27 – காற்றிலாடும் காதல்கள்
“தாத்தா…”, எனக் கயலும், மிருவும் ஒரே குரலில் கத்தினர். அதில் அனைவரும் கதவின் வெளிப்பக்கம் திரும்ப இந்திரனும், யுகேந்தரும் சட்டென வெளியே வந்து வேப்பமரத்தின் பின்னால் நின்றனர்.
கீதன் அன்வரின் கைப்பிடித்தபடி வெளியே வந்து படிகளின் பக்கவாட்டில் நின்றான்.
“என்னம்மா? ஏன் கத்தினீங்க?”, கனகவேலு கேட்டார்.
“பாம்பு… இல்ல… பூரான்…“, என கயல் உளறினாள்.
“அதுக்கா கத்தினீங்க பாரு அவனுங்க ரெண்டு பேரும் எங்க போய் நிக்கறானுங்க?”எனச் சிரித்தபடி வெள்ளைச்சாமி தாத்தா கூறினார்.
“இல்ல மிதிச்சா கடிச்சிரும்ல அதான். அதுவும் வெசம் தானே..” என மிருணாளினி கூறினாள்.
“சரி, அது எங்கயாவது செடிகிட்ட போயிருக்கும். இந்தா கயலு உன் துணி அம்மா குடுத்துவிட்டா. கனகு நல்லா தூங்கி எந்திரிங்க. நாளைக்கு பேசுவோம். அம்மாடி ஜெயந்தி வரட்டுமா?”என விஸ்வநாதன் கேட்டார்.
“சரிங்க பெரியப்பா. மதியம் இங்க சாப்பிடறமாதிரி எல்லாரையும் அழைச்சிட்டு வாங்க.” என அழைப்பு விடுத்தார்.
“நாளைக்கு நம்ம எல்லைக்கோவில்ல அபிஷேகம் கண்ணு.. நீங்களும் வந்துருங்க அங்க தான் மதியம் சாப்பாடு. எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சி. நீ ஒண்ணும் சமைச்சிட்டு இருக்காத. போய் தூங்குங்க. வண்டில வந்ததுக்கு குறுக்கு வலிக்கும். கீதா போவோமா?”எனக் கேட்டார்.
“போலாம் தாத்தா..”
“ஆமா கேக்க மறந்துட்டேன் கனகு சாப்ட்டீங்களா?”
“சாப்ட்டோம் மாமா.. மாப்ள சொன்னாருன்னு எங்கள கூட்டிட்டு வந்த தம்பி சாப்ட வச்சி தான் கூட்டிட்டு வந்தாரு..“
“அப்ப சரி. போய் ஓய்வெடுங்க.” என நண்பனிடமும் கூறிக்கொண்டுக் கிளம்பினார்.
மிருணாளினி தவிப்பாக அன்னை தந்தை முகத்தைக் கண்டவள் மெல்ல கயலோடு படிகளில் மெல்ல மிதந்து ஏறினாள்.
“எதுக்கு எங்கள வர சொன்னீங்கப்பா?”, கனகவேலு தந்தையிடம் கேட்டார்.
“நம்ம குலசாமிக்கு பூசை போடணும். முனியப்பனுக்கு கெடா வெட்டணும். விஸ்வநாதன் வீட்டு கல்யாணம் முடிஞ்சவுடனே பண்ணனும். அதுக்கு நீங்க நாளைக்கு கோவில்ல காப்பு கட்டிக்கணும். அப்ப தான் மிச்சமிருக்க உசுர காப்பாத்திக்க முடியும்.“ எனக் கூறிவிட்டுத் தன்னறைக்குச் சென்றார்.
“என்னங்க?” ஜெயந்தி கவலையோடுக் கேட்டார்.
“வா ஜெயந்தி… ஒருத்தியாவது நம்ம கண்ணு முன்ன நடமாடணும். இத்தன மாசத்துல கோவம் போயிடிச்சி. வருத்தமிருக்கு. அதுவும் ஒரு நாள் போகும்ன்னு நம்புவோம். உனக்கு இன்னும் மிரு மேல கோவமிருக்கா ஜெயந்தி ?” மனைவியிடம் கேட்டார்.
“இருக்குங்க.. இவளமாதிரி அவ ஏன் கவனமா இல்லாம போனான்னு கோவமிருக்கு. ஆனா இவளும் நான் பெத்த பொண்ணுதானே.. ரெண்டு உசுருல ஒண்ணு தான் இருக்கு. நம்ம சொன்னதும் அவ உசுரா நெனைச்ச வேலைய தூக்கி போட்டுட்டு வந்தப்பவே கோவம் போயிரிச்சி. மறுபடியும் அந்த கூட்டத்துக்கிட்ட இவ சிக்கிடக் கூடாதுன்னு தான் பேசாம இருக்கேன்.” என ஜெயந்தி கூறினார்.
“ஆனா நீங்க ரெண்டு பேரும் பேசறதில்லன்னு மிரு எவ்ளோ வருத்தபடறான்னு தெரியுமா அத்த?” எனக் கேட்டபடி அவினாஷூடன் கீதன் அங்கே வந்தான்.
“என்ன தம்பி பண்றது? அப்பாவியான கிருபா உயிர் இவளால தானே போச்சி?” கனகவேலு கூறினார்.
“மிருவோட திறமையும், உழைப்பும் நிச்சயம் தப்பான வழிக்கு போகாது மாமா. கிருபா இறந்தது அவளுக்குமே பெரிய இழப்பு தானே? நம்மள விட அவதானே அதிகம் இதனால காயப்பட்டிருக்கா. எதிர்பாராத விதமா நடந்த விபத்து தான் இது. இதுல இருந்து மிருவ வெளியக்கொண்டு வரணுமே தவிர அவள தண்டிக்கறது தப்பு…“
“நாங்க கொஞ்சம் இறங்கி வந்து பேசினா மறுபடியும் இவ சுவடிய தூக்கிட்டு தான் சுத்துவா தம்பி. எங்க பயமே அது தான்.” ஜெயந்தி கூறினார்.
“அத்த.. இந்த தமிழ் ஞானம் அவளோட பிறந்தது. அத அவளால விடமுடியாது. அத சரியான பாதைல அவ செலவு பண்ண நம்ம உதவி பண்ணலாம். மூச்சுக்காத்து மாதிரி இருக்க ஒரு விஷயத்த எப்டி அவ விடுவா? ஏற்கனவே ஒரு பக்க மூச்சு நின்னுபோனதுல அவ நொந்து போயிருக்கா”
“இதெல்லாம் மிரு உங்ககிட்ட சொன்னாளா?”, கனகவேலு ஆராய்ச்சியோடுக் கேட்டார்.
“நாங்களா கேட்டு தெரிஞ்சிகிட்டோம் மாமா. அவள நாங்க தனியா விடக்கூடாதுன்னு தான் இவ்ளோ நேரம் இங்க இருந்தோம். நீங்க அவள தனியா விட்டுறாதீங்க. உங்க பை இந்தாங்க. வரோம்.” எனக் கூறிவிட்டு அவினாஷ் கைப்பிடித்தபடி வெளியே சென்றான்.
கனகவேலும், ஜெயந்தியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு உள்ளே சென்றனர். கட்டிலில் படுத்த சில நிமிடங்களில் உறங்கியும்விட்டனர்.
“கயல்.. நீ சாப்டு கொஞ்ச நேரம் தூங்கு. நான் எழுப்பிவிடறேன்.” என மிருணா கூறவும் கயலும் சிறிது உறங்கி எழலாம் எனப் படுத்தவள் அசதியிலும், அதீத மனவுளைச்சலிலும் உறங்கிவிட்டாள்.
நிமிடங்கள் கரைய மணி ஒன்றானது. மிருணா கயலை மெல்ல அழைத்தாள். கயலும் எழுந்து முகம் கழுவிக்கொண்டு தயாராகி நிற்க, கீதனிடம் இருந்து மிருவுக்கு அழைப்பு வந்தது.
“ரெண்டு பேரும் உன் ரூம் பக்கவாட்டு படி வழியா இறங்கி காலைல பாத்த குடோன்கிட்ட வாங்க. நாங்க இங்க தான் நிக்கறோம்.” எனக் கூறினான். அவன் சொன்னது போலவே இருவரும் அந்த குடோன் அருகே வந்து நின்றனர்.
“ஏ புள்ள மிருதங்கம். உங்கக்கா எங்க? அப்ப போனவ திரும்ப வரவே இல்லயா?” என இந்திரன் கேட்டான்.
“இல்ல இந்திரண்ணா.. நானும் அவள தான் எதிர்பாத்துட்டு இருக்கேன்.” மிருணாளினி சுற்றும் முற்றும் பார்த்தபடிக் கூறினாள்.
“என்ன இந்த புள்ளைக்கு கொஞ்சம் கூட அக்கறையே இல்ல. சரி வாங்க நம்ம முன்ன போவோம்.” என அவன் கூறியதும் கீதன் மிருணா அருகே வந்து, “மீதி பாட்டு கண்டுப்பிடிச்சியா மிரு?”எனக் கேட்டான்.
“நானும் எல்லாமே திரும்ப பாத்தேன் கீதன். அது சம்பந்தபட்ட குறிப்பு தான் இருந்ததே தவிர பாட்டு இல்ல. ஒருவேல இப்ப போற கோவில் கல்வெட்டுல ஏதாவது இருக்குமான்னு யோசிக்கறேன். எனக்குமே பயமா தான் இருக்கு. உங்கள எல்லாம் இதுல சிக்கவிட்டுட்டேன்ல. சாரி.” என மிருணா வருத்தம் கொண்டு மன்னிப்புக் கேட்டாள்.
“நான் தான் உன்ன இழுத்து விட்டுட்டேன். கண்டிப்பா நம்ம சரியாகிடுவோம். குகையும் திறந்துடுவோம். நம்பு.” என அவளுக்கு தைரியம் சொன்னான்.
”மொத இங்கிருந்து முனியப்பன் கோவிலுக்கு போவோம் வாங்க. முனி ஐயா நம்மள உள்ள விடணும். அதுக்கு மனச திடப்படுத்திட்டு கெளம்புங்க.”என இந்திரன் கூறியதும் மிருணா,“ஏன் உள்ள போக முடியாதா?”எனக் கேட்டாள்.
“முனியப்பன் காவல் தெய்வம் புள்ள. அவரு அனுமதி இல்லாம ஊருக்குள்ள வரவும் முடியாது வெளிய போகவும் முடியாது. இப்ப நம்ம அரை உடம்பா திரியரோம். நம்மள அவரு எல்லைக்குள்ள விட்டு கோவிலுக்குள்ள விடணும். அதான் உங்கக்கா வந்துச்சான்னு கேட்டேன். அது இருந்தா நமக்கு கொஞ்சம் வெவரம் சொல்லும்ல.”
“ஏன் மச்சான்.. அத பாத்து பயந்தது போக இப்ப அதுகிட்ட வழித்துணைக்கு பேச ஆள் வேணும்ன்னு கூப்பிடறியா?” யுகேந்தர் கேட்டான்.
“திக்கு தெரியாம சுத்தற காட்டுல நமக்கு தெரியற ஒரே வெளிச்சம் அந்த புள்ள தான் மாப்ள. நம்ம செத்துட்டோமா? பொழச்சி இருக்கமான்னு அது தான் புரியவைக்கணும். பாரு தரைல இருந்து 2 அடி மேல நிக்கறோம். அன்வரும், அவினாஷும் எவ்ளோ குட்டையா தெரியரானுங்க?”எனக் கூறி கெக்கபெக்கவென சிரித்தான் இந்திரன்.
“மாமா, உன் வாய் இருக்கு பாரு? கொஞ்சம் அமைதியா தான் வாவேன். ஊரே அமைதியா இருக்கு. உங்க பேச்சு சத்தம் தான் எதிரொலிக்குது. நாய் வந்து தொறத்த ஆரம்பிச்சா தெரியும் சங்கதி.” கயல் திட்டினாள்.
சிறிது நேரத்தில் மலையின் வடக்கு பக்கமிருக்கும் முனியப்பன் கோவில் கண்ணுக்குத் தெரிந்தது. “மிருதங்கம்..” என இந்திரன் ஆரம்பிக்கும் முன் கிருபா அங்கே வந்து சேர்ந்தாள்
“வா புள்ள கிருபை. எங்க சாப்பிட போயிருந்தியா?” என அவன் கேட்டதும் கீதன் முறைத்தான்.
அன்வரும், அவினாஷும் கிருபாவைக் கண்டுப் பயந்து கயலின் பின்னே ஒளிந்து நின்றனர். கயலும் பயந்து அவர்களின் பின்னே சென்று எட்டிப் பார்த்தாள்.
“கிருபா.. என்ன பண்ணனும் இப்ப?” மிருணா அவசரமாகக் கேட்டாள்.
“அவசரப்படாத மிரு.. எல்லாரும் வாசல் தாண்டி உள்ள போங்க.” எனக் கூறிவிட்டு அவள் நேரடியாக முனியப்பன் அருவா அருகே பறந்துச் சென்று நின்றுத் தலைவணங்கினாள். முனியப்பன் கண்கள் அவளை உறுத்துப் பார்க்க அவள் ஆத்மா ஒரு நொடி ஜிகிஜிகுவென எரிவது போல தெரிந்து பழையபடி ஆனது.
“இவர்கள் ஒவ்வொருவராக வாசல் அருகே செல்லவும், நீள்வட்ட வளையம் ஒன்று மிளிர்ந்தபடி உருவானது. அதில் ஒவ்வொருவராக தான் உள்ளே செல்ல முடியும். முதலில் அன்வர், அவினாஷ் மற்றும் கயல்விழி உள்ளே நுழைந்து சென்றனர்.
அடுத்து இந்திரன், யுகேந்தர் மற்றும் கீதன் மூவரும் உள்ளே சென்றனர். மிருணாளினி அங்கே நுழையும் போது முனியப்பன் அவளின் முன்னே வந்து நின்றார்.
ஆறடிக்கும் மேலே உயரம், செக்கச்சிவந்த திருமேனி, நெற்றி நிறைந்த விபூதி, அடர்த்தியான மீசை, நீண்ட புருவங்களின் கீழே பெரிய கண்கள், அதில் செவ்வரி ஓடும் நரம்புகள் தெரிய அவளின் முகத்தின் அருகே குனிந்துப் பார்த்தார். அந்தப் பார்வையில் அரையுடலாக இருந்த உணர்வும் மறைந்து முற்றிலும் ஆவியானது போல தோன்றியது.
“எங்க வந்த? என் ஆயி கோவில திறக்க வந்தியோ?” எனக் கணீரென்ற குரல் அவளின் காதுகளை நிறைத்தது.
“நான்.. நான்…” எனப் பயத்தில் தலைக்குனிந்தபடித் திக்கினாள்.
“சொல்லு.. திறந்திடுவியா?” என மீண்டும் உருமினார்.
“மு… மு… முய… முயற்சி பண்றேன்…”
“திறக்கணும்! என் ஆயி கோவில நீ திறந்தே ஆகணும். அவள கண்ணார பாத்து வருஷம் 130 ஆச்சு. நானும் தெக்கால இருக்கவனும் ஏங்கிப்போய் கெடக்கோம். எங்க ஏக்கத்த போக்கிடு. உன்னையும் உன் வம்சத்தையும் நான் காக்கறேன். இது முனியன் வாக்கு.” எனக் கூறிவிட்டு அவளின் தலையில் தன்னுடலில் இருந்த விபூதியைத் தூவினார். அதே போல மற்றவர்கள் மீதும் தூவிவிட்டு மறைந்தார்.
கிருபாலினியும் எல்லைக் கோவிலைக் கைக்காட்டிவிட்டு மறைந்துப் போனாள். கயல்விழி தான் அதிர்ச்சியில் இருந்து மெல்லத் தெளிந்து மற்றவர்களையும் அழைத்தாள்.
“எல்லாரும் கீழ விழுந்து கும்பிடுங்க.”
“ஏற்கனவே நாங்க கீழ விழுந்து தான் கெடக்கோம் கயலு. எங்கம்மா சின்ன புள்ளைல சொல்லும். அதே மாறி முனியன் வந்து நின்னுட்டாரே! உடம்பு சிலிர்க்குதுடா இன்னமும் எனக்கு. டேய் மாப்ள உனக்கு எப்டிடா இருக்கு?” இந்திரன் அவனைத் தொட்டுக் கேட்டான்.
“கைய எடுடா.. நானே பயத்துல நடுங்கிட்டு இருக்கேன். நீ வேற கைய மேல போடற.”என அவனைத் தள்ளிவிட்டான்.
கீதன் தரையில் தன்னுடல் நிற்பதுக் கண்டு மிருணாளினி அருகே ஓடினான். அவளும் முனியப்பன் சிலையின் காலடியில் விழுந்துக் கிடந்தாள். அவர்கள் உடல் கனம் கூடி பழைய நிலையடைந்தது.
“டேய் மச்சான்.. உங்க உடம்பு கீழ இருக்குடா.” என அன்வரும், அவினாஷும் ஒரே நேரத்தில் கூறினர். அப்போது தான் இந்திரனும், யுகேந்தரும் அதையுணர்ந்து ஒருவரையொருவர் கட்டிக்கொண்டனர்.
மிருணாளினி இன்னும் மயக்கம் தெளியாமல் இருக்கவும் அவளை எழுப்ப முயன்றான். அவள் எழவில்லை எனவும் பயந்தவன், “கவலபடாம அவள வீட்டுக்கு தூக்கிட்டு போ கண்ணு. காலைல கண்ணு முழிச்சிடுவா.” என ஒரு வயதானப் பாட்டி கோவிலின் உள்ளிருந்து வந்துக் கூறினார்.
அவரின் முகம் கண்டவர்கள் மறுபேச்சு பேசாமல் அமைதியாக இல்லம் திரும்பினர். கீதன் மிருணாளினியை அவளது அறையில் படுக்க வைத்துவிட்டு தன் இல்லம் சென்றான்.