Loading

 

அத்தியாயம் 26

“என்னங்க இது… மாப்பிள்ளையும் தயாவும் இப்படி பிடிவாதம் பண்றாங்க. ஏற்கனவே கல்யாணம் முடிஞ்ச கையோட எல்லாமே அபசகுனமா நடக்குதேன்னு நானே பதட்டத்துல இருக்கேன். இதுல தானா போய் தலையை குடுக்குறேன்னு நிக்கிறாங்களே. எப்படியாவது அவங்களைத் தடுத்து நிறுத்துங்க” என்று பூபாலனிடம் புலம்பித் தீர்த்தார் துர்கா.

“நானும் சொல்லிப் பார்த்துட்டேன் துர்கா. கேட்டாத்தான. என்ன செய்றதுன்னு எனக்கும் குழப்பமா தான் இருக்கு” என்று காயம் பட்ட நெற்றியை தேய்த்தார்.

மகேஷோ, “அவங்களோட நானும் போறேன் மாமா” என்றிட, திவ்யஸ்ரீ பொங்கி விட்டாள்.

“அவங்களையே போக வேணாம்ன்னு சொல்றேன். நீ போறேன்னு சொல்லிட்டு இருக்க. அப்படி நீ போகணும்ன்னா, என்னையும் பிள்ளையையும் கூட்டிட்டுப் போ.” என்று அதட்ட,

“புரியாம பேசாத திவா. என்னால நீங்க படுற கஷ்டம் போதாதா. கல்யாணம் ஆகி போய் தேவாவும் அவ குடும்பமும் அதுனால கஷ்டப்படணுமா? யோசிச்சுப் பார்த்தா பிரச்சனையை எதிர்த்து நின்னு பேஸ் பண்ணலாம்ன்னு இப்போ தோணுது.” என்றதும், பூபாலன் கவலையுடன் மருமகனைப் பார்த்தார்.

இவர்களின் உரையாடல்களை கேட்டபடி அங்கு வந்த அமர மகரந்தன், “நீயும் கண்டிப்பா வர தான் போற மகேஷ். ஆனா இப்போ வேணாம். நாங்க சொல்லும் போது வா. எல்லாரும் அங்க போய் மாட்டிக்கிற சூழ்நிலை வந்துடக் கூடாது. யாராவது ஒருத்தர் வெளில இருந்து ஹெல்ப்புக்கு வேணும். ஐ ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட். இன்னைக்கே கிளம்புறது பெஸ்ட்.” என்றதும் நால்வரும் அவனை கையாலாகாத நிலையுடன் பார்த்தனர்.

“இவ்ளோ அவசரம் தேவையா அமர்…” திவ்யஸ்ரீ சலிப்புடன் கேட்க, “அவசியம் தேவை திவ்யா. இங்க பாரு.” என்று அவளிடம் இரு கவர்களை நீட்ட, அவள் குழப்பத்துடன் அதனைப் பிரித்துப் படித்து திகைத்தாள்.

“என்ன அமர் இது? பிரஷாந்த்க்கும் மைதிலிக்கும் மூளை மழுங்கிப் போச்சா? மிரு மேலயும் தேவா மேலயும் அபாண்டமா கேஸ் போட்டு வச்சுருக்காங்க.” என அதிர்வுடன் கேட்க, அமரின் வதனத்தில் சினத்தின் சாயல்.

மற்றவர்களும் செய்தி அறிந்து திகைக்க, இங்கு மிருணாளினிக்கு ஆதங்கம் மனதை நிறைத்தது. இன்னும் என்ன என்ன அவமானங்களைத் தாங்க வேண்டியது இருக்கும் என்று புரியாத நிலை.

அப்படி இதற்காக, தான் நீதிமன்றத்திற்கு அலைய வேண்டியது இருக்குமானால், சத்தமின்றி புகுந்து வீட்டிற்குச் சென்று விடலாம் என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

தனது வாழ்க்கைக்காக தனது தமையனும் உடன் சேர்ந்து அலைவதில் அவளுக்கு உடன்பாடில்லை. அவர்களுக்கே ஆயிரம் பிரச்சனை இருக்கும் போது, தானும் ஒரு பாரமாக இருக்க விரும்பவில்லை அவள்.

கதவு திறக்கும் ஓசை கேட்டதில் எண்ணம் கலைந்து திரும்பினாள். தயானந்தன் தான் அவளை நோக்கி வந்தான்.

“குட் மார்னிங் நல்லி. நைட்டு நல்லா தூங்குனியா? என் ரூம் செட் ஆகிடுச்சா உனக்கு.” என்ற கேள்வியில் சிறு துளி குறும்பு உள்ளதோ என்ற சந்தேகத்துடன் அவனைப் பார்த்தாள் மிருணாளினி.

“ஹேய்… ஐ மீன், புது இடத்துல தூக்கம் வராதுன்னு சொல்லுவாங்கள்ல அதனால கேட்டேன்” என்று நமுட்டு நகையுடன் சமாளித்தவனை லேசாய் முறைத்து வைத்தவள், “பழகுன இடத்துல கூட தூக்கம் வர மாட்டேங்குதே.” என்று விரக்தியுடன் கூறி விட்டு பால்கனியில் சென்று நின்றாள்.

அந்த அபார்ட்மெண்ட்டில் இருந்த நான்கு அறையும் பால்கனியுடனே இருந்தது. ஐந்து வருடங்களுக்கு முன்பு தான், சொந்தமாக இந்த அபார்ட்மெண்ட்டை வாங்கி குடி புகுந்தனர் தயாவின் குடும்பத்தினர்.

பெருமூச்சுடன் அவளைத் தொடர்ந்து தயாவும் பால்கனிக்குச் சென்று, “இந்த டைம்ல அப்படி தான் இருக்குமாம் நல்லி. நெட்ல படிச்சேன். குழந்தை பிறந்ததும், பாப்பாவை நான் பாத்துக்குறேன். நீ தூங்கிடு. ஓகே வா?” என்றவனை நொந்து பார்த்தவள், “அதுக்கு அவசியம் இல்ல. நான் அதுக்குள்ள அகரன் வீட்டுக்குப் போய்டுவேன்.” என்றாள் எங்கோ வெறித்தபடி.

“ம்ம் போலாம். நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு கபிள்ஸா குழந்தை குட்டியோட போய் அவன் வீட்ல விருந்தே சாப்பிடலாம்.” என்று தோளைக் குலுக்கிட, மிருணாளினி பல்லைக்கடித்தாள்.

“எப்பவும் நடக்காத விஷயத்தைப் பத்தி மட்டும் தான் பேசுவியா தயா?”

“இல்ல நடக்கபோறதை பத்தி பேசுறேன்.” அவனும் சுடச்சுட பதிலளித்தான்.

அவள் இயலாமையுடன் அவனைப் பார்க்க,” நேத்து தான் சொன்னேன். நம்மளை எந்த விஷமும் தாக்காத மாதிரி நம்மளோட மனசை நம்ம தான் பாதுகாத்துக்கணும். தணிஞ்சு போகக் கூடாதுன்னு… இப்ப என்ன வக்கீல் நோட்டிஸ் தான வந்துருக்கு. அந்த கேஸ் பைல் ஆகி கேஸ் நம்பர் வரவே குறைஞ்சது ஒரு மாசத்துக்கு மேல ஆகும். அதுக்கு அப்பறம் நம்ம டிபன்ட் நோட்டீஸ் அனுப்பி, அது கோர்ட்டுக்கு போக டைம் எடுக்கும். அதுக்குள்ள நம்ம எல்லா பிரச்சனையையும் சரி பண்ணிடலாம் மிருணா.” என்றான் இதமாக.

“இதெல்லாம் நடக்கும்ன்னு நினைக்கிறியா தயா…” ஆதங்கத்துடன் மிருணாளினி கேட்க,

“ஏன் நடக்காது? அதெல்லாம் நடக்கும். மைதிலி எப்படின்னு எனக்கு தெரியல. ஆனா பிரஷாந்த் கண் மூடித்தனமான கோபத்தினால இப்படி நடந்துக்குறான். ஒன்ஸ் அவனுக்கு நிலைமை புருஞ்சுட்டா, கண்டிப்பா உன்னைப் புருஞ்சுப்பான். எங்க மேல இருக்குற கோபத்துல மைதிலி தேவை இல்லாம, அவன் குடுத்த கேஸை எடுத்துக்கிட்டா. மாமாவோட கொலை கேஸ்ல அப்பாவுக்கு சம்பந்தம் இல்லைன்னு தெரிஞ்சுட்டா, அவளும் க்ளியர் ஆகிடுவா. இதெல்லாம் கண்டிப்பா நடக்கும் நல்லி. ட்ரஸ்ட் மீ. இப்பவே நீயா எந்த முடிவும் எடுக்காத.” என்று மென்மையுடன் கண்டிப்பு கலந்து அவளை ஆசுவாசப்படுத்தினான்.

“எல்லாம் கை மீறிப்போச்சுன்னா…” வெளிறிய கண்களுடன் அவள் வினவ, அதில் வேதனை எழுந்தாலும் அடக்கிக்கொண்டவன், “அப்பவும் உன் கூட நான் இருப்பேன்.” என்றான் அழுத்தம் திருத்தமாக.

“சோப்பு ஷாம்பு கண்டிஷனர் ஹேர் ட்ரையர் லோஷன், எல்லாம் எடுத்து வச்சுட்டேன். வேற என்ன எடுத்து வைக்கணும்?” என்று பேக்கிங்கில் பிசியாக இருந்தாள் தேவஸ்மிதா.

அறைக்குள் நுழைந்த அமர் தான் அவளைக் கண்டு நொந்து, “என்னடி பண்ற?” எனக் கேட்க, “பார்த்தா தெரியல. தேவையான பொருட்களை எடுத்து வச்சுட்டு இருக்கேன். போறது கிராமத்துக்கு. அங்க என்னென்ன இருக்கும்னு தெரியல. அதான் கைக்கு கிடைச்சது எல்லாம் எடுத்து வச்சுட்டு இருக்கேன்.” என்றாள் இளித்து.

“நம்ம என்ன டூருக்கா போறோம்?” அமர் கடுப்புடன் கேட்க,

“பின்ன வாருக்கா போறோம்.” அவளும் நொடித்தபடி கேட்டாள்.

“டூரோ வாரோ எதுவா இருந்தாலும் என்ஜாய் பண்ணனும்ன்னு என் தாத்தா தனசேகர் சொல்லி இருக்காரு” என்றவளை ரசித்தது ஆடவனது விழிகள்.

“உன் தாத்தாவை தான் நீ பார்த்ததே இல்லையே…” விழியோரம் சுருங்கத் தலையை சாய்த்து அவன் கேட்க,

“ஒரு தடவை கனவுல வந்து சொன்னாரு. இப்ப இது ரொம்ப முக்கியமா. ரைமிங் சொன்னா ரசிக்கணும் ராங்கா பேச கூடாது.” என்று உதடு குவித்து ஒற்றை விரலை வாயில் வைத்தாள்.

அதனை ஒற்றை விரல் கொண்டு எடுத்து விட்டவன், குவித்த இதழ்களை வருடி விட, அவளுக்கு அணு மொத்தமும் அடங்கி விட்டது.

“உன் மேல ஒருத்தி கேஸ் போட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கா. அதை பத்தி என்ன ஏதுன்னு கேக்குறியா?” என்றவனின் வருடல் மேலுதட்டில் இருந்து கீழுதட்டுக்கு இடம் மாற, சகலமும் மறந்து விழி மூடி நின்றாள் அவள்.

தனது ஒற்றைத் தொடுகையில் தளர்ந்து போன பெண்ணவளின் தோற்றத்தில் கர்வம் மேலிட்டது அமர மகரந்தனுக்கு.

அவளை நோக்கி இன்னும் நெருங்க எத்தனித்தவன், அறைக்கதவு தட்டும் சத்தத்தில் தடுமாறி நின்றான்.

மனமின்றி விரலை பின்னிழுத்துக் கொண்டதில் தான் அவளும் கண் விழிக்க, இருவரது பார்வையும் ஒன்றாகத் தீண்டி தீயை மூட்டியது.

வெட்கத்தில் முகம் சிவந்திருந்தவள், அவனது நெருக்கம் எந்நேரமும் வேண்டுமென ஏங்கித் தவித்தாள்.

இருவருக்கும் இருக்கும் சிறு திரை மறைந்து, இருவரும் காதலைப் பகிர்ந்து, அவனது வெற்று மார்பிலே உறங்கி, அவனது கையணைப்பிற்குள் விடியல் காண அத்தனை பேராசை கொண்டாள் பாவை.

இருவருக்குள்ளும் நடைபெறும் முதல் முத்தம், முதல் கூடல், முதல் ஊடல் இவையனைத்தையும் ரசித்து அனுபவிக்க அந்நேரத்தை எதிர்நோக்கி தவமிருக்கிறாள். அதற்காகவேனும் இப்பிரச்சினைகளைக் கடகடவென தீர்த்து விட மனது அடித்துக் கொண்டது.

இதற்கிடையில் அமரே சென்று கதவை திறக்க, மிருணாளினியும் தயாவும் உள்ளே வந்தனர்.

மிருணாளினி தயக்கத்துடனும், தயானந்தன் அவளை முறைத்தபடியும் நின்றான்.

“என்ன ஆச்சு?” அமர் குழப்பத்துடன் கேட்டதில், “அதை உன் தங்கச்சிகிட்டயே கேளு” என்றான் கோபமாக.

“என்ன மிரு…” என்றவன் தங்கையைப் பார்க்க, “அண்ணா… நானும் உங்களோட தரமங்கலம் வரட்டா.” என்று கேட்டதில் அதிர்ந்தான்.

“என்ன விளையாட்டு இது மிரு. தேவாவையே எப்படி கழட்டி விடுறதுன்னு தெரியாம யோசிச்சுட்டு இருக்கேன்.” என்று சொல்லி கூட முடிக்கவில்லை, நடந்தது எதையும் அறியாமல் அவனது இவ்வார்த்தையில் உயிர் பெற்று கூடவே சினமும் மிக அவனருகில் வந்த தேவஸ்மிதா,

“என்னது என்னது? கழட்டி விடுவீங்களா? நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு தெரியும்ல.” என்று எகிறிட, அமர் சிரிப்பை அடக்கிக்கொண்டு இதழ் மடித்தான்.

‘இவள் ஏன் நான்சிங்கா பேசிட்டு இருக்கா’ என்று தலையில் அடித்துக்கொண்ட தயானந்தன், மிருவின் முடிவைக் கூற, அதன் பிறகே அசடு வழிந்தாள்.

“ஓஹோ… இது அந்த கழட்டி விடுறதா… ஹி ஹி” என்றவளின் அசட்டுத் தோரணையில் மனம் இளகிட, “உன்னைக் கழட்டி விடுறதுக்காக கல்யாணம் பண்ணல தேவா.” என்றான் ரசனையாக.

அதில் அழகாய் புன்னகைத்தவள், மிருணாவும் தயாவும் அவர்களையே பார்த்ததைக் கண்டு, “ஆமா நீ என்ன திடீர்னு ஊருக்கு வரேன்னு சொல்ற. அது ஊர் இல்ல மிரு ரத்த பூமி. நாங்க வரும் போது உனக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிட்டு வரோம். அதுவரை சமத்தா இரு.” என்று வடிவேலு பாணியில் கூறிட, மிருணாளினி விழி இடுங்க முறைத்தாள்.

“அண்ணா ப்ளீஸ்ண்ணா, இந்த வக்கீல் நோட்டீஸ் வேற என்ன ரொம்ப டிஸ்ட்ரப் பண்ணிடுச்சு. அம்மாவை பத்தி தெரியும்ல. இது தெரிஞ்சா இன்னும் டென்சன் ஆகி என்னையும் பயமுறுத்துவாங்க. ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்குண்ணா” என்றவளைக் கண்டு உடைந்து போனான்.

“யம்மா… நீ ஸ்ட்ரெஸ்ஸா இருந்தா ஊட்டி கொடைக்கானல்ன்னு சுற்றுலா போ. அதை விட்டுட்டு ஊருக்கு வரேன்னு சில்லித்தனமா பேசிட்டு இருக்க” என்று தேவா அவளை தடுத்துப் பார்க்க, மிருணாளினியோ கேட்கவே இல்லை.

தயா தான், “நான் வேணாம்ன்னு எவ்ளோ சொன்னாலும் கேட்க மாட்டேங்குறா.” என்று எரிச்சலாக, “ஓஹோ நீ வேணாம்ன்னு சொன்னியா. அதான் இவள் இவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்காளா” என்று தேவா வாரியதில், மிருணாளினி கிளுக்கென சிரித்து விட்டாள்.

தயாவோ “நீ என் ட்வின் இல்லடி டீமன்.” என்று உறும, “ப்ச் போதும் நிறுத்துங்க.” என்று கடிந்த அமர், “அங்க ரொம்ப ப்ராப்ளம் இருந்தா, உன்னையும் தேவாவையும் திரும்ப அனுப்பிடுவேன் மிரு. அங்க வந்தும் ரெண்டு பேரும் அடம்பிடிக்க கூடாது” என்ற நிபந்தனையுடனே அவர்களை அழைத்துச் சென்றான்.

அத்தியாயம் 27

“ஐயா ராசா… ஒரு வாய் சாப்பிட்டு போயா…” அழகம்மை தனது பேரனை அழைக்க, ஒன்பதாவது பயிலும் பாரதி சைக்கிளை எடுத்தபடி, “வேணா ஆச்சி. ஸ்கூலுக்கு நேரமாவுது.” என்று கிளம்பி விட்டான்.

“பாரதி நில்லுய்யா…” என்று டிபன் பாக்ஸை எடுத்து வெளியில் வந்த அவனது தாய் காவேரி சலித்துக் கொண்டார்.

“இந்த பயலுக்கு அப்படி என்ன அவசரமோ. டிபன் பாக்ஸை கூட எடுக்காம போறான். அவன் வந்ததும் நாலு போடணும் அத்தை” என்று மாமியாரிடம் அங்கலாய்த்துக் கொண்டார் காவேரி.

“அவனுக்கு நேரமாகுதுன்னு தெரியும்ல. நீதான் இதெல்லாம் முதல்லயே தயாரா வச்சுருக்கணும்.” என்று மருமகளை அதட்டி விட்டு,

“போ… இன்னும் செத்த நேரத்துல உன் புருஷன்காரன் வயலுக்கு போவ வருவான். அவனுக்காவது நேரத்துக்கு சோறு தண்ணி குடுத்து வெளில அனுப்பு.” என்று கடிந்திட, காவேரியின் மஞ்சள் முகம் வாடி விட்டது.

அவர் சொன்னது போன்றே, அடுத்த ஐந்து நிமிடத்தில் அழகம்மையின் புதல்வன் தங்கதுரை வேட்டியை மடித்தபடி முற்றத்திற்கு வந்து, “சாப்ட்டியாம்மா.” என வினவினார்.

“நீ வந்து சாப்பிடாம நான் எப்பய்யா சாப்பிட்டு இருக்கேன். காவேரி கஞ்சி கொண்டா.” என்று சத்தமிட,

அவர் வரும் முன்னே, “இல்லம்மா எனக்கு வேணாம். வயிறு சரி இல்ல. நான் வயலுக்கு போயிட்டு வந்துடுறேன். பழனிச்சாமி போன் போட்டான். அடுத்த மாசம் நடக்கப்போற கேஸ் நமக்கு சாதகமா வரணும், அப்படி வரலைன்னா, அந்த ஓடுகாலி குடும்பத்தையும், அவளை கட்டிக்கிட்டவன் குடும்பத்தையும் உருத்தெரியாம அழிச்சுடனும். இதுக்கு மேல பொறுக்க ஒன்னும் இல்லம்மா.” என்று கோபத்துடன் கர்ஜித்தவர், “காவேரி வந்துடுறேன்.” என்று விட்டு அவரும் வெளியில் சென்று விட்டார்.

கையில் கஞ்சி குவளையுடன் வந்து நின்ற காவேரி மாமியாரை திகிலுடன் பார்த்து அடுத்த கட்ட வசவுக்கு தயாராகி விட்டார்.

“ஊரு உலகத்துல இப்படி எல்லாம் நான் பாத்தது இல்ல தாயி. காலம்பர அஞ்சு மணில இருந்து என்ன தான் வேலை பாக்குறாளோ. நேரத்துக்கு வெளில போற ஆம்பளைங்களுக்கு சாப்பாடு குடுக்க தெரியல. கல்யாணம் ஆகி பதினஞ்சு வருஷம் ஆகி என்ன புண்ணியம்… என்னைக் கட்டுனவரு இருந்திருந்தா இதெல்லாம் தட்டி கேட்டுருப்பாரு. ம்ம்ஹும்… எனக்கு பிறந்த மகராசி தான் என் பூவையும் பொட்டையும் பறிச்சுட்டுப் போய்ட்டாளே…” என்று ஆரம்பித்து விட்டார்.

இன்று நேற்றல்ல, அவர் திருமணமாகி வந்தது முதலே இப்பேச்சுக்கள் அவருக்கு சகஜம். வழக்கம் போல அதனை ஒதுக்கி வைத்து விட்டு, மதிய வேலைகளைத் தொடங்கி விட்டார். மனம் மட்டும் முகம் தெரியாத அவரது மகளுக்காக பாவப்பட்டுக்கொண்டது. மனதிற்கு பிடித்தவனை திருமணம் செய்து விட்டு இன்றளவும் இவர்களது சாபத்தை வாங்கிக் கொள்கிறாளே. எங்கிருந்தாலும் நலமாக இருக்கட்டும் என்றும் போல இன்றும் மனம் நிறைய வேண்டிக்கொண்டார்.

அழகம்மை துர்காவின் தாய். தினம் ஒருமுறையேனும் மகளை வஞ்சிக்காமல் ஓய்ந்ததில்லை அவரது உதடுகள்.

—-

அடடா மழைடா… அடை மழைடா.
அழகா சிரிச்சா அனல் மழைடா…

எதற்கு பயணப்படுகிறோம் என்பதையே மறந்து விட்டு தன்னவனுடனான முதல் பயணத்தை பாடலுடன் ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்தாள் தேவஸ்மிதா.

“அனல் மழை இல்லடி அருவாள் மழை தான் வரும்…” பின்னிருந்து கடுப்புடன் தயானந்தன் குரல் கொடுக்க, “அன்பிற்கு அடிபணியாத ஆயுதம் இவ்வுலகில் உண்டோ…” என்றாள் கவிதாயினி போன்று.

“நீ அன்பால எல்லாரையும் மாத்த போறியா?” கடைக்கண் பார்வையை அவள் மீது பதித்தபடி கார் ஒட்டிக்கொண்டிருந்தான் அமர மகரந்தன்.

“சே சே… அருவாளை மாத்த போறேன்.” என்றாள் தீவிர சிந்தனையுடன். அப்போது தான் துயில் கலைந்து நிமிர்ந்த மிருணாளினி, “அருவாளையா?” என்று சோர்வுடன் கேட்க,

“ம்ம் எஸ். அமேசான்ல நிஜ அருவாள் மாதிரியே இருக்குற போலி அருவாள் நிறைய ஆர்டர் பண்ணிருக்கேன். நம்ம என்ன பண்றோம், என் அப்பா வீட்டாளுங்களுக்கும் என் அம்மா வீட்டாளுங்களுக்கும் தெரியாம அவங்க வீட்டுக்குப் போய் அருவாளை மாத்தி வச்சுடுறோம். திஸ் இஸ் மை மாஸ்டர் பிளான்.” என்று வீராப்பாகக் கூறியவளை மூவரும் ஒன்றாக காரி உமிழ்ந்தனர்.

அமர், “அது சரி… உன்னையும் தயாவையும் ஊர்ல யாரும் பார்த்து இருக்க மாட்டாங்க தான?” என்று இறுதி முறையாய் கேட்டுக்கொள்ள, “இல்ல அமர். வாய்ப்பே இல்ல. பழனிச்சாமி மாமா தவிர யாரும் எங்களை பார்த்தது இல்லை. அந்த மனுஷனும் கேஸ் முடிவுக்கு வராம ஊருக்கு வரமாட்டாருன்னு சபதம் எடுத்து இருக்கறதா கேள்விப்பட்டேன்.” என்றதில்,

“ஆர் யூ சியூர்?” என்றான் கண்ணைச் சுருக்கி.

“ஒன் ஹண்ட்ரட் பெர்சன்ட்…” என்ற தயானந்தன், “இந்த முரட்டுப் பீசுங்களோட அடுத்த கட்ட நடவடிக்கை என்னன்னு தெரிஞ்சுக்க, டிடெக்டிக் ஏஜென்சி மூலமா அவங்களை பாலோ பண்ணிட்டே தான் இருக்கோம் அமர். சோ, அப்போ அப்போ எங்களுக்கு தகவல் வந்துடும்.” என்றான்.

தேவாவோ, “ம்ம்க்கும்… சாலரி வாங்கி முதல் வேலையா இவனுங்களுக்கு தான் அழுகணும். அப்ப தான் நம்ம தலை தப்பிக்கும். சி. எம் கூட பாதுகாப்புக்காக இவ்ளோ செலவு பண்ண மாட்டாரு.” என்று வாய்விட்டு சிரிக்க, அதில் உள்ள கஷ்டமும் புரிந்தது அமருக்கு.

“அது சரி இப்ப அங்க போய் நம்ம எங்க தங்கப் போறோம்?” என்று தயானந்தன் கேட்க, “சொல்றேன்” என்ற அமர் காரை நேராக தங்கதுரையின் வீட்டின் முன் நிறுத்தினான்.

அந்த காலத்து பங்களாவாக இருந்தது அவ்வீடு. அவ்வீட்டினுள் இருக்கும் அறைகளை வைத்து நான்கு திருமணத்தை ஒன்றாக நடத்தலாம். வெறும் முற்றத்திலே 100 பேருக்கு பந்தி வைத்து முடித்து விடலாம். அத்தகைய பெரியது அவ்வீடு.

“ப்பா… என்ன வீடுயா…” என்று அணிந்திருந்த கூலர்ஸை கழற்றியபடி தேவா சிலாகிக்க, தயாவும் “நம்ம ஜிம்க்கே போக தேவை இல்லடி. இந்த வீட்டை நாலு சுத்து சுத்துனாலே போதும்” என்று வியந்தான்.

மிருணாளினியும் அவ்வீட்டை வியப்பாகப் பார்க்க, “அப்போ சுத்திக்கோங்க” என்றான் அமர்.

மூவரும் அவனைப் புரியாமல் பார்க்க, “இது அத்தை வீடு தான். இங்க அவங்களோட அம்மாவும், அண்ணன் குடும்பமும் இருக்காங்க.” என்றதில், “வாவ்… எப்படி அமர் இதெல்லாம்” என்று தேவஸ்மிதா விழி விரித்தாள்.

அவளை கண்ணெடுக்காமல் பார்த்தவன், “நானும் அதே டிடெக்டிவ் ஏஜென்சி வச்சு தான் டீடெய்ல் கலெக்ட் பண்ணுனேன். ஆனா ஒரு திருத்தம்…” என்று கண் சிமிட்டினான்.

“என்ன திருத்தம்?” என்று இரட்டையர்கள் புரியாமல் பார்க்க, மிருணாளினி அடக்கப்பட்ட சிரிப்புடன், “ம்ம் அந்த ஏஜென்சி எங்க அம்மா தான்.” என்றாள் கமுக்கமாக.

“வாட்!!!!” இருவரும் உச்சபட்ச அதிர்ச்சியில் விழி தெறிக்க அவர்களைப் பார்க்க, தேவா “வாட் டூ யூ மீன் அமர். அப்போ அத்தையும் இந்த ஊரா? அவங்க டெத்க்கு வந்தது இந்த ஊருக்கு தானா?” என அடுக்கடுக்காய் கேள்விகளை அடுக்கினாள்.

“வெய்ட் வெய்ட்… அம்மா பிறந்தது இந்த ஊர் இல்ல. ஆனா, அவங்க பூர்வீகம் இது தான். அம்மாவோட அப்பா, ஐ மீன் என் தாத்தா போலீஸ் டிபார்ட்மென்ட்ல இருந்தாரு. அவரோட நேட்டிவ் தான் தரமங்கலம். ரொம்ப சின்சியர் போலீஸ் ஆபிசர். ஒத்த ரூபா கூட லஞ்சம் வாங்காத நிமிர்வு அவரோட உடல்மொழிலையும் பேச்சுலயும் அப்படியே எதிரொலிக்கும்.

என் பாட்டி, என் அம்மா சின்ன வயசா இருக்கும் போதே தவறிட்டாங்க. அப்போ தாத்தாவும் அடிக்கடி அன்டைம்ல டியூட்டிக்கு போக வேண்டிய நிலமை. சோ அம்மா கொஞ்ச நாள் இங்க இருக்குற சொந்தக்காரங்ககிட்ட தான் வளர்ந்தாங்களாம். அதனால தானோ என்னவோ அவங்களுக்கு பக்கா கிராமத்து நடைமுறை பழகிப் போச்சு. ஆனா, இங்க இருக்குற நல்ல விஷயத்தை எல்லாம் விட்டுட்டு, மூட நம்பிக்கை, சகுனம்ன்னு எல்லாத்தையும் பழகிக்கிட்டாங்க. அதுக்கு அப்பறம் அதை தாத்தா முயற்சி பண்ணி கூட மாத்த முடியல. கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான், சும்மா இருக்கவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குன்னு, ப்ரெண்ட்ஸ் கூட ட்ரிப் போக கிளம்பிட்டாரு. இப்ப மனுஷன் ஆஸ்திரேலியால இருக்காரு.” என்று சொல்லி முடிக்க, இரட்டையர்களின் முகத்தில் ஈயாடவில்லை.

பேத்தியின் வாழ்வில் ஏற்பட்ட சறுக்கலில் விரக்தியுற்றே அவர் மன ஆறுதலுக்காக கோவில்களுக்குச் செல்ல முடிவெடுத்தார். அவரது மனநிலை புரிந்தோ என்னவோ, ஆஸ்திரேலியாவில் இருக்கும் அவரது வெகுகால நண்பரை பார்த்து வர சொல்லி அமரே அனைத்து ஏற்பாடுகளும் செய்து அனுப்பி வைத்தான். அங்கு சென்றதும், நண்பருடன் சேர்ந்து நாட்களை கழித்துக் கொண்டிருக்கிறார்.

“ஆத்தாடி ஆத்தா…” என வாயில் அடித்துக் கொண்ட தேவஸ்மிதா, “அப்போ ஏன் தாத்தா கல்யாணத்துக்கு வரல.” என்றாள் கன்னத்தில் கை வைத்து.

“அவருக்கு இந்த கல்யாணம் பிடிக்கல.” என அசட்டையாக அவன் தோள் குலுக்க, தயா லேசாக நெஞ்சை நீவி விட்டான்.

“எனக்கு ஹார்ட்டு அந்த அளவு ஸ்ட்ராங் இல்லடா தெய்வமே. மச்சான்னு பார்க்க மாட்டேன்னு… நானே உள்ள இருக்குற அருவாளை எடுத்து சொருவிடுவேன். முழுசா சொல்லிடு” என்றான் மூச்சிரைக்க.

“இதோ இதுக்கு தான்… அவருக்கு இந்த ஊரே பிடிக்கிறது இல்லை. எதுக்கெடுத்தாலும் கத்தியை தூக்குற இந்த ஊர் ஆளுங்களை எனக்குப் பிடிக்கிறதே இல்லைன்னு சொல்வாரு என் தாத்தா. அவர் தெரியாம செஞ்ச ஒரே தப்பு இந்த ஊர்ல பிறந்தது தானாம். தெரிஞ்சு செஞ்ச ஒரே தப்பு கொஞ்ச நாளா இருந்தா கூட அம்மாவை இந்த ஊர்ல விட்டது தான்னு அடிக்கடி சொல்வாரு. சோ, நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு இந்த ஊருன்னு சொன்னேன். உன்னை என் பேரன் பதவில இருந்து டிஸ்குவாலிபைட் பண்றேன்னு போனை வச்சுட்டாரு.” என்றான் சிரித்தவாறு.

“உங்க தாத்தா உங்களை கழுவி ஊத்திருக்காரு அதை சிரிச்சுக்கிட்டே சொல்றீங்க” தேவாவே அதனை அதிசயமாகக் கேட்க, “உன்கூட சேர்ந்ததுல இருந்து எனக்கு சூடு சொரணையே வர மாட்டேங்குது தேவா” என்றான் உதட்டைப் பிதுக்கி.

‘இவன் வேற சீரியஸா பேசுறப்ப என்னை ராங்கா யோசிக்க வைக்கிறான்.’ என்று தலையை உலுக்கியவள், “இதை ஏன் என்கிட்ட சொல்லல?” என்றாள் சற்று கோபமாக.

“முதல்ல ஒரு சாரி… உங்கிட்ட சொல்ல கூடாதுன்னு எனக்கு எந்த இன்டென்ஷனும் இல்ல தேவா. முதல்ல, இந்த பிரச்னையை அனலைஸ் பண்ணவே எனக்கு நிறைய டைம் தேவைப்பட்டுச்சு. நமக்கு கல்யாணம் ஆனா, என் தாத்தா மேல இருக்குற பயத்துல உங்களை அட்டாக் பண்ண அவங்க கொஞ்சம் யோசிப்பாங்க. ஏன்னா, என் தாத்தா என்ன சொன்னாலும் இங்க இருக்குற ஆளுங்க கேட்பாங்க. அதான் அவசரமா கல்யாணம் பண்ணேன். அப்பறம் தான், இவங்களை பத்தின தகவல் எல்லாம் என் கைக்கே வந்துச்சு. நான் முதல்ல தெளிவாகிட்டு உங்ககிட்ட சொல்லணும்ன்னு தான் சொல்லலையே தவிர, வேற எந்த காரணமும் இல்ல. அப்பறம் நம்ம ஊருக்குப் போறது முடிவானதும் சர்ப்ரைஸா இங்க வச்சே சொல்லிடலாம்ன்னு நினைச்சேன். ஒருவேளை நீ ஊருக்கு வரலைன்னாலும் அங்கேயே உங்கிட்ட இதெல்லாம் சொல்லிட்டு தான் வந்துருப்பேன்” என்று மனையாளிடம் உறுதியாகக் கூறினான்.

அவனைத் தவறாக எண்ணி விடக் கூடாது என்ற பதற்றம் அவனது பேச்சில் அளவுக்கு அதிகமாகவே தெரிந்தது.

அவனையே ‘ஆ’ வெனப் பார்த்தவளிடம், “இன்னும் உனக்கு என் மேல இதனால கோபம் இருந்தா என்ன தண்டனை வேணாலும் குடு.” என்று அவள் முன் குனிந்து அமர்ந்திருந்தவனை திகைப்பாய் ஏறிட்டாள்.

‘இவன் என்ன இத்துனூண்டு விஷயத்துக்கு இவ்ளோ பீல் பண்றான்.’ எனத் தலையை சொறிந்தவள், “இப்ப தண்டனை தர்ற மைண்ட்செட்ல நான் இல்ல.” என்று வெளியில் கெத்தை விட்டு விடாமல் பேசிட, அமரின் அழுத்தம் நிறைந்த முகம் சட்டென வதங்கி விட்டது.

உயிர் வளரும்
மேகா

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
82
+1
3
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்