2,127 views

“அம்மா அவ இன்னைக்கு செக்கப் போகணும் கிளம்பி ரெடியா இருக்க சொல்லுங்க.” மனைவிக்கு கேக்குமாறு ஆதிலட்சுமியிடம் சொல்லிக் கொண்டிருந்தான் தரணீஸ்வரன்.

அவளோ காதில் விழாதது போல் ஜீபூம்பாவோடு விளையாடிக் கொண்டிருந்தாள். சிவானி வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இந்த ஒரு வாரத்தில் கணவன் மனைவி இருவரும் நேரடியாக பேசிக்கொள்ளவது இல்லை.

மனைவி மீது அக்கறையாக இருப்பவன் அவளுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தான் பேசாமல். கணவன் கொடுக்கும் அன்பை ஏற்றுக் கொண்டவளும் பேச முயற்சிக்கவில்லை. வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்குத்தான் தலை சுற்றியது.

மருமகளின் அலட்சியத்தில் பெருமூச்சுவிட்ட ஆதிலட்சுமி, “அகல் கிளம்பி வாமா ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடலாம்.” என்றார்.

“உங்களுக்கு எதுக்கு அத்தை கஷ்டம். என் குழந்தைய நானே பார்த்துக்கிறேன்.”

பற்களை கடித்துக் கொண்டு, “அவ கிட்ட சொல்லி வைங்க வயித்துல இருக்குறது எங்க குழந்தைன்னு.” என்றதும் கணவனை கடுமையாக முறைத்தாள்.

அவனை விட அதிக உஷ்ணத்தோடு அகல்யா முறைத்துக் கொண்டிருக்க, அந்த நேரம் குழந்தையோடு வந்து நின்றாள் சிவானி. ஒரு வார காலமாக அவளும் தரணியிடம் பேச எவ்வளவோ முயற்சி செய்து விட்டாள். இடம் கொடுக்காமல் வெகுதூரம் தள்ளி வைத்திருந்தான். அன்று அகல்யாவிடம் அடி வாங்கியதற்கு பின் அவள் பக்கம் நகரவில்லை சிவானி.

“தரணி நம்ம குழந்தைய எப்போ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக போறோம். ராத்திரி எல்லாம் கொஞ்சம் கூட தூங்க மாட்டேங்குறான்.” என்றவளை கண்டுகொள்ளாமல் மனைவியை முறைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தான்.

ஏற்கனவே அவன் மீது கோபத்தில் இருக்கும் அகல்யா வந்தவளின் பேச்சைக் கேட்டு சீற்றம் கொண்டாள். அவை முகத்தில் பிரதிபலிக்க, “அத்தை அவ எப்ப இந்த வீட்டை விட்டு போவானு உங்க பையன் கிட்ட கேட்டு சொல்லுங்க.” முறைப்போடு கேட்டாள்.

“நான் யாருக்கும் தொந்தரவா இருக்க வரல. என் குழந்தைக்காக தான் நீங்க இவ்ளோ அசிங்கப்படுத்துனதுக்கு அப்புறமும் இங்க இருக்கேன். கொஞ்ச நாள் டைம் கொடுங்க என் குழந்தைய சரி பண்ணிட்டு  இங்க இருந்து போயிடுறேன்.” என்று அழுக ஆரம்பித்தாள்.

“எம்மா உனக்கு அழுறதை தவிர வேற ஒன்னும் தெரியாதா.” எதற்கெடுத்தாலும் அழுகும் சிவானியின் நீலி கண்ணீரில் சலிப்போடு கேட்டார் தயாளன்.

“என்ன பண்ண சொல்றீங்க மாமா எல்லாம் என் தலையெழுத்து. கிடைச்ச வாழ்க்கைய இழந்துட்டு இப்படி நிக்கிறேன். என் புத்தி எதுக்காக இப்படி ஒரு தப்ப செஞ்சுச்சுன்னு தெரியல.” அதற்கும் ஒரு அழுகையை கொடுத்தாள்.

“உன்ன மாதிரி ஒரு பொண்ண நான் பார்த்ததே இல்லை.” அருவருப்பான முகத்தோடு ஆதிலட்சுமி கூற,

“எவ்ளோ அசிங்கப்படுத்த முடியுமோ படுத்துங்க. எனக்கு என் குழந்தை சந்தோஷம் மட்டும்தான் முக்கியம். சுத்தி யார் இருந்தாலும் ஒரு அப்பா கூட இருக்குற மாதிரி வராதுன்னு இப்போ நான் நல்லா புரிஞ்சுகிட்டேன்.” என்றாள்.

யாரும் அவளிடம் பேச்சு கொடுக்காமல் அமைதியாக இருக்க, “கௌஷிக் நேத்து ராத்திரி உன் கூட படுத்துக்கணும்னு ஒரே அழுகை தரணி. நான் தான் நீ திட்டுவன்னு குழந்தைய திட்டிட்டேன். உனக்கு விருப்பம் இருந்தா இனிமே நம்ம குழந்தை உன் கூடயே படுத்துக்கட்டும்.” என்றவள் பேச்சைக் கேட்ட அகல்யா,

“ஏய்!” என்று ஓசை கொடுத்தாள்.

சிவானி அவளை பாவமான முகத்தோடு திரும்பி பார்க்க, அப்பார்வையில் அதிகம் கடுப்பானாள் அகல்யா. “இந்த மாதிரி சீன் போடுற வேலைய அதோ… அங்க நிக்கிறாரே அந்த சாரோட நிறுத்திக்க. என்கிட்ட உன் அழகாச்சி நாடகம் செல்லாது.” என அவளின் நடிப்பை நிறுத்தினாள்.

உள்ளுக்குள் எரிச்சலை அடக்க முடியாமல் லேசாக சிவானியின் முகம் மாற, “புள்ளைய முன்னாடி அனுப்பிட்டு நீ பின்னாடி போகலாம்னு பார்க்குறியா. கால கைய உடைச்சு வாழ்க்கை முழுக்க ஊனமா உட்கார வைச்சிடுவேன். இவ வருவாளாம் விட்டுட்டு போவாளாம் நாங்க பழைய மாதிரி மாத்தி குடும்பம் நடத்தும் போது திரும்ப வந்து கெஞ்சிவாளாம். எங்கிருந்தாலும் வாழ்கனு விட்டுக்கொடுத்து போகணுமாம் நாங்க.

எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல  நடக்கிற பிரச்சினையால தான் நீ இன்னும் இந்த வீட்ல இருக்க ஞாபகம் வச்சுக்கோ. சபையில பேசறதோட நின்னுக்கனும். தனியா பேசுறது ஆள் இல்லாத அப்போ ரூம்குள்ள போறது இந்த மாதிரி வேலை எல்லாம் செய்யணும்னு இல்ல…  நினைச்சா கூட சாவடிச்சிடுவேன்.” என்றாள் அழுத்தமாக.

“உனக்கும் எனக்கும் பேச்சு இல்ல. உன்ன மாதிரி நானும் தரணிக்கு பொண்டாட்டி தான். உனக்கு முன்னாடியே அவனோட வாரிச பெத்து வச்சிருக்கேன். என்னை மிரட்டுற வேலை எல்லாம் வச்சுக்காத.” என்ற சிவானியிடம் நெருங்கினாள் அகல்யா.

“மிரட்டுனா என்னடி பண்ணுவ.”

“பாரு தரணி நீ இருக்கும் போதே எப்படி நடந்துக்குறான்னு.” என்றதும் அவளின் கன்னத்தில் வேகமாக அடித்த அகல்யா, “பேசிட்டு இருக்குறது நான் அங்க என்னடி உனக்கு பேச்சு.” என்று மீண்டும் ஒன்று வைத்தாள்.

“எதுக்குடி இங்க இருக்க? கொஞ்சம் கூட உடம்பு கூசலையா உனக்கு எங்க ரெண்டு பேரையும் பார்க்கிறதுக்கு. நானும் பார்த்துட்டு தான் இருக்கேன் நாங்க ரெண்டு பேரும் பேசும் போது வயிறு எரிஞ்சு பார்க்கிறதை.” என்றவள் சிவானியை இன்னும் நெருங்கி நின்று ஏற இறங்கப் பார்த்தாள்.

அவளின் பார்வையில் பயந்தவள் சற்று பின்னே நகர, “இப்படி ஒரு வாழ்க்கைய இழந்துட்டோம்னு பொறாமையா இருக்கா.” கேட்டாள் அவள் பார்வையில் தெரியும் கொதிப்பை அறிந்து.

“உனக்கு முன்னாடி இதெல்லாம் நான் அனுபவிச்சிட்டேன்.” என சிவானி வீர வசனம் பேசி முடிப்பதற்குள் விடாமல் அடிக்க ஆரம்பித்தாள்  அகல்யா.

“என்னடி எனக்கு முன்னாடி? என் புருஷனுக்கு ஒரே பொண்டாட்டி அது நான் மட்டும்தான். என் குணம் திரும்பி உன்கிட்ட பாயுறதுக்கு முன்னாடி உயிரை காப்பாத்திட்டு போயிடு.”

“நான் என் குழந்தைக்காக தான் வந்திருக்கேன். வேல முடிஞ்சதும் நானே போயிடுவேன். அதுவரைக்கும் என் குழந்தைக்காகவாது என்னை வீட்டில் இருக்க அனுமதிங்க.” என்றவளை இந்த முறையும் அடிக்கத்தான் செய்தாள் அகல்யா.

வலி பொறுக்க முடியாத சிவானி அவளை அடிக்க கை ஓங்க… அரக்கியின் கையை தடுத்ததோடு நில்லாமல் அகல்யா அடித்ததை விட ஆயிரம் மடங்கு பலத்தை ஒரே அடியில் காட்டினான் தரணி.
இருவரிடமும் அடி வாங்கிய  சிவானி கோபத்தில் தரணியை முறைக்க,

“யார அடிக்க கை தூக்குற? இன்னொரு தடவை என் பொண்டாட்டி பக்கம் இந்த கை வந்துச்சு திங்குறதுக்கு கை இல்லாம ஆகிடுவேன். என்னை கொலைகாரனா மாத்திடாத போய்டு.” என்றவன் முகத்தில் இதுவரை இப்படி ஒரு கோபத்தை பார்த்ததில்லை சிவானி.

இளகிய மனம் படைத்தவன் தரணீஸ்வரன் என்பதை நன்கு அறிந்ததால் தான் ஒவ்வொரு முறையும் பேச்சால் அவனை அடிமையாக்கினாள். ஒருவேளை தான் செய்யும் தவறு தெரிந்து விட்டால் கூட அவனை சமாளித்து விடலாம் என்ற எண்ணத்தோடு தான் அனைத்தையும் செய்தது.

அவள் நினைத்தது போல் தவறு செய்த மனைவியை ஒரு வார்த்தை தவறாக பேசாமல் அவள் கேட்டதை கொடுத்து அனுப்பி வைத்தான். அப்படிப்பட்டவன் முகத்தில் இன்று தெரியும் ரௌத்திரத்தில் அரண்டு போனாள். கூடவே இதெல்லாம் அகல்யாவிற்காக என்று நினைக்கும் பொழுது பல மடங்கு வலியும் பெருகியது.

“எல்லார் மாதிரி  நீயும் என்னை அசிங்கப்படுத்துறல தரணி. உன்கிட்ட உதவி கேட்டு வந்ததால என்ன வேணா பேசலாம்னு நினைக்காத. பெத்த பாசத்துக்காக உங்க கிட்ட அவமானப்பட்டு நிற்கிறேன். அந்த பாசம் உனக்கு இருந்தா இந்த மாதிரி என்னையும் நம்ம குழந்தையும் கஷ்டப்படுத்துவியா.” என அவள் மிகவும் ஆத்மார்த்தமான கண்ணீரோடு பேசிக் கொண்டிருக்க,

“அத்தை இவ நடிப்ப நிறுத்த மாட்டா போல. நீங்க சாப்பாட எடுத்து வைங்க சாப்டுட்டு உங்க மகன் வேலைக்கு போகட்டும். நீங்களும் நானும் ஹாஸ்பிடல் போயிட்டு வரலாம்.” என்று பெரும் அவமானத்தை கொடுத்தாள் அவளுக்கு.

மருமகளின் பேச்சில் சிரித்து விட்ட ஆதிலட்சுமி, “வர வர டிவி போட்டு எந்த சீரியலும் பார்க்க வேணாம் போல அகல். இவ ஒருத்தியே எல்லா பெர்பார்மன்ஸையும் பண்ணிடுறா.” என்றார்.

தன்னை கோமாளியாக பார்க்கும் குடும்பத்தை பழி தீர்க்க உள்ளுக்குள் சபதம் எடுத்தவள் காத்திருக்க முடிவு செய்தாள் அதற்காக. அவளின் எண்ணம் முகத்தில் தெரிந்தது அனைவருக்கும்.

மாமியார் மாமனாரோடு அகல் மருத்துவமனைக்கு கிளம்ப, அவர்களோடு சேர்ந்து கொண்டான் தரணீஸ்வரன். கணவனின் வருகையை அறிந்தவள் எதுவும் பேசாமல் காரை விட்டு இறங்கிக்கொண்டாள். அவனோ அகல்யாவின் செயலைப் பார்த்து பல்லை கடித்துக் கொண்டு காரை விட்டு இறங்க,

“என்னால இங்க நடக்குற நாடகத்தை பார்த்துட்டு நிம்மதியா இருக்க முடியல.  இன்னும் மூணு நாள் உங்களுக்கு டைம். அதுக்குள்ள அவ இந்த வீட்டை விட்டு போய் ஆகணும். இல்லன்னா நானே கழுத்தை பிடித்து வெளிய தள்ளிடுவேன். நான் சொன்ன எல்லாத்தையும் செஞ்சுட்டு அப்புறம் உரிமையா என்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க.” என்றவள் காரில் ஏறிக் கொண்டாள்.

தம்பதிகளுக்குள் நடக்கும் போர் சுத்தமாக புரியவில்லை பெரியவர்களுக்கு. இவர்கள் சிவானியை வைத்து சண்டை போட்டுக் கொள்கிறார்களா அல்லது இவர்களுக்குள் சண்டையா எனப் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவர்களின் பேச்சும் செயலும் இருந்தது.

மனைவிக்கு எந்த பதிலும் சொல்ல விரும்பாதவன் அவள் சொன்னதற்கு மாறாக பின் தொடர்ந்தான். அவன் வருகையை கண்டு கொண்டவள் பற்களை கடித்து மருத்துவர் முன்பு அமர, மனைவி குழந்தை இருவருக்கும் தேவையான ஆலோசனைகளை பெற்றவன் பத்திரமாக அனுப்பி வைத்தான் வீட்டிற்கு.

***

மனைவி தூங்கும் அழகை வெகுநேரமாக ரசித்துக் கொண்டிருந்தான் மன பாரத்தோடு. அகல்யாவின் கோபமும் ஆதங்கமும் சரி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை தரணீஸ்வரனுக்கு. அவளிடத்தில் யாராக இருந்திருந்தாலும் இதைவிட மோசமாகத்தான் நடந்திருப்பார்கள். புத்திக்கு அனைத்தும் புரிந்தாலும் மனைவியின் பேச்சு மனதை குத்தி கிழித்து விட்டதை மறுக்க முடியவில்லை அவனால்.

முன்பொரு காலத்தில் தான் செய்த செயல் தான் இப்பொழுது விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது என்ற குற்ற உணர்வு அவனுக்கு ஏற்கனவே அதிகமாக இருக்க, தன்னைப் பற்றி முழுவதும் தெரிந்த தன் உயிரே தள்ளி நின்று சோதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவனால். அதிலும் அன்னை சொல்லிய வார்த்தைக்காக தன்னிடம் அன்பு காட்டி இருக்கிறாள் என்பதை ஒரு துளி கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மனதில் அவளோடு பல சமாதானங்களும் அதைவிட அதிக சண்டைகளும் போட்டுக் கொண்டிருக்கிறான். என்ன கோபம் இருந்தாலும் அவள் இல்லாமல் ஒரு இரவை கூட கடக்க முடியவில்லை தரணியால். அதேநேரம் மனதால் தன்னைப் பிரிய வேண்டும் என்று முடிவெடுத்த மனைவிக்கு அவள் கேட்டதை கொடுக்கவும் தயாராக இருக்கிறான்.

அவள் தூக்கம் கலையாதவாறு வயிற்றில் கை வைத்தவன், “நீ பொறக்கும் போது அப்பா உன்கூட இருப்பனான்னு தெரியல.  ஆனா உன்னையும் உன் அம்மாவையும் எப்பவும் நினைச்சுக்கிட்டே இருப்பேன். அம்மாவ நல்லபடியா பார்த்துக்க. நான் கஷ்டப்படுத்தின மாதிரி என் லயாவ நீயும் கஷ்டப்படுத்திடாத.” என்று வயிற்றில் முத்தமிட செல்ல அதற்கு முன் அவனின் கண்ணீர்  முத்தமிட்டது.

மனைவியை பார்த்தவன் மனதை கல்லாக்கிக் கொண்டு வெளியேறினான். தம்பி ஜீபூம்பா ஜோடியோடு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அதை தட்டி எழுப்பினான். தூக்கத்திலிருந்து எழுந்த கடுப்பில் முதலில் அண்ணன் முகத்தை பார்க்காமல் உதாசினம் செய்ய,

“ஜீபூம்பா” என்ற ஒற்றை அழைப்பில் உயிர் பெற்றது அதன் உணர்வுகள்.

அவனையே ஜீபூம்பா பார்த்துக் கொண்டிருக்க, “நான் வரவரைக்கும் லயாவ பத்திரமா பார்த்துக்கணும். வயித்துல குட்டி பாப்பா இருக்கு. உன்ன மட்டும் தான் நம்பி என் உலகத்தை விட்டுட்டு போறேன். நான் வர வரைக்கும் எதுவும் ஆகாம பார்த்துக்கனும். அவங்களுக்கு ஏதாச்சும் ஒன்னு ஆச்சுன்னா உன் அண்ணன் நான் உயிரோட இருக்க மாட்டேன்.” என்றவன் கண்ணீர் வடிக்க ஜீபூம்பா அவனோடு ஒட்டிக்கொண்டது.

அழுகையை நிறுத்தியவன் கையில் இருக்கும் துணியை மோப்பம் பிடிக்க வைத்தான் ஜீபூம்பாவை. அண்ணன் சொல்லிய கட்டளைகளை அப்படியே நிறைவேற்றியது அதுவும்.

“இது எனிமியோட ஸ்மெல். இந்த வாசனை என் லயா கிட்ட வந்தா   நெருங்க விடாம தடுக்கணும். உனக்கு ஏதாச்சும் தப்பா தெரிஞ்சா கடிச்சு கொதறி எடுத்துடு.” என்றான் சிவானி உபயோகித்த அழுக்குத் துணியை காட்டி.

செல்லப்பிராணிகள் மனிதர்களை விட திறமையானவர்கள். அன்பு கொண்டவர் நலனுக்காக உயிரையும் கொடுக்கும் அற்புத படைப்புகள். அண்ணனின் வார்த்தையை உன்னிப்பாக கேட்டதும் உறுதியான செய்கையை ஆணித்தரமாக காட்டியது. செல்லப்பிராணி மீது இருக்கும் அதீத நம்பிக்கையில் வீட்டை விட்டு வெளியேறினான் தரணீஸ்வரன்.

****

முழித்ததும் அகல்யாவின் கண்கள் கணவனை தேடியது. எப்பொழுதும் கண் மூடும்போது அருகில் இருப்பவன் கண் விழிக்கும் போதும் அவளோடு ஒன்றி இருப்பான். சில நாட்களாக அந்த சுகம் அகல்யாவிற்கு கிடைக்காமல் போனது. இதில் சில தவறு தன்மேலும் இருப்பதை உணர்ந்தவள் பெருமூச்சோடு கணவன் அறைக்கு சென்றாள்.

அங்கு அவன் இல்லாமல் அவன் எழுதிய குறுஞ்செய்தி மட்டுமே இருந்தது. அதில், “நான் வர ரெண்டு நாளைக்கு மேல ஆகும். குழந்தையும் நீயும் பத்திரமா இருங்க. கவனம் என் மேல இல்லாம உன் மேல இருக்கட்டும். எதுவா இருந்தாலும் உடனே ஜீபூம்பாவுக்கு குரல் கொடு.” என்று எழுதி இருந்தது.

ஒன்றும் புரியாத மனநிலையில் செய்தியை வீட்டில் இருப்பவர்களுக்கு சொன்னாள். மகனின் நடவடிக்கையில் பெரும் எரிச்சல் பெற்றோர்களுக்கு. அகல்யாவிற்கு என்ன வார்த்தைகளை சொல்லி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் ஆளுக்கு ஒரு பக்கம் முழித்துக் கொண்டிருக்க, தன் வார்த்தை தான் அவனை வெளியேற வைத்திருக்கிறது என்பதை உணர்ந்து உள்ளுக்குள் துடித்தாள்.

விஷயம் வெகுவாக சிவானியின் காதிற்கும் சென்றது. தரணி வருவதற்குள் எப்படியாவது அகல்யாவை இங்கிருந்து அனுப்ப வேண்டும் என்று முடிவு எடுத்தாள். அதற்கான சந்தர்ப்பம் இரண்டு நாட்களாக சரியாக அமையவில்லை. மூன்றாவது நாள் காலை வேலை தோட்டத்தில் நீர் பாய்ச்சிக் கொண்டிருக்கும் அகல்யாவை பார்த்ததும் அமைந்தது.

அவள் முகத்தை பார்க்கும் எரிச்சலை விட மேடிட்ட வயிறு தான் அதிக எரிச்சலை கொடுத்தது. அதுவும் தரணி பெட்டி பாம்பாக அவளுக்கு அடங்கி அன்பை கொட்டுவதை சகித்துக் கொள்ள முடியவில்லை. தன்னை தாங்காத முன்னாள் மாமனார் மாமியார் இவளை தாங்குவதை நினைத்து பொறாமை தீ எரிந்தது.

மேடிட்ட வயிற்றை பார்த்துக் கொண்டே அவளுக்கு பின்னால் நின்றாள். அதை அறிந்து கொள்ளாத அகல்யா தண்ணீர் குழாய் மூலம் நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாள் ரோஜா செடிகளுக்கு. சிவானியின் குணம் மனித இயல்பை தாண்டி மிருகம் ஆனது. அகல்யாவை பழி தீர்க்க வேண்டும் என்பதற்காக ஒரு சதி திட்டம் தீட்டி குழாயை கால்களுக்கு நடுவில் போட முயன்றாள்.

எவ்வளவு முயன்றும் குழாயை முன்னே இழுக்க முடியாமல் போனது அவளால். சளிப்போடு குழாயை வேகமாக இழுக்க பின்னால் திரும்ப, நான்கு காலில் குழாயை பிடித்துக் கொண்டு  “உர்ர்ர்ர்” என்ற அக்னி முறைப்பில் முறைத்துக் கொண்டிருந்தது ஜீபூம்பா. அவளுக்கு நாயை கண்டால் பிடிக்காது என்பதால் இருக்கும் எரிச்சல் மொத்தத்தையும்  அதனிடம் காட்டினாள் வேகமாக இழுத்து.

சாமி ஆடுபவருக்கு பம்பை சத்தம் போல் அமைந்துவிட்டது ஜீபூம்பாவிற்கு. ஏற்கனவே அவள் வாசனையை உணர்ந்து தாக்க தயாராக இருந்தவன் இதில் பாய்ந்து விட்டான் மொத்தமாக. சிவானியின் அலறல் சத்தத்தில் திரும்பிய அகல்யா தன் செல்லப்பிராணியை தடுக்காமல் வேடிக்கை பார்த்தாள்.

துரத்தி… துரத்தி கடித்தது அவளை. அண்ணன் சொல்லிய வார்த்தைக்கு இரண்டு நாட்களாக வேலை இல்லாததால் அலுப்போடு இருந்த ஜீபூம்பாக்கு மூன்றாவது நாள் வேலை வந்துவிட சிவானின் உடலெங்கும் காயங்கள்.

நல்ல பெண் அகல்யாவிற்கு அவளின் சத்தங்கள் சிறு சலனத்தை கூட கொடுக்கவில்லை. கணவனின் வலிகளுக்கான அற்புத மருந்தாக தெரிந்தது அவள் ஓசை. செய்யக்கூடாத துரோகத்தை செய்த பின்னும் மீண்டும் அவன் வாழ்க்கையை கெடுக்க வந்திருக்கும் சிவானிக்கு இதுதான் சரியான தண்டனை என்று எண்ணியவள் செல்லப்பிராணியை பாராட்டினாள் மனதில்.

சத்தம் கேட்டு வந்த ஆதிலட்சுமி பதட்டத்தோடு ஜீபூம்பாவை நிறுத்த, அடங்கும் ஆள் இல்லையே நம் செல்ல பிள்ளை. தயாளனும் பயத்தில் தடுத்துக் கொண்டிருக்க, “ஜீபூம்பா” என்ற அகல்யாவின் அழைப்பில் நின்றது.

எழ முடியாமல் இரத்த கசிவோடு சுருண்டு படுத்திருந்தாள் சிவானி. ஈவு இரக்கம் பார்க்காத அகல்யா தன் செல்லப்பிராணியை பட்டுவோடு சேர்த்து கூண்டுக்குள் விட்டாள். அவளுக்கு உதவ மனம் இல்லாததால் ஆதிலட்சுமி வீட்டிற்குள் சென்று விட, தயாளன், “இந்தா காசு” என சில தாள்களை வீசி அடித்து  உதவ முன் வந்தார். மனம் முதல் முறை நொந்தது. துணை தேடி உடல் அலைந்தது.  தட்டு தடுமாறி எழுந்தவள் மருத்துவமனை சென்று வந்தாள். 

அன்றைய நாள் முழுவதும் சிவானி படுத்த படுக்கையாக இருந்தாள். குழந்தையின் மீது பாவம் கொண்ட அகல்யா சாப்பாடு கொடுத்து பார்த்துக் கொண்டாள் அன்றைய நாள் முழுவதும். நான்காம் நாள் வீட்டிற்கு வந்தான் தரணீஸ்வரன்.

கணவனைப் பார்த்ததும் அழுகையோடு அகல்யா உள்ளே சென்றுவிட, தேவதையின் கண்ணீர் வதைத்தது அவளின் அன்பானவனுக்கு. மகனை பிடிபிடி என்று பிடித்து விட்டார் ஆதிலட்சுமி. எதையும் கண்டுகொள்ளாதவன் குளித்து தயாராகி பள்ளிக்குச் சென்று வந்தான்.

அழுகையில் கரைந்தவள் தன்னை சமாதானப்படுத்த அவன் வருவான் என்று எதிர்பார்த்து ஏமாந்தாள். மதியம் போல் வீட்டிற்கு வந்தவன் அவளைப் பார்க்க வந்திருந்தான். கோபம் பாதி தவிப்பு மீது என்று எதிர் கொண்டாள் அவனை.

“இன்னையோட எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடும். நான் பழைய மாதிரி போய்டுவன்னு தான இந்த வீட்ல கஷ்டப்பட்டு இருக்க. என் குழந்தை மேல சத்தியமா இனி அந்த மாதிரி எதுவும் பண்ண மாட்டேன். நீ சந்தோஷமா இருந்தாலே எனக்கு போதும் லயா. உன் வாழ்க்கைய அழிச்சதுக்காக மன்னிச்சிடு.” என்று விட்டு வெளியேறினான்.

அழுகை எல்லாம் நின்று ஆத்திரம் பிறந்தது கணவன் மீது. எவ்வளவு தூரம் செல்கிறான் பார்ப்போம் என்று நினைப்பில் குழந்தையோடு நேரத்தை செலவழித்தாள்.

மாலை நேரம் போல் தரணீஸ்வரன் வீட்டு வாசல் முன்பு ஒரு பெண் வந்து நின்றாள். கூடவே ஒரு ஆடவனும் அதிர்ச்சியோடு நின்றிருந்தான். அவனின் அதிர்ந்த முகத்தை கவனிக்காத யுவதி,

“என்ன சூர்யா இங்கயே நின்னுட்டிங்க. வாங்க உள்ள போகலாம்.” என்று அழைத்தாள்.

கடந்த கால துரோகங்கள் சூர்யாவின் முன்னாள் படையெடுக்க நண்பனின் வீட்டிற்குள் கால் வைக்க நடுங்கினான். கூடவே தான் திருமணம் செய்யப் போகும் பெண்ணிற்கும் இந்த வீட்டிற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வியும் எழுந்தது. நல்லவன் என்று வேடமிட்டு வருங்கால மனைவியிடம் நல்ல பெயர் வாங்கியவன் வீட்டிற்குள் சென்றால் சாயம் வெளுத்து விடும் என்பதால் அப்படியே  ஓட முடிவு செய்தான்.

அவனை ஓட விடாத யுவதி தரணீஸ்வரன் வாசல் முன்பு நிற்க, “ஹாய் அர்ச்சனா” என சிரித்த முகமாக வரவேற்றான் தரணீஸ்வரன்.

“ஹாய் தரணி” என்று புன்னகைத்தவள் உள்ளே நுழைய, பல வருடங்கள் கழித்து  நண்பனின் முகத்தை பார்க்கிறான் சூர்யா. ஆனால் நாயகனோ அவனை யார் என்று அறியாதது போல் வரவேற்றான்.

“இவங்க தான் நான் கல்யாணம் பண்ணிக்க போற ஆள், பேரு சூர்யா.” என்று தரணிக்கு அறிமுகம் செய்து வைத்தாள் அர்ச்சனா. உள்ளே இருந்த சிவானி பெயரை கேட்டதும் எழுந்து அமர்ந்தாள்.

புதிதாக கேட்கும் பேச்சு சத்தத்தில் வீட்டில் இருந்த அனைவரும் வந்து விட்டனர். அகல்யாவிற்கு மட்டும் அவன் யார் என்று தெரியவில்லை. தரணியின் பெற்றோர்கள் இருவரும் எரிமலை சீற்றத்தோடு நின்றிருந்தார்கள். ஜீபூம்பாவின் கை காரியத்தால் எழ முடியாமல்  தவித்தாள் சிவானி.

மகனின் வாழ்க்கையை சீரழித்த முதல் நம்பிக்கை துரோகி சூர்யா என்பதால் ஆத்திரத்தில் ஆதிலட்சுமி திட்ட வர, “அம்மா இவங்க என்னோட ஃப்ரெண்ட் அர்ச்சனா. இது அவங்க கல்யாணம் பண்ணிக்க போற பையன்.” என அறிமுகம் செய்து வைத்தான் தரணீஸ்வரன்.

திடுக்கிட்டு போனார்கள் பெற்றோர்கள். மாமனார் மாமியார் முகத்தில் தெரியும் முக மாறுதல்களை கண்டு குழம்பிப் போனாள் அகல்யா.

நண்பனின் வீட்டில் உள்ளவர்கள் கொடுக்கும் வித்தியாசமான முகபாவனையில் குழம்பிய அர்ச்சனா, “எதுக்கு எல்லாரும் எங்களை இப்படி பார்த்துட்டு இருக்கீங்க?” வெளிப்படையாக கேட்டாள்.

பெரியவர்கள் இருவரும் பதில் கொடுக்காமல் அப்படியே இருக்க, சமாளித்தான் தரணீஸ்வரன். என்னவோ நடக்கப் போகிறது என்பதை மட்டும் யூகித்துக் கொண்டாள் அகல்யா. வயிற்று குழந்தையிடம் ‘பயப்படக்கூடாது’ என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டவள் தயாராக இருந்தாள். சூர்யாவிற்கு கை கால்கள் எல்லாம் உதற ஆரம்பித்து விட்டது.

அகல்யாவை அமரும்படி கண்ணால் சைகை செய்த தரணீஸ்வரன் வீட்டிற்கு வந்திருந்த இருவருக்கும் தேனீர் கொண்டு வந்து கொடுத்தான். அர்ச்சனா சாதாரணமாக வாங்கிக்கொள்ள, நண்பனை எதிர்கொள்ள தடுமாறினான் சூர்யா.

“என்ன அர்ச்சனா உன் வருங்கால கணவர் கை இப்படி நடுங்குது. ஏதோ பார்க்க கூடாததை பார்த்துட்ட மாதிரி முழிச்சிட்டு வேற இருக்காரு. ஒருவேளை எங்க எல்லாரையும் பார்த்தா பேய் மாதிரி தெரியுதோ!” என சிரித்தான்.

“அப்படியெல்லாம் இருக்காது தரணி. புது இடமா இருக்கிறதால கூச்சப்படுறாரு. அவர் ரொம்ப சைலன்ட் டைப். பசங்க கிட்டயே அதிகம் பேச மாட்டார். அதுவும் பொண்ணுங்கள பார்த்தா அவ்ளோ தான் தலை நிமிர்ந்து பார்க்கிறதே பெரிய விஷயம்.” என்றதும் நண்பனை நக்கலாக பார்த்து சிரித்தான் தரணி.

“பார்த்தாலே தெரியுது பொண்ணுங்க விஷயத்துல அவர் எப்படின்னு.” என்ற வார்த்தை குத்தியது சூர்யாவிற்கு.

அர்ச்சனா தரணி இருவர் மட்டுமே பேசிக் கொண்டிருந்தார்கள். மற்ற அனைவரும் ஒருவித குழப்பத்தோடு பார்த்துக் கொண்டிருக்க, சூர்யா பயந்து நடுங்கிக் கொண்டிருந்தான். பேச்சுக்களுக்கு நடுவில், “வந்ததுல இருந்து உங்க மனைவிய காட்டாம  இருக்கீங்க தரணி.” என்றாள் அர்ச்சனா.

சிரித்த முகமாக அகல்யாவை பார்த்தவன், “இவங்க தான் என்னோட மனைவி அகல்யா. இன்னும் கொஞ்ச நாள்ல எங்களுக்கு குழந்தை பிறக்க போகுது.” என்றான்.

“வாழ்த்துக்கள்!” என்றதும் அகல்யா பெயருக்கு சிரிக்க, “எங்க உங்க முன்னாள் மனைவிய காணோம்.” சென்றதில் வந்த சிரிப்பு நின்றுவிட்டது.

கடுகடுக்கும் முகத்தோடு கணவனை ஏறிட, “அவங்க உள்ள இருக்காங்க வர சொல்லட்டுமா.” சென்றதில் எழுந்து நின்று விட்டான் சூர்யா.

“என்ன ஆச்சு சூர்யா” என்ற யுவதியின் கேள்வியில், “நீ பேசிட்டு இரு அர்ச்சு கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்.” என்று நழுவ பார்க்க, கட்டாயப்படுத்தி அமர வைத்தாள் அர்ச்சனா. சந்தேகத்தில் இருந்த சிவானியின் மனம் அகப்பட்டுக் கொண்டது அவன் குரலில்.

நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த அகல்யாவின் மனம் என்னவோ செய்தி சொன்னது. அதை உறுதிப்படுத்துவது போல், “சிவானி” என்று சூர்யாவை பார்த்து அழைத்தான் தரணி.

வேர்த்து கொட்ட ஆரம்பித்தது அவனுக்கு. அகல்யா சந்தேக கண் கொண்டு அவனை பார்த்திருக்க, வெளியில் வர தடுமாறியவளை இழுத்து வெளியில் தள்ளினான் தரணி. திருட்டுத்தனம் செய்து கொண்ட இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க நேர்ந்தது.

கண்கள் நான்கும் விரிந்து நம்ப முடியாமல் காட்சியளிக்க, தத்தளித்து போனார்கள் சபைக்கு நடுவில். இருவரையும் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள் தரணீஸ்வரனும் அர்ச்சனாவும். கணவனின் புன்னகை உறுதி செய்து விட்டது சூர்யா யாரென்று.

தவறு செய்த சூர்யாவை முறைப்பதற்கு பதிலாக கணவனை முறைத்து பஸ்பம் ஆக்கினாள் அகல்யா. தான் சொன்ன கோப வார்த்தையில் வெகுண்டு எழுந்தவன் நிரூபிப்பதற்காக மூன்று நாட்கள் எங்கோ சென்றிருக்கிறான் என்பது விளங்கியது. இதை அவன் விளக்க வேண்டிய அவசியம் அவளுக்கு இல்லை என்பதை இருவரும் அறிவார்கள். இருந்தும் ரோஷம் கொண்டவன் தன்னை நிரூபிக்க, முன்பெல்லாம் இருந்த கோபத்தை விட இப்பொழுது தான் அதிக கோபம் அகல்யாவிற்கு.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
26
+1
57
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *