எத்தனை கேட்டும் அவளிடம் பதில் வராமல் போக, யுக்தாவோ மனதினுள் கருவிக்கொண்டான்.
‘ராட்சசி… கெஞ்ச வைக்கிறா. இவள்கிட்ட அப்படியே குழைஞ்சு குழைஞ்சு கேட்கணுமாக்கும்’ எனப் பற்களை நறநறவெனக் கடித்து தனக்குள்ளேயே எழுந்த சீறலை அடக்கிக் கொண்ட யுக்தா சாகித்யன், அவளது மனக்குமுறல்களை அறியாது போனான்.
விஸ்வயுகாவிற்கு தன் மீதே சினம் எழுந்தது. எதற்காக இவனிடம் இப்படி நின்று கொண்டிருக்கிறேன்? தனக்குப் புத்தி பிசகித்தான் விட்டது என நிந்தித்துக் கொண்டாலும் அவனை விட்டு அவளும் அவளை விட்டு அவனும் சிறிதும் விலகவில்லை.
பின் அவளே தன்னை சரிசெய்து கொண்டு, “குமரேஷ் கிடைச்சானா?” எனக் கேட்க,
“இதைக் கேட்க தான் வந்தியா? விட்டா நீயே பீல்டுல இறங்கி இன்வெஸ்டிகேட் பண்ண ஸ்டார்ட் பண்ணிடுவ போல” என இதழ்களை வளைத்தவன், “அருண்” என சத்தம் கொடுத்தான்.
அதில் வாசலிலேயே காத்திருந்த அருண் உள்ளே வந்து, “சார்… குமரேஷ் பத்தின தகவல் கிடைச்சு இருக்கு. ஆனா அவன் உயிரோட இல்லை சார்” என்றான்.
“வாட்? எப்படி செத்தான்?” யுக்தா லேசான அதிர்ச்சியுடன் கேட்க,
“ரோட் ஆக்சிடெண்ட் சார். வனஜா இறக்குறதுக்கு சில மணி நேரத்துக்கு முன்னாடியே இவனுக்கு ஆக்சிடெண்ட் ஆகியிருக்கு. ஸ்பாட் அவுட்.” என விளக்கமளித்தான் அருண்.
“ம்ம் சோ இவன் கல்ப்ரிட்டா இருக்க வாய்ப்பில்லை” என யுக்தா நெற்றியை நீவி யோசித்தான்.
“ஆமா சார் எந்த பக்கம் திரும்புனாலும் பதில் கிடைக்க மாட்டேங்குது… டாக்டராவது ரிப்போர்ட் ஒழுங்கா குடுப்பாருன்னு பார்த்தா அவரும் குழப்பி அடிக்கிறாரு. கேஸை சீக்கிரம் முடிக்கச் சொல்லி பொலிடிகல் ப்ரெஷர் வேற இருக்கு சார்.”
“ப்ச் அந்த ப்ரெஷர் எல்லா கேஸுக்கும் தான் இருக்கு: என மேஜையின் மீது இரு கைகளையும் ஊன்றி தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான்.
மற்ற வழக்குகளை போலவே இதனைக் கையாள கூடாதென்று சவால் விடுவது போல அமைந்தது அடுத்த கொலை!
—-
நாட்கள் அதன்போக்கில் நகர, “ஷைலா கிளம்பிட்டியா?” எனக் கேட்டபடி கைக்கடிகாரத்தை மாட்டினான் மைத்ரேயன்.
“ம்ம் கிளம்பியாச்சு கிளம்பியாச்சு” என்றவள் ஏதோ யோசனையில் இருக்க, அவள் முன்னே சொடுக்கிட்டவன் “என்ன தீப் திங்கிங்” என்றான்.
“நாளைக்கு நம்ம மேட்ரிமோனில ஏற்பாடு செஞ்ச கல்யாணம் நடக்க இருக்குடா மைதா” எனப் பீதியுடன் அவள் கூற,
“அதான் லாஸ்ட் டைம் கொலை எதுவும் நடக்கலையே ஷைலா. இந்த தடவையும் நடக்காதுன்னு நம்பலாம்” என சமன்செய்தான்.
“அடேய் நம்ம பண்ற கல்யாணத்துல நடக்கலைன்னாலும் அதே நாள்ல வேற இடத்தில நடந்துடுதே. நாளைக்கு எவனாவது கிளம்பி வந்தா என்ன செய்றது? விடியும் போதே கொலை நடக்குமோன்னு குலை நடுங்க வேண்டியதா இருக்குடா…”
“நம்ம மண்டபத்துல நடக்குறதுக்கு தான் நம்ம பொறுப்பாக முடியும். அடுத்த மண்டபத்துல நடக்குறதுக்குல்லாம் நம்ம ஒன்னும் செய்ய முடியாது. ஏற்பாடு எல்லாம் சரியா இருக்கான்னு ஒரு தடவை செக் பண்ணிடலாம் வா” எனக் கையை நீட்ட, வழக்கம் போல அவன் கையைப் பிடித்தபடி எழுந்தவள் லேசாய் தடுமாறி அவனது நெஞ்சில் மோதி நின்றாள்.
அந்த ஸ்பரிசம் சிறு சலனத்தைக் கொடுக்க, தன்னிச்சையாக நகர்ந்தாள். அவளது நெருக்கத்தில் சிக்கித் தவித்த மைத்ரேயனின் காதல் மனது இன்னும் நெருங்க அடம்பிடிக்க, “ஷைலா…” என அவளை நெருங்கினான்.
அந்நேரம் மடமடவென அங்கு வந்தார் மைத்ரேயனின் தாய் அகிலா.
வந்தவர் ஷைலேந்தரியை முறைத்து விட்டு மகனிடம், “மைத்ரா! உன் கல்யாணத்துல பொண்ணு மாறுனது நம்ம சொந்தக்காரங்களுக்கு எல்லாம் இன்னும் தெரியல. இன்னைக்கு புதுப் பொண்ணை பார்க்க வர்றேன்னு உன் அத்தை கிளம்பி வர்றாங்க. வர்றவங்ககிட்ட இவள் வாயை அடக்கி வைக்க சொல்லு. அவங்க வந்ததும் தான் விஷயத்தைச் சொல்லணும். உன் கல்யாணத்து அன்னைக்கு வர முடியல பாவம்… இன்னைக்கு ஆபிஸ்க்கு லீவ் போட்டு வீட்ல இருக்க சொல்லு. முடிஞ்சா நீயும் சாயந்தரம் சீக்கிரம் வந்துடு” என்று பேசி முடித்திட அவ்வளவு தான் ஷைலேந்தரி பொங்கி விட்டாள்.
“திடுதிப்புன்னு லீவ் எல்லாம் போட முடியாது. வந்தவங்களை வெய்ட் பண்ண சொல்லுங்க. நான் நைட்டு வந்து பாக்குறேன்…” எனத் துடுக்காய் பதில் அளித்தவள் ஒன்றும் பேசாமல் நின்ற மைத்ரேயனை காட்டத்துடன் பார்த்து விட்டு வெளியில் சென்றாள்.
‘நாம் என்ன தீங்கு செய்தோம்… நமக்குன்னு ஒரு ரொமான்டிக் சீக்குவென்ஸ் கூட அமைய மாட்டேங்குதே’ என நொந்தவன், “ஏன்மா அவன் அவன் இருக்குற வேலைல இப்ப இதெல்லாம் ரொம்ப முக்கியமா? பொண்ணு மாறுனதை சொல்றதுல என்ன பிரச்சனை உங்களுக்கு. வர்ற அத்தைகிட்ட பொறுமையா விளக்கம் சொல்லுங்க. நானும் அவளும் ஈவ்னிங் சீக்கிரம் வர பாக்குறோம்” என்று அவள் பின்னேயே ஓடினான்.
ஷைலேந்தரி இவனுக்காக காத்திராமல் அவளது காரில் புயல் வேகத்தில் கிளம்பி விட, அவள் பின்னே அவனும் தொடர்ந்தான்.
‘சும்மா இருந்தவளைக் கல்யாணம் பண்ணி வச்சு, இன்சல்ட் வேற பண்றாங்க. இவனும் என்னவோ சிலை மாதிரி நின்னு கேட்டுட்டு இருக்கான்’ எனப் புலம்பித் தீர்த்தவள் வேகமாக காரை ஓட்ட, அந்நேரம் அவளது அலைபேசி அழைத்தது.
மைத்ரேயன் தான் அழைத்தான்.
“ஷைலா ஏன் இவ்ளோ ஸ்பீட்? மெதுவா போ!” அவன் கண்டிக்க,
“கோபத்தை இது மேல தான காட்ட முடியும். போனை வச்சுட்டுப் போ” என அவளும் வெடுக்கென கூறினாள்.
“உன் கோபம் எதுவா இருந்தாலும் என்கிட்ட காட்டு ஷைலா. முதல்ல காரை நிறுத்து” அவனும் காரை அவளுக்கு ஈடாக வேகமாக ஓட்டியபடி கூற,
“நீ எதுக்கு என்னை பாலோ பண்ற. உன் அம்மாவுக்கு எந்த மாதிரி மருமகள் வேணும்னு நினைக்கிறாங்களோ அந்த மாதிரிப் பொண்ணு பின்னாடி பாலோ பண்ணு” ஆத்திரத்துடன் காய்ந்தாள்.
“லூசு மாதிரி பேசாதடி. என் அம்மாவை உனக்குச் சின்ன வயசுல இருந்து தெரியும்ல. என் பேமிலி எப்படின்னு உனக்குத் தெரியாதாடி. அவங்க தான் ஹர்ட் பண்றாங்கன்னா, நீயும் என்னை ஹர்ட் பண்ணுவ அப்படித்தான?” ஆற்றாமையுடன் பேசியவனின் குரல் இறுதியில் கமறியது.
அதற்கு மேல் விளக்கம் சொல்ல வழியற்று அவன் அழைப்பைத் துண்டித்து விட்ட ஷைலேந்தரி வேகத்தைக் குறைத்து விட்டு ‘ப்ச், சென்டிமென்ட்டா லாக் பண்றான்” என்று பல்லைக்கடித்தாள்.
நான்கு சாலை பிரியும் இடத்தில் இடப்பக்க சாலையில் இருந்து லாரி ஒன்று நிற்காமல் வர, ஹார்ன் அடித்தபடி சாலையைக் கடந்த மைத்ரேயனின் காரை மதிக்காமல் லாரியின் வேகம் கூடியது. இதனை எதிர்பாராத மைத்ரேயன் அவசரமாக வேகத்தைக் கூட்டிச் செல்ல, அப்படியும் சரியாக கடந்து போகையில லாரியில் பின் பக்கமாக உரசி விட்டதில், நிலைதடுமாறி அவனது கார் அங்கும் இங்கும் அலைபாய்ந்து டிவைடரில் முட்டியது அதிவேகத்துடன்.
இதனைக் கண்ணாடி வழியே பார்த்து விட்ட ஷைலேந்தரிக்கு பயம் நெஞ்சைக் கவ்வ, “மைத்ரா!” எனக் கத்தியபடி காரை வளைத்து விபத்து நடந்த பகுதிக்குச் சென்றாள்.
அங்கு கையில் கண்ணாடி கிழித்து இரத்தம் வழிய கதவைத் திறக்க முயன்றவனைக் கண்டு இதயத்தில் நெருஞ்சி முள்ளாய் வலி ஓன்று கீறியது.
“மைத்ரா ஆர் யூ ஓகே” என்றபடி கதவைத் திறக்க உதவி செய்து அவன் வெளியில் வர உதவி செய்தாள்.
“ஐ ஆம் ஓகே!” என்றவன் லாரியைத் தேட அதுவோ எப்போதோ அங்கிருந்து சென்றிருந்தது. வேண்டுமென்றே தன்னை இடிக்க வேகம் எடுக்க காரணமென்ன? என்ற சந்தேகம் துளிர்க்க,
ஷைலேந்தரியோ “நீ ஏன்டா இவ்ளோ வேகமா வந்த? பாரு எவ்ளோ பிளட் வருதுன்னு. தலைல எதுவும் அடிபட்டு இருந்தா என்ன ஆகியிருக்கும். வேற எங்கயும் அடி பட்டுருக்காடா” என அவனை முழுதாய் ஆராய்ச்சி செய்தாள்.
“இல்லடி கைல மட்டும் தான். அந்த லாரிக்காரன் வேணும்னு வந்த மாதிரி இருந்துச்சு ஷைலா!” என்றதும்,
“அவன் குடிச்சுட்டு வந்துருப்பான் பைத்தியக்காரன்…” என லாரிக்காரனைத் திட்டியவள், “நீ வா ஹாஸ்பிடல் போகலாம்” என அவளது காரில் ஏற்றிக்கொண்டு விறுவிறுவென மருத்துவமனை நோக்கிச் சென்றாள்.
—-
அலுவலகத்திற்குச் சென்ற விஸ்வயுகா வேலையில் மூழ்கிட, அவளைப் பார்க்க வந்த நந்தேஷ் “இப்ப காயம் பரவாயில்லயா விஸ்வூ?” எனக் கேட்டான் காய்ந்து போயிருந்த காயத்தைக் கண்டு.
‘அது பரவாயில்ல. நீ என்ன ஆபிஸ் பக்கமே வரல. நாளைக்கு நடக்கப்போற மேரேஜ்க்கு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் ஒர்க் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு” எனக் கேட்டதும், முகத்தை அழுந்தத் துடைத்தவன் “ம்ம்… கரெக்ட்டா தான் போகும்னு நினைக்கிறேன்” என்றவனை யோசனையுடன் பார்த்தாள்.
“என்னடா எப்பவும் நீ தான் ஃபுல்லா இன்வால்வ் ஆகிப் பார்ப்ப? இப்ப என்ன ஆச்சு?”
“ம்ம்… தெரியல மைண்ட் டிஸ்டர்ப்டா இருக்கு…” என்று நெற்றியைப் பிடித்தவன் சட்டென நிமிர்ந்து “நாளைக்கு நடக்கப்போற கல்யாணம் தான் கேன்சல் ஆகிருக்குமே…” என குறிஞ்சியை மனதில் வைத்து அவன் கேட்க, அவளோ புருவம் சுருக்கினாள்.
“என்ன சொல்ற? எந்த மேரேஜும் கேன்சல் ஆகலையே” என அவளது உதவியாளரை அழைத்து நடப்போகும் திருமணத்தைப் பற்றிய கோப்பைக் கொண்டு வரக்கூறினார்
கோப்பு வந்ததும் அதனைப் பார்வையிட்டவள், அதை மொத்தமாக புகைப்படம் எடுத்து யுக்தாவிற்கு அனுப்பினாள்.
“எதுக்கு அதை போட்டோ எடுக்குற” நந்தேஷ் கேட்டதும், “நாளைக்கு நமக்கு ஒரு செக்கியூரிட்டி வேணும் நந்து. இதுல மேரேஜ் அரேஞ்ச்மெண்ட் பத்தின மொத்த தகவலையும் ஒரே ஃபைலா ரெடி பண்ண சொல்லிருந்தேன். எந்த பிரச்சனைன்னாலும் ஈஸியா யாரையும் பிடிக்க முடியும்ல” என்றபடி புகைப்படத்தை அனுப்பிட, மறுபடியும் யுக்தாவிடம் இருந்து இதய வடிவ குறுஞ்செய்தி வந்தடைந்தது.
அதில் தன்னிச்சையாக அவள் இதழ்கள் மலர, நொடியில் அதனை மறைத்துக் கொண்டாள்.
அவளைக் கவனியாத நந்தேஷ், அவசரமாக அந்த பைலை வாங்கிப் பார்க்க அதில் மணமகளின் புகைப்படமாக குறிஞ்சியின் புகைப்படமும் மணமகனின் புகைப்படமாக வேறு ஒருவனின் புகைப்படமும் இருந்தது.
அதில் வெகுவாய் குழம்பியவன், “இவன் தான் மாப்பிள்ளையா? ஆனா நான் பார்த்து பேசுனது இவன் இல்லையே” என வாய்விட்டே புலம்ப, “நீ பார்த்து பேசுனியா? யார்கிட்ட பேசுன விஸ்வயுகாவும் குழம்பினாள்.
நந்தேஷோ நடந்ததைச் சுருக்கமாகக் கூறியதில் தமையனை முறைத்தாள். “மனசுல என்ன பெரிய சமூக சேவகன்னு நினைப்பா. உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை…” என கடுப்பானவளைப் பாவமாகப் பார்த்தான்.
“ஏதாச்சு பொண்ணு வந்து ஹெல்ப்னு கேட்டா போதும்… அப்படியே மனசு துடிச்சுடுமே” அனல் பார்வையில் அவனை பொசுக்கியதில், அசடு வழிந்தான் நந்தேஷ்.
“நான் கல்யாணத்தை நிறுத்த சொன்னது வேற ஒருத்தன்கிட்டல்ல… ஆனா இங்க ஆளே வேறயா இருக்கான்” எனத் தலையை சொறிந்தான்.
“அவள் உன்னை வச்சு பிளே பண்ணிருக்கா நந்து… உன்னை பிராங்க் பண்ணிருக்கா!” என நக்கலாகச் சிரிக்கும் போதே ஷைலேந்தரியிடம் இருந்து அழைப்பு வந்தது.
மைத்ரேயனுக்கு அடிபட்டதை அறிந்து பதறிய அண்ணனும் தங்கையும் இதை மறந்து விட்டு மைத்ரேயனைப் பார்க்க அவசரமாகக் கிளம்பினர்.
—
“சார் நம்ம பிளான் படி நந்தேஷோட போனை ஹேக் பண்ணியாச்சு. ஆனா அதுல சஸ்பெக்ட் பண்றமாதிரி எந்த காண்டாக்ட்டும் இல்ல. காலும் வரல” என்றாள் குறிஞ்சி. வெள்ளைச் சட்டையும் பேண்ட்டும் அணிந்திருந்தவள் கையைப் பின்னால் கட்டி யுக்தாவின் முன் கம்பீரமாக நின்றாள்.
“கமான் குறிஞ்சி. நம்ம டார்கெட் நந்தேஷ் மட்டும் இல்ல. சிவகாமி! கரப்ஷன்ல ஊறிப்போன லேடி. அந்த லேடியைப் பத்தின ஆதாரத்தைத் திரட்ட தான் இவ்ளோ நாடகம். பெரிய வேலை ஒன்னு பார்த்துருக்கா. அதுக்கான பெனாலிட்டியை வாங்காம விட்டுருவேனா… நெவர்!” என்றவனின் கண்கள் இரத்த சிவப்பாய் மாறி இருந்தது. வெறியும் வஞ்சமும் அதில் நிறைந்திருக்க,
“புரியுது சார். ஆனா, நம்ம எதிர்பார்க்குற ஆதாரம் எல்லாம் சிவகாமியோட பெர்சனல் மொபைல்லையும் அவங்க வீட்ல இருக்குற ஒரு பிரைவேட் லாக்கர்லயும் தான் இருக்கு. லீகலா நம்ம அவங்களை நெருங்க முடியல. இல்லீகலா அவங்களுக்கு பொறி வைக்கிறது வரை ஓகே தான்… ஆனா, லாக்கர் வரைக்கும் எப்படி இல்லீகலா போக முடியும்? ஹொவ் இட் இஸ் பாஸிபில்?” எனக் கேள்வியெழுப்பினாள் புருவம் நெறித்து.
“அதுக்கு தான நாலு எலியைப் பொறி வைச்சுத் தூக்கி இருக்கேன். என்கிட்ட வசமா மாட்டிக்கிட்ட அந்த நாலு பேருக்கும், என்னை விட்டாலும் வேற யாரும் ஹெல்ப் பண்ண மாட்டாங்க… சிவகாமி டிபார்ட்மெண்ட் ஆளுங்களை பசங்க கூட ஒட்ட விட மாட்டா. சோ என்னைப் பத்தி யாரும் வாயைத் திறக்க மாட்டாங்க. அவங்களோட மொத்த பிஸினஸும் இப்ப என் பிங்கர் டிப்ல. கொஞ்சம் மிஸ் ஆனா, மொத்தமா முடிச்சு விட்டுடுவேன்!” என்றான் இகழ்ச்சிப் புன்னகையுடன்.
“ம்ம்… எல்லா டீடெய்லியும் அவங்க மூலமாவே வாங்க முடியுமா சார். அவங்க எல்லாம் பெரிய இடம் வேற. நம்மளை நம்பி எப்படி சார் சொல்லுவாங்க?” மீண்டும் அவளுக்கு குழப்பம்.
“குறிஞ்சி, உனக்கு நாளைக்கு கல்யாணமே ஆகப்போகுது. ஃப்ளர்ட் செஞ்சு காரியத்தை நிறைவேத்துற வித்தை இன்னும் தெரியல உனக்கு… நீ எல்லாம் எப்படி கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தப்போற… அதெல்லாம் என் ஏஞ்சல் எனக்கு ஃபேவரா நிறைய செய்வா. செய்ய வைப்பேன்” என்று உறுதியாய் கூறும் போதே, மறுநாள் நிகழப்போகும் திருமணம் பற்றிய மொத்த தகவலையும் அவனுக்கு அனுப்பி வைத்ததைக் கண்டு வெற்றிப்புன்னகை வீசினான்.
மோகம் வலுக்கும்
மேகா