரு..”, அரைமயக்கத்தில் கூறினாள். 

 

“நீ ஓகே தானே பேபி?”, அவள் முன்னுச்சியில் முத்தம் வைத்துக் கேட்டான். 

 

“நான் ஓகே தான்…. லவ் யூ டா…”

 

“ஐ ப்ரீத் யூ டி….”

 

அவள் மீண்டும் கண் திறந்தபோது ரகு தன்னருகிலேயே அமர்ந்திருப்பது தெரிந்தது. குழந்தையைக் கையில் வாங்கி பால் கொடுக்க ஆரம்பிக்க அம்மாக்கள் வெளியே சென்றனர். 

 

அவன் அவளையும் குழந்தையும் பார்த்து உள்ளம் பூரித்துக் கொண்டிருந்தான். 

 

“என்னடா?”

 

“நீ சந்தோசமா இருக்கியா டி?”

 

“இதோ… இந்த ரெண்டு உசுரும் எனக்குன்னு வந்திருக்கே… ரொம்ப சந்தோசமா இருக்கேன்…. நீ?”

 

“வார்த்தையே இல்ல டி… ஆனா ரொம்ப பயந்துட்டேன்..”, அவள் அருகே வந்து அவளை அணைத்தபடி அமர்ந்துக் கூறினான். 

 

“அழுது அழுது கண்ணே வீங்கி இருக்கு உனக்கு…. போய் ஐஸ் வை….”, என அவன் கண்களுக்கு முத்தம் வைத்தாள். 

 

மகளையும் மனைவியையும் இல்லம் அழைத்து வந்து மாமனார் வீட்டில் அவ்வப்போது தங்கி, அவர்கள் மதுரை சென்றபின் அங்கேயே சில மாதம் இருந்து என அவனும் அவர்களோடு பயணித்தான். 

 

“ரதி….. அடியே விடா ரதி…..”

 

“என்ன சொன்னீங்க?”, முறைத்தபடி வந்தாள் . 

 

“விடாது கருப்புங்கற மாதிரி நீ விடா ரதி டி….”

 

“அப்ப நீங்களும் தானே…”, அவன் முழிக்கவும், அவள்  “ர(குப)தி ”, என கூறினாள். 

 

“அட ஆமா… டேய்  குட்டி உங்கம்மாவ கலாய்க்கலாம்ன்னு பாத்தா நம்மள நாமளே கலாய்ச்சிக்க வைக்கறாடா….”, என அவன் கூறவும் தவழ்ந்தபடி இருந்த அவன் மகள் பொக்கை வாய் தெரிய அழகாகச் சிரித்தாள். 

 

இருவரும் மகளை அள்ளியணைத்து விளையாடி, பெரியவர்களுடன் தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொண்டனர்.

 

இப்படியாக அவர்கள் வாழ்வு அடுத்தக் கட்டத்தை அடைந்து சென்றது. நடக்காது என்று எண்ணிய அனைத்தும் ரதிக்கு மட்டும் அல்லாது ரகுவிற்கும் நடந்துக் கொண்டிருந்தது. 

 

விடாமல் இவர்கள் பந்தமும் தொடர விடாத ரதியாக தான் இருவரும் இருக்கின்றனர். 

 

“ர(குப)தி”  

 

விடா(த) ரதி தானே இவர்கள்…. 

 

இவர்கள் வாழ்க்கை இன்பமாக இனியும் விடாது தொடரட்டும்.. நாமும் விடைபெறுவோம்.  

 

உடன் பயணித்த அத்தனை வாசக நெஞ்சங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். மீண்டும் மற்றொரு கதையில் சந்திப்போம். 

 

அன்புடன், 

ஆலோன் மகரி. 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
12
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்